21.12.08

தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்- தேவமைந்தன்(பேராசிரியர் அ. பசுபதி)

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில், தந்திச் செய்திகள் அனுப்ப மோர்ஸ் முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். தமிழில் தந்தி கொடுக்கும் வழக்கம் அப்பொழுதில்லை. தமிழில் தந்தி கொடுக்க ஒரு புதிய முறையை ஏன் உருவாக்கக் கூடாது என்று இந்திய அரசின் தந்தித் துறையில் பணியாற்றியவரும் அன்றைய வித்துவான் பட்டம் பெற்றவருமான அ. சிவலிங்கம் 1945இல் சிந்தித்தார். விளைவாக, தமிழ் எழுத்துகளுக்கு உரிய மோர்ஸ் ஒலிக்குறியீடுகளை உருவாக்கினார்.1956ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் நிகழ்ந்த இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் மாநில மாநாட்டில் செய்தியாளர்கள், தந்திமுறை பற்றி அறிந்தவர்கள், பயனாளர்கள், இது குறித்து அதுவரை எதுவும் அறிந்திராத பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், அவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு தமிழில் தந்தி அனுப்ப - தான் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளுக்கான மோர்ஸ் சங்கேதக் குறிகளைக் கொண்டு புலவர் அ. சிவலிங்கம் செயல்முறை விளக்கம் அளித்தார். அப்பொழுது புதுக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த பரசுராமன் என்பவருடைய துணையுடன் தமிழிலேயே தந்தி விடுத்தும் பெற்றும் காட்டினார். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை அவர் செயலாக்கினார் என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் அருமை புரியும். தொலைத் தொடர்புத்துறை பொது மேலாளர் த. நாராயணமூர்த்தி தமிழ்த்தந்தி நடைமுறைக்கு வர ஆற்றிய அரும்பணியையும் தினமணி சுடர் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டது. அ. சிவலிங்கனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் த. நாராயணமூர்த்தி.அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடந்த தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினார்.இப்பொழுதும்கூட உலகமுழுதும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு முறையில் ஆங்கில எழுத்துகளின் வழியாகத் தமிழில் தட்டெழுதும் முறை உள்ளது. இதேபோல சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதுதான் தமிழ்த் தந்தி என்று பலரும் நினைத்தார்கள். "அது தவறு; தமிழிலேயே சங்கேதக் குறிகளைப் பயன்படுத்தி தமிழில் தந்தி அனுப்பலாம்!" என்று புலவர் அ. சிவலிங்கம் எண்பித்தார்.முப்பத்து மூன்று ஒலிக்குறியீடுகள் மூலமாக தமிழில் தந்தி அனுப்பவோ, பெறவோ இயலும் என்ற புதிய முறை, புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்தது. எண்களுக்கு மட்டும் ஆங்கிலக் குறியீடுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். வாழ்த்துத் தந்திகளும் எண்களுக்கேற்பத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றன. மோர்ஸ் உருவாக்கிய தந்திமுறையைக் கற்றவர்கள், இவர் அமைத்த முறையைப் பதினைந்து நாள்களுக்குள் கற்றுக்கொள்ள இயன்றது.புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்த தமிழ்த் தந்தி ஒலிக்குறியீடுகள் தற்பொழுது பயன்படுத்தப் பெறுவதில்லை. "என்றாலும் தமிழில் தந்தி அனுப்புவதற்கான முதல் தொழில் நுணுக்க உத்தியை உருவாக்கியவர் அவர்தான். அவரது கனவு இப்பொழுது நனவாகிறது" என்று தினமணி சுடர் 15/01/1994 இதழ்(பக்கம் 22-இல்) தெளிவாகக் குறிப்பிட்டது.தமிழ்த் தந்தி முறை குறித்து அப்பொழுது இந்திய நடுவண் அரசில் தபால் தந்தித் துறை அமைச்சராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் என்ன சொன்னார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.ஆனந்த விகடன் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழில் ஏன் கூடாது?தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் தந்தி அனுப்ப வாய்ப்பும் வசதியும் இருப்பதுபோல் தமிழிலும் தந்தி அனுப்பும் முறை கொண்டு வரப்பட வேண்டுமென்ற யோசனையைத் தபால் மந்திரி டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் 'தேவையற்றது' என்று சொல்லி நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது."இத்தகைய கோரிக்கையினால் நாட்டில் பிளவும் பிரிவினை உணர்ச்சியும்தான் ஏற்படும். இம்மாதிரியான மொழிவெறி சுதந்திரத்துக்கே ஆபத்தாக முடியும்" என்று அவர் கூறுகிறார்.திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த போது, திரு அப்துல் சலாம், மந்திரி அவர்களைச் சந்தித்து தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மந்திரி முன் அ. சிவலிங்கனாரும் அவருடைய பதினான்கு அகவை மகன் தமிழ்ச்செல்வனும் தமிழ்த்தந்தியைச் செயற்படுத்திக் காட்டினார்கள். ஒரு சிறுவன் அதில் கலந்து கொண்டதைப் பார்த்து எல்லோரும் வியந்தனர்.அப்போதுதான் மந்திரி சுப்பராயன் அவர்கள் மொழிவெறியின் அபாயத்தைச் சுட்டிக்காட்டி, தமிழில் தந்தி அனுப்பும் முறை தேவையில்லை என்று கூறியுள்ளார்.தமிழில் தந்தி அனுப்பும் வசதி வேண்டுமென்று கோருவது எவ்வாறு மொழிவெறியாகும் என்பதுதான் விளங்கவில்லை.தந்தி தபால் போன்ற வசதிகள் படித்துப் பட்டம் பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தான வசதிகள் அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்படவேண்டிய வசதிகள். ஆகவே பெரும்பாலான மக்களுக்கு நன்கு பழக்கமுள்ள மொழியில்தான் தந்தி அனுப்புவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.ஒரு கிராமவாசி ஒரு தந்தி அனுப்புவதற்கோ, வந்த தந்தியைப் படித்துப் புரிந்து கொள்வதற்கோ ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்த பட்டதாரியைத் தேடிக் கொண்டு ஒவ்வொரு தடவையும் ஓட வேண்டுமென்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமில்லை............................................ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி ஆட்சி மொழியாகி விட்டது. நிர்வாகம், கல்வி, வர்த்தகம் எல்லாமே தாய்மொழியில் நடக்கும்போது, செய்தியை அனுப்புவதற்கு அந்த மொழி தேவையில்லை என்று சொல்வதுதான் குறுகிய மனப்பான்மையாகும். தந்தி அனுப்ப ஆங்கிலமே போதுமென்றால் இந்தியில் மட்டும் அதற்கான வசதி அளிக்க வேண்டிய அவசியமென்ன? உண்மையில் தபால் தந்தி இலாகாவின் பொறுப்பு, மக்கள் ஒருவருக்கொருவர் செய்தி தெரிவித்துக் கொள்வதை எளிதாக்குவதுதான். தேச ஒற்றுமையை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.தாய்மொழி மீது அளவுகடந்த வெறி கொண்டு யாரோ சிலர் அர்த்தமற்ற கோரிக்கைகளை விடுக்கிறார்கள் என்பதற்காக தாய்மொழி சம்பந்தமான எந்தக் கோரிக்கையையுமே மொழி வெறி என்று சொல்லி நிராகரிப்பது முற்றிலும் நியாயமல்ல."ஐம்பதுகளின் ஆனந்த விகடன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கையில், 15/01/1994 தினமணி சுடர் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழ்த் தந்தி முறை தமிழகத்திற்குப் பயனளிக்கும் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பரிசீலனை செய்யுமாறு அப்போதைய தபால் தந்தி இலாகா அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் அதுபற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாததால் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுவிட்டது."எவ்வளவு காலந் தாழ்த்தப் பட்டிருக்கிறது? முப்பத்தெட்டு ஆண்டுகள்.கடைசியில் தினமணி சுடர் (சனவரி 15, 1994. பக்கம் 22) குறிப்பிட்டது:".......தமிழில் தந்தி தமிழர்களுக்குப் பொங்கல் நாளில் கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலாக இருக்கப் போகிறது.""தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்த் தொலைவரிமுறை கண்டுபிடிப்பு, பாராட்டுரை" என்ற முடங்கலில் 1998ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பின்வருமாறு மொழிந்திருக்கிறார்:"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ்நாடு அரசின் தலையாய கொள்கை. தமிழால் முடியாததில்லை என்பதைத் துறைதோறும் அறிஞர் பலர் எண்பித்துக் காட்டியுள்ளனனர். காட்டியும் வருகின்றனர். இவ்வகையில் புலவர் அ. சிவலிங்கனாரின் பணி போற்றத்தக்கதாகும். 1945ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் பணியாற்றிய புலவர் அ. சிவலிங்கனாருக்கு நம் அன்னைத் தமிழில் தொலைவரி அனுப்பும் முறையைக் கண்டுபிடிக்க முடியாதா? எனும் ஏக்கம் பிறந்தது. எப்போதும் இதே சிந்தனை. இரவு பகல் பாராது உழைத்தார். 1955ஆம் ஆண்டு அவர் கனவு நனவாகியது. 13.08.1956 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அஞ்சல் துறைப் பணியாளர் மாநில மாநாட்டிலும், 07.10.1956 அன்று குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் தமிழில் தொலைவரிச்செய்தி அனுப்பும் முறையைச் செயற்படுத்திக் காட்டினார். கொடுத்த தமிழ்ச் செய்திகளை அப்படியே வாங்கி அனுப்பியும் காட்டினார். அனைவரும் வியந்து பாராட்டினர். அயல்நாடுகளின் செய்தித் தாள்களும் அளவின்றிப் புகழ்ந்தன. இச்செயற்பாட்டை நேரிற்கண்டு மகிழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழ்த் தந்திக் கண்டுபிடிப்புக்கு உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே. தமிழ்த் தந்திமுறை செயற்படுத்தப்படுமானால் அதனால் வரும் புகழுக்கு அ.சிவலிங்கம் தனியொருவரே உரியவர்.மொழி ஞாயிறு திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கும் அரசியலார் இம்முறையை உடனே கையாள்வதுடன், திருவாளர் அ. சிவலிங்கனார்க்குத் தக்கதொரு பெரும் பரிசும் அளித்தல் வேண்டும். அது அவர் கடன்.இவ்வகையில் தமிழில் தொலைவரிச் செய்தி தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்துத் தமிழுக்கு வளம் சேர்த்த புலவர் திரு. அ. சிவலிங்கனாரின் அரும்பணியைப் போற்றும் வகையில் அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையையும் இப்பாராட்டுரையையும் தமிழக அரசு வழங்கி மகிழ்கிறது.(ஒப்பம்:........முதலமைச்சர். சென்னை 600 009. நாள் 24.12.1998.)திருவள்ளுவர் ஆண்டு 2029, வெகுதான்ய, ஐப்பசி 28: ஆங்கிலம் 13-11-98 ஆம் நாளிட்ட அரசாணை எண் 114இல், "முதன்முதலில் தமிழில் தந்தி முறைக்கு வித்தூன்றிய புலவர் திரு அ. சிவலிங்கம் அவர்களை அரசு பாராட்டி சிறப்பிக்க வேண்டுமென்றும், பாராட்டி பணமுடிப்பு வழங்க ரு.50,000/-மும், தகுதியுரை, பொன்னாடை போன்றவை மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.2500/-ம் ஆக மொத்தம் ரூ.52,500/- ஒப்பளிப்புச் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்" என்று கண்டுள்ளது.ஏன் இதுகுறித்து இவ்வளவு விளக்கம் என்றால், தமிழ்நாட்டுக்கே உரியதொரு வழக்கத்துக்கேற்ப, 1956-ஆம் ஆண்டு தமிழில் தந்தி முறையை முப்பத்து மூன்று ஒலிக்குறிகளில் இயக்கக் கூடியதாக முதலாவதாக இவர் கண்டுபிடித்து உலகறிய வெளிப்படுத்திய ஒலிக்குறியீடுகளைச் சிறிது திருத்தியும் மாற்றியும் மற்றவர் தமிழில் தந்தி அனுப்பும் முறையை உருவாக்கி நடுவணரசிடம் பெயர் பெற்றதுடன், அதன் அடிப்படையில் தந்தி அனுப்பும் முறை தொடங்கியமையாலேயே இத்தனை வயணங்கள் வேண்டப்பட்டன. இதனால், கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டு மன உளைச்சல் பட்டும் உழைத்து, விடாது முயன்று, சான்றோர் துணையுடனும் எத்துறையிலும் இடம்பெறக்கூடிய நல்லவர்கள் உதவியுடனும் தமிழ்நாட்டரசின் ஆதரவும் பெற்று தாம்தாம் முதன்முதலில் தமிழ்த்தந்தியின் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்தமையை நிறுவ வேண்டிய கடப்பாடும் புலவர் அ. சிவலிங்கனாரைச் சேர்ந்து கொண்டது. இதைக் கேள்விப்பட்டதாலேயே என்னைப் போன்ற பலருக்கு இவர்பால் மதிப்பும் ஈடுபாடும் ஏற்பட்டன.அறிஞர் அண்ணா, சி.ராஜகோபாலாச்சாரியார், காயிதே மில்லத் இஸ்மாயில், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க. அன்பழகன், கலைஞர் கருணாநிதி, இந்திய அஞ்சல் தொலைவரித் துறை டைரக்டர் ஜெனரல் நஞ்சப்பா, குல்கர்னி முதலானோர் அறிய தமிழ்த் தந்தி முறையை வெற்றியாகச் செயற்படுத்தி பாராட்டுப் பெற்றார்.தமிழ்த் தந்தி முறையை உருவாக்கியது இவர்தம் சாதனை என்றால் தொழிற்சங்கத் தலைவராக விளங்கியது, பல ஊர்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தியது, திருக்குறளை இசையோடு பயின்று மேடைகளில் பாடியது, 'தமிழில் தந்தி' 'உலகக் கவிதைகள்'(இந்த நூலைக் குறித்த தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையை உலகத் தமிழர்கள் ஈடுபாட்டுடன் வாசித்து வரும் திண்ணை.காம் வலையேடு வெளியிட்டது) 'திருக்குறளும் உலகமும்' போன்ற சிறந்த நூல்களை எழுதியது, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான்கு நூல்களை என்.சி.பி.எச். சார்பாக மொழியாக்கம் செய்தது, சோவியத் யூனியன் பரிசுகளை வென்றது முதலான பன்முகச் செயற்பாடுகள் இவருடையவை என்று பாராட்டலாம்.புலவர் பட்டத்துடன் ஆங்கில முதுகலைப் பட்டமும் பெற்ற திரு அ. சிவலிங்கனார் திருச்சிக்காரர். 26.05.1924 அன்று கள்ளக்குறிச்சியில் அப்பாஜி - சம்பூர்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1944இல் காரைக்குடியில் அஞ்சல் எழுத்தராகச் சேர்ந்தார். தந்திப் பயிற்சி அரசுப் பள்ளியில் 1945இல் பெற்றார். கரம்பக்குடியில் அஞ்சலகத் தலைவராகப் பணியாற்றியபோது, 1955இல் தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்தார்.தற்பொழுது எண்பத்து நான்கு அகவையானாலும் புதிய புத்தகங்களையும் இணையப் படைப்புகளையும் வாசிப்பதில் தளராத ஈடுபாடு கொண்டுள்ள தமிழ்த்தந்தி சிவலிங்கனார் முகவரி:புலவர் அ. சிவலிங்கம், எம்.ஏ.(ஆங்கிலம்)தமிழ்த் தந்தி கண்டுபிடிப்பாளர்,சி-28, தமிழ்த் தந்தி இல்லம்,சேஷசாயி நகர்,க.க.நகர், திருச்சி -21.அ.கு.எண்: 620 0௨௧

********

karuppannan.pasupathy@gmail.com

17.12.08

பாவலர் இலக்கியனின் ‘பாவேந்தர் புரட்சி நூறு’(பாக்கள்)
-பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)

தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் உணர்வுமிகுந்த அணிந்துரையும் தமிழுணர்வு மிகுந்த பதிப்பாளர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்களின் பதிப்புரையும் சூழ, முன்னுரையிலேயே ‘பாவேந்தர் புரட்சி நூறு’ என்னும் தன் பாத்தொகை நூலுலகில் நின்று நிலவும் என்பதற்கான கரணியங்களைக் கோட்பாட்டு அடிப்படையில் நம்முன் வைத்துவிடுகிறார் பாட்டறிஞர் இலக்கியன்.

உலகப் பாவலர்களின் வரிசையில் முகாமை தரப்பெற வேண்டியவர் பாவேந்தர்; அவரே புரட்சியின் வடிவம்; ஒரு வரலாறு; சுவைமிக்க பாவியம்; ஒரு வழிகாட்டி; ஒரு கலங்கரை விளக்கம்.

அவர்தம் படைப்புகள் திருத்தமான வாழ்க்கைக்குத் திருப்புமுனைகளாகும் - இருள்படிந்த வாழ்க்கைக்கு ஒளிவிளக்குகளாகும் - நம்மைக் கரைசேர்க்கும் பாட்டுப் படகுகளாகும்.

பாவேந்தர் புரட்சியே தமிழுக்கு உரிய இடம் அளிப்பதுதான். பாவேந்தர் புரட்சிநூறு என்னும் இந்நூலில் உள்ள கருத்துகள் என்றைக்கும் தேவைப்படுவன.

மாந்தநேயம், பகுத்தறிவு, தமிழுணர்ச்சி என்ற மூன்றும் பாவேந்தரால் மிகுதியாக வலியுறுத்தப்பெற்றவை. இவை மூன்றையும் தமிழர்கள் கடைப்பிடிக்காவிட்டால் வாழ்க்கை ஏது?

பாவேந்தருடைய அரிய வாழ்க்கை நிகழ்வுகளும் புரட்சிகளும் இந்நூலில் பாக்களாக்கப்பெற்றுத் தரப்பெற்றுள்ளன. அவர் சுட்டிய வாழ்க்கை நெறிகள் பொன்னகையில் மணிகள் பொதிந்துவைத்தாற்போல ஆங்காங்கு சுட்டப்பெறுகின்றன.

அடிப்படையில் மாந்தரை ஆட்டிப்படைப்பது கடவுள் நம்பிக்கை ஆகும். அதிலிருந்து மதம் தோன்றி ஆத்மா மோட்சம் நரகம் முதலானவை கிளைக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றை அடிப்படையிலேயே மறுத்தவர் பெரியார். ‘வெங்காயம்’ என்ற ஓர் ஒற்றை இயற்கைப் பொருட்சொல்லால் இவற்றைச் சுழற்றிச் சுருட்டிக் குளிகை உருவமாக எங்கும் பேசி வந்தார் பெரியார். அதுகுறித்த பெரியார் சொற்கள்:

“எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே - சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்: மடலம்-2, வே. ஆனைமுத்து பதிப்பு, 1-7-1974; பக்கம் 1063.)

முன்னாள் கடவுளை ஏற்று, பின்னாளில் உணர்ந்து கடவுளை மறுத்தவர் பாரதிதாசனார் என்ற பாவேந்தர் குறித்த தரவு பயின்று வரும் ‘புரட்சி மின்விசை’[ப.56] என்னும் 44-ஆம் பாட்டுக்குக் கரணியம், பெரியார்வழியைப் பின்னாளில் பாவேந்தர் போற்றியதேயாகும். இதே தரவானது சற்றும் மாறுபடாமல் ஏற்ற இடங்களில் இப்பாத்தொகையுள் பரந்து கிடக்கிறது. [தலைப்புகள் 5,19,21,44,50,63:பக்.17,19,33,62,75.] “தமிழர்கள் செய்த தவப் பயனாகக் கடந்த 2000 ஆண்டுகட்குப் பின்னர் நமக்குக் கிடைத்த ஒரே தலைவர் பெரியார். அவரால்தான், வீழ்ச்சியுற்ற நம் வாழ்வு வளம் பெற முடியும்” என்று அவர் தம் தலைமையுரை ஒன்றில் முழங்கியமை குயில் [2-1;நாள்:9-6-1959] இதழில் பதிவாகியுள்ளது.(பாவலர் இலக்கியன், பாவேந்தர் குயில் ஓர் ஆய்வு, பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை-5. திசம்பர்,1989. ப.143.)
பாவலர் இலக்கியன் வரிகள்:
“கடவுளை ஏற்றவர்! பின்னாள் உணர்ந்து
கடவுளை மறுத்தவர் பாரதி தாசனார்.”
அத்துடன் நிறுத்தினால் பாவேந்தரின் தனித்தன்மை புலப்படாது. மேற்படி கடவுட்கொள்கையில் ‘பிழைக்க’த் தெரிந்த பிறர் செய்தி என்னவாம்?

“கடவுளை மறுத்துப் பின்னாள் பிழைக்கக்
கடவுளை ஏற்று வாழ்ந்த வரும்,பலர்!”
அதனால் எந்தப் பயனும் நாட்டுக்கு விளையவில்லை. அதனால் புரட்சி மின்விசையையே நாட்டுக்குத் தந்தார் பாவேந்தர் - என்பதை,

“வண்ணம் மாறினால் வருமோ புரட்சி?
எண்ண மாற்றமே எழுப்பும் புரட்சியை!
மன்பதை மலர மாபெரும் புரட்சி
மின்விசை தந்தவர் விளங்குபா வேந்தரே!”
என்றவாறு தெரிவிக்கிறார் பாவலர் இலக்கியன்.

[மங்காத் தமிழின்] மாண்புறு பாவலன், எங்களின் ஏந்தல்[ப.57], தனிப்பெரும் பாவலன், தமிழ்த் தொண்டன், தமிழிசைக் காவலன், படத்துறைப் பாவலன், பாட்டுத் தலைவன், மக்கள் பாவலன், [உழைப்பவர் உறுதுயர் தீர்த்திட]அழைப்பு விடுத்தவன், சேவற்குரலோன், எரிகதிர்ப்பாவலன், [தன்னலம் துறந்த] தமிழின் வள்ளல் போலத் தன் இயல்பாலும் செயல்திறத்தாலும் தகுதியாலும் தனித்தன்மையாலும் பணிச்சிறப்பாலும் புரட்சி மனத்தாலும் போர்க்குணத்தாலும் பாவேந்தர் பெற்ற சிறப்புக்களைத் தன் இந்நூலின் தலைப்புகளாக்கியுள்ளார் பாவலர் இலக்கியன்.

மற்றவற்றைக் காட்டிலும் பாவேந்தரைப் புரட்சியின் எழுச்சியதன் இயல்பாகப் படிமநிலை(imagery)யில் காணும் பாவலர் உள்ளம் இதோ:

“தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர் தன்னில்
வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்
ஏந்துகோட் டியானை எழுந்தாற் போல
அழுந்திய பழமைக் களரினை யகற்றிப்
பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்
எழுந்தனன் ஈங்கே! எழுந்தது புரட்சி!
விழுந்தது மடமை! விளங்கிய தறிவே!
தொழத்தகு தமிழொளி தோன்றி
எழுச்சி தந்தது எந்தமி ழோர்க்கே!”

புரட்சியின் எழுச்சி தோன்றுமிடம் - ஊர், எத்தகையதாய் விளங்க வேண்டும்? ‘தீந்தமிழ்ப் புதுவைத் திருநக’ராய் விளங்க வேண்டும். அதன் இயல்புகள் நவிலப்பெறும் பாத்திறம் இதோ:
“அலைகடல் விளங்கும் அழகிய மூதூர்!
கலைபல வலர்க்கும் கவின்மிகு பேரூர்!”
மறுக்க முடியுமா? மறுக்க மனம் வந்தால் அந்த மனம் யாருக்குச் சொந்தம் தெரியுமா? பாவேந்தர் கூற்றின்வழிப் பார்ப்போமா?
“மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழையென
இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் - பன்னுமிந்த
வாய்ப்பில்லார் தம்மை,அவர் வைப்பாட்டி மக்களை
ஏற்கமாட் டோம்தமிழர் என்று”
(பாரதிதாசன் பன்மணித் திரள், சென்னை, 1-8-1963)
என்று பாவேந்தர் ‘தமிழர்’ என்று ஏற்க மறுத்தவர்க்குச் சொந்தம் அந்த மனம். இன்னும் புதுவையின் இயல்புகள், இயல்பாய் இலக்கியன் பாவரிகளாய் வருகின்றன:
“தொலையா நல்லிசைத் தொல்லோர் மரபினர்
விலையிலாப் பனுவல் விளைக்கும் சீரூர்!”
-உண்மை. பரப்பளவு, மக்கள் தொகைக் கணக்கை வைத்துப்பாருங்கள். சுண்டைக்காய் மாநிலம் என்று பூசுணைக்காய்கள் சொல்லும் இந்தச் சிறிய, இந்திய ஒன்றிய எல்லையில் மட்டும் இந்நூல் உட்பட எத்தனை நூல்கள் தமிழ்க் கழனியில் விளைகின்றன என்ற கணக்கெடுத்துப் பார்த்தால் மலைத்துப் போய்விடுவார்கள் மற்றவர்கள்.

இயற்கை நலம், இனித் தொடர்கிறது:
“நெய்தலும் மருதமும் நெடிது விளங்கும்!
பெய்யும் மழையினாற் பெருவளஞ் சேரும்!
நன்னீர் ஊற்றுகள் நலம்செயும்; எங்கும்
பொன்னிறக் கொன்றை பூத்துக் குலுங்கிடும்!
செம்புலம் ஒருபுறம் சிறந்து தோன்றும்.
வெம்மை தணிக்கும் வியன்பொழில் சூழ்ந்தே!
நேருற விளங்கிடு நெடிய மறுகுடன்
ஏர்பெற நிவந்த எழில்மா ளிகையொடு
மரம்பல செறிந்து மாநிழல் தந்திடும்!”

கழககால ஒளவைசொன்ன “அவ்வழி நல்லை வாழிய!” தொடர்கிறது:
“கரவிலா நெஞ்சினர் கனிவுடன் வந்தவர்க்
கீந்தும் இன்விருந் தோம்பியும் வாழ்ந்திடும்
தீந்தமிழ்ப் புதுவைத் திருநகர்”
-இத்தகைய திருநகரில்தானே ‘ஏந்துகோட் டியானை எழுந்தாற் போலே’ ‘வேந்தென விளங்கிய வெற்றிப் பாவலன்’ ‘பழுதிலாப் புலமைப் பாரதி தாசன்’ புரட்சியே எழுந்தாற்போல எழுந்திடல் இயலும்?

‘மக்கள் பாவலன்’[ப.33] என்ற - பாவேந்தர் புரட்சி நூறில் இருபத்தொன்றாம் பாட்டு, சமநிலையாகவும் செவ்வியல் முறையிலும் பாவலரின் பாவேந்தர் குறித்த வீறுகளைச் செப்பமாகப் பதிவுசெய்துள்ளது. வேறு சொற்களில் சொல்லப்போனால், ஏனைய பாடல்களில் புரட்சிப் பாவேந்தமாக நவிலப் பெற்றவற்றுக்கெல்லாம் சாரமான போக்கில் சரளமான நடையினில் அமைந்திருக்கிறது. மதுரை முல்லைப் பதிப்பகம் அறுபத்தெட்டாண்டுகளுக்கு முன்னர் மூன்றுருவா எட்டணாவுக்கு வெளியிட்ட ‘பாரதிதாசன் கவிதைகள்’ முதற் பகுதி நூலின் உள்ளுறைக்கு முந்திய பக்கத்தில் இடம் பெற்றுள்ள பாவலர் வால்ட் விட்மன் கருத்துக்குப் பொருந்தியிருக்கிறது. அது,

“உள்ளத்தை வெளிப்படையாக, சீர்தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன், எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும், இலக்கணத்திற்குங்கூட அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன்; அவன் ஒரு படைப்புத் தலைவன். பாடலைப் பார்ப்போம்.

“தந்தை பெரியார் கொள்கையைத் தலைமேல்
முந்தி ஏற்ற மூதறி வாளன்.
முன்னாள் கடவுள் வழியைக் காணினும்
பின்னாள் அதனைப் பிழையென் றுணர்ந்தவன்!

கண்டதைப் பாடும் கயமை விடுத்துளம்
கொண்டதைப் பாடிய கொள்கை யாளன்,
மூட முட்புதர்க் காட்டினைத் தன்னுயர்
பாடற் கருத்தால் பட்டிடச் செய்தவன்!

எவ்வழி மக்களுக் கேற்புடைத் தென்றுணர்ந்
தவ்வழிப் பாட்டை அளித்த தோன்றல்!”

இதே எளிமை ‘பாட்டுத் தலைவன்’ பாட்டிலும் படிந்து கிடக்கிறது.
“குவலயம் போற்றும் குடும்ப விளக்கும்,
எவர்க்கும் கல்வி வேண்டு மென்றே
இடித்துரைக் கின்ற இருண்ட வீடும்,
வெடிக்கும் புரட்சி விளைக்கும் பாவியம்
பாண்டியன் பரிசும், பழந்தமிழ் உணர்வைத்
தூண்டும் குறிஞ்சித் திட்டும், எங்கள்
பாட்டுத் தலைவன் பாரதி தாசன்
நாட்டுக் களித்த நன்கொடை!”
இதுதான் பாவலர் இலக்கியனின் பாட்டுத்திறம்.

‘கடந்த மூன்று நூற்றாண்டுகளாக’ என்றே தமிழுக்கும் தமிழருக்கும் வேற்றுமொழிப்பகை வந்தமையைக் குறிப்பர் பல்லோர். மெய்யாக, நாவலந்தீவின்மேல் கி.பி.1008ஆமாண்டு இசுலாமியர் படைஎடுத்தபொழுதே நாவலந்தீவின் தென்பகுதியும் மொழி-இனம் என்ற இரு நிலைகளிலும் தாக்குதல்பெறத் தொடங்கிற்று. கி.பி.1674ஆமாண்டு பிரஞ்சியர் புதுச்சேரியைப் பிடித்துக் கொண்டனர். இதற்குப் பதினாறாண்டுகளுக்குப் பின்பே கல்கத்தாவில் ஆங்கிலர் வேரூன்றிக் கொண்டனர். கி.பி.1857ஆமாண்டில் படைவீரர் கலகம் (சிப்பாய்க் கலகம்) வெடித்தது. கி.பி.1858ஆமாண்டு தான் நம் நாடு நேரடியாக ஆங்கில முடியாட்சிக்குள் வந்தது. கி.பி.1875ஆமாண்டில் இந்திய தேசியப் பேராயம்
தொடங்கியவுடன் இந்திமொழி ஆதிக்கம் தென்னாட்டில் தொடங்கியது. இவற்றுக்கெல்லாம் இணைகோடாகத் தமிழ்த் தேசியமும்; பெரியார், பேராயக் கட்சியினின்று பிரிந்து விடுதலையாகச் செயல்படத் தொடங்கியபின் நேர்கோடாக இடதுசாரித்தமிழ்த்தேசியமும் செயல்படத் தொடங்கின. இந்நோக்கின் விரிவாழங்களுக்குத் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்களின் ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ (தமிழ் முழக்கம், 345, அண்ணா சாலை,சென்னை-600 006: 2005. பக்கம் 20 முதல்...)ஆய்வுநூலை வாசியுங்கள். இத்தகைய வாசிப்பும் புரிந்து கொள்ளுதலும் இல்லாவிடில் ஆங்கிலப்பகை குறித்தும் இந்திப்பகை குறித்தும் பாவேந்தரின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் பாவலர் இலக்கியனின் உணர்த்தல்களைப் புரிந்துகொள்ள முடியாது. குறுகிய மனப்பான்மை என்றே சொல்லவரும். இதனால்தான் புதுவைத் தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனாரும் “செத்த காக்கைச் சிறகைப் பறக்கவிடும் உத்தியைத் தம் ‘வெல்லும் தமிழியக்கம்’ என்னும் இனவெழுச்சிப் பாத்தொகையுள் பின்வருமாறு மொழிகிறார்:
“முட்டாள் இனத்திற்கு மோதி உதைத்தால்தான்
எட்டும் சிலஉண்மை! எத்தனைநாள் வாய்நோக
நீட்டி முழக்கி நிலவுக் குளிர்ச்சியினைக்
காட்டும்சொல் கூறிக் கரை(றை)வோம் தமிழினமே!

செத்தஒரு காக்கைச் சிறகைப் பறக்கவிடில்
கொத்தவரும் காக்கைக் குலமே பறந்துவிடும்!
காயவைத்த நெற்களத்தைக் காக்கும் வழிஇதனை
ஏயவகை ஆய்ந்துணர்ந்தே ஏற்பாய் தமிழினமே!”

பாவலர் இலக்கியன் கூறுகிறார்:
“பாரதி தாசன் பிறந்த மண்ணில்
சீரக முனையும் செந்தமிழ் இல்லை:
எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்1
பொங்கி வழிகிறது ஆங்கில மதுவே!
தமிழால் உயர்ந்த தமிழ ராலும்
தமிழ்க்கு நலமிலை; தமிழ்க்கு வாழ்விலை;
மண்ணின் மைந்தர் மருண்டு கிடக்கிறார்.”
“பழஞ்சுவடி விரித்தாற்போல் பரந்த நெற்றி, பார்வையிலே தமிழொளியே பாய்ந்து நிற்கும்” தகவுடைய பாவேந்தர்,
“தமிழர்க்குத் தமிழ்மொழியை வாழவைக்கும்
தனிக்கடமை உண்டென்றே சொல்லிச் சென்றார்.
தமிழர்கள் ஆங்கிலத்தைப் பெரிதாய்க் கொண்டார்.
தமிழ்வாழப் பாவேந்தர் சொல்லைக் கேட்பீர்.”

இந்த முறையில்தான் ‘பாவேந்தர் புரட்சிநூறு’ என்னும் இப்பாத்தொகை பாவேந்தர் குறித்து இதுவரை வெளிவராத தரவு-ஆவண-வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது. தலைப்புகள் 8,18,56,71,77,79,81,83[பக்கம் 20,30,68,83,89,91,93,95] இப்பொருண்மை உள்ள பாக்களைக் கொண்டுள்ளன. இவற்றுள்ளும் 56-ம் 83-ம் குறிப்பாக வேறுபடுகின்றன.

முதலாவது,
“ஆங்கிலப் பேரா சிரியர் ஒருவர்
ஓங்கு புலமையும் உயர்வும் உள்ள
திரு.வி.க.வின், மறைமலை யடிகளின்
பெருமை மிக்க உரைநடை தன்னைத்
திட்டிப் பேசிய தீங்குறு செயலைத்
தட்டிக் கேட்க ஆளிலை யோவெனச்
சீற்றம் மேலிடப் பாரதி தாசனாம்
ஆற்றல் அரிமா முழங்கிய தாங்கே!”
என்பது.

அடுத்தது, பாரதிமேல் பாவேந்தர் கொண்டிருந்த பற்றையும் பாரதி ஆங்கிலத்தின் எதிப்பை மேற்கொண்டவர் என்பது குறித்தும் மொழிவது:

“பாரதி வாழ்வினில் படிந்த பாவலன்.
பாரதி யாரொடு பழகிய பாவலன்.
பாரதி தாசனாய் மலர்ந்த பாவலன்.
பாரதி பெயரைப் பாரதி தாசன்
தாங்கியதாலே தமிழ்ப்பகை என்று
தாங்கா மனத்தினர் தாக்கிப் பேசினர்.
தூங்கிய தமிழினம் துடித்தெழப் பாரதி
ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனன்.
வேங்கை பாரதி வேற்று மொழியின்
தீங்கினை உணர்த்திய திறல்மிகு பாவலன்.
அத்தகு பாரதியின் அரிய புகழினை
இத்தரை வைத்தவன் எம்பா வேந்தனே!”

பாவேந்தர் உணர்த்திய அன்பு வாழ்க்கை, காதல் உயர்வு, முதியோர் காதல் ஆகியவற்றை பாக்களால் எடுத்துச் சொல்லும் பாவலர் இலக்கியன், குழந்தை மணத்தின் கொடுமையைப் பாவேந்தர் தம் பாக்களால் களைய முற்பட்ட சிறப்பைக் “கன்றுகள் காத்தவன்” என்ற தலைப்பிட்டுச் சொல்லியிருப்பது புதுமை.

“மணக்கொடை வாங்கும் வழக்கினைத் தணலில் இட்டான் தமிழ்ப்பா வேந்தனே!”(பா.29), “மெல்லிய ரெல்லாம் மேன்மை மிக்க கல்விக் கண்களைப் பெறுதல் வேண்டும் என்று பாடிய எழுச்சிக்குன்றமே! குன்றாப் புதுவைப் புரட்சிக் குன்றம்!(பா.31), “வேரிற் பழுத்த பலாக்க ளுக்குக் கோரினான் விடுதலை, கொள்கைத் தேரினில் வந்த பாட்டுப் பாரியே!(பா.33), “பதுமையாய் வாழும் பாவை மார்க்குப் புதுமை உலகைக் காட்டப் புதுவைப் பாவலன் புறப்பட் டானே!”(பா.37) முதலானவற்றுள் மகளிர்க்காகப் பாவேந்தர் ஆற்றிய புரட்சி வெளிப்படும்.

வாணிதாசனார்க்கும் பாவேந்தருக்கும் நிலவிய உறவின் சிறப்பை “எழுதத் தூண்டினார்!” என்ற பாடல் புலப்படுத்துகிறது. கோவை முத்தமிழ் மாநாட்டிற்கு இருவரும் சென்றுதிரும்பியபொழுது வாணிதாசனார்க்குப் பாவேந்தரால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அது நீங்கிய வயணமும் அருமையாகச் சொல்லப்பெற்றுள்ளன. அதேபோல் “பறந்தது பகைமை!” என்ற பாடல், துரைசாமிப் புலவர் - பாவேந்தர் - வாணிதாசனார் இடையில் நிகழ்ந்த ஓர் நிகழ்வுத்தொடரைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 73ஆம் பாடலான “எரிகதிர்ப் பாவல”னுடன் இதை ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தால் மேலும் சிறப்பு வெளிப்படும்.

“அழைப்பு விடுத்தவன்,” “விண்கோள்,” என்பவை முறையே புரட்சிப் பாவேந்தரின் பொதுமை உணர்வையும் மொழிஉணர்வையும் ஒளி+ஒலிக் காட்சிகளாய் வெளிப்படுத்துவன.

“இலக்கணத்திற் புலியாகத் திகழ்ந்து வந்த குமாரசாமிப் புலவருக்கு, அவர் துரைசாமிப் புலவரின் மாணாக்கராயிற்றே என்றும் பகை பாராமல், பாராட்டு விழா எடுத்து காமராசர் கைகளால் பொன்னாடை அணிவித்த பாவேந்தரின் சிறப்பை “ மலையருவி” எனும் பாடலில்(48)இனிதாய்க் காணலாம். இதையும் “எரிகதிர்ப்பாவல”னுடன்(73) ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பாவேந்தர் பாசறைப் பாவலர்களையும் இவண் பாவலர் சுட்டியிருப்பது பெருந்தன்மையைக் காட்டும்.

மேலும், “தமிழிசைக் காவலன்” பாவேந்தர் - “வள்ளல் அண்ணா மலையரும் போற்றும் இசைத் தமிழ்க் கழகம் இனிது நிறுவி இசைத்தமிழ் வளர்த்ததை”யும்; “நல்ல கொள்கை,” பாவேந்தர் இலக்கியம் குறித்துக் கி.ஆ.பெ. புகழ்ந்து செப்பியதையும்; “படத்துறைப் பாவலன்,” வளையாபதி படத்தில் தானெழுதிய சில வரிகளை மாற்றி எழுதிய வன்செயலுக்காக நாற்பதாயிரம் உருவா ஒப்பந்தத் தொகையை வீசி எறிந்த பாவேந்தர் செய்கையையும்; “கைம்மாறு கருதாதவர்,” தனக்கு எல்லையில்லாத் தொல்லைகள் தந்த கல்வி அதிகாரியின் மகனுக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இடமும் விடுதியும் பெற்றுத் தந்த அன்னாரது சிறப்பையும்; “அடிமைக் கல்வி,”பிரஞ்சியர் ஆட்சியில் கெஞ்சிக் கிடந்த பல்லோர்க்கிடையிலும் துணிவோடு நின்ற பாவேந்தரின் பெருமையையும்; ‘வெங்கண் வேழம்,” பாரதி பற்றிய படமும் பாண்டியன் பரிசு படமும் எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட நம்பிக்கைத் துரோகத்தால் பாவேந்தர் முடங்கிப்போக நேர்ந்ததையும்; “வென்றது தமிழே,” நாகர்கோவில் நிகழ்ச்சியில் பாவேந்தர்க்கு உருவான கலைவாணர் அரணையும் கவிமணி முரணையும் அருமையாகச் சித்திரிக்கின்றன.

“சேவற் குரலோன்” என்னும் தலைப்பும் புதுமை. “கன்றுகள் காத்தவன்” தலைப்பைப் போலவே இதிலும், பழைமை - புதுமையில் பாய்ந்திருக்கிறது.
“உழைப்பின் வறியவர் ஓடாய்த் திரிவதும்
உழைக்காச் செல்வர் உயர்வை அடைவதும்
உலகம் ஒப்பிய வொன்றாய் இருந்திடில்
நலமார் புரட்சி நாட்டில் எழுந்திட
சேவற் குரலால் செவிப்பறை கிழிந்திட
பாவின் வேந்தன் பரப்பினன் ஈங்கே!”
என்பதிலிருந்து இதனை உணரலாம்.

அருமைப் புதுவை அந்நாளில் எவ்வாறிருந்தது? இந்நாளில் எவ்வாறு இழிந்தது என்பதைப் பாவேந்தம் என்னும் பகைப்புலனில்(contrast) பாவலர் இலக்கியன் “நலமே நாடி!” என்ற பாடலில்(71)படம்பிடித்திருப்பது, உணரத் தக்கதாம். சுந்தர சண்முகனாரின் கரவற்ற உள்ளமும் பாவேந்தரின் பரந்த உள்ளமும் ஒன்றை ஒன்று மதித்த திறத்தை “எழுவோம் யாமே!” எடுத்துச் சொல்லுகிறது.

இன்னும் “முத்திரை பெற்றவர்,” “புரட்சி வெடிக்கும்(இரவலாய்ப் புத்தகம் வாங்குதல் இழிவே என்னும் பாவேந்தர் முழக்கம்),” “தமிழ் வள்ளல்,” “ஆய்வுகள்(பித்தர்தம் ஆய்வுகள் குறித்த பாவேந்தர் சினம்),” “சிறுத்தை வந்தது,” “நடைமுறைப் படுத்துக,” “புகழே பெறு,” “வரிப்புலியாய்ச் செயல்படு,” “வெஞ்சின வேங்கை,” “புறாக்களாய் மகிழ்ந்தார்!(பிரஞ்சுக் குடியரசுத் தலைவராயிருந்த ழுயில்பெரி அவர்களைப் பாவேந்தர் பெருமைப்படுத்தியபொழுது நிகழ்ந்தது),” “தமிழர் நிமிர்ந்தார்!(குழித்தலை மாநாடு), “புரட்சிக் குடியரசு(பாவேந்தரின் -‘குடியரசு” இதழ்த் தோய்வு),” “தமிழ் வீரம்(பாவேந்தருக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா அமரவே மாட்டார் - போலும் தறுகண்மைச் செய்திகள்),” “புத்துரை வழங்கியவன்(திருக்குறளுக்குப் புத்துரை),” “குழந்தை உள்ளம்,” “மானக் களிறு(பள்ளியில் பேசிய நிகழ்ச்சி)” ஆகியவை பன்முறை வாசித்துச் சுவைக்கத் தக்கவை. அவற்றுள்ளும் “மானக் களிறு” பாடலில் வரும் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது. தன்னால் தலைமையாசிரியர் ஒருவருக்குப் பணியிடமாற்றத்தைப் போக்கிக்கொள்ள அவருக்குப் பாவேந்தர் கூறிய உத்தி, வியப்பானது.

நூறாம் பாடலான “ஒண்டமிழ்ப் போர்வாள்!” என்பதில் பின்வருமாறு பாவேந்தர்தம் சிறந்த நூல்கள் நிரல்படுத்தப் பெறுகின்றன:

“அவரது நூல்கள் அமர்க்கள வேல்கள்!
எவரையும் எதிர்த்திட ஏந்தும் துமுக்கி!
குடும்ப விளக்கோ வாழ்க்கை விளக்கு!
இடும்பை தீர்க்கும் இருண்ட வீடு!
தமிழை இயக்கும் தமிழ்இயக் கம்தான்!
அமிழ்தைச் சுரக்கும் அழகின் சிரிப்பு!

தேனின் அருவி தெளிவை ஊட்டும்!
கூனல் நிமிர்த்தும் குறிஞ்சித் திட்டு!
பழச்சுளைப் பாவியம் பாண்டியன் பரிசோ
பழகுநல் லினிமையும் புதுமை அறிவும்
இழைந்தே ஒளிர்ந்திடும் ஒண்டமிழ்ப் போர்வாள்!
விழைவுச் செம்பயிர் விளைக்கும் நிலமே.”

நூறு பாடல்கள்; நூற்றுப் பன்னிரண்டு பக்கங்கள். ஆனால், பாவலர் இலக்கியன் படைத்துள்ள இந்தப் “பாவேந்தர் புரட்சி நூறு” நூல் விளைவிப்பதுவோ எண்ண முடியாத எண்ணப் பயிர்கள்!

*******************************************************************************
ஆசிரியர் முகவரி:
கலைமாமணி இலக்கியன்,
16, பதினைந்தாவது குறுக்குத் தெரு,
அண்ணா நகர்,
புதுச்சேரி - 605 005.
பேசி: 0413 2201786

வெளியீட்டாளர் முகவரி:
வெள்ளையாம்பட்டு சுந்தரம்,
சேகர் பதிப்பகம்,66/1, பெரியார் தெரு,
எம்.ஜி.ஆர். நகர்,
சென்னை-600 078.
பக்கம்: 12+100=112.

விலை:உரூ.35-00.

******

14.11.08

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து தமிழினத்தை மீட்பது எவ்வாறு? -
ஊடகங்களும் மின்வெளியும்
- தேவமைந்தன்

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" என்னும் வள்ளலாரின் விண்ணப்பத்திலுள்ள 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுதல்' என்னும் தீமையை முழுவதுமாகக் கடைப்பிடித்தலையே தம் உயிர்க் கோட்பாடாகக் கொண்டு செயல்படுபவை இன்றைய தமிழ் ஊடகங்கள். இல்லையென்றால், ஓராண்டுக்கு ஓராயிரம் கோடி உரூபாக்களைக் குறிப்பிட்டதோர் அலைவரிசைக் கட்டமைப்பினால் அள்ள முடியுமா?

தமிழர்களில் பலர் மொழி-இன உணர்வில்லாதவர்கள் என்ற குற்றச்சாற்றைத் தமிழ்ப்பணியாளர்கள் மக்கள்முன் வைப்பது சிலருக்கு வழக்கமாக உள்ளது. 'ஆனந்த விகடன்' கிழமையிதழ் அண்மையில் மேற்கொண்டதொரு கருத்துக் கணிப்பின்படி, அக்குற்றச்சாற்று தவறானது என்பது உறுதியாகியுள்ளது. காசுசேர்க்கும் நோக்கம் மட்டுமே கொண்ட வழிகளில், பெரிய - சிறிய திரைப்படங்கள்/தொடர்கள், அவற்றுள் நடித்துக் காசுதிரட்டும் நடிகையர்/நடிகர் குறித்தே நாள்முழுவதும் பார்வையாளர்களின் மூளைகளில் கருத்தியல்/படிமத் திணிப்பைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் ('மக்கள் தொலைக்காட்சி' நீங்கலாக) இன்றைய தமிழ் ஊடகங்களின் தாக்கத்தையும் மீறி, அறுபது விழுக்காட்டுத் தமிழர்கள், தங்களுக்கு இன-மொழி உணர்வு இருக்கிறதென்று புலப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால், இவர்கள் அனைவரும் இளைய தலைமுறையினர் அல்லர்; நெடுங்காலமாய் நிலவி வந்த திரைப்பட/திரைநடிகர் கவர்ச்சி/தலைமை மிகை ஈடுபாடு முதலான கொடுமைகளுக்கும் மேற்பட்டு, இன்றைய இளைய தலைமுறையினருள் பெரும்பான்மையினர், [முன்பெல்லாம் ஏந்துமிக்கவர்களும் செல்வம் மிகுந்தவர்களும் மட்டுமே பங்கேற்று வந்த] 'ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்' 'மானாட மயிலாட' முதலான பண்பாட்டுச் சீரழிவுகளில் உள்ளமிழந்து ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கமொன்றே இன்றைய தொ.கா. அலைவரிசைகளில் பலவற்றுக்கு இருப்பதைக் காண்கிறோம்.

ஒருபக்கம் விளம்பர வருமானம்; மறுபக்கம் எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளை நாள்முழுவதும் பார்க்கும் ஈடுபாடு கொண்டவர்களுமான நடுத்தரக் குடும்ப இளையவர்களின் மன அலைச்சல்களுக்கு வடிகால் வகுப்பதன் வழி பார்வையாளர் எண்ணிக்கையைப் பெருக்குதல் என்ற இரண்டு செயல்பாடுகளில் இவை முனைந்திருப்பதை உணர்கிறோம். அதாவது, இந்த அலைவரிசைக் குழுமங்களின் முதலாளியர், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையின் வளவாழ்வையும் மன-இன-மொழி நலங்களையுமே தம் சொந்த நலன்களுக்காக இரையாக்கி வருகின்றனர்.

1927ஆம் ஆண்டு தொலைக்காட்சியை அமெரிக்க அறிவியலார் பார்ன்சுவொர்த்(Farnsworth,P.T.) கண்டுபிடித்து, அதனைப் பயன்படுத்தத் தொடங்கிய ஐம்பது ஆண்டுகளிலேயே அதை வெறுத்த அமெரிக்கர், 'முட்டாள் பெட்டி'(Idiot Box) என்று அதற்குப் பகடிப்பெயரிட்டு அழைத்தனர். பார்வையாளர்கள், தொ.கா. நிகழ்ச்சிகளுக்கு மெல்ல மெல்ல அடிமையாகி விடுவதால் அதற்கு அந்தப் பெயர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென்மார்க் பிரான்சு நாடுகளின் திரைப்படங்களின் எழுத்துப்படி(script)களில், தொலைக்காட்சி பார்ப்பவர்களை நையாண்டி செய்யும் உரையாடல்களைத் திறமையாக அமைத்து அவர்களைத் திருத்தினர். தென்மார்க்குப் படமொன்றில், கதைத்தலைவியானவள், தலைவனிடம் தங்கள் இருவருக்குள் போதுமான அளவு திருமணப் பொருத்தம் உள்ளதா என்று கலந்துரையாடி அறிய முற்படுவாள். அவ்வாறு அவள் அவனை உசாவும் உசாவுதல்களுள் ஒன்று, "இயற்கைக் காட்சிகளில் ஈடுபடாமல், வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா?" என்பதாகும்.

உலகமயமாதலின் உச்சக்கட்டம் - 'நுகர்வோர் பண்பாடு' என்ற ஒன்றை உருவாக்கி, அதை மேன்மேலும் வளர்ப்பது என்பதை இத்தொடரின் முந்திய கட்டுரைகளில் கண்டோம். ஊடகங்களில், குறிப்பாகத் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, அதன் அலைவரிசை முதலாளியர்க்குப் பொருள்குவிப்பதில் முதன்மையாகப் பணிபுரியும் விளம்பரங்கள்(commercials), உலகில் உயிர்வாழும் மாந்தர் இனத்தில் ஆற்றல் மிக்க சரிபாதியாக விளங்கும் பெண்களை நுகர்வோராக(consumer) மட்டுமே மாற்றி ஆக்கும் கயமையைக் காண்கிறோம். விலைமிகுந்த - அழகுப்பொருள்களையும் வண்ணவண்ணத் துணிகளையும் பயன்படுத்தி ஓர் ஆடவனைக் கவர்வதையே தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர்கள் பெண்கள் என்னும் மாயத்தோற்றத்தையும்; மாமியார்களின் மனங்கவரும் அளவுக்கு, புதிய புதிய பொருள்களையும் கருவிகளையும் விலைக்கு வாங்கித் துவைப்பதையும் சமைப்பதையுமே தங்களின் 'ஆன்ம ஈடேற்ற'மாகக் கொள்ளவேண்டியவர்கள் அவர்கள் என்ற கட்டாயத்தையும்; தங்கள் கணவன்மார்களின் ஏந்துகளைப் பார்த்துக்கொள்ள மட்டுமே உயிர்த்திருப்பவர்கள் என்ற 'தெளி'வையும்; தங்களின் குழந்தைகள் எவ்வளவு அழுக்குப் பண்ணினாலும் இன்முகத்துடன் 'மாயமந்திரம்'போல் குறிப்பிட்டதொரு வணிக நிறுவனம் உருவாக்கும் வழலைத் தூளை/கட்டியைப் பயன்படுத்தி 'வெள்ளைவெளே'ரென அவர்களின் துணிகளைத் துவைத்துப் போடுவதற்காகப் பிறந்தவர்கள் தாங்கள் என்ற 'மெய்ஞ்ஞான'த்தையும் - மற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்படும் அவர்களுக்கே உண்டாக்குபவை.

ஆனால், பலதரப்பட்டவர்களும் பெரும்பான்மையானவர்களுமான உழைக்கும் மகளிர் குறித்தும் அவர்களின் பன்முகப்பட்ட இன்னல்கள் இடுக்கண்கள் பற்றியும் எவ்வகைக் கவலையும் படாதவை தொ.கா. விளம்பரங்கள். இந்தக் கருத்தை, இந்தியாவில் தொலைக்காட்சி பரவத் தொடங்கிய காலத்திலேயே(1976-1986) மக்கள் தொடர்பியல் ஆய்வாளர்களான சிபான் முகர்சியும் சுபத்ரா பானர்சியும் பதிவு செய்திருக்கிறார்கள்.(மேலும் அறிய: Jiban Mukherjee, Advertising in India. Subrata Banerjee, Advertising and Small Newspapers.)

1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் நடுவண் அரசின் தில்லித் தொலைக்காட்சியும் 1975ஆம் ஆண்டு சென்னைத் தொலைக்காட்சியும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கின. 01-01-1976 முதல், அரசின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வணிக விளம்பரங்கள் ஒளிபரப்பாகின. அதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின், நிகழ்வில், வணிக விளம்பரங்கள், தனியார் தொ.கா. அலைவரிசைகள் பலவற்றை ஒவ்வொரு நகரத்திலும் உருவாக்கி வருவதற்குக் கரணியம் 'கம்பிவடத் தொ.கா. முறை'யே ஆகும். இதனால் ஆதிக்கவாதிகளும் செல்வந்தருமான சிலரின் கைப்பிடியிலுள்ள 'கார்ப்பரேட்' என்று சொல்லப்படும் கூட்டுக் வணிகக் குழுமம்சார் நிறுவனங்களிடம் தொலைக்காட்சி என்றதொரு மக்கள் தொடர்புக் கருவியே முடங்கிப் போயிருப்பதை ஊடக ஆய்வாளர்கள் உணர்வர்.

இப்பொழுது தமிழ்நாட்டு அரசு, அதை ஒழுங்கமைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றது. ஏனெனில், தேர்தல்களின் போக்கையும் நேரிவைப்பக(வாக்குவங்கி)இருப்பையும் மாற்றும் வல்லமை அந்தக் குழுமங்களுக்கு இருப்பதையும், அந்த வல்லமை தனக்காதரவாக இல்லாமையும் நிகழ் அரசுக்கு உறைத்திருக்கிறது. மற்றபடி, மக்கள் நலன்குறித்த கவலை எதுவும் இல்லை.

இக்கட்டுரையில் பிறிதோரிடத்தில் சொல்லியிருப்பதுபோல், தென்மார்க்கு பிரான்சு போன்ற நாடுகளில் மக்களிடையே தொ.கா. தொடர்பாக நிலவி வரும் விழிப்புணர்வு நம்மவர்களுக்கும் வந்தால்தான், இந்த ஆற்றல்மிக்க ஊடகத்தின் தாக்குதலால் தம் சொந்த இயல்புகளை இழக்காமல், தமிழினம் முன்னேற முடியும். 'மக்கள் தொலைக்காட்சி' அலைவரிசையில், 'கற்போம் கணினி' போன்ற பயன்மிக்க தொடர்களைக் குறித்து - அறிந்து கொள்ளும் ஆர்வம்கூட இல்லாத தமிழர்களுக்கு இதை எப்படியாவது புரிய வைக்க வேண்டும்.

சாரமற்ற தொ.கா. நிகழ்ச்சிகளில் தமிழர்கள் தம் பொன்னான பொழுதைப் போக்காமல், அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயன்தரும் பணிகளில் ஈடுபாடு கொள்ள ஊடகங்கள் வழியாகவே பயிற்றுவித்தல் வேண்டும். தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும்(குறிப்பாக முதியவர்கள்) மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிவரும் 'கற்போம் கணினி' நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து, முதற்கட்டமாகத் தமக்கென்று ஒரு மின்னஞ்சலையாவது திறந்துகொண்டு, அந்நிகழ்ச்சியின் பயிற்றாசிரியர் கபிலன் ஐயா மொழிவதுபோல் இன்றைய மின்வெளி(Cyberspace) உலகில் தங்களுக்கான முகவரியொன்றைப் பெற முயல வேண்டும். 'தமிழ்க்காவல்' போன்ற வலைத்தளங்களைக் கணினியில் திறந்து பார்க்கக் கற்றுக் கொள்வதுடன், மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவும் கற்பிக்கவும் முன்வர வேண்டும்.

தவிர, கணினி - இணைய உலகில் இன்று மிகவும் பயன்தரும் 'தேடல்'(Search) ஏந்தைப் பயன்படுத்தி, வீட்டில் பழைய புத்தகக் குவியல்களையும் அவற்றால் விளையும் அடுக்குத் தும்மல்களையும் தவிர்த்து, அதே பொழுதில் உலகெங்கும் நிரம்பியுள்ள நூலறிவையும் தமிழ் - தமிழர் பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் பெற்றுப் பயன் பெறவும் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். நாளேடுகளிலும் தொ.கா. அலைவரிசைகளிலும் [வேறுவழியில்லாமல், அவர்கள் வெளியிட்டு வரும்] இணையம், கணினி பற்றிய பல்வேறு புதிய செய்திகளையும் படித்து, இல்லக் கணினியில் அந்த மென்பொருள்களைச் சேர்த்துப் பயன்பெற வேண்டும்.

தமிழுக்குப் பாடாற்றும் வலைப்பதிவுகள் பற்பல இன்றுள்ளன. தமக்கு வேண்டியவர்களின் வலைப்பதிவுகளை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு, மற்றவர்களின் வலைப்பதிவுகளையும் கண்டு-கற்கும் பழக்கத்தை வலைப்பதிவர்களும் வாசிப்பாளர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் பதிவுகளுக்குத் தங்கள் கருத்தைப் பின்னூட்டம் செய்யும் பண்பாட்டையும் தங்களுக்குள் உருவாக்கி வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழறிஞர்களும் புலவர்களும் தங்களுக்கென்று வலைப்பதிவொன்றை உருவாக்கிக்கொண்டு, தங்கள் கருத்தைப் பரந்த அளவில் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள முயலவேண்டும். இதற்கெனப் புதுச்சேரி போன்ற நகரம் ஒவ்வொன்றிலும் நிகழ்த்தப்பெறும் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைகளில் தன்முனைப்பின்றிப் பங்கு பெற்றுப் பயில வேண்டும். மரபிலக்கணம் பயின்ற புலவர்களும் பேராசிரியர்களும், 'சந்தவசந்தம்' போன்ற இணையக் குழுமங்களில் பங்கேற்று, பரிமாறப்பெறும் மரபிலக்கணக் கருத்துகளுடன் தங்கள் கருத்துகளையும் முன்வைத்துப் பயன் தரவும் பெறவும் வேண்டும். இங்கு நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொன்றும் - காசு செலவழிக்கத் தேவையில்லாத, முற்றிலும் இலவயமான முயற்சிகளே.

இரண்டு விரல்களால் பழைய மைத்தூவலைப் பயன்படுத்தி எழுதுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. கூடவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள்போல் பல்வகை உடைமைகள்/ஏந்துகளோடு இனிமையுற்று வாழாமல், சொந்த மண்ணில் இயல்பாக வாழும் வாய்ப்பைக் கூடப் பெறாமல் ஏதிலிகளாகி வேற்று நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் - பற்பல பாடாற்றிப் பல்வேறு அரிய முயற்சிகள் செய்து, இலவயமாகத் தமிழ் உலகுக்கு அளித்து வரும் தமிழ் மென்பொருள்களைப் பயன்படுத்தியாவது "பத்து விரல்களால்" தமிழைக் கணினிவழி எழுதப் பழகுங்கள்.

இதுவே, இன்றைய நிலையில் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்'(திருக்குறள் 140) மட்டுமல்லாமல், உலகமயமாதல் நம்மை வென்று எங்கோ மூலையில் ஒதுக்கிவைத்து விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியும் ஆகும்.

*****************
நன்றி: தமிழ்க்காவல்.நெட், தி.ஆ.2039 - துலை 1 (17/10/2008)

20.10.08

தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- தேவமைந்தன்


சித்தர் என்றால் 'கைகூடுகை பெற்றவர்கள்.' 'கைகூடுகை' என்பது 'அறிவின் தெளிவு.' மனத்தின் நான்கு வடிவங்களுள் ஒன்றான 'சித்தம்' என்பது பெரும்பாலானவர்களுக்குச் செயலற்ற நிலையில்(inert) இருக்கும். அதைச் செயற்படுத்தக் கூடியவர்கள் சித்தர்கள். மனத்தின் வடிவங்கள் - மனம்(conscious), புத்தி(subconscious), சித்தம்(unconscious), அகங்காரம்(ego) என்ற நான்கு. சித்தம் என்பது மனத்தின் நான்கு வடிவங்களுள் மூன்றாவது. சித்தத்துக்கு, 'முடிவான மனக்கொள்கை,' 'மூலப்பகுதி' என்றும் பொருள் உண்டு. சிவாகமத்துள் ஒன்றனுக்கும் மரங்களுள் முருங்கைமரத்துக்கும் சித்தம் என்று பெயர். அணியமாக/திண்ணமாக/ஆயத்தமாக உள்ளதற்கும் 'சித்தம்' என்பார்கள்.

'சித்தன்' என்ற சொல் முருகக் கடவுளையும் அருக தேவனையும் சிவபெருமானையும் வைரவனையும் வியாழனையும் குறிக்கும். மரங்களுள் இலவமரத்தைச் 'சித்தன்' என்பார்கள். காந்தக் கல்லுக்கும் அதே பெயருண்டு. 'சித்தாதிகள்' என்ற சொல்தான், இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவரப்பெற்ற யோகிகளைச் சுட்டும்.

திருமூலர் 'முக்கரணம்' பற்றிக் கூறிய பாடல்களுக்கான உரைகளை வைத்துக்கொண்டு 'சித்தர்' என்பவர் யார் என்பதைக் குறித்துத் திருமூலர் விளக்குவதாகக் கூறி, தாங்களே விளக்கினர் சிலர். சட்டைமுனி நாயனாரின் ஞானப்பாடல்களில் சித்தர் குறித்த விளக்கம் உண்டு. இன்னும் அகத்தியர், கருவூரார் இராமதேவர்,வால்மீகர்,காகபுசுண்டர் முதலானோர் சித்தரை அடையாளப்படுத்தியுள்ளார்கள். சித்தமெனும் சிந்தையில் தெளிவு கொண்டவனே சித்தன்('சூத்திரஞானம்' தொடக்கப் பாடல்கள்) என்ற வால்மீகர் கருத்து இவற்றுள் தெளிவாக நாம் அறியுமாறு உள்ளது.

'கைகூடுகை' என்னும் அறிவின் தெளிவு என்பதில் அறிவில் விளக்கம், துலக்கம், மன அமைவு, நற்காட்சி, ஆராய்ச்சி என்ற ஐந்து தன்மைகள் உள்ளன. 'சித்து' என்ற சொல்லுக்கு "அறிவுடையது" என்ற பொருளையும் 'அசித்து' என்பதற்கு "அறிவில்லாதது" என்ற பொருளையும் சிவஞானசித்தியார் சுபக்கம்(பாடல் எண் 159இல் வரும் 'சித்தசித்து' என்ற சொல்லால்) சுட்டுகிறது. ("சித்தினை அசித்துடன் இணைத்தாய்!" - பாரதி, தோத்திரப் பாடல்கள்; எண்:36) 'சித்தி' என்ற சொல்லுக்கு, கைகூடுகை, வீடுபேறு முதலான பதினைந்து பொருள்கள் உள்ளன.(Madras University Tamil Lexicon III:I. ப.1412) ஒன்றை நினைக்கிறோம். அது கைகூடுவதில்லை. அழுந்த நினைப்பது கைகூடினால் அது 'சித்தி' எனப்படும். "ஸித்' என்ற வடமொழி வேர்ச்சொல்லே 'ஸிது' என்றாகி 'ஸித்த' என்னும் சொல்லாகியது" என்பது(முனைவர் க. இளமதி சானகிராமன், சித்தர்களும் சமூகப் பார்வையும், புதுச்சேரி, 1990. ப.1) இதற்குப் பொருந்தாது. ஆனால் "தாங்கள் ஆணையிடுங்கள்; நிறைவேற்ற நான் சித்தமாக இருக்கிறேன்" என்பதற்கும் "தங்கள் சித்தம் என் பாக்கியம்!" என்பதற்கும் பொருந்தும். 'சித்தித்தல்' என்ற சொல்லுக்கு 'கைவரப்பெறுகை/ கைவரப்பெறுதல்' என்று பொருள். இது எப்படியென்றால், 'அன்னம்' என்ற சொல் பறவையை உணர்த்தும்பொழுது தமிழாகவும் உணவை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் ஆவது போலவும்; 'நாகம்' என்ற சொல் மலையை உணர்த்தும்பொழுது சமற்கிருதமாகவும் பாம்பை உணர்த்தும்பொழுது தமிழாகவும் இருப்பது போலவும் ஆகும். மரங்களுள் எட்டிமரத்துக்கும் மூலிகைச் செடிகளுள் 'நிலப்பனை'க்கும் கீரைகளுள் பொன்னாங்காணிக்கும் தூய்மையாக்கும் மருந்துகளுள் சவர்க்காரம்/சலவைக்கட்டி என்று பொருள்படுகின்ற வழலைக்கும் 'சித்தி' என்ற பெயர் உண்டு.(புண்ணிலிருந்து வடியும் நீர், பாம்பு வகையில் ஒன்று, உப்பு வகையில் ஒன்று, கோழை/சிலேத்துமம் - என்பவை 'வழலை'க்கு ஏனைய பொருள்கள்)

சூஃபியர் என்ற சொல், 'சூஃபி' என்ற அரபுச் சொல்லின் ஆக்கம். அரபுமொழியில் ‘சூஃப்’ என்ற சொல் கம்பளி(wool)யைக் குறிக்கும். பின்னர் அச்சொல்லே ‘கம்பளியை உடையவன்’ (a man of wool) என்ற பொருள் குறிக்கும் ‘சூஃபி’ என்னும் சொல்லை அரபுமொழி இலக்கியத்துக்குத் தந்தது. படிப்படியாக, பாரசீகத்தில் முஸ்லிம் மெய்ப்பொருளியலும் ஆன்மிக மறையியலும் இணைந்தவொரு முறையைப் பின்பற்றுகின்ற ஒருவரை அச்சொல் குறிக்கலானது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபிய மெய்யுணர்வாளர்களில் பீருமுகம்மது வாவா என்று நெல்லை மக்களால் அன்புடன் அழைக்கப்பெறும் பீர்முஹம்மத் அப்பா(ரலி) முதலாமவர். (கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அவருடைய அடக்கத்தலம் உள்ளது.) "பீர்முஹம்மத் அப்பா(ரலி) அவர்களே [தமிழ் சூபித்துவ] ஞானப் பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகிறார்கள்" என்று தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் தன் ஆய்வில் கூறியுள்ளார்.

'அட்டமாசித்தி' எனப்படும் சித்திகள் அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. 'அட்டமாசித்தி'யைத் தூயதமிழில் 'எண்மாப் பேறுகள்' என்றும் அவற்றை நுண்மை, பருமை, மென்மை, விண்டன்மை, விரும்பியதெய்தல், தன்வயமாக்கல், நிறைவுண்மை, ஆட்சியனாதல் எனவும் மொழிவர். அணிமாவுக்கு பிருகி முனிவர் வண்டு வடிவம் எடுத்ததையும்; மகிமாவுக்குத் திருமால் வாமனராக வந்து நெடிய தோற்றம் கொண்டதையும்; இலகிமாவுக்கு அப்பர் என்ற திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபொழுது கல் மிதந்ததையும்; கரிமாவுக்குச் சிபி, புறாவின் எடைக்குத் தானே அமர்ந்ததையும்; பிராத்திக்கு இராவணன், சூரபதுமன் ஆகியோர் எவ்வுலகத்தும் எவ்விடத்தும் தடையின்றிச் சஞ்சரித்ததையும்; பிராகாமியத்துக்கு மூலன் உடம்பில் நுழைந்து திருமூலராய் எழுந்த யோகியையும்; ஈசத்துவத்துக்கு ஞானசம்பந்தர், சுந்தரர், வள்ளலார் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளயும்; வசித்துவத்துக்கு, சுந்தரருக்காக இறைவன் தூது சென்றதையும் சான்று காட்டினார் முனைவர் இரா.மாணிக்கவாசகம்.(சித்தர்கள் பரிபாஷை அகராதி, 1982.பக்:188-189.)


'கைகூடுகை' என்பதற்கு, பொதுவான மாந்தருக்குக் கிடைக்காத அரிய பேறு என்ற பொருளையே பொதுமக்கள் எப்பொழுதும் கற்பித்து வருகிறார்கள். மாந்தருக்கு இயல்பானவற்றில் உள்ள நாட்டத்தைவிடவும் இயல்புக்கு மீறியவற்றில் நாட்டம் மிகுதி. அதனால்தான் தமிழ்ச்சித்தர்களுக்கு எண்மாப்பேறுகள் போதா என்று அறுபத்து நான்கு வகைச்சித்துக்களை உடைமையாக்கி மனநிறைவடைந்தனர். ஞானவெட்டியான், யாகோபு வைத்தியவாத சூத்திரம் ஆகிய நூல்களும் இதற்கான குறிப்பைத் தருகின்றன. [முனைவர் க.நாராயணன், சித்தர் தத்துவம், புதுச்சேரி, 1988.]

சூஃபியாக்கள் [பாரசீக சூஃபி மெய்யுணர்வாளர்] பரம்பொருளை ‘உண்மை” என்றே சுட்டுகின்றனர். ‘தன்னுணர்வு கொண்ட விழைவு,’ ‘அழகு,’ ‘ஒளி’ அல்லது ‘எண்ணம்” என்ற முந்நிலையில் அவர்கள் கடவுளை வைத்துச் சுட்டுவதாக அல்லாமா இக்பால் அவர்கள் கூறியுள்ளார். [Dr.Shaik Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia, London. மேற்கோள்: தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.]

தமிழ்நாட்டுச் சித்தர்களை மரபு வழியாக 1.அகத்தியர் 2.போகர் 3.கயிலாயநாதர் 4.கோரக்கர் 5.திருமூலர் 6. சட்டைமுனி 7.கொங்கணர் 8.கூன்கண்ணர் 9.இடைக்காடர் 10.நந்தீசர் 11.புண்ணாக்கீசர் 12.உரோமர் 13.மச்சமுனி 14.கூர்மமுனி 15.கமலமுனி 16.வாசமுனி 17.பிரமமுனி 18.சுந்தரானந்தர் என்றும் அவர்கள் அல்லாமல் கரூர் சித்தர் என்ற கருவூரார், புலத்தியர், புசுண்டர், இராமதேவர், தன்வந்திரி, கபிலர் முதலானோரையும் வரிசைப் படுத்துவார்கள்.

தமிழ்நாட்டுச் சூஃபியர்களுள் முகமையானவர்கள் - பீர்முஹம்மத் அப்பா(ரலி), கோட்டாறு ஞானியார், குணங்குடி மஸ்தான் சாஹிபு, கலீபத் ஷைகு ஷாஹூல் ஹமீத் அப்பாநாயகம், பரிமளம் முகம்மது காஸிம், இறசூல் பீவி, ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா, குஞ்சலி சாஹிப், இளையான்குடி மஸ்தான் ஸாஹிப், கோட்டாறு சைகுத்தம்பி ஞானியார், அப்துல் காதிர் வாலை மஸ்தான், பெரியநூஹூ லெப்பை ஆலிம், 'காலங்குடி மச்சரேகைச் சித்தன்' என்றழைக்கப்படும் செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மௌலானா ஐதுரூஸ், மேலைப்பாளையம் முகியித்தீன் பஸீர், மோனகுரு மஸ்தான் ஸாஹிப், முகம்மது ஹம்ஸாலெப்பை ஆகியோர்.

வேதத்தையும் மதத்தையும் எதிர்த்தவர்களாகிய சித்தர்களுள் அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், திருவருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். நிகழ்சமூகம்போல் வேத-மத எதிர்ப்பாளர்களுக்குப் பாதுகாப்புத் தராத காலத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மறுப்பாளராக மட்டும் இல்லாமல் உடன்பாட்டு முறையில் சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு வித்திட்ட துணிவு வள்ளாலாருக்கு மிகுந்திருந்தது. அவர் அவ்வாறு ஆற்றிய சீர்திருத்தங்கள்:-
1. நாட்டிலும் சமூகத்திலும் வீட்டிலும் ஒருமைப்பாடு நிலவப் பாடுபட்டார்.
2. சாதி, மத, குல வேறுபாடுகள் ஒழிய எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் பாடுபட்டார்.
3. வகுப்பு வேற்றுமை என்பது புண்ணிய பாவங்களால் இயற்கையாக விளைவது என்ற பிரச்சாரத்தை வன்மையாகச் சாடினார்.
4. அறிவுக் கல்வியும் ஆன்மிகக் கல்வியும் முறையாகப் பெறுவதற்கு மகளிர்க்கு முழு உரிமை உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தார்.
5. கோயிலுக்குள் புகலாகாது என்று பலரை மதக்கோட்பாட்டினர் கருத்துப் பரப்பலாலும் வன்முறையாலும் தடுத்துக் கொண்டிருந்த காலத்தில், உலகில் வாழும் எல்லாரும், சமய-மத வேறுபாடு எதுவுமின்றி, சென்று கூடி வழிபடக்கூடிய சன்மார்க்க சுத்த சத்திய சங்கத்தை உருவாக்கினார்.
6. கிழக்கிந்தியக் கம்பெனியின் வழி பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவுக்குள் நுழைந்து அறிவடிப்படையாலும் அதிகார அடிப்படையாலும் மாந்தரை அடிமைப்படுத்திய காலத்தில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!’ என்ற விடுதலை முழக்கத்தை முன்வைத்தார்.
7. உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தை முதன்முதலாகக் கண்டித்தார்.
8. தனிமனிதர்கள் தம் உடம்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய முறைமைகளையும் ‘நித்திய கரும விதி’ என்ற தலைப்பின்கீழ் வகுத்ததுடன், திருமூலர் வழியில் 'உடம்பா'ரையும் 'உயிரா'ரையும் காப்பதற்கென்றே ‘மூலிகை குண அட்டவணை,’ ‘சஞ்சீவி மூலிகைகள்,’ ‘மருத்துவக் குறிப்புகள்’ என்ற மூன்றையும் ஆராய்ந்து தொகுத்தார்.
9. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தமிழ்மொழியின் உரைநடையை வளர்க்கும் படைப்புகளைத் உருவாக்கினார்.
10. ‘சத்தியப் பெரு விண்ணப்ப’த்தில், இறைவனைப் புகழ்ந்தேத்தத் தமிழே உகந்தது என்பதை, “எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!” என்று பாடி, “அருச்சனை பாட்டேயாகும்" என்ற சேக்கிழார்தம் கருத்தை வலிமைப்படுத்தினார்.
12. ‘மனுமுறை கண்ட வாசகம்’ இயற்றி விதி என்னும் ஊழ்வினைக் கோட்பாட்டை(fatalism) அறிவுக் கோட்பாட்டால்(epistemology) வென்று காட்டினார்.

வள்ளலார் அறிவுறுத்திய சுத்த சன்மார்க்கத்தின் முதன்மை நோக்கம், பேரின்ப சித்தி பெறுதலேயாகும். பேரின்ப சித்தி என்றால் சிற்றின்ப சித்தி உள்ளதா என்ற வினா எழும். ஆன்ம சாதகன் இறைநிலையை முழுமையாக அடையாத காலத்தில் அவனை வந்தடையும் சித்திகளே அவை. பேரின்ப சித்திபெற என்ன வழி? சாதி மதங்களை விடுத்துப் பொது நோக்கம் பெற்றுச் சீவகாருண்யம் வளர்ந்து கடவுள் அருளைப் பெறும்பொழுதே அதனைப் பெறலாம்.(இது குறித்து மேலும் அறிய: முனைவர் அ.செகதீசன், தமிழ் இலக்கியத்தில் யோகம், லில்லி பதிப்பகம், பத்மாவதி நகர், திருப்பதி-2. 1987. பக்.254-314)

தவிர, இன்று ஊடகங்களால் பெரிதும் பரப்பப்படும் யோகாசனங்கள் குறித்து, அன்று வள்ளலார் எதுவும் கூறாமல் விட்டதற்கு இல்லறவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஹடயோகமும் அதன் பகுதியான ஆசனங்களும் சிறப்பாகப் பயன்படாது என்ற காரணம் இருக்கலாம். ஆனால், வள்ளலார் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வடலூரிலும் மற்ற இடங்களிலும் தாமே உருவாக்கிய ஆசனப் பயிற்சிகளைக் கற்பிக்கும் சுவாமிகள் சிலர் உருவாகியிருப்பதற்கு என்ன சொல்வது?

வள்ளலார் என்னும் வடலூர் இராமலிங்கசுவாமிகளின் திருவருட்பாவின் ஆறாம் திருமுறை மேலும் அவர் காட்டிய 'மரணமிலாப் பெருவாழ்வு' மீதும் அளவிறந்த ஈடுபாடு கொண்டிருந்தார் பாரதி. வள்ளலார் மட்டுமல்லர்; சித்தர்கள்மேல் பொதுவாகவே பாரதியாருக்கு ஈடுபாடு அதிகம். இதே கட்டுரையில் புதுச்சேரிச் சித்தர்களுள் ஒருவராகக் குறிப்பிடப் பெற்றிருக்கும் யாழ்ப்பாணத்துச் சாமிகளைத் தன் வீட்டுக்குக் குரு குவளைக் கண்ணன் அழைத்துவந்ததை பாரதியார்,
"ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை இவனென்றன் மனைக் கொணர்ந்தான்.
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
'அன்றேயப் போதேவீ டதுவே வீடு"
(சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, ப.43)
என்று கூறியதுடன் நில்லாது யாழ்ப்பாணத்துச் சாமிகளைப் பற்றி,
"குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்"
என்பதோடு நில்லாமல்,
"தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன் யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி"
(சென்னை சக்தி காரியாலய மூன்றாம் பதிப்பு, 2/10/1957, பக்.40-41)
என்றும் தெரிவித்துள்ளார். பாரதி பற்றிக் கட்டுரை எழுதுபவர்களும் படமெடுப்பவர்களும் குருகுள்ளச்சாமி குறித்து வெளிப்படுத்தும் அளவு புதுச்சேரியின் புகழ்மிக்க சித்தர்களுள் ஒருவரான யாழ்ப்பாணத்து சாமிகளைப் பற்றி வெளிப்படுத்துவதில்லை. ஹடயோகியும் ஞானியுமான குரு கோவிந்தசாமி என்றவராலும் புதுச்சேரியில் விந்தையான இரண்டு அனுபவங்களை அடைந்தார் பாரதி.(பார்க்க: மேற்படிப் பதிப்பு, ப.275)

என்றாலும், பாரதியை அவருடைய வேதாந்தப் பாடல்கள்தாம் அடையாளங் காட்டுகின்றன என்றார் ப.கோதண்டராமன் அவர்கள்.(புதுவையில் பாரதி, பழனியப்பா பிரதர்ஸ், 1980, பக்.55-56) இவர்(ப.கோதண்டராமன்) தமிழ்நாட்டை விட்டு நீங்கிப் புதுவையில் அரவிந்தாசிரமத்திலேயே தங்கிப் பணி செய்தவர். 'புதுவையில் பாரதி' என்ற இந்த அரிய புத்தகத்தில் பாரதியாரின் 'சித்தக் கடல்' என்ற சிறிய நூலின் 1/7/1915, 2/7/1915 தேதிகளிட்ட குறிப்புகள்(பக்கம் 41 முதல் 47 வரை) பாரதியின் உண்மையான அன்பர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படுவன. நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, குடிக்கூலிக்காக வீட்டுக்காரன் கொடுக்கும் தொல்லை முதலாக, தமக்கேற்பட்ட புகையிலைப் பழக்கம் உட்படப் பலவற்றை அவற்றில் புலப்படுத்தியிருக்கிறார் பாரதி. [புதுவையில் பாரதியார் வாழ்ந்தபொழுது அரவிந்தர், பாரதியின் துணைக்கொண்டு செய்த திருவள்ளுவர், ஆண்டாள், நம்மாழ்வார் குலசேகராழ்வார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் குறித்து முதன்முதலாகச் சிந்திக்க வைத்ததும் 1980இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ப.கோதண்டராமனின் புத்தகமே. பார்க்க: பக்.88-117]

சித்தர்கள் தொகை முதலில் பதினெட்டாகவும் பிறகு இருபதாகவும் ஆனதற்கு, அவ்வப்பொழுது வெளிவந்த சித்தர் பாடல்களின் பதிப்புகளே காரணம். உண்மையில் சித்தர்கள் தொகையை எண்ணி மாளாது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் மட்டும் கழுவெளிச் சித்தர், சிவஞானபால சித்தர், தொள்ளைக்காது சித்தர், மௌலா சாஹிப் மெய்ஞ்ஞானி, நாகலிங்க சாமிகள், அழகர் சாமிகள், சித்தானந்த சாமிகள், சக்திவேல் பரமானந்த குரு சாமிகள், இராம பரதேசி சாமிகள், அப்பா பைத்திய சாமிகள், அக்கா சாமிகள், மகான் படே சாயபு, கம்பளி சாமிகள், யாழ்ப்பாணம் கதிர்வேல் சாமிகள், ஞானகுரு குள்ளச் சாமிகள், சட்டி சாமிகள், சீமான் சாமிகள், சடைத்தாயாரம்மாள், திருக்காஞ்சி சாமிகள் முதலான சித்தர்கள், தோராயமாக முப்பதின்மர் வாழ்ந்தார்கள். தமிழ்நாட்டில் கரூர், திருவண்ணாமலை முதலான ஊர்கள் ஒவ்வொன்றிலும் ஒற்றைவேட்டிச் சாமிகள், அருணாசல சாமிகள், ஆற்றுச் சாமிகள், இராமேசுவரம் சாமிகள், பேயன்பழத் தாத்தா சித்தர் முதலான சித்தர்கள் பற்பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.

உண்மையான சித்தர்கள் இரசவாதம் முதலானவற்றை நாடிவந்த மக்களை ஊக்குவித்ததில்லை. மூலிகைகள் பலவற்றின் முதன்மைக் குணங்களை அறிந்து வைத்திருந்த சித்தர்கள் அவற்றின் இனங்கள் பல அழியாமல் காத்தார்கள். மாழை எனப்படும் உலோகங்களின் நுட்பங்களையும் முப்பூ போன்ற சஞ்சீவினி/குருமருந்து(panacea)களின் செய்முறையையும் சித்தர்களுள் பலர் தெரிந்து வைத்திருந்ததோடு மக்களின் தீராத நோய்கள் சிலவற்றைத் தீர்த்துவைக்கவும் முயன்றார்கள்.

சித்தர்களின் புறத்தோற்றம் இயல்பானதாகத்தான் இருக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் எதுவும் தோன்றாது என்பதை,

“வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!”
(பட்டினத்தார் பாடல்கள்: பொது. பா.19)

என்ற பட்டினத்தார் பாடல் தெரிவிக்கிறது.[“மாத்தானவத்தையும்” என்று தொடங்கும் இப்பாடலைத்தான் குமரி முதல் வேங்கடம் வரையிலுள்ள இடு-சுடுகாடுகளில் பணிபுரிவோர் தவறாது பாடுகின்றனர்; ‘பிதாமகன்’ என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றது]

சித்தர்களுக்கு இயல்பு மீறிய(abnormal) புறத்தோற்றமும் இருக்கக் கூடும் என்பதை,

“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!”
(மேலது, பா.35)
என்ற பட்டினத்தார் பாடல் சித்தரிக்கிறது.

சித்தர் பாடல்களின் பல்வேறு பதிப்புகளிலும் அவற்றுக்கு முந்திய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப்பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவுகளும் கடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று:
“மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி
மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்
சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்”
என்றும்,
“ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ?
ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி;
ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்?
ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!”
என்றும் வருபவை இரண்டுமே அவர் பாடியவை என்பது.

மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார், உலகோர்முன் வைக்கும் அளவையியல்(logic) நியாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு நியாயம் போல ‘நெற்றியடி’ கொடுப்பது. கொங்குப்புலவர் நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள அளவையியல் நியாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ:

“மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி
மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன்
மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி
வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன்
மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி
வாகான செயமண்டி போட்டே நூற்றில்
மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள்
வாகான ஞானமுறை முற்றுங் காணே”

கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல்களுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு?

தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் தமிழகத்தில் நிலவுகிறது. 'சித்தர்' என்பதற்கும் 'சித்த மருத்துவர்' என்பதற்கும் இடையில் அது நிலவுகிறது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த சமூகத்தின் குடும்ப மனிதர்களுக்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் அப்படியல்லாத தொழில்முறை மருத்துவர்கள். அவர்களையும் சித்தர் என்று ஏற்றுக்கொள்வது சரியா?

புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’(form) என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த காலத்தில் அச்சிடப்பெற்றது. அந்நூலுக்கான மதிப்புரை, ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் டி.வி. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி:
“கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...”

மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ யோகமுறைகளும் ஆசனமுறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[யோகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலே ஐந்தாம் பக்கத்தில்தான் தொடங்குகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் ரோமன் எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் யோகம் பற்றியும் மருத்துவம் பற்றியும்தான்...

இத்தோடு போய்விடவில்லை. சித்தர் பாடல்களுள் கலப்படமும் இடைச்செருகல்களும் ஏராளமாய் நடந்தேறியுள்ளன. அண்மையில் வாழ்ந்தவரும் வாழ்ந்துகொண்டிருப்பவரும் கூட,சித்தர் பாடல்களைப்போல் தாமே எழுதிச் சேர்த்திருக்கிறார்கள். உலோகாயதச் சித்தர், தடங்கண் சித்தர் போன்ற பெயர்களில் சித்தர் பாடல்கள் தொகுப்பில் அவர்களின் பாடல்கள் உள்ளதுடன், மிகச் சிறந்த ஆய்வாளர்களும் அவற்றை நம்பி மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

சித்தர்களின் பின்புலமோ கருத்தியலோ அறிய அவர்களின் பதிவுகளை நேர்மையுடன் தொகுத்துப் பதிப்பித்தல் வேண்டும். தவிர, திரு த. கோவேந்தன் இரா.இளங்குமரன் போன்ற பதிப்பாசிரியர்களும் சித்தர் பாடல்களின் எழுத்துப் பிழைகள் நீக்கி யாப்பைச் செம்மைப்படுத்துவதில் ஈடுபட்டனரே தவிர பாடல் தொகுப்பை வரிசைப்படுத்துவதில் ஆர்வம் காட்டியதாகவோ முயன்றதாகவோ தெரியவில்லை...ஒருவர் பதிப்பில் பாடல் எண்ணிக்கை கூடியுள்ளதற்கும் மற்றவர் பதிப்பில் குறைந்துள்ளதற்கும் யாரும் காரணம் காட்டவில்லை.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.63)

தமிழ்நாட்டு சூஃபியர்களின் தொண்ணூற்றிரண்டு 'வகைமாதிரி'க் கவிதைகள், 'இறைவனும் பிரபஞ்சமும்' நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (தேசமானிய, டாக்டர். ஏ.எம். முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு-7. 1995.)

பொதுவாக, சித்தர்களும் சூஃபியர்களும் -

1. மதங்கள் மனிதர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படுத்தாமல் தலையிட்டு, மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். "..இலங்கை இந்திய கலாசாரப் பின்னணியின் மூலம் சூஃபி ஞான வளர்ச்சியில் இன்னொரு திருப்பத்தையும் காண்கிறோம். பற்பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம். இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மாணிக்கப்பூர் தந்த மகாமேதை மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமிய சகோதரர்களனைவரும், அங்கு சென்று, அன்னாரை நினைவு கூர்வதைக் காண்கிறோம்."(தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன், இறைவனும் பிரபஞ்சமும், கொழும்பு, 1995. ப.97)
2. பல்வேறு நுட்பமான முறைகளைப் பின்பற்றி, உட்சமயங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டும் தனித்தனிக் கடவுளரைக் கற்பித்துக்கொண்டும் மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்துவதைத் தடுத்தார்கள்.
3. பக்தியின் பெயரால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட உருவ வழிபாட்டு முறைகளையும் புறச் சடங்குகளையும், போலிவாழ்வையும் மூடப் பழக்கங்களையும் களைந்து அறிவார்ந்த ஆன்மிக வாழ்விற்கு வழிகாட்டினார்கள்.(முனைவர் க.நாராயணன், சித்தர் சிவவாக்கியர், 2003. ப.67)
4. குறிப்பாக, எவ்வாறு கலப்புத் திருமணங்களால் சாதிமுறை ஆட்டங்காணுமோ, அவ்வாறு சித்தர் பீடங்களைப் பின்பற்றிய மக்களிடத்தில் சாதிவேற்றுமை மதிப்புப் பெறாதவாறு பாதுகாத்தார்கள்.
5. உடைமைச் சமூகத்தில் இல்லாரும் வாழ வேண்டி, நிலையாமைகள் பலவற்றைத் தம் எளிய - தெளிவான - நேரடியான பாடல்களால் உணர்த்தி, உடைமை/சொத்துக் குவிப்பவர்களின் 'வேக'த்தை மட்டுப்படுத்தினர்.
"ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய்
ஒன்றா யிரண்டு மாகி
உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி
ஊருடன் பேருமா கிக்
கானாகி மலையாகிவளைகடலு மாகியலை
கானக விலங்கு மாகிக்
கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி
கண்டபொரு ளெவையு மாகி
நானாகி நீயாகி அவனாகி அவளாகி
நாதமொடு பூத மாகி
நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
நன்மைசெய் தாளு தற்கே
வானோரும் அடிபணித லுள்ளநீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வரு கவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே"
என்ற பாடல் குணங்குடி மஸ்தான் ஸாஹிபு அவர்கள் பாடியது.

சித்தர் திருமூலர் பாடியவை பின்வருமாறு:

"புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே

உடலாய் உயிராய் உலகமே தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே"

திருமூலரின் பாடற்பொருளை மஸ்தான் சாஹிபு அவர்களின் பாடற்பொருளோடு ஒப்பு நோக்கினால்(இறைவனும் பிரபஞ்சமும், ப.147) தமிழ்நாட்டுச் சித்தர்களும் சூஃபியர்களும் எத்தகைய புரிந்துணர்வுடன் தாங்களும் வாழ்ந்து மக்களையும் நெறிப்படுத்தினார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

********
karuppannan.pasupathy@gmail.com
திண்ணை.காம் வலையேட்டில் அக்டோபர் 09, 2008 வியாழக் கிழமையன்று 'அரசியலும் சமூகமும்' என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பெற்றது.

30.8.08

எப்பொழுதுமே தமிழராக இருக்கக் கூடாதா? - தேவமைந்தன்

உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர்.
விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..."
போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.
என் பெயர்ப்பலகையைக் கண்டு இளைஞர் இருவர் உரக்கச் சொன்னார்கள்: "சார் தமிழ் வாத்தியார். அதுதான் தமிழ் போர்டு மாட்டியிருக்கிறார்!" ஆக, தமிழில் பெயர்ப்பலகை இருந்தால் தமிழாசிரியர்; தமிழெண் உந்தில் இருந்தால், தமிழ் தொடர்பானவர்; தமிழைக் குறித்து அக்கறையாகப் பேசினால் தமிழால் பிழைப்பவர்; தூயதமிழ் குறித்து வலியுறுத்தினால் பா.ம.க. அல்லது 'மக்கள் தொலைக்காட்சி ' தொடர்பானவர்.....
அறுபதாண்டுகளுக்கு முன் எவராவது 'வணக்கம்' என்று சொன்னால், "என்னடா! நீ தீனா மூனா கானா'வா?" என்று கேட்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
காலம் இங்குமட்டும் உறைந்து போனதா?
தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பங்குச் சந்தை குறித்து இல்லத்தரசிகளும் அறிந்து கொள்ள 'ஹலோ சந்தை.' 'பரஸ்பர நிதியம்' குறித்து ஓர் ஐயத்தை வல்லுநர் விளக்குகிறார். பக்கத்தில் இருந்த விருந்தாளி கேட்கிறார்: "பரஸ்பர நிதியம் என்று தமிழில் சொல்லுகிறாரே.. அது 'ம்யூச்சுவல் ஃபண்ட்' தானே?" அது தமிழ் அன்று என்று சொல்லுவதைக் கவனிக்காமல், தொ.கா. பெட்டியையே பார்க்கிறார். "அப்ப வரட்டுமா?".. 'சட்'டென்று புறப்பட்டுப் போய்விடுகிறார்.
"கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ஒரு கொடுமை வந்து தலைவிரித்தாடுகிறதாம்!" என்று மக்கள் சொல்வார்கள்.
கோவிலொன்றில் சிறுவன், தன் தங்கையைக் குறித்து தாயிடம் முறையிடுகிறான். "மம்மீ! இங்க பாருங்க! இந்தக் 'கேட்'டை செளம்யா புடிச்சி புடிச்சி இழுக்கிறா!" நான் தலையிடுகிறேன். "தம்பீ! அது 'கேட்' இல்லே.. பூனை.." அவன் சொல்கிறான்: "அங்கிள்! எங்க மிஸ் அதைக் 'கேட்'டுன்னுதான் சொல்லச் சொல்லியிருக்காங்க.. அவங்க 'ஃபர்ஸ்ட் தெளசண்ட் வொர்ட்ஸ்'ன்னு 'புக்' வச்சுக் காட்டிருக்காங்களே.."
அவனாவது பேசினான். அவன் தாயோ என்னைப் பார்த்து முறைத்தார். அவர்களிருவரையும் பிடித்து இழுத்தவாறு அவ்விடத்தை விட்டே அகன்றார்.
இப்பொழுது சீனத்தில் நிகழும் உலக விளையாட்டுப் போட்டி குறித்து அங்குள்ள மூத்த மொழியியல் அறிஞர்(#) மொழிகிறார்: "எங்கள் நாட்டில் இப்போட்டி நடைபெறுவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான்; எங்கள் வீரர்கள் வெற்றிமேல் வெற்றி பெறுவது பற்றிப் பெருமிதம்தான்; ஆனால் இதைச் சாக்கிட்டு விளையாட்டு வகைப் பெயர்கள், உணவு வகைப்பெயர்கள் முதலியவை பல்லாயிரக்கணக்காக எங்கள் மொழியில் புகுகின்றனவே! இதை நினைத்தால் எனக்குக் கவலையே மேலிடுகிறது!"
"நாம் தமிழர்!" என்னும் உணர்வு, எப்பொழுது நம்மவர்களுக்கு வரும்? அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஊதியத்தில், அதன் உயர்வில், பணியிடம் தொடர்பான மாற்றங்களில், அடைந்துவரும் ஏந்துகளில், ஊதிய உயர்வுப் பரிந்துரைகளில் வேற்று மொழிக்காரர்கள் கைவைத்தால் மட்டுமே வரும். எல்லாம் சரியானதும், வந்த விரைவில் போய்விடும்.
தன் பிள்ளை வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டிய நிலைக்கு வருந்தாமல், படிக்கும் பள்ளிகளில் தமிழ்ச் சொற்களைப் பேசினால் தண்டம் கட்ட வேண்டி வருவதற்கும் அருவருப்படையாமல், அந்தப் பள்ளிகளுக்கு அளவுக்கு மிகுதியாகக் கல்விக்கட்டணத்தையும் - கட்டடங் கட்ட நன்கொடையையும் கடன்வாங்கியாவது தரவும் கவலைப்படாத பெற்றோர்களும்; இவைகுறித்து இரட்டை நடிப்பை இயல்பாகப் போட்டு அன்றாடம் நடிக்கும் அரசியல்வாணர்களும் இருக்கும் நாட்டில், நச்சுமரம் பழுத்ததுபோல் உலகமயமாதலும் முதிர்ந்து வரும்பொழுது, "நாம் தமிழர்!" என்ற உணர்வு தமிழர்க்கு ஒவ்வொரு நிமையமும் நீடிக்கப் பாடாற்ற வேண்டிய பங்களிப்பைச் சிறு - பெரு வணிகர்களும் தொழில் முனைவோர்களும் ஊடகம் நடத்துவோரும் தர முன்வந்தால்தான் தமிழுக்கு உரிய இடம் தமிழகத்தில் கிடைக்கும்.
அடிக்குறிப்பு:
இத்தனைக்கும் சீனத்தின் வடக்கு - நடுவண் -மேலைச் சீனப்பகுதிகளில் பேசப்படும் 'மண்டாரின்' என்ற கிளைமொழியே சீன அரசின் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஒலிப்புமுறை இடத்துக்கு இடம் மாறுபடாதிருக்க, பீஜிங் மக்களின் ஒலிப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு 1956ஆம் ஆண்டில் 'பின்-யின்' என்ற ஒலிப்புமுறை உருவாக்கப்பெற்றது. நடைமுறை ஆய்வுகளின் பின்னர், இரண்டாண்டுகளுக்குப்பின் அது செயல்முறைக்கு வந்தது. இந்தப் பின்-யின் ஒலிப்புமுறையைக் கொண்ட சீனமொழி, உரோமன் எழுத்துமுறையை ஏற்றுக் கொண்டது. இதுவே இன்றைய சீனத்தின் கல்விமொழி; பன்னாட்டுத் தொடர்பு மொழியும் இதுவே.
இம்மொழியையே - மூத்த அறிஞர் சுட்டுகிறார்.
நன்றி: தமிழ்க்காவல்.நெட் 17-8-2008.

12.8.08

துய்ப்பேம் எனினே தப்புந பலவே - வாழ்க்கை இதுதான்! - தேவமைந்தன்

‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்றாராம் பாரதி. கணக்குப் பாடத்தில் மக்கு என்ற ‘பாராட்’டை ஆசிரியரிடம் வாங்கிய மாணவர், வாழ்க்கைப் பாடத்தில் வென்று விடக்கூடும்.

ஆம். வாழ்க்கை, நாம் விதிக்கும் எந்த விதமான நிபந்தனையையும் ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யாகப் பார்த்தால், அது எந்த விதமான நிபந்தனையையும் நம்மேல் விதிப்பதும் இல்லை. அடிமைப் புத்தியே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும். விடுதலையான உள்ளம் எந்த நிபந்தனையை யார் விதித்தாலும் ஏற்காது. அன்பாகச் சொன்னால் மட்டுமே ஏற்கும்.

அன்புக்கு மாறானது வன்பு என்னும் ‘வம்பு.’ உலக அரசியலில், நாட்டு அரசியலில், அவையே போன்ற உலக - நாட்டு வணிகவியல்/சமூக இயல்களில், ஏன்.. வாழ்வியல் அன்றாடத்திலுங்கூட இன்றைய நாளில் முதன்மை இடம் தாங்குவது வன்பேதான். ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற இறுமாப்போடு அது உலகை வலம் வருகிறது. “அவர் வெறும் அரசு! நான் பெரிய பேரரசு!” என்பவருக்கு, அன்றன்று ஆட்சிப் பீடம்கூட ‘காலை வணக்கம்’ செலுத்துகிறது. ஆற்றல் மிக்க எளிமை, “வென்றவன் சொல்வதெல்லாம் வேதம்;அல்லாமல் என்ன?” என்ற கவியரசு கண்ணதாசன் வரியை முணுமுணுத்துக் கொள்கிறது.

சங்க இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் குறிப்பிட்ட ‘மெலிவு இல்லாத உள்ளம் உடைய உரனுடையாளர்’ (புறநானூறு 190) கேண்மையை விட, “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’(திருவருட்பா) உறவே நிகழ்வில் எங்கு பார்த்தாலும், சென்றாலும், பழகினாலும் மலிவாகக் கிடைக்கிறது. இந்தப் பொருளுக்கு மட்டுமே விலைவாசிப் புள்ளி - “வரலாறு காணாத விதத்தில்” - மிகவும் குறைந்து காணப்படுகிறது. ‘கச்சா எண்ணெ’யால் இதன் விலைப்புள்ளியை மட்டும் என்றும் ஏற்றிவிட முடியாது.

ஒளவையார் பாடினாரே -

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

என்ற பாட்டு...(புறநானூறு 187)

அந்த அளவுகோலை வைத்து இன்று அளந்தால், ஐந்து கண்டங்களிலும் ஓர் ஊர் கூட எஞ்சாது. கொள்கைகள் தடம் புரண்டுவிட்ட காலம் இது. ஏழைகளுக்கும் தொழிலாளருக்கும் உதவுபவர்கள் ‘ஏ.சி.’ இல்லாமல் இருக்க முடியாத காலம் அல்லவா.. பணம் படைத்தவர்களுக்கு அவர்களுள் சிலர் உதவும் அளவுக்கு, மற்ற ‘முதலாளித்துவச் சுரண்டல்வாதி’கள் துணைபோக முடியாது.

நாடு, காடு, பள்ளம், மேடு என்ற நில வேறுபாடுகளை மட்டும் ஒளவையார் சுட்டினார். செவ்வாய்க் கோள் முதலான கோள்கள்கூட அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடப் போகும் காலம் வந்து கொண்டிருக்கிறது. என்ன.. “எவ்வழி நல்லவர் ஆடவர்” என்பது மட்டும் பேரளவு மாற்றம் பெற்று விடும்...

‘புரொகிராமிங்’ என்பது, கணினித் துறையில் மட்டுமே வெல்லக் கூடியது. சோதிடர்கள் இந்தச் சொல்லைக் கொச்சைப் படுத்தி விட்டார்கள். உள்ளபடி, அவர்களைப்போல் ஆற்றலுடன் ஒருவரைக் கடவுளுக்கு எதிராக எந்த நாத்திகவாதியாலும் திருப்பிவிட முடியாது. இதைப் பட்டறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

ஆனால் இந்தத் திட்டமிடல்(programming) என்பதைச் ‘செயல் நம்பிக்கையாளர்கள்’ (pragmatists) அளவுக்கு மேல் நம்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் வெளியிடப்படும் நாட்குறிப்பேடுகள், அந்த அமெரிக்கப் பாணியில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். நம்மவர்கள் பலர் அந்த ‘பிளானிங்’(planning) பகுதியில் தான் உப்பு புளி மிளகாய்க் கணக்கை எழுதி வைப்பார்கள்.

“பத்துப் பொருள் வாங்க வேண்டுமென்று போனால், எட்டுப் பொருள் கூட வாங்கிவர அமையாது” என்று என் துணைவியார் அடிக்கடி கூறுவார்கள். திட்டமிடுவது எல்லாம் தோற்கும் என்பதல்ல; ஒவ்வொருவர் திட்டத்தையும் உடைத்தெறிய என்றே மற்றொருவர் இவ்வையகத்தில் தோன்றியிருப்பார் என்பதே உண்மை.

திருமணங்களிலும் இப்படித்தான். காதல் படங்களாய் எடுத்துத் தள்ளும் நம் திரைப்பட வல்லுநர்கள், காதலுக்குப் பிந்திய திருமண வாழ்க்கையையே பொருளாக வைத்துப் படமெடுக்குமளவு முட்டாள்கள் அல்லர். அவர்களுக்குத் தெரியும், நம் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று. வாழ்க்கையில் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதையே ‘சினிமா’விலும் பார்ப்பதற்கு நம் மக்கள் என்ன கலைப்படச் சுவைஞர்களா?
இதைப் புரிந்து கொண்டுதான் ‘பொதிகை’ அலைவரிசை, குறும்படங்களுக்கு ‘உரிய’ நேரம் ‘ஒதுக்குகிறது.’ பற்றாக்குறைக்கு, முன்பெல்லாம் நூல் வெளியிட்டு விழாக்கள் அடிக்கடி நடத்தப் பட்டதுபோல, இப்பொழுது ‘குறும்பட விழாக்கள்’ மலிந்து விட்டன. ஒரே நன்மை..புத்தகங்கள் வீட்டை அடைப்பதுபோல குறும்படங்கள் அடைப்பதில்லை. வட்டமான ‘டப்பா’க்கள் சில போதும்.. மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

“திட்டமிட்டால் போதும்!” என்பவர்களுக்கு எதிராக ஓர் உண்மையை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிவைத்தார்:

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறநானூறு 189)

கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறநானூறு 192) என்ற வாழ்க்கை மெய்ப்பொருள் பாடலின் பதின்மூன்று வரிகளுக்குப் பின்னால், வாழ்க்கை மெய்ம்மையை எதனுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் தெளிவாக வெளிப்படுத்தும் பாடல் இது.

வல்லரசுகள் பேரரசுகளை ஆள்பவர்களாயினும் சரி; நண்பகலோடு நள்ளிரவும் கண்துயிலாமல் வேட்டையாடும் வேடுவர்களாயினும் சரி; எவருக்கும் அடிப்படைத் தேவைகள் ஒன்றுபோலவேதான். மற்றவையும்(‘பிறவும் எல்லாம்’ என்ற இரண்டே சொற்கள் உணர்த்துபவை அனைத்தும் - காலங்கடந்தும் ஒன்றேபோல் இருப்பவை; ஏனெனில், அவை மனிதனின் கருவி-கரணம் சார்ந்தவை) அவ்வாறே. ஆகவே செல்வத்தை ‘உபரி’யாகச் சேர்த்தவர்கள் அந்த ‘உபரி’யை எப்பாடுபட்டேனும்(இது இக்காலப் பொருள்) எவ்வாறேனும் துப்புரவாகப் பகிர்ந்தளித்துவிட வேண்டும்.(இதைப் ‘பாத்தீடு’ என்ற கட்டுச் செட்டான சொல்லில் பழந்தமிழர் குறிப்பிட்டார்கள்.. ஆங்கிலத்தில் distribution என்பார்கள்). அவ்வாறு செய்யாமல் நாமே அச்செல்வத்தை நுகர்வோம் என்று முடிவெடுப்பவர்கள் இயற்கையான காரணங்களாலும் மன்னன் - படையெடுப்பு போன்ற செயற்கையான காரணங்களாலும்(இது அக்காலப் பொருள்) பலவகைகளில் அதைக் கைவிட்டு வருந்த நேரிடும்...

அந்தப் பாட்டின் பிற்பகுதிக்கு, இந்தக் காலத்துப் பொருள் என்ன தெரியுமா?

“...அப்படி அல்லாமல் நாமே இந்த உபரிச் செல்வத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்ற ‘பொல்லாத’ முயற்சியில் ஈடுபடுபவர்கள், ‘தினத்தந்தி’ போன்ற நாளேடுகளின் முதற் பக்கத்தில் முதல் இரு நாள்களும் - பிறகு ஐந்தாம் பக்கத்திலும் இடமும் ‘புக’ழும் பெற்று, படிப்படியாக ‘எதையும் மறக்கும்’ நம் மக்களால் அறவே மறக்கப்பட்டு, ஆண்டுகள் சில கழிந்தபின்னர் பழையபடி வாழவேண்டி வரும்!” என்பது.

********
நன்றி: திண்ணை.காம்

18.7.08

ஆங்கில வழிக் கல்வியால் விளையும் தீங்குகள் -- ம.இலெ. தங்கப்பா

தாய்மொழியே கல்விமொழியாக இருப்பதுதான் இயல்பானது. ஆங்கில வழிக் கல்வி இந்த இயல்புநிலையைச் சீர்குலைக்கின்றது. கல்வியைச் செயற்கையாக்குகின்றது.

தங்கள் சொந்தமொழியின் வாயிலாகக் கல்வி கற்பது மக்கள் உரிமை. மக்களாட்சி உரிமை. மண்ணின் மக்கள் கல்வி கற்கத் தாய்மொழியை விட்டுவிட்டு வேறொரு மொழியைத் தேடிப்போக வேண்டுமென்பது அடிமைத்தனத்தை மக்கள் மேல் புகுத்துவதாகும்.

மழலை வகுப்புகளிலேயே புகுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வி குழந்தைகள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்றது. கல்வியைக் கடுமைப்படுத்திக் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கின்றது. நேரத்தை விழுங்குகின்றது. நாள்தோறும் பேசிப் பழகும் வீட்டுமொழியாகிய தமிழில் கற்பது எளிது; இன்பம் தருவது. ஆங்கில வழிக் கல்வியோ தமிழ்க் குழந்தைகட்கு மிகமிகக் கடினமானதும், சோர்வூட்டுவதுமாக இருக்கின்றது. தமிழில் பத்தே மணித்துளியில் படிக்கக்கூடிய வரலாற்றுப் பாடத்தைக் கூடக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிக்க ஒரு மணி நேரம் ஆகின்றது.

ஆங்கில வழிக் கல்வி சொந்தப் புரிந்து கொள்ளுதலுக்கு இடமில்லாத குருட்டுப் படிப்பாக இருக்கின்றது. எண்ணத்தைத் தூண்டாமல் மூளையை மழுங்கடிக்கின்றது.

வட்டரங்கு(circus) விளையாட்டுகட்காகக் குரங்கையும் நாய்களையும் பழக்குவதுபோலவே ஆங்கில வழிக் கல்வி குழந்தைகளைப் பழக்குகின்றது. குருட்டுத்தனமாய்ப் பாடங்களைத் திணிக்கின்றது. எண்ணும் திறனை அழிக்கின்றது. குழந்தைகளின் ஆங்கிலத் திறமை வெறும் வட்டரங்குத் திறமையே.

ஆங்கில வழிக் கல்வி சொந்தப் பண்பாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கின்றது. தன் மொழி, இனம், பண்பாடு எதிலும் பற்றில்லாதவர்களாக அவர்களை வளர்த்து வெறும் பொருளீட்டிகளாக ஆக்குகின்றது. ஆங்கில வழிக் கல்விக்கு ஏற்பட்டுள்ள போலி மதிப்பினாலும் பள்ளியில் தாய்மொழியாகிய தமிழ் ஒரே ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப் படுவதாலும், தமிழை அவர்கள் தாழ்வாக நினைக்கின்றனர். தமிழ்வழிக் கல்வி மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. தமிழ் சொந்த மக்களாலேயே இழிவு படுத்தப் படுகின்றது.

வேலை வாய்ப்பை முன்னிறுத்தியே ஆங்கில வழிக் கல்வி அமைந்திருப்பதால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் வேலை பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்த கூலிகளாகவே உருவாகின்றனர். ஆங்கில வழிக் கல்வியாளர் எல்லாருமே அடிமை உள்ளத்தினராக இருப்பதால் கல்வியின் விரிந்த நோக்கங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் கைவிடப்பட்டு வேலை பார்க்கவே கல்வி என்று குறுகிப் போனமையால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் நல்லியல்புகளும், மாந்தப் பண்பும், மக்கள் நேயமும் இல்லாத, அருவருக்கத்தக்க வறட்டு மாந்தராக நிற்பதையே இன்றைய படித்தவர் நடுவில் கண்கூடாகக் காண்கிறோம். தன்னலம் பிடித்த உலகியலாளராய் வாழும் இவர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ சிறிது கூடப் பயன்படுவதில்லை. பயன்படும் எந்த ஆக்கப் பணியையும் இவர்கள் செய்வதில்லை.

ஆங்கில வழிக் கல்வி, பள்ளிகளையும், பள்ளிக் கல்வியையும் மட்டுமல்ல நாட்டின் கல்விச் சூழல் முழுமையையுமே ஆங்கில வண்ணமாய் ஆக்கி வைத்துள்ளது. எல்லா அறிவியல் நூல்களும் ஆங்கிலத்திலேயே அமைகின்றன. தாய்மொழி மட்டுமே படித்தவர்கட்கு அறிவுலகிற் புகும் வாய்ப்பு முற்றுமாய் அடைக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கிய நூல்களைத் தவிரப் பிற துறை நூல்கள் அனைத்துமே ஆங்கிலமாயிருப்பதால் தமிழ் படித்தவர்கள் வேறு எந்தத் துறையிலும் அறிவு பெறாதவர்களாய் நின்று போகின்றனர்.

எந்த அறிவையும் சொந்த மொழியில் பெறும் வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுவதைப்போல் உலகப் பெருந் தீமை வேறில்லை; இல்லை; இல்லை.

தாய்மொழியே கல்வி மொழியானால், பாடநூல்கள் மட்டுமல்ல, எல்லாப் பொதுவான அறிவுநூல்களும் அறிவியல் நூல்களும் ஆய்வு நூல்களும் தமிழிலேயே கிடைக்கும். நூலகங்கள் யாவிலும் தமிழில் அறிவியல் பல்துறை நூல்கள் நிரம்பும். ஏழாம் எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட ஒரு சிறுவன்கூட நூலகங்களில் சென்று எத்துறை நூலையும் தன் தாய்மொழியாகிய தமிழில் பயின்று மேற்சென்று உலக அறிஞனாக விளங்க முடியும். ஆங்கில வழிக் கல்வி இவ் வாய்ப்பை முற்றும் மறுக்கின்றது.

கல்வி நிலையங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதால் தமிழர் அல்லாத வேறு மொழியினரும், அயல் மாநிலத்தினரும் தமிழ் நிலங்களில் புகுந்து கல்வி வாய்ப்பும் அதன் வழி வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். தமிழ் இளைஞர்களின் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் இவர்களால் பறித்துக் கொள்ளப்படுகின்றன.

ஆங்கில வழிக் கல்வியின் மிகக் கொடிய தீய விளைவுதான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதுமாகும். ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருப்பதால் தமிழறியாதவரும் தமிழரல்லாதவருமான எவரும் அலுவலகங்களில் நுழைந்து தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கொள்ள முடிகின்றது. இப்படி உள்ளே நுழைந்த தமிழரல்லாதவர்களே மேல் அதிகாரிகளாகித் தமிழ் வழிக் கல்வியை முற்றும் மறுக்கின்றனர்! மக்களுடன் ஒட்டுறவு அற்ற வேற்றவர்களான இவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமலேயே காலத்தை ஓட்டி விடுகின்றனர். தமிழ் வழிக் கல்விக்கு முட்டுக்கட்டையிடுபவர்களும் இவர்களே.

ஆங்கில வழிக் கல்வி எண்ணும் ஆற்றலை அழித்து ஒழித்துப் படித்தவர்களின் மூளையை மழுங்கச் செய்து அவர்களின் அறிவைக் கெடுத்துவிட்டது என்பதற்கு நடைமுறைச் சான்றாக விளங்குபவர்கள் இன்றைய ஆட்சியாளரும், கல்வியாளரும், கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களுமே. தாய்மொழி வழிக் கல்வி என்பது உலகமுழுவதும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு சீரிய கொள்கை. காந்தியடிகள், தாகூர் போன்ற பேரறிஞர்கள் தாய்மொழிக் கல்வியையே வற்புறுத்தினர். இன்று தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டிலும் புதுவை மாநிலத்திலும் தவிரப் பிற மாநிலங்களிலெல்லாம் அவரவர் தாய்மொழிக் கல்வியே நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இங்குப் பணிபுரிய வந்துள்ள வடநாட்டு அதிகாரிகள் சிலர் கூடத் தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துகின்றனர்! ஆனால் மேற்கூறிய தமிழ்நாட்டு முட்டுக்கட்டைகள்தாம் தாய்மொழிவழிக் கல்விக்கு எதிர்ப்பாக இருந்து வருகின்றனர். ஆங்கில வழிக் கல்வியே நம்மை முன்னேற்றும் என்கின்றனர். சொந்த மக்களின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் மறுத்துப் புறந்தள்ளும் அயல் மொழி வழிக் கல்வி எப்படி அவர்களின் உண்மை முன்னேற்றத்துக்குத் துணைபுரிய முடியும்?

மக்களின் உரிமைகளையும், விடுதலை உணர்வையும், சொந்தப் பண்பாட்டையும், அடையாளங்களையும், அறிவையும், எண்ணும் ஆற்றலையும் அழிப்பதைப் போன்ற மிகப்பெருந்தீமை வேறு இருக்க முடியுமா? ஆங்கில வழிக் கல்விதான் இதனைச் செய்கின்றது. இதைத் தீமை என்று உணராமல் - இது நம்மைப் பின்னோக்கி இட்டுச் செல்கிறது என்று தெரியாமல், ஆங்கிலவழிக் கல்வி நம்மை முன்னேற்றும் என்று மிக அறியாமையோடு மேற்கூறியவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனரே, இத்தகைய பேரவல நிலையை விளைவித்திருப்பது எது? ஆங்கில வழிக் கல்வியே என்பதை எவரேனும் மறுக்க முடியுமா?

********
நன்றி: தமிழ்க்காவல்.நெட்

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு? - தேவமைந்தன்

புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வியல் நிறுவன நூலகத்தில் ‘அம்ருதா’ என்ற திங்களிதழைப் பார்க்க வாய்த்தது. அதில், தோப்பில் முகம்மது மீரான் எழுதியிருந்த “21ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கட்டுரை[சூன் 2008; பக்.17-20] என் கருத்தைக் கவர்ந்தது.

உலகமயமாதலால் தமிழ்மொழி அடைந்துவரும் எதிர்நிலை விளைவும் நாடு, நகரங்களை மட்டுமல்லாமல் தீவுகளைக் கூட அது விட்டு வைக்காமையும் விரிவாக அதில் விளக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலட்சத் தீவில் உள்ள மொழிநிலை அதில் மிகுந்த இடம் பெற்றிருந்தது.

இலட்சத் தீவில் ‘ஜெசரி மொழி’ பேசப்படுகிறது. இது முற்றிலும் பேச்சுமொழி. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகியவற்றின் கலப்புமொழி இது. பேசும்பொழுது மட்டுமே இதை இலட்சத் தீவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

எழுதவேண்டும் என்று வரும்பொழுது, மலையாள மொழியைத்தான் அந்த மக்கள் பயன்படுத்துகின்றார்கள். உலகமயமாதலின் விளைவாக இலட்சத் தீவுக்குள் ஆங்கிலம் முதன்மையிடம் பெற்று, ஆங்கிலமொழிவழிக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் மக்களைப் பெற்றோர் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழைப் பழைய மொழி என்று அங்கு மதித்த நிலை மாறியுள்ளதுடன் மலையாளத்தையும் ஆகக் கலப்பாக எழுதத் தொடங்கி விட்டார்கள் இலட்சத் தீவு மக்கள்.

“ஏன் தூய மலையாளத்தில் நீங்களெழுதக் கூடாது?” என்று தோப்பில் முகம்மது மீரான் கேட்டிருக்கிறார். “இலக்கியம் வாயிலாக அல்லாமல் எங்கள் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?” என்று அவர்கள் எதிர்வினா எழுப்பியிருக்கிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய முகமையான செய்தி என்னவென்றால், ஏற்கெனவே தீவுகளின் கலப்புப் பேச்சு மொழியில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உலகமயமாதலின் முடுக்கத்தால் இன்னல் நேர்ந்திருக்கிறது என்பதே.

மொரீசியசு, ரெவ்யூனியன் முதலான தீவுகளின் பேச்சுமொழியிலும் கூட பிரெஞ்சு மொழிதான் தலைமை செலுத்தி வருவதை நாம் அறிவோம். ஆங்கில மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலைப்படும் நம்மவர்கள் பலர், பிரெஞ்சு மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலையே படுவதில்லை. தமிழ் மேல் எந்த மொழி ஏறி அமர முயன்றாலும் விழிப்புடன் எதிர்ப்பதும் அந்தத் தாக்குதலை முறியடிப்பதும்தானே தமிழரின் கடமைகளாக இருக்க வேண்டும்?

திராவிட இயக்கங்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கின்றன என்று குணா சொன்னபொழுதும் எழுதிய பொழுதும் திராவிட இயக்கங்களின் மேல் கொண்ட பற்றால் அவரை எதிர்த்தோம். ஆனால் அவர் சொன்னது இன்று பேருரு எடுத்திருப்பதைத்தானே பார்க்கிறோம். ஆங்கிலத்தை முனைந்து பரப்புபவர்களும் திராவிட இயக்கங்களின் நெருங்கிய நட்பில் திளைப்பவர்களுமான ஊடக முதன்மையர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ‘அறிவுக்கனியைத் தொடுவானேன்?’ என்ற ஆய்வுநூலை குணா அண்மையில் படைத்திருக்கிறார்.

தமிழர்களிடையே இப்பொழுது உலகமயமாதலின் முதன்மைக்கூறுகளுள் முதன்மையான ‘வணிக மனப்போக்கு’ ஓங்கியுள்ளது. ஒருவர் தமிழரா, தமிழறிஞரா என்பதைவிட - “அவரால் எனக்கு என்ன ஆதாயம்?” என்ற மனக் கணக்கே விஞ்சியுள்ளது. யாருடன் பழகினால் என்பது அன்று... யாருடன் பேசினால் தனக்கு ஆக்கம் அதிகம் வரும் என்ற அளவுக்கு இன்று போயிருக்கிறார்கள் தமிழர்கள். தங்களுக்குப் பொருள் அடிப்படையில் பயன்படாதவர்களை ‘வீண்’ என்று தமிழில் சொல்லவும் விரும்பாமல் ‘வேஸ்ட்’ என்கிறார்கள் ஆங்கிலத்தில்.

உலகமயமாதல், சிறுவணிகர்களை அழிப்பதுடன் மட்டும் நின்று விடாது. ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் - என்று சுருக்கமாக இதைச் சொல்லலாம்.

இன்றைய நிலையில் தமிழ் பேசும் தமிழர் என்பவர்களே உலக மக்கள்தொகை அளவில் அருகி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “உங்கள் தமிழில் அயன்மொழிச்சொற்கள் பல கலந்திருக்கின்றன. என்னுடன் பேசுவதானால் நீங்கள் தனித்தமிழில்தான் உரையாட வேண்டும்!” என்று சொன்னால், பேரினக் கோட்பாட்டினருக்குத்தான் அது ஆக்கமாய் முடியும்.

இன்றைய உலகில் பல நாடுகளில் தமிழ் குறித்துப் பிறமொழியினர் சிந்திக்குமாறு செய்துள்ள ஈழத்தமிழரின் மொழிநடையைக் கவனித்தோமானால் இது புரியும். எழுத்தாலும் பேச்சாலும் எவ்வகையாலும் தமிழர் தம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வைத் தோற்றுவிக்க எண்ணவும் கூடாது. பழைய போக்கைத் தொடர்வோமானால், ‘புதிய பூத’மான உலகமயமாதல், அதையும் தனக்கு ஆக்கமாக வளைத்துக் கொள்ளும்.

இன்னொன்றைக் கூட நீங்கள் கவனிக்கலாம். இப்பொழுதெல்லாம் மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி நிறைய எழுதவும் பேசவும் படுகின்றன. நான் எழுதிய ‘மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா’ போன்றன்று; வேறுவகைகளில்.

“தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் என்றால் மற்றவர் படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டுபவர்கள்; தாமே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கத் தெரியாதவர்கள்” என்ற கருத்து பிரான்சு முதலான தமிழர் மிகுந்து வாழும் நாடுகளில் உலவுகிறது. புலவர்கள், பேராசிரியர்கள் அல்லாதவர்களும் அந்த முன்னொட்டுகளைப் பொருத்திக் கொள்வதும் அந்நாடுகளில் இயல்பாகியுள்ளது.

“பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் இலக்கியங்களைப் பெயர்ப்பவர்கள்தாம் தகுதியுள்ளவர்கள்; தமிழுக்கு ஆக்கம் தருபவர்கள்” என்ற கருத்து அங்கும் இங்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பிரெஞ்சுக்காரர், பிரெஞ்சில் தன் ஆக்கங்களைப் படைக்கின்றனர்; ஆங்கிலேயர் முதலானவர்களும் அவ்வாறே. தமிழில் தம் ஆக்கங்களைப் படைப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தாமே? பிரெஞ்சுக்காரர் எவராவது, “தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தாம், பிரெஞ்சில் புலமையுள்ளவர்களை விட உயர்ந்தவர்கள்” என்று பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் ஆண்டவர்கள். இவர்கள் ஆளப்பட்டவர்கள். இப்பொழுதும் அந்த நாடுகளில் ஈழத்தமிழர் போலல்லாமல், அடிமையுணர்ச்சியுடன் ‘விளங்கு’பவர்கள்.

உலகமயமாதல், குடியேற்ற உணர்ச்சியை(காலனியாதிக்கத்திலிருந்தவர்களின் உணர்ச்சியை) ஊக்குவிக்கிறது. இதுபோலும் அயன்மைகள்தாம் அது தரும் அடிமை ஊழியத்தைத் திறம்படச் செய்ய முடியும்.

ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகத் தமிழ்வழிக் கல்வி, தமிழில் நன்றாகப் பேசும் திறம் - இவைதாமே இருக்க வேண்டும்? கணிப்பொறி நிறுவனங்களிலும், கணினிமுறைசார் வணிக நிறுவனங்களிலும் கேட்டுப் பாருங்கள். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகப் பிரெஞ்சில்/செர்மனியில்/சுபேனியத்தில் நன்றாகப் பேசும் திறத்தை அவர்கள் முன்வைப்பார்கள். இந்த மொழிகள்தாம் இப்பொழுது உலகமயமாதல் என்ற ஆசிரியர்முன் தம்முள் யார் சிறந்த மாணவர் என்று போட்டி போடுகின்றன.

‘சட்டாம்பிள்ளை’யாகவும் முந்திச் செல்லும் குதிரையாகவும் ஆங்கிலமே இன்றுமிருப்பதைப் பார்க்க முடிகிறது.

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும். அதற்கு ஒரே வழி, தம்முள் பலவகைகளில் மேற்கொண்டு வரும் குழு - உட்குழுப் பூசல் மனப்பான்மையைப் போக்கிக் கொண்டு, அல்லது தற்காலத்துக்கேனும் சற்று விட்டுக் கொடுத்து, உலகமயமாதலின் போக்குக்கேற்பத் தமிழ்வழிக் கல்வியை உடனடியாக எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒத்துவராத கட்சிகளைத் தேர்தலின் பொழுது பின்னிறுத்த வேண்டும்.

ஏதேதோ விளக்கங்களை முன்வைக்கும் அரசியல்வாணருடன் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல், “முதலில் தமிழை முழுமையான கல்விமொழியாக்குங்கள்! பிறகு மற்றவற்றைப் பேசுங்கள்!” என்று வலியுறுத்தும் மனநிலையைத் தமிழர் வளர்த்துக்கொள்ள வேண்டும். “கோடி கோடியாக எதெதெற்கோ செலவிடுகிறீர்களே! ஆட்களைக் கூட்டுகிறீர்களே! தமிழ்வழிக் கல்விக்கென்று மாநாடு நடத்துங்கள்! தனிமாந்த விளம்பரம் விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு உங்கள் தொலைக்காட்சி வரிசைகளின் பரப்புரைகளைத் திருப்புங்கள்!” என்று தமிழர் ஒவ்வொருவரும் அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

அப்பொழுதுதான் உலகமயமாதலின் தாக்கத்தினூடும் தமிழ் தழைக்கும்.

********
நன்றி: தமிழ்க்காவல்.நெட்

16.6.08

ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர் - தேவமைந்தன்

'ஆர்.கே.நாராயண்' என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட 'ஹ்யூமர்' எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள் தகுந்த இடம்பெற்றன.

தன்னுடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான்.

'வழிகாட்டி' என்று பொருள்படும் 'The Guide' என்ற அவருடைய நாவல், சென்ற எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளுக்குள்ளேயே தமிழ், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ருஷ்யன், சுவீடிஷ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. அதன் இந்தியப் பதிப்பு மட்டும் அப்பொழுது ஒன்றரை லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்ததாம்.

ஆர்.கே.நாராயணன் "சாதாரணமாக எழுதியதாக"க் குறிப்பிட்டதும் 1935ஆம் ஆண்டில் வெளியானதுமான அவருடைய முதல் நாவல் 'சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்'(Swami and Friends), தமிழ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனந்த விகடன் இதழில், 'சுவாமியும் சிநேகிதர்களும்' என்ற தலைப்பில், கிருஷ்ணசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அந்த நாவல் தொடராக வெளிவந்து, தமிழ் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. அந்த நாவலில் வரும் சுவாமி பத்து வயதே நிரம்பிய சிறுவன்; வீட்டுப்பாடங்கள் எழுதுவதின் கொடுமையை வெறுத்து, தன் நண்பர்களுடன் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவன். ஆனாலும் தான் அன்றாடம் சந்திக்க நேரும் ஆசிரியர்களிடமும் பெரியவர்களிடமும் கூடுமானவரை ஒத்துப்போகிறவன். 'எம்.சி.சி.' என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட 'மால்குடி கிரிக்கெட் கிளப்'தான் அவனுடைய பேரார்வத்தைக் கொள்ளை கொண்டது. அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து தோற்றுவித்ததல்லவா அது? தேர்வுகள் எல்லாம் முடிந்து, கோடை விடுமுறை விடுகிற காலமே சுவாமியின் கனாக்காலம்.

1930இல், நம் இந்திய தேசத்தில், பிரிட்டிஷ் அடக்குமுறையின்கீழ் பல தேசபக்தர்கள் சிறைசெய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் 1930, ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சரயு நதியின் வலக்கரையில் மால்குடியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடிமக்கள் கூடினர். மும்பையில் கெளரி சங்கர் என்ற விடுதலைப் போராட்ட வீரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கூடிய கூட்டம் அது. கதராடை அணிந்தவரும் கம்பீரமும் மிக்கவருமான பேச்சாளர் ஒருவர், அங்கே, உணர்ச்சிமிக்கதோர் உரையாற்றினார். மால்குடி மக்கள் அதைக் கேட்டு உள்ளம் உருகினர். அவர்களுக்கிடையில் நம் சுவாமிநாதனும் அவன் நண்பன் மணியும் இருந்தனர். பத்து வயதே ஆன சிறுவன் சுவாமிநாதன் (நாவலில் கதைசொல்லுதலின்பொழுது 'சுவாமிநாதன்' என்ற முழுப் பெயரும், உரையாடல்களின்பொழுது 'சுவாமி'' என்ற சுருக்கப் பெயரும் வரும்) பேச்சாளர் ஆத்திரத்துடன் சொன்ன ஒன்றைக் கூர்ந்து கவனித்தான்.

அவர் சொன்னார்: "ஏன் நாம் அச்சப்பட்டுப் போனோம்? அடிமைகள் ஆனோம்? நம்மிடம் எந்த விதக் குறையுமில்லையே! பிரிட்டிஷ் நிர்வாகம் இப்படி எல்லாம் நம்மை ஆக்கி விட்டிருக்கிறது. நன்றாகக் கேளுங்கள். நீங்கள் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட வேண்டாம். ஒவ்வோர் இந்தியனும் இங்கிலாந்தின் மீது ஒரே நேரத்தில் எச்சில் உமிழ்ந்தால்கூடப் போதும்; இந்திய மக்கள் எல்லோரும் உமிழும் அந்த அளவு எச்சில் போதும், இங்கிலாந்தையே மூழ்கடித்துவிட....."

சுவாமிநாதன் அதைக் கேட்டு வியப்பில் மூழ்கி, நண்பன் மணியிடம் அது குறித்து விவாதித்தான். முதலில் மணி சுவாமிநாதனை எச்சரித்துப் பார்த்தான். பயனில்லை. சுவாமிநாதன், இந்திய மாதாவையும் காந்தி அடிகளையும் சுதந்திரப் போராட்டத்தையும் வாழ்த்திக் 'கோஷம்' போட்டு, அடுத்தடுத்து இரண்டு பள்ளிகளிலிருந்து விரட்டியடிக்கவும் படுகிறான். கடைசியில், வேறுவழியே இல்லாமல், வீட்டை விட்டும் ஓடுகிறான். இப்படி 'Swami and Friends' செல்கிறது.

சிறுவர் உலகத்தை, சிறுவர்களின் பார்வையிலிருந்தே சித்தரிக்கும் கதைசொல்லலினூடு, அதற்குப்பிறகு அவர்கள் ஆகவுள்ள பெரியவர்களின் உலகத்தையும் மால்குடியைக் களமாகக் கொண்டு ஆர்.கே.நாராயணன் நுட்பமாக இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

கிரகாம் கிரீன், அந்த நாவலைப் "பத்தாயிரத்தில் ஒரு புத்தகம்" என்று பாராட்டினார். முதற் பதிப்பு, லண்டனில் ஹமிஷ் ஹாமில்டன் நிறுவனத்தால் 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் இந்தியப் பதிப்பு 1944இல் வந்தது. 1993இல் இருபதாவது மறுஅச்சு வந்தவரை எனக்குத் தெரியும்.

சென்ற எண்பதுகளின் முதற்பகுதியில் ஆர்.கே.நாராயணனின் 'The Painter of Signs' போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

தன் நாவல்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆர்.கே.நாராயணனுக்கு மகிழ்ச்சி இல்லை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். காரணத்தை அவரே நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். "மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. பொதுவாகவே என் நாவல் மொழிபெயர்ப்புகளை நான் வாசிப்பதுமில்லை. ஒரு நாவலில் உள்ள ஹியூமரை, மொழிபெயர்ப்பாளரால் இன்னொரு மொழியில் எப்படிக் கொண்டு வர முடியும்? ஆனால் கருத்தோட்டத்தைத் தெரிந்துகொள்ள மொழிபெயர்ப்பு தேவைதான். ஐரோப்பிய மொழிகளில் என் நாவல்களின் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்."

ஆர்.கே.நாராயணன் தன் பெரும்பாலான நாவல்களில், மால்குடி என்ற ஊரையே களமாகக் கொண்டதன் காரணம் என்ன? "சின்ன ஊர், குறைச்சலான ஜனங்கள். கடைக்குப் போய் சாமான் வாங்கிய பிறகு காசு குறைந்தால், நாளைக்குத் தருகிறேன் என்று வாங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம்.." என்று இது குறித்து ஆர்.கே.நாராயணன் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.

"The Painter of Signs'க்கும் 'A Tiger for Malgudi'க்கும் இடையில் ஏழாண்டுகள் இடைவெளி விழுந்தது. அவரின் படைப்புத் திறன் குன்றிவிட்டதோ என்று திறனாய்வாளர்கள் ஐயம் கிளப்பினர். அது ஒன்றும் புதியதல்ல, ஏற்கெனவே 'The Vendor of Sweets'க்கும் 'The Painter of Signs'க்குமிடையில் கிட்டத்தட்ட பத்தாண்டு இடைவெளி இயல்பாகவே ஏற்பட்டது. 'A Tiger for Malgudi' மீண்டும் அவரைப் புகழ் ஏணியில் ஏற்றியது.

'A Tiger for Malgudi' நாவலில், முதன்மைப் பாத்திரமாய் வரும் ராஜா என்கிற புலியின் இயற்கையான காட்டு வாழ்க்கை சொல்லப்படுகிறது.

இளைய 'ராஜா'வின் கானக வாழ்க்கை, குறிப்பாக மெம்ப்பி காடுகளின் விலங்குகள் உலகத்தில் அது வலிமை மிக்க புலியாக உருவாகும் விதம் நாவலில் நன்கு விளக்கப் பட்டிருக்கிறது. பெண்புலி ஒன்றுடன் போர்செய்து தோற்கடித்து அதைத் தன்னுடையதாக்கி. பின்னர் நான்கு புலிக்குட்டிகளுக்குத் தந்தை ஆகிறது ராஜா. கேவலமானவர்களும் குரூரமானவர்களுமான மனிதர்களின் கைகளில் அந்தப் பெண்புலியும் குட்டிகளும் மாட்டிக்கொண்டு இரையாகின்றன. தன் துணையையையும் குட்டிகளையும் இழந்துவிட்ட நிலையில், எவ்வளவுதான் எச்சரிக்கையுடனிருந்தும் 'கிரேண்ட் மால்குடி சர்க்க'ஸின் உரிமையாளரான 'கேப்ட'னிடம் சிக்கிக் கொள்கிறது. சர்க்கஸ் உலகில் அவனால் தன்மேல் சுமத்தப்படும் வேலையைச் சிறப்பாக நிறைவேற்றும் அளவு கடுமையான பயிற்சிகளைப் பெறுகிறது. மேலும், திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடமும் அதை நடிக்க வைத்துப் பணம்பெற 'கேப்டன்' ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறான். அடுத்து, ராஜாவை மேலும் ஒடுக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டாக, 'உலோக நாக்கு'('metal tongue') எனப்படும் கொடிய கருவியைப் பயன்படுத்தவும் தொடங்குகிறான். ராஜாவுக்குப் பழைமை - கானக நியாயம் - திரும்புகிறது. கொடுமையும் பேராசையும் நிரம்பிய 'கேப்ட'ன் மேல் பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டு, அந்த இடத்தை விட்டே அகன்று விடுகிறது. பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்றில் தஞ்சம் அடைகிறது. அங்கு, சுவாமி என்கிற தனக்கான குருவைச் சந்திக்கிறது.

இந்த சுவாமி என்ற கதைப்பாத்திரம், ' Swami and Friends' நாவலில் இடம்பெறும் சுவாமிநாதன் என்ற சுவாமியேதான். அவன் இப்பொழுது நன்கு வளர்ந்து பெரியவனாயிருக்கிறான். சரயு நதி பாயுமிடத்திற்கு அருகிலுள்ள எல்லம்மன் தெருவில்('The Painter of Signs' நாவலில் ராமன் தன் அத்தை வீட்டில் வாழும் தெரு) சுவாமி தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்கிறான். 'வெள்ளையனே வெளியேறு'(Quit India movement) இயக்கத்தில் மிகவும் சிறப்பாக அவன் பங்கேற்று, பாராட்டப் பெற்றிருக்கிறான். ஒருநாள் நள்ளிரவில் சித்தார்த்தன்போல் வீட்டைவிட்டே வெளியேறி விடுகிறான். உலகில் நன்மையை நிலைநாட்டத் தன் எஞ்சிய வாழ்வை அர்ப்பணிக்கிறான்.

அவனைத்தான் தன் குருவாக ராஜா என்னும் அந்தப் புலி ஏற்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும் அவனிடம் கீழ்ப்படிந்து நடக்க அது கற்றுக் கொள்கிறது. அதற்கு வயதாவதால், 'சமாதி நிலை'யை அது அடையும் முன்பு, அதன் பாதுகாப்புக்காக விலங்குக் காட்சிச் சாலைக்கு அதன் குருவான சுவாமி அனுப்பி விடுகிறான். தன் சீடனான ராஜாவை அடுத்த பிறப்பில் சந்திக்கப் போவதாகவும் சுவாமி நம்புகிறான்.

இந்த நாவல், அது படைக்கப்பெற்ற காலம் வரை இல்லாத புதிய கோட்பாட்டைக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் சில வீடுகளின் கூடத்தில் பார்த்தீர்களானால், சுவர்மேல் ஒரு 'வீரமான' படம் தவறாமல் மாட்டப்பட்டிருக்கும். மெய்யாக வேட்டையாடினாரோ இல்லையோ, அந்த வீட்டின் தலைவர், தன் வலது கையில் ஒரு வேட்டைத் துப்பாக்கியைத் தாங்கிக் கொண்டு, இறந்து கிடக்கும் புலி ஒன்றின் மேல் தன் பாதத்தை வைத்து நின்று புகைப்படத்துக்குப் 'போஸ்' கொடுத்திருப்பார். இது, சாதாரணமான வீடுகளில் கண்ட காட்சி . 'அசாதாரணமானவர்கள்' வீடுகளில், வளைந்த மாடிப்படிகளுக்கு முன்னால் உயரமான பீடமொன்றில் உண்மையான புலியே போல இறந்த 'பாடம்' பண்ணப்பட்ட புலி அமர்ந்திருக்கும்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில், பிற்காலத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய்விடும் என்பதைக் கவனத்தில் இருத்திக் கொண்டோ என்னவோ, மனிதருக்கும் புலிகளுக்கும் இருக்க வேண்டிய இயற்கை இணக்கத்தை ஆர்.கே.நாராயணன் இந்த நாவலில் வலியுறுத்தியிருக்கிறார். அதனால்தான், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய நேயத்தை விடவும் அதிகமான ஆன்மநேயத்தை இந்த நாவலின் தலைமைப் பாத்திரமான ராஜா என்கிற புலி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராஜா, புலி என்ற விலங்கு நிலையிலிருந்து உயர்மனித நிலைக்கு மாற்றம் பெற்றிருக்கிறது. தனக்கு என்றைக்கு உன்னதமான உய்திநிலை(salvation) கிடைக்குமோ என்று நாடி ஏங்கியிருக்கிறது. உண்மையில், நாலாசிரியர்தான் ராஜாவுக்குள் புகுந்து கொண்டு தன்னுடைய வெவ்வேறான வாழ்க்கை அனுபவங்களையும் அவற்றின்பொழுது தான் அடையும் வெவ்வேறான மனநிலைகளையும் புலப்படுத்துகிறார் என்பதை வாசகர் புரிந்துகொண்டு வாசித்துச் செல்ல முடிவது, இந்த நாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று.

ஆர்.கே.நாராயணனின் முதிர்ந்து பக்குவம் மிக்க வயதில் 'The Painter of Signs' நாவல் எழுதப்பெற்றது. விடுதலைக்குப் பிறகு மால்குடியில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் பதிவு செய்யப்பட்டன. முதலிலேயே வெளிவந்ததும், மால்குடி நாவல்களில் இரண்டாவதுமான 'The Dark Room'இல் வெளிப்பட்டுள்ள குடும்ப வாழ்க்கையின் கூறுபாடுகளும் பெண்ணின் சமூக உறவு நிலைகளும் 'The Painter of Signs'இல் மிகவும் மாற்றம் கண்டுள்ளன.

திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் அது குறித்து ஆர்.கே.நாராயணன் கூறியுள்ளார். " 'The Dark Room' நாவலில், சமூகத்தில் பெண் எவ்வாறு ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது என்பதைத் தெரிவிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினேன். இந்த('The Painter of Signs') நாவலில் நான் சொல்லியிருக்கும் பெண்(Daisy), ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல; அவளுடைய ஒருங்கிணைந்த வாழ்வில் ஆண்களுக்கு முக்கியத்துவமே இல்லை."

'The Painter of Signs' நாவலில், வெறும் தொழிலாக மட்டும் அல்லாமல் முருகியல் மதிப்பீடு கொண்டதாகவும் பெயர்ப் பலகைகளைத் தீட்டுகின்ற இளம் ஓவியத் தொழிலாளி ராமன், எல்லம்மன் தெருவின் கடைசி வீட்டில் தன் அத்தையின் ஆதரவில் வாழ்கிறான். சரயு நதி பாய்கிற அழகான இடம் அது.

நாவலின் தொடக்கத்திலேயே, தன் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கும் ஒருவருக்கான பெயர்ப் பலகையை ராமன் உருவாக்குவதும், அவர் ஆயிரத்தெட்டு குறைகள் சொல்லி, அவனுக்கு அதற்கான பணத்தைத் தராமலிருக்க முயற்சி செய்வதும், அவர்களிடையே நிகழும் வாதங்களும் சொல்லப் படுகின்றன. ராமன் வெறும் பெயர்ப்பலகை தீட்டுபவன் மட்டுமல்ல; உலக முழுதும் காரணம் முதன்மைபெறும் காலத்தை(Age of Reason) நிறுவ முற்படுபவன் என்பது மெல்லிய நகைச்சுவையுடன் தெரிவிக்கப் படுகிறது. ராமனுக்கு, ஒவ்வொன்றுக்கும் பகுத்தறிவு அடிப்படையிலான விளக்கம் இருந்தே ஆக வேண்டும். 'டவுன் ஹால்' பேராசிரியர், அவையினர்முன் ஆற்றும் சொற்பொழிவில் நிலவும் ஆன்மிகச் செய்தியைக் கேட்க, ராமனின் பகுத்தறிவுக் கொள்கை படாத பாடு படுகிறது.

மால்குடியின் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றும் டெய்சியை ராமன் தன் தொழில் அடிப்படையில்தான் முதலில் சந்திக்கிறான். ஆனால் போகப் போக, தன் வறட்டுத்தனத்துக்கும் டெய்சியின் யதார்த்தத்துக்கும் உள்ள வேறுபாடு கண்டு மலைத்துப் போகிறான். அவன்தான் டெய்சிமேல் ஆராக்காதல் கொண்டு உருகித் தவிக்கிறான். அவளோ அவன்மேல் எந்த விதமான ஆர்வமும் கொள்வதில்லை. டெய்சியின் அலட்சியப் போக்கால், ராமனின் தன்மதிப்பு காயமுறுகிறது. அவள் பணி புரியும் இடத்துக்குப் போவதையே தவிர்த்து விடுகிறான்.

சில நாள்கள் கழித்து டெய்சியே தன்னுடன் அக்கம் பக்கத்து ஊர்களுக்கு வந்து, குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்வதில் உதவுமாறு ராமனுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள். அந்தந்த ஊர்களின் முதன்மையான இடங்களில் குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத் தட்டிகளை வரைந்து வைக்கும் வேலை தருகிறாள்.

எந்த ஊரானாலும் அங்கு வாழ்பவர்களின் வாழ்முறையோடு ஒத்துப்போகும் டெய்சியின் மனநிலையை ஆங்காங்கே கண்டு ராமன் வியந்து போகிறான். ஊர்க்கேணியில் நீர் எடுத்து, அங்கேயே இயல்பாகக் குளித்து, உடைகளைத் துவைத்துக் காயப்போடுவதுடன் மாற்றிக் கொள்ளும் டெய்சியின் போக்கு, ஆணான தனக்குங்கூட வாய்க்காதது உணர்ந்து தன்னிரக்கம் கொள்ளுகிறான்.

டெய்சி எஃகு உள்ளம் வாய்ந்தவள். ஆனால், எளிய சிற்றூர் மக்களைக் கூடவைத்து, அவர்களுக்கு 'பிள்ளைப்பேறும் குடும்பக் கட்டுப்பாடும்' குறித்துப் படம் வரைந்து விளக்குகிறாள். அவர்கள் அவை தொடர்பாகக் கேட்கும் எந்தக் கேள்விக்கும் கூச்சமில்லாமல் மறுமொழி சொல்கிறாள். அதையெல்லாம் பார்க்க, ராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை தீவிரமாக ஏற்படுகிறது.

விளைவாக, பிரச்சாரப் பணி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் சமயத்தில், வழியில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு, டெய்சியைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த ராமன் முயல்கிறான். அவளுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவனுடைய முட்டாள்தனமான செயல் தோற்கடிக்கப்படுகிறது.

டெய்சி, அதற்கப்புறம் நெடுநாட்கள் ராமனுடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ராமனின் அடாவடிச் செயல் குறித்துக் காவல்துறைக்குப் புகார் தெரிவித்து விடுவதாகவும் மிரட்டுகிறாள். அதற்கு அஞ்சிய அவன், அவளை விட்டே ஒதுங்கி விடுகிறான்.

ஆனால் அந்த இடைவெளியில்தான் டெய்சியும் ராமனும் தங்களுக்குள் நிலவும் மெய்யான காதலை உணர்கிறார்கள். மீண்டும் சந்திக்க வாய்த்த பொழுது, காதலர்களாகச் சந்திக்கிறார்கள். கந்தருவ முறையில் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராமன் நினைக்கிறான். அத்தகைய திருமணத்தில்தான் அதிக பந்தம் இருக்காது என்றும் டெய்சிக்கும் அதுதான் பிடித்திருக்கும் என்றும் ராமன் நம்புகிறான்.

இதற்கிடையில் ராமனின் அத்தை, சாதி மதக் கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காசிக்குப் போகும் தன் உறுதியான எண்ணத்தை ராமனிடம் தெரிவிக்கிறாள். காசிக்குப் போவதுடன் வாழ்வின் இறுதி இலட்சியம் நிறைவேறும் என்று அவள் நம்புகிறாள். அதனாலொன்றும் நாவலின் போக்கு மாறுவதில்லை. 'பிளாட்' என்று திறனாய்வாளர்கள் சொல்லும் கதைப் பின்னலில், ஆர்.கே.நாராயணன் சமரசம் செய்து கொள்வதே இல்லை. நாடக பாணியில் கதைமாந்தரின் உணர்வுகளை ஆட்டி வைப்பதில்லை. வாசகர்களுக்காகக் கதைப்போக்கில் விறுவிறுப்புச் சேர்த்தல், வேகம் கூட்டுதல் முதலானவற்றை அவர் செய்ததில்லை.

திட்டவட்டமான ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், டெய்சியின் மனம் மாற்றம் கொள்கிறது. ராமனைத் திருமணம் செய்து கொள்ளத் தெளிவாக மறுத்து விடுகிறாள். கடைசியில், குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் தொடர்பான நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு, ராமனை விட்டே பிரிந்து செல்கிறாள். இவ்வாறு, நெடுங்காலம் நம்பிக்கையூட்டி ஏமாற்றிச் சுமத்தப்பட்ட கனத்த தனிமைச் சுமையை ராமன் ஏற்றுக் கொள்ளுமாறு நேர்ந்து விடுகிறது.

இந்த நாவலில், பழைமையிலிருந்து விடுபட்டுப் புதுமையைத் தழுவும் மால்குடியை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதை சொல்லப்பட்ட பொழுதில், அது பரபரப்பான நகரமாகி விட்டது. 1976ஆம் அண்டு வெளியான இந்த நாவல் சித்தரிக்கும் காலகட்டத்திலேயே 'நவீனப்பட்டுவிட்ட' ஆணும் பெண்ணுமாக ராமனும் டெய்சியும் திகழ்கின்றனர். டெய்சி, ராமனை விடவும் வலிமையான பாத்திரமாகவும் 'தேசவிடுதலைக் காலத்துக்குப் பிந்திய வகைமாதிரிப் பெண்'(typical woman of the post indepentent era) உருவாக்கப்பெற்றுள்ளாள்.

தன் நினைவுகளைத் தொகுத்து(memoirs) அவர் எழுதிய 'My Days' என்ற புத்தகம், நாராயணனை உணர்ச்சிமிக்க மனிதராக நம்மை அறிய வைத்துள்ளது. ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்து இறந்து போனவர்கள், அவரை மீண்டும் தேடி வருவார்கள் என்ற சொந்த அனுபவத்தை அவர் எழுதிய விதம், வாசகர்களை அதிர வைத்தது. "The Painter of Signs' ராமனைப் படைத்தவரல்லவா அவர்? அவரா இப்படி எழுதினார்? - என்று பகுத்தறிவுக் கொள்கையுள்ள வாசகர்கள் எண்ணினர். எழுத்தாற்றல் மிக்கவராக மட்டும் அல்லாமல், ஒரு சராசரி மனிதராக ஆர்.கே.நாராயணனை நாம் பார்க்க முடிவது இந்தப் புத்தகத்தில் மட்டுமே.

தனக்கு மகிழ்ச்சி கொடுப்பது, படிப்பதும் எழுதுவதும்தான் என்று குறிப்பிட்ட ஆர்.கே.நாராயணன், ஒருநாளைக்கு இரண்டாயிரம் சொற்களை இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவதாகவும் சொன்னார். அதுதான் முதல் வரைவு(draft) என்றும் பிறகு அதைப் படித்துப் பார்த்துத் திருத்த நான்குமணி நேரம் போலப் பிடிக்கும் என்றும் "திருத்தியதை மறுபடியும் திருத்தி எழுதுவேன்; வார்த்தைகளை மாற்றிப் போடுவேன்; அதற்கு எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் போலப் பிடிக்கும்; மெதுவாக யோசித்து யோசித்துதான் திருத்தி எழுதுகிறேன்" என்றும் சொன்னார்.

அதற்கெல்லாம் காரணம், எழுதுவது நன்றாக வரவேண்டும் என்ற அக்கறைதான். "வெட்டிக் குறைக்க நான் கவலைப் படுவதே இல்லை. எழுதியதில் நிறையவே தாட்சண்யம் இன்றி அடித்து விடுவேன். எழுத்தாளனுக்குத் தான் எழுதினதையே அடிக்கத்தான் தைரியம் வேண்டும்" என்றார். "வாசகர்கள் ஒரு புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி விடுவதற்கு இடங் கொடுக்காமல் சரியாக எழுத வேண்டும். அதற்கு எழுத்தாளன், தான் எழுதியதைப் படித்துப் பார்க்க வேண்டும். திருத்தி எழுத வேண்டும். சில தமிழ் எழுத்தாளர்கள் எழுதியதைத் திருப்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றும், அவை அப்படியே அச்சு ஏறி புத்தகமாக வந்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன். அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.... எழுதி எழுதித்தான் - திருத்தி எழுதித்தான் சரிபண்ண முடியும் என்ற வகையைச் சார்ந்தது என் எழுத்து..." என்று திட்டவட்டமாகச் சொன்னார்.

ஆர்.கே.நாராயணன், சென்னையில் புரசைவாக்கத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தவர். இதை அவரே தன் மைசூர் இல்லத்தில் ‘குங்குமம்’ சிறப்பு நேர்காணலில் சொல்லியுள்ளார். விக்கிபீடியா கட்டுரை முதலான சிலவற்றில் அவர் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் பிறந்ததாகச் செய்தி உள்ளது.

தமிழ் அவர் தாய்மொழி. முதலில் நுங்கம்பாக்கத்தில் இருந்தார். உயர்நிலைப் பள்ளி வரை சென்னையில்தான் படித்தார். தகப்பனார் கிருஷ்ணசாமி தலைமையாசிரியராக மைசூர் வந்ததால், கல்லூரியில் படிக்கத் தானும் மைசூர் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.[குங்குமம் சிறப்பு நேர்காணல்]

மைசூர்ப் பல்கலைக் கழகத்தில், உ.வே.சாமிநாத ஐயர் அமைத்துக் கொடுத்த தமிழ்ப் பாடத்திட்டத்தைத் தன் இரண்டாவது மொழித் தெரிவின்கீழ்ப் பயின்றார். பின்னர், பெரும்பாலும் மைசூரிலேயே வாழ்ந்தார். சென்னைக்குத் தன் உறவினர்களைப் பார்க்கவும் பிற காரணங்களுக்காகவும் அடிக்கடி பயணம் செய்தார். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். உலகப் பயணமும் செய்துள்ளார். சென்னைதான் தனக்குப் பிடித்தமானது என்று நேர்காணல்களில் சொல்லியுள்ளார். ராசிபுரத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்ததால், குடும்பத்தினர் பெயர்களின் தலைப்பெழுத்துகளில் 'ஆர்' கட்டாயமாக இடம்பெற்றதாம்.

1936ஆம் ஆண்டு 'கலா நிலையம்' என்ற தரமான தமிழ் இதழைத் தொடங்கியவர் தன் மாமா சேஷாசலம் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒய்.எம்.சி.ஏ.'வில் மாலைநேரத் தமிழ் வகுப்புகள் நடத்தியதோடு 'கலா நிலயம்' இதழில் 'தமிழ்ப் பாடம்' என்ற பகுதியில் நளவெண்பா பாடம் நடத்தி, சேக்கிழார் பற்றியும் தொடர் கட்டுரையை அவர் வெளியிட்டாராம். மக்களுக்குப் புரியாது என்று சொல்லித் தரம் தாழக் கூடாது என்பதைத் தன் உள்ளத்தில் உருவேற்றியவரும் அவரே என்று தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிக் காலத்திலேயே, தான் 'பிரதாப முதலியார் சரித்திரம்' 'கமலாம்பாள் சரித்திரம்' முதலான தமிழ் நாவல்களைப் படிக்க முடிந்ததற்கும் தன் மாமா தந்த ஊக்கமே காரணம் என்றும் குறிப்பிட்டார். 'கலா நிலையம்' இதழ்களைத் தொகுப்புகளாகச் செய்து வைத்திருந்தபொழுது பேராசிரியர் ஏ.கே.ராமானுஜன் அவற்றுள் இரண்டு தொகுப்புகளை வாங்கிச் சென்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் 'மைக்ரோ பிலிம்' செய்து பாதுகாத்தாராம்.

மால்குடி வரிசையில் ஆர்.கே.நாராயணனின் நாவல்கள்:

The Bachelor of Arts
The Dark Room
The English Teacher
Mr.Sampath - The Printer of Malgudi
The Financial Expert
Waiting for the Mahatma
The Guide
The Man-eater of Malgudi
The Vendor of Sweets
The Painter of Signs
A Tiger for Malgudi
Talkative Man [சென்னையிலிருந்து வெளிவந்த 'Frontline' மாதமிருமுறை இதழில் தொடராக ஓராண்டுக் காலம் வெளிவந்தது. ஆர்.கே.நாராயணன் எழுதிய நாவல்களிலேயே அளவில் மிகச் சிறியது இதுதான். 'TM' என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் 'Talkative Man,' அவர் எழுதிய சிறுகதைகளை வாசித்தவர்களுக்குப் புதிய 'கேரக்டர்' அல்ல.]
The World of Nagaraj

இதிகாசங்களின் புதிய ஆக்கங்கள்:

Gods, Demons and Others
The Ramayana
The Mahabharata

கதைகள்:

A Horse and Two Goats
An Astrologer's Day and Other Stories
Lawley Road
Malgudi Days
Under the Banyan Tree and Other Stories

நினைவுத் தடங்கள்:

My Days

பயண நூல்கள்:

My Dateless Diary
The Emerald Route

கட்டுரை நூல்கள்:
Next Sunday
Reluctant Guru
A Writer's Nightmare
The World of the Story-Teller

******

குறிப்பு:

ஆர்.கே.நாராயணன் தன்னை நேர்கண்டவர்களுக்குச் சொன்ன சேதிகளே இக்கட்டுரையில் உள்ளன. விக்கிபீடியா முதலியவற்றின் செய்திகளை இக்கட்டுரை தழுவவில்லை.

பார்வை:

மைசூரில் ஆர்.கே.நாராயணன் இல்லத்தில், 1983 நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட குங்குமம் இதழின் சிறப்பு நேர்காணல். வெளியான இதழ்: குங்குமம் 7:8. 5-2-1984. பக்கங்கள்: 31, 34, 48.

திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணல்.****
நன்றி: திண்ணை.காம்