5.5.10



சிங்காரவேலர்

- முனைவர் க.தமிழமல்லன்

தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ?
இமிழ்கடல் சிங்காரர் ஏத்து.

உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர்
தரக்கொள்கை நாடுயர்த்தும் தான்.

புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை
உதவுமெனல் வேலர் உரம்.

சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே
நம்தமிழ் நாட்டுக்குத் தூண்.

பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார்
உரியாரின் மாண்பை உயர்த்து.

கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ,
எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து.

மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர்
குறைதீர்க்க வந்தார் குறி.

அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால்
நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து.

சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம்
பங்காளர் ஆவார் பகர்.

பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய்
எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர்.

மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல்
மானத்தின் வாழ்வாய் மதி.

புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர்
புத்தூழி எண்ணத்தைப் போற்று.

Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org