31.5.12

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)

‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)’ என்னும் புதிய புத்தகத்தை நண்பர் முனைவர் பெ.நல்லசாமி, எம்.எசி., எம்.ஃபில்., பிஎச்.டி (இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் - இயற்பியல் துறை, தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி - 605 008) அவர்கள் அன்பளிப்பாகத் தந்தார். வழக்கமான புத்தகங்களுக்கு வேறுபாடானதாக, தலைப்பாலும் உள்ளடக்கத்தாலும் தென்பட்ட அந்நூலை விருப்பமுடன் பெற்றுக் கொண்டேன்.

புத்தகத்தின் ஆசிரியர் - தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த திருச்சி செல்வேந்திரன் அய்யா. “திருச்சி நகரத்தில் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த - வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் இளைஞரான தோழர் செல்வேந்திரன் அவர்கள், கண்ணீர்த் துளிக்கட்சியை (தி.மு.க.) விட்டுப் பிரிந்து, நம்முடன் வந்து சேர்ந்துள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் - அவரை நான் அன்புடன் வரவேற்கிறேன்” என்று பெரியார் அவர்களால் 1949ஆம் ஆண்டில் இயக்கத்துக்கு வரவேற்கப்பட்டவர்.


திருச்சி செல்வேந்திரன் அய்யா படைத்துள்ள இந்நூல் எப்படிப்பட்டது என்பதை அவருடைய சொற்களிலேயே சொல்வதுதான் பொருத்தம்:

“இது வரலாற்று நூல் அல்ல. அதற்குரிய செய்திகளைச் சேகரிக்கும் வசதி நம்மிடத்தில் இல்லை.

இது வாழ்வியல் நூலுமல்ல. அதை எழுதுவதற்குரிய ‘நெடிய - கொடிய’ அனுபவங்கள் நமக்கில்லை.

இது வழிகாட்டும் நூல். இப்படியும் சில நூல்கள் வரவேண்டுமென்று வழிகாட்டும் நூல்.

இந்த நூல் நெடுகிலேயும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் திராவிடப் பேரியக்கத்தின் அடிக்கற்களாய் இருந்தவர்கள். அதற்காக தங்கள் வாழ்வை ஈகம் செய்தவர்கள். பதவி மோகம் இல்லாதவர்கள். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காதவர்கள்.


இவர்கள் பலரோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர்கள் குடும்ப உறுப்பினர்களோடு பழகியிருக்கிறேன். அவர்களில் ஓரிருவர் மாத்திரம் தான் இப்போது இருக்கிறார்கள். அவர்களில் சிலரோடு நான் இன்றுவரை நட்போடு இருக்கிறேன். சிலர் நண்பர்களாய் இருந்து பின்னர் முரண்பட்டிருக்கிறார்கள். சிலர் என்னோடு ஆழ்ந்த கருத்து மாறுபாடு உடையவர்களாய் இருந்து இப்போது என்னை அன்போடு போற்றுகிறார்கள். இது அவர்களுடைய தவறல்ல. என்னுடைய தவறு. என்னுடைய “சேர்வார் தோஷம்” அவர்களில் பலரை என்னிடமிருந்து அன்னியப்படுத்தியது. அன்றும் இன்றும்.”

திராவிட இயக்கம்போல் இந்திய மக்கள் வாழ்வியலின் எல்லாத் தளங்களிலும் மான அவமானங்களை/கல்லடி சொல்லடிகளை ஏற்று இறங்கிப் போராடிய இயக்கம் வேறுண்டா?

அதில் பெரியாருடன் சேர்ந்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உள்வெளிச் செயற்பாடுகளில் ஈடுபட்டுப் போராடியவர்களான மாமனிதர் வக்கீலய்யா தி.பொ. வேதாசலம், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, வாழும் வரலாறு திருவாரூர் தங்கராசு, பல்கலைவாணர் பாவலர் பாலசுந்தரம், குமுறிய எரிமலை எம்.கே. குப்தா, மக்கள் தொண்டர் எஸ். பிரான்சிஸ், எனது(திருச்சி செல்வேந்திரனின்) ஆசான் ஈரோடு சுப்பையா, இளம் துருக்கியன் நாகை எஸ்.எஸ். பாட்சா, தஞ்சை மாவட்டத்து மாசேதுங் பாவா, நடமாடிய நூலகம் எஸ்.டி. விவேகி, குழந்தை உள்ளம் படைத்த குடந்தை ஏ.எம். ஜோசப், என்றும் மறக்க இயலாத எளிய தோழன் பட்டுக்கோட்டை இளவரி, திருச்சி வீ.அ. பழனி, நெஞ்சில் நிற்கும் ஈரோடு லூர்து, மக்கள் கலைஞன் என்.ஜி. ராஜன், ஏழைக்கலைஞர் மதுரை பொன்னம்மாள் சேதுராமன், இசையால் இதயங்களை அசையச் செய்த இராவணன், பெரியாரின் செல்லப்பிள்ளை திண்டுக்கல் பி.கே.பி. பூமண்டலம், குமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன், கற்பூரத்தொண்டன் மு.பொ. வீரன், ஆதியிலிருந்து பெரியாரிலிருந்து விலகாத ஆதி, என்னுடைய (திருச்சி செல்வேந்திரனுடைய) துரைசக்கரவர்த்தி போன்ற அருமையான மாந்தரை, கொள்கைக் குன்றுகளைக் குறித்து உயிரோட்டமுள்ள அறிமுகங்களைத் தந்துள்ளார் திருச்சி செல்வேந்திரன் அய்யா. மேலே ஒவ்வொருவருக்கும் அவர் தந்துள்ள அடைமொழிகளே போதும், அவரவர் இயக்கவாழ்வை நாம் இனங்கண்டுகொள்ள.

அவர்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னவர், மனம் நிறைவுறாமல், “தொண்ணூறைத் தொட்டுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி காளிமுத்து, வைத்தி. பெரியவர் ஒரத்தநாடு ஆர்.பி. சாமி சித்தார்த்தன், தம்பி அரசிளங்கோ, ராயபுரம் கோபால், காரைக்குடி தலைவர் என்.ஆர்.எஸ்’ஸின் பிள்ளைகள், ‘சந்துரு’ என்று தான் அன்போடு அழைக்கும் குறிஞ்சிப்பாடி சந்திரசேகரன், ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தாராசுரம் ஸ்டாலின், சிவகெங்கை இன்பலாதன், அவருடைய துணைவியார் டாக்டரம்மா, பெரியவர் சண்முகநாதனின் குமாஸ்தா, வில்லிவாக்கம் குணசீலன், திருமதி தங்கமணி, போடி தேவாரம் தங்கமுத்து, கோவை ராமச்சந்திரன், நாகை கணேசன், என்றும் தன்னிடம் அன்புகாட்டும் திருச்சித் தோழர்கள், தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மகாலிங்கம்.. இன்னும் எத்தனையோ பேர் (பக்கம்126) குறித்துச் சொல்ல விரும்புகிறார். எழுத விரும்புகிறார்.

அவர்களைக் குறித்து மற்றொரு நூல் எழுதுவாராக என்று திருச்சி செல்வேந்திரன் அய்யாவை வாழ்த்துவோம்.

நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் பெரியார் தொண்டர்கள் பெருமையை மட்டும் சொல்லவில்லை; எப்படிப்பட்ட தலைவராக, வழிகாட்டியாகப் பெரியார் திகழ்ந்திருக்கிறார்.. தொண்டரும் தலைவரும் உண்மைக்காக எப்படியெல்லாம் ஒருவர் மற்றவரை விஞ்சிப் போராடியிருக்கிறார்கள் என்பதை இந்நூல் மிகமிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. அஞ்சாநெஞ்சன் அழகிரி கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி(பக்.18-19) முதலாக நூல் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்புகள்.. நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்... வக்கீலய்யா தி.பொ. வேதாசலனார் வீட்டு உயரமான மாடியின் படிகளில் ஏறி, இறந்துபோன வேதாசலனாரின் உடலின் அருகில் வந்த பெரியார் ‘பலவற்றை’ சொல்லி மார்பில் அறைந்து கொண்டு அழுத காட்சி முதலாகப் பற்பல காட்சிகள், பெரியார் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பதை அன்னார்தம் தொண்டர் பெருமைகளைப் பற்றிக் கூறிவரும்பொழுதே தெளிவாக்கிவிடும்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கை வழங்கிய அடையாளங்களுடன் கருஞ்சட்டைக் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் செல்வேந்திரன் ஐயா. ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். நெகிழ்ந்துபோன அவர்கள் “அய்யா..எங்கள் பெயரைக்கூட மறக்கவில்லையா?” என்கிறார்கள்.

“எதற்கும் கலங்கமாட்டோம் - எதற்கும் வளையமாட்டோம்” என்ற அய்யாவின் நம்பிக்கை அன்று ஆடிப்போகிறது.

“ கண்ணின் மணிபோல மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல்வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப் பிரிக்க முடியாதடா”


என்ற இந்தக் கவிஞர் கண்ணதாசனின் கவிதையுடன் தன்னுடைய புகழ் வணக்கத்தை நிறைவு செய்கிறார் திருச்சி செல்வேந்திரன் அய்யா.(ப.127)

நூலின் பெயர்: மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு!

ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன்

முதற்பதிப்பு: திசம்பர் 2011

பக்கம்: 128

விலை: ரூ. 80/-

வெளியீடு: சுயமரியாதை பதிப்பகம், அம்மன் காம்ப்ளக்ஸ் முதல் தளம், யாழ் தையலகம் எதிரில், வ.உ.சி. வீதி, உடுமலைப்பேட்டை - 642 126. திருப்பூர் மாவட்டம்.

பேச: 97883 24474

14.5.12

தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார் - தேவமைந்தன்

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகள் பெருவாழ்வு வாழ்ந்த பெரியாரின் தனிவாழ்க்கை முப்பந்தைந்து ஆண்டுகளே; பொதுவாழ்க்கை சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள். பெரியார்தம் பொதுவாழ்க்கை, ஒப்பரிய போராட்ட வாழ்க்கை.
பெரியாரின் பன்முகத் தொண்டுக்குத் தொடக்கம் எது? தலைசிறந்த மனிதாபிமானப் பற்றுதான் அது. மனிதன் எவனே ஆயினும் மனிதனாக சுயமரியாதையுடன் வாழ வேண்டும். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு கூடாது. "சமத்துவ மனிதாபிமானப் பெருஞ்சுனையின் இடையறாத ஓட்டமே, பெரியாரின் வாழ்க்கை என்னும் வீர, வெற்றிக்காவியம் ஆகும்" என்று சரியாகச் சொல்லியிருக்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.
1950ஆம் ஆண்டுவரை, நம் சிற்றூர்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களில் கூட வேனிற் காலத்துத் தண்ணீர்ப் பந்தல்களிலும் - எல்லாக் காலத்தும் சுறுசுறுப்பாக இயங்கும் தேநீர் விடுதிகளிலும் அனைத்துச் சாதிக்காரர்களும் ஒடுக்கப்பட்டவர்களை நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார். இதற்கு அடிப்படையாக அவர் 'செல்லப் பிள்ளை'யாகவும் 'செல்வர் பிள்ளை'யாகவும் 'கட்டுக்கடங்காத பிள்ளை'யாகவும் வாழ்ந்த இளம்பருவத்திலேயே பட்டறிந்த நிகழ்ச்சிகள் அமைந்தன. "நாம் பலரை இழிவு படுத்த உரிமை கொண்டாடுவதால், சிலர் நம்மை இழிவு படுத்திக் காட்டுகிறார்கள். நாம் யாரையும் இழிவு படுத்தக் கூடாது; நம்மை யாரும் இழிவு படுத்த ஒப்புக் கொள்ளக்கூடாது. அத்தகைய சமத்துவ நிலையே சரியான நிலை" என்று கருதினார் துடுக்குப் பிள்ளை ராமசாமி... கருத்து செயல்பட்டது.

1942ஆம் ஆண்டுவரை, திண்ணைப் பள்ளிகளிலும் 'பிரைமரி ஸ்கூல்' என்று அன்று வழங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளிலும் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட சாதியாரின் பிள்ளைகளும் கல்வி கற்பதில் பல பின்னடைவுகளையும் ஏச்சுப் பேச்சுக்களையும் அடைந்து, "நமக்குப் படிப்பே வராது!" என்று இடிந்துபோய் நொந்து வாழ்ந்த நிலையை மாற்றி 'அனைவருக்கும் கல்வி' என்ற இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தவர் பெரியார்.

"கோயிலுக்குள் நான் ஏன் நுழையக் கூடாது? கோயிலின் கருவறைக்குள் போய் நான் ஏன் கடவுளுக்கு வழிபாடு நிகழ்த்தக் கூடாது?" என்று ஒடுக்கப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டு இன்று நீதிமன்றத்துக்கும் சென்று வழக்காடும் அளவு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர் பெரியார்.
ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புக்குத் தகுந்த கூலி கேட்கவும் உரிமையற்றுக் கிடந்த நிலையை மாற்றியவர் பெரியார். எல்லாம் தங்கள் தலைவிதி என்று அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் குமைந்து கொண்டிருந்த அவலத்தை மாற்றி, "நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்தம்!" என்ற உண்மையை 1925ஆம் ஆண்டு முதலே கற்றுத் தந்து சமதர்ம சம உரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர் பெரியார்.
'பங்கா' இழுப்பது, எடுபிடி வேலைகள் செய்வது போன்ற கீழ்நிலை வேலைகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று 1946ஆம் ஆண்டுவரையில் தாழ்வு மனப்பான்மையுடன் கிடந்தவர்களுக்கு உணர்ச்சியூட்டி, எழுத்தர் பணி முதல் உயர்நீதி மன்ற நீதிபதிப் பணி வரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வந்துசேர வழிவகுத்தவர் பெரியார்.

சமுதாயம், அரசியல், பொருளியல் முதலான துறைகளிலும் நெடுங்காலமாக இழிவைச் சுமத்திவந்தவையான மூடநம்பிக்கைகள், சாதிமதப் பழக்க வழக்கங்கள், உரிமை - உடைமை - வாய்ப்புப் பெறுவதில் பேதங்கள் ஆகியவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தார் பெரியார். கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் கிஞ்சிற்றேனும் அஞ்சாமல் ஒவ்வொரு நாளும் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றை எடுத்துரைத்தார். வாயில்லாப் பூச்சிகளாகவும் மரத்துவிட்ட மனமுள்ளவர்களாகவும் இருந்தவர்களை மானம் மிகுந்தவர்களாக மாற்றிக் காட்டினார் பெரியார்.
அரசியல் சமவுரிமையைப் பெரியார் மிகவும் வற்புறுத்தினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது அந்த அந்த மதத்தவரின் - அந்த அந்த அந்தச் சாதியினரின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, அரசியல் பதவிகள் - அரசுப் பணிகள் - தொழில்துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் வரவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

பெரியாரின் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "பேதமும் கவலையும் ஒழிந்த சமதர்ம சமுதாய அமைப்பை உருவாக்குவதுதான்" அவர்தம் இறுதியானதும் உறுதியானதுமான முதல்நிலைக் குறிக்கோள் ஆகும். அதற்கு உதவாதவற்றை ஒதுக்கித் தள்ளவே முனைந்தார் அவர். இயக்க ரீதியில் மக்களை அணுகிச் செயல்புரிவது ஒன்று மட்டுமே செயல் வடிவம் என்று அறிவுறுத்தியவர் பெரியார். அப்படித் தம் குறிக்கோளுக்குச் செயல்வடிவம் தரும் பொருட்டு - உட்சாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெருளாதார பேத ஒழிப்பு, அரசியல் அலுவல் துறையில் நிலவும் மேற்சாதி ஆதிக்க ஒழிப்பு ஆகியவற்றுக்கான செயல் வடிவிலான திட்டங்களை அமைப்பு ரீதியாக நடைமுறைப்படுத்திட உரிய பணிகளை மேற்கொள்ளுவதையே பெரியார் வற்புறுத்தினார்.

'எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?' என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு பெரியார் கூறினார்: "பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் -- ரிசர்வ் பேங்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் -- பெரிய 'லைப்ரெரி'யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் -- 'என்சைக்ளோபீடியா', 'ரேடியோ' ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்து அல்ல........
ஜீவ சுபாவ உணர்ச்சியான -- தன்மை உணர்ச்சியும் தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து -- அதாவது தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி -- தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு சீவப் பிராணி என்பதில் எந்த மனிதனை மதிப்பதானாலும், நினைவுநாள் கொண்டாடுவதானாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது." கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி ஆகிய ஊர்களில் 1945ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் பெரியார் இவ்வாறு மொழிந்ததைக் 'குடி அரசு' ஏடு, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் இவ்வாறு வெளியிட்டது.

மனிதன் முதல் முதலாக மற்றொரு மனிதனுடன் திருத்தமாகத் தொடர்புகொள்ள உருவாக்கிக் கொண்டது மொழி அல்லவா? அப்படி உருவான தமிழின் மேன்மைகள் குறித்து மிகவும் விரிவாகக் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளார் பெரியார். தமிழ்மொழி குறித்து அவர் கூறியதாவது: "தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். "இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி, வெகுகாலமாகச் சீர்திருத்தம் செய்யப்படாதது, மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது" என்பதான இவைகள் ஒரு மொழிக்குக் குறையாகுமே தவிர, பெருமையாகாது என்பேன். ஏன்? பழமை எல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது; திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும் திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ, ஆகிவிடாது. மேன்மையடையவும், காலத்தோடு கடந்து செல்லவும், எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்திய, பண்டைக் காலத்திய பெருமைகளைப் பேசிக்கொண்டிருந்தால், கழிபட்டுப் போவோம்; பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்." இவ்வாறு கூறியதோடு விட்டுவிடாமல் திட்டவட்டமான தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைத்தார். அதன்படித்தான் இப்பொழுது அச்சகங்களிலும் தட்டெழுத்துப் பொறிகளிலும் கணினிகளிலும் தமிழ் பயன்படுத்தப் பெறுகிறது. கல்வி நிலையங்களிலும் பாடப் புத்தகங்களிலும் பெரியார் வழங்கிய எழுத்துச் சீர்திருத்தமே செயல்பட்டு வருகின்றது.

"பெரியார் செய்த தொண்டுகளில் மிகவும் தலைசிறந்தது பெண்ணடிமை நீக்கப் பாடுபட்டதுதான்" என்று மனோரஞ்சிதம் அம்மையார் 1982ஆம் ஆண்டிலேயே எழுதினார். நம் நாட்டில் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமைகள் போல விற்பது முன்பு மிக அதிகமாக இருந்தது. இராகு காலம் சகுனம் பார்ப்பதிலும், நாள் கிழமை பார்த்து நடப்பதிலும், ஒரு ஆண்டில் 108 பண்டிகை கொண்டாடுவதிலும் நம் பெண்களின் தொன்றுதொட்டு வந்த பழக்கங்கள். விரதம் பூஜை புனஸ்காரங்களில் நம் பெண்களுக்கு நிகர் யாருமே இல்லை என்று கூறலாம். அந்நாளில் படிப்பறிவு இல்லாததும், பகுத்தறிந்து பார்க்க இயலாமல் இருந்ததும், சொன்னதைப் பெரியவர்கள் கூறினார்கள் என்றதால் காரணம் கேட்கக் கூடாது என்றெல்லாம் ஆமைகளாக அடங்கிக் கிடக்க நேர்ந்ததும், இயற்கையான பலவீனமும் சேர்ந்து பெண் அடிமையானாள். இந்த நாடு உண்மையிலேயே முன்னேற வேண்டுமென்றால் பெண்ணடிமை தீர வேண்டும் என்று கருதினார். "பெண் ஏன் அடிமையானாள்?" என்று சிந்தித்துக் காரணங்களோடு எடுத்து எழுதினார். நம் பெண்கள் எதையும் சிந்தித்துப் பார்க்கும் திறமை பெற வேண்டும் என்று அயராது முயன்றார். பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று பாடுபட்டார். சமுதாயத்தில் பெண் தலைநிமிர்ந்து நிற்க ஆணும் பெண்ணும் சமமான தகுதி பெற பெண்ணுக்கும் சொத்து பகிர்ந்தளிக்கப் பெறல் வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.
சீர்திருத்தத் திருமண முறையைக் கொண்டு வந்து சூழ்நிலைகளால் பலிகடா ஆக்கப்பட்ட பெண்கள் மீண்டும் நல்வாழ்வுபெற வழிவகுத்தார். பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 'வாழ்க்கை ஒப்பந்தம்' என்று கொண்டு வந்து திருமணத்தில் பெண்ணடிமையை ஒழித்தார்.

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பெண்கள் 'நகை மாட்டும் ஸ்டாண்டு'களாக மட்டுமே இருக்கக் கூடாது என்றார். தாய்ப்பாலோடு மூடநம்பிக்கையையும் சேர்த்துக் குழந்தையின் சிந்தனையை நம் தாய்மார்கள் முடப்படுத்தும் போக்கைக் கண்டித்தார். அறிவியல் முறையில் நம் நாடு முன்னேற வேண்டுமென்றால் நம் பெண்கள் பகுத்தறிவு பெற்று சுயமரியாதையுடன் நாட்டிற்குத் தொண்டு செய்யும் வீராங்கனைகளாக விளங்கவேண்டும் என்று திருமண மேடைகள்தோறும் முழங்கினார்.
அவர் முழக்கம் கேட்டு, "பெண்கள் வெளியில் வருவதே தவறு" என்று ஆண்களால் விதிக்கப்பட்ட அந்நாளில், பெரியாருடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், 'பெரியார்' என்ற பட்டம் தந்த நாராயணி அம்மையார், அலமேலு அப்பாத்துரை அம்மையார் முதலாக எத்தனையோ தாய்மார்கள் முன்வந்தார்கள். இந்தி எதிர்ப்பில் சிறை சென்றார்கள். பெரியார், தான் என்ன சொன்னாரோ அதைத் தம் வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதற்கேற்ப, தம் துணைவியார் நாகம்மையாரையும் தமக்கை கண்ணம்மாவையும் பின்னாளில் மணியம்மையாரையும் பொதுவாழ்விலும் சுயமரியாதை இயக்கப் பணியிலும் பெரியார் ஈடுபடுத்தினார்.
அந்தக் காலத்திலேயே குடும்பக்கட்டுப்பாட்டையும் அரசுப்பணிகளில் பெண்களுக்குச் சமவாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்தியவர் பெரியாரே ஆவார். குழந்தைகளைச் சீர்திருத்த முறையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்த்து ஆளாக்கினால் எதிர்காலத்தில் சாதிப் பாகுபாடு அறவே அழிந்துவிடும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தினார். பிள்ளைகள் வளர்ந்த பின்பு சுயமரியாதை முறையில்தான் திருமணங்கள் செய்துவைக்க வேண்டும் என்றும் மொழிந்தார்.

மக்கள் அனைவரும் எந்த வகை வேறுபாடும் இன்றித் தன்மானத்துடன் வாழப் பகுத்தறிவிப் பணியை வாழ்நாளெல்லாம் செய்த பெரியார், தனது சுகத்தையே முதலில் புறந்தள்ளினார். வசதியாகச் சாய்வு நாற்காலிகள் - 'சோபா'க்களில் அமர்ந்து கொள்ளுவதையும் தவிர்த்தார். "சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது" என்று தெரிவித்தார் பெரியார்.
அவர் வார்த்தைகளையே இங்கு தருகிறேன்.

"சாதாரணமாக நான் 'ஈசிசேரில்' உட்காருவதே கிடையாது....ஏனெனில் நான் முதலாவதாக உட்காரும்பொழுது சாய்ந்துகொண்டு கால்கைகளை நீட்டிக் கொண்டு உட்காருவதுமில்லை. இவையெல்லாம் சுகவாசிகள் அனுபவிக்க வேண்டியவைகள். நான் அப்படிச் சாய்ந்து உட்காரும் சுகம் விரும்புபவன் அல்ல! மேலும் சீட்டில் உட்காரும்போது முழுச் சீட்டில் கூட இல்லாமல் பாதி அளவு மட்டும் சீட்டில் முன் தள்ளி உட்காருவேன். மேலும் என்னுடைய வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்ற போதிலும், பிரயாண காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக் கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால் அதிகம் தூங்க மாட்டேன் இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம். இப்படி எனக்கு, 'தூங்குவது என்ற பழக்கம் கூட வெறுப்பாகிவிட்டது! தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. இப்படி சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும் எனக்கு வெறுப்பாகிக் கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒரு விதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது."

****

உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):

ஆனைமுத்து, திருச்சி வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 3 தொகுதிகள், சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி-2. 1974.

ஆனைமுத்து, திருச்சி வே. பெரியாரியல், 2 தொகுதிகள், தையல்நாயகி நினைவு நூல் வெளியீட்டகம், புதுச்சேரி-10. 2004.

சுந்தரவடிவேலு, நெ.து. புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை-600 002. 1979.

பெரியார் ஈ.வெ.ரா. எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, சென்னை-600 007. 1980.

வேலூர் செந்தமிழ்க்கோ. பெரியார் சாதித்ததுதான் என்ன?, அறிவுக்கனல் பதிப்பகம், வேலூர்-632 001. 1983.

karuppannan.pasupathy@gmail.com
http://kalapathy.blogspot.com

திண்ணையில் தேவமைந்தன்

Copyright:thinnai.com
Thursday September 13, 2007 Copyright© Authors - Thinnai. All rights reserved.

படத்துக்கு நன்றி: தமிழோவியா வலைப்பூ - http://thamizhoviya.blogspot.com

8.4.12

ஆடு மேய்க்கலாம் - - ம.இலெ. தங்கப்பா


ஆடு மேய்க்கலாம் - வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் - கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் - போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் - ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் - தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் - பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் - தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் - நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் - தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே - நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் - தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் - கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட - எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)

*** *** **
பாடல் இடம்பெற்ற இதழ்: நற்றமிழ், 12:1, தி.ஆ. 2043 கும்பம்(13-02-2012). பக்கம் 2. விலை: உரூ. 6-00.

நன்றி: ‘நற்றமிழ்’ - திங்களிதழ்,
43, அங்காடித் தெரு,
நெல்லித்தோப்பு,
புதுச்சேரி - 605 005
இந்தியா.

நிறுவுநர்: தமிழ்மாமணி புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர்: திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார்
பேசி: 0413 2266543, 9442608271.

Thanks for Image: davidsanger.com

8.3.12

சாகாக்கலை

vaLLalaar kaNda saakaakalai
Spiritual Monthly Edited, Published and Owned by
Dr.K.Narayanan, Ph.D.,
No:29, Nagathamman Koil St.,
Kottupalayam,
Lawspet, Puducherry - 605 008.
Phone: 0413 2251764
Mobile: 94421 52764
Subscription:
Annual Rs.150/- US $40.
10 Years(Ayul) Rs. 1500/- US $400
Puravalar Rs. 5000/- and above US $2000 and above

19.12.11

செய்தியுரை: 'நாடகச் செல்வம்' நா.வை.பாலகிருட்டிணன்(என்.வி.பாலகிருஷ்ணன்) மறைவு

'ஐம்பது இலட்சம்' முதலான மேடை-நூல் நாடகங்களால் புகழ் பெற்றவரும்; ஏலவே நம் வலைப்பதிவுகளிலும் முகநூல்(Facebook) பக்கத்திலும் இடம் பெற்றவரும்; நெல்லை, கோவை முதலான வானொலி நிலையங்களின் அன்பரும்; நாடகக்கலை அன்பர் பலரின் நண்பரும்; இவ்வாண்டு ஏப்பிரல் மாதம், சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் அவ்வை கே. சண்முகம் குடும்பத்தாரால் 'நாடகச் செல்வம்' என்ற விருதுவழங்கப் பெற்றவருமான நாடகாசிரியர் கோவை நா.வை. பாலகிருட்டிணன் அவர்கள் கோவையில் புகழுடம்பு பெற்றார். அவருடல், அவர் வாழ்ந்த ஊரான நெல்லை விக்கிரமசிங்கபுரத்துக்கு, அவர் கொழுந்தியார் சுசீலா அம்மையார் - அவர் துணைவர் கோ.இலெனின் அரங்கராசனார் ஆகியோருடன் அவர்தம் இளைய புதல்வியார் கலைவாணிதேவி - அவர் துணைவர் சிவத்திரு கந்தசாமி ஆகியோர் முயற்சியால் மருத்துவ மனையூர்தியில் கொண்டு செல்லப்பெற்று, சிவநெறிப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லை விக்கிரமசிங்கபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பெற்றது. அவருக்கு விஜயசாமுண்டீஸ்வரி, கலைவாணிதேவி என்ற இரு புதல்வியரும் மருமக்கள் பெயரர் பெயர்த்திமார்களும் உள்ளனர்.

முகவரி:
'சிவகலை' இல்லம்,
25/15, சந்நிதி தெரு,
விக்கிரமசிங்கபுரம் - 627 425
திருநெல்வேலி மாவட்டம்.

29.11.11

'புதுவைப் பாமரன்' ஆசிரியர் 'நட்பு வட்டம்' நிறுவனர் திரு கி.பெ.சீனுவாசன்

என் பழைமை கெழுமிய நண்பர்களுள் ஒருவர் திரு. கி.பெ.சீனுவாசன். நல்ல உழைப்பாளி. தானி(Auto)ஓட்டுநரும் என் நண்பருமான தோழர் இரகு உட்பட, உழைத்து வாழும் பலருக்கும் நன்கு தெரிந்தவர். புதுச்சேரியில் வாழும் அனைத்து வரப்புகளையும் சார்ந்த நண்பர்களை இணைத்து 'நட்புவட்டம்' என்ற அமைப்பை நெடுங்காலமாக நடத்தி வருகிறார். அதன் அமைப்பிதழாக அவர் நடத்தி வரும் 'புதுவைப் பாமரன்' இத்திங்கள்(எண்:47 நவம்பர், 2011) இதழைத்தான் இங்கே காண்கிறீர்கள். தேசியக் கொளகையினராக - புதுவைப் பாமரனாக - புதுச்சேரிப் பாமரர்கள் பலருள் ஒருவராக நின்று, அன்றாடம் நிகழும் நிகழ்வுகளைப் பார்த்து (Bystander) அவற்றுள் மாந்தநேயம் குறைபட்ட நிகழ்வுகளுக்குக் காரணமானவற்றைச் சுட்டி, எல்லோருக்கும் சமூக விழிப்புணர்வு ஊட்டுவதில் திரு.கி.பெ.சீனுவாசன் வல்லவர். நல்லவர். மற்றவர்கள் மனம் நோகாமல் 'இடித்துரைப்பதில்' தேர்ந்தவர். அவரும் அவர்தம் சமூகப் பணியும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இதழ் முகவரி:
நட்பு வட்டம்,
10, பிள்ளையார் கோயில் தெரு,
அங்காளம்மன் நகர்,
முத்தியாலுப்பேட்டை,
புதுச்சேரி - 605 003.

27.11.11

kalapathy கலாபதி: தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி

kalapathy கலாபதி: தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி

என்னரும் நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள்

தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி
1984ஆம் ஆண்டே நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் படைத்த இடுநூல்(thesis), அவர்தம் அருமைத் துணைவியார் பெயரிலான பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது. (தமயந்தி பதிப்பகம், 10, காமராசு காலனி, சிட்லபாக்கம், சென்னை-600064.) திருஅருட்பிரகாச வள்ளலார்பால் பெரும் ஈர்ப்புப் பெற்றவர் நாச்சியப்பன். 'அலங்கல் அணிந்தருளே' என்று தன் "திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம்" ஆய்வேட்டுப் பெருநூலை வடலூர் இராமலிங்க அடிகள் திருவடிகளில் படைத்தவர். நம் தமிழண்ணல் அய்யா அவர்களின் மேற்பார்வையில் ஆய்வை நிகழ்த்தியவர். களஆய்வு அது. களஆய்வில் இணைந்து உதவி, வரைபடங்கள் எடுத்து உதவியவர் அவர்தம் அன்பருமைத் துணைவியார் திருவாட்டி நா.தமயந்தி அவர்கள். அவர்களின் மகளார் சாலா என்கிற விசாலாட்சி; மூத்த புதல்வர் அண்ணாமலை - என் இளம் நண்பர். இளைய புதல்வர் சுப்பிரமணியன். பொறிஞர். அண்ணாமலை, ஊடகத்துறையினர். என் வலைப்பதிவுப் பணிக்குப் பேராதரவு தருபவர்.

'மனித விலங்குகளின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'வீரப்பதக்கம்' என்னும் சிறார் நாடகமும் 'வடலூர் வள்ளலார்' என்ற வரலாறும் 'திருக்கோயில் ஆய்வு'(Temple Research Methodology) என்னும் ஆய்வு முறையியலும் பிற பலநூல்களும் கட்டுரைகளும் நண்பர் நா.நா. அவர்களின் வழங்குகைகள்.

இனிய நண்பர்; உயர்ந்த மாந்தர். எவரும் செய்ய மாட்டாத உதவியை எனக்கவர் செய்தார். (புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் அரசவோகி பெரியதம்பி கருப்பண்ணன்(இராஜயோகி பி.கே. அண்ணன், எஃப்.சி.ஐ.[இலண்டன்]) அவர்களது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் இருபத்து மூன்று அகவை நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, சுயமரியாதை சுப்புராயன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மாந்தர் வாழ்க்கையில், மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழுத்தமாக நினைவுபடுத்திவிட்டன அந்த மரமல்லியின் மலர்கள்!)
அன்னார், நண்பர் நாகப்பா நாச்சியப்பன் இன்றெம்முள்ளங்களில் வாழ்கிறார். நண்பரின் ஒளிப்படம் உடையவர்கள் அருள்கனிந்து karuppannan.pasupathy@gmail.com என்னும் முகவரிக்கு விடுத்து வையுங்கள். இங்கே, நன்றிசுட்டிப் பதிவேன்.

17.11.11

17.11.11என் முகநூல் இல்லத்துக்கு வந்த மறைமலை இலக்குவனார்தம் கருத்தாடல்


ஊர்கூடித் தேரிழுப்போம்!
சொல்லைச் சிந்தனையின் தந்தை என்றார் ஒரு மொழியியல் அறிஞர்.பஞ்சு நூலாகி, நூல் துணியாகுவதைப் போலவே, சொல் தொடராகவும் வாக்கியங்களாகவும் பின்னப்பட்டு, தொடர்களும் வாக்கியங்களும் கருத்துருக்களாகிச் சிந்தனையை நெய்ய
உதவுகின்றன.எனவே சொல் இல்லாமல் சிந்தனை இல்லை.
இதனால்தான் சிந்தனை தடுமாறும்போது சொல் தடைப்படுவதும் சிந்தனையில் பெருங்குழப்பம் ஏற்படும்போது சொல் குழறுவதும் நிகழ்கின்றன.
திறமான கருத்துத்தொடர்புக்குத் தெளிவான சிந்தனையும் வளமான
சொல்லாட்சியும் தேவை.தாய்மொழியில் போதிய பயிற்சியின்றிப் பிறமொழிகளில் எத்துணைப்புலமை பெற்றிருந்தாலும் தங்குதடையின்றிச் சிந்திக்க இயலாது.பன்மொழிப்புலமை பெற்றிருந்த பெரும்பாவலர் பாரதியார் “தமிழிலேயே பேசுவேன்;தமிழிலேயே எழுதுவேன்;தமிழிலேயே சிந்திப்பேன்”எனச் சூளுரைத்தது இவ்வுண்மையை நமக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் எனலாம்.
பிறமொழிச் சொல்லைக் கலக்காமல் பேசவோ எழுதவோ சிந்திக்கவோ முடியாது என்னும் நிலைக்குத் தமிழர்கள் தடம் மாறிவிட்ட இன்றைய சூழலில் பாரதியாரின் உறுதிமொழி நமக்கு ஒரு புதிய படிப்பினையை நல்குகிறது.
புதுமைவேட்கையும் சோம்பலும் அடிமைமனப்பான்மையுமே பிறமொழிச்சொற்கலப்புக்குக் காரணங்கள் எனலாம்.
புத்தம்புதிய கண்டுபிடிப்புகள்,கோட்பாடுகள்,கருவிகள் முதலியவற்றை நமது தாய்மொழியில் பெயரிட்டு வழங்கவேண்டும் என்னும் ஆவல் நம் ஒவ்வொருவருவர் உள்ளத்திலும் ஏற்படுதல் வேண்டும்.அதுவே புதிய சொல்லாக்கங்கள் தோன்றுதற்குத் தக்க அடிப்படையாக விளங்கும்.அங்ஙனம் உருவாக்கப்படும் சொற்களை அன்றாடம் நமது உரையாடலிலும் கடிதம் கட்டுரை முதலான எழுத்து வடிவங்களிலும் வழங்கவேண்டும்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று பாரதியாரும் “தனிமைச்சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினிற் போல் எங்கும் யாம் கண்டதில்லை” என்று பாரதிதாசனும் :சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?” என்று கண்ணதாசனும் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துதற்கு நம்மைத் தூண்டிவிட்டது எதற்காக?
கலையியலிலும் அறிவியலிலும் புத்தம்புதிய சொல்லாக்கங்களைக் கண்டு அவற்றை நாளும் பயன்படுத்த நாம் தவறிவிட்டால்”சொல்லவும் கூடுவதில்லை-அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை”என்னும் வீண்பழி நமது தாய்மொழிக்கு ஏற்படும் அல்லவா?
இரண்டாம் உலகப்போருக்குமுன்னர் ஆங்கிலமொழியில் இருநூறாயிரம் சொற்களுக்குக் குறைவாகவே அதன் சொற்கோவை அமைந்திருந்தது என்றும் போர்முடிந்து சில ஆண்டுகளில் அதன் சொற்கோவை பத்துநூறாயிரம் சொற்களைக்கொண்டதாக விரிவடைந்தது என்றும் இன்றையநிலையில் இன்னும் இரண்டுமடங்கு
சொற்கள் அதனை அணிசெய்வதாகவும் மொழியியல் வல்லுநர்கள் கூறும் செய்தி நமது சொல்லாக்கமுயற்சிகளுக்கு மேலும் வலிவும் விரைவும் சேர்க்கவேண்டும். ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”என்றும் “கடி சொல்லில்லை காலத்துப் படினே”என்றும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புதிய சொல்லாக்கங்களுக்கு அடித்தளம் நிறுவிய தொல்காப்பியர் வழிநின்று புதிய சொற்களை உருவாக்குவோம்;அன்றாட வழக்கில் அறிமுகம்செய்வோம்; மொழிவளர்ச்சிக்கு ஊர்கூடித் தேரிழுப்போம்!
(1983ஆம் ஆண்டிலிருந்து என்னைத் தன் நூல்களில் குறிப்பிட்டுவருவதுடன், இன்றும் என்னுடன் கைப்பேசிவழி இனிய தொடர்பு கொண்டுள்ள நண்பர் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் மேற்கொள்ளும் இந்த அயல்நாட்டுப் பயணமும் அவருக்கு மேலுமொரு தமிழ்வெற்றி சேர்க்குமாக!)

THE DREAM COMES TRUE by கொடைக்கானல் - her first poem

It all
started from
The Change of the Sickle
It all started
When our soul
Stood aghast
At the possessif (possessive)
It all started
When we allowed them
To thrash our chins
Already wet with tears
We need no more shackles
Rather be of gold
The dream of a Pigeon
Afloat on the sky
will never fail.
(1993)
(This is My First Entry into the world of Poetry in English)

America

America

Although she feeds me bread of bitterness,
And sinks into my throat her tiger’s tooth,
Stealing my breath of life, I will confess
I love this cultured hell that tests my youth!
Her vigor flows like tides into my blood,
Giving me strength erect against her hate.
Her bigness sweeps my being like a flood.
Yet as a rebel fronts a king in state,
I stand within her walls with not a shred
Of terror, malice, not a word of jeer.
Darkly I gaze into the days ahead,
And see her might and granite wonders there,
Beneath the touch of Time’s unerring hand,
Like priceless treasures sinking in the sand.

Poet: Claude McKay


Acknowledgement with thanks:

Claude McKay
Submitted this poem to poemhunter.com on Friday, January 03, 2003.

15.11.11

பின்னூட்டங்கள் - பழமொழிகள்


“எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?” என்பது பழமொழி. “பின்னூட்டம் போடுங்கள், பின்னூட்டம் போடுங்கள்” என்று என்னைப் போன்ற வலைப்பதிவர்களும் கேட்க வேண்டிய நிலைக்கு ‘பிச்சை’ என்ற பெயர் இல்லாமல் வேறு என்னவாம்? இணையவுலகில் இவ்வாறு.......

பழமொழியின் முதற் பகுதியைப் பார்த்தோம். அடுத்த பகுதி - “எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்.” இது ஒருமை. ஓர்மையுடன் பார்த்தால் இணையவுலகில் இது ஒருமையில் வராது. பன்மையில் மட்டுமே வரும்.

அப்படியானால் பின்னூட்டங்களே பிச்சையெடுத்தால்தான் வருவனவா? - என்று கேட்கின்றீர்களா? அல்ல அல்ல. போட்டி போட்டுக்கொண்டு பின்னூட்டங்கள் போடுவார்கள் வலைகள் சிலவற்றுக்கு. “அப்பேர்ப்பட்ட” வலைகள் எவையெவை என்பது இணையவுலகில் “பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும்” பல ஆண்டுகள் இணையவுலகில் “பெருக்கிப் பெருக்கி, குப்பை போட்டவர்களுக்கும்” நன்றாகவும் “அச்சு அசலாக”வும் தெரியும்.

ஊழ்விலக்குகள் எவற்றிலும் உள்ளன என்பதற்கேற்ப, சொல்லச்சீடு(Word Press) தளம் கொண்ட வலைகள் சிலவற்றுக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கமே சான்று. புகழ்மிக்க வலையேட்டில் தொடர்ந்து(அதில் நான் எழுதிய கட்டுரைகள் பலவற்றை, என் வலைப்பதிவுகளில் பதிந்திருக்கிறேன்) எழுதிவந்த பெரியவர் ஒருவர், கனடாவிலிருந்து சொந்தமாக நடத்திவரும் சொல்லச்சீட்டின் தளத்துக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கத்தைக் குறித்து, “எப்படித் தங்களின் இத்தளத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்களின் போக்குவரவுள்ளது?”(How come so much traffic to your weblog?) என்று அவருக்கே மீண்டும் வந்ததொரு பின்னூட்டத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். “மச்சம்டா சாமி!” என்று விட்டுவிட்டுப் போயிருக்கலாம்தான். “இட்டளி தின்னும் தமிழ்மூளைக்கு இருக்கும் கொழுப்பு” என்று புதுதில்லியில் வண்ணிக்கப்படும் மூளை இருப்பதால், இந்தச் சொல்லாடல் பிறந்தது. “எடுத்தாளாத பொருள் உதவாது” என்ற பழமொழியும் “எழுதப்பா இதை!” என்று ஊக்குவித்தது.

“உழுகிற மாடு பரதேசம் போனால், அங்கே ஒருவன் கட்டி உழுவான்; இங்கே ஒருவன் கட்டி உழுவான்” என்றொரு புதிர்ப் பழமொழி உண்டு. அதேபோன்ற நிலையை வலைப்பதிவுகளிலும் கண்டு வருகிறேன். அம்மணமாக எல்லோர் முன்னிலும் ஓடத் தயங்காத எழுத்தாளர் நடத்தும் வலைப்பதிவைக் காசுகொடுத்துப் படித்துவிட்டு, முகநூலிலும்(Facebook) பதிவிடும் நல்லவர்கள் உள்ளனர். அவர்களுக்காகத்தான் சென்னையை வெள்ளக்காடாக்கிய மழை ‘பேய்’ந்தது.

இவையெல்லாம் புரியாமல் ‘வெள்ளந்தி’யாக, “ உங்கள் பிளாக்கை ஆயிரம் பேருக்குக் கொண்டு சேர்க்கிறேன். பிளாக்கை வைத்து வியாபாரம் பண்ணுங்கள்!” என்று வரும் மின்னஞ்சல்களைப் பிரித்துப் பார்த்த பாவம்... “உடையவன் செய்த பாவம் கண்ணே உனக்கும் ஒட்டிக் கொண்டதா?” என்பதற்கேற்ப ஒழுங்காயிருந்த கணினியும் நோய்த்தொற்றால் ஒக்கார்ந்து கொண்டதுவே சிலருக்கு எஞ்சும்.

கொள்கை கோட்பாடுள்ளவர்கள் நடத்தும் வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள், பொதுவாக, அதிகம் வாரா. காரணம் என்னவென்றால் அதேபோன்ற கொள்கை கோட்பாடுள்ளவர்கள் பிறர் இருப்பு நிலைகள்தாம்:

1. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
2. கணினி பற்றியே தெரியாதவர்கள்.
3. இணையம் குறித்துத் தெரிந்துகொள்ள அக்கறைப் படாதவர்கள்.
4. கையில் கைப்பேசி வைத்துக் கொள்வதைக் கூட ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு’ மாறு என்று கருதுபவர்கள்.
5. ‘முழித்து முழித்து’ப் படித்து விட்டு, “இவனுக்குப் பின்னூட்டமொரு கேடா?” என்றூ கைகளைக் கழுவிக் கொள்பவர்கள். (கவனியுங்கள்: “இவளுக்கு” அல்ல.)
6. “எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று (வேறெதற்கு இருக்கிறது?)சொல்லிக்கொள்வதிலாவது - ‘குமைந்து குமைந்து குதூகலப் படுபவர்கள்’ அல்லது ‘’அன்றாடம் எதையாவது செய்துமுடிக்க முடியாதவர்கள்.”

ஆறாமவர்களைக் குறித்து, “ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை இடு, காடுகெட ஆடு விடு” என்ற பழமொழியை, “மூன்றுங்கெட இவரை விடு!” என்று சொல்லி நிறைவு செய்ய முடியும்.

அண்மையில் மும்பைத் தமிழ் நண்பர் ஒருவர், “ பின்னூட்டமிட விரும்புகிறவர்களை ஏன் இப்படிக் கொடுமைப் படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். ‘பின்னூட்டங்கள் மட்டுறுத்தம்’(Comments moderation) என்றோர் ஏந்தை(வசதியை) கூகுள்(Google) கொடுத்திருக்கிறது. அதேபோல், பின்னூட்டம் செய்பவர்களின் படங்களைப் பதியாமல் இருப்பதற்கும் கூகுள் குறிப்புக் கொடுக்கிறது. இவற்றை எல்லாம் பாடமாகவே தருகிறது கூகுள்.(Learn more about spam control - lessons by GOOGLE) இவையெல்லாம் எரிதங்களைக் கொணர்ந்து உங்கள் கணினியைப் பாழாக்கி விடும். தவிர, பின்னூட்டங்கள் பல அருவருப்பான சொற்களைக் கொண்டு வருவன. அவற்றை மட்டுறுத்தினால்தான் நாகரிகம் நிலைபெறும்.

சிலர், ஒவ்வொருவரைக்கொண்டு ஒவ்வொரு பதிவு தொடங்கி, அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டு விடுவார்கள். கண்டுகொள்ளப்படாத இடங்களை ‘சமூக விரோதிகள்’ கையாள்வதுபோல், இந்த வலைப்பதிவுகளைப் பரத்தைமை அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளவென்றே இருக்கிறார்கள் சிலர்.

‘Intellectual snobbery’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதையும் விஞ்சும் வண்ணம், நம்மவர்களின் ‘இணையம் குறித்தறிவதில் காழ்ப்புணர்வு’ம் ‘நரித்தன’மும் உள்ளன. இவற்றின் மேலதிக விளைவுகள் என்ன தெரியுமா?

இவர்கள் எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், படி+ஒட்டு(copy+paste) முறையில் உலகின் வேறிடங்களில், வேறு பெயர்களின்கீழ் வெளியிடப்பட்டு வருகின்றன. இவர்கள் எழுதும் நூல்களின் பகுதிகள் வெட்டப்பட்டு அவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய இணையக் கட்டுரைகளாகவும் மின்னூல்(PDF)களாகவும் வெவ்வேறு தலைப்புகள் -ஆசிரியர் பெயர்களின்கீழ் வெளியாகி வருகின்றன. ஒரே ஆய்வேட்டை ‘உல்ட்டா பண்ணி’ இருவர் முனைவர்ப் பட்டம் வாங்குவதைவிட ஏதமானது இது. இப்பொழுது தெரியா, இதனால் வரவுள்ள ஏதங்கள்.

“ஐயா.. ஐயா.. உங்கள் நூல்கள் செல்லரித்துப் போன பின்னாலும், ‘சைபர்வெளி’ எனப்படும் மின்வெளியில் உள்ள நூல்கள் செல்லரித்துப்போகமாட்டா. நீங்கள் ஒன்றும் தொல்லைப்பட்டு உங்கள் நூல்களை மின்வெளியில் பதிந்து கொண்டிருக்க வேண்டா. கொஞ்சம் சுறுசுறுப்பாக, நீங்கள் எழுதியுள்ள நூல்களின் கருத்தடக்கங்களை (contents) கூகுள் தேடலின் நிரப்பித் தேடிப் பாருங்கள். அதே கருத்தடக்கங்களில் வரும் நூல்களில் உங்கள் கருத்துகள் இடம்பெறுகின்றனவா என்றாவது கண்காணியுங்கள்!” என்று நான் வெளியூரில் வேண்டிக்கொண்டதற்கு, என் ஆசான் நிலையில் இன்றும் உள்ளவர், என்னை ‘ஒருமாதிரி’ நோக்கி ஏளனமாகச் சிரித்தார்.

சில கிழமைகளுக்குப் பிறகு, அவரிடமிருந்து ஒரு விடியலில் எனக்குப் பேசிஅழைப்பு வந்தது. பதறிப் பதறிப் பேசினார். எதைப் பற்றி? மேலே உள்ள பத்தியில் வரும் செய்தி தனக்கானதன்று என்று எண்ணியவர், இப்பொழுது பதறுகிறார். “பசுவதி...வள்ளலார் குறித்து நான் பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து எழுதியவற்றையெல்லாம் ஒருவன் தன் கருத்துகள் என்று பேசி வருகிறான். இணையத்தில் அவனுரைகள் ஒலிவடிவிலும் வருகின்றன. நானே கேட்டுப் பார்த்தேன்” என்றார். “ஐயா! தலைப்புகளைத் திருடினால் வழக்குப் போட முடியாது. கருத்துகளைத் திருடினால் வழக்காடலாம். அது மின்வெளி (Cyber Space) என்று தயங்காதீர்கள். மின்வெளிக்கான சட்டங்களும் ஆகத் தெளிவாக வரையறுக்கப்பெற்றுள்ளன. அடிப்படை/ஆதாரங்களோடு வழக்கிட்டால் வெற்றி உறுதி!” என்றேன். அவருக்கு உறவினரான உயர் அறமன்ற வழக்குரைஞரை இப்பொழுது அவர் அணுகியிருக்கிறார்.

“பிச்சைக்காரன் பின்னால, இருமுறவன் முன்னால, பணக்காரன் பாக்கெட்டுல” என்ற சென்ற நூற்றாண்டுப் பழமொழியொன்றைப் பழமொழிகள்புகழ் நூலாசிரியர் திரு ச. இலக்குமி நாராயணன் அவர்கள், தாம் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூலொன்றில் குறித்திருந்தார். இது, புதிர் வகையைச் சார்ந்த பழமொழி. உலகியல் நடைமுறை ஒன்றைக் குறிப்பது.

நீங்களே கண்டுபிடியுங்கள் - இது எதைக் குறிக்கிறது என்று.

சரியான விடை உங்களுக்குத் தெரியுமானால், அந்த ஒற்றைப் பழமொழி போதும், நான் இத்தனைச் சொற்களால் எழுதியதை ஒரே நொடியில் விளக்க...

8.11.11

காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!

வாழ்க்கைதான் முதன்மையானது. ஆம். அதை வாழும் மாந்தனை விடவும் வாழ்க்கைதான் முதன்மையானது. இது ஓர் உண்மை.

நம்பவில்லையா நீங்கள்?

அப்படித்தான் என்றால்,

தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையில் அண்மையிலொரு மாலைப்பொழுதில் வந்த செய்தியைப் பார்த்திருக்கவோ, அதுபற்றி இதுவரை கேட்டிருக்கவோ மாட்டீர்கள். கேட்டிருந்தால் நன்றி.

தமிழறிஞர் மா.சு.சம்பந்தன் அவர்கள், அச்சும் பதிப்பும் உட்பட்ட துறைகளில் பெரும் வல்லுநர். அதே தலைப்பு முதலான - தலைப்புகள் பலவற்றின்கீழ் அவர்தம் நூல்கள் பல வெளிவந்தன. நம் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலைப் பாடத் திட்டங்களில் வைக்கப்பெற்றன. அருமையான, பயன் மிகுந்த நூல்கள்.

நானும் அவற்றைக் கருத்தூன்றி வாசித்திருக்கிறேன்.

புதுச்சேரியிலுள்ள தாகூர் அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; காரைக்கால் பேரறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி இளங்கலை மாணாக்கியருக்கும் கற்பித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட நூல்களின் ஆசிரியர், தமிழ்நாட்டரசின் விருதுகள் பெற்றிருக்கிறார். தினத்தந்தி நாளேடு வழங்கிய சிறப்பு விருதையும் பணமுடிப்பையும் ஏற்றிருக்கிறார். இன்னும் பல பாராட்டுகள், மற்றும் பிற...

சென்ற செப்டம்பர் மாதக் கடைசிக் கிழமையொன்றில் மாலைப்பொழுதிலொரு நிகழ்ச்சிக்குச் சென்றவர், நான் செய்தி கண்டு கேட்ட இதுவரை இல்லம் திரும்பவே இல்லையாம்.

பழமையைப் பெயரில் கொண்ட - ஊடகங்களுக்கு 'வேண்டிய'வர் ஒருவரை நேர்கண்டு ஒளிபரப்பினார்கள். நெஞ்சு கனத்தது.

பின்வரும் வினாக்களை அந்த நேர்காணல் எழுப்பியது.

முகம் தெரியாமல் போனவரா அவர்?

முகவரி இல்லாமல் வாழ்ந்தவரா அவர்?

ஐயா! உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ‘நினைக்கப் பட்டவர்’ அவர். ஏன்.. உங்களுக்குத்தான் பெரியவர்களின் ‘சகவாசமும்’ பேரளவு இலக்கிய இதழ்களின் உறவும் ஊடகங்களின் கூட்டுறவும் இருக்கிறதே...

அவர் முகத்தை நீங்களாவது விளம்பரப்படுத்தி இருக்கலாமே..நீங்கள் எதிர்பார்க்குமளவுக்கு...

ஊடகம் நேர்கண்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா?

“உங்களை விட அவரை எனக்கு அதிகம் பழக்கம்!” என்று உரிமை கொண்டாடுகிறீர்களா? ஒதுங்கிக் கொள்கிறேன். நல்ல வேளையாக இந்தப் ‘பாவ’த்தில் எனக்குப் பங்கில்லை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.

ஊடகங்கள்... உரியவர்களை நேர்காணத் தெரியாதவை.


அவர் மகன் சொன்னவற்றையும் கண்டேன்; கேட்டேன். கலங்கிப் போயிருந்தார்.

உண்மை...

அது

தமிழறிஞர் மா.சு.சம்பந்தனார்.. வாழ்க்கைக்குத்தான் தெரியும்.

*** *** ***

(இன்று காலை, நண்பர் தமிழ்த்திரு மறைமலை சி. இலக்குவனார் அவர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் மா.சு.ச. குறித்து மொழிந்த செய்திகள் மேலும் மிகுந்த கழிவிரக்கத்தை ஏற்படுத்தின.)

17.10.11

சோளக் கொல்லைப் பொம்மை!


சோளக் கொல்லைப் பொம்மை!
- ம.இலெனின் தங்கப்பா


சோளக் கொல்லைப் பொம்மை!
முறைக்குது பார் நம்மை.

ஆளைப் போல மிடுக்கு.
அட்டைக்கத்தி முடுக்கு.
தாளில் தங்க மினுக்கு.
தலை தான் கொஞ்சம் ஒடுக்கு.
காளி கோயில் பூதம் போலக்
காவல் காத்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

சட்டித்தலை மேலே
சவரி முடி ஒட்டிப்
பட்டை நாமம் தீட்டிப்
பல் இளித்துக் காட்டி
நெட்டி மாலை போட்டுக் கந்தல்
சட்டை மாட்டி விட்ட பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

ஓலையாலே நாக்கு,
ஒட்டு வைத்த மூக்கு,
போலி மீசை முறுக்கு,
புள்ளி குத்தி இருக்கு.
காலை மாலை இரவு பகல்
கண் விழித்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

வாயைப் பாரு சப்பை;
வைக்கோல் பொதி தொப்பை;
சாய மாலை காற்றில்
சலசலக்க ஆட்டிப்
பேயைப் போல இரவு நேரம்
பிள்ளைகளை மிரட்டும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

9.10.11

"முப்பது ஏக்கர்கள்” - ரேங்கே'யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்


“பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார் ராபர்ட் வீவர். இம் மதிப்பீடு சரியானதுதான் என்று 1938ஆம் ஆண்டில் பாரீசில் முதற் பதிப்பான ‘முப்பது ஏக்கர்கள்’ நாவலை ஈடுபட்டு வாசிப்பவர்கள் உணர்வர்.


வாசிப்பனுபவத்தில், இதன் மீதுள்ள ஆர்வம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை மேலெழுந்து உயர்ந்து கொண்டே செல்வது இதன் கட்டுமானத்திலுள்ள தனிச்சிறப்பு. ஆண்டுகள் பல கடந்தும் இந்த ஆர்வம் குன்றவில்லை; காரணங்கள், இப்புனைகதை ஆசிரியருக்கு உள்ள - மண்ணும் அதன்மேல் மனிதர் கொண்டுள்ள உறவும் பற்றிய ஆழமான புரிந்துணர்வும் அனுபவ சாத்தியப்பட்ட நுண்ணறிவும் மிகவுயர்ந்த புனைகதை சொல்லும் ஆற்றலுமே ஆவன.


இந்தப் புதினம் தேசிய, இனவாதங்களை அலட்சியமாகத் தாண்டி மேலெழும்பிச் செல்கிறது. நிலப்பகுப்புகளின் மேல் மனிதனுக்கு எழும் ஆரவாரமான அவாக்களைப் பகடி செய்து நீள்கிறது. பிரபஞ்ச வெளியில், தனது அற்ப அவாக்களையெல்லாம் கடந்து, மனிதனை மேல் எழும்பிச் சென்று நிலைத்திடுமாறு செய்கிறது. ஹெசியாதிலிருந்து வர்ஜில் வரை, ரமோஸிலிருந்து பார்[Barre`s]வரை இலக்கிய உலகில் உலாவி வலம் வந்த மிகப்பெரிய படைப்பாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரேங்கே. அவர்கள் என்ன செய்துவந்தார்கள்? மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையறாது நிலவி வந்த மண உறவினை ஆராதித்து வந்தார்கள். அந்தப் பாரம்பரியம் ரேங்கே’யில் நிலைகொண்டதில் வியப்படைய ஒன்றுமில்லை. என்ன வித்தியாசம்? இந்த முறை அந்த மனிதன் ஒரு பிரஞ்சுக் கனடியன்; நிலமோ கெபேக். அவ்வளவுதான்.


கதைக் கரு, எளியதுதான். எங்கும் கிடைக்கும் களிமண் போலத்தான். அதைப்பிசைந்து வண்டிச் சக்கரத்தில் அழுத்தி ஓரம் பிடித்து வனையும் குயக்கலைஞனின் செய்நேர்த்திதான் ரேங்கே’யினது... யுகாரீஸ்த் முவாஸான், பிரஞ்சுக் கனடிய உழவு விவசாயிகளுக்கு ஏற்றதொரு உரிய மாதிரி ஆனவர். மரபு, இரத்த உறவு ஆகிய தளைகளால் பந்தப்படுத்தப்பட்டுப் பண்படுத்தப்பெற்றவர். யுக்தியும் அனுபவத்தால் விளைந்த கூரறிவும் கொண்டவர். என்ன இருந்து என்ன புண்ணியம்? தனக்குள் விளைந்த ‘லாரென்ஷியன் சமாதான’த்துக்கு எதிராக உலகியல் சக்திகள் திரண்டெழுந்தபொழுது அவற்றைச் சமாளித்து தன் அமைதியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார். அத்தகைய யுகாரீஸ்த் குறித்தும் அன்னார்தம் குடும்பம் பற்றியும் விவரிக்கும் புதினமே ‘முப்பது ஏக்கர்கள்.’ ஆனால், அதே நேரத்தில் நவீன பிரஞ்சுக் கனடாவானது எவ்வாறு தன் மரபூன்றிய நாட்டுப்புறப் பண்புகளைப் புதியனவும் உடனடியாக முன்செயல்பட்டுச் செல்வனவுமாகிய நவீன நிலைமைகளுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள முற்பட்டது என்ற வரலாற்றின் கதைப் பதிவே இந்தப் புதினம் என்றால் இன்னும் பொருந்தும்.


ரேங்கே’யின் புதினம், கடந்துவிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து சென்ற இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பதுகள் வரையிலான லாரென்ஷியன் பண்ணை நிலத்தை உழுத விவசாயியின் வாழ்க்கையைப் பின்னலிட்டுக் கதைசொல்வதில் பெருவெற்றி பெறுகிறது. யதார்த்தம், கடினமான கதைப்பின்னலை

வெகு அலட்சியமாக நகர்த்திச் செல்லுகிறது. கதையின் காலகட்டம், உலகையே உலுக்கிய காலகட்டம் அல்லவா? முதல் உலகப் போர், பழைய இனவாத ரணங்களை கிளறித் திறந்து வெளிக்காட்டியது. பழிவாங்க வந்ததொரு நச்சுப் பாம்பே போல் கறுவிக்கொண்டு வெகுவேகமாக ஊர்ந்து வந்த தொழில்மயமாக்கல், பண்ணைகளிலிருந்து விவசாயிகளை இரக்கமில்லாமல் தூக்கி எறிந்தது. அவர்கள் வீசி எறியப்பட்ட இடங்கள், அவர்கள் இதுவரை சம்பந்தப்பட்டே அறியாத நகரங்கள். அவர்கள் இதுவரையிலும் வாழ்ந்தே பார்த்திராத செயற்கை வாழ்க்கையை வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துல்லியமாகச் சொன்னால், அவர்கள் இதுவரை மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்துவந்த இயல்பான வேளாண்குடி வாழ்க்கை, முறட்டுத்தனமாகக் காயடிக்கப் பட்டது. நவீனமான மக்கள் தொடர்புக் கருவிகள், அகன்றதும் மக்கள் பெருக்கம் மிக்கதுமான பெருந்தேசத்தின் இயற்கையான கோட்பாடாக ‘தனிமைப்படுத்தப்படுதல் கொள்கை’யை நிலைப்படுத்த இடையறாது முயன்றுகொண்டே வந்த சக்திகளைத் தகர்த்தெறிந்தன. இந்த இடத்தில், ‘ஐசொலேஷனிஸம்’ குறித்தும் நாம் உணர வேண்டும். தேசிய சுயநிறைவு பெறுவது குறித்தும்; வெளிநாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டாளிகளிடமிருந்து முற்றாக விடுதலை பெறுவது குறித்தும் விழிப்புணர்வூட்டும் கோட்பாடே ‘ஐசொலேஷனிஸம்’ எனப்படும் ‘தனிமைப்படுத்தல்கொள்கை’ ஆகும். தனிமைப்படுத்தல் என்பது ‘பிரைவஸி’ எனப்படும் அந்தரங்கம் அன்று. ஊடகங்களின் வருகைக்குப் பின்னும் அந்தரங்கம் தனிமனிதருக்குள் இருக்கவே இருக்கிறது. ஆனாலும் டென்மார்க் முதலிய ஐரோப்பிய தேசங்களிலும் ஊடக வெறுப்பு, குறிப்பாகத் தொலைக்காட்சியின் மேலும் செல்பேசிகளின் மேலும் கடும் வெறுப்பு, அறிவறிந்த மக்களிடம் இருக்கவே இருக்கிறது. இது ஒன்றும் புதியது அன்று.


தொடர்ந்து வந்த பொருளாதார அகவழுத்தம் எங்கும் மக்களிடையே கசப்புணர்வைத் தோற்றுவித்தது. தனிமனித நம்பிக்கைகள் எல்லாமும் தகர்ந்து போயின. இந்த லட்சணத்தில் அடுத்த உலகப் போர் பற்றிய வதந்திகளும் பரவத் தொடங்கி, அனைவரிடமும் பாதுகாப்பின்மையை அதிகரித்தது. இந்தப் புதிய முனைப்புகளும் நீரோட்டங்களும் கனடாவை முழுமையாகப் பாதித்தன என்றாலும் கெபேக்கின் மேல் அவற்றின் தாக்கம் அலைஅலையாகத் தொடர்ந்து தாக்குவதாய் அமைந்தது. இந்தத் தருணமே ரேங்கே’க்கு தன் புதினத்துக்குப் புதியதோர் வலுவந்தமான திருப்பம் தரவும் தன் சகல விதமான கதைசொல்லும் ஆற்றல்களைப் புலப்படுத்தவும் உதவியது.


சற்றே கதையின் விரிவைப் பார்ப்போம்.


யுகாரீஸ்த் முவாஸானின் உயிர்மூச்செல்லாம் அவருடைய உடைமையான முப்பது ஏக்கர் நிலம்தான். அந்த நிலத்தின்மேல்தான் அவர் உரிமையுடன் பாதம் பரப்பி நடந்தார்; வாயாறப் பேசினார்; தான் ஒரு மாஸ்டராக அந்த மண்மேல்தான் கம்பீரம் கொண்டார். அதே சமயம் அவர் ஒரு அசிங்கமான விவசாயியாகவும் அவ்வப்பொழுது நடந்து கொண்டார். ஆனால் மிக எளிமையான, ஆனால் அபத்தங்களைக் கிஞ்சிற்றும் ஏற்றுக் கொள்ளாத மனிதராகவே அவர் திகழ்கிறார். கதை தொடங்கும்பொழுது அவருக்கு வயது இருபத்து மூன்று. எதையும் சரிவரத் தீர்மானிக்க முடியாமல் திணறுதல், இரண்டாட்டம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாமை என்னும் பின்னடைவுகளின் அரங்கில் யுகாரீஸ்த் முவாஸான் ஒரு பொம்மலாட்டப் பொம்மையானார். அவருடைய சின்னஞ்சிறு உலகில் அவருடைய ஆளுமைகூட அங்கதப் பொருளையே நல்கும் சிக்கல்வலைப் பின்னலாக அமைந்தது. அவருடைய பழைமையும் புதுமையும் பிணைந்த கோட்பாடு, அவரை மரபுக்கும் முன்னேற்றத்துக்கும் இடையில் வைத்து ஆட்டிப் படைத்தது. தன் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் யுகாரீஸ்த் பொதுவில் சொந்தமானார். அவருக்குள் மரபும் முன்னேற்றமும் ஓயாது போரிட்டன. இந்தப் பின்னணியில்தான் யுகாரீஸ்த்தின் வாழ்க்கை நாடகம் நிகழ்வுற்றது.


தொடக்கம் முதலே, யுகாரீஸ்த் நவீன மனிதனின் முகமூடியைத்தான் அணிந்து கொண்டு வருகிறார். உஷார் மனிதராகத் திகழ்கிறார்; தந்திரமானவராக விளங்கவும் முயல்கிறார்; காரியார்த்தம் உடையவராக, பேராசை கொண்டவராக, வெற்றிக்கும் கெளரவத்துக்கும் அலைகிறவராகவும் இருக்கிறார். அபத்தங்கள் அறவே நீங்கிய தீவிரமான யதார்த்த ஞானம் உடையவராக விளங்கும் அவர், ஓயாது தன்முன்னேற்றத்தை வழிபடுபவராகவும் இருக்கிறார்.


ஓர் அனாதையாகவே வாழ்க்கையைத் தொடங்கும் யுகாரீஸ்த் , எஃபிரெம் என்ற தன் மாமாவுடனேயே தங்கி வாழ்கிறார். அவர்[மாமா] தாரம் இழந்தவர். குழந்தைகளில்லை. ஆறு நதி ஆகியவைகளில் இருக்கும் வண்டல் மண் சார்ந்த முப்பது ஏக்கருக்குச் சொந்தக்காரர். இருநூறு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் தந்துவந்த மண் அது. எஃபிரெம், எதிர்பாராமல் இறந்துவிடவே அந்த மண் யுகாரீஸ்த்’துக்குச் சொந்தமாகி விடுகிறது. குறுகிய காலத்தில் ஒரு பண்ணை, ஒரு துணை, ஒரு வாரிசு ஆகியவற்றுக்கு உடைமையாளர் ஆகிவிடுகிறார் யுகாரீஸ்த்.


யுகாரீஸ்த்’தின் மாமா இறக்கும்பொழுது யுகாரீஸ்த்’துக்கு அதுவரை இல்லாத அனுபவம் ஏற்படுகிறது. அதை ரேங்கே பின்வருமாறு சொல்லுகிறார்:


“மாமாவின் படுக்கையை நோக்கித் திரும்பினார் யுகாரீஸ்த். ஒருவகையான ஈர்ப்பு அவரை அங்கு இழுத்தது. அது ஒரு நூதன அனுபவம், அவருக்கு. பொதுவாக சாமான்யமான மனிதர்களுக்கு அது எவ்வித ஈர்ப்பையும் நல்காது. அவர்களை அச்சுறுத்தவும் அச்சுறுத்தாது. எல்லாவற்றைக் காட்டிலும் தப்பிக்கவே முடியாத மருமம் -- முகத்துக்கெதிராக வந்து, கால்களைப் பரப்பிக்கொண்டு உறுதியாக நிற்பதுவே அது. தன் நீண்ட கைகள் பக்கவாட்டில் தொங்கி அலைய, தனக்குள் உறுதியாக ஒரு புதிய எண்ணம் உருக்கொள்வதை நிதானமாக உணரத் தலைப்பட்டார் யுகாரீஸ்த்.. எஃபிரெம் மாமா செத்து விட்டார்.. செத்துப் போயே போய்விட்டார்.. அவர் இனிமேல் மரம் வெட்ட மாட்டார்.. மறுபடியும் உணவுண்ண மாட்டார்.. இனி எப்பொழுதும் பேசவே பேச மாட்டார். இப்பொழுது மாமாவின் வீடு பூதாகரமாகத் தெரிகிறது யுகாரீஸ்த்’துக்கு.

அல்ஃபோன்சின்!.....

தொடர்ந்து வாழும் உயிர்களின் மேல் யுகாரீஸ்த்’தின் எண்ணங்கள் திரும்பின. காத்திருக்கும் பண்ணை விலங்குகள்.. அவற்றுக்கு எசமானனின் மரணம் உறைத்திருக்குமா என்ன? அமைதியாகத் தவமிருக்கும் அந்த நிலம்.. யாரை அது வசதியும் வளமும் பெறச் செய்ததோ, அவர் மரணம் குறித்து நிச்சலனமாய் முகந்திருப்பிக் கொண்டுள்ளதே.. இனி தன்னை யார் கூடிச்சுகித்து வளநலம் பெறப் போகிறார்கள் என்று திட்டமிடத் தலைப்பட்டு விட்டது போலும்!

யுகாரீஸ்த்’தின் சிந்தனை, கபடமாக அந்த அறையை விட்டே நழுவப் பார்த்தது. ஆனால் உடனடியாக அது ஒரு கறுப்புச் சுவர்மேல் மோதி, சட்டெனத் திரும்பியது.


எஃபிரெம் மாமா இறந்துபோய் விட்டார்.

இறந்துபோன மனிதரின் முகம் யுகாரீஸ்த்’தின் கண்களுக்குள் தெரிகிறது.

அவர் முகத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட சிவப்புக் கைக்குட்டை, யுகாரீஸ்த்’துக்குக் கடும் பல்வலியின் ஞாபகம் தந்தது.

ஒரே நம்பிக்கை, தகனத்துக்கு முன் மிக அதிகமாக உருமாறிவிட மாட்டார்...

இல்லை..இல்லை..அது இலையுதிர்காலம் அல்லவா?

அல்ஃபோன்சின்!..

வசந்த காலத்துக்கு முன் அவளும் தானும் மணந்து கொண்டுவிட்டால் போதும்.

மாமா எஃபிரெமின் பரம்பரை மீண்டும் உயிர்த்து விடுமல்லவா!

ஜனவரியில் அது நிகழ்ந்தாலும் வியப்பில்லை.

ஊர்ப்பாதிரியிடம் அது குறித்துப் பேச வேண்டும்..

பாவம், வயதானவர்.. பரிதாபம்..அவர் இப்படி இறந்து போவார் என்று யாருக்குத்தான் தெரியும்!

---------------------------------------------------

அதிருஷ்டக்காரர்தான் அவர். திருமணம் கூட நடைமுறைக்குட்பட்ட ஏற்பாடாக அவர் எதிர்பாராமல் அவரை எதிர்ப்பட்டது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன் ஒன்றுமே இல்லாதவராய், அனாதையாய் இருந்த அவர், ஓர் இரத்த சொந்தம் பெற்றதனாலேயே கிட்டத்தட்ட நிலச்சுவான்தாரராக ஆகிவிட்டார். பணக்காரராக விளங்கவும் முடிந்தது. மண் - பணம். அவை இரண்டும் அவருக்கு ஒன்றுதான். புறத்தே அவர் நிலத்தில், அவ்வப்பொழுது கொஞ்சம் மண்ணை நாசூக்காகத் தன் கைகளில் அள்ளிக் கொள்வார்; தன் வியர்வையுடன் கூடிய கைச்சதைக்குள் அதைக் கரைத்துக்கொள்ளப் பார்ப்பார். ஓ!..மண்ணுடன் தேக சம்பந்தம்! பெருவிரலுக்கும் பிறவிரல்களுக்கும் இடையில் அந்தத் தனது மண்ணைப் பிடித்துப் பிடித்து உருட்டி நாணயங்களாக்கக்கூட யுகாரீஸ்த் முயன்றதுண்டு. முப்பது ஏக்கர்கள் அவருக்கு வள்ளல்களாகத் திகழ்ந்து, கேட்டதெல்லாம் கொடுத்தன. ஒவ்வோர் ஆண்டும் தன் சேமிப்பை அவர் அதிகமாக்கினார்; அதன்மேல் கிராம நோட்டரி ஐந்து விழுக்காடு யுகாரீஸ்த்’துக்கு நல்கினார். ஆண்டுகள் நகர நகர, அவர்தம் சதை, அவர்தம் நிலம், அவர் சேர்த்த பணம் எல்லாம் கூட்டாக இணைந்து அவருடைய வெகுதீவிரமான நோக்கத்தைக் கட்டமைக்க உதவின. அவருடைய அப்படிப்பட்ட தீவிரமான வாழ்க்கை நோக்கம்தான் எது? யுகாரீஸ்த் முவாஸானின் பெயர்.. அதாவது புகழ். அவரது பேரவா அவரை மதத்தினிடமும் கொண்டுபோய் விட்டது. ஓகினாஸ், தன் மூத்த மகன், பாதிரிப்படிப்பு படிக்க வேண்டுமா, வேண்டாமா? யுகாரீஸ்த்’துக்கு எந்த விதமான எதிர்ப்புகளுமில்லை. ஆனால் பாரிஷ் பாதிரி, அதற்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அவர் விதித்த நிபந்தனை. யுகாரீஸ்த் ஒன்றும் பக்திமான் அல்லர். இருந்தாலும் பாதிரிப்பட்டம் அவரை ஈர்க்கிறது. ஏன்? மிக உயர்ந்ததும் நீடித்திருப்பதுமான கெளரவத்தை அது அவர் குடும்பத்துக்குக் கொடுக்கும் அல்லவா? அதனால்தான். அடிக்கடி அவர் பிரியமாகச் சொல்வதுண்டு: “நாம் அறிவதைக் காட்டிலும் உலகம் இரண்டு விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டுள்ளது. ஒன்று - பாதிரியார். அடுத்தது - நிலம்.” யார் கண்டார்? கடவுளிடமிருந்து ‘சிறந்த விளைச்சல் தரும் கதிர்கள்’ என்ற வடிவத்தில் சிறப்புக் கவனமும் கிடைத்தாலும் கிடைக்கலாமல்லவா!


யுகாரீஸ்த்’துக்கு ஒழுக்க விதிகளில் நம்பிக்கை அறவே கிடையாது. தன் திருமணத்துக்கு முன்னர் ஃபோன்சீன் என்ற ஃபான்சின் பெண்ணைக் காதலிப்பதாகக் காட்டிக் கொண்டு மெய்யாகக் காமுற்றுத் திரிந்தார்; ஏன், வாய்ப்பு என்ற பெயரில் அவளை உடலுறவுக்கும் உள்ளாக்கினார்.


ஆனால் தந்தை என்ற ஸ்தானத்தில் யுகாரீஸ்த் வித்தியாசமாக நடந்து கொண்டார். பிரச்சினை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருந்து விடுகிறார். அவருடைய மூன்றாம் மகன் எஃபிரெம், ஒரு முரட்டுத்தனமான இளைஞன்; உள்ளூர் முரடன் என்ற பெயரெடுத்தவன். அடிக்கடி சண்டை போடுபவன்; வகைவகையான சபதங்களை வாரி வீசுபவன்; குடிகாரன். யுகாரீஸ்த்’துக்கு அதிலெல்லாம் வருத்தமில்லை; மாறாக இரகசியமானதோர் பெருமிதம் இருந்தது. தன் மகள் லுசிந்தா பற்றி எவ்வளவோ கீழ்த்தரமாகக் கேள்வியுற்றபொழுதும் யுகாரீஸ்த் லுசிந்தாவை வெறுமனே கடிந்துகொண்டதும் கூடக் கிடையாது. சுருங்கக் கூறினால், தன் குறுகலான வழியில், யுகாரீஸ்த்’துக்கு எல்லாப் பேராசையும் எல்லாப் பெருமிதமும் புதிய பட்டமான ‘பொருளாதாரப் புள்ளி’ என்பதன்மேல் இடையறாக் காமமும் இருந்து வந்தன.


யுகாரீஸ்த் , இன்பதுன்பங்களில் நடுநிலைக் கோட்பாடும் விதித் தத்துவத்தின்மேல் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவராக விளங்கியவர். ‘முப்பது ஏக்கர்கள்’ புதினம், நான்கு பகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளது. இயற்கையின் நான்கு பருவங்களின் பெயர்களே அவற்றுக்குச் சூட்டப் பெற்றுள்ளன. மெய்ம்மையாகவும் குறியீட்டு நிலையிலும் ஒரு விவசாயியின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் இயற்கையின் நான்கு கூறுகளாகப் பிரிக்கப் பட்டிருப்பதும் இயற்கையே!


மண்ணுக்கும் யுகாரீஸ்த்துக்கும் உள்ள உறவும் அவரின் வாழ்க்கைக்கும் ஊழ்வினைக்கும் உள்ள தொடர்பும்

1. இளவேனில்[பக்கம் 15-72]

2. முதுவேனில்[பக்கம் 73-134]

3. இலையுதிர்காலம்[பக்கம் 135-196]

4. பனிக்காலம்[பக்கம் 197-249]

என்ற நான்கு பெரும் பிரிவுகளாக ரேங்கே’யினால் பிரிக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்புக்களுள் ஒன்று.


இதை உணர்த்தும் சில பகுதிகள்:

“ பகல்களும் இரவுகளுமாக ஆண்டுகள் உருண்டோடுகின்றன. பருவகாலங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பற்றியவாறே சுழன்று, ஒன்று அடுத்தவற்றுக்கு வழிவிடுகின்றன. மண்ணின் செழித்து வளரும் பயிர்களுக்கு ஒரு விவசாயி எப்படிப் பருவங்கள் தோறும் பார்வையில் பட்டுத் தெரிவானோ, அப்படிப் படிப்படியாக அந்த உழவு விவசாயியின் வாழ்க்கையும் இளவேனிலில் சுகமாகி, முதுவேனிலில் தீவிரப்பட்டு இலையுதிர்காலத்தில் எல்லாமும் மாறி பனிக்காலத்தில் படாத பாடு படுகிறது..”


நாள்கள், வாரங்கள், மாதங்கள், பருவங்கள் மற்றும் ஆண்டுகள் உருளுகின்றன. ஆனாலும் அவற்றுக்குள்ளாக அந்த விவசாயியின் வாழ்க்கை மாறுதலற்று ஒரே மாதிரித்தான் நிலவுகிறது. “காலையில் படுக்கையிலிருந்து எழுகிறார்; நிலத்துக்குப் போய் உடலாற வேலை செய்கிறார்; காலை உணவு உட்கொள்கிறார்; மீண்டும் வேலை, வேலைதான்; பிறகு மதிய உணவு.. மறுநாள், மறுநாளுக்கு மறுநாள், காலையில் படுக்கையிலிருந்து எழுகிறார்; நிலத்துக்குப் போய் உடலாற வேலை செய்கிறார்; காலை உணவு உட்கொள்கிறார்; மீண்டும் வேலை, வேலைதான்; பிறகு மதிய உணவு.. இப்படியே ஒரே தன்மை வாய்ந்த சுழற்சி அந்த விவசாயியை அலுப்படையச் செய்ய வேண்டுமல்லவா? இல்லை.. இல்லவே இல்லை. அவர் அந்த சுழற்சிக்கு இயற்கையைப் போலவே தானும் பழகியிருக்கிறார். யுகாரீஸ்த், இந்த சுழற்சி எனும் ‘ரிதம்’மை வெகு இயல்பாகவும் தப்பிக்க முடியாத விதியில் அவருக்கு என்று உள்ள பகுதியாகவும் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், விதி அவருக்கு நல்லனவே இயற்றுகின்றது. தன் பேரவாக்களை முதலில் அவர் அடைந்து இன்புறச் செய்கின்றது. `காரீஸ்த் முவாஸான் போல அதிருஷ்டசாலி’ என்ற தொடர் அந்த மாவட்டத்தில் புழக்கத்துக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


இந்தப் புதினத்தில் வரும் முதல் இரண்டு பருவ காலங்கள், இளவேனில் மற்றும் முதுவேனில் என்பவை, அவருடைய இளமைக் காலம் மற்றும் முதிர் இளைஞனான காலகட்டம் ஆகியவற்றை முறையே பிரதிபலிக்கின்றன. முன்னேற்றமும் வெற்றியும் அந்தப் பருவங்களில் அவரை வந்து தழுவிக் கொள்கின்றன; நவீன மனிதனாகிய யுகாரீஸ்த் முவாஸான் என்ற அடையாளத்தின்கீழ், இளவேனில் முதுவேனிலை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.


பிறகுதான் கதை துன்பியலை நோக்கித் திரும்புகிறது. புதினத்தின் குறியீட்டு ரீதியிலான இலையுதிர்காலத்தில் ‘அதிருஷ்டக்கார `காரீஸ்த்’தின் பெருமித உலகம் மெதுமெதுவாக நொறுங்குகிறது. துரதிர்ஷ்டம் என்றெல்லாம் இதற்கு நாம் அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டியதில்லை. யுகாரீஸ்த் தன் முன்னெடுப்புக்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புறந்தள்ளி, பின்னடைவுகளாக மாற்றிக் கொள்ளத் தொடங்குகிறார். அவ்வளவே. இதுவரை அழுத்தப்பட்டிருந்த யுகாரீஸ்த்’தின் இரண்டாவது ‘தான்’ - அதாவது அவர்தம் ஆன்மா உணர்வுற்றெழுகிறது. ஒருகாலத்தில் எஃபிரெம் மாமாவை அடுத்து ஆகிருதியுடன் எழுந்து மண்மோகத்தில் திளைத்து மரபை ஒதுக்கி முன்னேற்றத்தை மட்டுமே வரித்துக் கொண்டு, ஒழுக்கவிதிகளையெல்லாம் அலட்சியம் செய்து, ஒரு பொருளாதார மனிதனாய் விசுவரூபமெடுத்தவர் -- இப்பொழுது, புதினத்தின் இலையுதிர்காலத்தில் மரபின் பக்கம் சாய்ந்து முன்னேற்றத்தையே புறந்தள்ளி விடுகிறார்.. முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல - தன் மகன் எஃபிரெமுக்கும் எதிர்ப்பாகிறார். ஆம். தன் பழைய ரத்தம், தன் பழைய சதை, தன் பழைய இறுமாப்பு எல்லாவற்றுக்கும் தானே எதிர்ப்பாகி விடுகிறார் யுகாரீஸ்த். அதற்குத் தக்கவாறு, புறச்சூழல்களும் வரிந்து ஒடித்துக்கொண்டு காலவளைவில் திரும்புகிறன. அமெரிக்க உரிமங்களுடனான கார்கள் புழுதி எழுப்பிக் கொண்டு யுகாரீஸ்த்தின் கிராமத்துக்குள் சீறிப்பாய்கின்றன. யுகாரீஸ்த்தின் இளைய பரம்பரையான எஃபிரெம் முதலானவர்களுக்கு அவை இலேசையும் சொகுசையும் குறியாளப்படுத்துகின்றன. ஆனால், யுகாரீஸ்த் போன்ற பழைய தலைமுறையினர் அச்சத்துடனும் கடும் வெறுப்புடனும் அந்த மாற்றத்தை நோக்கினார்கள். ஓ! அந்த நகர்ப்புறமல்லாத மரபுகளின்வழி வந்த சிக்கனம், கடின உழைப்பு, அதிகாரத்துக்கு மரியாதை.. எல்லாமே பாழாகப் போகின்றன. யுகாரீஸ்த்தின் சித்தமோ ஊமை அழுகை அழத் தொடங்கியது. ஓ! பழைய கடவுள்களெல்லாரும் தம் ஆற்றலைத் திடுமென்று இழந்துவிட்டனரே? இது என்ன விந்தை? இளைய எஃபிரெம், டிராக்டர் ஒன்று வாங்குவது என்று தீர்மானித்துவிட்டான். அதற்கு யுகாரீஸ்த்தின் மறுமொழி ‘வேண்டாம்!’; “ஒரு காராவது?”.. அதற்கும் யுகாரீஸ்த்தின் பதில் ‘வேண்டாம்!”.. விளைவு..மோசமானது.. யுகாரீஸ்த்தின் அதுநாள்வரையிலான வாழ்க்கையில் நிகழமுடியாதது நிகழ்கிறது. எஃபிரெம், கிளர்ந்து எழுகிறான்; தந்தையை எதிர்க்கிறான்; மரபான மண்ணை எதிர்க்கிறான்; ஏன்,பாதிரியைக்கூட எதிர்க்கிறான். அப்படி அவர் என்ன சொல்லி விட்டார்? “எஃபிரெம்! நீ நம் மண்ணைச் சீரழிக்க முற்படுவாயானால், நரகம் தன் வாசலை நிச்சயமாக உனக்குத் திறந்தே தீரும்!” என்றுதான் சொன்னார். சொல்லலாமா? இளைய தலைமுறை என்ன வெங்காயமா? இளித்தவாயனா எஃபிரெம்? அவனுக்கு எல்லாம் தெரியும்.. அப்பனுக்குத் தெரியாததெல்லாம் தெரியும்; பாதிரிக்குத் தெரியாததெல்லாமும் கூடத் தெரியும்.


யுகாரீஸ்த் தன் எல்லா அதிகாரங்களையும் இழக்கிறார். அப்படி அவர் அவற்றை இழந்தது கூட அவருக்குக்குத் தெரியாது போவதுதான் அவர் வாழ்வின் மகத்தான சோகம். அண்டை நிலத்தவரான ஃபிதிம் ரேமோவின் மேல் முட்டாள்தனமாக வழக்குப் போட்டு தன் மூக்கைத் தானே உடைத்துக் கொள்கிறார். தான் இழந்து போனதை அறியாத பழைய தோரணை, தன்னை ஆகக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி விட்டதை அவர் உணர நேரும் பொழுது கிராமத்தில் அவருக்கு எஞ்சி இருந்த எச்சசொச்ச மரியாதையும் அகன்று போய்விடுகிறது. “ஃபிதிம் ரேமோவைப் பாரப்பா! என்ன தகுதியுள்ளவராகவுள்ளார்! எந்த வம்புக்கும் வராத அவரையே கோர்ட்டுக்கு இழுக்கிறான் இந்த யுகாரீஸ்த் என்றால் என்ன கொழுப்பு, பாருங்கள்! மனுஷனுக்கு மூளையும் கெட்டுப் போய்விட்டது.. அவனிடம் இனிமேல் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது..!” என்று அண்டை அயல் திருவாய் மொழியத் தொடங்கிற்று. மரபு ரீதியான வீழ்ச்சி அதைவிட வேறென்ன இருக்கப் போகிறது யுகாரீஸ்த்துக்கு..?


அத்தோடு போயிற்றா? இல்லை. பாங்க் நேசியோனால் என்ற வைப்பகம் தன் கிளையை யுகாரீஸ்த்’தின் கிராமத்தில் தொடங்கியது. யுகாரீஸ்த் என்ன செய்திருக்க வேண்டும்? தன் எஞ்சிய சேமிப்புக்களை அதில்தானே போட்டிருக்க வேண்டும்? ஆனால் எல்லாவற்றிலும் சறுக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்த யுகாரீஸ்த்’தின் புத்தி வேறு விதமாகவே கணக்குப் போட்டது. நவீன வைப்பகத்தில் எதற்காகத் தன் சேமிப்புக்களைப் போட வேண்டும்? நாம் நம் ஊரில் ஒரு புள்ளி அல்லவா? அந்தத் தோரணையை எப்படிக் காண்பிப்பது என்று யோசித்தார். அந்த அவரது பலவீனத்தை நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருந்த ஓர் இளம் நோட்டரி அவரிடம் வந்து நைச்சியமாகப் பேசவே, அவனிடம் தன் எஞ்சியதும் வாணாள் முழுதும் சேமித்ததுமான சேமிப்புக்களையெல்லாம் ஒப்படைத்தார். அவனும் ஒருநாள் அவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டு எங்கோ தலைமறைவாக ஓடியே போனான். அத்துடன் யுகாரீஸ்த்’தின் இளமை, பெருமிதம், ஆற்றல் எல்லாமும் போயே போயின.


இந்தப் புதினம் இதன் கடைசிப் பருவமான பனிக்காலத்தை நோக்கி நகரும்பொழுது, முன்னேற்றத்தின் உந்துசக்திகள் எல்லாம் யுகாரீஸ்த்தை அப்பால் நகர்த்தின. புத்திசாலித்தனம் என்று நம்பி, யுகாரீஸ்த் தன் மூன்றாவது மகனான எஃபிரெமைச் சந்தித்து அவனுடன் வாழ ஸ்டேட்ஸுக்குக் கிளம்பினார். அவன் அங்கே மசாஸுஸெட்ஸில் வெற்றிகரமாகக் குடியேறியிருந்தான். எத்தியேன் நன்றாக யோசித்து யுகாரீஸ்த்’துக்கு ஒருவழிப் பயணச் சீட்டையே தந்தார். ஓர் இரவு தாண்டியதும், தனக்கு வித்தியாசமானதும் வினோதமானதுமானதோர் உலகத்துக்கு யுகாரீஸ்த் போய்ச் சேர்ந்தார். மசாஸுஸெட்ஸில் மக்கள் பேசிய மொழியை யுகாரீஸ்த்’தால் விளங்கிக் கொள்ள இயலவில்லை; அதைப் பேசவும் முடியவில்லை.


விளைவு, முப்பது ஏக்கர்களுக்குச் சொந்தக்காரரும் பன்னிரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையுமான யுகாரீஸ்த் முவாஸான் இருந்திருந்தாற்போல ஒன்றுமில்லாதவராய்ப் போனார். வெறும் உடைப்பெடுத்த - தேய்ந்துபோன கிழட்டு மனிதராகிப் போனார். தன் மருமகளாலேயே வெறுத்து ஒதுக்கவும் பட்டார். சொல்லொணா அதிர்ச்சி அவரை நிலைகுலைய வைத்தது. இறுதியில், நவீன மனிதனின் கோயிலாகத் திகழ்கின்ற கராஜ்[garage] ஒன்றில், இரவுநேரக் காவலாளி ஆனார். அமைதியாகவும், முழுதும் தனிமையாகவும் அவ்வப்பொழுது அமர்ந்து, தான் இழந்த முப்பது ஏக்கர்களைக் கனவு காணுகிறார். வரப்போகும் மரணத்துக்காக ஒவ்வொரு கணமும் விழைவுடன் காத்துக் கொண்டிருக்கிறார்...


சராசரி மனிதனின் சொந்த ஆன்மாவை அவன் மட்டிலுமாக அல்லாமல், வாசிப்பவர்கள் அனைவரையும் தேடவைக்கிற இந்த ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற பிரஞ்சுக் கனடிய கலை இலக்கியப் புதினத்தைப் படைத்த ரேங்கே அவர்களின் இயற்பெயர் ஃபிலிப் பானதோ(ன்)[Philippe Panneton]. 1895இல் கெபேக்கில், த்ருவா ரிவியர் என்ற பெயருடைய மாநிலத்தில் பிறந்தார். லவால் பல்கலைக் கழகத்திலும் மோ(ன்)ரெயால் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். தன் கல்லூரிப் பருவத்தில், நிகாக்[Nigog] என்ற இளம் பிரஞ்சுக் கனடிய அறிவுஜீவிகளின் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டார். 1920இல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு, பாரீஸில் முதுகலைப் பணித்திட்டம் தொடர்பாகச் சில ஆண்டுகளைச் செலவழித்தார். மீண்டும் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்துக்குத் திரும்பி மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிரஞ்சுக் கனடிய அகாதெமியின் நிறுவனர்களுள் ஒருவராகவும் அதன் தலைவராகச் சில ஆண்டுகளும் இருந்தார். 1956இல் போர்ச்சுகலுக்கு கனடியத் தூதராக நியமிக்கப் பெற்றார். உள்ளபடியே இவருக்குப் பெயரும் புகழும் ஏற்படக் காரணமாக இருந்த ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இப் புதினத்தின் மூலத்தலைப்பு, ‘Trente Arpents’ என்பதேயாகும். இதுதான் பாரீசில் 1938இல் இதன் முதற்பதிப்பாக வெளியானது. 1939ஆம் ஆண்டின் ‘Grand Prix’ முதலான பரிசுகள் பலவற்றை இப்புதினம் வென்றது. மேலும் இப்புதினம் ஜெர்மனி, டச்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கங்களும் பெற்றது.


****







Thanks: thinnai.com 

22.9.11

குரவ மலர்



நன்றி: முனைவர் சு.ஆ.வெ.நாயகரின் பிரஞ்சுக் குறுந்தொகை மொழிபெயர்ப்பு - இணைப்புகள்

18.9.11

இப்படியா நீங்களும் செய்கிறீர்கள் கவிஞர்களே?

"என் கவிதை இணையதளத்தில் வந்திருக்கிறது, விகடனில் வந்திருக்கிறது என்று தெரிந்த முகங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிப் பாராட்டு மழையில் நனைவதற்குக் கவிதை துணைசெய்துகொண்டிருக்கலாம். படாதபாடுபட்டுப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கவிதையைச் சேர்த்துவிட்டோம்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பார்கள் என்கிற மனோலகரியில் மயங்கிக் கிடக்கப் பயன்படலாம். ஆங்கிலத்தில்[+ பிரெஞ்சில்?] மொழிபெயர்த்து லண்டனிலோ நியூயார்க்கிலோ வெளியிட்டு அங்குள்ள அமைப்புகள் வழங்கும் பரிசுகளைத் தட்டிப் பறித்து வந்து உள்ளூர் பத்திரிக்கைகள் அனைத்திலும் ஒன்றுவிடாமல் வெளியிட ஏற்பாடு செய்து மகிழ்ச்சியில் மிதக்கப் பயன்படலாம். கவிதைக்குப் புறம்பான இத்தனை நடவடிக்கைகளுக்கு நடுவிலும் கவிதை இன்னும் தமிழில் பன்முகப்பட்ட வகைகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது." - 'எதிர்காலத் தமிழ்க்கவிதை - சில குறிப்புகள்' - பஞ்சு

மேலும் வாசிக்க: 'சூரியோதயம்,'ஆசிரியர்: ஆர்.மணவாளன்(Publisher,Editor-Designer),144 மகாலட்சுமி இல்லம்,பாக்கமுடையான்பட்டு மெயின்ரோடு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008.

மின்னஞ்சல்: sooryodayamtamil@yahoo.com

தொ.பே.: 0413 2252050
செல்.: 9944541993

குறிப்பு: இதே இதழில் திண்ணை.காம் வலையேட்டில் வெளிவந்த என்னுடைய கட்டுரையும் மறுவெளியீடாகியுள்ளது.

Indian's Prayer

Prayer

Oh God,

give us strength & capacity to pay -

Income Tax
VAT
CST
Service Tax
ED
Octroi
TDS
ESI
FBT
Property Tax
Stamp Duty
CGT
Water Tax
Prof Tax
Road Tax
Education Cess Congestion levy
Bribes
Alms
Donations
EMIs
Loans
OD Interest
PPF
PF
NSC
Wheel tax
Toll
Life insurance
Mediclaim
Maintenance
Petrol
Conveyance
Groceries
Salaries
demands of spouse
vacation of children

and

If there's some money left,

please let me have 1 cup of tea in PEACE!

-sms fwd from Thiru H.Natarajan, C.A., Coimbatore.

24.8.11


தங்கப்பா ஐயாவின் 'சோளக்கொல்லைப் பொம்மை' நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்வுற்றேன். அதுதொடர்பாக, திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வேண்டிய திரு இளவரசு என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தங்கப்பா அவர்களை, நான் இணையமுலாவு நடுவத்துக்கு அழைத்துச் சென்று, என் மின்னஞ்சல் வழி அவர் படத்தை அனுப்பி வைத்தபொழுது, நாற்பத்திரண்டு காலமாக அவருடன் கொண்ட நட்பின் புதிய பருமானமாக அவர்தம் எளிமையும் இயல்பான அணுகுமுறையும் மென்மேலும் கூர்மைபெற்று ஒளிர்வதை உணர்ந்தேன்.(ஒளிப்படம்: புதுவை இளவேனில்)

அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள்
பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற
அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது.
*
தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி
யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி
திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான்
ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு,
அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன்.
அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது.
அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது.
இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது
நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள்.
*
அன்புடன்
பாவண்ணன்

அன்பான பாவண்ணன்,
வணக்கம். தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
இதன்வழி என் நண்பர்களுக்கும் உங்கள் கருத்தை முன்வைக்கிறேன்.

22.8.11




பின்வரும் இடுகையிலுள்ள கல்வராயன்மலை, புள்ளுவக்குடியில் பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவியர் கட்டியுள்ள பள்ளியின் இயற்கையான சூழல். இதன் திறப்புவிழாவில் எம்மைத் தலைமையேற்கச் செய்த(பிரான்சு நார்மண்டிப் பள்ளி)தலைமாணவியர் செல்வி நதியாவுக்கும்;'SOLEIL INDIEN'பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அவர்களுக்கும் நனிநன்றியேம்.



கல்வராயன்மலை, 'புளுவபாடி' என்றழைக்கப்படும் புள்ளுவக்குடியில் சென்ற 18ஆம் நாளன்று(18/08/2011)பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவ - மாணவியர் தம் பணித்திட்டத்தின்கீழ்க் கட்டிய மலைமக்களின் சிறார்க்கான் பள்ளியின் திறப்பு விழாவில் நானும் என் துணைவியார் கலாவதியும்(முகநூல்:Calavady Batmanabin)தலைமைப் பொறுப்பேற்றோம். பிரான்சு திராசுபூர் திரு வே.துக்காராம், வண்ணத் துணிப்பட்டியை வெட்டித் திறந்து வைத்தார். 'SOLEIL INDIEN' பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.நார்மண்டிப் பள்ளி மாணவ மாணவியரின் அன்பும் அவர்களை மேற்பார்வை செய்திருந்த தோழியர் செல்வி நதியா துக்காராமின் தோழமையும் எம்மைத் திகைக்க வைத்தன. மேலாக, நவீனா துக்காராம்(திராசுபூர், பிரான்சு), உமேஷ் (சென்னை)அவர்களும் எம்மை அங்கு எல்லா ஏற்பாடுகளுக்கும் உட்படுத்தி அன்புடன் உடனிருந்தனர்.
[சுவரில் பதிக்கப்பெற்றுள்ளவை - பள்ளியைக் கட்டி முடித்த பிரெஞ்சு மாணவ மாணவியரின் கைப்பதிவுகள்]

28.6.11

அந்த மூன்று குரங்குகள்!

புதுச்சேரியில், மாசிமகத் திருவிழாவின்பொழுது, சாலையோரம் விற்பதற்காகப் பரப்பியிருந்த மண்பொம்மைகளில் 'மூன்று குரங்குகள்' பொம்மை, எங்கள் பெயர்த்தியின் கவனத்தைக் கவர்ந்தது. வாங்கியபின், வீட்டுக்குப் போனதும் இயல்பாக(குழந்தைகளின் இயல்பாக)மூன்று குரங்குகள் எதற்கு ஏன் என்று காரணம் கேட்டாள்.

காந்தியடிகளுக்குப் பிடித்த உருவம் என்று இந்த பொம்மையைச் சொல்வார்கள். "தீயதைப் பார்க்காதே! தீயதைக் கேட்காதே! தீயதைப் பேசாதே!" என்பவற்றை உணர்த்தவே குரங்கொன்று தன் கண்களையும்; மற்றது செவிகளையும்; மூன்றாவது வாயையும் பொத்திக் கொண்டிருப்பதாக விளக்குவார்கள்.

மெய்யாக எப்படி இந்தப் படிமம் தோன்றியது?

ஜப்பான் நாட்டின் நிக்கோ[ர்] நகரத்தில் உள்ளது கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதொரு புத்த விகாரை.'டோஷோ' என்பது அவ்விகாரையின் பெயர். அதில் இந்த உருவம் பழமையானதோர் ஓவியமாக உள்ளது. இதாரி ஜிஸ்கோ என்ற ஓவியர் தன் இடது கையால் தீட்டிய சித்திரம் அது. ஜப்பான் மொழியில் இதாரி என்றால் இடதுகைப் பழக்கமுள்ள ஆள் என்று பொருள். ஜிஸ்கோ என்ற அந்த ஓவியரின் இடக்கைப் பழக்கமே அவர் பெயருக்கு அடைமொழி ஆனது. இங்குள்ள பொருளற்ற - பொருத்தமற்ற விருதுப் பெயர்களைப் போன்றதன்று 'இதாரி.'

சரி.. அந்த மூன்று குரங்குகள்?

மூன்று குரங்குகள் படிமத்தை நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சொல்வார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குரிய சீன நன்னெறியின் விளக்கம் அது என்றும் சொல்வார்கள். தமிழ் நன்னெறி நூலான 'வாக்குண்டாம்' சொல்லாததா இது?

ஒன்றன் பெயர் மீசா[ஜா]ரு. மற்றதன் பெயர் இவாசா[ஜா]ரு. மூன்றாவதன் பெயர் சிக்சா[ஜா]ரு.(மிஜாரு, இஜாரு, கிஜாரு என்று மக்கள் மொழியில் சொல்வார்களாம்)

மீசா[ஜா]ரு என்பதற்கே குரங்குகள் மூன்று என்ற பொருள் ஜப்பான் மொழியில் உண்டாம்.

இந்தச் சேதியை, நான் பணிக்கு வந்து இரண்டாண்டுகள் கழிந்தபின், பணிபுரிந்த தாகூர் கல்லூரியில் இடண்டாமாண்டு கணிதவியல் படித்த திரு த. மணிகண்டன் வழி தெரிந்து கொண்டேன். 31.1.1971 நாளிட்ட 'கல்கி' இதழில் வயணம் வந்திருந்தது.

அப்பொழுதெல்லாம் குமுதம் இதழ் கூட ஒழுக்கத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது.

2.6.11


கருவிளை

Central Institute of Classical Tamil,Chennai has offered a short term project and appointed Dr.S.A.Vengada Soupraya Nayagar as coordinator: Translation of Kurunthogai into French. 2009-2010

16.5.11



என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்கள் செம்மொழித் திட்டத்தின்கீழ் ஆற்றியதும் உண்மையான உழைப்புடன் கூடிய அரிய முயற்சியால் ஆனதுமான சங்க இலக்கியமான குறுந்தொகையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று உரியவர்களிடம் ஏடு ஒப்படைக்கப் பெற்றுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை விடவும் ஆகப் பெரியதாய் உள்ள அந்தப் பிரெஞ்சு ஆக்கத்துடன் ஆங்கில எழுத்துகளாலான பாடல் ஒலிப்பும், குறுந்தொகைக் காலத்து மலர்களின் வண்ணப்படங்களும் இணைக்கப்பெற்றிருப்பது மிகப்பெரும் சிறப்பு. நண்பரின் உழைப்பை உணர்ந்து போற்றுகிறேன்.


தி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே 1, உழைப்பாளர் பெருநாள்)அன்று , புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில், நம் அன்புக்குரிய தமிழநம்பி ஐயா அவர்கள் பாவாணர் மடல்கள் குறித்து ஓர் அருமையான பொழிவை நிகழ்த்தினார்.

அதன் விரிவை நூலாக நண்பர் சீனு அரிமாப் பாண்டியன் ஐயா வெளியிடவுள்ளதாக அறிந்தேன். அப்பொழிவின் எழுத்துப்படியைத் தன் வலைப்பதிவில் பதிவிடுமாறு தமிழநம்பி ஐயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க இணைப்பு இதோ:

http://thamizhanambi.blogspot.com

14.4.11

ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி
• தேவமைந்தன்

'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு வகைகளில் அதிர்ச்சியளித்தது. இதில் பாரதியாரின் படைப்பியல் நேர்மை குறித்து எழுப்பப் பட்டுள்ள ஐயத்துக்குப் பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பது இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை எனக்குத் தெரியவில்லை.
இந்த ஐயத்தை எழுப்பியிருப்பவர் மகாகவி பாரதியார் மேல் காழ்ப்புணர்வு கொண்டவரல்லர். பாரதியாரின் படைப்புகளையும் பாரதி ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திறம்படக் கற்றவர். ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகளைக் கண்டிப்பான மதிப்பீட்டுக்கு உள்ளாக்குபவர். நேர்மையான புறநிலைத் தேர்வாளர் என்றும் பெயரெடுத்தவர். மறைந்த ஞானபீட விருதாளரும் புகழ்மிக்க எழுத்தாளருமான அகிலனைக் குறித்து முதன்முதலாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் வளர்த்த வைணவம் பற்றியும் அரையர் சேவை குறித்தும் முறையான ஆய்வு நிகழ்த்தி நூல்கள் வெளியிட்டவர். பழுத்த பணி - ஆய்வு அனுபவம் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தில் இக்கால இலக்கியத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளவர்.
பாரதியின் படைப்பியல் நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள வினாவை அப்படியே இங்கு திண்ணை குழாம் முன் வைக்கிறேன்.
"மகாகவி பாரதியார் கவிதைகளிலோ, உரைநடையிலோ ஆவுடையக்காளைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே அந்த வினா. ஒளவையார், சகோதரி நிவேதிதை ஆகிய பெண்களைக் கொண்டாடும் பாரதி.. எங்கோ, ஜப்பானில் ஹைக்கூ கவிதை எழுதிய கவிஞர் பெயர்களை எல்லாம் விதந்து கூறும் மகாகவி தம் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு அருகேயுள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவரும் தமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான ஆவுடையக்காள் பற்றி எந்தக் குறிப்பையும் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற வினா விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதில் விதவையாகி, ஊரின் ஏச்சையும் பேச்சையும் சாதிப்புறக்கணிப்பையும்(அந்நாளில் ஆவுடையக்காள் அந்தணர்களால்சாதிப்பிரஷ்டம்சாதிநீக்கம்செய்யப்பட்டவர்)தாண்டி,ஆத்மானுபவத்தில் தான் வளர்ந்ததோடு மற்ற பெண்களுக்கும் உபதேசம் பயிற்சி தந்து, நிஜமான பெண் விடுதலையைச் செய்துகாட்டிய செயல் வீரர் அக்காள். பெண் விடுதலை பேசும் பாரதியார், ஆவுடையக்காள் பற்றி எதுவும் கூறாமல் போனது தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட இருட்டடிப்பா? அக்காள் பெண் கவிஞர் என்பதுதான் இதற்கான காரணமா? என்னதான் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாடினாலும், பாரதி ஆண் என்பதால், ஆவுடையக்காளைப் பற்றிக் கூறவில்லை என்பது எஞ்சி நிற்கும் விடை. கோமதி ராஜாங்கம் அம்மையார் இத்தகவல்களைத் தராவிட்டால் தமிழ் உலகிற்கு இந்த அகச்சான்றுகள் தெரியாமலே போய் இருக்கும். (பக்.97-98)"
கோமதி ராஜாங்கம் என்பவர் (சங்கரக்ருபா - 1964 நவம்பர் -டிசம்பர்)எழுதிய ஆவுடையக்காள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்காள் குறித்த விவரங்களைச் சு.வே. தந்துள்ளார். திருமதி கோமதி ராஜாங்கம், பல ஆண்டுகளாக நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் பல ஊர்களில் (செங்கோட்டை, சுந்தர பாண்டியபுரம், சாம்பூர் வடகரை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்ப் பள்ளம், நாகர்கோயில் வடிவீச்சுரம்) களஆய்வு செய்து அக்காளின் பாடல்களையும் வாழ்க்கைக்குறிப்புகளையும் தேன் கூட்டும் தேனீபோலத் திரட்டியுள்ளார். ஆவுடையக்காளின் கவிப்புலமையை மிகவும் அனுபவித்து ஒளவையாருடன் அவரை ஒப்பிட்டுள்ளார். "நம் தமிழ் நாட்டுப் புலவர்களில் முன்னணியில் நிற்கும் ஸ்ரீஒளவைப் பாட்டிக்கு நிகரானவள் என்பதை மட்டும் துணிந்து கூறுவேன். இதுபோன்று எத்தனை மாணிக்கங்கள் நம்நாட்டுப் புனித மண்ணில் மறைந்து கிடக்கின்றனவோ? அவைகளை வெளிக்கொணர எத்தனை உ.வே.சாமிநாதஅய்யர்கள்அவதாரம்செய்யவேண்டுமோ?(ஆவுடையக்காள் பாடல் திரட்டு, நித்யானந்த கிரிசுவாமிகள் (ப.ஆ), ப.xx) கோமதிராஜாங்கம் அம்மையாரின் மேற்கண்ட வினா, தமிழ் ஆய்விற்கு விடப்படும் சவால். ஆனால், அவை பொன்னெழுத்துக்களால் வடித்தெடுக்கப்படத்தக்கவை என்றும் சு.வே. கருதுகிறார்.(ப.96) இனி அடுத்து வரும் பகுதியை சு.வே. அவர்கள் நடையில் தருவதுதான் அவர் கேட்டுள்ள கேள்விக்கு உதவும் என்பதால் அப்படியே தருகிறேன்.
"திருமதி கோமதி ராஜாங்கம் நெல்லை மாவட்டம் கடையத்தில் பிறந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்க்கைப்பட்டவர். கோமதியின் தாயார் சீதாலட்சுமி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி. பாரதியார் ஆவுடையக்காள் பாடல்களை நன்கு கேட்டுக் கேட்டு அவைகளில் நெஞ்சம் பறிகொடுத்த பாவியாவார். ஆவுடையக்காளிடமிருந்து அவர் (பாரதி) நிறையவே தாக்கம் பெற்றிருக்கிறார். வேதாந்தக் கருத்தாக்கம் மட்டுமல்லாமல், சொற்கள், பெண்ணுரிமைச் சிந்தனை என்று பல நிலகளில் மகாகவி பாரதியாருக்கு ஆவுடையக்காளே முன்னோடி. அக்காளின் பாடல்களை முதன் முதலாகப் படிப்பவருக்கு இது புலப்படும். இதனைக் கோமதி ராஜாங்கம் அம்மையார் கூறும் அகச்சான்று புலப்படுத்தும்; உறுதிசெய்யும். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாருக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீஅக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் (பாரதியாரும்) அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் (பாரதியார்) எனது தாயார் அவர்களுக்குச் சகோதரியின் கணவராகையால், (என்) சிறுவயதில் அவர் (பாரதியார்) மூலமாகவும் சில தகவல்களை அறியும் (அக்காள் பற்றிய தகவல்கள்) பாக்கியம் கிடைத்தது (ஆவுடையக்காள் பாடல் திரட்டு, பக். xix,xx). [அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை சு.வே. அவர்களால் விளக்கத்திற்காகத் தரப்பட்டவை. தடித்த எழுத்துகள் இக்கட்டுரையாசிரியனால் இடப்பட்டவை.]
ஆவுடையக்காள் குறித்துச் சுருக்கமாகக் காண்போம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர் அக்காள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. அந்நாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்தது செங்கோட்டை. அக்காள், சிறுவயதிலேயே வயதுக்கு வருமுன்பே மணமாகிச் சில காலத்திலேயே கணவனை இழந்து விதவையானவர். அப்பொழுது தன் அம்மாவும் உறவினர்களும் ஓவென்று அழுதபொழுது, அவர்களைப் பார்த்து அக்காள் கேட்டாராம்:- "அவர்கள் வீட்டில் பையன் இறந்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?"
ஊரார் எதிர்ப்பையும் மீறி அக்காளின் தாயார் தன் வீட்டிலேயே ஆவுடைக்குக் கல்வி கற்பித்தாள். பருவமெய்தியதும் குலவழக்கப்படி கட்டாயமாக விதவைக் கோலத்துக்கு ஆவுடையக்காள் உட்படுத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் காலத்திலே அவ்வூருக்கு வர வாய்த்த, தஞ்சை மாவட்டத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், அக்காளுக்கு ஆறுதல் கூறியதோடு மந்திரோபதேசமும் செய்து வைத்திருக்கிறார். ஊராரின் பேச்சும் கேலியும் குறித்துக் கவலைப்படாதே என்று அவர் உபதேசித்ததை அக்காள். தன் 'பண்டிதன் கவி' என்ற பாடலில் (ஆவுடை அக்காள் பாடல் திரட்டு, பா.23;ப.3) "துர்ஜனங்கள் வார்த்தையைச் செவியிலும் கேளாதே!" என்று குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதி நிலை கைவரப் பெற்றார். மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இசைப்பாடல்களாகவும்,நாட்டார்நாநவில்இலக்கியவகைப்பாடல்களாகவும் பாடியுள்ளார். ஓர் ஆடி அமாவாசையில் குற்றால மலை மீதேறிச் சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகச் சொல்லிப் போனவர் திரும்பவில்லை என்பதுடன் எவ்வளவு தேடியும் ஆவுடையக்காளின் சடலம் கூடக் கிடைக்கவில்லையாம்.
இனி, அக்காளின் வேதாந்தப் பாடல்களின் பகுதிகளைக் காண்போம். இவை பாடப்பெற்ற காலம் 17ஆம் நூற்றாண்டு என்பதை மனத்துள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் அவர் அருமை நமக்கு மிகவும் விளங்கும். இவை 'ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்'டிலிருந்து சு.வே. கொடுத்துள்ளவை:-
அத்வைத விளக்கம்
"எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி
மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!"
சாதிபேதமற்ற நிலை
"கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே!
குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!"
"மோகத்தைக் கொன்றுவிடு!" என்ற பாரதிக்கு மூலம்
"மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று"
பயனென்ன?
"காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய்
உன்னாசை போச்சோ மூடா.."
வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு
"தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு
தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு
சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு
ஏலேலோ ஏகாந்த ரஸம்!
ஏலேலோ வேதாந்த ரஸம்!"
குயில் கண்ணி
"மனமும் பொய்யடியோ குயிலே
மனக்கூடும் பொய்யடியோ!
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!"
தீட்டு எதிர்ப்பு
"எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள்
எச்சில் இலாத இடம்
இல்லை பராபரமே!"
"உலகத்துப் பிள்ளையும் உன்
கக்கத்துத் தீட்டன்றோ?
உன்னுடைய வெட்கத்தை யாரொடும்
சொல்வேன் பராபரமே!"
"தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?"
-இங்கே முனைவர் சு.வே., பாரதியை ஆவுடையக்காளுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாரதிக்கு நூற்றாண்டுகள் முந்திய அக்காள் முற்போக்காய் விளங்க, காலத்தால் பிற்பட்ட பாரதி பிற்போக்குடன் விளங்குவதை, "ஆவுடையக்காளின் பாடல்கள் மூலம் பெண்சம உரிமை, சரிநிகர் சமானம் என்ற கருத்தாக்கத்தைப் பெற்ற மகாகவிகூட, இந்தத் தீட்டு என்று பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. மாறாக, அதை ஆதரித்தே பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி,
".......மாதவிலக்காதலால் ஓராடை தன்னில் இருக்கிறேன்...."
...என்று கூறுகிறாள். ஆவுடையக்காள் இதில் உச்சநிலையில், ஆணாதிக்கக் கருத்தியலை எதிர்த்துக் குரல் எழுப்பியது அறியத்தக்கது" என்று எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழின் முதல் பெண்ணியப் பாவலர் என்று ஏன் ஆவுடையக்காளை(கி.பி. 17ஆம் நூற்றாண்டு) நாம் குறிக்கக் கூடாது? ஏன் அத்தகைய தன் முன்னோடியை பாரதியார் தன் படைப்புகளில் எங்கும் குறிப்பிட்டுப் பதிவு செய்யத் தவறினார்? என்ற கேள்விகளை நம் உள்ளத்துள் விதைத்துள்ளார் முனைவர் சு. வேங்கடராமன்.
பாரதி அன்பர்களுள் யாரேனும் இதற்கு விடை தர முன்வருவார்களா?
******
இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புத்தகம்:
அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு
மீனாட்சி புத்தக நிலையம்,
மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு,
மதுரை - 625 001. பக்கம்:148. விலை: ரூ.55.00
பேசி: அலுவலகம் - 0452 2345971. வீடு - 2560517.
மின்னஞ்சல்: meenakshiputhakam@hotmail.com

நன்றி: திண்ணை.காம்

24.3.11

பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்

"அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என் சிந்தனைகள் [கம்பளி சேகரிப்பதுபோல்] ஞாபகமறதியில் எங்கெங்கோ ஓடிவிடுகின்றன!"(My thoughts ran a wool-gathering. - CERVANTES --Don Quixote. 'கம்பளி சேகரிப்பதுபோல்' என்று ஒரு வசதிக்காக இடைப்பிறவரல் அடைப்பில் கொடுத்துள்ளேன். wool gathering என்பது மொழிமரபுப்படி absent-mindednessஐக் குறிக்கும்) செர்வாண்டெசின் புலப்பாடுபோல, படைப்பாளர்கள் பலர் தாங்கள் எதைச் சொல்ல வருகிறார்களோ அதில் நிலைக்காமல் எங்கெங்கோ சுற்றி விட்டு 'அடடா! எங்கோ போய் விட்டோமே.." என்று தன்னிரக்கம் கொண்டு, மீண்டும் தாங்கள் விட்ட புள்ளியிலிருந்து தொடர்வார்கள்.

பாரதியார் அப்படிப்பட்டவர் அல்லர். சொல்ல வந்த செய்தியைச் சுளைபோலக் கொடுப்பவர். 'வெட்டொன்று துண்டிரண்டாக'ச் சொல்பவர். பாரதியாரின் கட்டுரைகள் தொடக்கத்தில் நான்கு பகுதிகளாக வெளிவந்தன. பின்னர், 'பாரதி நூல்கள் என்று' தனித்தனியாக - பகுதிகள் பலவாகப் பதிப்பிக்கப் பெற்றன. பின்னர் சென்ற எழுபதுகளில்தாம் அவை முழுவதும் கொண்ட தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின.

களத்திலிருந்து பொறுக்குமணிகளாகச் சிலவற்றை முதலிலும், கதிர்களாகச் சிலவற்றைப் பின்னாலும் - அவற்றிலிருந்து, இங்கே தருகிறேன்.

****

ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி.
**
கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும், தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!
**
எதிலும், எப்போதும், யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது.
**
பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும்.
**
யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் கல்லை விட்டுப் போய் விடுவார்.
**
பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்டசித்திகள் எல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அநுபவத்திலே பார்.
**
எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.
**
தைரியமாக, நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள்.
**
சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணியத் தலங்களுமே ஜீவன் முக்திச் சின்னங்கள்.
**
இகலோக இன்பங்கள், பரலோக இன்பங்கள் இரண்டுமே இறைவனிடம் வேண்டலாம். இகலோகத்தில் நமக்குத் தெய்வம் தர வேண்டிய மூன்று சக்திகள்:
1. அறிவு
2. செல்வம்
3. தைரியம்
தெய்வம் எல்லாம் செய்யும்.
**
நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெலாம் கொடுக்கும்.
நம்பினார் கெடுவதில்லை - இது
நான்குமறைத் தீர்ப்பு.
**
மனிதனைக் கெடுக்கும் உட்பகை - நம்பிக்கைக் குறைவு.
**
தற்கால அசௌகரியங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும்.
**
நம்பு; கேள், ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்.
**
தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது.
**
திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறுபணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.
**
பசி வந்தால் கோபம் வருகிறது. பசி அடங்கினால் கோபம் அடங்குகிறது. அன்னதானமே உத்தம தர்மம்.
***
மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம்.அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்துபோகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.

'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக்கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி'' என்று பெயர் சொல்வதுண்டு.
**
கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி! தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, காக்கை, புழு, எறும்பு ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன்மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சந்தேகமே கிடையாது.
**
நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.

கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.
"கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று நம்பலாமா?

கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.
இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்' என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை --- எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள்.

ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக.

கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.

சிவன் நீ ; சக்தி உன் மனைவி .
விஷ்ணு நீ ; லக்ஷ்மி உன் மனைவி.
பிரம்மா நீ ; சரஸ்வதி உன் மனைவி .


இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.
இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்.

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.
**
இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள்.

இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.

**
இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை அலைகள் பாரதி எனும் கடலின் வாசிப்புக் கரையில் வந்து மோதுகின்றன. அவை, ஆழமிக்க நடுக்கடலுக்குச் சென்று பார்க்க உதவும் தூண்டுதல்கள் மட்டுமே.

****
நன்றி: திண்ணை.காம்

5.1.11



கனவு மெய்ப்பட வேண்டும்!
- முனைவர் பாவலர் க.தமிழமல்லன்

சாப்பாட்டுக் கனவன்று பாரதியார் பாட்டு!
சாதிசொல்லும் கனவன்று மீசைமுறுக்குப் பாட்டு!
நாப்பிறழ்ந்து துண்டுமாற்றி அடிவருடிச் செல்வர்,
நச்சுபுகழ் பாடுகின்ற தீப்பாட்டும் அன்றே!
தீப்பட்ட விடுதலையைக் கனவுகண்ட பாட்டு!
தீராத மடத்தனங்கள் தீர்த்துவிடும் பாட்டு!
காப்பாகத் தமிழுக்குக் கண்டகனாப் பாட்டு!
கற்றதமிழ் வெற்றிபெறக் கதறுகின்ற பாட்டு!

ஆங்கி லத்தில் தருங்கல்வி,
அடிமைக் கல்வி! அதுஇங்கு,
நீங்கக் கனவை அவன்கண்டான்!
நீண்ட சரக்காய் விற்குதடா!
தீங்காம் பேடிக் கல்வியைநாம்
தீர்க்கக் கனவு மெய்ப்படுக!
ஓங்கும் பிறநாட் டறிவியல்கள்
ஒளிர்க! தமிழாய் மெய்ப்படுக!

தெருவெல்லாம் தமிழ்முழக்கம் மிகச்செழிக்கச் செய்யும் -
தேன்கனவு கிழடாகிப் போனபின்னும் இங்கே,
இருந்ததமிழ் ஒழிந்ததுதான் கிடைத்தமிச்சம்! ஐயோ!
இந்தியிலே விளம்பரங்கள், இங்கிலீசில் பேர்கள்,
உருப்பெருத்துக் காணுதடா தமிழ்க்கடையில் இன்றே!
உயிர்த்தமிழே ஆட்சிசெய்ய எத்தனைப்போர் வேண்டும்?
பெரும்பெயர்தான் புதுச்சேரி, அதைவாழ வைக்கும்
பெருங்கனவு மெய்ப்படுநாள் இனிவருமா சொல்வீர்!

(வெல்லும் தூயதமிழ், 2041, சிலை, 2011, சனவரி. ப.2.)

28.12.10

Kichenamourty's Tamil to French latest Translation

Photo: R. Singaravelou
Professor Dr. Kichenamurty is well-known for his Tamil to French translations. He is former Head of the Department of French, Pondicherry University. He was awarded the French Government's Honour of Chevalier in 2005.
His most recent venture is the French translation of the first Tamil novel of Arvind Appadurai, 'Thiru-Chithra-Sadhir.' This was released by Palam Publications at Pudhuvai Thamizh Sangam on 26th December 2010.
In his speech, he highlighted
'Ecole Supérieure d'interprêtes et de traducteurs (ESIT)' view on translation according to which the translation process consists of three stages:
1. Comprehension(Compréhension)
2. Deverbalization(Déverbalisation)
3. Reexpression(Réexpression).
This is to underline the idea that the translator is not always bound to stick to the word-to-word translation.
********
available at:
Paalam Publications Private Ltd.
9, Solai Nagar St.,
Muthiyalpet,
Puducherry 6050003
mobile: 9943793686

21.12.10

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! - தமிழநம்பி


இந்த வலைப்பதிவில் தமிழநம்பி ஐயா [ < ஒளிப்படம்] அவர்களின் "கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! " என்னும் புதிய கட்டுரையைப் 'படி ஒட்டு' முறையில் 'பிளாக்கர்' புதிய அஞ்சல் ஏற்காததால், இடுகை முழுமை பெறாமற் போனது. ஆகவே அருள்கனிந்து நண்பர்கள் இக்கட்டுரையை http://kalapathy.blogspot.com/ வலைப்பதிவில் வாசித்துக் கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்
மேலும் வயணங்களுக்கும் செயற்பாட்டு வேண்டுகோள் மடலுக்கும் பார்க்க: