30.8.08

எப்பொழுதுமே தமிழராக இருக்கக் கூடாதா? - தேவமைந்தன்

உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர்.
விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..."
போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.
என் பெயர்ப்பலகையைக் கண்டு இளைஞர் இருவர் உரக்கச் சொன்னார்கள்: "சார் தமிழ் வாத்தியார். அதுதான் தமிழ் போர்டு மாட்டியிருக்கிறார்!" ஆக, தமிழில் பெயர்ப்பலகை இருந்தால் தமிழாசிரியர்; தமிழெண் உந்தில் இருந்தால், தமிழ் தொடர்பானவர்; தமிழைக் குறித்து அக்கறையாகப் பேசினால் தமிழால் பிழைப்பவர்; தூயதமிழ் குறித்து வலியுறுத்தினால் பா.ம.க. அல்லது 'மக்கள் தொலைக்காட்சி ' தொடர்பானவர்.....
அறுபதாண்டுகளுக்கு முன் எவராவது 'வணக்கம்' என்று சொன்னால், "என்னடா! நீ தீனா மூனா கானா'வா?" என்று கேட்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
காலம் இங்குமட்டும் உறைந்து போனதா?
தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பங்குச் சந்தை குறித்து இல்லத்தரசிகளும் அறிந்து கொள்ள 'ஹலோ சந்தை.' 'பரஸ்பர நிதியம்' குறித்து ஓர் ஐயத்தை வல்லுநர் விளக்குகிறார். பக்கத்தில் இருந்த விருந்தாளி கேட்கிறார்: "பரஸ்பர நிதியம் என்று தமிழில் சொல்லுகிறாரே.. அது 'ம்யூச்சுவல் ஃபண்ட்' தானே?" அது தமிழ் அன்று என்று சொல்லுவதைக் கவனிக்காமல், தொ.கா. பெட்டியையே பார்க்கிறார். "அப்ப வரட்டுமா?".. 'சட்'டென்று புறப்பட்டுப் போய்விடுகிறார்.
"கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ஒரு கொடுமை வந்து தலைவிரித்தாடுகிறதாம்!" என்று மக்கள் சொல்வார்கள்.
கோவிலொன்றில் சிறுவன், தன் தங்கையைக் குறித்து தாயிடம் முறையிடுகிறான். "மம்மீ! இங்க பாருங்க! இந்தக் 'கேட்'டை செளம்யா புடிச்சி புடிச்சி இழுக்கிறா!" நான் தலையிடுகிறேன். "தம்பீ! அது 'கேட்' இல்லே.. பூனை.." அவன் சொல்கிறான்: "அங்கிள்! எங்க மிஸ் அதைக் 'கேட்'டுன்னுதான் சொல்லச் சொல்லியிருக்காங்க.. அவங்க 'ஃபர்ஸ்ட் தெளசண்ட் வொர்ட்ஸ்'ன்னு 'புக்' வச்சுக் காட்டிருக்காங்களே.."
அவனாவது பேசினான். அவன் தாயோ என்னைப் பார்த்து முறைத்தார். அவர்களிருவரையும் பிடித்து இழுத்தவாறு அவ்விடத்தை விட்டே அகன்றார்.
இப்பொழுது சீனத்தில் நிகழும் உலக விளையாட்டுப் போட்டி குறித்து அங்குள்ள மூத்த மொழியியல் அறிஞர்(#) மொழிகிறார்: "எங்கள் நாட்டில் இப்போட்டி நடைபெறுவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான்; எங்கள் வீரர்கள் வெற்றிமேல் வெற்றி பெறுவது பற்றிப் பெருமிதம்தான்; ஆனால் இதைச் சாக்கிட்டு விளையாட்டு வகைப் பெயர்கள், உணவு வகைப்பெயர்கள் முதலியவை பல்லாயிரக்கணக்காக எங்கள் மொழியில் புகுகின்றனவே! இதை நினைத்தால் எனக்குக் கவலையே மேலிடுகிறது!"
"நாம் தமிழர்!" என்னும் உணர்வு, எப்பொழுது நம்மவர்களுக்கு வரும்? அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஊதியத்தில், அதன் உயர்வில், பணியிடம் தொடர்பான மாற்றங்களில், அடைந்துவரும் ஏந்துகளில், ஊதிய உயர்வுப் பரிந்துரைகளில் வேற்று மொழிக்காரர்கள் கைவைத்தால் மட்டுமே வரும். எல்லாம் சரியானதும், வந்த விரைவில் போய்விடும்.
தன் பிள்ளை வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டிய நிலைக்கு வருந்தாமல், படிக்கும் பள்ளிகளில் தமிழ்ச் சொற்களைப் பேசினால் தண்டம் கட்ட வேண்டி வருவதற்கும் அருவருப்படையாமல், அந்தப் பள்ளிகளுக்கு அளவுக்கு மிகுதியாகக் கல்விக்கட்டணத்தையும் - கட்டடங் கட்ட நன்கொடையையும் கடன்வாங்கியாவது தரவும் கவலைப்படாத பெற்றோர்களும்; இவைகுறித்து இரட்டை நடிப்பை இயல்பாகப் போட்டு அன்றாடம் நடிக்கும் அரசியல்வாணர்களும் இருக்கும் நாட்டில், நச்சுமரம் பழுத்ததுபோல் உலகமயமாதலும் முதிர்ந்து வரும்பொழுது, "நாம் தமிழர்!" என்ற உணர்வு தமிழர்க்கு ஒவ்வொரு நிமையமும் நீடிக்கப் பாடாற்ற வேண்டிய பங்களிப்பைச் சிறு - பெரு வணிகர்களும் தொழில் முனைவோர்களும் ஊடகம் நடத்துவோரும் தர முன்வந்தால்தான் தமிழுக்கு உரிய இடம் தமிழகத்தில் கிடைக்கும்.
அடிக்குறிப்பு:
இத்தனைக்கும் சீனத்தின் வடக்கு - நடுவண் -மேலைச் சீனப்பகுதிகளில் பேசப்படும் 'மண்டாரின்' என்ற கிளைமொழியே சீன அரசின் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஒலிப்புமுறை இடத்துக்கு இடம் மாறுபடாதிருக்க, பீஜிங் மக்களின் ஒலிப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு 1956ஆம் ஆண்டில் 'பின்-யின்' என்ற ஒலிப்புமுறை உருவாக்கப்பெற்றது. நடைமுறை ஆய்வுகளின் பின்னர், இரண்டாண்டுகளுக்குப்பின் அது செயல்முறைக்கு வந்தது. இந்தப் பின்-யின் ஒலிப்புமுறையைக் கொண்ட சீனமொழி, உரோமன் எழுத்துமுறையை ஏற்றுக் கொண்டது. இதுவே இன்றைய சீனத்தின் கல்விமொழி; பன்னாட்டுத் தொடர்பு மொழியும் இதுவே.
இம்மொழியையே - மூத்த அறிஞர் சுட்டுகிறார்.
நன்றி: தமிழ்க்காவல்.நெட் 17-8-2008.

No comments: