'நந்தகுமாரா நந்தகுமாரா:' கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்
- தேவமைந்தன்
செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் 'துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய 'நெடுங்கதை' என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக 'novella' இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா 'வணக்கம் நண்பர்களே!' என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் 'nouvelle' 'ஒருவகை சுருக்கமான இலக்கிய'க் கட்டுரைதான். இருப்பினும், 'éditions de la connaissance' இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் - நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் 'தகவல்' அல்லது 'செய்தி' 'nouvelle'க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'nouvelle'க்கு - அடுத்த பொருள் 'சிறுகதை' என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள 'மொரீஷியஸ் கண்ணகி'யைச் சிறுகதை என்றும்; 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான 'மொரீஷியஸ் கண்ணகி' கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
"ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்" என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.'யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் 'குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்' என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது - இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) 'நந்தகுமாரா நந்தகுமாரா' தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்''-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.
பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. 'எமன் - அக்காள் - கழுதை' சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் 'அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு 'அக்கா'ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், "பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து "பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்" என்று சொல்லாமலிருந்திருக்கலாம்.." என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.
மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, 'அம்மா எனக்கொரு சிநேகிதி ' கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு 'ஓர் அசாதரணமான மௌன'மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் - மகன், குந்திதேவி - அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா - தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். "குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு"(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், "கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று" என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. 'அம்மா எனக்கொரு சிநேகிதி,' 'அக்கினிகாரியம்,' 'அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,' 'எமன் - அக்காள் - கழுதை,' 'குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) 'நந்தகுமாரா நந்தகுமாரா'(7), 'சாமி - பெரிய சாமி,' 'தாண்டவராயன்'(8), 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' ஆகிய கதைகள் - நா.கி. "வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள"(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.
"சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள 'வேறொருவன்' பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்"(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, '38,39,40 - புல்வார் விக்தோர் யுகோ.' சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.
அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. 'அமலா..விமலா..கமலா,' 'ஆப்பரேஷன் மகா சங்காரம்' என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் 'பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்' சுந்தரம். 1997இல் - முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் "அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்" என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் - அமலா மட்டுமல்ல, விமலா - கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, 'ரீஜெனெரேஷன்' என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான 'ஆப்பரேஷன் மகா சங்காரம்,'
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு 'புரொக்ராம்'கள்தாம்... உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை 'மகா சங்கார'த்துக்கான 'புராஜக்ட்'டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.
பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை 'misogyny' என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான 'நந்தகுமாரா நந்தகுமாரா'வும் 'அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா'ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக - தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) 'அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்' கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் 'அறைய'ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் 'அவர்,' தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், "திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)
'மொரீஷியஸ் கண்ணகி' கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. "கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்" என்பவனுக்கு, "இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்" என்று உறுதிப்படுத்த "கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்" என்று கதை முடிகிறது. நா.கி.'யின் 'நீலக்கடல்' தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.
'பிறகு' என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.
பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, 'மொரீஷியஸ் கண்ணகி.' அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' என்கிற கடைசிக்கதை. 'டிஜிட்டல் காமரா' போல - நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை - காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது - இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி - திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.
'நந்தகுமாரா நந்தகுமாரா' தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் - உற்றார் உறவினர் - எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. - பக்.67, 69.
8. "எதற்காக 'என்னுடைய' அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? - நினைக்க நினைக்க ஆத்திரம்." ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. "தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?" ப.108. "...இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்." ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10."இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க"
"சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்."-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. "இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்." - '38,39,40 'புல்வார் விக்தோர் யுகோ,' ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். - '38,39,40 'புல்வார் விக்தோர் யுகோ,' ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. - கதை: 'பிறகு..' ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! - "காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்." ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்...... ப.67.
19. "திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. 'பௌருஷம்' என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. "எங்க.. அவங்கிட்டயா...வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே." ப.37.
22. 'ஆவளி' என்றால் வரிசை; 'வம்சாவளி' என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, 'கனவு'(dream state)க்கு மாற்று 'நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. 'நினைவுகூர்தல்' என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி 'நினைவுகூறுதல்' என்று ஆக்கிவிட்டார்கள்.
********
புத்தகம்:
நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)
ஆசிரியர்:
நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம்:
சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 - 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை - 600 083.
புத்தக அளவு: தெமி 1x8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
நன்றி: திண்ணை.காம்
2.12.07
21.9.07
மகாகவி பர்த்ருஹரியின் 'சுபாஷிதம்': மதுமிதாவின் தமிழாக்கம் - தேவமைந்தன்
| இராமகாதையை வடமொழியில் பாடிய மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய வான்மீகியையும் சிறப்பாகக் கூறும் கம்பன், மூவரையும் ஒப்புநோக்கி அவருள் வான்மீகியையே தான் பின்பற்றியிருப்பதாகக் கூறுவான். மலையாளத்தில் உள்ள ராம சரிதம் தான், அம் மூவரானவர் - வான்மீகி, வியாசர், அகத்தியர் என்பதைத் தெளிவாக்குகிறது. இராமகாதையின் 'நகர் நீங்கு படல'த்திலே இராமனைப் பற்றி முதன்மையாகக் கம்பன் குறிப்பிடும் செய்தி - "தென்சொற் கடந்தான் வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தான்" என்பதேயாகும். இதற்குக் காரணம் கம்பனுடைய இருமொழி நோக்கே என்பது கலாநிதி கைலாசபதியின் முடிபு. எத்தனையோ இடங்களில் வான்மீகியின் கதையமைப்பு, கதைமாந்தர் உரு வார்ப்பு முதலியவற்றில் கம்பன் வேறுபடுவார். அதற்கு ஏது ஆதி காவியத்தைத் தன் மனத்தில் இருத்தியமையே ஆகும்.(1) வடமொழியிலிருந்து தமிழுக்கு மெய்யான, ஆகுமான மொழியாக்கம் செய்பவரும் அதே மனநிலையில் இருப்பார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். த.நா.குமாரஸ்வாமி அவர்கள் 'பிரமாதம்' 'அபிமானம்' முதலான வடசொற்களை நம்மவர்கள் தவறாக 'அபிமானித்து' மொழியாக்கம் செய்வதுடன் மக்களையும் - 'அபிமான நடிகர்' 'அபிமான நடிகை' என்று ('அபிமான ஸ்த்ரீ' என்றால் என்ன பொருள் என்பதை வடமொழியறிந்தோர் உணர்வர்) தவறான பொருள் வரும்படி எழுதவும் பேசவும் செய்கிறார்களே!" என்று மெத்தவும் வருத்தப்பட்டார்.(2) மகவுக்குப் பாலூட்டும் தாய் தன் ஒரு மார்பகத்திலிருந்து மறுமார்பகத்துக்குக் குழந்தையை மாற்றுவதுபோன்ற பக்குவத்துடன்(3) மொழியாக்கமானது இருமொழிகளுக்கிடையே மூலப்பிரதியை(original text) மாற்றுவதாக அமைய வேண்டும் என்பதே மொழியாக்கத்துக்கு உரிய - எழுதப்பெறாத விதி ஆகும். இவற்றையெல்லாம் இயல்பாகவே புரிந்து வைத்துக் கொண்டோ என்னவோ, மதுமிதா இருபது ஆண்டுக்காலம் முழுமூச்சாக வடமொழியை முறையாகப் பயின்ற பின்புதான் 'சுபாஷித'த்தைத் தமிழாக்கியிருக்கிறார். அப்படியும் மெய்யான மொழியாக்குநரின் பணிவுடன் தன்னுரையில் பின்வருமாறு சொல்கிறார்: "..மூல நூலில் உள்ள எழில், கருத்துச் செறிவு, சொல்லாடல் திறன், கம்பீரம், ஒயில் ஆகியவற்றை மொழிபெயர்ப்பில் முழுமையாகக் கொண்டுவர என்னால் முடியவில்லை என்பதை உணர்கிறேன். எனது அறியாமையினால் இந்தத் தமிழாக்கத்தில் குறைகளும், தவறுகளும் இருக்கலாம். [தமிழாக்குவதற்கான] ஆறு வருட உழைப்பிற்குப் பின்பும் பர்த்ருஹரியின் எழுத்தாளுமைக்கருகில் இது தவிர்க்க முடியாததாகியிருப்பது தவிர்க்க இயலா உண்மை. ஆனால் உலகில் இதுவரை வந்துள்ள எந்த மொழியாக்கமும் முழுமையானது என்ற சான்றிதழ் பெற இயலாது என்பதுதான் தவிர்க்க இயலா உண்மை ஆகும். மொழியாக்கம் மட்டும் அல்ல, மூலப்பிரதியின் படைப்பாளி எவராயினும் அவரும் முழுமையற்றவரே ஆவார். அதனால்தான் - "முதல்,வழி, சார்பு-என நூல்மூன் றாகும்." "அவற்றுள், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்" என்று பவணந்தி முனிவர் மொழிந்தார்.(4) பொற்சங்கிலி இரும்புச் சங்கிலி போன்ற நல்வினை தீவினை எதனாலும் தளையுறாத அறிவுதான் ஒளியுடைய தூய அறிவு. அந்த அறிவைக் கொண்டவனே முழுமையானவன். அவன் தனக்கு இயல்பேயான 'காட்சி'(5)யால் கண்டு படைத்ததே முதல்நூல்.['காட்சி'யை வடநூலார் 'தர்சனம்' என்பர். 'முதல்நூல்' ஆங்கிலத்தில் 'Prime Text' எனப்படும்.] இதனால்தான் குறிஞ்சிவேலன் 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்று தானெழுதிய மலையாளப் படைப்பாளர் வரலாற்றுக்கு அருமையாகப் பெயரிட்டார். ஆகவே, பிறப்பு - வளர்ப்பு - இருப்பு ஆகியவற்றினூடு விளைய வல்ல அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்(6) நோக்கோடும் போக்கோடும் -'அகண்ட காவிரியில் ஒரு துளி'(7)யே போன்று 'அத்வைத' நிலை எய்தி, பர்த்ருஹரியின் மூன்று (நீதி, சிருங்கார, வைராக்கிய)சதகங்களையும் ஆழ்ந்து கற்று அவற்றைத் தமிழாக்கி மதுமிதா இந்நூலைத் தமிழ்கூறு நல்லுலகுக்குத் தந்துள்ளார் என்றால் என் கருத்து மிகைக்கூற்று ஆகாது. 'சுபாஷிதம்' குறித்து 'வித்யா ரத்னம்' 'பண்டித ரத்னம்' நவாலியூர் நடராஜன் தன் ஆய்வு நூலில் நவின்றுள்ள இலக்கணத்தை நூலுக்குள் செல்லுமுன் முன்வைப்பது பொருத்தம். "நீதிப்பாடல் என்ற துறையில் இந்திய இலக்கியம் அடைந்த சிறப்பு வேறெந்த நாட்டு இலக்கியத்துக்கும் கிடையாது. நீதிப்பாடலும் காதல் பாடல்களோடு தொடர்புடையது. தமிழிலே குறள் வெண்பாவில் யாக்கப்பட்டது போல, வடமொழியிலே சூத்திரத்தில் மிகச் சுருக்கமாக உயர்ந்த அறநெறிச் சாரங்கள் யாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அறநெறியைக் கூறும் போதும், இயற்கையிலமைந்த அழகிய பொருள்களிலிருந்து பொருத்தமானவும் சில சமயம் நூதனமானவுமான உவமைகளைக் கூறுகிறார்கள். சுபாஷிதம் என்ற நல்லுரையை இந்தியக் கவிகள் பெரிதும் விரும்பிப் பாடினர்....... வாழ்க்கையில் பட்ட அநுபவம், சுபாஷிதமாகப் பாடப்படுகிறது. நீதியுரைகளில் சிலவற்றையேனும் அறியாதவர், கல்வியற்ற மூடர் எனக் கருதப்பட்டனர். சுபாஷிதத்தில் ஒரு ஸ்லோகம் இதை வலியுறுத்துகிறது. "சுபாஷிதமறியாத நா, நாவன்று; அது காக்கைக்குப் பயந்து வாயிலே ஒளித்து வைத்திருக்கும் மாமிசத்துண்டு போன்றதே .... சுபாஷிதங்களுள் மிகப் பிரபலமானது சாணக்கியர் பெயரால் வழங்குவது......நீதிப்பாடல் துறையில் மிக்க புகழ்பெற்ற மற்றொரு புலவர் பர்த்ருஹரி. இவர் சிருங்கார சதகம், நீதி சதகம், வைராக்கிய சதகம் என முந்நூறு பாடல்களைப் பாடியுள்ளார்... பர்த்ருஹரியின் இந்தச் சதகங்கள் தொகை நூலெனவும் கர்ண பரம்பரையாய் வந்த இப்பாடல்கள் பர்த்ருஹரியின் தலையில் சுமத்தப்பட்டனவென்றும் ஒரு கருத்துண்டு. இது தவறான கருத்து. இச்சதகங்களிலே ஒரு புலவரால் இயற்றப்பட்ட தனித்தன்மை காணப்படுகிறது. காதலும் துறவும் இன்பத்தையடைவதற்கு இரண்டு வழிகள் என்பதே பர்த்ருஹரியின் சித்தாந்தம். ஒன்று பிரவிருத்தி மார்க்கம். மற்றது நிவிருத்தி மார்க்கம். இந்தப் பர்த்ருஹரி அநேகமாக கி.பி.600-க்கு முன் இருந்திருக்கலாம்... ஐரோப்பாவில் முதல் முதல் பிரசித்தமான சமஸ்கிருதப் புலவர் பர்த்ருஹரியே. (8) "கி.பி.1200இல் மற்றொரு பர்த்ருஹரியைப் பற்றியும் கேள்விப் படுகிறோம்" என்று மட்டுமே நவாலியூர் நடராஜன் கூறியிருக்கையில், பலவிதமாகக் குறிப்பிடப்படும் பர்த்ருஹரிகளைப் பற்றி 'பர்த்ருஹரி' என்ற தலைப்பிலான தன் ஆறுபக்கத் தொகுப்பில்[பக்.13-18] மதுமிதா குறிப்பிட்டுள்ளார். ஔவையார் அறுவர், அகத்தியர் பதினெழுவர் என்ற ஆய்வுமுடிபு போன்றதுதான் இதுவும். பன்மொழியறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா, திருக்குறளுடன் 'பர்த்ருஹரியின் சுபாஷித'த்தை ஒப்பிட்டு, திருக்குறளைப் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலுரைக்கும் சிறந்த நூலென்றும், திருக்குறளைப் போன்றே ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்து சுலோகங்கள் கொண்டுள்ளமை வியத்தகு ஒற்றுமை என்றும் நவின்றுள்ளமை(9) அவர்தம் நடுநிலைப்பட்ட உயரறிவுநிலையை வெளிப்படுத்துகிறது. இம் மொழியாக்கத்தில் முதற்பகுதியாகிய நீதி சதகத்தில் 'மங்கலம்' முன்வைப்பாக, 'மூர்க்கர் இயல்பு' முதல் 'வினைப்பயன்' ஈறாக அதிகாரங்கள் பத்தும்; இரண்டாம் பகுதியாகிய சிருங்கார சதகத்தில் 'பெண்ணின் கீர்த்தி' முதல் 'பனி மழைக் காலம்' ஈறாக அதிகாரங்கள் பத்தும்; வைராக்கிய சதகத்தில் 'ஆசையைப் பழித்தல்' முதல் 'பற்றறுத்தல்' ஈறாக அதிகாரங்கள் பத்தும் பொதியப்பெற்றுள்ளன. நூலிறுதியில் 'பாடல் பொருள் விளக்கத்'தையும் தந்துள்ளார் மொழியாக்குநர். அதில் இரண்டு இடங்களில்(நீதி:பா.14-க்கும், பா.27-க்கும்) அறிவியல் நோக்கிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே பொழுது, நீதி சதகத்தின் பாடல் 17-க்குத் தரப்பட்டுள்ள விளக்கம் பொருந்துமாறில்லை. வைராக்கிய சதகத்தின் 17ஆம் பாடலின் பொருள் விளக்கம் இங்கும் இடம்மாறி இடம்பெற்றிருக்கக்கூடும்.(ப.39xப.327) 'ஆனந்த மயமான அறிவு என்னும் மூர்த்தி'யை வழிபட்டு மொழியாக்கம் தொடங்குகிறது. நீதி சதகத்தில், மொழியாக்கம் என்று கருத முடியாத அசலான பகுதிகளுக்குச் சான்றுகள் சில தருகிறேன்: அறிவுடையவர்கள் பொறாமை நிறைந்து இருக்கிறார்கள் செல்வந்தர்கள் செருக்கு மிகுந்து நிந்தனை செய்கிறார்கள் மற்றவர்கள் அறியாமையால் தாக்குண்டதால் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அதனால் நான் சொல்ல வந்த இனிய நல்மொழிகள் என்னுள்ளேயே ஜீரணமாகிவிடுகிறது. ** மெல்லிய தாமரைத் தண்டினால் மதம் பிடித்த யானையைக் கட்ட நினைப்பதும் அனிச்சமலரின் மெல்லிதழால் வைரத்தை அறுக்க முயல்வதும் கடல்நீரின் உப்புக் கரிப்பை தேன் துளிகளால் இனிப்பாக மாற்ற நினைப்பதும் அமிர்தமான நற்சொல்லினால் முட்டாளை நல்வழிப்படுத்த விரும்புவதும் வீண்வேலை. ** ஜாதி பாதாளத்தில் தள்ளப்படலாம் நற்குணங்கள் அதற்கும் கீழே சென்றுவிடலாம் ஒழுக்கம் மலை முகட்டிலிருந்து கீழே வீசி எறியப்படலாம் உயர்குலம் நெருப்பில் எரிந்து போகலாம் வீரம் வஜ்ராயுதத்தால் வீழ்த்தப்படலாம் நஷ்டமில்லை செல்வத்திற்கு முன் இவையனைத்தும் துரும்புக்குச் சமானம். ** தமது அறியாமையை மறைத்துக் கொள்வதற்காகவே மௌனம் என்னும் மறைக்கும் திரையை மூடர்களுக்கு பிரம்மன் கருணையுடன் அளித்துள்ளான். அறிஞர்கள் நிறைந்த சபையில் மூடர்களுக்கு இந்த மௌனம் சிறந்த அணிகலனாய் அமைகிறது. [கட்டுரையாளர் குறிப்பு: அப்படியென்றால் மௌனம் உயர்ந்ததல்லவா என்ற வினாவுக்கு விடை - மூடர்களுக்கு மௌனம் அணிகலன் (ornament); மௌனயோகிகளுக்கு மௌனம் இயல்பு (nature) என்பதாம்.] இனி, அத்தகைய பகுதிகள் மட்டும்: அரை குறையாகக் கற்று ஆணவத்துடன் இருப்பவனை பிரம்மனாலும் மகிழ்விக்க முடியாது. *** ரத்தினத்தின் தரத்தை குறைவாக மதிப்பதனால் நிந்திக்கப்படுவது மதிப்பாளர்களே மாணிக்கங்கள் அல்ல. [கட்டுரையாளர் குறிப்பு: 'மதிப்பாளர்களே' என்பதற்கு மாற்றாக 'மதிப்பீட்டாளர்களே' என்று அடுத்த பதிப்பில் ஆக்கிக்கொண்டால் பொருட்குழப்பம் அகலும். மதிப்பீட்டாளர் = appraiser; antiques appraiser போல gems appraiser. 'மதிப்பாளர்' என்பது 'ஆட்சியாளர்' போல் பொருள்தரும்.] *** பணிவு இருந்தால் அணிகலன் தேவையா? புலமை இருந்தால் ராஜ்ஜியம் தேவையா? *** எவர் எவரால் எவர் எவரும்; எவை எவற்றால் எவை எவையும் அழிந்து விடுகின்றன என்பதை விளக்கும் நீதி சதகம் 33ஆம் பாடலும்; இழப்புகளுக்குப் பின்னும் தனி அழகுடன் மிளிர்பவர்களும், மிளிர்வனவும் குறித்து எடுத்துரைக்கும் 35ஆம் பாடலும் உட்கிடையால் அழகானவை. பா.35இல் வரும் "உடலுறவுக்குப் பின் களைப்படைந்திருக்கும் இளம்பெண்," 'சதகத்ரய'த்தில் நீதி-சிருங்காரம்-வைராக்யம் மூன்றும் ஒன்றுடனொன்று அவ்வப்பொழுது உறழ நேர்வதற்கொரு சான்று. சிருங்கார சதகத்தின் 62,64ஆம் பாடல்களும் இவ்வாறே.('காதலர் மனநிலை' என்னும் அதிகாரத் தலைப்புக்குப் பொருந்தாதவை; வைராக்கியம் சார்ந்தவை.) வாளின்மேல் நடப்பது போன்ற விரதங்களை நல்லவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்ற வினாவே விடையாக, உரிய விரதங்கள் ஐந்து, பாடல் 57இல் எடுத்துரைக்கப்படுகின்றன. நீதி சதகத்தில் 'நல்லோர் இயல்'பிற் சொல்லப்படும் 'புண்ணியம்'(பா.59) சிருங்கார சதகத்தில் பாடல்கள் 18,30,68,70 சொல்லும் 'புண்ணியம்' என்பதிலிருந்து மிக நுட்பமாக வேறுபடுகிறது. இவற்றுள்ளும் பாடல் 18 சொல்லும் புண்ணியம் மட்டுமே சிருங்கார சதகத்துக்குப் பொருந்தும். மற்றவை மூன்றும் வைராக்கியத்துக்குப் பொருந்தும். இவற்றுள்ளும் பாடல் 70 சொல்லும் புண்ணியம் விந்தையானது: "மை எழுதிய/ மான் விழியாளின்/ பார்வைச் சுழலில்/ சிக்காத வரையில்/ தூய ஞானதீபம் ஒளிரும்/ புண்ணியம் செய்தவனிடத்தில்" என்றால் என்ன பொருள்? வைராக்கியம் என்பது, சிருங்காரம் விட்டுவைக்கும் வரையில்தான் - அவன் செய்த புண்ணியம் அது. நிபந்தனைக்குற்பட்டது. ஆக்கத்துக்கும் அழிவுக்கும் விதியே முதன்மைக் காரணம் என்பது மிகவும் பொருத்தமான பாம்பு - எலி கதைப்பாடலாக (பா.82) விரிகிறது. அடுத்த பாடலில், பந்து - களிமண்ணுருண்டை பற்றிய செயலுவமை இடம் பெறுகிறது. பந்து - நல்லவர்; வாழ்க்கையில் விழ நேர்ந்தாலும் உடனே கீழிருந்து மேலெழுந்துவிடுவர். களிமண் ணுருண்டை - தீயவர்; வாழ்க்கையில் விழுந்துவிட நேர்ந்தால் எழ முடியாமல் கீழேயே விழுந்து கிடப்பர். உவமை உணர்த்தும் பொருள் அருமை. இந்தப் பாடல் 83க்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கமான முழுப்பாடலும் (ப.329) சிறப்பாகவுள்ளது. 'ஜடதெய்வ'த்தை விடவும் சான்றோர் மேலானவர்கள் என்ற அந்தக் காலத்திய புரட்சிக் கருத்து பாடல் 89இலும்; விதியை வரையறுக்கும் வினை(karmA)யின் பெருமை, பாடல்கள் 91, 93களிலும் நவிலப்பட்டுள்ளன. சிருங்கார சதகத்தில் பர்த்ருஹரி பெண்ணின் மார்பையும்(payO-dhara:)# பின்பக்கத்தையும்(prstha:)## ஆணியநோக்கில் பெண்ணுடலில் மையப்படுத்துகிறார். பர்த்ருஹரியின் காலச் சமூகச் சூழல் - ஆண்உளவியல் அவ்வாறு இருந்திருக்கக் கூடும். தமிழில் 'காமம்' என்பதுதான் பழங்காலத்தில் 'நிறைவானதும் முழுமையானதுமான காதல்' உணர்வைக் குறித்தது. "கமம்நிறைந் தியலும்"(10) என்பது தொல்காப்பிய நூற்பா. காமம் என்பது நிறைவாகிய பொருளுற்று நிகழும் என்பது அதன் பொருள். காதல் என்ற சொல், பக்தி இலக்கிய காலத்துச் சொல். திருக்குறளில் மூன்றாவது பாலாகிய காமத்துப்பாலை இன்பத்துப்பால் என்று மு.வ. மாற்றியபோது ஏற்பட்ட எதிர்ப்பு, மொழித்திறனையும் மொழிக்கட்டுமானத்தையும் பொருத்தவரை சரியானதே. பர்த்ருஹரி பாடுகிறார்(பா.36): பூஜிக்கத் தகுந்தவர்களே! அசூயை விடுத்து ஆலோசித்து மரியாதையுடன் செய்ய வேண்டிய செயல்கள் இதுவென உறுதியாகச் சொல்லுங்கள் பூமியினைப் புகலிடமாகக் கொள்வதா? அல்லது மென்சிரிப்புடன் மன்மத கேளிக்கை சுகமளிக்கும் மங்கையின் பிருஷ்டங்களைச் சரணடைவதா? ** 'மென்மையானவளே!' என்று தொடங்கும் 12ஆம் பாடல் மிக மென்மையாகவும் மேன்மையாகவும் பெண்ணழகைச் சித்திரிப்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பெண்ணை யோகியுடன் உருவகிக்கும் பாடலிது. மொழியாக்குநர்வழி விளக்கம்: பெண் யோகி கச்சிதமாய் வாரப்பட்ட கூந்தல் புலன்களின் வெற்றி காதுவரை நீண்ட கண்கள் வேதவேதாந்தங்களில் தேர்ச்சி தூய பல் வரிசை நன்னடத்தை முத்துமாலையணிந்த மார்பகங்கள் முக்தி பெற்ற நிலை ** "பார்க்காத போது/அவளைப்/பார்ப்பது மட்டுமே/ஒரே ஆசை" என்பது பாடல் 22இல் தலைவன் நிலை. திருக்குறளில், "நோக்காக்கால் /தான்நோக்கி மெல்ல நகும்" (1094) - என்பது தலைவியின் நிலை. 'குலப் பெண்ணிற்கு உரிய' காமத்தை பர்த்ருஹரி பதிவு செய்திருப்பதை பாடல் 24இல் உணரலாம். பாடல் 19, 'மன விகாரத்தின்/முதன்மையான குரு' யார் தெரியுமா? என்று கேட்டு மறுமொழியாக 'வெகு காலமாய்/மனதைத் திருடுபவள்' என்று தெரிவிக்கிறது. பெண் எவ்வாறு கோள்கள் எனப்படும் கிரகங்களாய் ஜொலிக்கிறாள் என்னும் 17ஆம் பாடலுக்கு மொழியாக்குநர் கொடுத்துள்ள விளக்கம்(ப.330) சிறப்பு. கிரகமயமாய் என்று சொல்லிவிட்டு 'நட்சத்திரமாய்' என்றும் ஏன் சொல்லியிருக்கிறார் என்று புரியவில்லை.(ப.330) 27ஆம் பாடலில் மன்மதன் தாக்குதல் எந்த வயது - எந்த உடல்நிலை வரை என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பர்த்ருஹரி வரையறுத்திருப்பது கொஞ்சம் முரணானது. பாடலின் மொழியாக்கத்தில் இரண்டாம் மூன்றாம் பத்திகளின் நடுவில் ".....பெண்களுக்கு" "மங்கையரின்" என்ற தொடர்ச்சி குழப்பம் தருகிறது. அதேபோலத்தான் கணிகை(பா.58), வேசி(பா.59) என்று சொல்லிவிட்டு அதே பொருள் தொடர்பில் 'மங்கை'(பா.60) என்று சொல்லுவதும். 60ஆம் பாடலின் கடைசிப்பகுதி, நேரடி மொழிபெயர்ப்புப் போலவுள்ளது. அல்லது அச்சுப்பிழையோ? "பெண்ணின்/கன்னம் போல் சற்றே/வெளுத்த வெற்றிலைக்கொடி இலை"(பா.34), அழகிய உவமை. 'திறமை மிக்க குரு' குறித்த விளக்கத்தில்(பா.37) கற்றறிந்த ஆடவருக்கு அன்றிருந்த வழிகள் இரண்டை(ஞானவழி, மோகவழி) பர்த்ருஹரி வெளிப்படுத்துகிறார். இதுவே வேறுவிதமாகப் பாடல் 38இல், பாபம் போக்கும் இரண்டு வழிகளாக(கங்கை நதிக்கரையில் வசிப்பு, மார்பகங்களில் வசிப்பு) புலப்படுத்தப் படுகிறது. பொதுவாகவே இந்திய இலக்கியத்தில் நீதிநூல்களுள் பாடல்களை மட்டுமே, படைத்தவர்கள் புனைந்திருப்பார்கள். அதிகார வகுப்பைப் பின்வந்தவர்களோ உரையாசிரியர்களோதாம் செய்திருப்பார்கள். சிருங்கார சதகத்தில் அதற்குச் சான்றுகள்: உயிரானவள் குவளைக் கண்ணழகி பருத்த பிருஷ்டங்கள் பருத்த முலைகள் தாமரை முகம் அழகிய புருவங்களுடையாள் என இம் மங்கையரை பண்டிதர்கள் புகழ்கின்றனர் சுத்தமில்லாத தோல்பையாலான சரீரமென உண்மையை அறிந்திருந்தும் மோகத்தின் தீச்செயலால் இவ்விதம் போற்றி மகிழ்கின்றனர் ('பெண்ணில் இருமை,' பா.41) ........................ அறிவின்மையால் மனிதர்கள் தோல்,தசை,எலும்புகளாலான மான் விழியாளைப் போற்றுகின்றனர். ('பெண்ணில் இருமை,' பா.46) ......................... அழகிய பெண் நதி குரூரமானது. அதிலிறங்கி சம்சாரக் கடலில் மூழ்காதிருக்க விட்டு விலகியிரு ('பெண்ணில் இருமை,' பா.49) ஒருவனிடம் பேசுகின்றனர் இன்னொருவனைப் பார்க்கின்றனர் வேறொருவனை நினைக்கின்றனர் அழகிய பெண்களுக்கு பிரியமானவன் யார்? ('பெண்ணில் இருமை,' பா.50) இச்சதகத்தில் 'காதலர் மனநிலை' என்ற தலைப்பில் வரும் பா.62 வைராக்கிய சதகத்தில் இருந்திருக்க வேண்டும். முதல்முதலாகப் பாடல்களை ஏட்டில் பதித்தோரும், பின்வரும் உரைகாரரும்தான் இவ்வாறு செய்திருக்கின்றார்கள். "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்!' என்று இதனால்தான் வந்திருக்கும் என்பர் அறிஞர் சிலர். இதே 'காதலர் மனநிலை' பா.64, பிறைசூடியின் 'பாதாரவிந்தங்களின் தியானாமிர்தம் அருந்துவதில் (தற்சமயம்) மனம் மூழ்கியுள்ள' அடியார் மனநிலை பற்றியதும் இப்படிப்பட்டதே. பாடல்கள் 67,68,69 போன்றனவும் வைராக்கியம் எய்திய நிலையையே சுட்டுகின்றன. 'சதக த்ரயம்' என்பதனால் ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல்கள் சரியாக வகுக்கப்பெறல் வேண்டும் என்று கருதி இவ்வாறு செய்திருக்கலாம். பாடல்கள் சில காணாமல் போயிருந்தாலும் இவ்வாறு நிகழும். பா.78இல் வரும் - உடைந்த மண்சட்டியை மாலையாய்க் கழுத்தில் அணிந்த நிலையை உடைய நாய், சித்தர் பட்டினத்தார்தம் சீடர் பர்த்ருஹரி கதையில்வரும் நாயின் தோற்றத்தை நினைவுறுத்தும். நிர்வாணமாகவும் மொட்டையடித்துக் கொண்டும் குடுமி தரித்தும் ஜடாமுடியுடனும் கபாலமேந்தியும் சிலர் ஏன் திரிகின்றார்கள்? மீன்கொடியோன் மன்மதனின் 'ஸ்த்ரீ முத்திரை'யைப் புறக்கணித்ததால்தானாம்.(பா.79) விந்திய மலை கடலில் மிதக்குமா? மிதக்கும். எப்பொழுது? காற்று, நீர், மர இலைகளை மட்டுமே உண்டு உயிர்த்த விசுவாமித்திரர், பராசரர் ஆகிய முனிவர்கள் கூட - தாமரைமுகமுடைய அழகு மங்கையரைக் கண்டதும் மோகம் கொண்டிருக்க, பால்-தயிர்-நெய்யுடன் சம்பா அரிசியுணவுண்ணும் மனிதர்கள் புலனடக்கம் மேற்கொண்டால் அப்படியும் நடக்கத்தான் செய்யுமாம்.(பா.80) இன்னும் வசந்தகால வரவு, வசந்தகால இரவு, கோடை காலத்திலும் பாக்கியவான்கள் சுகத்துக்குக் காரணம், மழைக்காலம்("மேலே கனத்த/மழைமேகக் கூட்டம்/மலைச் சரிவுகளில்/மகிழ்வுடன்/மயில் கூட்டத்தின் ஆட்டம்/புதுமலர் மொட்டுகளால்/வெண்மையாகியுள்ளது/ பூமி -பா.92), 'பரிபூர்ண வளர்ச்சியுடன் அழகிய ப்ரியங்குக் கொடி' விளங்கும் குளிர்காலம்(மான்விழியரைப் பெறாதோர்க்கு இரவில் நொடிப்பொழுதும் நீண்டு 'யமனின் மாளிகைக்கு இணையாக இருக்கும்'-பா.98), காமமிக்க காதலன் போலவும் நங்கையிடம் நாயகன் போலவும் நடந்துகொள்ளும் குளிர்காலக் காற்று(பாடல்கள் 99,100) முதலானவற்றை முப்பரிமாண ஒலி-ஒளி-மணம்-உணர்வுக் காட்சிகள் ஆக்கும் சிருங்கார சதகப் பாடல்களும் அவற்றை அவ்வாறே வர வழிவிட்ட மொழியாக்கமும் பாராட்டத் தக்கவை. ஆணிய மொழிபெயர்ப்பில் வந்த சிருங்கார சதகம்(11) படித்தவர்களுள் நயம் மட்டும் எதிர்நோக்குவார்க்கு இவ்வாக்கம் 'மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று'(12) ஆகும். வைராக்கிய சதகம் (அழகு,இளமை,செல்வம்,யாக்கை) நிலையாமையை மிகவும் வயணமாக எடுத்துரைக்கிறது. இதில் 'நிந்தாஸ்துதி' போல சிவபெருமான் இயம்பப்படும் பாடல் தொன்மச் செறிவும் பொருட்செறிவும் ஒருங்கே பெற்றுள்ளது.(பா.17) பாடல் - சிவன் பிரியமானவளைத் தன் உடலின் பாதி பாகமாகக் கொண்டு காமுகர்களின் ஒரே தலைவனாய் உள்ளான் பெண் இன்பம் துறந்த வைராக்கியசாலிகளுக்கும் சிவனை விடுத்து வேறு தலைவனில்லை மீதி மனிதர்கள் மன்மத அம்பெனும் பாம்பின் விஷத்தால் தாக்கப்பட்டு மோகம் கொண்டதால் அவர்களால் இன்பங்களை முழுமையாக அனுபவிக்கவும் இயலவில்லை முழுமையாகத் துறக்கவும் இயலவில்லை ** என்ன நயமான பாடல்! இதற்கு மொழியாக்குநர் தந்துள்ள விளக்கம் - "சிவன் பார்வதியை மணப்பதற்கு முன் பெண்ணின் அழகிலிருந்து விடுபட்டிருந்தான். காதல் உணர்வினைத் தூண்ட விரும்பி மலர்க்கணை தொடுத்த மன்மதனையும் எரித்து சாம்பலாக்கினான். ஆனால், இதயத்தில் இந்த அழகியைத் தன்னுடையவளாக ஏற்றுக் கொண்டதும், அவளைச் சிறு நொடி கூடப் பிரிய இயலாமல் அர்த்தநாரீஸ்வரனாகத் தன் பாகமாக்கிக் கொண்டான். ஆகையால் சிவன் ஒருவனே உலக இன்பத்தில் நாட்டம் உடையவர்களுக்கும், உலக இன்பத்தில் நாட்டம் இல்லாதவர்களுக்கும் ஒப்பில்லாத் தலைவனாயுள்ளான்.(ப.331) குழம்புபவன், கலங்குபவன் யோகி அல்லன்(பா.92): பிரம்மாண்ட உலகம் குழப்பாது யோகியை ** சிறு மீனின் துள்ளலால் கலங்காது கடல். வைராக்கியமெனும் வாளால் பற்றறுத்த யோகியோ பரிபக்குவ மனதுடன் மகிழ்வாக உள்ள பாக்கியவான்களோ அடைய விரும்பும் புண்ணிய நாள் எது? விடை, பாடல் 98இல்: கங்கையின் கரையில் இமயமலையின் கல்லில் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து யோக சமாதி நிலையைப் பெற வேண்டும். அந்நிலையில் என்னுடைய உடலில் சிறிதும் பயமின்றி வயதான மான்கள் தங்கள் உடல் அரிப்பிற்காக உரசிக் கொள்ள வேண்டும் அந்தப் புண்ணிய நாள் விரைவில் வருமா? ** சுபாஷிதமென்னும் முப்பெருங்கடல்களுள் ஒன்றான வைராக்கிய சதகத்தில் மேலும் சிலவற்றைத் துளிகளாகத் தருகிறேன்: விஷய சுகங்களெனும் பெண்யானையின் மேல் ரகசியமாய் வேரூன்றிய பிரியத்துடன் ஆசை கொண்டுள்ள ஆண்யானை(பா.81); கண்களில் நீர் ததும்ப, கோபத்தில் ஒளிரும் பிரிய மனைவியின் அழகான முகம்(பா.79); விளக்கின் ஒளிதேடி சுற்றிவரும் விட்டில் பூச்சியின் சிறு இறகசைவினால் வீசும் காற்றில் அலையும் தீப ஒளி(பா.80); குதிரையின் மனம் போன்று சஞ்சலம் கொண்ட கோவேந்தர்கள்(பா.77); தூய கங்கைக் கரையில் செய்யும் தவமா? குணமும் அழகுமுடைய மனைவிக்குச் செய்யும் பணிவிடையா? பல காவியங்களின் அமிர்த சாற்றைப் பருகுவதா? நிலையற்ற வாழ்வில் எதைச் செய்வது?(பா.76); பாழ்ங்கிணற்றை விட்டு விலகிச் செல்வது போல், முதுமை எய்தும் ஆடவரை விட்டு விலகிச் செல்லும் மகளிர்(பா.74); யானையின், சதா அசையும் காதுகள் போன்ற நிலையில்லா இவ்வுடலின் நிலை(பா.72); மன்னனின் புருவத்தில் குடியிருக்கும் காரியவாதியான விலைமகளைப் போன்ற நிலையில்லாத செல்வம்(பா.65); மனவேதனையளிக்கும் புலன்களெனும் வனம்(பா.63); பிறர் மனத்தை மகிழ்விக்கும் பொருட்டு நாளும் துன்புறாமல், தான் தன் உள்மனதில் மகிழக் கற்றுக் கொண்டால், நினைத்ததை அளிக்கும் சிந்தாமணியை ஒத்த குணம் தானாகவே உதித்து, விடுபட்ட எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி விடாதா?(பா.61);எல்லையற்ற ஆசைகளுடனிருப்பவன் ஏழை(பா.53); நீரலை போன்ற நிலையில்லா வாழ்வு(பா.49); நதிக்கரையின் மணற்பரப்பில் வளரும் மரங்களைப் போல் தினமும் மரணத்தை நெருங்கி உள்ள நிலை(பா.48); பிறரின் உணவை எதிர்பார்க்கும் காகம் போல் கழியும் [சார்பு] வாழ்க்கை (பா.46); பாழடைந்த வீட்டில் எரியும் விளக்காக(பா.46), இளமை வனத்தை வீணாக அழிக்கும் கோடரியாக(பா.45), அறியாமையால் கவனக்குறைவு எனும் மதுவைக் குடித்து(பா.43) மகிமை வாய்ந்த இளமைக்காலம் வீணாதல்; புலியைப் போல் பயமுறுத்தும் முதுமை, விரோதியைப்போல் உடலைத் தாக்கும் வியாதி, உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல் ஒழுகும் ஆயுள்(பா.38); மேகங்களிடையே மின்னி மறையும் மின்னல் போல் நிலயற்ற உலக இன்பம், காற்றின் வேகத்தால் சிதறும் தாமரை இலை நீர் போல் நிலையற்ற ஆயுள்(பா.35); உயரும் அலை வீழ்வது போல் நிலையற்று வீழும் சுகங்கள்(பா.34); எங்கே செல்வம் உள்ளதோ, அங்கே திறந்த வாயிலில் நுழைவது போல் நுழையும் அழிவு, பிறக்கப் பிறக்க ஆயுளைத் தன் வசமாக்கிக் கொள்ளும் யமன்(பா.33); அழகிய நகரம், அரசாண்ட மன்னன், அகிலம் பரவிய ராஜ்ஜியம், அறிஞர்கள் நிறைந்த அவை, நிலவுமுக நங்கையர், கர்வத் துடுக்கு நிரம்பிய இளவரசர்கள், துதிபாடிகளின் கதையாடல்கள் - இத்தனையையும் தன் வசமாக்கிக் கொண்டு நினைவுச் சின்னங்களாக மாற்றும் காலம்(பா.41); நூற்றுக்கணக்கான ஆசைகளை அழித்து விடும் சுய அனுபவ அறிவுச் சுடரொளி(பா.39); சிறு செல்வம் பெற்றதனால் கர்வம் கொண்டு புருவங்களை உயர்த்தும் தீயவனின் [திருந்தாத] முகம்(பா.25); நிரப்பவே இயலாத பானைபோல் வலிந்து மோசம் செய்யும் வயிறு(பா.22); (தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விடுமோ என்று பயந்தபடி) எழுத்துக்களைத் தனித்தனியே உச்சரிப்பதுபோல் வாய்குளறி, தழுதழுத்த குரலில் வயிற்றுக்காகத் "தா!" என்னும் இரத்தல்(பா.21); குளிர்ந்த ருசியான நீர், மாமிசத்துடன் கலந்துண்ணப்படும் சுவையாகச் சமைக்கப்பட்ட சம்பா அரிசிச் சோறு, காம நெருப்பை அணைக்க அணைக்கும் இளம்பெண் - நோய்க்குப் பரிகாரங்களே இவை, சுகங்களல்ல(பா.19); ருசியில்லாப் பிச்சையுணவு ஒருவேளை மட்டும், பூமியே படுக்கை, தன்னுடலே உறவினன்,நூற்றுக்கணக்கான கிழிசல்களாலான நைந்த கந்தல் துணி உடை - ஆனாலும் உலக ஆசைகளை விட்டு விட இயலா விருப்புடையோன்(பா.15); மலைக்குகைகளில் வசித்துப் பரமாத்மாவைத் தியானம் செய்யும் பாக்கியசாலிகளான வைராக்கிய சித்தர்களின் மடிமேல் சிறிதும் அச்சமின்றி அமர்ந்து அவர்களின் விழிகள் பொழியும் ஆனந்தக் கண்ணீரை அருந்தும் பறவைகள்(பா.14); தைரியம் எனும் மரத்தை அடியோடு அடித்துச் சாய்த்துவிடும் ஆசை என்னும் ஆற்று வெள்ளத்தில் விருப்பம் என்னும் நீர் பெருகிப் பேராசை என்னும் பேரலைகளாய்க் கொந்தளிக்கும், காதலெனும் முதலை கள்ளமாய் நீந்தும், சந்தேகமெனும் பறவைகள் சலசலத்துப் பறக்கும், மோகமெனும் சுழல் தாண்ட விடாது, ஆழமானது, சிந்தை என்னும் கடினமான உயர்ந்த கரைகள்...இத்தனையையும் கடந்து அக்கரை சென்று ஆனந்தம் அடைபவர்கள் தூயமனமுடைய யோகிகளே(பா.10); இன்னும் இன்னும் வளர்ந்து பாவம் சேர்ப்பவள் - ஆசை (பா.2); நன்மை நல்கும் மங்கலத்திற்கு இருப்பிடம் - மனத்தை மயக்கும் அடர்ந்த அறியாமை இருளை விரட்டி அகற்றும் ஞானம் பிரகாசிக்கும் விளக்கு, யார்? யோகிகளின் மனக்கோவிலில் வெற்றியுடன் வீற்றிருக்கும் சிவன்(பா.1) வைராக்கிய சதகத்தின் இறுதிப் பாடல், ஐம்பெரும் பூதங்களிடமிருந்து விடைபெறுவதாகவும் இறுதி அஞ்சலியாகவும் விளங்குகிறது.(பா.100) தாயான நிலமே தந்தையான காற்றே நண்பனான நெருப்பே உறவினனான நீரே சகோதரனான ஆகாயமே உங்களுடனான உறவால் உண்டான புண்ணியத்தால் சிறப்பாக விளங்கும் தெளிவான ஞானம் கிடைக்கப் பெற்றேன் மோகங்களை இழந்து பரப்பிரம்மத்தில் ஆழ்ந்து விட்டேன். உங்கள் அனைவருக்கும் இதோ எனது கரங்குவித்த இறுதி அஞ்சலி. ** தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணி(13)போல் வாசிக்க வாசிக்க, கற்கக் கற்க 'ஞானானந்தம்' தந்து 'விட இயலா விருப்பத்'(14)தையும் நல்கக் கூடியது இந்தச் சுபாஷித மொழியாக்கம் என்பது என் வாசிப்பினால் நான் புரிந்துகொண்ட உண்மை. ********************* அடிக்குறிப்புகள்: ஒலிப்பு: # yO=யோ. : = ம். ## r,s,t-களின் கீழ் புள்ளியிட வேண்டும். அவ்வசதி, இக்கணினியில் இல்லை. : = ம். 1. கைலாசபதி, கலாநிதி க. ஒப்பியல் இலக்கியம், சென்னை புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை, மூன்றாம் பதிப்பு, செப்.1982, ப.4. 2. சென்னைத் தொலைக்காட்சியின் தொடக்க ஆண்டுகளில் வடமொழி - தமிழாக்கம் குறித்து உரையாற்றிய பொழுது த.நா.கு. இவ்வாறு சொன்னார். 3. இரவீந்திரநாத் தாகூர் கருத்து. 4. நன்னூல், 5-6. 5. புறநானூறு:192, கணியன் பூங்குன்றன் பாட்டு. 6. குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பா.62. 7. மரத்தடி.காம் கவிதை 8. நவாலியூர் நடராஜன், வடமொழி இலக்கிய வரலாறு, கலைஞன் பதிப்பகம்(வி.உ.), சென்னை.17. 1979. பக்.213-214; 216-217. 9. சுபாஷிதம் அணிந்துரை. 10. தொல்காப்பியம், 838. 11. கண்ணதாசன், ராஜா பர்த்ருஹரியின் சிருங்கார சதகம். 12. திருவருட்பா. 13. திருக்குறள், 396. 14. சுபாஷிதம், வைராக்ய சதகம், இரண்டாம் தலைப்பு. *** புத்தகம்: சுபாஷிதம் (நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்ய சதகம்), சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில்: மதுமிதா பதிப்பு: சந்தியா பதிப்பகம் ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 - 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. புத்தக அளவு: தெமி 1x8 பக்கங்கள்: 332. விலை: ரூ. 150/- தொ.பே: 044 -24896979, 55855704 **** நன்றி: திண்ணை.காம் |
16.9.07
சல்லா ராதாகிருஷ்ண சர்மா: சுற்றி வளைத்து எழுதாத தெலுங்குக் கவிஞர் - தேவமைந்தன்
இலக்கியத் துறையிலும் உலகமயமாதல் நிலைபெற்றுள்ள கால கட்டத்திலும்கூட, யாரெல்லாம் கவிதை படைக்கலாம் யாரெல்லாம் கவிதை படைக்கக் கூடாது என்று வரையறுக்கவும் ஏன் மிரட்டவும் கூடத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். அதை ஆதரிப்பவர்களும் இல்லாமலா போவார்கள்? பாலைவனங்கள் நிலத்தில் நிலைபெற்றுள்ளதைப் போன்றே இலக்கியத்திலும் வறண்டுபோனவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதையெல்லாம் கண்டும் காணாமல் போக வேண்டியதுதான் விதி. வேறென்ன செய்வது!
பேராசிரியர்கள் கவிதை படைக்கக் கூடாது என்பதை முறியடித்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர் சல்லா ராதாகிருஷ்ண சர்மா. இவர்தம் சுருக்கப் பெயர் - சி.ஆர்.சர்மா. ஆந்திரப் பிரதேசத்துக் கிருஷ்ணா மாவட்டத்தில் 6.1.1929 அன்று பிறந்தவர். சாகித்திய அகாதெமியில் பல ஆண்டுகள் பணியாற்றியும் படைப்பாற்றல் வறளாதவர். தவறானவர்களுடன் சமரசம் செய்து கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் 'கபளீகரம்' செய்யத் தெரியாதவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தெலுங்கு மொழி இலக்கியத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தாய்மொழியான தெலுங்குடன் தமிழிலும் நன்றாக எழுத வல்லவர். ஆங்கிலமொழி அறிவையும் பெற்றவர். "குறிப்பாகத் திருக்குறளை அதன் உள்ளார்ந்த உணர்வு மாறாமல் மொழிபெயர்த்துப் பெரும்புகழ் பெற்றவர்" என்று முனைவர் தமிழண்ணலால் விதந்தோதப் பெற்றவர். முதலில் திருக்குறளை எளிய முறையில் 'தமிழ வேதமு' என்ற பெயரில் தெலுங்கு வடிவில் கொடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறளை அதன் யாப்பு வடிவம் மாறாமல் தெலுங்கில் மொழியாக்கம் செய்தவர். 1991ஆம் ஆண்டு அதற்காக சாகித்திய அகாதெமி பரிசு வழங்கியது. தமிழ் விருந்து என்று பொருள்படும் 'தமிழ விந்து' என்ற இவர்தம் நூலை பாராட்டித் தமிழ்ப் பல்கலைக் கழகமும் தெலுங்குப் பல்கலைக் கழகமும் பரிசுகள் நல்கிப் பெருமைப் படுத்தின.
தமிழிலிருந்து தெலுங்குக்கு நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தவர். தெலுங்குமொழி இலக்கியத்தைத் தமிழர்க்கு உரிய முறையில் அறிமுகம் செய்து வைத்தவர்.
இன்னும் பெருமைகள் பலவற்றைப் பெற்ற பேராசிரியரின் தெலுங்குக் கவிதைகளைப் பொருள் மாறாமல் மொழியாக்கம் செய்துள்ளவர் நண்பர் இளம்பாரதி. எழுபத்தைந்து வயது இளைஞர். சாகித்திய அகாதெமியுடன் தொடர்பு கொண்டவர். அந்த நிறுவனத்துக்காக புதுச்சேரி வரலாற்று நாயகர் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை இந்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவர். சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இளம்பாரதியின் மொழியாக்கங்களுள் தகழியின் 'கயிறு', முகுந்தனின் 'மய்யழிக் கரையோரம்'(இதற்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றார்), தெலுங்கு நாவல்களான 'கெளசல்யா,' 'படிப்பு,' இந்திய அரசின் பரிசு பெற்ற மொழிபெயர்ப்புகளான 'அனல் காற்று'(தெலுங்குக் கவிதைகள்) 'அடுத்த வீடு'(தெலுங்குச் சிறுகதைகள்), கன்னட நாவல்களான 'சிமெண்ட் மனிதர்கள்,' 'களத்து மேட்டிலிருந்து' முதலானவை குறிப்பிடத்தக்கவை. 'வலசை போகிறேன்' என்ற இவரது பிறமொழிக் கவிதைகள் மொழியாக்க நூலின் முதற் பகுதி சல்லா ராதாகிருஷ்ண சர்மாவின் முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது.
'என் வட்டம் பெரிய வட்டம்' என்ற இவரது கவிதை குறித்து முனைவர் தமிழண்ணல் கூறுகிறார்: "இந்தியர் ஒவ்வொருவரும் சிறுசிறு வட்டங்களைத் தம்மைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் இன்று "என் வட்டம் பெரிய வட்டம்" எனத் தொடங்குகிறது இக்கவிதைநூல். நூலின் பாவிகமும் இஃதென்றே கூறிவிடலாம்."[பாவிகம்=தொடக்கம் முதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு]
என் வட்டம் பெரிய வட்டம்
பல மொழிகளின் உறைவிடமாம்
என் பாரதநாட்டில், பரிதாபம்;
தலைவிரித்தாடி மொழிவெறி
அட்டகாசம் புரிகிறது
கம்பன் மாகவி என்பதாய்ப்
பெயரை அறிந்தேன் சின்ன வயதிலேயே;
கம்பன் கவிதையை முனைந்து பின்னாளில்
முறையாய்க் கற்றேனில்லை
நன்னய பட்டன் தெலுங்கில்
மாபெரும் கவிஞனாம்
என்ன பயன்? எனக்கந்த
மொழி தெரியாது துப்புரவாக
மனப்பாடம் செய்தேன்
ஆங்கில இலக்கியம் பலவாக; ஆனாலும்
நெஞ்சைத் தொடவில்லை
அவற்றிடைப் பொதிந்த முருகுணர்வு
படைப்பாளிகள், பேரறிஞர்கள்
எழுத்தச்சன், சூர்தாஸ் போன்றோர்
எழுதிய படைப்புக்கள் எவையோ
தெரியாதெனக்கு முற்றிலும்
ஆனாலும் வாதிடுகிறேன்
என்மொழியே உயர்ந்ததென,
என்மொழிக்கு நிகராக
மற்றொருமொழி இல்லையென
....... ....... .......
....... ....... .......
மனிதன் செய்யும் பணிகளை
இயந்திரங்கள் செய்துமுடிக்கும் இந்த நாட்களில்
நாகரிகம் கணத்துக்குக் கணம்
இளந்தளிர்களைப் பிறப்பிக்கும் இந்த நாட்களில்
தூரதூர மேற்கத்திய நாடுகள்கூடக்
கைக்கு எட்டும் இந்த நாட்களில்
....... ....... .......
இயந்திரங்கள் வெளிப்படுத்தும்
விதவித ஒலிகளைக்கூடத்
தயக்கமின்றி
எழுத்தாக்கும் வல்லமை
பெறவேண்டும் என்மொழி
மூன்று பூக்களிலிருந்து ஆறு கனிகளைக்கூட
உருவாக்க முனையும் அறிவியலைத்
தெளிந்த நடையில் கூறவேண்டும் என்மொழி
....... ....... .......
மனிதர்களிடையே, இனங்களிடையே
தோழமை உணர்வின் இளம் மொட்டுகளை
மலரச் செய்ய வேண்டும் என்மொழி
எல்லாம் வல்லவனே! எனக்குத் தந்தருள்க
மொழிசார் சகிப்புணர்வை;
வேறுமொழி வெறுக்காத
தாய்மொழிப் பற்றை!
சல்லா ராதாகிருஷ்ண சர்மா அவர்களுக்கு நூலகம் என்றால் கொள்ளைப் பிரியம். இது குறித்து முனைவர் தமிழண்ணல் சொல்கிறார்: "கவிஞர் சல்லா இராதாகிருஷ்ண சர்மா அவர்கட்கு, நூலகம் என்றால் கொள்ளைப் பிரியம் என்று தெரிகிறது. அதனை ஒரு கலைமகள் கோயிலாய், கவிச் சக்கரவர்த்திகளின் அரண்மனையாய் அவர் காணுகின்றார். மகிழ்ச்சிக்குக் கொள்ளிடமாய், மனக்கவலைக்கு மருந்தாய் அவர் நூல் நிலையத்தைப் பார்க்கின்றார். 'கூவல்' என்ற தலைப்பிட்ட கவிதையும் நூலகப் பெருமையையே குறிப்பாய் உணர்த்துகிறது. பேருந்து நடத்துநர் "காலேஜ் ரோடு" என்று கூவும்போது மூன்று பேர் இறங்கினார்கள்; "தியேட்டர்" என்று கூவவே ஐந்தாறுபேர் இறங்கினார்கள்; பெருமாள் கோயிலில் ஒருவர் இறங்கினார்; "லைப்ரரி! லைப்ரரி!" - கண்டக்டர் கூவினார். ஒருவர்கூட இறங்கவில்லை. இறுதியில் நாம் நம் 'அந்தராத்மாவின் கூவலையும்' கேட்க முடியவில்லை என்று முடித்திருப்பது கவிதை நயத்தின் உச்சமாகும். "
என் நண்பரின் அத்தையார் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். அவர் அடிக்கடி பழமொழி ஒன்று சொல்வார்களாம். அது - "ஆரால கெட்டேன் நான் நோரால கெட்டேன்' என்பது. 'என் பகை' என்ற கவிதையில் அதை நன்றாக எடுத்துரைத்திருக்கிறார் கவிஞர்.
என் பகை
இந்த விசாலப் பிரபஞ்சம்
என் நெருங்கிய தோழன்
என் மேன்மைக்கு
ஏணியானார்கள் எத்தனையோ பேர் --
எல்லோரும் எனக்கு நண்பர்களே!
அப்படியானால் என் பகைவன்?
நானேதான்!
நேரடி வாழ்க்கைப் பலனாய்த்
தெரிய நேர்ந்தது
நானே என் பகைவனென்று!
எப்படி நான் பகைவனானேன்?
ஆமாம் -- அதேதான்
பகைக்காரணி என் நாக்குதான்!
சல்லா ராதாகிருஷ்ண சர்மாவின் 'மரம் என்ற கவிதையை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு யாரையும் 'மரமே!' என்று ஏச மனம் வரவே வராது.
''தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப் படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி
நூலைப்படி - சங்கத் தமிழ் நூலைப்படி!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைச் சாரம் இவர்தம் 'பழங்கவிதை'யில் பொதிந்துள்ளது.
'மகா கவிஞனே!' என்ற கவிதை மிக அருமை. காலத்தொடு கரைந்த மகாகவியின் பெயரைச் சொல்லியே சொத்துச் சேர்த்தவர்கள் நம்மவர்கள். பாரதி அன்பன் தான் என்று அறிவித்துக் கொண்டு, பாரதிவழியில் நேர்மை மொழிந்தவனைப் பழிவாங்கி. "அவருக்கு எந்த இடம் வேண்டும் என்பது எனக்குத் தெரியும்!' என்று மாற்றல் பிறப்பித்து அவரை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தையும் அலைய வைத்தவர்கள் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்.
"காலம் சென்ற மகாகவியே, உன்
நெடும்புகழை எவ்வளவென்று எடுத்துரைக்க!
....... ....... .......
மிடறு விழுங்காமல்கூடப்
பேச்சுமழை பொழிவார்கள்;
நெஞ்சில் ஈரம் இல்லாமலே
கண்கள் பனிக்கச் செய்வார்கள்;
....... ....... .......
....... ....... .......
செலவினங்களாகக் கழித்துக் காட்டிய பின்னர்
மிஞ்சுவது -- உன் பெயரில் மிஞ்சுவது
பூஜ்ஜியங்களின் வரிசையே, வெறுமையின் சுவடுகளே!
அறிவுரைகள் எதனையோ சொன்னாய்
கதைகள் எத்தனையோ குவித்தாய்
கவிதைகள் எத்தனையோ புனைந்தாய்
கற்பனைகள் எத்தனையோ வனைந்தாய்
ஆனால் ---
உலக நடப்பு மட்டும்
புரிந்துகொள்ளாது போனாய் -
வெளிச்சம் இருக்கும்போதே
வீட்டைச்சுத்தம் செய்துகொள்ள வேண்டும்!
எழுதிக்கொண்டே போகலாம். நீங்களே வாசித்துப் பார்க்க வேண்டியவை சல்ல ராதாகிருஷ்ண சர்மா அவர்களின் நேர்பட மொழியும் கவிதைகள்.
****
நூல் கிடைக்குமிடம்:
பாரதி பண்பகம்
9, மங்கான் தெரு
இரெட்டியார்பாளையம்
புதுச்சேரி - 605 010.
தொலைபேசி: 0413 2206400
பக்: 96 (டெமி அக்டேவோ அளவு)
விலை: ரூ.50/-

23.8.07
"இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று!" - தேவமைந்தன்
பாட்டுப் போட்டிகள் பலவகையாக இன்று நடத்தப் படுகின்றன. 'பாட்டுக்குப் பாட்டு' முதலான ஊடகவழிப் போட்டிகள் எல்லார் வீட்டுக் கூடங்களிலும் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. பள்ளிகளில் குடியரசு நாள், விடுதலை நாள் முதலான சிறப்பு நாள்களில் நடத்தப்படும் பாட்டுப் போட்டிகள் தமிழார்வலர் பலர் கவனத்தைக் கவருவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், பாரதக் குடியரசு - விடுதலை நாள்களில், அடையாளம் சரிவரத் தெரியாத திரைப்படப் பாட்டுக்களை முன்னிறுத்தி பாரதியார் நாமக்கல் கவிஞர் முதலானோரின் தேசபக்திப் பாடல்களைப் (பிள்ளைகள் பரிசுபெறுவதில்) பின்னிறுத்தி விடுகிறார்கள். அதைப் பற்றியதே இந்தக்கட்டுரை.
முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில், மேலும் அவர்களின் கட்டடங்களை விரிவாக்குதல் போன்ற காரணங்களுக்காகத் தங்கள் மாணவர்களிடம் நன்கொடை இலக்கை வரையறுத்துத் 'தண்டச்' சொல்வார்கள். பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் அதிகமாகவும், ஒன்பதாம் எட்டாம் ஏழாம் ஆறாம் வகுப்புக்களில் படிப்பவர்கள் அடுத்து அடுத்துக் குறைவாகவும் நன்கொடை வசூலிக்க வரையறுப்பார்கள்.
அதன் பிறகுதான் அந்தப் பிள்ளைகளுக்குத் தங்கள் இல்லத்தின் அக்கம் பக்கம் வாழ்பவர்களாகிய நாம் கண்ணுக்கே புலப்படத் தொடங்குவோம். அதுவரை நம்மை ஒரு திரைப்பாட்டின் முதல் வரி முணுமுணுப்போடு அலட்சியமாகக் கடந்து செல்பவர்கள், இப்பொழுது முழுமையான அக்கறையுடன், நம் இல்லங்களுக்கே வந்து வாய்நிறைய 'அங்கிள்' 'ஆண்ட்டி' (மாமா, மாமி எல்லாம் என்னமோ போல் உள்ளனவாம்) என்று அழைத்து, விலாவாரியாக விவரம் சொல்லி நன்கொடை பெற்று, இவ்வாறு தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் 'வரி தண்டி' தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நன்கொடை இலக்கைத் தங்கள் பள்ளியுடன் நேர் செய்து கொள்வார்கள்.
இப்பொழுதோ ஒரு புதிய பூதம் புறப்பட்டிருக்கிறது.
பள்ளிகளில் போட்டிகள் நிகழ்த்தப்படும்பொழுது, குறிப்பாக நம் நாட்டுக் குடியரசு - விடுதலை நாட்களில் அவற்றுக்குப் பரிசு தரப்படும் என்னும் பொழுது, பள்ளி மாணவர்களுக்குச் சில பணிகள் தரப்படுகின்றன. அவற்றை அவர்களாகவே செய்து கொள்ள முடியாத படிக்கு மிகவும் குறுகிய காலம் தரப்பட்டு, 'உயிர்க்கும் நேரம்'('breathing time') கூட இல்லாமல் 'திண்டாடித் தெருவில் நிற்க வைக்கப்' படுகிறார்கள். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் தாங்கள் அளவுக்கதிகமான வேலைகளைச் செய்ய வேண்டியுள்ள அவலநிலையும்; அரசுப்பள்ளிகளில் தங்களைப் போன்றவர்கள் "நன்ன்றாக"க் குப்பை கொட்டுகையில் - தங்களுக்கு மட்டும் இந்த "லபோ திபோ ஏன்?" என்ற கழிவிரக்கமும்(self pity) சேர்ந்து கொண்டு அவர்களைப் பாடாய்ப் படுத்துகின்றன. விளைவாக, அவர்கள் தங்களிடம் படிக்க 'நேர்ந்தவர்களை'ப் பாடாய்ப் படுத்துகின்றனர். இவர்களுக்கு நாம் தெரியத் தொடங்குகிறோம். நம் காலம் நம் கண் முன்னாலேயே கொள்ளையடிக்கப் படுகிறது.
நடந்த நிகழ்ச்சி......
ஆகஸ்ட் 14 ஆம் நாள் மாலை. நண்பர் தந்த கதையொன்றையும், இன்னொருவர் செய்துள்ள அதன் ஆங்கில ஆக்கத்தையும், நண்பர் தற்பொழுது செய்துகொண்டுள்ள அதன் பிரெஞ்சு ஆக்கத்தைச் சரிபார்த்து உதவும் பொருட்டு ஆழமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தெரிந்த ஒருவர், தன் மகளுடன், முகத்தில் பூசிக் கொண்ட புன்னகையுடன் வீட்டினுள் நுழைகிறார்.
"நாளைக்கே பாடணுமாம்.. இன்னைக்குச் சொல்றாங்க.. சுதந்திர தினத்துல பரிசு தராங்களாம். ரெண்டு பாட்டு மொத வரி தந்திருக்காங்க இவங்க மிஸ்ஸு... ஏம்மா.. அந்த பாட்டு வரி ரெண்டையும் இவங்ககிட்ட காட்டு.." - சொல்கிறார்.
"பாரு பாரு பாரதப் பண்பாடு" என்று தொடங்கியது, முதல் பாட்டு. அதைப் போலவே 'ஓரிரவு' திரைப்படத்தில் திரு ஏ.கே.சண்முகம் பாட்டொன்றை எழுதியிருந்தார். இது அதுவா...." என் மனத்துள் கேட்டுக் கொண்டேன்.....
"சார்! பாரதி பாட்டுப் புஸ்தகமெல்லாம் ஒங்ககிட்ட இருக்கும்'னு சொல்றாங்க! அதுல பாத்தாவது சொல்லுங்க!" என்றாள் அந்தப் பெண்.
"அம்மா இந்தப் பாட்டு பாரதியோ பாவேந்தரோ பாடினதில்ல.. ஏன் சினிமாவுல கண்ணதாசனோ வைரமுத்தோ பாடினதும்கூட இல்ல..." என்றேன்.
"சார்! பாரதி பாட்டுப் புஸ்தகம் கொடுங்க.. நான் பாத்துக்கிறேன்.."
கொண்டு வந்து கொடுத்தேன்.
"அடுத்த பாட்டு என்னம்மா?"
"இதோ எழுதிக் குடுக்குறேன் சார்!"
தொடக்கம் மட்டும் இல்லாமல் அடுத்த சில வரிகளையும் அந்த மாணவி எழுதிக் கொடுத்தாள். அதை இங்கு அப்படியே தருகிறேன்.. அவற்றுள் உள்ள பிழைகளைத் திருத்தாமல்..
"இமயம் முதல் குமரி வரை
எங்களுடைய நாடு இடை
உள்ள தேசமெல்லாம் எங்களுக்கு
வாசம். தமிழ் முனிவர் பொதிகை
மலை தன்னிலெங்கள் வீடு.
தரணி சுத்திடுஓம்.
தைரியம் தான் ஜோரு."
"என்ன படிக்கிறே'ம்மா? எந்தப் பள்ளியி'லேம்மா?"
"டென்த் சார்.." என்று சொல்லிவிட்டுப் பள்ளியின் பெயரை அப்பெண் சொன்னதுமே எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நகரத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பாரம்பரியம் மிக்க பள்ளி அது.
பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு 'சுற்றிடுவோம்' என்றில்லாவிட்டாலும் 'சுத்திடுவோம்' என்றுங்கூட எழுதத் தெரியவில்லை.
"அம்மா! இந்தப்பாட்டு குற்றாலக் குறவஞ்சி பாட்டுப் போல இருக்கு. ஆனா இதிலுள்ள சொற்கள் பல வேறுபாடா இருக்கே.."
இப்பொழுதுதான் அவள் தந்தை குறுக்கிட்டார். "இந்தப் பாட்ட ஸ்கெளட்'ல இருக்குற இவ ஃப்ரண்ட் கொஞ்சம் எழுதிக் குடுத்துட்டு மீதி தெரில'ண்ட்டா.."
எங்கெங்கோ இந்த இரண்டு பாட்டுகளுக்காகவும் அலைந்துவிட்டு, கிடைக்கவில்லை என்பதாலும் இடையில் எதிர்ப்பட்டு இவர்களுக்கு உதவ மனமில்லாத எவராலோ "ஆந்தனையும் கைகாட்ட"ப்பட்டு ("ஆந்தனையும் கைகாட்டி' என்ற வைணவத் தமிழ் வழக்கு அழகானது; ஆழமான பொருள் உள்ளது அல்லவா...) என்னிடம் வந்திருக்கிறார்கள்.
"இன்றிரவு மனப்பாடம் பண்ணி, நாளைக்காலை ராகம் 'ப்ராக்டீஸ்' பண்ணி, 'ஃபோர்நூனெல்லாம் மிஸ் முன்னால் பாடிக்காட்டிவிட வேண்டும்" என்று அது போட்ட போட்டில், என் வீட்டார் என்னைவிட அக்கறை கொண்டு இது குறித்துத் தீவிர முயற்சி எடுக்கலானார்கள்.
எழுத்தாளத் துணைவியார் ஒரு பக்கம். பேச்சாங்கில (Spoken English)ஆசிரிய மகளார் இன்னொரு பக்கம். தன் ஆசிரிய நண்பியருக்கெல்லாம்'மொபைல்' செலவு செய்து அந்தப் பெண்ணுக்காகத் தன்னுடைய ஓய்வு நேரத்தில் மகளார் விசாரித்துக் கொண்டிருக்கையில், பொறுமையில்லாமல் அந்தப் பெண்ணும் அவள் தந்தையும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் போனதும், 'மொபைல்' கூப்பிட்டது. மகளாரின் தோழியார் மறுமுனையிலிருந்து சொன்னார்:
"அந்தப் பெண் கேட்ட முதல் பாட்டு அர்ஜூனும் மீனாவும் நடிச்ச படம் ஒண்ணுல வருது.
இரண்டாவது பாட்டு, ஏழாவது பாடப்புத்தகத்தில் வரும் குற்றாலக் குறவஞ்சிப்பாட்டை 'Scout and Guide' - 'சாரணரும் வழிகாட்டியும்' என்ற முறையில் பள்ளிகளில் 'உல்ட்டா' பண்ணிப் பாட
கத்துக் குடுக்கறாங்க.. 'பேஸ்'(base) தமிழ்'ல பழைய இலக்கியப்பாட்டா இருக்கும். ஆனா எவ்வளவு வேண்'ணாலும் மாத்தியும் வார்த்தைகளைச் சேர்த்தும் பாடலாம். உதாரணத்துக்கு, "பச்சைமலை பவளமலை எங்களது மலையே" என்பதை "திருமலையும்('திருமலா') பழனியும் எங்களது மலையே!" என்றுகூட பிள்ளைகள் மாற்றிப் பாடலாம். இப்படியெல்லாம் மாற்றியும் பழைய இலக்கியப் பாட்டின் நடுவில், "தரணியெல்லாம் சுத்திடுவோம்/தைரியம்தான் ஜோரு!" என்று சேர்த்தும் பாட அவங்களுக்குப் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமாகும்."
என்னால் நம்பவே முடியவில்லை.
ஓரிரு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை வழியில் கண்டபொழுது மகிழ்ச்சியாகத் தான் பாடிய பாட்டுக்கே முதற் பரிசு கிடைத்ததாகச் சொல்லி மிகவும் மகிழ்ந்தாள். "உனக்குத்தான், அன்றைக்கு நீ எழுதிக்காட்டிய பாட்டின் மீதி கிடைக்கவில்லை என்று சொன்னாயே! பிறகு கிடைத்துவிட்டதா?" என்று கேட்டேன். "கெடைக்கலங்க சார்... கை'ல இருந்ததெ வச்சே சமாளிச்சுப் பாடிட்டேன்!" என்றாள். "உன்னோடு பாடியவர்கள் யாருமே பாரதியார் பாடல்களைப் பாடவில்லையா?" என்று கேட்டேன். "ஓ! ரெண்டு பேர் பாடினாங்களே சார்!.. 'பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'ங்கற பாரதியார் பாட்'டப் பாடினாங்க.. 'ம்யூசிக்' நல்லா இல்லே'ன்னு பரிசு கெடைக்கிலே!" என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள். அந்தப் பெண் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சியே என்றாலும் பிழையுடைய வடிவம் கொண்ட, திரைப்படக் கதை தொடர்பான, அடையாளம் தெரியாத பாட்டொன்று இசையால் பரிசு பெற்றுக் கொடுத்ததன் பின்னே பாடங்கள் இரண்டு இருக்கின்றன.
1. "இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று" என்ற சான்றோர் வாக்கு மிகவும் மெய்யானது.
2. பாரதியார், நாமக்கல் கவிஞர் முதலானவர்களின் தேசபக்திப் பாடல்கள் விழுமிய வீழ்ச்சி அடையாமல் நம் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரி. எதிர்மறையானவற்றையே பார்க்க நேரும் நிகழ்நிலையில், உடன்பாடான ஒன்றையும் பார்த்து வைப்போம்.
தில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், சொந்தமாகச் சிந்தித்து, செயல்புரிந்துமிருக்கிறான். நாளேடுகளில் பார்த்திருப்பீர்கள். ரோனன் சட்டர்ஜி என்பது அவன் பெயர். அவனும் இந்தக் கட்டுரையில் வந்த பெண்ணைப்போலப் பத்தாவது வகுப்பில் படிப்பவனே.
பள்ளிப் பாடங்களைப் படிக்கவும், மாலைநேர - அதே வகுப்பாசிரியர்கள் நடத்தும் கட்டாயத் தனிப்பயிற்சிக்குப் போகவுமே நேரம் சரியாயிருக்கிற மாணவ மாணவியரிடையில், ரோனன் சட்டர்ஜி வித்தியாசமானவன். தனக்கு மிகவும் ஈடுபாடுள்ள டென்னிஸ் விளையாட்டையே மையமாக வைத்து - ரோகன், அவர் மகன் ரோகித், பேரன் ராஜ் ஆகிய மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கற்பனைக் கதைமாந்தரின் டென்னிஸ் காதலையும் அர்ப்பணிப்பு உணர்வையும் சித்தரிப்பதாக "உள் கனலும் தீ"(Fire Within) என்ற தலைப்பில் நாவலாக எழுதியுள்ளான். தில்லியிலுள்ள ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் அதை முன்னூற்றுத் தொண்ணூற்றைந்து ரூபாய் விலையிட்டு வெளியிட்டிருக்கிறது. மேலும், அதன் வெளியீட்டு விழா 7/8/2007 அன்று தில்லியில் நடந்த பொழுது, இவ்வாறு பேசியிருக்கிறான்:
"எல்லாருக்கும் தங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். ஆனால், பள்ளிப் பாடப் புத்தகங்களின் சுமையால் நான் வேறு எந்தப் புத்தகமும் படித்ததில்லை. பள்ளிப் பாடச்சுமை இப்போதுள்ள மாணவர்களின் மகிழ்ச்சியை அபகரித்து விடுகிறது. இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக எனக்கு என் பள்ளியிலிருந்து எந்த ஆதரவும் கிடக்கவில்லை. டென்னிஸ் வீரர் ரபேல் நாடலின் வாழ்க்கையை எழுத ஆசையாக உள்ளது. நிச்சயம் எழுதுவேன். படிப்புத்தான் வாழ்க்கையல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு நாவல் எழுதப் போகிறேன். ஓர் ஆண்டுக்குள் அந்த நாவல் வெளிவரும்." (நன்றி : தினகரன், ஆகஸ்ட் 9, 2007.)
****
திண்ணை.காம் வலையேட்டில் வியாழன் ஆகஸ்ட் 16, 2007 அன்று வெளியிடப்பெற்ற கட்டுரையின் மறுஆக்கம்.
நன்றி. திண்ணை.காம்

9.7.07
25.6.07
புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: 'நீலக்கடல்' குறிப்பாக...
- தேவமைந்தன்
1673ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச்சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன.
1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன.
இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே 'இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் 'நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்' (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்கள் அவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது
மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் 'புதுவை வரலாறும் பண்பாடும்' 'தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்' போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகிதம் என்னும் தினப்படி சேதிகுறிப்பு(தன் முதல் தொகுதியின் மேலட்டையில் 'சொஸ்த லிகிதம்' என்றுதான் அவர் குறிப்பிட்டிருந்தார்*) முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பலவற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள்.
இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் 'புதுவைக் கலைமகள்' என்ற 'மாத சஞ்சிகை' நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. 1916ஆம் ஆண்டில், 'புதுவைக் கலைமக'ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், 'ரமணி' என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு 'குணாகுணவாராய்ச்சி''(புதுவைக் கலைமகள்--[1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் 'ரமணி' போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டுவிட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். "உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசாசாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்" என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே - தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!
நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு 'Les Tamouls A L'lleMaurice - Ramoo SooriaMoorthy,' 'Les Indienes A L'lle de France,' 'A Lougnon - (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)' முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.
புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய 'ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப்பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு 'பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்' என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். "என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்!" என்று பிரபஞ்சன் மொழிவது 'எழுத்தாளர் தர்ம'த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து 'வைகறை' என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய 'எழுத்தாளர் தர்மம்' என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது)
"எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டுவந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்துவிடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை" என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கட'ல்(திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1x8] பக்கங்கள் நிரம்பிய நாவல் - முன்னுரைகள் நீங்கலாக...) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் 'மாத்தா ஹரி'' இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த 'சொல்தா வாழ்க்கை'யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316)
பிரபஞ்சனின் 'மகாநதி'' (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி - விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல்.
பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை - என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது. அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன. பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற நாவல் 'மானுடம் வெல்லும்' என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன்.(மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி)
'வானம் வசப்படும்,' ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு - சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே(மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, "மசூதியை இடிக்க வேண்டாம்!" என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.(வானம் வசப்படும், பக்.659-668) தவிர, அப்துல் ரகுமான் சாதித்ததை, "துலுக்கர்தமை, தமிழருக்கு வேறாகப் பிரித்துப் பேசியும் எழுதியும் இருக்கிற"(மேற்படி, ப.681-அடிக்குறிப்பு) ஆனந்தரங்கப்பிள்ளை சாதிக்க முடியாமல் மதாம் ழானுக்கும் குவர்னர் துய்ப்ளெக்ஸுக்கும் ஒத்துப்போன வயணமெல்லாம் அடுத்து வரும் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(ப.669+)
தினமணி கதிரில் தொடர்ந்து வெளியான 'நேசம் மறக்கவில்லை நெஞ்சம்' நாவல், புதுச்சேரியில் விடுதலைக்குப் பின் நிலவி வருகின்ற சொல்தா வாழ்க்கையில், ஓர் எளிய பெண்ணைப் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற இளைஞன் ஒருவன் மெய்யாகவே காதலித்த பின்பும் அவளுக்கு நிகழும் அவலத்தைக் காட்டுவது. இதைத் தொடராக வரும்பொழுது வாசித்தேன். தொடராக வரும்பொழுது நாவலொன்றை வாசிப்பதில் நினைவுத் தொடர்ச்சி சற்றேனும் அற்றுப் போகாமலிராது அல்லவா?
புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் 'வாழ்க்கை ஒரு விசாரணை' நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. "நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?" என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன.
பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் 'சிதறல்கள்(1990)' நாவலில் காணமுடியும். சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது.
பாவண்ணனின் 'ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),' மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும்.
பாவண்ணன் படைத்த 'இது வாழ்க்கை அல்ல(1988)' என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா?
ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.
புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் 'நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)
"ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள்(இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்" என்று சொல்லும் பிரபஞ்சன்('உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்': நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி 'நீலக்கட'லில் ஐக்கியமாகின்றன.
பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது 'நீலக்கடல்.' பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து 'டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் 'அன்னத் தீவு' என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் 'மொரீஸ்' என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் 'பிரஞ்சுத் தீவு' என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். ("பெயரில் என்ன இருக்கிறது!" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)
ஆம். "பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது."(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே.
ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் 'கருமாறி 'ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் "வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி"(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் - கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் - தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் 'கருமாறிப் பாய்வ'தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல - தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) 'நீலக்கடல்' நாவலில்தான் பார்க்க முடிகிறது.
சரி. 'நீலக்கட'லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். "சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis - லூயி துறைமுகம்). கடல் - தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.)
பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் - தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவிகளிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். "தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்."(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் - மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள்தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான்.
"கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர். ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய "புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது" என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது.(மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6: புதுச்சேரி. qu.in 'மனோரமா இயர்புக்')
'நீலக்கடல்' குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது. இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). 'உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.' அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை 'The Serpent Of Paradise' என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, "சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?" என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். 'தாந்திரிக மைதுனம்' என்ற சடங்கைப் பற்றி(Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது - 'நீலக்கட'லில் அலை - 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். " The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini"(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது. 'நீலக்கட'லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் 'சொர்க்கத்தின் சர்ப்ப'த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. 'நீலக்கட'லில் அமானுஷ்யமானதாக வருவது, 'சொர்க்கத்தின் சர்ப்பத்'தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
'நீலக்கடல்' நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் "பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு... மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்" என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் - தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் - தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவுஇல்லம் ஆகிய 'காஞ்சி மனை'யில், அதன் நிர்வாகி'யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.
பின்தொடரும் 'அடங்கல்' - மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான 'தினா' புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. 'உயிர்ச்சேதம்' பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறைமெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520)
"பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது"(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும்.
இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி - கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் 'பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி''யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் - சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108)
நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. "நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக"(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?"
அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) 'உளவியலுக்கான சார்பியல்' (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். 'The World According To Garp' என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது.
மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. "தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே." இதில் 'தன்' என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது... 'நீலக்கடல்' நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? "எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்"(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு? இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக(அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் 'சாமர்த்தியம்.' எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.
'நீலக்கட'லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் 'சொஸ்த லிகித'மான 'தினசரிப்படி சேதிக் குறிப்'பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் 'Narrative' என்பதை மனத்துள் கொண்டு 'நவிலல்' என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். 'நீலக்கட'லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் "இந்தப்படிக்குப் படித்துப்போட" முடியாது. இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus...pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற 'Ars Poetica' என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 'Purple Patch' என்பது. "It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose -- especially a descriptive passage -- stand out from its context"(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று 'நீலக்கட'லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.
'நீலக்கட'லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் "நண்பனே!" என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் - கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் - கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது. புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.("ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?").. "மிசியே! போன்சூருங்க!" என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; "முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு'ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு'ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?" (காரைக்காலில் "என்ன புள்ளா!"வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், மக்கள் தொலைக்காட்சியை "தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி - மக்கள் தொலைக்காட்சி!" என்றும் தமிழோசையை "நாங்க படிச்சாச்சு..நீங்க..?" என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள். பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.
உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
*ஆலாலசுந்தரம், இர. ஆனந்தரங்கப் பிள்ளை காலத் தமிழகம் (1736 - 61). GRS பதிப்பகம், 11, இரண்டாவது தெரு, கைலாஸ் நகர், லாஸ்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு. ஆகஸ்ட் 1999.
கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 - 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. முதற் பதிப்பு. 2005.
சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது 'E' குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் - 560 038. முதற் பதிப்பு. 1991.
சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை - 600 041. ஏழாம் பதிப்பு. 1971.
சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.
தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605 008.
பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை - 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)
பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை - 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)
பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001. Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999.
Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage),
Translated by Prank MacShane. Bell Books - Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975. First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London.
நன்றி: 'நீலக்கடல்' நாவலை என் மறுவாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உட்படுத்திய புதுச்சேரி எழுத்தாளர் ப.ரா.கலாவதிக்கு.

2.6.07
மொழிபெயர்ப்பின் நிகழ்நிலையும் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்

மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததிலிருந்து மொழிபெயர்ப்புத் தொடர்பான கேள்விகள் பற்பல, உள்ளத்தில் எழலாயின. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தோராயமாக 750 பேர், வீட்டிலிருந்தவாறே மொழிபெயர்த்து அனுப்புகிறார்களாம். ஆங்கிலப் புலமை, தமிழில் புலமை, தமிழில் எழுதும் ஆற்றல் ஆகியவை இந்த வேலைக்கு அடிப்படைகள் என்றும் இதனால் மாதந்தோறும் எட்டாயிரம் ரூபாய் வரையில் வருவாய் பெற முடியும் என்றும் மேலதிகமான செய்தி சொல்லுகிறது. தொடர்ந்து, " தமிழரின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புப் பணி உடனடித் தேவை. ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்ல, உலக மொழிகள் பலவற்றிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றவர்கள் தமிழருள் பெருகினால், தமிழரின் வாழ்வு சிறக்கும். தாய்மொழியிலேயே யாவையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெருகும். தமிழ்ப் பதிப்பாளர் பலர் மொழிபெயர்ப்பாளரைத் தேடுகின்றனர்" என்றும் அச்செய்தி சொன்னது.
"மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர் தேவைப்படுகிறார். தெரிந்தால் சொல்லுங்கள். வருமானம் உண்டு" என்று மேற்செய்தியை நான் வாசித்த சில நாள்களில் என்னிடம் இளம்பாரதி தெரிவித்தார். எழுபத்திரண்டு வயதுக்கு மேலாகும் நண்பர் இளம்பாரதி இப்பொழுது புதுச்சேரியில் இருக்கிறார். சாகித்திய அகாதெமிக்காக ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு மடலங்களை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அந்த நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ள பல பிரஞ்சுச் சொற்களையும் அவற்றுக்குரிய பொருளையும் நண்பர்களிடம் கவனமாகக் கேட்டுக் கொள்கிறார். பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியையும் புதுவை மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையையும் இது தொடர்பாகப் பெற்றுக் கொள்கிறார். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால் வேற்று மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து வேற்று மொழிக்கும் மொழிபெயர்க்கும் போது 'நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல்' மட்டுமே போதாது; அணிசேர்ந்து பணியாற்றவும் (team work) வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தத்தான்.
எந்திரத்தனமாக மொழிபெயர்ப்பவர்களையே பெரிய நிறுவனங்களும் (foundations)விரும்புகின்றன. சொன்ன நாள்களுக்குள் மொழிபெயர்த்துத் தந்துவிட வேண்டும். அவர்கள் 'அங்கீகரிக்கப் படுவார்கள்.'
உயிரோட்டம் உள்ள ஒரு மொழிபெயர்ப்பை ஒருமுறை பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Freedom from the Known' என்ற அருமையான சிந்தனை நூலை ராஜம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். 'ஓரியண்ட் லாங்மேன்ஸ்' வெளியிட்ட ஒரே தமிழ் வெளியீடு என்றும் சொன்னார்கள். ஆங்கிலப் புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டு தமிழாக்கத்தை வாசித்தேன். திகைத்துப் போனேன். மொழிபெயர்ப்பாளரான ராஜம் அவர்களை எனக்குத் தெரியாது. அப்பொழுது கேள்விப்பட்டதே இல்லை. எனக்குத் தெரிந்த ராஜம் அவர்கள், மிகவும் மலிவாக ஒரு ரூபாய், ஒன்றேகால் ரூபாய் விலைக்கு மிகவும் நேர்த்தியான அச்சில் நல்ல தாளில் சங்க இலக்கியம் முதற்கொண்டுள்ள தமிழிலக்கியங்களைத் 'தமிழ்கூறு நல்லுல'குக்கு வழங்கியவர். மொழிபெயர்ப்பாளர் ராஜம் அவர்தானா?
அதைப் போன்ற உயிரோட்டமுள்ள மொழியாக்கங்களைத் தங்கப்பா (திண்ணையில் இவர் மொழியாக்கங்கள் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்) இளம்பாரதி, பாவண்ணன் முதலான மிகச் சிலரிடமே பார்க்க முடிகிறது. காரணம், இவர்கள் மொழிபெயர்ப்பைப் பணியாகவும் தவமாகவும் செய்கிறார்கள். 'மய்யழிக் கரையோரம்', 'இந்துலேகா,' 'உம்மாச்சு,' கயிறு' முதலான எட்டு மலையாள மொழியாக்கங்களும் 'கௌசல்யா,' படிப்பு,' அனல் காற்று,' முதலான ஆறு தெலுங்கு மொழியாக்கங்களும்' 'சிமெண்ட் மனிதர்கள்' முதலான கன்னட மொழியாக்கங்களும் 'உலகை மாற்றிய புதுப்புனைவுகள்' முதலான நான்கு ஆங்கில மொழியாக்கங்களும் இளம்பாரதியின் பணிகள். 'வலசை போகிறேன்' என்ற அண்மை மொழியாக்கத் தொகுப்பில் முதல் பகுதியில் சல்லாராதாகிருஷ்ண சர்மாவின் முப்பது தெலுங்குக் கவிதைகளும் அடுத்த பகுதியில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள ஆருத்ர, புலிகண்ட்டி கிருஷ்ணா ரெட்டி, அனிசெட்டி சுப்பாராவ், வரவர ராவ்(தெலுங்கு), அம்ருதா ப்ரீதம், அமரேந்த்ர நாராயண், ராமாவதார் தியாகி(இந்தி), பிரகாச ஹலகேரி, சி.பி.கே.(கன்னடம்), சுகதகுமாரி(மலையாளம்), சர் டி. வியாட்(ஆங்கிலம்) ஆகியோர் கவிதைகளும் நேரடியாக அந்த அந்த மொழிகளிலிருந்து இளம்பாரதியால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
கிரீஷ் கார்னாடின் 'நாகமண்டலம்' நாட்டார் கதையின் நாடக வடிவம். இதை நேரடியாகக் கன்னடத்திலிருந்து பாவண்ணன் தமிழாக்கம் செய்துள்ளார். அருமையான மொழியாக்கம். இதைப் புரிந்து கொள்ள கன்னட மொழிவாணரான நண்பர் உதவினார். இதே போன்ற நாடகங்களான 'பலிபீடம்' என்ற வரலாற்று நாடக மொழியாக்கத்தையும் 'அக்னியும் மழையும்' என்ற தொன்மக் கதை நாடக மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு வாசிக்க இன்னும் வாய்க்கவில்லை. இப்படி ஒப்பிட்டு மொழியாக்கங்களை வாசிப்பது பெரும் மனநிறைவு தரும். எனக்கு இளம் வயது முதலே இது தொடர்பாக உதவும் நண்பர்கள் உள்ளார்கள்; அதனால் நானே முயன்று பல மொழிகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது தடைப்பட்டது. தகழியின் 'கயறு' புதினத்தின் சுருக்க வடிவத்தையே இளம்பாரதி தமிழாக்கினார். இருந்தாலும் அதையும் முகுந்தனின் 'மய்யழிக் கரையோரம்' நாவலையும் (முழுமையான மொழியாக்கம்) ஒப்பிட்டு வாசித்த பொழுது சொல்ல முடியாத புரிதல் உணர்வு ஏற்பட்டது. 'வேண்டாத வேலை' என்று இதை எனக்கு வேண்டியவர்கள் சொன்ன பொழுது, "நீங்கள் தொ.கா. தொடர்களாகப் பார்த்துத் தீரவில்லையா?" என்று கேட்டிருக்கலாம்தான்.
வலை ஏடுகளில், குறிப்பாகத் திண்ணை.காம் இணைய இதழில் புதுப்புனைவில் மட்டுமல்லாமல் ஆழமான சிந்தனைகளைச் சமூகத்துக்குப் புலப்படுத்தும் ரிச்சர்ட் டாகின்ஸ்(Richard Dawkins) போன்ற அறிவியல் அறிஞர்களையும் அவர்களின் ஆக்கங்கள் குறித்த திறனாய்வுகளையும் முதன்மையாக இடம்பெறச் செய்தவரும், தானும் அத்தகைய மொழியாக்கங்களில் முன்னோடியாகப் பங்கேற்றவரும் கோபால் ராஜாராம் அவர்கள்தாம் என்பதில் இன்னொரு கருத்து இருக்க இயலாது. திண்ணை.காம் வலையேட்டைத் தொடக்க முதல் வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும்.
மானுடவியல் அறிஞரும் குறிப்பாகக் 'கலாசாரப் பொருள்முதல்வாதம்' என்ற தனித்தன்மை வாய்ந்த தனது ஆய்வுமுறையை மானுடவியல் துறையில் நிறுவியவருமான மார்வின் ஹாரிஸ்(1927-2001) அவர்களின் - நுட்பம் நிரம்பிய பண்பாட்டுப் புதிர்களுக்கான விளக்கங்களை - 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' என்கிற பதினொரு கட்டுரைகளை, வாசிப்பவர்கள் மருளா வண்ணம் மொழியாக்கம் செய்தவர் துகாராம் கோபால்ராவ் ஆவார். எப்படி இவர்கள் இருவரும் பாரி பூபாலனும் ஆசிரியர்களாக இருக்கும் பொழுது பின்னணியில் இந்து, சாந்தாராம் ஆகியோர் பக்க பலமாக நின்று திண்ணை.காம் தொடர்ந்து வெளிவர உதவினார்களோ அது போல மார்வின் ஹாரிஸின் புத்தகத்தையும் தந்து படித்துப் பார்க்கவும் செய்து நியூ ஜெர்சி'யில் உள்ள எடிசனிலிருந்து துகாராம் கோபால்ராவ் அவர்கள் கட்டுரைகளை விடாமல் அனுப்புமாறு செயலூக்கம் புரிந்தவர் கோபால் ராஜாராம் அவர்களே ஆவார். என்னைப் போன்று அகவை முதிர்ந்த கட்டுரையாளர்களும்;படைப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் (குறிப்பாக, நாகரத்தினம் கிருஷ்ணா) திண்ணை.காம் கருத்துக் களத்தில், விடுதலையான சிந்தனைக் குடும்பத்தில் இணையக் காரணமானவரும் அவரே. இது புகழ்ச்சியில்லை. உண்மை.
மனநோய் மருத்துவத்துக்கு எதிர்ப்பான இயக்கத்தில்(anti psychiatry movement) முதன்மையானவரும் அந்தக் கலைச்சொல்லையே அறிமுகப்படுத்தியவருமான டேவிட் கூப்பரின் கருத்தாடலைத் தமிழுலகுக்குத் தன் மொழிபெயர்ப்பின் வழி கொண்டு வந்தவர் லதா ராமகிருஷ்ணன். சி. மோகனை ஆசிரியராகக் கொண்ட 'புனைகளம்' (எண்:2) என்ற காலாண்டிதழில் அம்மொழியாக்கத்தை வாசித்தபொழுது வியப்படைந்தேன். அவர், திண்ணை.காம் இணைய இதழுடன் தொடர்பு கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த 'நாகரிகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்' என்ற உம்பர்த்தொ ஈகோவின் கட்டுரை (காலச்சுவடு 28: ஜனவரி - மார்ச் 2000) இன்னும் என் நினைவில் தடம் பதித்திருக்கிறது.
அரவிந்தன் தன் 'மொழி - மொழிபெயர்ப்பு -இலக்கிய மொழிபெயர்ப்பு' என்ற கட்டுரையில் (காலச்சுவடு 86: பிப்ரவரி 2007) பகிர்ந்து கொண்ட செய்திகள், எனக்கும் பிரஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளரான முனைவர் சு.ஆ.வே. நாயகருக்கும் (நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொழுதும்) உரத்துச் சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஆயின.
ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் படைப்பான 'அமைதி'(1946)யை 'Tranquillity: a mute play' என்ற தலைப்பில் 1987ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, த. கோவேந்தனால் வெளியிடப்பட்ட பொழுதே வசிக்கும் வாய்ப்பு ம.இலெ. தங்கப்பாவால்(தமிழ் -ஆங்கிலம்: ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் - இவருடைய மொழியாக்கச் சிறப்பைக் குறித்துத் திண்ணை.காம் இதழில் விரிவாக எழுதியுள்ளேன்) கிடைத்தது. சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சலபதியின் உழைப்புக்குத் தக்க பரிசே ஆகும். அப்படியிருக்க அரவிந்தனிடம் "சு.ரா.வின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமென்று நேர்காணலில் மொழிந்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.
மொழிபெயர்ப்புப் பணிக்கு என்றே கங்கணம் கட்டிக் கொண்டு உழைக்கும் 'மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ்'கள் 'திசை எட்டும்' 'புதிய எழுத்து' ஆகியவை. 'திசை எட்டும்' இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் திறன் மிக்கவர். 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்ற அவருடைய புத்தகத்தை வாசித்த பின்பே மலையாள எழுத்தாளர்களின்
தேடலைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். தான் வெளியிடும் மொழிபெயர்ப்பிதழின் ஆக்கங்களைச் சரிபார்க்க மொழிவழி ஆசிரியர் குழு ஒன்றை அமர்த்தியுள்ளதும் பாராட்டுக்குரியதே.
புதுச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியை ஆசிரியராக்க் கொண்டு வெளிவரும் 'அணங்கு' என்ற சாரம் மிக்க பெண்ணியத்தைப் புலப்படுத்தும் இதழில்(செப்டம்பர்-நவம்பர் 2006) 'பெனுவாத் க்ரூல்த்'(Benoite GROULTE)தையும் அவர்தம் 'அவளது விதிப்படி ஆகட்டும்'(Ainsi soit-elle) என்ற கட்டுரைத் தொகுப்பையும் நாகரத்தினம் கிருஷ்ணா அறிமுகப்படுத்தியுள்ளமை வாசகர் பலர் சிந்தையைக் கவர்ந்துள்ளது. பின்னதில் உள்ள சிமோ(ன்) தெ பொ(வ்)வார் குறித்த நோக்கும் கருத்தீடும் குறிப்பிடத் தக்கது. 'அணங்கு' தொடக்க இதழில்(ஜூன்-ஆகஸ்ட் 2006) மர்கெரித் த்யூரா'(Marguerite Duras)வின் குறுங்கதையான 'உயிர்க்கொல்லி'(La Maladie de la Mort)யும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறப்பான மொழிபெயர்ப்பே.
தலித்தியத் தமிழ்ப் படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை டி. கிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்துள்ள இமையத்தின் 'ஆறுமுகம்'(ARUMUGAM) உணர்த்துகிறது(Katha Publications) என்று நண்பர் சொல்ல அறிந்தேன். அந்தப் புத்தகத்தின் விலை(ரூ.250:பக்கம் 235) என்னை மருட்டியதால் வாங்கி வாசிக்க முடியவில்லை.
எந்திரத்தனமான மொழிபெயர்ப்பை விட்டு விடலாம். மெய்யாகவே 'தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு' (Machine Translation of Tamil) பற்றி அறிய பெர்க்கலேயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பிரடெரிக் சி.கெய்(FredricC.Gey) உருவாக்கியுள்ள(Prospects for Machine Translation of the Tamil Language) கட்டுரை மிகவும் உதவும். பொதுவான எந்திர மொழிபெயர்ப்பு முறைகளை அறிய அவர் 'மொழிபெயர்ப்பு எந்திரங்கள்' என்ற ஒரு மிகச் சிறந்த நூலைப் (Translation Engines, by Arthur Trujillo, published by Springer. 1999) பரிந்துரைத்துள்ளார். அதன் மூலம் ஒன்று நன்றாகத் தெரிய வருகிறது. தமிழ் மொழிக் கட்டுமானத்தினால், தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு மிகுந்த செலவு பிடிப்பதாக உள்ளது என்பதே அது.
நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்கள்:
1. பண்பாட்டு அடிப்படையிலான புரிந்துணர்வுத்தடைகள்(cultural barriers). நண்பர் முனைவர் சு.ஆ.வே. நாயகர், அண்மையில் மிசோரம் நாட்டுப்புறக் கதைகளைப் பேச்சுத் தமிழில் மொழிபெயர்த்தார். சுர்ரா என்று ஆங்கில மொழியில் வரும் பெயரை எப்படித் தமிழில் இடுவது? அசல் பெயர் சுர்ராவா, சுராவா? சுரா என்றே மொழிபெயர்த்தார். அடுத்து, அக்கதைகளில், இறந்தவர்களைக் குகையில்(cave)இல் இடுவதாக(புதைப்பது போன்றும் பொருள் வரும்) மிசோமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் எழுதியிருந்தார். இவர் கல்லறையில் புதைப்பதாக எழுதி அச்சிடக் கொடுத்து விட்டபின் சந்தேகம் எழுகிறது. "அடடா, கல்லறையில் என்றால் அந்தப் பண்பாடு கிறித்தவர்களது ஆகிவிடுமே - கதையில் வருபவன் மிக எளிய நாட்டுப்புறத்தான் மட்டுமல்ல, ஒன்றுமறியாத திருவாழத்தான் ஆயிற்றே!" என்று குழம்பினார். எனக்கு இப்பொழுது ஒன்று தோன்றுகிறது. பேசாமல் இரண்டுக்கும் நடுவுள்ளதாக 'கல்லடுக்கில்' என்று அவர் போட்டிருக்கலாம். மிசோ ஆதிவாசி மொழி அறிந்தவர்களொடு தொடர்பு கொண்டு இன்னும் அவற்றில் உள்ள சில பண்பாட்டு விளக்கங்களை அறிய நண்பர் விரும்பினார். ஆனால் அவருக்கு அவற்றை மொழிபெயர்த்துத் தர, மூன்று நாள்கள் மட்டுமே தரப்பட்டிருந்தன. என்ன செய்வது? மறுத்துவிட்டால் தமிழில் அவை வராமல் போய்விடவும் வாய்ப்புண்டு.
2. மொழிகளினிடையே உள்ள ஆள்-நாடு-ஊர்ப் பெயர் ஒலிமாற்றம்:
புதுச்சேரியில் நிகழ்ந்த, இந்தியாவிலுள்ள பிரஞ்சு மொழியாசிரியர்கள் சங்கமும் கெபேக்('கியூபெக்' என்று எழுதுவது ஒலிப்படிப் பிழையாம்)பன்னாட்டு உறவுகள் அமைச்சகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் வெளியிட்ட 'கெபேக் இலக்கியம் : ஓர் அறிமுகம்' ('La litterature quebecoise: une introduction en tamoul") என்ற தொகுப்பில்(பதிப்பாளர்: Samhita Publications,Chennai,2007) இலக்கிய மதிப்பீட்டுப் பகுதியில் முதலாவதாக இடம்பெற்ற 'Ringuet, Trente Arpents, 1938 (Thirty Acres) - "முப்பது ஏக்கர்கள் - ரேங்கே" என்ற கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதில் வரும் பெயர்களைப் பிரஞ்சுக் கனடிய ஒலிப்பின்படித்தான் எழுத வேண்டும் என்று பணித்திட்டக் குழுவின் தலைவர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி சொல்லி விட்டார். அதனால் 'கியூபெக்' 'ரிங்குவே' 'யுஷாரீஸ்த்' முதலாக நான் ஒலிபெயர்த்து வைத்திருந்த பல பெயர்களை, 'கெபேக்' 'ரேங்கே' 'யுகாரீஸ்த்'(இது இன்னும் சரியாக 'எகாரிஸ்') என்று மாற்ற வேண்டி வந்தது.
இதில் இன்னொரு கூத்து. பேராசிரியர் ஒருவர் தன் நூலில் 'ஜீன் பால் சார்த்தர்' என்று எழுதியிருந்ததைப் புதுவையில் நிகழ்ந்த திறந்தவெளிப் பல்கலைக் கழக வகுப்பொன்றில் நான் பாடம் நடத்திய பொழுது இயல்பாக 'ழோ(ன்)போல் சா(ர்)த்ர்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். யூனியன் பகுதியிலிருந்து வந்த மாணவர் ஒருவர் எழுந்து, "ஐயா! புத்தகத்தில் சரியாகப் போட்டிருப்பதை ஏன் மாற்றி மாற்றி உச்சரிக்கிறீர்கள்?" என்று கேட்டார். விளக்கினேன். ழான் ழாக் ரூசோ(Jean Jacques Rousseau) என்பதை 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ' என்று செய்தியில் வாசித்ததையும் கேட்க முடிந்தது. தூயதமிழில் இதை ஒலிபெயர்த்தால் எழுதும்பொழுது ''இழான் இழாக் உருசோ' என்றுதான் எழுத வேண்டும். சேர்த்து ஒலிக்கும்பொழுது சரியான ஒலிப்பு வந்துவிடும். ஆனால் 'ஜீன் பால் சார்த்த'ரும் 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ'வும் வழிக்கு வரமாட்டா.
3. அறிவு வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பணிப்பெயர் மாற்றங்கள்:
ஆங்கில நாவலொன்று. பெண்ணியம் என்ற கருத்து அரும்பிக் கொண்டிருந்தபொழுது எழுதப்பட்டது. அதில் இடம் பெறும் 'husband,' 'wife' என்பவற்றை 'spouse' என்று அவர்கள் இன்று பயன்படுத்துவதுபோல் 'துணைவர்,' 'துணைவியார்'('துணைவர்' என்று போட்டுவிட்டு 'துணைவி' என்றால் மரியாதை இல்லை) என்று மொழிபெயர்ப்பதுதானே சரி? 'house wife' என்பதை இன்று 'home engineer' என்கிறார்கள். 'இல்லத்தரசி' என்ற பழைய சொல் ஆதிக்கத்தைக் குறிக்கும். 'இல்லப் பொறியாளர்' என்று சொல்ல வேண்டுமாம். பிரஞ்சில் 'பலேயர்' என்ற பழைய சொல் 'பெருக்குபவ'ரைக் குறிக்கும். அச்சொல் இழிவென்பதால் இப்பொழுது ஆங்கிலத்தில் அதை 'surface technician' என்று மொழிபெயர்க்கிறார்கள்.('பாலியல் தொழிலாளர்' போன்றும் பணிப்பெயர் மாற்றங்கள் பல இருக்கின்றன)
4. வட்டார மொழிகளில் அமைந்துள்ள படைப்புகளை மொழிபெயர்ப்பவருக்கு ஆகக் கூடுதலான சுமை உண்டு. வட்டார வழக்கு அகராதிகளுக்கு எட்டாத சொற்களும் அத்தகைய படைப்புகளில் வருவன. நாட்டுப்புறப் பாடல் ஒன்று. 'ஒத்த ரூபா தாரேன்' - மொழிபெயர்த்து விடலாம். 'ஒனப்பத் தட்டெ தாரே'னை என்னவென்று மொழிபெயர்ப்பது?
5. கி.ரா., கழனியூரனின் மேற்படிப் படைப்புகள் அல்லாமல் பாலியல் கதைகளை மொழிபெயர்ப்பவர் மேலதிகமான விழிப்புணர்வைக் கைக்கொள்ள வேண்டும். இவற்றை மலையாளம், தெலுங்கு முதலான மொழிகளில் மொழிபெயர்ப்பவரை விடவும் ஆங்கிலத்திலும் குறிப்பாகப் பிரஞ்சிலும் மொழிபெயர்ப்பவர் படாத பாடுகள் பட வேண்டும். பொறுப்பில்லாமல் மொழிபெயர்த்தால் நம்மைக் குறித்து வாசிப்பு அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முயலும் அம்மொழியினர் ஆகவும் கொச்சையாகப் புரிந்து கொள்ள நேரும்.
இன்னும் சிந்திக்கச் சிந்திக்க புதிய புதிய பூதங்கள் மொழிபெயர்ப்பாளர் முன் எழும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்குமுன் எழும் தடைச்சுவர்போல் இன்னொருவர் முன் எழவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு வகையாக எழலாம். தூங்கும் பொழுது கூட இந்தச் சொல்லுக்கு இந்த மொழியில் என்ன சொல்லைப் போடுவது என்பது குறித்துத தாறுமாறான கனவுகள் வரலாம்.[சந்தை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது விதிவிலக்கு.] சில நேரங்களில் சில கனவுகளில் சில சொற்கள் விசுவரூபமெடுத்து மொழிபெயர்ப்பாளரை விரட்டிக்கொண்டும் வரக் கூடும். விழித்தபிறகுதான் அவருக்கு நிம்மதி!
****
Thanks to Thinnai.com

எந்திரத்தனமான மொழிபெயர்ப்பை விட்டு விடலாம். மெய்யாகவே 'தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு' (Machine Translation of Tamil) பற்றி அறிய பெர்க்கலேயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பிரடெரிக் சி.கெய்(FredricC.Gey

Subscribe to:
Posts (Atom)