26.2.07

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் வித்தியாசமான நூல்!

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் முத்துக்குளித்தல்
- தேவமைந்தன்

உலகச் சிந்தனையாளர்களின் அறிவுக் கோட்பாட்டை(epistemology)த் தமிழில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதனால் தமிழக அரசின் முதற்பரிசை 1987ஆம் ஆண்டில் பெற்றவர் டாக்டர் க.நாராயணன். அதற்குப் பின் ஆய்வியல், சித்தர் மெய்ப்பொருள், மேலைநாட்டு மெய்ப்பொருள், அரசியல் சிற்பிகள், சிவவாக்கியர், பட்டினத்தார் ஆகியவற்றைக் குறித்து நூல்களைப் படைத்தபின் சிக்மண்ட் பிராய்டு குறித்த தன் பத்தாண்டுத் தேடலை முன்வைத்து, ஓராண்டு எடுத்துக்கொண்டு நாராயணன் எழுதி வெளியிட்டுள்ள புத்தகமே ‘உள்ளம் ஓர் ஆழ்கடல்.’

பதிப்புரிமைப் பக்கத்துக்கு அடுத்தே ‘தற்சோதனை’ என்றதோர் உரைவீச்சைத் தோரண வாயிலாக நாட்டியிருக்கிறார் நாராயணன். நாள்தோறும் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் சரிவர அமைந்திருக்கின்றனவா, அவற்றால் சமூகம் பயன்பெறுமா என்று தன்மதிப்பீடு செய்துகொண்டு முன்னேற இவ்விதமான தற்சோதனை உதவும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ப. அருளி தொகுத்துள்ள அருங்கலைச்சொல் அகரமுதலியில்(பக்கம் 822) psychology என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாகத் தரப்பெற்றுள்ள உளத்தியல் என்ற சொல்லையே சற்று அழுத்தமாக உள்ளத்தியல் என்றவாறு இப்புத்தகத்தின் 224 பக்கங்களிலும் பயன்படுத்தியுள்ளார் டாக்டர் நாராயணன். உளவியல் என்று இதுவரை புழங்கிவந்துள்ள கலைச்சொல் உளவு+இயல் (spying technology) என்ற முறையில் பொருட்குழப்பத்துக்கு இடம் தந்து வந்ததால் உளத்தியல் என்ற சொல்லைக் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தார் ப. அருளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சிக்மண்ட் பிராய்ட்(6-5-1856) பெற்ற மருத்துவக் கல்வியும் ஆய்வுகளும் ஐரோப்பாவை அறிவியல் சிந்தனை ஆட்சி செய்த காலத்தில் அமைந்தன என்பதை நாராயணன் சுட்டத் தவறவில்லை. தவிரவும் ‘இறைவனின் படைப்பே மனிதன்’ என்று மதவாதிகள் உண்டாக்கியிருந்த ‘தெய்விகக் கொள்கை’யை டார்வின் வழங்கிய ‘பரிணாமக் கொள்கை’ தகர்த்திருந்த காலச் சூழல் பிராய்டின் புரட்சிச் சிந்தனைகளுக்கு இடம் தந்தது.

பிராய்டின் பெற்றோர்கள் அருமையானவர்கள். குறிப்பாக அவர்தம் தாயார் அமலியாவிடமிருந்து அபரிமிதமான பாசத்தைப் பெற்றார். தந்தையாரிடமிருந்து நகைச்சுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றைப் பிராய்ட் பெற்றார். ஒருவரின் வளர்ச்சியும் வெற்றியும் அவர் தம் தாயிடமிருந்து பெறும் அன்பின் அளவால் உறுதி செய்யப் பெறுகின்றன என்பதை அவர், “தாயால் விரும்பப்படும், நேசிக்கப்படும் குழந்தைகள் தம் வாழ்நாள் முழுக்க எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி காண்பார்கள்; எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்”(ப.60) என்று மொழிந்தார்.

பிராய்டின் ஆய்வுகள் ஆழமான அடிப்படைச் சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டவை. மேலோட்டமான சிந்தனையோ ஆய்வோ அவருக்குப் பிடிக்காது. உயிரியல்(biology) தொடர்பான அடிப்படை வினாக்கள் பலவற்றிற்கு இயற்பியல் மற்றும் வேதியல் துறைகளில் விளக்கம் கிடைக்கிறதென எடுத்துக் காட்டியவர் அவர்.(ப.61)

மருத்துவத் தொழிலில் பொருளீட்டுவதை விடவும் மன்பதைக்கு என்றும் பயன்படும் ஆய்வுகள் செய்யவே பிராய்ட் விரும்பியதால் 1881 ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவத் தொழிலை வியன்னா நகரில் தொடங்கினார். நரம்பியல் துறையில் உலகப்புகழ் பெற்று விளங்கிய ழோ(ன்) மர்த்தீன் ஷர்கோ அவர்களை 1885இல் பாரீசில் சந்தித்துப் பயிற்சி பெற்றார். இந்த இடத்தில் ஷர்கோ’வைப் பற்றி நாம் சிறிது அறிவது நலம்.

வலிப்பு நோய் அக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அப்பொழுது அதிகம். கருப்பை என்று பொருள்படும் ‘யுஸ்டீரான்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ‘ஹிஸ்டீரியா’ என்ற சொல் வந்ததை வைத்து, பெண்ணின் கருப்பை ஒரு படகைப் போல் உடலில் சுற்றி வருவதாகவும், அதன் விளைவாக ஒவ்வாத செயல்கள் நடப்பதாகவும், உறுப்புகள் செயலிழப்பதாகவும் அக்கால மக்கள் கருதினர். வலிப்பு நோய் பேய் பிசாசுகளின் தூண்டலால் விளைவது என்றும் பில்லி சூனியம் ஏவல் முதலான செயல்களின் விளைவு என்றும் நிலவி வந்த மூடநம்பிக்கையைக் களைந்து அது ஓர் உயிரியல் சார்ந்த நோய் என்றும், மூளை மண்டலத்தில் ஏற்படும் சிதைவின் வெளிப்பாடு என்றும் ஷர்கோ விளக்கினார். இக்கருத்து பிராய்டின் மனத்தில், “உயிரியல் சார்ந்த நோய் உள்ளத்தியல் கூறுகளின் ஆதிக்கத்தால் உருவாகின்றன” என்ற கருதுகோளை வகுத்தளித்தது. இதன் விளைவாக ஆழ்துயில் மருத்துவ முறையைப் பின்பற்றி வியன்னாவில் வெற்றியுடன் விளங்கிய வலிப்புநோய் மருத்துவர் ஜோசெஃப் புரூயெருடன் இணந்து பணிபுரிந்தார். நோயாளிகள் வெளிப்படுத்திய உணர்வுகளின் விளைவாக, பாலியல் சிக்கலும் வலிப்பு நோய்க்கு ஒரு காரணியாக இருக்கக் கூடும் என்று கண்டு கூறினார்.

பிரான்சில் நோயாளிகளை அறிதுயிலில் ஆழ்த்த வல்லவராக பெர்னே ஹெம்(Berne Heme) விளங்கினார். அவரிடம் பயிற்சி பெறச் சென்ற பிராய்ட் அவர் கடைப்பிடித்த முறைகளைக் கண்டு, “அறிதுயில் முறை நோயாளியின் ஆழ்மனத்தில் மறைந்துள்ள உணர்வுகளை எட்டுவதில்லை” என்று கண்டறிந்து முன்பு தான் ஏற்றிருந்த கருதுகோளை மாற்றிக் கொண்டார்.

அறிதுயில் முறையால், மருத்துவர் ஏற்றும் கருத்துக்களோடு தொடர்புடைய எண்ணங்கள் மட்டுமே நோயாளியின் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் நோயாளியைத் தங்குதடையில்லாமல் பேச விடவேண்டும். கட்டுப்பாடு ஏதும் இன்றி எதை எதோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசும் இப்பேச்சுமுறை நோய்க்கான காரணத்தைப் புலப்படுத்தும் என்று பிராய்ட் கருதினார். இப்பொழுது ‘TV5 MONDE ASIE’ தொலைக்காட்சியில் தொடராக வந்து கொண்டிருக்கும் ‘பிரின்சே மரி’யில் (Princess Marie) இப்பேச்சுமுறையை பிராய்ட், இளவரசி மரி’யிடம் பின்பற்றுதலை விரிவாகக் காணலாம். பெனுவா ஜாக்வீ’யின் அருமையான இயக்கத்தில் உருவானது அது. கடந்தகால நினைவுகளால் மனநோயாளிகள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதைப் பிராய்ட் உணர்ந்து பார்ப்பதை இயக்குநர் அதில் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்.

1895 முதல் நான்காண்டுகள் தன் ஆழ்மனத்தை அறிதலையே சோதனையாகப் பின்பற்றினார் பிராய்ட். ‘ஒருவரின் ஆழ்மனம் குப்பைத் தொட்டி அன்று; ஒருவரை உருவாக்குவதே அதுதான்” என்று கண்டு கூறி மனநோய் மருத்துவத்திலும் உளத்தியல் சிந்தனப் போக்கிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

பிராய்டுக்கும் பிராய்டியத்திற்கும் அப்பொழுதே எதிர்ப்பு வலுத்திருந்தது. அவரோடிருந்து ஆய்வுப்பணி ஆற்றிய கார்ல் யுங்கும் ஆல்பிரட் அட்லரும் ஒதுங்கிக் கொண்டார்கள். இன்னும் பலரும் ஒதுங்கவே, ஆண்டுக்கணக்கில் பிராய்ட் தனிமைப்பட்டு இருந்தார். குழந்தைப் பருவத்திற்குப் பிராய்ட் தந்த முதன்மையை ஏற்றுக் கொண்டவர்களும் அவர் வலியுறுத்திய எதிர்பால் ஈர்ப்பையும் பாலியல் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராய்ட் எதிர்ப்புக்கெல்லாம் வருந்தாமல் தம் பணியைத் தொடர்ந்தார். நரம்புப் பிணி போன்ற கொடிய பிணிகள் ஒருவரை வருத்துவதற்கு முதன்மைக் காரணம், குழந்தைப் பருவத்தில் பாலியல் அறிவு கொடுக்கப் படாமையே என்று அவர் உறுதியாக நம்பினார். பிராய்டின் ஆய்வு முடிபுகள் பிற்காலத்தில் மாற்றங்களை ஏற்றாலும் அவர் உருவாக்கிய உளத்தியல் பகுப்பாய்வு முறையும் ஆழ்மனத் தாக்கம் என்ற கருத்தும் இன்றும் நிலைத்து, சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவுகின்றன.

தன்னைத் தனிப்பட்ட முறையில் அல்லாமல் தன்னுடைய ஆய்வுகளின் மூலமே வருங்கால மக்கள் அறிய வேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிறப்பாக நிறைவேறியுள்ளது. உளத்தியல் சிந்தனை வரலாற்றில் புதிய விதைகளைத் தூவிப் புரட்சி செய்த பிராய்ட், தொடர்ந்த தாடை உறுப்புறுத்த(jaw prosthesis) அறுவைகளுக்குப் பின் 23-9-1939 அன்று மறைந்தார்.

இதுவரை நாம் பார்த்த நான்காம் இயலுக்குப் பின்னர் ஆக்கலும் அழித்தலும், மனவுருப்பதிவும் செயல்பாடுகளும், உள்ளம் ஓர் ஆழ்கடல், பருவங்களும் உணர்வுகளும், கனவும் உறக்கமும், நடத்தை : இயல்பும் பிறழ்வும், மனநலமும் மருத்துவமும், நூற்பயன் ஆகிய எட்டு இயல்களில் விரிவாக உளத்தியல் செய்திகள் அலசப்படுகின்றன. ஏழாவது இயலின் கடைசியிலும் பிராய்டின் கொடை, முத்திரை பதிக்கப் படுகிறது. காட்டு:
“உள்ளம் என்பது உடலின் பிற உறுப்புக்களைப் போன்றதொன்று என எளிமையாக எண்ணிய காலத்தில், அது அளப்பரிய ஆழ்கடல் என்றும் அதன் அமைப்பும் அங்கு இருக்கும் எழும் போராடும் உணர்வுகளும் எண்ணற்றவை என்றும், உள்ளத்துள் ஆழ்ந்து கிடக்கும் அத்தனை உணர்வுகளையும் அறிந்திட இயலாது என்ற உண்மையையும், சமயவாணர்களின் சாடலுக்கும் மாற்றாரின் இழிவுரைகட்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உள்ளத்தியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்டு.” (ப.120)

பதினொன்றாம் இயலான ‘மனநலமும் மருத்துவமும்,’ இன்றைய நிலையில் பலருக்கும் பயன்படத்தக்க மனநலம் தொடர்பான அறிவுரைகளைக் கொண்டிருக்கின்றன. தவிர, தன் வாணாள் முழுவதும் கடைகளுக்குச் செல்வதையே தீவிரமாக அஞ்சி வெறுத்துத் தவிர்த்த எம்மா என்ற அம்மையார் பற்றிய நோயாளி வயணம்(case description) மிகவும் குறிப்பிடத் தகுந்தது.(பக்கம் 201-203) இதன் ஊடாக டாக்டர் நாராயணன் உணர்த்தும் ஒரு செய்தி, இன்றைய மனநல மருத்துவர்களின் வறட்டுத்தனமான ‘வேதியல் மருந்தே மனநோய் எதையும் தீர்க்கும்’ என்ற கடைப்பிடி’(practice) தவறானது என்பதை எண்பிக்கும். அது:
“ஒரு செயலுக்குச் சமமாகவும் எதிராகவும் எதிர்ச்செயலொன்று ஏற்படும் என்ற நியூட்டனின் விதி பருப்பொருள் நிலையில் மட்டுமன்றி மன உணர்வு நிலையிலும் உண்மையென உணர வேண்டும்…இவ்விதியை அட்ப்படையாகக் கொண்டே இளங்குழந்தைப் பருவத்தை பிராய்டு விளக்குகிறார்.
மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் முதற்பணியே, அதற்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதும் குறைப்பதும் ஆகும். மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலம் இயன்ற அளவு குறைந்த சுமையைக் கொண்டு அதன் குறிக்கோளை அடைய முற்படுகிறது. இது, மூளையின் பொருளாதாரத் தத்துவம். பல நரம்பிழைகளால் விரிவாகவும் நுட்பமாகவும் நரம்பு மண்டலம் பின்னப்பட்டுள்ளது. குறைந்த அளவு தூண்டல், இயன்ற அளவில் சீராகவும் குறைந்த அழுத்தமுடனும் பாய்வதற்கேற்ற வகையில்தான் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. துன்பச் சூழலைத் தவிர்ப்பதும் குறைப்பதும் மனித மனத்தின் இயல்பு. மனத்தின் இவ்வடிப்படை விதியை ‘இன்ப நுகர்வு விதி’ என்கிறார் பிராய்டு.

பசி உண்பதாலும், சோர்வு தூக்கத்தாலும், பாலியல் ஆசை இன்ப நுகர்வாலும் சமநிலை அடைகின்றன. எம்மா அந்தக் குறிப்பிட்ட கடையைத் தவிர்ப்பதும் வெறுப்பதும் இவ்விதியின்படி சரியான செயலேயாகும். ஆனால், அவள், கடைகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கிறாள். இந்நிலையில்தான் அவள் வெறுப்பு மனநோய் என்றாகிறது. எட்டு வயதில் எம்மாவிற்கு ஏற்பட்ட அனுபவச் சுமையைக் குறைக்காமல் தற்போது அவளுக்கு மருத்துவம் செய்வதில் பயனில்லை.”(பக்கம் 202-203)

இன்று மனநல மருத்துவர்கள் பிராய்டுக்கு மாறாக, வெறும் மருந்துகளாகத் தருபவை பலருக்குத் தீவிரமான ஒவ்வாமையைத் தருவதுடன் பலரை ‘மரப்பாவை இயக்க’மும் கொள்ளச் செய்திருக்கிறது. வேதியலின் ஆதிக்கம், இயல்பான மனநல மருத்துவத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. பிரெஞ்சுப் படமொன்றில் வயதான பெண் ஒருத்தி, காதலைப் போற்றித் தன் காமத்தை முற்றாகத் தவிர்க்கும் இளம் வழக்கறிஞர் ஒருவரிடம் எரிச்சலுடன் சொல்வாள்: “பார்க்கப் போனால் காதல் ஒரு வேதியல்தான்!” என்று. புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ், சில மாதங்களுக்கு முன் ‘காதலின் வேதியல்’(chemistry of love) என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது.

உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் தங்கள் மனைவியருக்கு ‘செடேடிவ்ஸ்’ எனப்படும் தணிப்பிகளைத் தந்து தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார். நல்ல வேளையாக மனநோய்களுக்கு இன்று தரப்படும் வேதியல் மருந்துகளை மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர் குறிப்பு இல்லாமல் தருவதில்லை. வேதியல் மருந்துகளைப் புகழ்பவர்கள், இன்று கல்லூரி பள்ளி மாணவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருள்களின் தோற்றுவாய் குறித்துச் சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும்.

சரி. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அனுபவ முதிர்ச்சி உள்ளவர். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:
“வாழ்க்கையில் முன்னேற்றம் காண போட்டி மனப்பான்மை நல்ல ஊக்கியாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே போட்டி மனப்பான்மை ஒருவரது திறமை மற்றும் வாய்ப்புகளுக்கு மீறியதாக அமைந்து விடாமல் இருந்திட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.” (ப.203)
“ஒருவரின் தகுதிகட்கும் அவர் அடைய வேண்டிய குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளி முயன்றும் கடக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிதாக இருப்பின் அது மனமுறிவு என்னும் மனக்கோளாறு உருவாக வாய்ப்பளிக்கும். ஆசையோடு அறிவும் சேர்ந்து குறிக்கோளைத் தீர்மானித்தால் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் தோன்ற வாய்ப்பு குறைவு.” (ப.204)
“சமுதாயக் கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசைப்படுகிறவன் அதனை நிறைவு செய்து அமைதி கொள்வான். மனமுறிவு என்னும் கோளாறு அவனுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.” (ப.204)
“நாகரிகச் சமுதாயத்தின் நடுவே உள்ள மனிதன்... ஆத்திரப்படும்போதும் எரிச்சலடையும்போதும் தன் உணர்வுகளை உடனே வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறான். அதன் விளைவாக அவனுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அது பெரும்பாலும் இரத்த அழுத்தத்தையும் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது.
உணர்வொடுக்கமும் அதனால் ஏற்படும் உடல்கேடுகளும் அடிக்கடி நிகழுமானால் அவை நிரந்தர நோய்கட்கு வழிவகுப்பனவாகின்றன... சிறுசிறு நிகழ்வுகட்கெல்லாம் ஆத்திரப்படாமல் இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். இது எதார்த்த விதியின் ஓர் அங்கமாகும்.”(ப.209)
“உன்னையே நீ அறிவாய்’ என்பது கிரேக்க ஞானி சாக்ரடீசின் மந்திரத் தொடர். ... உன் பார்வையை உள்முகமாகத் திருப்பி உன் உள்ளத்தில் படிந்திருக்கும் எண்ணங்களின் இயல்பை அறிந்து கொள் என்பதே இதன் பொருளாகும்.” (ப.211)
“உங்கள் உள்ளத்தை நீங்களே ஊடுருவிப் பாருங்கள்; வேண்டாத எண்ணங்களை வெளியேற்றுங்கள்; மனம் மென்மையாகிவிடும்; வாழ்க்கை அமைதிப் பூங்காவாக விளங்கும்.” (ப.212)

***************
ஆசிரியர்: டாக்டர் க. நாராயணன், எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,பிஹெச்.டி.
தலைப்பு: உள்ளம் ஓர் ஆழ்கடல் (Freudian Psychology - An Introduction)
பதிப்பு: முதற் பதிப்பு, திசம்பர் 2006.
பக்கம்: 224
புத்தக அளவு: தெம்மி 1/8
விலை: உரூ. 100-00
வெளியீடு: மாரி பதிப்பகம், ‘சிவகலை’ இல்லம், 29, நாகாத்தம்மன் கோயில் தெரு,
கொட்டுப்பாளையம், புதுச்சேரி - 605 008.
தொ.பே.: 0413 2251764 / 9442152764

******
நன்றி: கீற்று.காம்

16.2.07

ஆசிரம வாழ்க்கை - -தேவமைந்தன்

ஆசிரம வாழ்க்கை
-தேவமைந்தன்

பல நாள்களாக எனக்குள் ஓர் ஆசை. ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. ஒரு நாளாவது சுதந்திரமாக அதை வாழ்ந்து பார்க்கவும் விருப்பம். நாங்கள் வாழும் ஊரில் உள்ள பெரிய ஆசிரமத்தில் மனிதர்கள் எந்திரங்கள் போலவும் திருவள்ளுவர் மொழிந்த ‘மரப்பாவை’கள் போலவும் வாழ்ந்து இயங்குவது பார்க்க, அன்றாடமும் பார்க்கப் பார்க்க வேறொரு கிளை ஆசையும் என்னுள் துளிர் விடலாயிற்று. அது என்ன என்றால், நான் வாழ்ந்து பார்க்கப்போகும் ஆசிரமம்:-
1. நகர்ப் பக்கமே இருக்கக் கூடாது.
2. தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.
3. அதிகம் பேர் வந்து போவதாக இருக்கக் கூடாது.
4. என்னை ஆசிரமத்தில் உள்ளவர்கள் தங்களைப் போல எண்ண வேண்டும். நான் வாழ்க்கையில் ஆற்றிய அரசுக் கல்வி நிறுவனப் பணி அவர்களுக்குத் தெரியக் கூடாது. வயதும் கூடத்தான்.
5. முக்கியமாக மலைப்பக்கம்தான் அந்த ஆசிரமம் இருக்க வேண்டும்.

சொல்வார்கள்... ஆசைகளை[ambitions] விடவும் உயர்ந்த/உன்னத விருப்பங்களுக்கு [aspirations] நிறைவேறும் திறம் அதிகம் என்று.. நிறைவேற்றி வைத்தார்கள், குடும்பத்தார். விந்தையாக அந்த ஒரு நாள் வாழ்க்கை அரங்கேறியது. அதுவும் சிகுன்குனியா வந்து வாட்டி என்னை வளைவெடுத்துவிட்டதை உடனடுத்தே நிகழ்ந்தது. ‘வாய்ப்புத் தராத விழிப்பு நிலை’[choiceless awareness] என்று ஜே.கே. சொன்னாரே அப்படி.

**
23-12-2006: ‘ஹிந்து’வில் திசம்பர் 11, 2004 அன்று “ROAD LESS TRAVELLED: Hill of hills” பகுதியில் பிரின்ஸ் ஃப்ரெடெரிக் எழுதிய பருவதமலை அடிவாரத்தில் உள்ள மெளனயோகி விட்டோபானந்தாவின் ஆசிரமத்தில் இந்த நாள் மாலைமுதல் அடுத்த நாள் மாலை வரை தங்குகிறேன். பொய்யில்லாமல், சுருக்கமாக, நடந்தவைகளை இங்கே ‘திண்ணை’ குழாம் முன் வைக்கிறேன்.

‘மயிலம் தாத்தா’ என்றழைக்கப்படும் தாத்தா, அங்கேயே நெடுங்காலமாக, ஆறாயிரம் அடி உயரமுள்ள பருவதமலையின் சிகரத்தில் மெளனயோகி விட்டோபானந்தா இரண்டடுக்கு ஆசிரமத்தைக் கட்டும்போதெல்லாம் உடனிருந்த காஞ்சி ஊரார்களிடையில் இருந்து உதவியவர். இன்று வளைந்து விட்டார். ‘கேம்ப்’ கட்டிலில் வளைந்து உட்கார்ந்தவாறே, விட்டோபானந்தா ஆசியுடன் வழங்கும் விபூதிப் பிரசாதத்தின் கொள்கலமான தாளுறையை மடித்தவாறே இருந்தார். பேசினால் 5 உறையை மடிக்கும் நேரத்தில் 2 தான் மடிக்க முடியுமாம். இருந்தாலும் பல செய்திகள். மெளனயோகியின் விளம்பரப் படுத்திக் கொள்ளாத 14 ஆண்டு கர்மயோக வாழ்க்கையைக் குறித்து. இரவு 12:30 மணிவரை தொடர்ந்து, வளைந்த முதுகுடன், பணியாற்றி, பிறகு படுத்து உறங்கத் தொடங்கினார். இரண்டரை மணி நேரம்கூடத் தாண்டியிருக்காது..

‘சில்’லென்று குளிர்காற்று கூடத்துள்ளே புகுந்தது. கதவு திறந்து, புதுச்சேரியிலிருந்து பருவதமலையறிந்த குழுவொன்று ‘தடபுட’வென்று உள்ளே நுழைந்தது. மயிலம் தாத்தா சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தது. கவலைப் படவில்லை. கதவைச் சாத்தவுமில்லை. பெண்கள் ‘சளசள’ என்று பேசத் தொடங்கி விட்டனர். வைகறையில் பருவத மலையேற வேண்டுமென்று ஒருவர் ஒருவராகப் போய் குளிக்க ஆரம்பித்து விட்டார்கள். குளித்து வந்தவர்கள் கூந்தலை ‘அட்டை’ தட்டுவது போலத் தட்ட ஆரம்பித்தார்கள். நெளிந்தார் அவர்.

அந்த ஓரத்தில் படுத்திருந்த காஞ்சிபுரத்து சாமியான சி.பி.ஆர். சத்தம் கேட்டு ஓடிவந்து, ‘என்னம்மா.. நீங்கள்’லாம்.. இந்த மலைப் பக்கம் உங்களுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்திருக்கிறாரே மெளனசாமி.. எவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்கார்.. நீங்க இப்படிப் பண்ணுறீங்களே.. இது புனிதமான இடம் மட்டுமல்ல..இங்கதான் நாள்தோறும் மலைப்பக்கத்து ஊராருக்கு அன்னதானம் பண்ண மாவரைக்கிற மிஷின்கள்’லாம் இருக்கு ..அதோ பாருங்க.. இப்படி நீங்க தாட்டுற முடியெல்லாம் போய் கிரைண்டர்’ல விழாது? அதெல்லாம் போகட்டும்.. இங்க படுத்திருக்கிறாரே இந்தப் பெரியவர்.. என்ன வயசு தெரியுமா? கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் படுத்தார். ஏன் நீங்கள்’லாம் இப்படி ‘இர்ரெஸ்பான்ஸிபிளா’ இருக்கீங்க!” என்று திட்டியதுடன், அங்கேயே தன் தூக்கத்தை தியாகம் செய்து அவர்கள் ‘எல்லாம்’ முடித்துக் கிளம்பும் வரை உட்கார்ந்தும் கொண்டார். அவ்வப்பொழுது அவர்கள் திறந்துபோடும் கதவையும் மூடி மூடி வருவார். சங்கடத்தோடு அவரைக் கேட்டேன்: “ஏங்க இப்படி..இவங்களையெல்லாம் அனுமதிக்கணுமா?” சொன்னார்: “இவங்களெ சாமியார் அநுமதிக்கிலே’ன்னா வெளில கிடந்தும் ‘வேன்’ல கிடந்தும் வெறைச்சுப் போய்டுவாங்க.. மலைப்பக்கம் போய்க் குளிக்கவும் மறைப்புறம் போய் வரவும் இவங்களுக்கெல்லாம் முடியவும் முடியாது. ஏன், நமக்கே இந்த ஜாமத்துல அது முடியுமா? அதுக்குத்தான் சாமியார் இரண்டு வசதியான ‘டாய்லெட்’கள் கட்டி வச்சிருக்கிறார். கூடவே ‘பாத் ரூம்களையும்தான். எல்லாம் இலவசம். சுத்தமாவும் இருக்குதல்ல. இதோ மயிலம் தாத்தா தூங்குறாரே.. விடியக் காத்தால எழுந்து வளஞ்சுட்டே இவங்க போட்டதெல்லாம் பெருக்குவார். ‘உலகம் பாட்டி’ யும் சில சமயம் பெருக்கும்..” என்றார்.

நாங்கள் தங்கியிருந்த இடம் முன்பு மாட்டுக் கொட்டகையாக இருந்ததாம். ஒரச் சுவர் பக்கம் தண்ணீர்த் தொட்டி, பரவலாகக் கசிந்தது. கூடத்துக்குள்ளாகவே தவளைகள் சுதந்திரமாகச் சஞ்சரித்தன. குறும்புக்காரப் பூனைக் குட்டிகள் இரண்டு. அவை வெளியே போனால் அங்கிருந்த வாட்டசாட்டமான கறுப்புநாயிடம் மாட்டிக் கொண்டுவிடுமே என்று கவலைப்பட்டு அவ்வப்பொழுது அக்கறையுடன் ‘மியாவ்’ இட்டு எச்சரிக்கும் அவற்றின் தாய். இவற்றுக்கு ‘டாவு’காட்டும் சுறுசுறுப்பான எலிகள்.[என் பையில் தமக்கு வேண்டுமளவு மட்டும் துளையிட்டு தின்பண்டங்கள் களவாடியிருந்ததைப் புறப்படும்பொழுதுதான் கவனித்தேன்.]

“ஜெகதோ தாரண..” கீதம் மென்மையாக ஆசிரமத் தியானக்கூடத்திலிருந்து இசைக்கத் தொடங்கியபொழுது மணி 3:15[24-12-2006]. காஞ்சிபுர சாமி என்னும் சி.பி.ஆர்.தான் அந்தத் தியானக் கூடத்துக்கான சிமெண்டை வழங்கியவர். இப்பொழுதும் அன்னதானமாகிற அரிசியை காஞ்சியிலுள்ள தன் மகனிடமிருந்து பெற்றுவந்து தருகிறார்.

நேற்று மாலை வேலூர் யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தன் நண்பரான விரிவுரையாளரோடும் இன்னொருவருடனும் வந்து கணபதியை வழிபட்டுவிட்டு பின்மாலைப்பொழுதில் ‘டார்ச்’ விளக்குகளின் உதவியுடன் மலையேறிப் போனார். இன்று காலை திரும்பியவுடன் என்னிடம் சொன்னார்; “ உங்கள் குடும்பத்தார், என்னுடன் மலையேறியவர்கள், நள்ளிரவு பன்னிரண்டே முக்காலுக்குத்தான் மேல் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். என்ன இருந்தாலும்.. 6000 அடியல்லவா?”

மயிலம் தாத்தா சொன்னார். “வழியெல்லாம் பாறைகள்தாம். மண்படிவங்கள் வேறு சறுக்கும். கடப்பாறை மலை, இடையில். தாண்டி மறுபடியும் பாறைகள்தாம்..”

எந்த வேளையும் சாப்பாடு இல்லையென்று எவருக்கும் சொல்வதில்லை. நேற்றிரவு காய்ச்சல் ஓய்ந்த உடம்புடன், ஒரு பெரிய கையளவு இட்டலிகள், சூடாக, சாம்பாருடன் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடக் கட்டாயப்படுத்தினார் காஞ்சிபுரம் சாமி.. மூர்த்தி என்ற இளைஞர், முற்றிலும் துறவுக்கோலத்துடன் அரைத் துண்டுடன் கடினமான சமையல் வேலைகளை அங்கே செய்வார்; அடுத்த பொழுது பார்த்தால் இங்கே தியானக் கூடத்துக்கு முன்னே இருக்கும் மூர்த்தங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவதில் உதவிக் கொண்டிருப்பார். ஊர் மக்கள் எந்தவித வித்தியாசமுமில்லாமல் வந்து உதவிக் கொண்டே இருப்பார்கள். துறவிகள் பலர் ஒவ்வொரு நடையிலும் நிறுத்தாத பந்திகளில் வந்து கவுரவமாய் ஊராருடனும் எங்களைப்போன்ற புதியவர்களுடனும் அமர்ந்து தங்கள் திருவோடுகளில் உணவுண்டு, நாங்கள் எவர்சில்வர் தட்டுகளைக் கழுவிக் குவிக்கும் இடத்தில் அவற்றைக் கழுவி வைத்துச் செல்வார்கள். அவர்களுள் ‘இரண்யன்’ என்றொருவர். பூர்வாசிரமப் பெயர் வேறாம். அவர் ‘விடுவிடு’வென்று வருவார். திருவோடு எடுத்துக் கழுவுவார். ஒருவரிடமும் பேசமாட்டார். தேவையான அளவு சாப்பிடுவார். பார்ப்பார். எந்திரம் போல எழுவார். யார்மேலும் பட மாட்டார். வாழைத் தோட்டம் போவார். திருவோடு கழுவி வந்து வைத்துவிட்டு வெளியேறுவார். வெளியே மலையேறும் பாதையில் உள்ள கல்லறையொன்றின் மேல் அமர்ந்து தியானம் செய்வார்; அங்கேயே ஓய்வெடுப்பார். ஆசிரமத்துள் தங்க மாட்டார். இப்படிப் பலர்.

சித்தார்த் என்ற சாமியார் இளைஞர். மெளனசாமிக்கு அவ்வப்பொழுது வந்து உதவுகிறார். மலையாளம் கலந்த தூயதமிழ் பேசுகிறார். பல செய்திகள். “மெகஸ்தனிஸ் வந்து பயணக் குறிப்பு எழுதினார் என்றல் ஏற்றுக் கொள்கிறார்கள். அகஸ்தியர் வந்து ஆசிரமம் நிறுவினார் என்றால் சிரிக்கிறார்களே!” என்று வருந்தினார். மிகவும் பரந்த மனப்பான்மை உள்ளவர். அரவிந்தாசிரமம் முதலான பலவேறு ஆசிரமங்களைப் பார்த்துச் சலித்துப்போய், கடைசியாக எங்கோ மூலையில் ‘வனாந்திரமாய்’ உள்ள மெளனயோகி விட்டோபானந்தா ஆசிரமத்தில் நிலைத்துவிட்டதாக ‘நிம்மதி’ப்பட்டார். திடமான சிவப்பான உடலை நன்றாக வைத்துக் கொண்டு எப்பொழுது பார்த்தாலும் ஆசிரமத்தில் எந்தப் பகுதிக்கும் போய் எல்லோருடனும் அன்பாகப் பேசி உதவுகிறார். மையிலம் தாத்தாவின் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கண்களில் அன்பொழுக அவர் பேசியதைப் பார்த்தபொழுது நினைத்தேன்: “இதோ இந்த வயசாளி..கர்மயோகி..இப்பொழுது தன் வீட்டில் இருந்தால் இவருக்கு இந்த மரியாதை, விசாரிப்புகள், கூடத்துக்கு ஒவ்வொரு வேளையும் சென்று திருவோட்டில் காஞ்சித் தாத்தா உணவு வாங்கி வந்து தரும் அக்கறை, ஒவ்வொரும் கையில் ஏந்தித் தாங்கும் அன்பு, சமையல் பணி செய்யும் அம்மாவின் கவனிப்பு, வெளியே ஊருக்குள் இருந்து நாள்தோறும் வந்து பணிசெய்யும் அந்தம்மாவின் மகள்[திருமணமானவர்] காட்டும் கரிசனம் எல்லாம் கிடைக்குமா?..இல்லை, இவர் ஒரு நகரத்தில் முதியோர் இல்லத்தில் இருந்திருந்தால் இந்த நிம்மதி இவருக்கு வந்திருக்குமா?..”

ஆம். நினைத்தபடி எல்லோருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. அமைவதைப் போற்றிக் கொள்ளவும் பலருக்கு ஆவதில்லை.

ஒருநாள் ஆசிரம வாழ்க்கையை நிறைவேற்றிக் கொண்டு கிளம்பினேன். அனைவரிடமும் விடைபெற்றேன். கேட்டார்கள். சொன்னேன், எங்கு, என்ன பணி புரிந்தேன் என்று.. முன்போலவே இருந்தார்கள்.. காஞ்சிபுரம் சாமி சொன்னார்: “உங்கள் மாநில முதல்வர் இங்கு வரும் மூன்றாம் தேதி வருவதாக உள்ளார்.”
ஆம். எங்கள் முதல்வர் ரங்கசாமியும் எளிமையானவர்; எளிமை விரும்புபவர்தாம். தெரிந்ததுதானே!

******
நன்றி: திண்ணை.காம்

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல்

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்
கோட்பாட்டுப் பாடல்
- தேவமைந்தன்

“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பது என்றால் ‘ரிசர்வ் பேங்’கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் - பெரிய ‘லைப்ரெரி’யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளொபீடியா’..வை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகமானவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல..தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி - தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான்” என்று பெரியார் 1945ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவைக் ‘குடி அரசு’ 14/4/1945 இதழ் வெளியிட்டது.

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் பெருஞ்சித்திரனார் பாடினார்:

“தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல்
தமிழ்மானம் தமிழர்நலம் கருதுவோர்கள்
இனியேனும் தமிழ்நிலத்தில்
எழுந்திடுக! பொதுத்தொண்டில்
இறங்கிடுக! எந்தமிழர்க் கேற்றம் காண்க!”
(கனிச்சாறு 1:50 ‘தவிராமல் தமிழ்நலம் காக்க!’)

சமூகத் தொண்டுக்குப் பெரியார் அறிவுறுத்திய கோட்பாடு, தலைமுறை ஒன்றின்பின் தமிழ்த் தொண்டுக்குப் பெருஞ்சித்திரனாரால் அறிவுறுத்தப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? சமூகம் திருந்திப் பகுத்தறிவு பெற்ற பின்னரே, மொழியினமும் மொழிநலமும் - பழைய தொண்டுக் கோட்பாட்டைப் பின்பற்றியே வென்றெடுக்கப்பெறக் கூடியவை என்பதுதான்.

பொதுநல உணர்வு ஒருவர்க்கு இல்லாது போனால் தொண்டு புரியும் எண்ணமே உள்ளத்தெழாது. ‘வாழ்வுக்கு நோக்கம் தேவை!’ என்ற தலைப்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தென்மொழி’ இதழில் எழுதிய பாடல், வாழ்வின் அடிப்படையைக் கல்லி எடுத்து ஆகவும் எளிமையாய் எடுத்துக் கூறி வலியுறுத்துகிறது.

நோக்கம் என்ற ஒன்றே இல்லாதவர்கள் இருக்கின்றார்கள்.

“கற்கின்ற காளையர்க்கும் கன்னியர்க்கும் இக்கால்
கல்வியிலே பிடிப்பில்லை; அறிவிலில்லை ஆர்வம்!
சொற்குன்றும் மொழிகளிலே சோர்வுபடப் பேசிச்
சோற்றுக்கு வாழ்வமைப்பார்; உள்ளநலங் காணார்!”
(கனிச்சாறு 1:29 ‘தமிழ் நெஞ்சம்!’)

நோக்கம் இல்லாமல் போனால் என்ன ஆகும்?

வாழ்க்கைக்கு என்று நோக்கம் ஒன்று வேண்டும். இல்லாவிட்டால் நொந்துபோய்ச் சாகவே நேரும். ‘நொந்தது சாகும்’ என்ற பாரதியின் புதிய ஆத்திசூடியின் கூற்று(புதிய ஆத்திசூடி:63) செயல்புரியத் தொடங்கும். நொந்துபோய் வாழ்பவருக்கு ஊக்கமும் இருக்காது. அதைப் பிறப்பிக்கும் உள்ளமும் நொடிந்து மடியும். எதிலும் சலிப்பு வருவதால் உழைப்பிலும் போதுமான பயன் விளையாது. உலகியலில் ஆர்வம் வராது. இனிப்பு கார்ப்பு கைப்பு உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு என்ற அறுசுவை வாழ்வில் புளிப்பு ஒன்றே ஓங்கி மேலும் சலிப்பை ஊட்டி வருத்தும். செல்வம் உற்ற பொழுது ஓடிவந்து சுற்றமாய்ச் சுற்றும் உறவுகள் எல்லாமும் அலுத்துச் சலித்து ஓய்ந்து போனவரைப் பொருட்படுத்தாது போனாலும் தாழ்வில்லை; கெக்கலி கொட்டிச் சிரிக்கும்.

“நோக்கம்’ எனஒன்(று) இல்லாது போனால்,
வாழ்க்கை நொய்ந்தே போகும்! - நம்
உள்ளம் நொடிந்தே சாகும்!
ஊக்கம் குறையும்: உழைப்பும் சலிக்கும்;
உலகில் எதுவும் புளிக்கும்! - நம்
உறவுகள் பார்த்தே இளிக்கும்!

உருப்படியாய் எதுவும் செய்யத் தோன்றாது. ஏற்கனவே உள்ள அறிவும் குறைந்து போகும். அல்லல் படையெடுத்து வந்து தண்டு ஊன்றும். தம் மேல் பெற்றோரும் உற்றோரும் தோழரும் இயல்பாகக் காட்டுகின்ற அன்பு கூட மிகவும் கசப்பாகத் தோன்றும். மன அழுத்தம் ஏற்பட்டு உடலும் நலியும். நெஞ்சத்தில் வீண் அச்சங்கள் தோன்றுவதால் பொல்லாத் தவிப்பும் ஏற்படும். விளைவாகத் தற்கொலைக்கும் உள்ளம் திட்டமிடும்.

“ஆக்கம் குறையும்; அறிவும் மயங்கும்!
அல்லல் படையொடு ஊன்றும்! - பிறர்
அன்பும் கசப்பாய்த் தோன்றும்!
தாக்கம் வந்தே உடலை வருத்தும்!
தவிப்பும் நெஞ்சினை இறுக்கும் - நமைத்
தற்கொலை செய்திடச் சறுக்கும்!

“என் நோக்கம் பணத்தை ஈட்டுவதே!” என்பவர்களும் நோக்கம் அற்றவர்கள்தாம். ஏனென்றால் பணத்தை ஈட்டத் தொடங்குவார்கள். நாளடைவில் அதைப் பெருக்குவதிலேயே நாட்டம் கொள்வார்கள். ‘மக்கள் பணம்’ ஆகிய அரசு வரியைக் கட்ட வேண்டுமே என்று புழுங்கி, பதுக்குவார்கள். பல பயன்களை விளைவிக்காத பணம், தன்னை வைத்திருப்பவனைக் கொன்றே விடும். “சரி, என் நோக்கம் குணத்தால் சிறப்பது!” என்பவர்கள் மொழிவதைப் பார்த்தால் அது ஏற்புடையது போலவே தோன்றும். ஆனால் அதுவும் உண்மையில் நோக்கம் ஆகாது. ஏனெனில் குணக்குன்றுகளால் அவர்களுக்குத்தான் ஆக்கமே தவிர, ஏனைய குடிபடை(citizens)களுக்கு இல்லை. மேலும் அவர்களுக்கே கொள்ளை கொலை வழிப்பறி முதலான கொடுமைகள் பல எதிர்வருவதும் இயல்பு.

“பணத்தை ஈட்டுதல் நோக்கம் ஆகாது;
பதுக்கவும் பெருக்கவும் தூண்டும்! - பல
பயன்களுக் கதில்வழி வேண்டும்!
குணத்தால் சிறப்பதும் வாழ்வில் போதாது;
குடிநலம் பெறல்அதில் இல்லை; - பல
கொடுமைகள் எதிர்வரின் தொல்லை!”

ஆகவே உயர்வான நோக்கம் என்பது, சலித்துச் சலித்துப் பார்த்த பின்பு சல்லடையில் கிடைக்கும் பொன்போல, பொதுநல உணர்வுதான். அதுவே புதுப்புது விளைவுகளுக்கு ஊக்கமும் நினைக்கவே கொடுமையான போர்கள் இல்லாத புதிய உலகுக்கு ஆக்கமும் ஆகும். எது உயர்வு எது இழிவு என்று எண்ணித் திட்டமிட்டுச் செய்தால் வருங்காலத் தலைமுறைகள் புதுமை என்று ஏற்று அதைச் செயல்படுத்துவர். மெய்யாகவே புதுமை என்று ஒன்றிருக்குமானால் இன்றைய நிலையில் “மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் பொதுவானவை” என்ற அடிப்படையில் அமையும் பொதுமை அரசமைப்புச் சட்டமே!

“பொதுநல உணர்வே உயர்வான நோக்கம்;
புதுப்புது விளைவுக்கும் ஊக்கம்! - கொடும்
போரிலா உலகுக்கும் ஆக்கம்!
எதுஉயர்(வு) எதுஇழி(வு) என்றெண்ணிச் செய்க!
இனிவரும் மக்கட்குப் புதுமை! மக்கள்
எல்லார்க்கும் எல்லாமே பொதுமை!”

உயர்வான நோக்கம் பற்றிய கோட்பாட்டுப் பாடலை, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளவுக்கு அவரது சமகாலப் பாவலர்கள் இயற்றியிருப்பார்களா? இயற்றியிருந்தாலும் இந்த அளவுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் அது குறித்துப் பாடலிலேயே கோட்பாட்டை உருவாக்கியிருப்பார்களா?

நன்றி: கீற்று.காம்

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாக்கும் இலக்கியக் கொள்கை

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாக்கும் இலக்கியக் கொள்கை
-தேவமைந்தன்

இன்றைய இலக்கியம் என்ற தொடரில் ‘இன்றைய’ என்ற பகுதியின் கால வரையறைப் பொருள் பலராலும் தவறாகக் கணிக்கப்படுகிறது. உள்ளபடியே இன்றைய தமிழ் இலக்கியம் என்பது ஆற்றலுடன் வெளிப்பட்டு வரும் தலித் இலக்கியத்தையும் பெண்ணிய இலக்கியத்தையும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையுமே குறிக்கும்.

‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்று உள்ளபடியே ஆகிவிட்ட உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் ‘இன்றைய தமிழ் இலக்கியம்’ என்ற புலத்தை அதற்குரிய எல்லா வாழ்க்கைத் தகுதிகளுடன் நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தோரே. ‘புலம் பெயர்ந்தோர்’ என்போரும் இரண்டு வகைமாதிரிகளாகப் பகுக்கப்பெறுகிறார்கள். முதல் வகையினர், ஈழதேசியப் போர்களில் பல்வேறு இழப்புகளுக்கு உள்ளாகி உலகத்தின் வேறு புலங்களில், அதிலும் குறிப்பாக அதிகமாக ஐரோப்பாவில் இப்பொழுது உழைத்து வாழ்ந்து கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இரண்டாம் வகையினர், இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து வேறு புலங்களில் போய் உழைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இந்த இரண்டுவகைமாதிரிகளில் முதல் வகையினருக்குச் சான்றுகளாக ‘எஸ்.பொ.’ என்றழைக்கப்பெறும் எஸ். பொன்னுத்துரை, சி. புஸ்பராஜா, ‘சோலைக்கிளி’ என்ற புனைபெயருடைய யு.எல்.எம். அத்தீக் முதலானவர்களையும்; இரண்டாம் வகையினருக்குச் சான்றுகளாக நாகரத்தினம் கிருஷ்ணா[கடல்கடந்து வாழும் தமிழர்களின் ஆகச் சிறந்த படைப்பாகத் தன் ‘நீலக் கடல்’ புதினத்துக்குத் தற்பொழுது விருது பெற்றுள்ளவர்] அபுல் கலாம் ஆசாத்[தமிழில் கானாப் பாடல்கள் பதிவு; கஜல் பாடல்கள் மொழியாக்கம் செய்துள்ளவர்] முதலானவர்களையும் குறிப்பிடலாம்.

இவர்களுள் பிரான்சில் பல ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சென்னைக்கு மருத்துவ உதவி பெற வந்து பிரான்சுக்கு மீண்டபின் மறைந்த சி. புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’[வெளியீடு:அடையாளம், 1204-05[இரண்டாம் தளம்], கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310] என்பது உன்னதமானதொரு தன்வரலாற்று இலக்கியம் என்பதை விடவும் மிகவும் சிறப்பான ஆவணம் என்பதே பொருந்தும். இருப்பினும் அதன் 632 பக்கங்களையும் வாசிக்கும் பொழுது புலனாகும் - எதார்த்தமானதும், ஒருவரைத் தமது சொந்த வாழ்க்கைக்கே அன்னியப்பட்டுப் போகவைக்கின்றதும் ஆன பெருந்தேசியவாதிகளின் பேரினவாத ஒடுக்குமுறை குறித்த நுணுக்கமான சித்திரிப்பு அப்படைப்பை இலக்கியமாக்கி விடுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வசதியான பதவியையும் வாகான சமூக உறவுகளையும் வைத்திருப்பவர் இத்தகையதொரு படைப்பை உலகுக்கு வழங்க முடியாது. இத்தகைய படைப்பிலக்கியம் பெருந்தேசியவாதம் என்பது பேரினவாத ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல்(micro politics) உண்மையை முன்வைக்கிறது.

எஸ்.பொ.’வின் விரிவானதும் நுட்பம் மிக்கதுமான தன்வரலாறான ‘வரலாற்றில் வாழ்தல்’ என்பது படைப்பாளியை உள்ளடக்கிக் கொண்டுவிடுகிறது. அகன்றதொரு புலமாகவும் ‘அகண்ட பிரபஞ்சம்’ போலவும் சமூக மனிதனாக வாழும் ஒருவனுக்கு நேரக்கூடிய எல்லா வகைமாதிரியான பிரச்சினைகளையும் அது முன் வைக்கிறது. வெளியே சொல்லக் கூசுகின்ற வயணங்களைக்கூட அது விட்டு வைக்கவில்லை. தன் தேசமே பேரினவாதத்தால் செயற்கையாக எல்லைகள் அழித்து மறைக்கப்படும் பொழுது எப்படிப்பட்ட இழப்புகளை, பிரிவுகளை, சொந்த அடையாளமிழத்தல்களை, புலப்பெயர்வுகளை ஒரு சமூக மனிதன் எதிர்கொள்கிறான் என்ற மனித அனுபவத்தை வாசிப்பில் உருவாக்குகிறது.

‘காகம் கலைத்த கனவு’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதையான ‘காகம் கலைத்த கனவு’ என்பது புலம்பெயர்ந்தோர் இலக்கியமே இன்றைய இலக்கியமாகும் தன்மைக்கு ஒரு சான்று.

காகம் கலைத்த கனவு

கைவேறுகால்வேறாய்அங்கங்கள் பொருத்திப் பொருத்திமனிதர்கள் தயாரிக்கப்படுவதைநேற்று என் கனவில் கண்டேன். கண்கள் இருந்தன ஒரு பைக்குள்மூக்கும் இருந்தது இன்னொன்றில்முழங்கால் பின் மூட்டுவிலா குதி எல்லாமேஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-தம்பதியார் வந்தார்கள்புரட்டிப் புரட்டிச் சிலதைப்பார்த்தார்கள் பின்னர்விரும்பியதை எடுத்தார்கள்கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள். வானம் புடவையாய் வெட்டுண்டுகிடந்தது வீதியாய்நான் நின்ற பாதை. ஒருவன் வந்தான்துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்பார்த்துப் புன்னகைத்தான்அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்துகாலில் இருந்த இருதயத்தைக் கழற்றிமனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான். வெயிலோ கொடுமைஎரிச்சல் தாங்கவில்லைஅவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்தபொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.இரவு!உடனே சூரியன் மறைந்ததுநிலவு!நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்துதன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்மனிசி!காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லைஎங்கிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்கத்தியதுஇடையில் நின்று முக்கியதுகா.....கா....

இதைவிடவும் கூடுதலாகவும் ஆகக் கூர்மையாகவும் போரின் உக்கிரத்தை, இனப் படுகொலைகளைத் தொலைநோக்குடன் கண்டிக்கும் மனச்சாட்சியுள்ள கவிதை இன்னொன்றும் இத்தொகுதியில் உள்ளது. அது -

தொப்பி சப்பாத்துச் சிசு
தொப்பிகாற்சட்டை சப்பாத்துஇடுப்பில் ஒரு கத்தி மீசைஅனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒருகாலம் வரும்.அந்ததொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.எல்லாம் தருணத்தில் ஒத்தோடும்.சோளம் மீசையுடன் நிற்காது.மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்றதுவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.வெள்ளை சிவப்புஇளநீலம் மஞ்சள்என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்றபூமரங்கள் கூடசமயத்திற்கொத்தாற்போலத் துப்பாக்கிச் சன்னத்தைஅரும்பி அரும்பிவாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும். குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்இளநீர் எதற்கு?மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்றதலைமுறைக்குள் சீவிக்கும்,கொய்யா முள்ளாத்தைஎலுமிச்சை அத்தனையும்நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. வற்றாளைக் கொடி நட்டால்அதில் விளையும் நிலக்கண்ணிவெண்டி வரைப்பீக்கைநிலக்கடலை தக்காளிஎல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,முகர்ந்தால் இறக்கும்நச்சுப் பொருளாகஎடுத்தால் அதிரும்தெருக்குண்டு வடிவாகஉண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்மனிதர் எவரிருப்பார்?கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்ஆட்கள் அன்றிருக்கார்!இவர்கள்பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்புராதன மனிதர்களாய்ப் போவர்.
இவ்வாறாக புலம்பெயர்ந்தோர் படைப்பிலக்கியம், பேரினவாத எதிர்ப்புக் கொள்கையையும் பெருந்தேசியவாதம் என்பது பின்னொருநாள் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல் உண்மையையும் இவற்றை ஆதரிக்கும் இலக்கியவாதிகள் உட்பட எவரும் போரழிவாம் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாமல் “பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்புராதன மனிதர்களாய்ப் போவர்” என்ற எச்சரிக்கையையும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

நன்றி: cOlaikkiLi (U. L. M. Atheek), kAkam kalaitta kanavu (in Tamil Script, Unicode format). E-text Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany & R. Padmanabha Iyer, London, UK. PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, SwitzerlandSource acknowledgement: Suvadugal Pathippagam, Herslebs GT-43, 0578 Oslo 5, Norway)

****
(புதுவைப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் பயிலரங்கத்தில் 29.01.2007 அன்று வாசித்தது)

27.10.06

உள்ளுறை உவமம் - தேவமைந்தன்

கண்ணே!

என்னூர் மலையின் பக்கம்

ஒருநாள் நான் கண்ட காட்சி இது.



ஒதுக்குப் புறமானதோர்

ஒற்றைப்பெரும் பாறை.

போயும் போயும் அதன்மேல்

சின்னஞ் சிறிய சிட்டுக் குருவியொன்று

மோதி மோதிப் பார்த்துச் சலித்தது.



எப்படிச் சொல்வது? எவ்வாறு தெரிவிப்பது?

கற்பாறைமேல் மோதாதே என்று..

சலித்துப் போனேன்..

புரிந்துகொண்டு பறந்துபோய் விடுமென

நம்பி இறங்கி வீடு திரும்பினேன்.



நெஞ்சுக்குள், மூளைக்குள் குடைச்சல்.

அறியும் ஆர்வம்.

ஓரிரு நாட்கள் கடந்தன வறிதே.



மீண்டும் மலையேறினேன்.

ஒற்றைப்பெரும் பாறை

ஓரம் திரும்பினேன்.

திடுக்கிட்டேன்.

நைந்துபோய் சின்னஞ்சிறிய அதனுடல்

ஈரமூறிய இறகுப் பந்தாய்

வன்பாறைதன் காலடியில்.


(தேவமைந்தன்,'புல்வெளி',1980)

எலிப்பொறி - தேவமைந்தன்

வடைக்காசைப் பட்டு
மாட்டிக் கொண்டாயிற்று.
உள்ளே ஓடிஓடி
கதவொடு மோதி
கம்பியை ஆட்டி
ஓய்ந்துபோய்ச் சுருண்டு
போனதும் தப்பில்லை. எப்படியும்
கோணி சுருக்கித்தான் கதவைத்
திறக்கப் போகிறார்கள்.
அதில்தான்
இன்னும்
ஆபத்துள்ளது.
அனுபவசாலிகள்,
ஓட்டைக் கோணியைத்
தவிர்த்து விடுவார்கள்.
கட்டையோடு சுற்றிலும்
நெஞ்சக் குறுகுறுப்போடு
முரட்டுப் பயல்களும் நிற்கக்கூடும்.
ஆகவே,
மிச்சமிருக்கும் சுவையுள்ள வடையையும் தின்று முடி. ஒருகை பார்ப்போம்.

அடுத்தவர் எல்லைக்குள்
எதை நாடியும்
மறந்தும் புகாதிருக்கத்
திட்டமிடு மனமே -
ஒருவேளை நாம்
வெற்றிபெற்று விடுவோம் என்றால்.

(தேவமைந்தன்,'போன்சாய் மனிதர்கள்',1993.)

ஞாலம் மறந்த மறதிப் பெருவெளி - தேவமைந்தன்

நினைந்து நடந்து முடிந்த நினைவுகள்

வனைந்து மிடைந்து விளைந்த முடிவுகள்

முகவரி இல்லா மொட்டை மடல்கள்

மயங்கிப் பிறரை மிதிக்கும் செயல்கள்

அகந்தை மிகுந்தே பிடிக்கும் அடவுகள்

பிறரைப் பொறாமல் கிளப்பும் பொய்கள்

வஞ்சக வாழ்த்தொடு

போலிமைப் புனைவுகள்

அனைத்தும் சிதைந்தே அடையாளம் இன்றி

மறைந்துட் கலந்தே காணாது போகும்

காலம் கடந்த பெருவெளி

ஞாலம் மறந்த மறதி வெளியே…

தமிழ்வினைக்கும் முறையான அழைப்பு வேண்டுமா?......- தேவமைந்தன்

'பெரிய்ய' மனிதரிடமிருந்து

அழைப்பு வந்தது;

இருந்துவிட்டேன். போகவில்லை..

***

அவர்களிடமிருந்து

அழைப்பு வரவில்லை;

போனேன்.

தமிழ்வினைக்கு

அழைப்பு முக்கியம்

அல்ல என்பதால்…

வள்ளல்களைக் காணவில்லை...... - தேவமைந்தன்

அன்றெல்லாம் வழங்கினராம்

அளவில்லாத கொடைகள்பல.

எதைக்கேட்ட போதினிலும்

அதைஅதை அந்தஅந்த முறைப்படி

வாரிவாரி வழங்கிடவே

வள்ளல்கள் வாழ்ந்தனராம்.

வாய்திறந்து கேட்காத

தேருக்கும் மயிலுக்கும்

நுண்ணுணர்வால் ஆராய்ந்து

கொடைகள்தாம் அளித்தனராம்.

இன்றைக்கு-

நாணக்கொடை இறக்குமதி நடிகையர்க்கும்

நேர்மைக்கொடை கட்சிகளின் தலைவர்கட்கும்

அறிவுக்கொடை ‘டவுன்லோடு’ எழுத்தாளர்க்கும்

நினைவுக்கொடை வாக்காளும் மக்களுக்கும்

உண்மைக்கொடை தொலைக்காட்சி நடத்துநர்க்கும்

‘லாஜிக்-கொடை,’ தொடர்களை இயக்குநர்க்கும் - தன்

மானக்கொடை மனிதர்கள் அனைவருக்கும்

கைசிவக்க வழங்குதற்கு

வள்ளல் இல்லையே.

ஈகைகளைச் செய்வதற்கு

மனமும் தொல்லையே…

புன்னகை பூக்கும் புல்வெளி மலர்கள்......- தேவமைந்தன்

தரையினில் பரந்த

பசுமை வானம்.

பசுமை வானில்

புதியவிண் மீன்கள்,

பலநிறம் பூக்கும்

புல்வெளி மலர்கள்.

நீங்கள்

நடக்கும் பொழுது

மிதிக்கும் பூக்கள்.

நடக்கும் பொழுது

மிதிக்காமல், சற்று

ஒதுங்கி நின்றே

உற்றுப் பாருங்கள்.

புன்னகை பூக்கும்

புல்வெளி மலர்கள்……

(1980.புல்வெளி.தேவமைந்தன்)

நட்புக்குரிய பூக்களுக்கு...... - தேவமைந்தன்

நட்புக்குரியீர்!

நீங்கள் -

எதன் வெளிப்பாடுகள்?

எதன் நோக்கங்கள்?

ஏதோ தோன்றி

ஏனோ மறையும்

இருத்தல்களும் போதல்களுமா

உங்கள் வாழ்க்கை?

பொருளற்றது என்று

புடவியிலெதுவும் எங்கும்

இல்லவே இல்லை.

பொருளற்றது! அது அப்படித்தான்!!

என்று சொல்லி விடுதல்

மிகவும் எளிது. ஆனால்

உங்களின் இருத்தல் எவரையும்

உறுத்தாதது.

எங்களின் இருத்தலில் நீங்கள்

உடன் உறைபவர்கள்.

ஆகவே நீங்கள் வாழ்க,

ஒருபகல், ஓரிரவுப்

பொழுதேனும்……

(1993.போன்சாய் மனிதர்கள். தேவமைந்தன்)

16.10.06

முதுமை வயது எல்லோருக்கும் வருமே!

முதுமை வயது எல்லோருக்கும் வருமே!
- தேவமைந்தன்

மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப் போன்ற நம்பிக்கைகளைத்தான் மூடநம்பிக்கை என்று சொல்ல வேண்டும். ஏதோ தான் மட்டுமே இந்த உலகில் கோலோச்சிக்கொண்டிருப்பது போன்ற பிரமையில், அடுத்தவர்களைப் பற்றிய தீயசெய்திகளை நாள்தோறும் ஒலிபரப்பிக் கொண்டிருத்தல் என்பது இதைவிடவும் தேவையில்லாத நடவடிக்கை. இதைத்தான் அருணகிரிநாதர் தம் கந்தரநுபூதியில் 'ஜெகமாயை' என்ற சொல்லால் குறிப்பிட்டார்.

பொதுவாக நாள்தோறும் பேருந்துகளில் செல்லும்பொழுது, "என்ன, பெரிசு! அக்கடா'ன்னு வீட்டில இருக்கலாம்'ல? எதுக்கு இப்படி வெளிய'ல்லாம் போயி 'லோல்பட்டு லொங்கழியிறே!" என்ற இரக்கத் தொனியில் அமைந்த, ஆனால் இரக்கமே இல்லாத, ஏதோ தான்மட்டும் நிரந்தரமாக இளமை - இனிமை- வலிமை - புதுமைகளுடன் முரட்டுத்தனமான மாநகரப் பேருந்துகளை ஜல்லிக்கட்டில் அடக்கி ஓடவிட்டிருக்கிற 'வஸ்தாதுகள்' மாதிரிப் பேசுகிற இளசுகளின் குரலைக் கேட்டிருக்கலாம். அதைவிடவும் பரிதாபம், அப்படியொரு இளசின் பேச்சுகளைக் கேட்டுவிட்டுத் தன் தோழியிடம் பரிகாசம் பண்ணும் 'காலேஜ் கொண்டாட்ட'த்தின் 'காமெண்ட்' - " ஆமா! இவரே ஒரு 'குவெஸ்ச்சன் மார்க்' மாதிரி இருந்திட்டு, அந்தப் பெரியவரை 'ஒடுக்கு எடுக்கிறத'ப் பாத்தியாடா?[ 'டீ' என்று பேசியது, அந்தக் காலம்] - எதிர்வினை - வினை விதைத்த இளசின் காதுகளில் விழாமல் போவதுதான்.

முதுமை வயது என்று பத்திரிக்கைகள் சில நிர்ணயித்துள்ள வயது ஐம்பது. முதியோர் பென்ஷன் பெறும் வயது மாநில அரசுகளால் அறுபத்து ஐந்திலிருந்து ஐம்பத்து ஐந்து வரையிலும் குறைக்கப்பட்டு விட்டது. புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே முதியோர் பென்ஷன் பெறும் வயது அறுபதாகத்தான் இருந்தது. இப்பொழுது புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அதை மீண்டும் ஐந்து குறைத்து, ஐம்பத்து ஐந்து வயது ஆக்கியுள்ளார். புதுவை அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது அறுபத்து இரண்டு என்பது தெரிந்ததுதானே.. ஆக. முதுமை முதிர்ந்தபின்னும் ஏழாண்டுகள் பணியில் இருக்கிறார்கள் அவர்கள்.

திரு.வி.க. அவர்கள் 'முதுமை உளறல்' என்ற நெடுங்கவிதை படைத்திருக்கிறார். அதில் அவர் தன் முதுமை குறித்தும் அந்த நூல் அந்த வயதில் வருவது குறித்தும் சொல்வது, கண்களைக் குளமாக்குகிறது.
அறுபத் தாறினில் சிறுபரல் ஆணிப்
படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது;
பழைய வண்ணம் விழிகள் நோக்க
எழுதும் பேற்றை இழந்தனன் பாவி!
உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன்
உளறலும் நூலாய் வெளிவரு கின்றது;
ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில்
'பரம்பொருள்' நூலைப் பகர்ந்தனன் உரையால்;
இரண்டு கண்ணொளி வறண்டஇந் நாளினில்
'இருளில் ஒளி'யைக் குறள்வெண்பாவால்
'இருமையும் ஒருமையும்', 'அருகன் அருகே'
'பொருளும் அருளும் - மார்க்கிஸ் காந்தி''
'சித்தந் திருந்தல் - செத்துப் பிறத்தல்'
என்னும் நூல்கலைப் பன்னினன் அகவலால்;
............. .................. ................. .................
பகலில் பல்பணி மிகமிகச் செய்து
நிசியில் எழுத்துப் பசியைத் தீர்ப்பன்;
தூக்கத் தேவி தாக்கினள் என்னைக்
கடந்தன ஆண்டுகள்; படர்ந்தது படலம்;
எனதே குற்றம் எனதே குறையும்
இயற்கை ஒறுத்தலைச் செயற்கை என்செயும்?
படுக்கையில் கிடந்து விடுக்கும் சொல்லால்
ஆகும் நூலில் ஏகும் பிழைகள்;
பொறுக்க புலவர் பொறுத்தே அருள்க."
[தடிமனான எழுத்துகள், 'முதுமை உளறல்' முதற்பதிப்பில் உள்ளவாறே இங்கும் இடப்பெற்றுள்ளன.]

நூல் வெளியான 1951ஆம் ஆண்டில் 'காடரேக்ட்' என்னும் கண்விழிப் புரைநோய், பிரம்மாண்டமானதாக பலரை அச்சுறுத்திக் கொண்டிருந்தது; தவிர, நெடுநேரம் கண்விழிப்பதால்தான் படலம் தோன்றி வளர்கிறது என்ற நம்பிக்கையும் இருந்து வந்திருக்கிறது. இன்றோ நீரிழிவுதான் அதற்கு முக்கிய காரணம் என்று அறிவுறுத்துவதுடன், மிகச் சிறந்த அறுவை மருத்துவமும் தரப்படுகிறது. அதிக நேரம் கண்விழிப்பது அல்லது போதுமான தூக்கம் தூங்காமல், தொடர்ந்து கெடுத்துக் கொள்வதால் மனத்தின் சமநிலை தாக்கப் படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.

இன்னொரு வேடிக்கை தெரியுமா? இதை நானும் என் நண்பரும் கண்டறிந்தோம். முறையாக பிஹெச்.டி செய்து முடிப்பவர்களுக்கும் இந்த முதுமைநிலை[senility]யின் தாக்குதல்கள், அவர்கள் சிறிய வயதினராயிருந்தாலும், ஏற்படுகின்றனவாம். அவை:
1. மறதி அதிகமாதல். குறிப்பாக, எதையாவது எங்காவது எப்பொழுதும் தொலைத்துவிட்டு அது பற்றியே சிந்தித்தவாறு இருத்தல். அப்படிச் சிந்தித்துக் கொண்டே இருக்கும்பொழுது மேலும் புதிய பலவற்றை ஒவ்வொன்றாகத் தொலைத்தல். பிறகு, எங்கே எதைத் தொலைத்திருக்க வாய்ப்பில்லையோ அங்கே சென்று அதைத் தேடுவதோடு அங்குள்ளவர்களை விசாரித்து அவர்களையும் ஒருவழி பண்ணுதல்.
2. அஞ்சல் பெட்டிக்குள் அஞ்சலைப் போட்டுவிட்டு, வெளியே தப்பி விழுந்திருக்கிறதா என்று, பிறருக்குத் தெரியாமல் நோட்டம் விடுதல். உண்மையிலேயே வயது அதிகமானவர்கள் இதற்கெல்லாம் கவலையே பட மாட்டார்கள்.
3. தன்னிடம் பேசுபவர்கள் பேச்சைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல், நிறைய அடிக்குறிப்புகள்(footnotes) மற்றும் அதிகமான - அல்லது, ஒவ்வொன்றுக்கும் "இதைப்போலத்தான்.." என்று தொடங்கி அதிகமான ஒப்புநோக்குதல்கள்(references) தருதல். மேலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருத்தல்.

"பெரிசா சொல்லவந்துடாருடா மாமே!..." என்று எவர் என்னை 'நொட்டை எடுத்தாலும்' பரவாயில்லை.. அவர்களுக்குப் பணிவன்புடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

எனக்கே மேற்படி வயணங்கள் பொருந்தும் என்பதால்தானே, இப்படி ஆகப் பட்டவற்றை செவ்வனே மொழியவும் வரிசைப்படுத்தவும் ஆச்சுது?

****
நன்றி: திண்ணை.காம்

தமிழரின் விடுகதைகள்:நாநவில் இலக்கியம்

தமிழரின் விடுகதைகள்: நாநவில் இலக்கியம்
-பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)

தமிழ் நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்னும் காலங்காலமாய் ஒருவர் மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது.
தேய்வு மறைவு அறியா இந்த நாநவில் மொழிகளைப் பண்ணத்தி என்று அழைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழ் இலக்கணிகள். விடுகதைகளைப் ‘பிசி’ என்றும் பழமொழிகளை முதுமொழி என்றும் பகுத்து அழைத்தனர்.
‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட்டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்ட ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். அவர்களுள் பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் ஜே.கே.வேதமுத்து[1971,1975], பி.ஜி.எஸ்.மணியன்[நான்காம் பதிப்பு 1974] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் பதிப்பாசிரியராக விளங்கி 1975ஆம் ஆண்டில் வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்து பதிப்பித்தார்.
புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து நூலாக 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.
முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளை, பாலியல் தன்மை வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னனானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அண்மையில் அதை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964 ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். முனைவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். மேலே குறிப்பிட்டாற்போல் புதுச்சேரி விடுகதைகளை முனைவர் அ. கனகராசு அவர்களும், கொங்கு விடுகதைகளை முனைவர் தி. பெரியசாமி அவர்களும் மிகவும் சிறப்பாக ஆராய்ந்துள்ளனர்.
“விடுகதை என்பது விடுவிக்கவேண்டிய புதிர்” என்று அறிஞர் மு.சண்முகம் பிள்ளை அவர்கள் கூறிவிடுகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர். குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.(கொங்கு விடுகதைகள், ப.iii)

மிகச் சிறந்த விடுகதைகள் சில

1. குழந்தைச் சுமை:
தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?" என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.[த.வி.,2327]
கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?" என்று கேட்டால் அந்த விடை கிடைக்கும்.[கொ.வி., 604]
புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.[பு.மா.நா.வி.கா.ம.வா., 93]
இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்'' என்பது பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.

2. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு:
புதுச்சேரிச் சிற்றூர்களில் வழங்கப்படும்,
"பச்சைப் பச்சை டாக்டர்
எங்க டாக்டர்
குண்டு குண்டு டாக்டர் எங்க டாக்டர்
வெள்ள வெள்ள டாக்டர்
எங்க டாக்டர் - அது என்ன?"[பு.மா.நா.வி.கா.ம.வா., 287]
என்பது வெற்றிலை பாக்கு சுண்ணாம்பைக் குறிப்பதாகும்.
கொங்கு நாட்டுச் சிற்றூர்களில்,
"ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு இவளெக் கட்டி
கொஞ்சி விளையாடக்
கொழுந்தியாளக் கட்டி"[கொ.வி., ப.96]
என்று இது குறிப்பிடப் பெற்றாலும், புகையிலையோடு இம்மூன்றும் போடப்பட்டால் என்ன ஆகும் என்பதற்கு,
"ஆசைக்கு அவளெக் கட்டி
அழகுக்கு மகளெக் கட்டி
கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி
சேர்ந்து வாழ நங்கையா*ளக் கட்டி
நாலு பேருஞ் சேர்ந்து
நாசமாப் போயிட்டாங்க - அது என்ன?"[கொ.வி., ப.96]
[*நங்கையாள் = அண்ணனுக்கு மனைவி; கணவனின் அக்காள்; மனைவியின் அக்காள்]
வேறு ஓர் இணைப்பு விடுகதை உள்ளது.
புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
"ஓகோ லேலோ
உயர்ந்த லேலோ
கண்டந் துண்ட
சப்லட் லேலோ - அது என்ன?"
என்று கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சுட்டப்பெறுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,
"உச்சாணிக் கிளையிலே
ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"
என்ற விடைக்குரியதாகிறது.
தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,
"சின்ன சிறுக்கியும்
சின்ன பையனும்
சிரித்துக் கட்டின தாலி
சிக்கில்லாமல் அவிழ்த்தவர்க்குச்
சென்னப் பட்டினம் பாதி - அது என்ன?"
என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக்கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முகாமை இருந்திருக்கிறது.[பு.மா.நா.வி.கா.ம.வா., ப.94]
புதுச்சேரி சார்ந்த சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்

முப்பட்டைச் சுரண்டலும் ஆணியமும்
- தேவமைந்தன்


வீட்டிலும் வைகறைக்கு முன்பே
வேலை தொடக்கி,
கணவனெனும் மேலதிகாரிக்கு
வேண்டிய தட்டை வாகாக வைத்து,
அதன்மேல் தேவையறிந்த
சிற்றுண்டியை முகம்பார்த்து வைத்து,
சூடாய்க் குடிநீரும் சுக்குநீரும் காபியும்
கொண்டுவந்து வைத்து,
‘மூடு’அறிந்து
“ஏங்க போய் வரவா?” -
விலுக்விலுக்கென்று தோளில்
புடைத்திருக்கும் பைதொங்க,
அதிலொரு அழுக்கான
‘வாட்டர் பாட்டில்’ மூடி
தலைநீட்ட,
அவசரப் பவுடர் பூச்சு
மயில் கழுத்து வரிகள்போட,
தாறுமாறாய் ‘டூவீலர்’ கிளப்பி,
‘அவனை விடவும் அதிக சம்பளம்’
போவது, அலுவலக
மேலதிகாரியிடமும் திட்டுவாங்கவா..

இரட்டைச் சுரண்டலும் போய்,
முப்பட்டைச் சுரண்டல் - இப்பொழுது
எண்ணற்ற பெண்களுக்கு.
காரணம், அவர்கள் வாங்கத்
தயாராகவுள்ள போலிச் சம்பளத்தை
ஆண்களுக்குத் தரமுடியுமா?
சொல்லிவைத்தாற்போல் எப்படி
சகோதரிகள் பலரும்
ஆகவும் குறைந்த சம்பளத்துக்கு
அதிகஅதிகமாய் வேலைவாங்கும்
விளக்குகளுக்கு விட்டில்கள் ஆகிறார்கள்?
இதில்வேறு “போன் எதுவும் பேசாதே!
லஞ்ச் டயமானாலும்..”

‘வெரி ஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிடூஷன் சார்!” -
இளித்துக் கொண்டு சொல்கிறார்கள்,
அதிக சம்பளம் குறைந்த வேலைக்கு
வாங்கும் ‘புண்ணியங்’கள்.

பெண்ணியம், அரசாங்கம் போல்.
சாதனைப் பெண்கள் கலர்கலராய்
வார இதழ்களில்.

ஆமாம்..திருவள்ளுவரே!
“இருவேறு உலகத்து இயற்கை”..
மெத்தவும் சரிதான்.

கோலெடுக்காமல் மிரட்டினார் என்
பெண்ணியத் தோழி...
“பெண்களைச் சுரண்டுபவர்கள் ஆண்கள்தாம்;
பெண்களைப் பெண்களே சுரண்டுவது
போலத் தான்றவும் தோன்றும்தான்;
அதற்குப் பின்னாலும்
இருப்பது ஆணாதிக்கமே...

“அம்மா சொன்னால் இவன் ஏன் வாங்குகிறான்?
அம்மா ஊற்றினால் இவன் ஏன் கொளுத்துகிறான்?”

-ஆமாம் என்று சொன்னால், அதுவும்
ஆணாதிக்கத்தின் பாசாங்கேதான்.
-இல்லை என்று மறுத்தாலோ
அது ஆணாதிக்க மூர்க்கம்....

“அது சரி கம்ராது!*
இந்தக் குறைஞ்ச சம்பளத்துக்கு
இத்தனைபேர் போறாங்களே!..”

“ஏம் போறாளுவ..
ஆம்பள வெரட்டாம வெரட்டறான்..”

***
கம்ராது = ‘தோழா’ என்பதற்கான பிரஞ்சுத் தமிழ்ச்சொல். தோழமை மிக்க ஆண்களும் பெண்களும் பிரான்சிலும் புதுச்சேரியிலும் இவ்வாறு பேசிக்கொள்வதுண்டு.

19.9.06

ஒரு மனிதரின் வாழ்க்கை - தேவமைந்தன்

"குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்..." - டேவிட் லிண்ட்சே(David Lindsey)

இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.அறிவோம். வாழ்வோம்.

13.9.06

அன்புள்ள மதுமிதா அவர்களுக்கு

அன்புள்ள மதுமிதா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் - வலைப்பதிவுகள் குறித்த ஆய்வில் ‘தேவமைந்தன்’ என்ற - http://httpdevamaindhan.blogspot.com என்னும் யு.ஆர்.எல். - ஐ உடைய இந்தப் பதிவையும் சேர்த்துக் கொள்ளவும்.
நன்றி.
அன்புடன்,
தேவமைந்தன்
(அ. பசுபதி)

உடம்புடன் புகுந்தேன் சொர்க்கம்

தென்றலாய் ஒரு தேன்மூச்சு
கழுத்தின் விளிம்புகள் வருடும்
காது மடல்களைக் கூசும்
மேலிதழ் நாசி இடையில்
மேலும் கீழும் நடுவுமாய் நிலவும்
முகநிலம் அதன்மேல் விளையாடும்
மோவாய் பதியும் மென்சுளை
குறுகுறுக்கும் முன்கழுத்து
பிடரிலும் பரவும்
அது கன்னம் வருடும்
பிஞ்சு விரல்கள்
முதிரா இளஞ்சொல்
''தா..தா..''என்னும்
கள்ளமிலா விழிகள்
கதைபல பேசும்மலரும்
உடம்புடன் புகுந்தேன் சொர்க்கம்.

நன்றி: மரத்தடி.காம்

செருப்பாலடித்த சமூகம் - - தேவமைந்தன்

பசித் தளர்ச்சியில்
பாதி மயக்கத்தில்
இணையம் உலாவிவிட்டு
திரும்பிக் கொண்டிருந்தேன்,வீட்டுக்கு.
விமானதளச் சாலைஇறக்கத்தில்
தெரு முடுக்கொன்றில்
உள்ளாட்சித் தேர்தலுக்குமுன்புவரை
குப்பைத்தொட்டி ஒன்றிருந்தஇடத்தில்,
நடுத்தர வயதுக்குப்பை பொறுக்கும் பெண்
சொந்தமாய் ரகசியங்கள் எதுவும்
வைத்துக்கொள்ள வாய்ப்பில்லாமல்
மல்லாந்து கிடந்தாள்.
மனிதம் உந்த அருகில் சென்றேன்.
“ஏன்’மா - சாராயமா?எ(ழு)ந்திரு எ(ழு)ந்திரு..”என்றேன்.
கொஞ்சம் தற்காலிகமாகவும்
மிச்சம் போனால் போகிறதென்றும்
பாதிக்கண்களின் மீதி திறந்தாள். உளறினாள்.
“மிஸ்’ஸே!* எம் புருஷனுந்தான் ஊத்திக்கிணு
ஊத்திக்கிணு பூட்டான்..அவனெ கேக்காம வுட்டுட்டு
என்னெ வந்து கேக்(கி)றீயே!
நீயும் ஆஞ்சாதி’ங்குறதிமிருதானே?”

பக்கத்தில் நடந்து வந்தவர்சொன்னார்:
“நீங்க பாட்டுக்குபோக வேண்டியதுதானே?
இதுங்களுக்கெல்லாம் நல்லது சொன்னால்
மண்டை’ல ஏறுமா?
சாதாரணமா’வே ஏறாது!இதுல சாராயம் வேற!
போவீங்களா..ம்...ம்”

கேட்டேன் அவரை,நறுக்கென்று:
“நீங்கள்’லாம் பாத்துட்டு மட்டும் போறதுக்கா
அவ’ அப்படி அங்க கிடக்கா?
சொல்லட்டுமே..தப்பாவா சொன்னா?
ஞாயமான கேள்விதானே?
புருஷன் குப்பை பொறுக்கினாரு.
அவரு போனப்புறம்பொண்டாட்டியும்
குப்பை பொறுக்கணுமா?
விபத்துல போனா இத்தனை பணம்-
மனுஷனுங்கனுங்க உண்டாக்குற
அழிம்புலபோனா இத்தன லட்சம்’னு அறிவிக்கிறாங்காளே!
இந்த ஜீவன்களுக்குஎந்த ஞாயமும் இல்லியா?”
கேட்டுவிட்டு விடுவிடுவென நடையைக் கட்டினேன்.
செருப்பால் அடித்த சமூகம்.

(மிஸ்ஸே = ஐயா/'சார்' - புதுச்சேரி பிரஞ்சுத்தமிழ்ச் சொல்)

நன்றி: கீற்று.காம்

பிரான்ஸ் 1942: பிள்ளைகளும் பெற்றோரும்

பிரான்ஸ் 1942: பிள்ளைகளும் பெற்றோரும்: ஆந்த்ரே ழீத் நாட்குறிப்பு
தமிழில்: தேவமைந்தன்

(ஆந்த்ரே ழீத் - பிரஞ்சு இலக்கியவாதி 1947இல் நோபல் பரிசு பெற்றவர். பரிசு பெறக் காரணமான நூலை ஆங்கிலத்தில் பி.ஏ. லென்ஸ்கியும் தமிழில் ம.இலெ.தங்கப்பாவும்[‘மண்ணின் கனிகள்’] மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பெழுதி வைக்கும் வழக்கமுடையவர் ஆந்த்ரே ழீத். ஆங்கிலத்தில் ஜஸ்டின் ஓ’பிரியன் மொழிபெயர்ப்பில் இக்குறிப்புகள் பல பாகச்ங்களாக வெளிவந்துள்ளன.)

ஏப்ரல் 10,1942.

பிரான்ஸில் பிள்ளைகள் மிக மோசமாக வளர்க்கப்படுகிறார்கள் என்று நான் எப்பொழுதும் நினைப்பேன். அது சம்பந்தமாக, பிரெஞ்சுக்குடும்பங்களைக் குறை கூறுவதுண்டு..

பொதுமக்களின் பூங்கா சிதைக்கப்படுகிறது. பாதுகாப்பில்லை. குழந்தைகள் புல்வெளிகளின் குறுக்கும் மறுக்கும் ஓடுவதோடு அவற்றின் சீரான தன்மையைச் சிதைக்கவும் செய்கின்றனர். மரங்களின் கிளைகளை ஒடித்து வீசுகின்றனர். பூத்திருக்கிற புதர்ச்செடிகளின் பூமொட்டுக்களைப் பிடுங்கி வீசுகின்றனர்.

பெற்றோர் எவரும் இந்த அக்கிரமத்தைக் கண்டுகொள்வதோ, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுவதோ இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பூங்காவின் அழகை நுகரும் பக்குவம் இல்லை.

அவர்கள் பிள்ளைகளின் செயல், பிறருக்கும் சொந்தமான எதையும் ‘சும்மா’ அழிக்கின்ற செயலே. பிரெஞ்சுக் குணம் என்று இதை நாம் கொள்ளக் கூடுமா? இல்லை.. “பிரெஞ்சுக்காரர்களுக்குப் பிள்ளைகள வளர்க்கத்தெரியவில்லை - அவ்வளவுதான்!” என்று விட்டுவிடலாமா?

ஒரு தேசம் - தான் பெற்ற சுதந்திரத்துக்கு இப்படிப்பட்ட பிள்ளைகளாலும் பெற்றோராலும் தகுதி அற்றுப்போனது.

அதனால்தான் பிரஞ்சுக்காரர் ஒருவர், எங்கும் எப்பொழுதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு, காவல்துறையைத் தேடித் தேடிப் போக வைக்கிறது. அதுமட்டுமா? எங்கு பார்த்தாலும் வகைவகையான வேலிகளைப் போட வைக்கிறது.

“இங்கே இதைச் செய்யாதீர்!” அறிவிப்புப் பலகைகளை எங்கு பார்த்தாலும் மாட்டிவைக்கச் செய்கிறது.

நன்றி: கீற்று.காம்

புதுச்சேரி மாநிலப் பழமொழிகளை அடையாளப்படுத்துதல்

புதுச்சேரி மாநிலப் பழமொழிகளை அடையாளப்படுத்துதல்- பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்)

இன்றைய புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாஹி யேனாம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. பிரஞ்சுக் குடியேற்றமாக விளங்கியதன் ஆரோக்கியமான அடையாளங்களையும் பெற்றுள்ளது. புதுச்சேரியும் காரைக்காலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்டது. நாம் பார்க்கும் பழமொழிகள் புதுச்சேரியிலும் காரையிலும் புழங்கும் - வழங்கும் தமிழ்ப்பழமொழிகள். அவற்றில் ஏற்பட்டுள்ள பிறமொழித் தாக்கம், குறிப்பாக பிரஞ்சு தெலுங்கு ஆகிய மொழிகளின் தாக்கம் மிகுதியாகவும் மலையாள(மாஹி)மொழியின் தாக்கம் இல்லாது போகவும் மேற்குறிப்பிட்ட யூனியன் எல்லைப் பகுதி - குடியேற்றம் ஆகிய காரணங்களைச் சுட்ட முடியாது என்பது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியதாகும். தமிழகத்துக்கும், தமிழ்பேசும் பகுதிகள் பலவற்றுக்கும், புதுச்சேரி-காரைக்காலுக்கும் பொதுவான தமிழ்ப்பழமொழிகள்; புதுச்சேரிக்கே உரிய பழமொழிகள் என்று புதுச்சேரிப் பழமொழிகளை இரண்டு பகுதிகளாகப் பகுக்கலாம்.தமிழகத்துக்கும், தமிழ்பேசும் பகுதிகள் பலவற்றுக்கும், புதுச்சேரி-காரைக்காலுக்கும் பொதுவான தமிழ்ப்பழமொழிகள்:இத்தகைய பழமொழிகள் சிலவற்றை இங்கே தருகிறேன்.“பறி நெறைஞ்சா கரையேறுவேன்.” புதுச்சேரியிலுள்ள ஏரி, குளப்பகுதிகளில் புழங்கும் இந்தப் பழமொழியின் பூர்விகத்தை 1886-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சிவப்பிரகாசபண்டிதர் இயற்றி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் - யாழ்ப்பாணம் சைவப் பிரகாச சபையின் மூலம் 1893இல் பதிப்பித்த ‘பாலபாடம்’ நூலில் பார்க்கலாம். நடையழகு கருதி அதை அப்படியே தருகிறேன்:“எந்த உயிரையும் கொல்லாத ஒரு துறவி ஓர் ஏரிக்கரைமேற் சென்றார். அப்போது மீன் பிடிப்பவன் ஒருவன் அந்த ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அத்துறவி அவனைப் பார்த்து இரக்கமுற்று, “ஐயோ! நீ எப்போது கரையேறுவாய்,” என்றார். அவன், “ ஐயா! என் பறி நிரம்பினாற் கரை ஏறுவேன்,” என்றான்.”ஆக, நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் நன்கு புழக்கமாக இருந்த சிறார்க்கான கதையிலிருந்து இப்பழமொழி உருவானது என்று எடுத்துக்கொள்வதை விடவும், நன்கு புழக்கத்திலிருந்த அப்பழமொழியிலிருந்தே அக்கதை உருவாக்கப்பெற்றது என்று கொள்வது மிகவும் பொருத்தம்.‘பானைச்சோற்றுக்கு பதமொன்று’ என்ற நியாயப்படி சான்று ஒன்றை விளக்கமாகப் பார்த்தோம். மற்றவை:சாதியுணர்ச்சியால் மொழியப்பெறுபவை:பள்ளிக்குப்பத்துக்கு அம்ம(ப)ட்ட(ன்) வாத்தி (பாகூர்)பள்ளிக்குப் பல்லு பா(ர்)ப்பானுக்கு முழுக்கு (தொண்டமா[ன்]நத்தம்)பள்ளி கையில பணமிருந்தா பாதி ரத்திரி’ல பாடுவான் (புதுச்சேரி)ஏறும்போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி (மங்கலம்)சோழியன் கும்முடி சும்மா ஆடுமா? (மங்கலம்) [கும்முடி < குடுமி]கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி (ஐயன்குட்டிப்பாளையம்)முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} தமிழ்நாடுசெட்டியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} காரைக்கால்உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான் (காரைக்கால்)செத்தாத்தான் தெரியும் செட்டியார் வாழ்வு (காரைக்கால்)உடையார் ஊட்டு மோருக்கு ஆப்பைக் கணக்கு இன்ன? (பாக்கமுடையான்பட்டு)ஊருக்கு ஒழைக்கிறவங் கிராமணி (மங்கலம்)முத்துமுத்துக் கிராமணி பேச்சு வூட்டுக்குப்போனா வண்டை வண்டைதா[ன்] (பெரிய சந்தை)கிள்ளி எடுக்க சதை இல்ல பேரோ தொந்தியா பிள்ளை (கோவிந்தசாலை)கூப்புடலேன்னு கோவிச்சுக்காதீங்க, மிஸ்சியே!கூப்புட்டேன்னு வந்துடாதீங்க (புதுச்சேரியில், படித்தவர்களின் வட்டாரத்தில் புழங்குவது. 'மிஸ்சியே' என்பது 'ஐயா'/ 'சார்' என்பதற்கான பிரஞ்சுத்தமிழ்ச்சொல்.) திசைகளில் வாழ்பவர்களின் செயல்களால் வெறுப்புற்றுச் சொல்லப்படுபவை:வடக்கத்தியானையும் வயித்து வலியையும் நம்பக்கூடாது. (மங்கலம்)தெக்கத்தியானுக்கு பெண் கொடாதே தெக்கத்தியானொட பெண் எடாதே (புதுச்சேரி)தெக்கத்தியான் சம்பந்தம் தெருவோரம் சம்சாரம் (புதுச்சேரி)என்னடி அம்மா தெக்கத்தியா எப்ப பாத்தாலும் தொள்ளக் காது? (புதுச்சேரி)தொழில் அடிப்படையிலானவை:கம்பத்துல ஏறி ஆடினாலும் கீழ எறங்கி வந்துதான் காசு வாங்கணும் (காரைக்கால்)ஊருக்கு ஒரு தேவடியா ஆருக்குண்ணு ஆடுவா (காரைக்கால்)எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி கழனிப்பானயில வுழுமாம் துள்ளி (காரைக்கால்: சோதிடர்பற்றி)உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான் (காரைக்கால்)இடையனுக்குப் புத்தி பிடரியில (காரைக்கால்)கம்புக்கு கள எடுத்த மாதிரியும் ஆச்சு; தம்பிக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு (காரைக்கால்)கப்பக் காரன் வாழ்வு காத்தடிச்சா போச்சு (காரைக்கால்)புரோகிதம் பண்ணி [அய்யர்] கொண்டாற பொருளுக்கு அறுபத்தாறு பை (பஜனைமடம்)புதுச்சேரிப் பழமொழிகள் - பொதுவானவைகுந்தன இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டான் குயிலாப்பாளையத்தான்அவனுக்கு ஏழுகாணி விஸ்தாரமாம் சந்தனப்பொட்டு (செல்லிப்பட்டு)சலிப்போட சம்மந்தி இழுத்தாளாம் இலைபறிக்க (மங்கலம்)ஆந்தநேயம் கைகாட்டி(மங்கலம்) [‘ஆந்தனையும் கைகாட்டி’ - வைணவப் பயன்பாடு]தான் போறது உத்தமம், தம்பி போறது மத்திமம், ஆளு போறது அத்துவானம் [மங்கலம்]ஆரால கெட்டே? நோராலே கெட்டே. [ஆராலே கெட்டேன்? நோராலே கெட்டேன் - என்று சொல்வதும் உண்டு. ‘நோராலே’ ( = வாயாலே) என்ற தெலுங்குச் சொல் இலாசுப்பேட்டையில் மூன்று தலைமுறைகளுக்குமேல் வாழும், தெலுங்கு தெரியாதவர் வாயில் புழங்குகிறது.]ஊருக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிட்ட’தா [தெலுங்குத் தமிழர் சொல்வது]ஈயத்தப் பாத்து இளிச்சதாம் பித்தள [புதுச்சேரி]வைத்தியருக்கு ஊரெல்லாம் சிநேகிதம் [புதுச்சேரி]ஆடு அரைநாழி மாடு மத்தியா(ன்)னம் [இலாசுப்பேட்டை; பொருள்= வாங்கிக் கொடுத்த பொருளை சீக்கிரமா வீணாக்கி விட்டால் பெரியவர்கள் சொல்வது]ஆளானாலும் ஆள் அரியாங்குப்பத்து ஆள் [திம்மப்பநாயக்கன்பேட்டை]பாத்தா ஒரு வேல பாக்காட்டா ஒரு வேல [இலாசுப்பேட்டை: பொருள்= பணியாளர்கள் செயல்]முன்னால ஒன்னு பின்னால ஒன்னு [தட்டாஞ்சாவடி: பொருள்= நமக்கு வேண்டியவர், நமக்கு முன்னால் ஒரு மாதிரியாகவும்; நமக்குத் தெரியாமல் மாறான மாதிரியாகவும் நடந்து கொள்வது]ஆளிக்காரன் ஆளியேத்தறான் போலிக்காரன் போலியேத்தறான் [இலாசுப்பேட்டை: பொருள்= அவனவன் வேலையை அவனவன் பார்க்கிறான் - மற்றவர்களைப் பற்றி எங்கே கவலைப்படுகிறார்கள்?]கெரடி கத்தவன் இரடி வுழுந்தா அதுவும் ஒரு வித்தை’ம்பான். [இலாசுப்பேட்டை: கெரடி=கரடிவித்தை/சிலம்ப வித்தை; இரடி=இடறி] வெக்கங்கெட்ட பொண்டும் வெக்கப்பட்ட வேசியும் வேலக்கு உதவ மாட்டாங்க (புதுச்சேரி)வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தா வுழுந்து வுழுந்து கும்பிடணும் (புதுச்சேரி)உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல முழிக்கிறயே (புதுச்சேரி)ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு அய்யங்காருக்கு மூணுகொம்பு (புதுச்சேரி)என்னக் கெடுத்தது நரெ எம் மவளெக் கெடுத்தது மொலெ (செக்குமேடு)தேவடியா இருந்து ஆத்தா செத்தா கொட்டுமுழக்கு தேவடியா செத்தா ஒண்ணுமில்லே (செக்குமேடு) பழய மொறத்துக்கு சாணி கெழக்கொடலுக்கு சோறு (காரைக்கால்)ஊருக்குள்ளது உனக்கு (காரைக்கால்)சீலைப்பாய் ஈழம்போய் சீனி சர்க்கரை கட்டுமா? (காரைக்கால்) [உச்சரிப்பு: ஜீனி < சீனி]ஆண்டி குண்டியத் தட்டுனா பறக்குறது சாம்பல் மட்டுந்தான் (காரைக்கால்: கோவில்பத்து: சீமான் சுவாமிகள் ஒடுக்கம் அருகில் சாமியார் ஒருவர் சொன்னது)முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} தமிழ்நாடுசெட்டியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} காரைக்கால்கைக்குக் கை நெய் ஊத்தனாலும் ஊங்கணக்கு வேறதாண்டி’ன்னானாம் (ஐயன்குட்டிப்பாளையம்)வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்கு பின்னால நின்னாளாம் (ஐயன்குட்டிப்பாளையம்: 'வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்குக்குப் பின்னால அலைஞ்சமாதிரி' என்றும் சொல்வதுண்டு)ஆத்துல வருது மணல்ல சொருவுது (ஐயன்குட்டிப்பாளையம்) [இதை, 'ஆத்திலே ஊருது மணல்'லே சுவறுது' என்றும் 'ஆத்துல வெளையுது மணல்ல சிதறுது' என்றும் சொல்வதுண்டு]*ஆத்தாளுக்கு ஒரு சீத்தாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்ட (சோலைதாண்டவன்குப்பம்)*ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு அடைப்பக்காரனுக்கு ஒரு தொடப்பக்கட்ட(தமிழ்நாடு)*ஆட்டாளுக்கு ஒரு சீட்டாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை (மங்கலம்)உள்ள புள்ளயே ஒரல நக்கியிருக்க, மற்றொரு புள்ளைக்குத் திருப்பதி நடந்தானாம் (சோலைதாண்டவன்குப்பம்)*கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பாக்க போறானாம்(சோலைதாண்டவன்குப்பம்)ஆளப்பாத்தா அழகு போல வேலையப் பாத்தா எழவு போல (மாத்தூர்)நெல்லு வேய்க்க நெனவில்ல அரிசி அளக்க அறிவு இருக்கு (ஐயன்குட்டிப்பாளையம்)*கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி (ஐயன்குட்டிப்பாளையம்)வவ்வாமீனும் வஞ்சிரமும் வலையக் கொண்டு போகுதே’ன்னானாம் (சின்ன காலாப்பட்டு)எண்ணையாவறதுக்கு எள்ளுதான் காயுதுண்ணா எலிப்புழுக்கையுமா? (முருங்கப்பாக்கம்)நாத்தச் சாணிய மிதிப்பானே(ன்)? நல்ல தண்ணிய வீணத்துக் கழுவகொட்டுவானே(ன்)? (பாகூர்)செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்துப் பண்ணின சம்பந்தம் (காரைக்கால்)செத்தவன் சூத்து தெக்கே இருந்தா என்ன வடக்கே இருந்தால் என்ன (காரைக்கால்)செத்தவன் சூத்து கெழக்கே இருந்தா என்ன மேக்கே இருந்தால் என்ன (தமிழ்நாடு)பாலியல் தொடர்பானவை - கொச்சை வழக்கில் அமைந்தவைஆடு காப்பணம் புடுக்கு முக்காப்பணம் (காரைக்கால்)ஆடி மாசத்துல குத்துன குத்து [அடுத்த] ஆவணி மாசத்துலயே உளப்பு [உளச்சல்] எடுத்துச்சாம் (இதனால்தான், 'ஆடிக்கு அழக்காத மாமியாரைத் தேடிப் பிடிச்சு செருப்பாலடி' என்ற பழமொழியும் வந்தது)கருவாட்டுக்காரி சந்துவிட்டா நா' வ[வி]ந்துவிட்டேன் (பெரிய சந்தை)கரிசனப்பட்ட மாமியா மருமானப் பாத்து ஏங்கினாளாம் (புதுச்சேரி)அண்டங்காக்கா கர்ரு'ன்னா ஆமடையானைப்போய் அப்பாடின்னு கட்டிக்குவாளாம் (புதுச்சேரி)காசுகுடுத்தா வேசி வருவா கலநெல்லக் குடுத்தா அவ அக்காளுமாத்தாளுங்கூட வருவாங்க (கோர்க்காடு)காசுக்கொரு சேலை வித்தாலும் நாய்சூத்து அம்மணம். (புதுச்சேரி)காசுக்குக்குப் பத்து பொண்டாட்டி கொசுறுக்கு ஒரு குத்து (செக்குமேடு)காசுக்குப் பாத்தவன் கழுதகிட்டப் போனானாம் (செக்குமேடு)கெழவங்குடுத்த பணத்துக்கு நரை உண்டா? (செக்குமேடு) வலியவந்தா, கிரந்திக்காரி. (செக்குமேடு)கூட்டம் பெருத்தா குசுவும் பெருக்கும் (புதுச்சேரி)பீக்கு முந்துன குசுவே பூண்டு தின்ன வாயே (புதுச்சேரி)பீத்தின்கறவன் வூட்டுக்குப் போனே'னா பொழுது விடியற வர பேலச்சொல்லி அடிப்பான் (முதலியார்பேட்டை)முகதரிசனம் முக்கால் மைதுனம் (உயர்சாதி வழக்கு)அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குவாள் (புதுச்சேரி: பாலியல் கதை)அஞ்சுறவனக் குஞ்சும் விரட்டும் (புதுச்சேரி)அந்திப்பீ சந்திப்பீ பேலாதானை ஜாமப்பீ தட்டி எழுப்பும் (புதுச்சேரி)புள்ளக்காரி குசுவுட்டா புள்ளமேல சாக்கு (புதுச்சேரி)ஆம்பளையான் வைததப் பத்தி அயல்வீட்டுத் தச்சனைக் கோணல் நிமித்தச் சொன்னாளாம். (கி.ராஜநாராணனும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' நூலில் இதன் கதை உள்ளது.)வயசுக்கு நரச்சுதோ மசிருக்கு நரச்சுதோ (புதுச்சேரி)வெடம் [இடம்] கெடைக்காத தோடம் மெச்சவுந்தான் பதிவிரதை (பாக்கமுடையான்பட்டு)ஒரல்ல துணி கட்டி இருந்தாலும் உரியத்தான் பாப்பான் வாழைகிட்ட சேல காஞ்சாலும் உத்து உத்தே பாப்பான் (பண்டசோழநல்லூர்)எலி அம்மணமாவா போவுதுங்கிறான் (மதகடிப்பட்டு)உள்ள இருக்கு கச்சக் கருவாடு நாத்தம் வெளிய பாத்தா வெள்ளையுஞ் சள்ளையும் (புதுச்சேரி)நெனச்ச நெனப்பென்னடி? அண்ணா'ன்னு அழச்ச மொறை என்னடி? (புதுச்சேரி)புதுச்சேரி தமிழ்நாடு இரண்டுக்கும் பொதுவானவை:ஒண்ணுந் தெரியாத பாப்பா இழுத்துப் போட்டாளாம் தாப்பா மயிருள்ள சீமாட்டி வாரி முடிச்சுக்கிறா வந்தா வரவுல வை வராட்டினா செலவுல வை டம்பாச்சாரி பொடிமட்டை தட்டிப்பாத்தா வெறும்பட்டை (புதுச்சேரியில் ‘பொடிப்பட்டை’ என்று பெரும்பாலோர் சொல்வார்கள்]கும்பி கூழுக்கு அலையுதா(ம்) கொண்டை பூவுக்கு அலையுதா(ம்) அறுப்புக் காலத்துல எலிக்கு அஞ்சு பெஞ்சாதி சின்னிக்குத் தேள் கொட்டனா தென்னமரத்தில நெறி கட்டிக்கிச்சா (புதுச்சேரித் தெலுங்குத் தமிழர் சொல்வது. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இதைத் ‘தென்னமரத்திலே தேள்கொட்டப் பனமரத்துல நெறிகட்டிடுச்சாம்’ என்று சொல்வர்.)கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பாக்க போறானாம்ஆத்தாளுக்கு ஒரு சீத்தாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்ட (புதுச்சேரி)ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு அடைப்பக்காரனுக்கு ஒரு தொடப்பக்கட்ட(தமிழ்நாடு)ஆட்டாளுக்கு ஒரு சீட்டாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை (புதுச்சேரி - மங்கலம்) [ஆட்டாள்=இடையன்; மோட்டாள்=அவனுக்கும் குற்றேவல் செய்யக் கிடைக்கிற எளியவன்] வெங்காயம் அரியும்போது வேண துக்கம் வந்துச்சாம் (காரைக்கால் - தமிழ்நாடு)ஆனா அச்சில வாரு ஆகாவிட்டா மொடாவுல வாரு (காரைக்கால் - தமிழ்நாடு)அகத்துல போட்டாலும் அளந்து போடு (காரைக்கால் - தமிழ்நாடு)ஆத்துல போட்டாலும் அளந்து போடு (தமிழ்நாடு)கோழிய கேட்டுக்கினா மெளகா அரைப்பது (காரைக்கால்)மீனு கழுவி பூனைய காவல் வெச்ச மாதிரி (காரைக்கால்)முதல் நாள் வாழ எல, இரண்டாம் நாள் தைய எல, மூணா(ம்) நாள் கையில (காரைக்கால்)செத்தவன் காதுல சுக்கு கரைச்சு ஊத்தன மாதிரி (காரைக்கால்)செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்துப் பண்ணின சம்பந்தம் (காரைக்கால்)செத்தவன் சூத்து தெக்கே இருந்தா என்ன வடக்கே இருந்தால் என்ன (காரைக்கால்)செத்தவன் சூத்து கெழக்கே இருந்தா என்ன மேக்கே இருந்தால் என்ன (தமிழ்நாடு)வீடு எரிஞ்சு சுவரு நிண்ணுச்சு பெருமாள் புண்ணியம் (காரைக்கால்)அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது: கதை:- இரண்டு நண்பர்களும் கரடியும்)அவன் மூத்திரம் வெளக்கா எரியிறது (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது)அள்ளிக் கொடுத்தா சும்மா அளந்து கொடுத்தா கடன் (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது)பொண்டாட்டி சூத்துக்குப் பிரமணையாயிருக்கான் (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது: தி. தெ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பழமொழி அகரவரிசை. திசம்பர் 1952. எண்: 8344)-----------------------------இன்னும் இவைபோல எத்தனையோ பழமொழிகள் புதுச்சேரிக்கும், புதுவை தமிழ்நாட்டுக்குப் பொதுவாகவும் இருக்கின்றன. இந்தத் துறையில் பலருக்கு ஆர்வம் ஏற்படவே, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசியும் ஆய்வுக்கட்டுரை வழங்கியும் வருகிறேன். சமீபத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 முடிய French Instititute Of Pondicherry - Department Of Indologyயும் Mysore - Centre Of Excellence For Classical Tamil, CIILஉம் இணைந்து நடத்திய 'International Conference - Streams of Language: Dialaects in Tamil From Early To Modern Times As Reflected in writing And Speech: Dialects in History And Literature'இலும் இது குறித்த "Identifying Puducheri Proverbs" என்ற ஆய்வுக்கட்டுரையை வாசித்துள்ளேன்.

(நன்றி: திண்ணை.காம்)