இணையத்தில் பாவாணர் மடல்கள்
தனித்தமிழ்க் கழக, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவின் முதற்பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். புதுச்சேரி இலாசுப்பேட்டை முதன்மைச் சாலையில் அரசு நூலகத்துக்கருகில் உள்ள திரிபுரசுந்தரி அம்மாள் இல்லத்தில் 02.03.2013 (தி.ஆ.2044, கும்பம் 18 காரி) அன்று முற்பகல் 11 முதல் நண்பகல் 12:45 மணிவரை ஆற்றப் பெற்ற என் சொற்பொழிவின் ஒருபகுதியே இது. பிற பகுதிகளில் முழுமையாகத் தரவுகள் மட்டுமே உள்ளன. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர், ஆய்வு மாணவர் மாணவியர், புதுச்சேரித் தமிழ்ப் புலவர்கள், தமிழியக்கங்களின் அமைப்பாளர்கள், இதழாசிரியர்கள், ஊடக நண்பர்கள் முதலானோர் நிரம்பிய அவையை நோக்கிய பொழிவாதலின், இணையத்திலுள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் பாவாணரின் மடல்கள் குறித்த பொழிவுப் பகுதி மட்டுமே இங்கு தரப்பெறுகிறது.
இவ்வுரையில் இணையத்தில் மொழிஞாயிற்றைப் பற்றிய பதிவுகளைக் குறித்து மட்டுமே மொழிவதென்பது வரையறை. முதலில், தமிழநம்பி என்ற வலைப்பதிவைப் பார்ப்போம். திறக்கும் தளத்தில் வலது பக்கமாகத் தெரியும் இறங்கு நிரலில் “பாவாணர் (2)” என்பதைப் பார்க்கலாம். ‘பாவாணரின் மடல்கள்’ என்ற பதிவை விரிவானதாக 16 மேத்திங்கள் 2011 அன்று (கிழமையும் திங்கள்) பதிந்துள்ளார்.
முன்னுரையுடன் - மடல் ஊடகத்தின் சிறப்பு, மடல் இலக்கியம், இலக்கியங்களில் மடல்கள், இக்கால மடல் இலக்கியங்கள், பாவாணர் [இத்தலைப்பினுள்], பாவாணர் மடல்கள் [யார் யாருக்கு - எத்தகையோர்க்கு - ஆயிரக் கணக்கில் - பாதியளவு புலவர் இரா. இளங்குமரன் ஐயாவால் தொகுக்கப்பெற்று 1.பாவாணர் கடிதங்கள் 2.பாவாணர் மடல்கள் என்றிரண்டு நூல்கள் - முதலாவதில், இருபத்தெட்டுத் தலைப்புகள் - இரண்டாவதில், பத்துத் தலைப்புகள் - இவற்றின் கீழ், பகுதி மடல்கள் மட்டும் - 'பாவாணர் கடிதங்கள்’ என்ற தொகுப்பின் 28ஆம் தலைப்பின்கீழ் [சில கடிதங்கள்] 12 மடல்கள் முழுமையாக, முதல் பதினொன்றும் தி.தெ.சை.சி.நூ.ப. கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ.சுப்பையா அவர்களுக்கும், பன்னிரண்டாம் மடல் [தொகுப்பாளரான / இரா.இளங்குமரன்] தமக்கும் என்றவாறு, முதல் தொகுப்பு, மடல் விளக்கம், பாவாணர் மடல்களில் எழுதிய வகை, வ.சு.வுக்கு எழுதிய மடல்கள் (ஆயிரத்துக்கும் மேற்பட்டவை), அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்கள், முதல் தொகுப்பில் கொடுத்துள்ள மடற்பகுதிகளில் சில, தொண்டின் உறைப்பு, பாவாணர் வீறு, முதல் தாய்மொழியும் ஆங்கில நூலும் (The Primary Classical Language of the World), வேர்ச்சொற் போலிகை (மாதிரி), சொல்லாக்க விளக்கங்கள், பிழையும் திருத்தமும், தனித்தமிழ்க் கழகம் [தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன் 01.09.1964 எழுதப்பெற்றவர் பெயரில்லை] [“உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்றும் யாப்புரவில்லை. தணித்தமிழ்ப் பற்றிருந்தால் போதும்” - 01.08.1964; எழுதப்பெற்றவர் பெயரில்லை], தனித்தமிழ்ப் பெயரீடு [“சாத்தையா என்னும் விளிவடிவைச் ‘சாத்தையன்’ என்று மாற்றுக” - 16.10.1979 தமிழ்க் குடிமகன்], தமிழ்ப் புலவர் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி, உலகத் தமிழ்க் கழகம், அகரமுதலிப் பணி, தொல்காப்பியச் சீர்மை, விளம்பரம் விலக்கல் (“நானும் விளம்பர வெறுப்பினன்” 6.3.’80 கு.பூங்காவனம்), கிழங்கு வகைகள், மனைவி மக்கள், நோய் நொடி நொம்பலம், சிதறிய மணிகள், முத்துமாலை, இரண்டாம் தொகுப்பு (“இலக்கியச் செம்மல் இரா.இளங்குமரனார் ஐயாவே ‘பாவாணர் மடல்கள்’ என்னும் இரண்டாம் நூலையும் தொகுத்திருக்கின்றார்......”), இரண்டாம் தொகுப்பில் உள்ள மடல் பகுதிகள் சில - உடலும் உள்ளதும், அன்பும் நண்பும், அகரமுதலிப் பணி, இரண்டு தொகுப்புகளிலும் பாவாணர் அயற்சொற்களைத் தவிர்த்து எழுதிய சொல்லாட்சிகளுள் சில (Thesis-இடுநூல்; சாதனை - நிலைநாட்டம்; Jet-பின்னுந்தி; மதியம் - உச்சிவேளை, உருமம், நண்பகல்; Fiddle-கின்னரம்; சன்மார்க்க சபை-நன்னெறி யவை; Apple-செம்பேரி; Cooker-அடுவான்; Extremists-முனைவாளர்), இன்னுமுள்ள மடல்கள் (“பாவாணர் பாவலரேற்றுக்கு எழுதிய பன்னூறு மடல்கள்” -பாவலரேறு மறைந்ததை அடுத்து வந்த ‘தென்மொழி’ மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சிறப்பிதழ்/சுவடி:17 ஓலை-6-7 பக்கம் 64-இல்), அரும்பெறலன்பர், ‘சுற்றுக் கவலையும் குச்சிக் கிழங்கும்', திருமண வாழ்த்து (1992 - 11.7.1972 ஆம் நாளிட்ட அஞ்சலட்டையில் வாழ்த்து “மங்கலத் திருவளர் தமிழநம்பி மலர்க்கொடியர் திருமண வாழ்த்து), முடிவாக... ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
தனிநூலாக அச்சில் வரவேண்டிய இவ்விடுகையின் துணைத்தலைப்புகளின் கீழ் வரும் செய்திகள் மேலும் உள் தலைப்புகளின் அடியில் பகுக்கப் பெற்றுள்ளமை கண்டு மலைத்துப் போனேன். புதுச்சேரித் தனித்தமிழ்க் கழக நண்பர்கள் இவ்விணையப் பதிவை அச்சு நூலாக்க விரைவில் ஆவன மேற்கொள்ள வேண்டுகிறேன். ஏனெனில் இப்பதிவு -
1. பாவாணர் கடிதங்கள் (கழகம், 1985) - புலவர் இரா.இளங்குமரன்.
2. பாவாணர் பாடல்களும் மடல்களும் - புலவர் இரா.இளங்குமரன்.
3. தேவநேயப் பாவாணர் (சாகித்ய அகாதெமி 2002) - புலவர் இரா. இளங்குமரன்.
4. பாவாணர் வரலாறு (கழகம் 2000) - புலவர் இரா.இளங்குமரன்.
5. தென்மொழி சுவடி 7: ஓலை 6-7 - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
என்ற ஐந்தன் பிழிவு. சுளைகளுடன் கூடிய சாறு. துணை / உள் தலைப்புகளே சுளைகள் என்பேன்.
No comments:
Post a Comment