14.12.13

செல்வன் இறையன் (எ) ஈசுவர் பிறந்தநாள்


புதுவைச் சித்தர்தம் ஆதன் ஒடுக்கங்கள் நாற்பத்தொன்றனுள் அகத்தியமான இரும்பை மாகாளத்தில் - மகள் மங்கையர்க்கரசி மருமகன் சிவகுரு ஆகியோர்தம் மகள் மஞ்சுவின் தம்பி இறையன் (எ) ஈசுவர் பிறந்தநாள், திசம்பர் 14 ஆம் நாள் மாலைப்பொழுதில், புதுவைச் சிவனடியார்/ சிவத்தொண்டர் தலைமைப் பெருமானார் வழிகாட்டுதற்படி சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. படம்: அண்ணன் பசுபதி.(Facebook: Annan Pasupathy Twitter: @PasupathyAnnan)

கல்வி பயிற்றல் - அருமையான இயல்பான நூல்!


முனைவர் தி. அன்புச் செல்வன் தந்த நூல். Deschooling (எ) வகுப்பறை விலகிய கல்வி, மாணாக்கரிடம் கற்றல், வகுப்பறைக்குள் மாணாக்கரை வைத்தே நூலகம் உருவாக்கும்(கிஜூபாய்) முறை, பிரேஃசிலார் பாலோ பிரேயர் தருக்கங்கள், 'Who moved my cheese' Spencer Johnsonஇன் கற்பித்தல்முறைக் கருத்தாக்கம்.,முதலிய கூடிய கல்வி கற்பித்தலில் புதிய கோணங்கள் காட்டும் கல்வியியல் நூல், பழகுதமிழில்.

5.12.13

நண்பர் பாவலர் சாஜகான் கேள்விக்கு மறுமொழியாக!

என் கையொப்பம் 1969 முதலே, கடவுச்சீட்டு+நுழைவிசைவு+அலுவலகப் பதிவேடு+வைப்பகம்+காசோலை, இன்ன பிற எல்லாம், முழுத்தமிழ்க் கையொப்பம். வடவெழுத்து ஒன்று கூட இல்லை. சிந்துசமவெளி மொழிப்பெயர் பசுபதி . சான்று: 'தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்" - டாக்டர் கே.கே.பிள்ளை (த.பா.நி.) புனைபெயரிலும் வடவெழுத்தில்லை. அது 'புதுச்சேரி அ.தேவமைந்தன்." அந்தப் பெயரை ஏற்கெனவே நானே வலைப்பதிவிலும் குமுக வலைதளத்திலும் வலையேடுகளிலும் பயன்படுத்தியுள்ளமையால் இதை மாற்ற இயலுமா? என் நண்பர் யாவரும் இதை நன்கறிவர். ஆய்வுக்கு நன்றி!

3.12.13

Facebook / முகநூலில் நீடிப்பதன் காரணம் - தேவமைந்தன்

12/4/2013 11:15:19 AM

5 hours ago via mobile

"நாம் உண்டு நம் நண்பர்கள் உண்டு" என்றிருப்பவர்கள்தாம் நிம்மதியாக facebookஇல் நீடிக்க முடியும். உலகத்தில் நிகழ்வாழ்விலும் இப்படித்தான். "நாமுண்டு நம் வேலையுண்டு" - தாரக மந்திரம். இதை 1.12.2013 மாலை இன்னும் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

facebook இலவயம். Event Invite-இலும் பேதமா? அதில் 3 மறுமொழிகள் இருப்பது தெரியாதா? இதுவரை முகநூலில் முறைப்படி Event வைத்தவர்கள் Murugan Govindaswamy அவர்களும் புதுவை அறிவியல் இயக்கமும் Seetha Lakshmiயும்தாம். கோவை சிறுதுளி இயக்கம் போன்ற அமைப்புகள், திருப்பூர்த் தாய்த்தமிழ்ப்பள்ளி முதலானவையும் முகநூல் அழைப்பில் பேதம் காட்டுவதில்லை.

குறிப்பு: உரையில் இடம்பெறும் ஆங்கிலச் சொற்கள் முகநூற் சொற்கள்.

முகநூலில் தேவமைந்தன் கவிதை 12/02/2013

முன்பனி, பின்பனியைத் தொட்டுஅணைக்கத் தாவும் பருவம்.
விரல்கள், வைகறைப் பனியில்
விறைத்துக் கொள்ளும் போதெல்லாம் உன் தீண்டுகை தொடங்கும் தொடரும்...
உடம்பை மீண்டும் உருவாக்கி உள்ளே
மூச்சை வெப்பாக்கி அள்ளைகள் விரிவாக்கி
குருதி வெதுவெதுப்பாக உன் நெஞ்சம்பற்றி, சாருமுன்நான்
தலைகீழ்த் திரும்ப.
ஐயோ! மீளவுமா பூமி?

- தேவமைந்தன்

20.11.13

"வேரற விடோம்!" - அல்விற், வி.

வேரற விடோம்!

ஒரு குழந்தையை எல்லோரும் விரும்பும் நற்பிரஜையாக உருவாக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது? குழந்தை தாயின் வயிற்றிலிருந்தே கற்கத் தொடக்கி பின் குடும்ப உறுப்பினரிடமிருந்து கற்றுப் பின் சமூகத்துள் நுழைகின்றது. ஆக தனது ஆரம்பக் கல்வியை அது வீட்டிலேயே தொடங்கி விடுகின்றது. பெற்றோரிடமிருந்து முதற் சொற்களைப் பெற்றுக் கொள்ளுகின்றது.ஆக பெற்றோரின் பங்கு இங்கே மிக முக்கியமாகின்றது. பின் முறைசார் கல்வியை பாடசாலையில் தொடங்கும்போது ஆசிரியர், பெற்றோர், மாணவன் (மாணவி) என்ற மூன்று பகுதியினரும் சேர்ந்து செயல்பட வேண்டிய பகுதி தொடங்குகின்றது.
தமிழ் கற்பித்தல் என்னும் பகுதியை நாங்கள் எடுத்துக் கொண்டால், இங்கே "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை" குழந்தைகளின் வயது, தேவை, கவரும் தன்மை, மொழியினூடாக எம் பண்பாட்டு விழுமியங்களை சேர்த்தளித்தல் போன்ற சிறந்த நோக்கங்களை முன்வைத்து, சிறப்பான முறையில் பாடத்திட்டங்களை அமைத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது உலகம் முழுவதிலுமே. தனியே கேள்விக்கு விடை எழுதி அடுத்த வகுப்புக்கு ஏறுவது என்கின்ற நிலையை விடுத்து, ஒரு குழந்தை ஒரு கருத்தைக் காதால் கேட்டு விளங்கி, அதுபற்றிய தனது கருத்தை கலந்து உரையாடி, பின் அது பற்றிய விபரத்தை தானாகவே வாசித்துப் விளங்கிக் கொண்டு பதில் எழுதுதலும் அதன் பின் பகுதியாக தன் கருத்தை தானே எழுத்தின் மூலமாக வெளிக் கொணர்தலையுமே நோக்காகக் கொண்டு கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்று நான்கு பகுதியாகப் பிரித்து கற்பிக்கப் படுகின்றது. பரீட்சை என்று வருட இறுதியில் வரும்போது எழுத்துமுறைத் தேர்வு,வாய்மொழித் தேர்வு என்று இரண்டு பகுதியாக குழந்தை வருடம் முழுவதும் செய்த வேலையை மதிப்பிடுகின்றார்கள்.இதிலே யாருடைய மேதாவித்தனமும் கிடையாது. அத்துடன் ஆசிரியர்களும் அடிக்கடி பயிற்சிப் பட்டறைகள் மூலம் புடம் போடப்பட்டு கற்பித்தலுக்கு அனுப்பப் படுகின்றார்கள் என்பது மிக முக்கியமான விடையம்.
இது தவிர மொழி என்பது மாற்றத்துக்குள்ளாகி வரும் ஒன்று. ஐரோப்பிய மொழிகளிலே அகராதிகள் புதிய சொற்களுடன் பதிப்பித்து வருதல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல தமிழிலே கலந்துள்ள வேற்று மொழிச் சொற்களைக் களைந்து தனித் தமிழ் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து பாட நூல்கள்இங்கே புதுப்பிக்கப் படவும் செய்கின்றன.
ஒரு இனத்தின் வெளிப்பாடே அதன் மொழியில் தான் தங்கியுள்ளது. இன்றைய நிலையில் நாங்கள் எமது வாழ்வையும், வரலாற்றையும் எமது குழந்தைகளுக்குக் கடத்துவது அவசியமான ஒன்று. அதுவும் நாங்கள் வீட்டிலே பேசுவது தமிழாயிருந்தால், குழந்தைக்குக் கடினம் என்றோ அல்லது முடியாது என்றோ சொல்ல முடியாது. பெரியவர்கள் நாங்கள் தான் கடினம் என்று ஒரு சாட்டை எமது சார்பிலிருந்து வைக்கப் பார்ப்போம். "ரதி" என்பவர் கூறிய கருத்துப் போல, உலக மொழிகள் அனைத்திலேயும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன் படுகின்றார்கள். நாங்கள் இரண்டு திருக்குறள் மனனம் செய்யச் சொன்னால் "உந்தத் திருக்குறள் இப்ப என்னத்துக்கு" என்று பெரியவர்கள் தான் கேட்பார்கள். மனனம் செய்யிறதே பிழை என்று சொல்ல வருபவர்களுக்கு ஒரு செய்தி; மனனம் என்பது ஞாபக சக்தியைத் தூண்டும் ஒரு செயல்பாடு. அந்த முறை எல்லா மொழிகளிலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. அண்மையில் இங்கு நடந்த ஒரு திருக்குறள் போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். பிள்ளைகள் திருக்குறள்களை மனனம் செய்திருந்தார்கள்; ஆனால் அதன் பொருளை தங்களது வார்த்தைகளில் விளக்கியதைக் கேட்டபோது எம்மினம் வீழாது என்ற ஒரு பெருமிதம் எனக்குள் தோன்றியது.
இதை விட பிரான்சில் தமிழ் மொழியை ஒரு மேலதிக பாடமாக உயர்தரப் பரீட்சைக்கு எடுக்கலாம் அதில் வரும் பத்திற்கு மேற்பட்ட புள்ளிகள் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் சேர்க்கப்படும்.எனவே இது ஒரு மேலதிக நன்மை.
உண்மையிலேயே எத்தனையோ ஆசிரிய ஆசிரியைகள் சனி, ஞாயிறு என்பதை விடுமுறையற்ற தொடர் நாட்களாகவே அர்ப்பணிப்புடன் பிள்ளைகளுடன் கழிக்கின்றார்கள். இப்படி அவர்கள் அலைவதன் நோக்கம் என்ன? வீட்டிலே படுத்து ஓய்வெடுக்க முடியாதா?
இதுவும் ஒரு எதிர்கால எதிர்பார்ப்பில் உள்ள நம்பிக்கைதான்.
குழந்தைகள் தெளிவாக உள்ளார்கள்.
நாங்கள் தெளிவாவோம்.

குற்றம் களைவோம்.

நல்லன நோக்குவோம்.

அல்விற், வி. நன்றி: http://alvitv.blogspot.com



12.11.13

கலைமாமணி முனைவர் எ.மு.இராஜன் தனது "சிலந்தி வலை" யில்

காந்தியின் கைத்தடி
1984
முதல்
சிலந்தி வலை 2013
வரை
31 தமிழ் நூல்கள்
Political Economy of Income Taxation in India 1997
முதல்
Learning Disabilities
(தொகுப்.)
2008
வரை
6 ஆங்கில நூல்கள்
“சிலந்திவலை”
துளிப்பாக்கள் 500, பக்கம்: 128 ரூ.80
எ.மு.ராஜன் (கலைமாமணி முனைவர்) நவம்பர் 2013.

பூட்டிய வீட்டில்
சிலந்தி வரைகிறது
ஓவியம் (3)

படிக்கும் காலத்தில் புரியவில்லை
இப்போது புரிகிறது
முதுமை (7)

பேசக்கற்றுக் கொடுத்த பெற்றோர்
பேசாமலிருக்கக் கற்றுக் கொடுக்கும்
பிள்ளைகள் (12)

தாள்களைத் தவிர்க்கிறோம்
தப்பித்துப் போகட்டும்
மரங்கள் (21)

இனிவரும் துளிகளில் நிறுத்தற்குறி - அடி பிரிப்பு:-

வீட்டுக்கு மேல்/வீடு, இன்னும் தெருவில், மக்கள் (48)
அடுத்ததைப் பிடிக்கும் முன், பிடித்ததை விட்டு விடாதீர்கள், குரங்குப் பிடி (77)
வகுப்பறையை விட, வெளியில் மகிழ்ச்சியாக, மாணவர்கள் (79)
கோடிக்கணக்கானோர் வருகை, ஆன்மீகப் பொருளாதாரம், ஐயப்பா சரணம் (122)
பழங்கால வாழ்க்கை, மீண்டும், மின்வெட்டு (184)
எறும்புகள் ஏமாந்தன, வாசலில், கோலம் (191)
இன்னும் இருட்டு, விடியவே இல்லை, இலங்கைத் தமிழர் (200)
கடவுளுக்குப் புரியும், தமிழிலும், மந்திரம் (252)
எல்லா முகத்தையும், பொறுத்துக் கொள்ளும், கண்ணாடி (256)
வாழ இடமில்லை, வானமே எல்லை (259)
புட்டிப் பால் எதற்கு, தாய்ப் பால் இருக்கிறது, தமிழ் (282)
கொலை செய்வதுதான் தர்மம், கெளரவர்களுக்கும் பொருந்தும், கீதை (290)
அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள், நடத்துகிறார்கள் தனியார் பள்ளிகள் (300)
எனக்கு வேண்டும் இலவசம், எனது வாக்கு, விலைக்கு (296)
முகத்துக்கு அழகு, மூடிக்கிடக்கும் வாய் (306)
பிரிப்பதால் வலிக்கிறது, கத்திரிக்கோல் (320)
(John Donne Compares Love to a pair of Scissors (Facebook: Calavady Passoupati)
ஆங்கிலத்தில், ஆண் எப்போதும், மேல் (Male) (321)
இருப்பதைக், காட்டு, வாழ்ந்து (322)
எல்லாம் இயந்திரமயம், இருந்தும் வேண்டும், விரல் நுனி (344)
உயர்த்திப் பிடித்தார், காந்தி, கைத்தடி (350)
பேருந்தில் நெரிசல், உரசுகின்றன, எருமைகள் (349)
போனது 100, சென்றது, 108. (374)
யாரென்று தெரியாத, எதிர் வீட்டுக்காரர், அடுக்குமாடி (383)
தானாடா விட்டாலும், தசை ஆடும், பட்டிக் காடு (392)
தாயும் தாரமும், இருதலைக் கொள்ளி, எறும்பாய் நான் (405)
இனித்தது கன்னத்தில், பேத்தியின், உதடுகள் (402)
என் பெயரைச் சொல்லி, அழைத்தாள் குழந்தையை, முன்னாள் காதலி (449)
பாலூட்டியபடியே, பசியாறினாள், தாய். (450)
உழைத்து ஓய்ந்த, பிய்ந்து போன செருப்பாய், அப்பா (455)
தவறு செய், திருத்திக் கொள், நீ மனிதன். (460)
ஆயா கடந்த காலம், ஆத்தா, நிகழ்காலம் (467)
பந்திக்கு, முந்தியதால், தொந்தி (492)
கண்ணனைப் போல், எட்டாவது பிள்ளை, எ.மு.ராஜன் (500)

22.9.13

நாயகர் - குறுந்தொகை முழுதும் பிரெஞ்சிலாக்கியவர்

*நாயகர் - குறுந்தொகை முழுதும் பிரெஞ்சிலாக்கியவர். Destination : Le Tamoul parlé (edtions Astarté Rs.500/-) புதுச்சேரிப் பொதுஅறிவு வினாவிடை, அத்தையின் அருள், அப்பாவின் துப்பாக்கி முதலான நூல்களைப் படைத்தவர். அண்மையில் 'திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழ்வழி பிரெஞ்சு மொழி இலக்கியச் சிறப்பிதழ் தொகுத்தவர். முழுப்பெயர் - சுப்புராய ஆறுமுக வெங்கட சுப்புராய நாயகர். பிரெஞ்சில் Dr. Vengada Soupraya Nayagar. (Prof. & Head, Dept. of French, Kaanji Maamunivar Centre for Postgraduate Studies, Lawspet, Puducherry-605008. India.)

3.6.13

Poèmes de A.Pasupathy. (DEVAMAINDAN) - Traduit par R.Kichenamourty.

Poèmes de A.Pasupathy. (DEVAMAINDAN)
Traduit par R.Kichenamourty.
DEVAMAINDAN (pseudonyme de A.Pasupathy), est l’auteur de plusieurs recueils de poèmes (Ungal Thérouvil Orou Pâdagane – 1976, Poul Veli – 1980 ; Bonsaï Manidargal -1993 etc.) qui lui ont valu un succès immédiat à la fois auprès de l’élite et auprès des lecteurs moyens. Ancien professeur de tamoul dans les différents établissements universitaires de l’Etat de Pondichéry, il explore les aléas de la vie quotidienne en Inde et plus particulièrement dans le pays tamoul.
Le plus grand exploit
Des gens escaladent des rochers
Glissent sur des glaciers,
S’inscrivent au marathon des courses,
S’exercent des heures durant à la natation,
Se contorsionnent, s’arc-boutent
Et s’élancent à travers des cercles enflammés.
C’est pour se faire distinguer
Et s’immortaliser dans le Guinness des records.
Vanité ! Vanité ! Tout n’est que vanité !
Pourquoi ? Je vous le demande.
Car n’étant pas né dans nos bidonvilles,
Nul ne sait que nous autres
Qui y vivotons
Nous avons battu maintes fois tous leurs records
Et les battrons toujours, encore. Bonsaï Manitharkal (1993)

La souricière
Enfin,
Poussé par le désir du gâteau,
On est pris au piège.
Affolé,
On est allé
Battant de son corps
Les parois de la prison,
Et se cognant la tête
A ses barreaux.
De guerre lasse,
On se tient serein.
En tout cas, ce cachot
Se débouchera
Dans un sac sans trou.
Et des gars sans merci
Attendront
Pour nous donner
Des coups de bâton.
Tant pis.
Mangeons donc le reste de l’appât
Nous mettant en tête, toutefois,
De ne plus empiéter,
Dans une vie future,
Sur le domaine d’autrui.
- Bonsaï Manitharkal (1993)

Courtesy: http://franceindechassecroise.wordpress.com/

12.5.13

கைப்பேசியும் வலைப்பதிவுகளும் மின்னஞ்சல் இணைப்புகளும்


கைப்பேசியும் வலைப்பதிவுகளும் மின்னஞ்சல் இணைப்புகளும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை. நான், இணையமுலவுவது 100/100 கைப்பேசியில்தான். விசைப்பலகை, தமிழ்விசையின் 'தமிழ் 99.'

மின்னஞ்சலில் விடுக்கப்படும் இணைப்புகளையும் படங்களையும் கைப்பேசியில் திறக்கவும் தமிழ் பிளாக்கர் வலைப்பதிவில் பதியவும் இயலாது.
குமுக வலைத்தளங்களில் நீங்கள் போடும் படங்களை எளிதில் ஆன்டிராய்டு கைப்பேசியில் பார்க்கலாம். பதிய வாய்ப்பில்லை. இன்றைய நிலையில் முகநூல் டுவிட்டர் முதலான குமுக தளங்களை வெற்றியுடன் பயன்படுத்துபவர் பலர். அவ்வளவுதான் சொல்ல முடியும்..புரிந்து கொண்டு நிஅழ் நீரோட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.

13.4.13

அத்தையின் அருள்


நண்பர், பிரெஞ்சுப் பேராசிரியர் முசியே சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள், தம் அத்தை அல்லியங்கோதை (11.08.1911 - 20.11.1994) அம்மாள் குறித்துப் படைத்துள்ள உயிரோட்டம் மிகுந்த வாழ்க்கை வரலாற்று நூல்தான் 'அத்தையின் அருள்.' நம் நண்பர் நாயகரை அவர்தம் அத்தை அழைத்த செல்லப் பெயர்தான் 'அருள்.' என்னிடம்கூட, அருள் என்றுதான் அவரைக் குறிப்பிட்டார் அவர். "நாயக்கர், தனது குருவான அத்தையம்மாவை நூலில் இலக்கியமாகப் பதிவு செய்துவிட்டார்" என்று ஐயா கி.ரா. அவர்கள் 17/03/13 அன்று குறிப்பிட்டது 100% பொருந்தும். விரைவில் இக்காவியத்தைப் பிரெஞ்சில் தர அருளை அன்போடு வேண்டுகிறேன்.

11.3.13

இரண்டு குறுங்காவியங்கள்: 'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

இரண்டு குறுங்காவியங்கள்:

'காதல் பறவை,' 'பெண்மை போராடுகிறது'

முதலாவது 'காதல் பறவை' ஆசிரியர் வில்லிசை வேந்தர் கலைமாமணி இ. பட்டாபிராமன் அவர்கள்.

"சீர்த்த கொள்கைகள் செறிந்த"தாகவும் குமுகாயச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வு தருவதாகவும் இக்குறுங்காவியம் அமைகிறது.

இரண்டாவது 'பெண்மை போராடுகிறது' ஆசிரியர் புலவர் ப. பாவண்ணன் அவர்கள்.

போலிக் கலைகள் காலூன்றிவிட்ட சூழலில், ஊடகங்களில் நிலவும் முதலாளியக் கலைக்கு மாற்றாக, அதன் பிடியிலிருந்து விடுதலை செய்யும் முயற்சியில் உண்மையான கலையின் அடிமை விலங்கு அறுந்திட அடிக்கப்பெறும் சம்மட்டி வீச்சாக இக்குறுங்காவியம் திகழ்கிறது.

தொடர்பு முகவரி:

கலைமாமணி புலவர் இ. பட்டாபிராமன், க.மு., கல்.இ.,
16, வள்ளலார் தெரு,
குயவர்பாளையம்,
புதுச்சேரி - 605 013

தொ.பே: 0413 2245358
அ.பே: 9952449300

4.3.13

இணையத்தில் பாவாணர் மடல்கள்

இணையத்தில் பாவாணர் மடல்கள்

தனித்தமிழ்க் கழக, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவின் முதற்பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். புதுச்சேரி இலாசுப்பேட்டை முதன்மைச் சாலையில் அரசு நூலகத்துக்கருகில் உள்ள திரிபுரசுந்தரி அம்மாள் இல்லத்தில் 02.03.2013 (தி.ஆ.2044, கும்பம் 18 காரி) அன்று முற்பகல் 11 முதல் நண்பகல் 12:45 மணிவரை ஆற்றப் பெற்ற என் சொற்பொழிவின் ஒருபகுதியே இது. பிற பகுதிகளில் முழுமையாகத் தரவுகள் மட்டுமே உள்ளன. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர், ஆய்வு மாணவர் மாணவியர், புதுச்சேரித் தமிழ்ப் புலவர்கள், தமிழியக்கங்களின் அமைப்பாளர்கள், இதழாசிரியர்கள், ஊடக நண்பர்கள் முதலானோர் நிரம்பிய அவையை நோக்கிய பொழிவாதலின், இணையத்திலுள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் பாவாணரின் மடல்கள் குறித்த பொழிவுப் பகுதி மட்டுமே இங்கு தரப்பெறுகிறது.

இவ்வுரையில் இணையத்தில் மொழிஞாயிற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்து மட்டுமே மொழிவதென்பது வரையறை. முதலில், தமிழநம்பி என்ற வலைப்பதிவைப் பார்ப்போம். திறக்கும் தளத்தில் வலது பக்கமாகத் தெரியும் இறங்கு நிரலில் “பாவாணர் (2)” என்பதைப் பார்க்கலாம். ‘பாவாணரின் மடல்கள்’ என்ற பதிவை விரிவானதாக 16 மேத்திங்கள் 2011 அன்று (கிழமையும் திங்கள்) பதிந்துள்ளார்.

முன்னுரையுடன் - மடல் ஊடகத்தின் சிறப்பு, மடல் இலக்கியம், இலக்கியங்களில் மடல்கள், இக்கால மடல் இலக்கியங்கள், பாவாணர் [இத்தலைப்பினுள்], பாவாணர் மடல்கள் [யார் யாருக்கு - எத்தகையோர்க்கு - ஆயிரக் கணக்கில் - பாதியளவு புலவர் இரா. இளங்குமரன் ஐயாவால் தொகுக்கப்பெற்று 1.பாவாணர் கடிதங்கள் 2.பாவாணர் மடல்கள் என்றிரண்டு நூல்கள் - முதலாவதில், இருபத்தெட்டுத் தலைப்புகள் - இரண்டாவதில், பத்துத் தலைப்புகள் - இவற்றின் கீழ், பகுதி மடல்கள் மட்டும் - 'பாவாணர் கடிதங்கள்’ என்ற தொகுப்பின் 28ஆம் தலைப்பின்கீழ் [சில கடிதங்கள்] 12 மடல்கள் முழுமையாக, முதல் பதினொன்றும் தி.தெ.சை.சி.நூ.ப. கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ.சுப்பையா அவர்களுக்கும், பன்னிரண்டாம் மடல் [தொகுப்பாளரான / இரா.இளங்குமரன்] தமக்கும் என்றவாறு, முதல் தொகுப்பு, மடல் விளக்கம், பாவாணர் மடல்களில் எழுதிய வகை, வ.சு.வுக்கு எழுதிய மடல்கள் (ஆயிரத்துக்கும் மேற்பட்டவை), அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்கள், முதல் தொகுப்பில் கொடுத்துள்ள மடற்பகுதிகளில் சில, தொண்டின் உறைப்பு, பாவாணர் வீறு, முதல் தாய்மொழியும் ஆங்கில நூலும் (The Primary Classical Language of the World), வேர்ச்சொற் போலிகை (மாதிரி), சொல்லாக்க விளக்கங்கள், பிழையும் திருத்தமும், தனித்தமிழ்க் கழகம் [தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன் 01.09.1964 எழுதப்பெற்றவர் பெயரில்லை] [“உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்றும் யாப்புரவில்லை. தணித்தமிழ்ப் பற்றிருந்தால் போதும்” - 01.08.1964; எழுதப்பெற்றவர் பெயரில்லை], தனித்தமிழ்ப் பெயரீடு [“சாத்தையா என்னும் விளிவடிவைச் ‘சாத்தையன்’ என்று மாற்றுக” - 16.10.1979 தமிழ்க் குடிமகன்], தமிழ்ப் புலவர் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி, உலகத் தமிழ்க் கழகம், அகரமுதலிப் பணி, தொல்காப்பியச் சீர்மை, விளம்பரம் விலக்கல் (“நானும் விளம்பர வெறுப்பினன்” 6.3.’80 கு.பூங்காவனம்), கிழங்கு வகைகள், மனைவி மக்கள், நோய் நொடி நொம்பலம், சிதறிய மணிகள், முத்துமாலை, இரண்டாம் தொகுப்பு (“இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார் ஐயாவே ‘பாவாணர் மடல்கள்’ என்னும் இரண்டாம் நூலையும் தொகுத்திருக்கின்றார்......”), இரண்டாம் தொகுப்பில் உள்ள மடல் பகுதிகள் சில - உடலும் உள்ளதும், அன்பும் நண்பும், அகரமுதலிப் பணி, இரண்டு தொகுப்புகளிலும் பாவாணர் அயற்சொற்களைத் தவிர்த்து எழுதிய சொல்லாட்சிகளுள் சில (Thesis-இடுநூல்; சாதனை - நிலைநாட்டம்; Jet-பின்னுந்தி; மதியம் - உச்சிவேளை, உருமம், நண்பகல்; Fiddle-கின்னரம்; சன்மார்க்க சபை-நன்னெறி யவை; Apple-செம்பேரி; Cooker-அடுவான்; Extremists-முனைவாளர்), இன்னுமுள்ள மடல்கள் (“பாவாணர் பாவலரேற்றுக்கு எழுதிய பன்னூறு மடல்கள்” -பாவலரேறு மறைந்ததை அடுத்து வந்த ‘தென்மொழி’ மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சிறப்பிதழ்/சுவடி:17 ஓலை-6-7 பக்கம் 64-இல்), அரும்பெறலன்பர், ‘சுற்றுக் கவலையும் குச்சிக் கிழங்கும்', திருமண வாழ்த்து (1992 - 11.7.1972 ஆம் நாளிட்ட அஞ்சலட்டையில் வாழ்த்து “மங்கலத் திருவளர் தமிழநம்பி மலர்க்கொடியர் திருமண வாழ்த்து), முடிவாக... ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் இந்தப் பதிவு அமைந்துள்ளது.

தனிநூலாக அச்சில் வரவேண்டிய இவ்விடுகையின் துணைத்தலைப்புகளின் கீழ் வரும் செய்திகள் மேலும் உள் தலைப்புகளின் அடியில் பகுக்கப் பெற்றுள்ளமை கண்டு மலைத்துப் போனேன். புதுச்சேரித் தனித்தமிழ்க் கழக நண்பர்கள் இவ்விணையப் பதிவை அச்சு நூலாக்க விரைவில் ஆவன மேற்கொள்ள வேண்டுகிறேன். ஏனெனில் இப்பதிவு -

1. பாவாணர் கடிதங்கள் (கழகம், 1985) - புலவர் இரா.இளங்குமரன்.

2. பாவாணர் பாடல்களும் மடல்களும் - புலவர் இரா.இளங்குமரன்.

3. தேவநேயப் பாவாணர் (சாகித்ய அகாதெமி 2002) - புலவர் இரா. இளங்குமரன்.

4. பாவாணர் வரலாறு (கழகம் 2000) - புலவர் இரா.இளங்குமரன்.

5. தென்மொழி சுவடி 7: ஓலை 6-7 - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

என்ற ஐந்தன் பிழிவு. சுளைகளுடன் கூடிய சாறு. துணை / உள் தலைப்புகளே சுளைகள் என்பேன்.

3.3.13

தேடல் - தேவமைந்தன்



"தேடல் மட்டுமே வாழ்வின் எச்சம்

நிகழ்'இன்று' மட்டுமே

உனக்கு மிச்சம்." - தேவமைந்தன்

26/12/1998 (பாட்டரங்கம்)

26.2.13

இணையத்தில் மொழி


"இணையத்தில் மொழிஞாயிறு" என்று உரிய காப்புரிமை பெற்ற என் தரவுத்தொகுப்பை, "பாவாணரும் இணையமும்" என்ற தலைப்பில், வரும் காரி 2/3/2013 அன்று தனித்தமிழ்க் கழகப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவாக நிகழ்த்துகிறேன். விடப்படக்கூடாது என்று கருதும் இணையப்பதிவான -100% தலைப்புத் தொடர்பான தங்கள் தரவை, 01/03/13 மாலைக்குள் இதன் கருத்துரைப் பகுதியில் தவறாமல் தருக!

11.2.13

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்/சனி, 2 பிப்ரவரி, 2013


சனி, 2 பிப்ரவரி, 2013
புதுவையில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்.
66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.
தொடக்க விழா
காலை 9.30 மணிக்கு

தலைமை:
திரு. வீர. முருகையன்
தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

நோக்க உரை:
திரு. இரா. சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.

முன்னிலை:
பேராசிரியர் நாக. இளங்கோ,
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்.
திரு. ஓவியர் இரா. இராசராசன்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம், புதுச்சேரி.
பொறியாளர் இரா. தேவதாசு
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

முகாமைத் தொடக்கி வைப்பவர்:
மாண்புமிகு திரு. வ. சபாபதி அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு.
‘தமிழா’ தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
பெறுதல்:
திரு. கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
வாழ்த்துரை:
திரு. இரா.விசுவநாதன் அவர்கள்
மாநிலச் செயலர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI), புதுச்சேரி.

அமர்வு 1: காலை 10.30 முதல் 11.15 வரை

தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு, தமிழில் இணைய உலாவிகள் (Web Browsers),ஒருங்குகுறி, TAM, TAB, TSCII பற்றிய விளக்கம் மற்றும் குறியீடு மாற்றம்
(font conversion)

திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.

அமர்வு 2: காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திரு. க. அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
காலை 11.30 முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3: காலை 11.45 முதல் 12.30வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற…
பரமேசுவரி
அமர்வு 4: பகல் 12.30முதல் 1.15 வரை
திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம், தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…
திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.
உணவு இடைவேளை
பகல் 1.16 முதல் 2.00 வரை
அமர்வு 5: பிற்பகல் 2.00 முதல் 2.45வரை
திரு. கோ.சுகுமாரன்
தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு

அமர்வு 6:பிற்பகல் 2.46முதல் 3.15 வரை

பேராசிரியர் நாக. இளங்கோ
தமிழில் மின்னூல் உருவாக்குதல்
அமர்வு 7:பிற்பகல் 3.15முதல் 4.00 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
த. சீனிவாசன், - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.

அமர்வு 8:பிற்பகல் 4.00முதல் 4.15 வரை

தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற…
திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர் இடைவேளை
பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை
நிறைவு விழா: மாலை 4.30 மணி
தலைமை:
திரு. எல்லை. சிவக்குமார் பொதுச்செயலர்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
சான்றிதழ் வழங்கல்:
பேராசிரியர் பசுபதி
நிறைவுரை:
திரு. அ.கு. சலீம்,
துணைத்தலைவர், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
தொடர்புக்கு:
இரா. சுகுமாரன்: 94431 05825, எல்லை. சிவக்குமார்:
பேராசிரியர் நாக. இளங்கோ:9943646563, கோ.சுகுமாரன்: 9894054640
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, ellai.sivakumar@gmail.com
இணையம்: www.pudhuvaitamilbloggers.org/ வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/

Posted by thamizha nambi at 9:03 PM 1 comments