Showing posts with label Tamil Manam. Show all posts
Showing posts with label Tamil Manam. Show all posts

21.9.12

தமிழ் மானம் காப்பீர்! -தங்கப்பா


தமிழ் மானம் காப்பீர்!

-தங்கப்பா


குள்ள மனத் தில்லியர் நம் குடி கெடுத்தார்.

கொலை வெறியர் சிங்களர் நம் இனம் அழித்தார்.

கள்ளமிலா மீனவரைச் சாகடித்தார்.

கண்மூடிக் கிடக்குதடா தில்லிக்கும்பல்.

முள்வேலிக் குள்கொடுமை நிகழ்த்துகின்றார்;

மூத்தகுடி வாழ்நிலத்தைப் பறித்துக் கொள்வார்.

உள்ளுக்குள் குமைகின்றோம்; குமுறுகின்றோம்

உலகறிய நம் எதிர்ப்பை விடுத்தோமில்லை.



நம் குரல்கள் நமக்குள்ளே அடங்கல் நன்றோ?

நம் எதிர்ப்பிங்கு ஒன்றுமிலை என்றே அன்றோ

சிங்களனுக் கிந்நாட்டில் படைப்பயிற்சி

சிரித்துக் கொண் டளிக்கின்றான் தில்லிக்காரன்.

பொங்கி எழுந் திதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும்.

புரிந்திடுமா தமிழரசு? நடித்தல் செய்யும்.

இங்கிருக்கும் பலகட்சித் தலைவரே நீர்

எழுந்திடுவீர்; வெகுண்டு தமிழ் மானம் காப்பீர்.


(பேரா. ம.இலெ.தங்கப்பா,

ஆசிரியர், ‘தெளிதமிழ்’ திங்கள் இதழ்,

7, 11ஆம் குறுக்குத் தெரு, அவ்வை நகர்,

புதுச்சேரி - 605008. இந்தியா.

தொ.பே.எண்: 0413 - 2252843)


ஒளிப்படத்துக்கு நன்றி: காலச்சுவடு.காம்