6.12.07

¼ என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்
- தேவமைந்தன்

சென்ற எண்பதுகளின் பிற்பாதியில், புதுச்சேரி நீடா ராஜப்பையர் வீதியின் 60ஆம் எண்ணிட்ட தன் இல்லத்துக்கு வந்திருந்த மலர் மன்னன் அவர்களையும் அவர் வெளியிட்டு வந்த ¼ என்ற பெயர்கொண்ட காலாண்டிதழையும் காரை சிசே பிலோமிநாதன் (எ) காரை சிபி அறிமுகம் செய்து வைத்தார். 'தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டிதழ்' என்று அதன் அறிமுகம் ஒற்றை வரியில் அட்டையின் கீழ்ப் பகுதியில் கண்டிருந்தது. அளவு,தெமி கால். ஓர் இதழின் விலை ரூ.15. பக்கங்கள் தொடர் எண் இடப்பட்டிருந்தன. அதாவது 'ஜூலை-செப்டம்பர் 1980 இதழ் 1 முதல் 96 வரை எண்ணிடப்பட்டிருந்தால் அடுத்த அக்டோபர்-டிசம்பர் 1980 இதழின் பக்கம் 97இல் தொடங்கி 196இல் முடியும். இப்படி நான் பார்க்க வாய்த்த நான்காம் ¼ இதழின் கடைசிப் பக்கம் 347ஆவது ஆகும். அது அக்டோபர்-டிசம்பர் 1981 இதழ். "இவ்விதழை முதலாண்டின் கடைசி இதழாக -- நான்காவது இதழாகக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்ட மலர் மன்னன், வாசகருக்காக ஆண்டுச் சந்தாவை முப்பது ரூபாய் குறைத்தும்[அதாவது ரூ.20] தனி இதழைப் பத்து ரூபாய் குறைத்தும்[அதாவது ரூ.5] அறிவித்திருந்தார்.

முதல் இதழே, கே.எம்.ஆதிமூலம் அவர்களின் அட்டைச் சித்திரத்துடன் பரிமளித்தது. கடைசி அட்டையில் அவரைக் குறித்த விவரமும் முகவரியும் இருந்தன. அடுத்து வந்த இதழின் அட்டைச் சித்திரங்களை சி.தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன், கே.பி.சிதம்பர கிருஷ்ணன் முதலானோர் வரைந்திருந்தனர். ந.முத்துசாமியின் 'திருவிழாவும் கூத்தும்'(புரிசை கண்ணப்பத் தம்பிரான் குறித்த விவரம் கொண்டது) என்ற ஆய்வில் தொடங்கி, கோமல் சுவாமிநாதன், ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, சா.கந்தசாமி, என்.ஆர்.என்.சத்யா, செ.ரவீந்திரன்,காரை சிபி, பிரபஞ்சன் முதலானோரின் ஆய்வுரைகள் ¼ இதழைக் கருத்துள்ளோர் கவனிக்க வைத்தன.

காரை சிபி அவர்களின் 'புதுவைத் தமிழர் வாழ்க்கையில் பிரெஞ்சு கலாசாரத் தாக்கம்'[ஜனுவரி *-மார்ச் 1981: பக்.199-223] என்ற ஆய்வு என்னை மிகவும் கவர்ந்தது. ஆய்வின் பொருள் மிகவும் விரிவானது; சிக்கல் மிகுந்தது. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள், சிற்சில ஆண்டுகள் இடைவிட்டு ஒன்றை ஒன்று பிணைந்தும் உறழ்ந்தும் நீடித்த பிரஞ்சுப் பண்பாட்டையும் தமிழ்ப் பண்பாட்டையும் குறித்துத் தெளிவாக ஆராய்ந்திருந்தார். தோராயமாக நாற்பத்தைந்து அடிப்படைத் தரவுகள் தந்திருந்தார். அந்த ஆய்வின் - ஆகவும் முதன்மையான செய்திகளை மட்டும் இங்கே தருகிறேன்.

பாவேந்தர் பாரதிதாசன் பற்றி, "புதுவை மாநிலத்திலிருந்து தமிழுக்குக் கிடைத்த ஒரே படைப்பாளி பாரதிதாசன்தான். அவரும் பிரெஞ்சுக் கலாசாரத்தின் தாக்கம் தம்மீது விழாமல் தம்மை ஒதுக்கிக்கொண்டு(1), தமிழ்நாட்டில் தோன்றிய திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விட்டவரானார். ஓர் இயக்கத்தைப் பரப்பும் பணிக்குத் தமது படைப்பாற்றலைப் பயன்படுத்துவதிலேயே அவர் கவனம் சென்றது... இவருக்கு மட்டிலும் பிரெஞ்சு தர்சனக் கவிஞர்களான பொதலேர், ரைம்போ, போல்வலேரி முதலானோரின் கவிதைகளில் பரிச்சயமும் ஈடுபாடும் ஏற்பட்டிருக்குமானால் இதே நூற்றாண்டில் பாரதிக்குப் பின் இன்னொரு தலைசிறந்த கவியைப் பெறும் வாய்ப்பு தமிழுக்குக் கிட்டியிருக்கும். விடுதலை இயக்கப் பிரசாரத்திற்கு சுப்பிரமணிய பாரதியார் தமது படைப்பாற்றலைப் பயன்படுத்திய போதிலும் கவித்துவத்தைக் காபந்து செய்து கொள்ளும் வித்தை அவருக்குக் கைவரப் பெற்றிருந்தது. பாரதிதாசனோ ஆவேச மிகுதியால் தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்திற்கு புதுவைப் பகுதியின் காணிக்கையாகவே தம்மை ஆக்கிக் கொண்டவர். இதன் விளைவாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பங்கினை வழங்கும் பெருமையினைப் புதுவை இழக்க நேர்ந்தது."(2)

"இவருக்கு மட்டிலும் பிரெஞ்சு தர்சனக் கவிஞர்களான பொதலேர், ரைம்போ, போல்வலேரி முதலானோரின் கவிதைகளில் பரிச்சயமும் ஈடுபாடும் ஏற்பட்டிருக்குமானால் இதே நூற்றாண்டில் பாரதிக்குப் பின் இன்னொரு தலை சிறந்த கவியைப் பெறும் வாய்ப்பு தமிழுக்குக் கிட்டியிருக்கும்" என்ற காரை சிபியின் கருத்தை உடன்படாமல் எதிர்த்தவர்களுள் முதல்வனாக நான் இருந்தேன். தமிழ்நாட்டின் கோயமுத்தூரிலிருந்து புதுவைக்கு வேலைபார்க்க வந்தவன் என்றதால் எனக்கு அந்தக் கருத்தின் ஆழம் தென்படவில்லை என்று அவர் கருதினார். காரை சிபி மறைந்து பல்லாண்டுகள் ஆனபோதும், அவர் கருத்து என் மனத்துள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. 'காலனியாக்கத்தின் தாக்கம்,' புதுச்சேரியின் மக்கள் பலரை இன்றளவும் விடவில்லை.

புதுவைத் தமிழர்கள் என்பவர்கள் யார் என்பதை, "இங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு புதுவையிலும், காரைக்காலிலும் வாழ்ந்துவரும் அனைவரையும் ஒருசௌகரியம் கருதி புதுவைத் தமிழர்கள் என்று எடுத்துக் கொள்வது பொருந்தும்" என்று காரை சிபி வரையறுத்துக் கொண்டார்.(3)
புதுவைவாழ் தமிழ் எழுத்தாளர்களை இவ்வாறு சாடினார் அவர்: "பிரெஞ்சு நாட்டு மொழிபெயர்ப்பாளர்களைப் பின்பற்றி நம்மவர்கள் இந்த மொழிபெயர்ப்பு வேலையே பெரிய இலக்கியப்பணி என்று எண்ணி விட்டனர் போலும்.(4) தமிழகத்தில் ஒரு புதுமைப்பித்தன், ஒரு க.நா.சு. இவர்களைப் போன்ற இன்னும் சிலரை பிரெஞ்சு இலக்கியங்கள் பாதித்த அளவுக்குக் கூட புதுவைவாழ் தமிழ் எழுத்தாளர்களைப் பாதிக்காது போனது துரதிர்ஷ்டமே..... அரவிந்த ஆசிரமவாசிகளா யிருந்த சுத்தானந்த பாரதியும், ப.கோதண்டராமனும் பிரெஞ்சு இலக்கியத் தாக்கத்தால் உந்தப்பட்டவர்கள். பிரபல பிரெஞ்சுக் கவிஞன் விக்தோர் உய்கோவின் 'லெ மிசெராபிள்' என்ற நாவலை 'ஏழை படும் பாடு' என்றும் 'லோம் கிரீ' என்னும் நாவலை 'இளிச்சவாயன்' என்றும் மொழிபெயர்த்திருக்கிறார், சுத்தானந்த பாரதி. இவரது மற்ற படைப்புகளிலும் பிரெஞ்சு இலக்கியத் தாக்கம் உண்டு. இவரைப் போலவே ப.கோதண்டராமன் விக்தோர் உய்கோவின் நாடகமான 'நோத்ருதாம் தெ பரி' என்பதை 'மரகதம்' என்று வெளியிட்டிருக்கிறார்.
ஆசிரமத்தோடு சம்பந்தப்பட்டிருந்த மண்டபம் சீனிவாச சாஸ்திரி, நகைச்சுவை நாடகாசிரியனான மொலியேரின் 'லே ஃபூர்பரி தெ ஸ்காப்பேன்' என்ற நாடகத்தை 'குப்பனின் பித்தலாட்டங்கள்' என்று மொழிபெயர்த்திருக்கிறார்......சுப்பிரமணிய பாரதியார் பிரெஞ்சு தேசியப் பாடலான 'La Marseillaise'ஐ மொழிபெயர்த்திருக்கிறார். மொழியும் இசையும் சிதையாமல் இந்த பிரெஞ்சு தேசிய கீதத்தை சகுந்தலா பாரதி அவர்கள் பாடக் கேட்டிருக்கிறேன். இப்பாடலைத் தம் மகளைப் பாடச் சொல்லிவிட்டு பாரதியார் எழுந்து நின்று மரியாதை செய்வதோடு தம்முடன் இருப்பவரையும் எழுந்து நின்று மரியாதை செய்யும்படிக் கட்டளை இடுவாராம்."(5)

பாரதியாரின் வசன கவிதைகள், வால்ட் விட்மன் படைத்த 'புல்லின் இதழ்க'ளின் தாக்கம் என்று திறனாய்வாளர் குறிப்பது வழக்கம். அதை மறுக்கும் காரை சிபி, பிரெஞ்சுக் கவிஞர் ரைம்போவின் 'இல்லூமினேஷன்ஸ்' என்ற தலைப்பிலான கவிதைகளின் தாக்கம் கொண்டவை மட்டுமல்ல வடிவத்திலும் அவற்றை ஒத்திருக்கின்றன பாரதியின் வசன கவிதைகள் என்றார்.(6)

ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் தினசரி நமக்குக் கிடைத்த வரலாற்றுப் பெட்டகம் மட்டுமன்று; இலக்கியத் துறையில் பிரெஞ்சுப் பண்பாடு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதற்கும் சான்று என்றார் காரை சிபி. "பிரெஞ்சு வர்த்தகக் குழுவினர், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துக் காபந்து செய்து வைப்பதையும், தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதையும் கண்ட பிள்ளையவர்கள், தாமும்" தமக்குத் தெரியவந்த முதன்மையான சேதிகளைக் குறித்து வைக்கும் விழிப்புணர்வு பெற்றார் என்றும் எழுதியுள்ளார்.

தவிர, 'புதுச்சேரியின் முதல் கப்பலோட்டிய தமிழர்' என்ற புகழை ஆனந்தரங்கப் பிள்ளை பெற்றதற்குக் காரணம், பிரெஞ்சுக்காரர்களோடு 'ஆனந்தப் புரவி' என்ற மரக்கலத்தை ஓட்டியதுதான் என்றார்.

பிரெஞ்சுப் பாதிரிமார் தமிழுக்குச் செய்த மிகப் பெரிய தொண்டு, பிரெஞ்சு-தமிழ், தமிழ்-பிரெஞ்சு அகராதி தொகுத்ததுதான்; இது இன்றளவும் பயன்படுகிறது என்றார்.

'இலக்கணக் கண்ணாடி' என்ற நூலில் ஜோசப் தாவீது வாத்தியார் என்ற தமிழறிஞர் பிரெஞ்சு இலக்கண வினையியலில் வரும் பெண்பாற் சொல்லான 'conjugaison' என்ற பகுதியைக் 'கிரியா மாலை' என்றாக்கிச் சேர்த்திருப்பது அக்காலப் பிரெஞ்சுக் கல்வியின் தாக்கம் என்று காரை சிபி எழுதி, மேலும் விளக்கியிருப்பது தமிழ்-பிரெஞ்சு இலக்கணங்களின் தகைமைக்கு அரிய சான்று. நிகழ்வு, நிகழ்வில் நிகழ்வு, நிகழ்வில் எதிர்வு, நிகழ்வில் இறப்பு; இறப்பு, இறப்பில் நிகழ்வு, இறப்பில் எதிர்வு; எதிர்வு, எதிர்வில் எதிர்வு, எதிர்வில் இறப்பு, எதிர்வில் நிகழ்வு ஆகிய காலங்களைத் தமிழில் உள்ள காலங்களுடன் சேர்த்திருக்கிறார் ஜோசப் தாவீது வாத்தியார். இவற்றுள், 'இறப்பில் இறப்பு'க்குச் சான்றாக "நினைத்தேன் வந்தாய்" என்பதைக் குறிப்பிட்டார் காரை சிபி.

ஒரு வியப்புக்குரிய சேதியைக் குறிப்பிட்டார் இவர்.

பிரான்சில் 1789 ஆமாண்டு ஜூலைத் திங்கள் 14ஆம் நாள் நடந்த புரட்சி பற்றிய செய்தி புதுச்சேரிக்கு 22-02-1790 அன்றுதான் தெரிய வந்ததாம். புதுச்சேரித் தமிழர்கள் இதனால் எந்தவகையிலும் தாக்கமெய்தாமல் நாமக்கல் கவிஞர் சொன்னதுபோல் 'கத்தியின்றி, ரத்தமின்றி' பிரெஞ்சுப்புரட்சியின் முழுப்பலன்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள் என்கிறார். பிறகு 1848இல் நடந்த பொதுத் தேர்தலிலும் அடுத்த தேர்தல்களிலும் நடந்த 'விசித்திரங்க'ளை விரிவாகச் சொல்லியிருந்தார்.
அது மட்டுமல்ல, 1882 சட்டம் ஒன்றின்படி 'ரெனோன்சான்'களாக(those who wilfully renounce their citizenship rights and opt for French Citizenship Rights) மாறியவர்களின் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் தந்திரங்களையும் பிரெஞ்சு அரசாங்கம் அதற்கு ஆற்றிய எதிர்வினைகளையும் தெளிவாக விளக்கியிருந்தார்.(7)

புதுச்சேரியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டில் சிறையர்களாகவும் கூலிகளாகவும் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் எப்படி இன்னும் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதைச் சிறப்பாகக் காரை சிபி விளக்கியிருந்தார். அதில் ஒரு பகுதி:
"புதுவைத் தமிழர் கடல் கடந்து சென்ற பின்பும் பிரெஞ்சுக் கலாசாரத்தை மேற்கொண்ட போதிலும் மத நம்பிக்கைகளில் அவர்கள் இந்து மதத்தை இன்றும் பேணிக் காத்து வருகின்றனர். இங்கு நான் குறிப்பிடுவது ரெயூனியன் என்னும் கடல் கடந்த பிரெஞ்சுப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களைப் பற்றி. இன்றும்கூட அவர்கள் தங்களை மலபார்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார்கள். அங்கு கொண்டு செல்லப்பட்ட அத்தனை தமிழர்களும் கிறித்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். இவர்கள் அங்கு சென்று குடியேறிய தம் மூதாதையரின் பெயரைத் தம் குடும்பப் பாரம்பரியப் பெயராக இன்றும் வைத்துக் கொள்கிறார்கள். அதனோடு ஒரு கிறித்தவப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். கிருஷ்ணன், கருப்பன், சுப்பிரமணியன், வீரப்பெருமாள், வீரக்கவுந்தன்(கவுண்டன்), மன்னார் காது(காடு - 'ட' உச்சரிப்பு பிரெஞ்சில் இல்லை). இன்றைக்கும் இவர்கள் இந்து மதச் சடங்குகளை மேற்கொள்ளுகின்றனர். தீமிதி விழாக் கூட நடத்துகின்றனர். தங்கள் பிள்ளைகளை முதலில் தீ மிதிக்கச் செய்கிறார்கள். அதன் பின்னரே கிறித்தவ மத சம்பிரதாயப்படி புது நன்மை ஏற்கச் செய்கிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு 'இதை எங்கள் பெரியோர்கள் செய்தார்கள், நாங்களும் செய்கிறோம்' என்பதைத் தவிர வேறு விளக்கம் சொல்லத் தெரியவில்லை. காலையில் மாதாகோயிலுக்குச் சென்று பூசை கேட்டு நன்மை ஏற்கின்றார்கள்(புனித அப்பம் விழுங்குதல்). மாலையில் நீறுபூத்த அல்லது நாமம் ஏற்ற நெற்றியினராய் மாரியம்மன் கோயிலுக்கோ, முருகன் கோயிலுக்கோ சென்று வழிபடுகின்றனர். இந்த விசித்திரமான மலபார்களைக் கண்ட அந்தத் தீவிலேயே பிறந்த ஒரு வெள்ளைச் சிறுவன் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள முயன்று இருக்கிறான். இவனே பிற்காலத்தில் பிரெஞ்சுக் கவிஞருள் ஒருவனாய் மலர்ந்த 'Le Conte De Listle' என்பவன். இவன் ஆரம்பப் படிப்பை ரெயூனியனில் முடித்துக் கொண்டு மேல்படிப்புக்குப் பாரீசுக்குச் சென்ற போது அங்கு இந்துமத சம்பிரதாயங்களையும் தத்துவங்களையும் பற்றிப் புரிந்து கொண்டான். அதன் பயனாய் இந்து கவிதைகள் Poêms Hindous என்று பல கவிதைகள் எழுதியுள்ளான்."(8)

புதுச்சேரி ஐந்து முற்றுகைகளைச் சந்தித்திருக்கிறது. 1748இல், துய்ப்ளே காலத்தில் நிகழ்ந்த முற்றுகையின் போது துணிச்சலான தமிழர்கள் பலர் நகருக்குள்ளேயே இருந்தனர். அவர்களுள் ஒருவரான ஆனந்தரங்கப் பிள்ளை அந்த நாற்பது நாட்களிலும் கூட, தம் தினப்படி சேதி குறிப்பை விடாது எழுதினார். 1760இல் நிகழ்ந்த முற்றுகையின் பொழுது "யானை கட்டி அரசாண்ட நகரில், மக்கள் பூனைகளையும் நாய்களையும் பெருச்சாளிகளையும் உணவாகக் கொள்ள நேர்ந்தது.(9)

இப்பொழுது உள்ள புதுச்சேரி நகரம் 1763க்குப் பின் நிர்மாணிக்கப் பெற்றது. பிரான்சிலிருந்து வந்த பொறியியல் அறிஞர்கள் அதைச் செய்தனர். கட்டடக் கலையில் பிரெஞ்சுப் பொறியாளர்கள் வல்லவர்கள் என்பதால்தான், பிற்காலத்தில், சண்டிகர் நகரை உருவாக்கும் பொறுப்பை 'கொர்புய்சியே' என்ற பிரெஞ்சுக் கட்டடக் கலைஞரிடம் ஜவஹர்லால் நேரு ஒப்படைத்தார்.

இன்றுங்கூட, புதுவையில் வெண்சுதை தீட்டப்பெற்ற நீண்ட தூண்களைக் கொண்ட ரோமன் ஆர்ட் கட்டடங்களைக் காணலாம். அவைகளின் கம்பீரமே தனி. சுண்ணாம்புக் கலவையை அம்மியில் வைத்து விழுதுபோல் அரைத்து, அதனுடன் கோழிமுட்டை வெண்கருவைச் சேர்த்துக் குழைத்து தூண்களுக்கும் சுவர்களுக்கும் சலவைக்கல் போன்ற பளபளப்பேற்றிய அந்தக் கலை, சிமெண்ட் யுகமான இக்காலத்தில் மறைந்தே போயிற்று. கோத்திக் கலையைப் பறைசாற்றும் புதுவை இருதய ஆண்டவர் கோயில் போல் ஒன்றை இன்று கட்டவே முடியாது. ஷார்ல் தெகோல் பூங்காவில் நடுநாயகமாக அமைந்து விளங்கும் நினைவாலயம், பிரெஞ்சுக்காரர் கட்டடக் கலையின் சின்னமாய் இன்றும் விளங்குகிறது. அதன் தூண்கள் கோரிந்தியேன் கலைச்சாயல் கொண்டவை.

கட்டடங்களில் மட்டுமல்ல; வீடுகளில் உள்ள பொருட்களும் அத்தகையவை. பதினான்காம் லூயி, நெப்போலியன் காலத்துக் கலைச்சாயல் கொண்ட கட்டில்கள், நிலைப்பேழைகள், மேசைகள், நாற்காலிகள், கடிகார ஸ்டாண்டுகள் முதலியவற்றை இன்றும் பல வீடுகளில் காணலாம். இவற்றை மாதிரியாகக் கொண்டு, புதுவையில் தச்சுப்பொருட்கள் செய்பவர்கள் இன்றளவும் உள்ளனர். பிரான்சில் பதினான்காம் லூயி காலத்தில் செய்த சுவர் அணைவு மேசையை முன்மாதிரியாகக் கொண்டு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 'அக்காழு' என்ற செம்மரவகையால் சிற்றுளி வேலை நிறைந்ததாகப் புதுச்சேரித் தச்சர்கள் செய்ததும் நூறு வயதானதுமான 'கொன்சோல்' மேசையின் படத்தைக் காரை சிபி கொடுக்க, மலர் மன்னன் தன் ¼ இதழில் வெளியிட்டுள்ளார்.(10) இந்தக் 'கொன்சோல்' சுவரணைவு மேசை, ஆங்கிலத்தில் 'pier-table' என்று கூறப்படுகிறது என்ற குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, பிரெஞ்சுச் சமையற்கலையின் தாக்கத்திற்குள்ளாகிய புதுச்சேரித் தமிழர் உணவு வகைகளான க்ரேம், கத்தோ, சல்மி, ஃபர்சி, ரொத்தி, புவாசோன் அலா மய்யோனேஜ், பிழோன் ஓ பெத்தி புவா, ரகு முதலானவற்றின் செய்முறைகளைக் கூட காரை சிபி தன் ஆய்வில் தந்துள்ளார்.(11) அவற்றுள், 'க்ரேம்' செய்முறையைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.

க்ரேம்: பால், முட்டை, சீனி மூன்றையும் சேர்த்து நுரையாக அடித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கும் வெண்ணெய்ப்புட்டு போன்ற பலகாரம். விருந்தின் முடிவில்தான் இதைப் பரிமாறுவார்கள். நிறச்சேர்க்கைக்காகச் சாக்லெட் அல்லது சீனிக்கறுக்கைப் பயன்படுத்துவார்கள்.

இந்த ஆய்வில் சுவையான இன்னொரு தகவல்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் படையின்முன் விரைவிலேயே பிரான்சு வீழ்ந்தது. பெத்தேன் அரசு, 'Vichy'யைத் தலைநகராகக் கொண்டு, ஜெர்மானியரின் அங்கீகாரத்துடன் ஆட்சி புரிந்தது. தளபதி தெகோல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து அவர் செய்த சங்கநாதம் -- "பிரான்சு அங்கில்லை.. இங்கே என்னுருவில்தான் இருக்கிறாள். பிரான்சு இங்கே போராடிக்கொண்டிருக்கிறாள்!" என்பதாகும். அதன்பின் சிரியாவுக்கு வந்திருந்துகொண்ட தெகோல் புதியதொரு படையை உருவாக்கினார். அதில் சேர விரும்பும் வயதுவந்த புதுவைவாழ் மக்கள் அனைவருக்கும் இராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார். போருக்குப் போய்த் திரும்பினால் நல்ல 'பென்ஷன்' கிடைக்குமென்று கண்ட இளைஞர்கள் பலர் "தெகோ"லுக்குப் போயினர். அப்பொழுதெல்லாம் போருக்குப் போவது என்பதும் 'தெகோ'லுக்குப் போவதென்பதும் ஒன்றுதான். புதுச்சேரியில் கை ரிக் ஷா இழுத்துக்கொண்டிருந்த தொழிலாளர் பலர் தெகோலுக்குப் போனார்கள். போர் முடிந்து அவர்கள் பென்ஷனோடு திரும்பியதும் அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் தென்பட்டன. "அவனுக்கென்ன! தெகோல் காசு கொழிக்கிறது.." என்று சொல்லுவது பழக்கத்தில் வந்தது. சக ரிக் ஷாத் தொழிலாளர்கள் நாட்டுப் பாடல் ஒன்றும் மேட்டுக்கு மேடு பாடுவார்கள். அது:

"அப்போ அரைப் பணத்து மையக்கிழங்கு தெகோலு!
இப்போ ஆறுபணம் வவ்வா மீனு தெகோலு!"

-அப்போது ரூபாய்க்கு 8 பணம் - ½ பணத்துக்கு மையக் கிழங்கில்(12) நாளை ஓட்டியவருக்கு இப்போது மீன் மட்டிலும் 6 பணத்துக்கு வாங்க முடிந்தது.

புதுச்சேரித் தமிழர் பெறும் பிரெஞ்சு 'பிரவே' தமிழ் 'பிரவே' கல்வி முதலாக இன்னும் பல சுவையான சேதிகள் காரை சிபியின் ஆய்வில் உள்ள பொழுதும், புதுச்சேரியில் இன்றும் இயல்பாகப் புழங்கும் பிரெஞ்சுமொழிச் சொற்களையும் திருவிழாப் பெயர்களையும் பார்த்துவிட்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்வோம்.(13)

புதுவைத் தமிழுக்கு வந்த பிரெஞ்சுச் சொற்கள்:

போன்ழூர்(bonjour) -- காலை வணக்கம்
போன்சுவார்(bonsoir) -- மாலை வணக்கம்
போனன்னே(bonne année) -- இனிய புத்தாண்டு!
போனப்பெத்தி(bon appétit) -- விருந்துபசாரத்துக்குச் சொல்லும் வாழ்த்து
ஓரெவுஆர்/'ஒவ்வார்'(au revoir)-- போய் வருகிறேன்("வர்றேன்"/Bye!)
மெர்சி(merci) -- நன்றி [மெர்சி பொக்கூ/Merci beaucoup - மிக்க நன்றி]
பர்தோ(ன்)(pardon) -- மன்னிக்கவும்
கம்ராத்(camarade) -- தோழர்/நண்பர்
குய்சின்/க்யுசின்(cuisine) -- சமையற்கட்டு
பொத்தான்(bouton) -- சட்டைப் பித்தான்
பூதர் மாவு/பூதுரு மாவு(poudre) -- முகச்சுண்ணம்(Face Powder)
முசியே(monsieur) -- ஐயா/திருவாளர்
மலாத்(malade) -- நோயாளி
கான்(canne) -- கைத்தடி; நீர்க்குழாய் கைத்தடி போல வளைந்திருப்பதால் 'தண்ணீர்க்கான்' ("போயி கான்'ல தண்ணி புடிச்சு வா!...")

பிரெஞ்சுக்குப் போன தமிழ்ச் சொற்களில், சில:

பந்தல், கட்டுமரம், பண்ணையாள், நெல்லி(நெல்-புதுவை உச்சரிப்பில்), அடமானம், மனை, மனைமாப்பு, மானியம், தேவஸ்தானம், தோட்டி, தலையாரி, கொம்புக்காரன், தோட்டக்காரன், சிப்பந்தி, நெல்வகைகளான சிறுமணியம், கார், கல்லுண்டை, தில்லைநாயகம் - இப்படிப் பற்பல; மரவகைகளான மாங்கியே(மாமரம்), முராங்கியே(முருங்கை மரம்), கொய்யாவியே(கொய்யா மரம்) போன்ற பற்பல. "கூர்ந்து கவனிக்கும்பொழுது அலுவலக நிர்வாக வசதி கருதியே தமிழ்ச் சொற்கள் பிரெஞ்சு மொழியில் கையாளப்பட்டிருக்கின்றன என்று புலப்படும்" என்றார் காரை சிபி.(14)

பிரஞ்சுக்காரர் தாக்கத்தால் புதுச்சேரி மக்களிடையே தோன்றிய நல்ல பழக்கங்கள், சில:

* யாரைச் சந்தித்தாலும் முதலில் கைகுலுக்கி போன்ழூர் சொல்லி நலம் கேட்ட பின்னால்தான், மற்றவற்றைப் பேசுவார்கள். தொலைபேசியில் பேசத் தொடங்கும்பொழுதும் போன்ழூர் சொல்லியே தொடங்குவார்கள். போன்ழூர் சொல்லாவிட்டாலும், "நல்லா இருக்கீங்களா!" என்று கேட்டுவிட்டே மற்றவற்றைப் பேசத் தொடங்குவார்கள்.(15) பிரெஞ்சுப் பாதிப்பில்லாமல் வாழும் புதுவைத் தமிழர்கள், ஒருநாளில் மற்றவர்களை எங்கே கண்டாலும், வழியில் சந்தித்தாலும் - "வாங்க!" என்று சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றைக் கவனிப்பார்கள்.

** விடைபெறும்பொழுது, நன்மைப் பொருள் தரும் சொற்களைச் சொல்லித்தான் விடைபெறுவார்கள்.

*** அரசூழியர்களிடையே இன்றுள்ள 'பேதம்' அன்றில்லை. கடைநிலை ஊழியரானாலும் மேல்நிலைத் தலைவர்களானாலும் எல்லோரும் சமமே. இப்பொழுதும்கூட 'இந்தியவியல் குறித்த பிரெஞ்சு ஆய்வுக் கழகம்' (Institut Française d' Indologie), 'அல்லியான்ஸ் ஃப்ரான்சேய்ஸ்' (Alliance Française) ஆகிய அமைப்புகளில் பணிபுரிபவர் எந்நிலையில் உள்ளவராயினும் அவற்றின் இயக்குநர் போன்று மேல்நிலையில் உள்ளோர் - 'போன்ழூர் முசியே!' என்று மரியாதை கொடுத்த பின்பு தான் பிறவற்றைப் பேசுவார்கள்.

பிரெஞ்சு-தமிழ்ப் பண்பாடு இரண்டும் சேருமிடம்:

புதுவை மாநிலத்தில் மஞ்சளை முகத்தில் பூசிக்கொண்டு உதட்டுக்கும் சாயம் பூசிக் கொள்ளும் கிறித்தவ# மகளிர் உள்ளனர்.

கிறித்தவர்# கொண்டாடும் பெரும்பாலான விழாக்கள் இந்துக்கள் விழாக்களின் மறுபதிப்பாகவே கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் = தீபாவளி; ஏப்பிஃபானி = பொங்கல்; ரெவெய்யோன் = சிவராத்திரி; ரெவெய்யோன் - இயேசு பிறந்த திசம்பர் 24 இரவு விடிய விடியக் கண்விழித்து ஆடிப்பாடி, குடித்து கும்மாளமிட்டு கிறித்தவர்# சிலர் கொண்டாடும் விழா. இந்த மார்கழி மாதத்தில் பஜனையும் நடத்துகிறார்கள்.(ப.217)

********
புதுச்சேரி வரலாற்றில் புதுவைத் தமிழர் உற்ற பிரெஞ்சுப் பண்பாட்டின் தாக்கம் குறித்த தரவுகள் பலவற்றைத் திரட்டி அரியதோர் ஆய்வாக்கிய காரை சிபியை ஒரு கணம் நெஞ்சு கனக்க நினைக்கிறேன்.
அந்த ஆய்வைத் தன் ¼ இதழில் செறிவாக வெளியிட்டவரும் இன்று நம் 'திண்ணை'யில் உடனிருப்பவருமான மலர் மன்னன் அவர்களைப் புதுச்சேரி வரலாற்றாய்வாளர் சார்பாகப் பாராட்டுகிறேன்.

**
அடிக் குறிப்புகள்:

# இந்தக் கட்டுரையில் கிறித்தவர் என்று எங்கே வந்தாலும் அது கத்தோலிக்க கிறித்தவரையே குறிக்கும்.
* இதழின் அட்டையிலும், உட்பக்கங்களிலும் கண்டுள்ளபடி 'ஜனுவரி' என்றே தட்டெழுதியுள்ளேன்.
(1) காரை சிபியின் ஆய்வு, 1981 தொடக்கத்தில் எழுதப்பட்டது என்பதால் இவ்வாறு வருகிறது. "தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் தெரிந்து கொள்ள விரும்பாதவராகவே இருந்திருக்கிறார் பாரதிதாசன். இதை ஒரு பெருமையாகக் கூறிக் கொள்வார் அவர். 'வேறு மொழி தெரியாது போனது ஒரு நன்மையே. இல்லையென்றால் அதிலே இருந்து காப்பி இதிலேயிருந்து காப்பி என்று சொல்லுவான்கள்" என்று அவர் கூறக் கேட்டிருக்கிறேன்." - காரை சிபி. ப.207.
(2) ¼ ஜனுவரி-மார்ச் 1981. ப.218
(3) மேலது, ப.199.
(4) "பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் பலர் தமிழ் கற்றதில்லை. தமிழில் பெரும் புலவராய் இருந்தோர் பிரெஞ்சு மொழியை நாடியதில்லை. இந்த இரு மொழியிலும் போதிய ஞானம் பெற்றோர் படைப்பிலக்கியவாதிகளாய்த் திகழவில்லை. பெரும்பாலோர், மொழி பெயர்ப்பாளர்களாகவே இருந்து விட்டனர்." மேலது, ப.205.
(5) ¼ ஜனுவரி-மார்ச் 1981. பக்.207, 222.
(6) மேலது, ப.207.
(7) மேலது, பக்.209-210.
(8) மேலது, ப.211.
(9) Gaeblé, Y.R., Histoire de Pondichèry, Pg. 61.
(10) ¼ ஜனுவரி-மார்ச் 1981. ப.215.
(11) இந்த பிரெஞ்சு உணவு வகைகளை இன்றும் புதுச்சேரி நகரில் 'போனப்பெத்தி'(Bon Appétit) போன்றுள்ள உணவகங்களில் உண்டு மகிழலாம்.
(12) மரவள்ளிக் கிழங்கு; manioc என்ற பிரெஞ்சுச் சொல்லின் திரிபு.
(13) ¼ இதழில் வெளியான காரை சிபி அவர்களின் ஆய்வின் அச்சில் பிழைபட்டுள்ள பிரெஞ்சு மொழிச் சொற்களை மட்டும் இக்கட்டுரையில் திருத்தியிருக்கிறேன் - கட்டுரையாளர்.
(14) ¼ ஜனுவரி-மார்ச் 1981. ப.217.
(15) டாக்டர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், பிரெஞ்சுமொழி பேசுபவர்களுக்குப் பேச்சுத்தமிழ் கற்றுக் கொடுக்க உருவாக்கியுள்ள கையேடு+ஒலி நாடாவில் 'நெல்லாருக்கீங்களா?' என்ற புதுச்சேரித் தமிழர் பேச்சு வடிவத்தையே பயன்படுத்தியுள்ளார்.

****
திண்ணை.காம்

2.12.07

தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
-தேவமைந்தன்

தமிழ்மாமணி மு.இறைவிழியனார், 'நற்றமிழ்' என்னும் இலக்கிய இலக்கணத் திங்களிதழை நிறுவியவர். இன்னும் தொடர்ந்து அது நடந்து வருகிறது.* அவர் தமிழுக்குப் பல தளங்களிலும் தொண்டு புரிந்தவர். ஒரு முறை என் இல்லத்துக்கு அவர் வந்தபொழுது என்னிடம், வீட்டு நூலகத்தில் உள்ள அகராதிகளைப் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டு அரசின் நிறுவனமான தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்1985இல் வெளியிட்டதும் அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தொகுத்ததுமான 'தமிழ்-தமிழ் அகரமுதலி''யை குறித்துப் பாராட்டிச் சொன்னார். அதை வாங்கிப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். "மற்ற தமிழ் அகராதிகள் போல் அது இருக்காது; "அரசு வெளியீடுதானே, எப்படியிருக்கும் என்று தெரியாதா!" என்று அலட்சியப் படுத்தாதீர்கள். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த வரலாறு முழுவதையும் முகவுரை என்ற தலைப்பில் கொடுத்துவிட்டார் தொகுப்பாசிரியர். போதாதற்கு, மொழிக்கு முதலில் வரும் தமிழ் எழுத்துகள் 105ஐயும் வகைப்படுத்தியுள்ளார்.(1) சொல்லுக்கு முதலாக வரும் 105 எழுத்துகளின் வரிசைமுறையில் அகராதிச் சொற்கள் இடம் பெற்றாலும் ஒரு சொல்லில் பின்வரும் எழுத்துகளிலும் அகரவரிசை முறையைக் கொண்டு முறைப்படுத்துதல் என்பதில் - சதுரகராதி முதல் 19ஆம் நூற்றாண்டு முடிய வந்த அகராதிகளுக்கும் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளை ஆக்கிய தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி என்னும் பேரகராதிக்கும் ஏற்பட்ட வேறுபாட்டையும் விளக்கி இருக்கிறார். அவையெல்லாம் போகத் தமிழில் அதுவரை உருவான எல்லா நிகண்டு நூல்களையும் அகராதிகளையும் கால அடைவில்(chronological order) தந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பயன்படுத்திவரும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் இனம்பிரித்து உரிய பொருளைத் தந்திருக்கிறார். வடமொழி எழுத்துகளைப் பயன்படுத்தாமலேயே இதைச் சாதித்திருக்கிறார்"(2) என்று விளக்கமாகச் சொன்னார்.

அடுத்த நாள் முதலாக, நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் அந்த அகராதியை விலைக்கு வாங்கத் தேடினேன். எங்கும் அது கிடைக்கவில்லை. அதை வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கே போய்க் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் சென்னை அண்ணாசாலையில் உள்ள புத்தக நிலையமொன்றில் இருந்த ஒரே ஒரு புத்தகம் கிடைத்தது. டெமி 1/4 அளவில் 1048 பக்கங்கள். விலை நூறு ரூபா மட்டுமே. அதே விலைக்கு அவர்கள் கொடுத்தது இன்னும் வியப்பு. 'தருமமிகு சென்னை' என்று வள்ளலார் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி ஓரு தமிழகராதி அரசு நிறுவனமொன்றில் வெளியான பத்து ஆண்டுகளில் விற்றுத் தீர்ந்ததுதான். சரி, அகராதிக்குள் போகலாம்.

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட இந்தத் 'தமிழ்-தமிழ் அகரமுதலி''யில் 64,048 சொற்கள் இடம்பெற்றுள்ளன. எழுத்து வருக்க அடிப்படையிலும் சொல்தொகை தரப்பட்டுள்ளது. 'க' எழுத்து வருக்கத்தில் மட்டும் 10,749 சொற்கள். சொற்களின் அகரவரிசையில் நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை உருவாக்கிய முறையான 'இரண்டாம் எழுத்தில் மெய் முன்னாக உயிர்மெய் பின்னாக வரும் முறைமையே' தழுவப்பட்டுள்ளது. 1732இல் வீரமாமுனிவர் என்றழைக்கப்பெற்ற பெஸ்கி பாதிரியார் தொகுத்து முறைப்படுத்திய சதுரகராதி(முழுவதுமாக அச்சில் வந்தது 1824இல்தான்) முதல் 19ஆம் நூற்றாண்டில் வந்த அகராதிகள் எல்லாம் உயிர்மெய்யை முதலில் கொண்டு மெய்யைக் கடைசியில் அமைத்து வந்தன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் இந்த அகராதியில், இரண்டாம் எழுத்து மட்டுமல்லாமல் அதற்குப்பின் தொடரும் எழுத்துகளிலும் மூன்று, நான்கு, ஐந்தாம் எழுத்துவரையிலுங்கூட அகரவரிசைமுறையில் சொற்கள் அடுக்கப்பெற்றுள்ளன.

அகரவரிசை தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது என்பதற்கு 'எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் முப்பஃது என்ப" என்ற நூற்பா சான்று. அகராதிக்கு அடிப்படையான அகரவரிசைப்படுத்தல் என்னும் முறைமையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் அப்பரே. தான் இயற்றிய 'சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை'யில்[தேவாரம் 5: பதிகம் 211] முதன்முதலாக அப்பர் - அகரவரிசைப்படிப் பாடினார். அடுத்து, சிதம்பரம் இரேவணசித்தர் அகராதி என்ற சொல்லை இன்றைய நிலையில் பயன்படுத்தி 1594இல் தாம் இயற்றிய நிகண்டுக்கு 'அகராதி நிகண்டு' என்ற பெயர் சூட்டினார். சொற்பொருள் உணர்த்தும் நூலுக்கு முதன்முதலில் அகராதி என்ற பெயர் தந்தவர் வீரமாமுனிவர் என்றழைக்கப்பெற்ற பெஸ்கி பாதிரியாரே ஆவார்.

***
"தமிழர்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் பயன்படுத்திவரும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் இனம்பிரித்து உரிய பொருளைத் தந்திருக்கிறார் மு.சண்முகம் பிள்ளை" என்று தமிழ்மாமணி மு. இறைவிழியனார் மொழிந்ததற்குச் சான்றுகள் மிகப்பல. ஆனால் இட அளவு மிகாமல், அத்தகைய சொல் மயக்கங்களில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம். ஐரோப்பிய மொழிகளில் சொல்லப்படும் 'நண்பர்களைப்போல் நடிப்பவர்கள்'/'False Friends'( The English word 'sensible' and the French word 'sensible' are false friends)-கிட்டத்தட்ட இவைபோன்றவையே. மனிதர்களில் மட்டுமல்லாமல், மனிதர்களால் உருவாக்கப்படும் சொற்களில்கூட இந்த நிலை.

***

'ஆவலாதி' - நண்பர் ஒருவர் தன் நண்பரைப்பற்றி, "நூற்றுக் கணக்கில் நூல்கள் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆவலாதியாக அவர் இருக்கிறார்!" என்றார். அவர், 'ஆவலாதி'' என்ற சொல்லை 'ஆசைமிகுந்து'(desirous of) என்ற பொருளில் கையாளுகிறார் என்பது தெரிகிறது. 'ஆவலாதி' என்பதற்கு, "குறைகூறுகை; அவதூறு" என்று பொருள். 'ஆவலாதிக்காரன்' என்பதற்குப் "போக்கிரி; குறைகூறுவோன்; முறையிடுவோன்" என்று பொருள். 'ஆர்வலர்' என்பதில் உள்ள 'ர்' போனால் 'காதலர்/கணவர்' என்றாகிவிடும்.

ஆவலி எனப்படும் ஆவளி என்றால் வரிசை. தீப ஆவளி = ஒளிவிளக்கு வரிசை. ஊடகங்களில் தீபாவளியன்று - 'தீபஒளி' தீபாவளி ஆயிற்று என்றார்கள். அப்படி, இருமொழிகளிலும் ஆகாது. 'தீப ஆவளி' என்பது தமிழர்களின், வியாபாரிகளின் 'பட்டாசுக் கலாச்சாரம்' வருமுன் இருந்த நல்ல நிலை.

'தனி ஆவர்த்தனம்' என்று இசைக் கச்சேரிகளில் சொல்லலாம். வாழ்க்கையில் சொல்லக் கூடாது. "அவர் எங்களோடெல்லாம் சேர மாட்டார்; தனி ஆவர்த்தனம்தான்!" என்றால் தவறான பொருள் வரும். ஆவர்த்தனம் = மறுமணம். 'ஆவர்த்தித்தல்' என்றால் மறுமணம் செய்து கொள்ளுதல்.

'ஆலய விஞ்ஞானம்' என்றால் "சாகும் வரை நிற்கும் உணர்ச்சி " என்று பொருள். யானைகள் தங்கும் கூடத்துக்குப் பெயரும் 'ஆலயம்'தான்.

'உதாசீனம்' என்பதற்கு "விருப்பு வெறுப்பில்லா நடுநிலை" என்று பொருள். 'உதாசீனன்' என்பவன், "விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாய் இருப்பவன்; இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையவன்" ஆவான். 'உதாசனித்தல்' = இகழ்தல்; நிந்தித்தல். உதாத்தன்=வள்ளல்.

'அகராதிபடித்தவன்' என்ற சொல், 'Philistine' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற மொழியாக்கம். 'அகராதிபுடிச்சவன்' என்பார்கள் நாட்டுப்புறத்தார்.

'பரபாகம்' என்பது பிறர் சமைத்த உணவு. 'நிறக்கூட்டு'ம் ஆகும்.

'தீர்க்கவைரம்' = நெடுநாளைய பகைமை.
'தீர்க்கசுமங்கிலி' =சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள்;தேவரடியாள்.

'துக்கர்' - காசநோயாளிகள். துக்கி - துயரமுடையோன்(ள்).

'அஸ்திரம்' என்ற சொல்லைப் பொதிகைத் தொலைக்காட்சியில் பலமுறை பயன்படுத்திப் பேசினார் மருத்துவர் ஒருவர். அதுவும், மனநலம் தொடர்பாக... அதற்குப் பொருள் 'அம்பு' மட்டுமல்ல; 'நிலையற்றது' 'கைவிடும் படை' 'கழுதை' 'குதிரை' 'கடுக்காய்ப்பூ' 'மலை' ஆகியவையும் பொருள்களே. இதற்கு இன்னொரு வடசொல்லும் சான்று. 'அத்திரசத்திரம்' = கைவிடும் படையும் கைவிடாப்படையும்; அம்பும் வாளும். பிரான்சு அதிபர் தெ கால்(De Gaulle) சொன்னார்: "கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய பணியிலிருப்பவர்கள், ஒரு சொல்லைச் சொல்லும்போது அதற்கு வேறு பொருள்களும் இருக்கின்றனவா என்று யோசித்துப் பேசுங்கள்; கூடுமானவரை ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே உள்ளவாறு பார்த்துக்கொண்டு அறிக்கை(notice - பிரெஞ்சில் இது பெண்பாற்சொல்) கொடுங்கள்!"(3)

அபிதா=ஆபத்தில் முறையிட்டுக் கூறும்/கூவும் சொல்.
அபி= அதட்டல், கண்டித்தல், கேள்வி, ஐயம், அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் வடமொழி முன்னொட்டு(Sanskrit prefix)
அபிமானபுத்திரன்= வளர்ப்பு மகன்; வைப்பாட்டி மகன். 'beloved son' என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு "அவன்தான் என் அபிமான புத்திரன்!" என்று சொல்பவர்களையும் "அவ'தான் என் pet"(விலங்குகளுக்குத்தான் அது பொருந்தும்) என்று மெச்சுபவர்களையும் சந்திக்கிறோம். 'Teacher's pet' என்று பேச்சுவழக்கில் சொல்கிறார்கள் - 'apple of your eye' 'blue-eyed boy/girl என்பது போல... ஆனால் அப்படி எழுதக்கூடாதாம்.

'அத்தங்கார்' அத்தை மகளை மட்டுமே குறிக்கும். 'அத்திம்பேர்' அத்தை கணவனைத்தான் முதலாவதாகக் குறிக்கும். அடுத்ததாகத்தான் தமக்கை கணவனைக் குறிக்கும். 'அதிட்டம்'(அதிர்ஷ்டம்) நற்பேற்றை மட்டுமல்லாமல் - பார்க்கப்படாதது, மிளகு முதலிய பொருள்களையும் குறிக்கும்.

'எதாசக்தி' - தன் வலிமைக்குத் தக்கபடி, கூடியவரை, இயன்றவரை என்பனவற்றை மட்டுமே குறிக்கும். 'எதிருத்தரம்' மறுமொழியை மட்டுமே குறிக்கும். 'யதார்த்தவாதி''=உண்மையுரைப்போன். 'எதேச்சையா இந்தப் பக்கம் வந்தேன்!' என்பார்கள். அது 'யதேச்சை.' தற்செயல், தற்செயலாக என்ற பொருள் அதற்கில்லை. மிகுதியாக, விருப்பத்தின்படி என்பவையே பொருள். "உருளைக்கிழங்குக் கறி கொஞ்சம் யதேச்சையா(அதிகமாக) போடுங்க!' 'நீங்க அழைக்காட்டியும் நானே யதேச்சையாய்(விரும்பி) வந்தேன்" என்றுதான் சொல்ல வேண்டும்.

'கட்கம்' - கக்கம்/அக்குளை மட்டுமல்லாமல் காண்டாமிருகத்தின் கொம்பையும் குறிக்கும். 'பட்சி,' பறவையை மட்டும் அல்லாமல் குதிரை யையும் குறிக்கும். 'துமிலன்' என்றால் பேராரவாரம் செய்பவன் என்று பொருள். 'செளக்கியம்' என்பதற்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மலங்கழித்தல் என்றும் பொருள். சமஸ்கிருத அறிஞர் ஒருவர், "செளக்கியமா என்று கேட்காதே! க்ஷேமமா என்று கேள்!" என்று ஆய்வாளர் ஒருவரிடம் கூறியதை பிரெஞ்சு இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தில் கேட்டிருக்கிறேன். "நலமா?" என்ற பொருள் "செளகரியமா?" என்பதற்குத்தான் பொருந்தும்.

'செளந்தரியம்' அழகு. 'செளந்தரீகம்'தான் பேரழகு. 'செளந்தரி' என்பது உமையம்மை(பார்வதி)யைக் குறிக்கும். (செளந்தரன்=சிவன்)

'சந்தியாராகம்' = செவ்வானம். சந்தியா = மல்லிகை. நிஷா = இரவு. உஷா, உஷை, உஷத்காலம் = வைகறை; சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம்

நிகப்பிரபா = இருட்டு. பாமரன் = அறிவிலாதவன்; இழிந்தவன். பாமினி = பெண். பிரபா = ஒளி; தண்ணீர்ப்பந்தல்; திருவாசி; துர்க்கை.

பிதாமகன் = தந்தையைப் பெற்ற பாட்டன்.
பிதாமகி = தந்தையைப் பெற்ற பாட்டி
பிரபிதாமகன் = கொள்ளுப்பாட்டன்
பிரபிதாமகி = கொள்ளுப்பாட்டி

புத்தி = அறிவு; இயற்கையுணர்வு; ஆராய்ந்து செய்யும் கரணம்; போதனை; வழிவகை; கழுவாய்; உரிமை; கோளின் நடை.

பூர்வம் = ஆதி; பழைமை; முதன்மை; முற்காலம்; கிழக்கு; சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று; முன்னிட்டு.
பூர்வஞானம் என்றால், பிறப்புத் தோறும் வரும் ஒரு துறை அறிவு(இசைஞானம் போல) என்று நினைத்துக்கொண்டு பலர் பேசுகிறார்கள். உண்மையில் அது முற்பிறப்புணர்ச்சியை மட்டுமே குறிக்கும். 'புத்திபூர்வம்' என்றால் 'அறிவை முதன்மையாகக் கொண்டு' என்றும், 'பிரத்தியட்ச பிரமாணம்' என்றால் அளவைகள் ஆறினுள் காட்சியளவையை ஆதாரமாகக் கொண்டு' என்றும் பொருள். பழங்கால வழக்காடு முறையிலும் தீர்ப்புக் கூறும் முறையிலும் இந்த அளவைகளே சாட்சி (evidence)அடிப்படைகளாகக் கொள்ளப்பெற்றன.

மலையாளத்தில் இப்பொழுதும் உள்ள 'பிராந்தன்' என்ற சொல், தமிழில் முன்பு வழங்கியது. 'அறிவு மயங்கியவன்' என்று பொருள். 'பிராந்தகன்' 'பிராந்து' என்றும்கூட, அறிவு மயங்கியவனைக் குறித்துச் சொன்னார்கள். அதே பொழுது, 'பிராந்திஞானம்' என்றால் திரிபுணர்ச்சி/ஒன்றை மற்றொன்றாக உணரும் அறிவு என்ற பொருள் வழங்கியிருக்கிறது.

யவனிகா(யெளவனிகை) = 16 வயது தொடங்கி 50 வயதுக்குட்பட்டவள். சசி = முயற்கறை உடைய சந்திரன்; இந்திராணி; கற்பூரம்; இந்துப்பு; கடல்; மழை.

'சந்தோஷம்' என்பதற்கு இனாம் என்ற பொருளும் உண்டு.

'தாரதம்மியம்' என்பதற்கு ஏற்றத்தாழ்வு என்ற பொருள் மட்டுமே.

சிரமம் = களைப்பு; உழைப்பு; படைக்கலப் பயிற்சி.

அபிராமி = அழகுள்ளவள்; பார்வதி.

'ரமணன்' = கணவன்; தலைவன்;மன்மதன்.
'ரமா' =திருமகள்;இன்பம் தருபவள்.

சூனியம்(சூன்யம்) = இன்மை; பூச்சியம்; வறிதாயிருக்கை; பயனற்றது; மாயை; இறப்பை விளைக்கச் செய்யும் கலை; சூனியப்பொருள்; தூய்மையின்மை.

'சபாஷ்' என்பதை வியப்பிடைச் சொல் என்று கூறுகிறார்.

'வந்தனம்' என்பதற்கு வணக்கம் என்ற பொருள் மட்டுமல்ல; முகம் என்றும் பொருள். நன்றி கூறும் மரியாதைச் சொல்லுமாகும். பணிவு என்றும் பொருள்.

'பிரமாதம்' என்ற சொல் பலராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது. பிரமாதம் என்றால் தவறு/அபாயம்/அளவில்மிக்கது/விழிப்பின்மை என்று பொருள். 'அபிமானம்' போன்றே 'பிரமாத'மும் பலரால் இன்றளவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அகராதியில் இயற்கை மருத்துவ நுட்பம் சார்ந்த வடசொற்கள் பல உள்ளன.அவற்றுள் ஒன்று: அபானம். 'அபானம்' என்ற சொல் முதலில் கடுக்காய் மரத்தைக் குறித்துப் பிறகு மலவாயைக் குறிக்கிறது. பின்னதன் தொடர்பான சிக்கலுக்கு அருமையான இயற்கை மூலிகை கடுக்காய். கடுக்காயை நேர்நிறுத்தித் தட்டி உடைத்து, கொட்டை நீக்கி, தோலை மட்டும் ஒரு குவளை தூயநீரில் இரவு ஊறவைத்து காலை 'வெள்ளென' எழுபவர்கள், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், இந்தச் சொல்லின் அருமை தெரியும். குடல் விளக்கமும் ஆகும்.

இறுதியாக, இந்த அகராதிக்கேயுரிய தனித்தன்மை வாய்ந்த சொற்றொகுப்புத் திறனுக்குச் சான்றுகள் இரண்டு. 'escapist'(adjective&noun) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற நல்ல தமிழ்ச்சொல் 'நுழுந்தி' என்பது. 'escapist'ஐப் பேச்சுவழக்கில் கிண்டலாக 'ostrich' என்று சொல்வார்கள். தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் திருவிழாக் கடமையிலிருந்து நழுவுபவனைத் 'தீக்கோழி'' என்பார்கள். முனைவர் இ. முத்தையாவின் ஆய்வுநூலொன்றின்('தமிழ்நாவல்களில் மொழிப் பயன்பாடு') அட்டைப்படத்தில் தீக்கோழியொன்று தன் தலையைப் புத்தகத்துக்குள் புதைத்துக் கொண்டிருக்கும். அந்தக் குறிப்பேற்றத்தை(suggestion) இன்றும் நினைத்தால் சிரிப்பு வரும். ஆய்வு நூலுக்கே அத்துணைப் பொருள்செறிந்த அட்டைப்படம் போட்ட காலம் அது.

'பலான' என்ற சொல். இதற்கு 'இன்னதென்று அறியப்பட்ட' என்று பொருள். எவ்வளவு 'அபத்தமாக' (அபத்தம்=வழு;பொய்;மோசம்) இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்!

***
மின்னஞ்சல் பார்க்கும் பொழுது, நாம் அதை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பார்கள். அதுபோலப் பார்த்தால் இந்த அகராதியில் உள்ள இத்தகைய சொற்களில் நான் பயன்படுத்தியுள்ள சொற்களின் அளவு ஒரு விழுக்காடு(1%) வந்திருக்குமா, தெரியவில்லை...

வடமொழிச் சொற்களின் பொருளறியாமல் விருப்பத்திற்கேற்பப் பயன்படுத்துவது தென்மொழி வடமொழி இரண்டுக்குமே கேடு பயக்கும் என்று அறிஞர் த.நா.குமாரசுவாமி, தொடக்க காலச் சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சொல்லி வருந்தினார். அந்தக் கருத்து, என் உள்ளத்திலேயே நின்றிருந்தது. அதற்கு எளிய முறையில் சான்றுகள் தரும் இந்தத் தமிழகராதியை எனக்கு அறிமுகம் செய்துவைத்த தமிழ்மாமணி மு. இறைவிழியனார் மறைந்து விட்டாலும் மனத்தில் நிற்கிறார்.

****
அடிக்குறிப்புகள்:

*நற்றமிழ் - திங்களிதழ் நிறுவனர்: தமிழ்மாமணி புலவர் மு. இறைவிழியனார். ஆசிரியர்: திருவாட்டி அரியநாயகி இறைவிழியனார். முகவரி: 43, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு, புதுச்சேரி - 605 005.

(1) உயிர் எழுத்து 12; உயிர்மெய் எழுத்து 93. ஆக 105 எழுத்துகளே மொழிக்கு(தமிழ்ச் சொல்லுக்கு) முதலில் வருபவை.
(2) திண்ணை.காம் வலையேட்டை வாசிப்போர் பலநாட்டினர் பலதிறப்பட்டவர்கள் என்பதால், வடமொழிக்கும் தமிழுக்குமுள்ள பொதுவான எழுத்துகளையும் மொழிமுதல்வாரா எழுத்துகளையும் இந்தக் கட்டுரையில் தேவையான இடங்களில் பயன்படுத்தியுள்ளேன்.
(3) பிரஞ்சு மொழி வெளியீடுகளில் தேவையற்றுப் பயன்படுத்தப்படும் ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் 2 ஃபிரான் தண்டம் விதிக்கும் சட்டத்துக்குப் பிரான்ஸ் அதிபர் தெ கால் வழிசெய்ததாகச் செய்தியொன்று உண்டு.

****
நன்றி: திண்ணை.காம்
தமிழில் சிறுகதை - தொடக்ககால இலக்கணங்கள்
-தேவமைந்தன்

இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு 'மவுசு' குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக் கரும்பு போலவும்(சீனா) மிளகாய் போலவும்(சிலி) மணிலாப் பயறு போலவும்(மணிலா) மெய்யாகவே அன்னியமான சிறுகதையின் உரைநடை வடிவம் தமிழ் இலக்கிய உலகில் புகுந்து எப்படியெல்லாம் இலக்கணப்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். எந்த அளவு முன்னோக்கித் தொலைநோக்க முடியுமோ அதே அளவு சரியாகப் பின்னோக்கித் தொலைநோக்கவும் சிங்கத்துக்கு மட்டுமே முடியுமாம். இதற்கு 'அரிமா நோக்கு' என்று பெயரிட்டு, தமிழ் உரையாசிரியர்கள் தம் உத்திகளுள் இதைத் தலையாய உத்தியாக ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டார்கள். இந்த உத்தியின் ஒரு பாதியை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். தமிழுக்குப் புதுவரவாக இருந்த சிறுகதைக் குழந்தை, யார் யார் மடிகளிலெல்லாம் தவழ்ந்து ஆளானது, மறக்கப்பட்டுவிட்ட/மறக்கடிக்கப்பட்ட அவர்கள் யார் என்பதைக் கூடுமான அளவு ஒழுங்குடன் வெளிப்படுத்துவதும் இதன் அடுத்த நோக்கம்.

காவியங்களில் சிறுகதைகள் - டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.(1)

தொடக்க காலத்தில் சிறுகதைகள் - டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும், கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேனாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர். பண்டித நடேச சாஸ்திரியார் (1859-1906) 'ஈசாப் கதைகள்,' 'தக்காணத்து பூர்வ கதைகள்,' 'தக்காணத்து மத்திய காலக் கதைகள்' என்று மூன்று கதை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய 'அபிநவ கதைகள்' காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு. ஐயர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார்.

கவியரசர் பாரதியாரும், இராமாநுசலு நாயடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எஸ்.வி.வி., கொனஷ்டை, ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர். திருவாளர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பரம் சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் ஆகியோரும் சுவை மிகுந்த சிறுகதைகளை எழுதலாயினர், மௌனி என்பவர் எழுதியுள்ள 'நட்சத்திரக் குழந்தைகள்,''சிவசைவம்,' 'எங்கிருந்தோ வந்தான்' போன்ற கதைகள் உயர்ந்தவை....வை.மு.கோதைநாயகி அம்மையார் எழுதியுள்ள சிறுகதைகள் - 'மூன்று வைரங்கள்,' 'கதம்ப மாலை,' 'பட்சமாலிகா,' 'சுடர் விளக்கு,' 'பெண் தர்மம்' என்னும் ஐந்து [தொகுப்பு] நூல்களாக வெளிவந்துள்ளன.

வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் ஒன்றை மட்டும் எடுத்து, அதற்கு முதல்-இடை-கடை என்னும் மூன்று உறுப்புகளை அமைத்து, விளங்க வரைவது சிறுகதை அல்லது குறுங்கதை எனலாம். சுருங்கக் கூறின், பெருங்கதை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நிலைக் கண்ணாடி எனலாம்.

புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பல சிறந்த உண்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டனைக் கீழே காண்க:

(அ) "பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம்; ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், 'குற்றம் செய்கின்றாய்' என்று தண்டிக்க வருகின்றது. இதுதான் சமூகம்."
(ஆ) "உணர்ச்சி, தேவனையும் மிருகமாக்கி விடுகிறது."(2)

விடுதலைப் போராட்டப் பின்னணி - கல்கியின் சிறுகதைச் சாதனை - கா.திரவியம் நோக்கு:

கல்கியின் சிறுகதைகள் தேசியத்துக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு, அக்கதைகள் பெரும்பாலானவற்றில், நாட்டுப்பற்றும் நாட்டுக்கு ஆக்கம் தேடிய நல்ல கருத்துக்களும் கதையில் இழையோடியதாகும். சிறை சென்ற தேசபக்தனைக் கதாநாயகனாகவும், சமூகசேவை ஆற்றும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு பின்னப்பட்டிருந்த இக்கதைகள், தியாகிகளையும் ஊழியர்களையும் நம் கண்முன் நிறுத்தி, அவர்கள் தொண்டினாலும் துன்பங்களினாலும் ஊழியத்தினாலும் உள்ளக் கிளர்ச்சிகளாலும் படிப்பவர்களை ஆட்கொண்டன. அரசின் அடக்குமுறைக்கும், பொதுவாகப் பலரின் அலட்சியத்துக்கும் ஆளாகியிருந்த இந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தம் கதைகள் மூலம் சமூகத்தின் ஏற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது, கல்கியின் சிறந்த சாதனைகளில் ஒன்று.(3)

விடுதலைப் போராட்டப் பின்னணி - அகிலனின் சிறுகதைச் சாதனை - கா.திரவியம் நோக்கு:

விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில், போராட்ட உணர்ச்சி பொங்கி வழிகிறது அகிலனின் 'பொங்குமாங்கடல்' என்ற கதையில். சிதம்பரம் பிள்ளையைச் சிறையிலே தள்ளி செக்கிழுக்க வைத்த ஆங்கிலேய அதிகாரிகளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவாதிகளை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட நெஞ்சை அள்ளும் கதை இது.(4)

முதன்முதலில் தமிழில் சிறுகதை குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தெழுதிய டாக்டர் அ. சிதம்பரநாதன் கருத்துகள்:

"தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே" என்று, "தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்"(ஏப்ரல் 1977) என்ற அரிய சிறு அளவிலான புத்தகத்தைப் பதிப்பித்த பேரா.புளோரம்மாள், ம.செ.இரபிசிங் கூறியுள்ளனர்.(5) 22+vi பக்கங்கள்; ரூபா ஒன்று மட்டுமே விலையுள்ளது இந்நூல். இது [இக்கட்டுரை எழுதும்] இப்பொழுது கிடைப்பதில்லை. மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் அ.சிதம்பரநாதன் ஆற்றிய பொழிவின் சுருக்கமும், இலக்கிய இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள சில முதன்மைக் கருத்துகளை - கூடுமானவரை சிதம்பரநாதனின் நடையிலேயே தருகிறேன். அந்தப் பகுதிகளில் மட்டும் காலம் வேறுபட்டிருக்கும்.

எட்கர் ஆலன் போ, ஹென்றி ஹட்சன், பெயின்(Barry Paine) ஆகியோர் கூறும் சிறுகதை இலக்கணம்:

1. சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
2. 2000 அல்லது 3000 சொற்களுக்குமேல் போவதாக இருக்கக்கூடாது.
3. அரை மணி அல்லது ஒரு மணிக்குமேல் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதல்லாததாக இருக்கவேண்டும்.

அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அல்லாவிட்டாலும், அளவும் சிறுகதையின் இலக்கணங்களுள் ஒன்றாகும்.

கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய 'குமுதினி' என்னும் கதை 300 பக்கமாயினும் அது சிறுகதைதான் என்று வாதிப்பார் உண்டு. ஆங்கிலத்திலும் மெரிடித் என்பார் எழுதிய 'குளோவின் கதை'(Tale of Chloe) என்பது சிறுகதைதானா அன்றா என்ற செய்தி பற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது.

சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது.("They should not saddle themselves with a complicated plot." Paine P.38) ஆடுகின்ற பெண் ஒருத்தி தான் ஆடுகின்ற அரங்கத்தின் நீள அகலத்திற்கேற்ப தனது ஆட்டங்களைச் சுருக்கிக்கொள்ளுதல் போல, சிறுகதை ஆசிரியர்கள் தம்முடைய கதைப்பொருளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.("Singleness of aim and singleness of effect are the two great canons by which we have to try the value of a short story - as a piece of art." Henry Hudson, Introduction To The Study Of Literature, P.445) நோக்கம் நிறைவேறும் வகையில் சிறுகதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால்தான் புதினங்களை[நாவல்களை] எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல்வது தவறாகமாட்டாது.

சிறுகதை எழுதுகிறவர்கள், கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை.("If a story once felt to be false, then all the virtues are of no avail") மெழுகுவர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனியதாகவும் முகருவதற்கு மனமுடையதாகவும் இருந்தாலும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய்போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது நம்பிக்கை.

சிறுகதை எழுதுகிறவர்கள் நிகழ்ச்சிகளைப் படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புகள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மரபு.

சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும்.இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு.

சிறுகதையின் தொடக்க வாக்கியங்களைப் படித்த அளவில் கதையின் நோக்கம் இன்னது என்று வாசகருக்குப் புலப்பட்டுவிட வேண்டும்.("Initial sentences should bring out the aim."-W.H.Hudson)

சிறுகதையின் முடிவு எவ்வாறிருக்க வேண்டும்? இன்பியல் முடிவினாலோ துன்பியல் முடிவினாலோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு.("Happiness and unhappiness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending." - Paine)

அ.சிதம்பரநாதன் 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்'(1977)நூலில் சுட்டியுள்ள சிறுகதை ஆசிரியர்களும் அவர்கள் படைத்த சிறுகதைகளும்:

1921வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.. அவர் இயற்றிய 'திண்டிம சாஸ்திரி,' 'சுவர்ண குமாரி' போன்றவற்றின் அடிப்படையில் பின்னர்ச் சிறுகதைகள் எழுந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள்...

சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன..அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். கு.ப.இராசகோபாலனும் புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலமும் நம் சந்ததியாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப்பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்...அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர். கு.ப.இராசகோபாலன், உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளில் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கிவிடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக் கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். 'காணாமலே காதல்' 'புனர்ஜென்மம்' 'கனகாம்பரம்' முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளாலன்றியும், 'இரட்டை மனிதன்' போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர் புகழ் நிலவும் என்பது உறுதி. சமூக நோக்கில் ஜீவா* எழுதிய சிறுகதைகள், 'வேதாந்த கேசரி' 'பிரதிவாதி பயங்கரம்' முதலியவை. விந்தனின் 'பொன்னி' முதலிய சிறுகதைகள் சமூகப் பார்வையில் அமைந்தவை. கணையாழி எழுதிய 'நொண்டிக் குருவி' வெளியே ஜீவகாருண்யம் பேசி வீட்டில் அதைப் பின்பற்றாதவரை அம்பலப் படுத்தியது. "யார் குற்றவாளி?" என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலாச்சாரியார் எழுதிய 'பட்டாசு,' அண்ணாதுரை எழுதிய 'குற்றவாளி யார்?,' புதுமைப்பித்தன் எழுதிய 'பொன்னகரம்,' ஜீவா எழுதிய 'கொலு பொம்மை' ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மை நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே என்பது காட்டப்படுகிறது.

புதுமெருகு பெற்ற பழங்கதைகள்:

கு.ப.ரா. எழுதிய 'துரோகமா?,' கருணாநிதி எழுதிய 'ராயசம் வெங்கண்ணா' ஆகிய சிறுகதைகள், தஞ்சாவூர் - நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் அஜாத சத்ருவைப் 'பாடலி' என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். 'கொனஷ்டை' எழுதிய கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக் கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள், ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு சமம் என்ற அரிய கருத்து காட்டப்பட்டிருக்கிறது. 'அகல்யை' என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது.

கதையாசிரியர்களின் வாழ்க்கைநிலையை வைத்து எழுதப்பட்ட கதைகள்:

சுண்டு எழுதிய 'சந்நியாசம்' என்ற சிறுகதை, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்ணொருத்தியைத் திரைப்பட முதலாளியொருவர் தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. விந்தன் தனக்கேயுரிய பாணியில், தமிழ்நாட்டில் தம் பெருமை அறியப்படாத கதாசிரியர் ஒருவர் வடநாடு சென்று அங்கிருந்துகொண்டு 'வக்ரநாத்ஜி' என்ற புனைபெயரில் கதைகளெழுதித் தமிழ்நாட்டில் புகழும் செல்வமும் பெற்றார் என்பதைச் சித்தரித்தார்.

ஆண்-பெண்களின் மனநிலைகளை நன்றாகக் கவனித்து உணர்ந்து எழுதிய சிறுகதை ஆசிரியர்கள் -அரு.இராமநாதன்('காதல்' இதழ்க் கதைகள்), டி.கே.சீனிவாசன்('துன்பக் கதை') ஆகியோர். பெண்களின் மனநிலையை நுட்பமாக அறிந்துணர்ந்து, தெளிந்த உணர்த்தலோடு எழுதியவர் லக்ஷ்மி(திரிபுரசுந்தரி). அவர் எழுதிய 'விசித்திரப் பெண்கள்,' 'முதல் வகுப்பு டிக்கெட்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஏழைத் தொழிலாளர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து எழுதியவர், தானும் தொழிலாளராய் இருந்து எழுத்தாளரான விந்தன். பெ.தூரன்,மு.வரதராசன், ராஜம் கிருஷ்ணன்('பிஞ்சு மனம்'), கி.வா.ஜகந்நாதன்('பவள மல்லிகை')ஆகியோரையும் இவருடன் குறிப்பிடலாம்.

கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திரமாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்து விட்டால், அவருடைய கலைத்திறன் மங்கிவிடுகிறது என்பதை ஜீவாவின் 'பிடில் நாதப்பிரமம்', புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் 'ஜீவ சிலை' என்ற சிறுகதைகள் வெளிப்படுத்தின.

சினிமாப்பட முதலாளிகளும் டைரக்டர்களும் தரும் தொல்லைகளை ஜீவாவின் 'மிருநாளினி,' கல்கியின் 'சுண்டுவின் சந்நியாசம்' புலப்படுத்தின.

சீர்திருத்த நோக்கில் படைக்கப்பட்ட சிறுகதைகள்:

கல்கியின் 'விஷ மந்திரம்' தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்தது.
காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டுதல் வேண்டும். ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய 'வான் மலர்' என்னும் கதை, விதவை மறுமணத்தைப் பற்றியது. இது தொடர்பாக, இதைவிட மிகச் சிறந்தது புதுமைப்பித்தனுடைய 'வழி' என்ற சிறுகதை. சுத்தானந்த பாரதியாரின் 'கலிமாவின் கதை' முஸ்லிம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துமதம் சார்ந்தவன் ஒருவனை மணந்துகொண்டதை விவரித்தது. அண்ணாத்துரையின் 'பேரன் பெங்களூரில்' என்ற சிறுகதை, பிராமண விதவை ஒருத்தி முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால், தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.

இலக்கிய மணம் வீசும் சிறுகதைகள்:

பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக ஆசைப்படாமல், தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு.வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய 'விடுதலையா?' முதலிய கதைகளைக் காணலாம். 'கட்டாயம் வேண்டும்' என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்துள்ளது. ஜீவாவின் 'முல்லை,' மகுதூம் என்பவரின் 'திருமறையின் தீர்ப்பு' ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண்கிறோம்.

சிறுகதைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா?

கருணாநிதி, அண்ணாத்துரை, ஏ.எஸ்.பி.ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதன் பொருட்டு சிறுகதைகள் படைத்தார்கள். ஐரோப்பாவில் இந்நிலை நிலவியது குறித்து "தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயம் இது" என்று பேர்ரி பெயின் கூறினார். அண்ணாத்துரையின் "சிறுகதைகள்" என்ற தொகுப்பில் பிரச்சாரம் இடம் பெற்ற அளவு "கற்பனைச் சித்திரம்" என்ற புத்தகத்தில் இல்லை.

தொகுப்பாக...

தொகுப்பாக இறுதியில் டாக்டர் அ. சிதம்பரநாதன் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறுகதைகளையும் சுருக்கமாக இங்கே காணலாம்.

மாயாவியின் 'பனித்திரை' போன்ற கதைகள், மாணவர்களுக்கு ஏற்றதாக சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய 'சிறுகதைத் திரள்,' கா.அப்பாத்துரையார் எழுதிய 'சமூகக் கதைகள்,' 'நாட்டுப்புறக் கதைகள்'...பி.என்.அப்புசாமி எழுதிய 'விஞ்ஞானக் கதைகள்,' பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய 'சிறுகதைக் களஞ்சியம்' முதலியவற்றை டாக்டர் அ. சிதம்பரநாதன் இங்கே குறிப்பிடுகிறார்.

பிறமொழிச் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் வல்லவர்களாக - புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி, ஏ.கே.ஜெயராமன் முதலியோரைக் குறிப்பிடுகிறார். 1946இல் எஸ்.குருசாமி 'இந்தியச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்ததைச் சிறப்பாக நினைவுகூர்கிறார்.

இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர்கோன் ஆகியவர்களைப் பொதுவாகப் பாராட்டுகிறார்.

சிறுவர்க்கான கதைகள் எழுதுவதில் வல்லவர்களாக - அழ.வள்ளியப்பா, அம்புலிமாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் வாசகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர்களாக - எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இதழ்களில் வந்த சிறந்த சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-

கணையாழி எழுதிய 'நொண்டிக்குருவி'
ஜெகசிற்பியன் எழுதிய 'ஜலசமாதி'
சோமு எழுதிய 'கடலும் கரையும்'
ஞானாம்பாள் எழுதிய 'தம்பியும் தமையனும்'
கே.ஆர்.கோபாலன் எழுதிய 'அன்னபூரணி'
சோமாஸ் எழுதிய 'அவன் ஆண்மகன்'
கெளசிகன் எழுதிய 'அடுத்த வீடு'
எஸ்.டி.சீனிவாசன் எழுதிய 'கனிவு'

பிற மொழிகளில் மொழிபெயர்த்தேயாக வேண்டிய சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-

கு.ப.ராஜகோபாலனின் 'காணாமலே காதல்'
புதுமைப்பித்தனின் 'வழி '
கல்கியின் 'விஷ மந்திரம்'
சுத்தானந்த பாரதியாரின் 'கடிகாரச் சங்கிலி '
அகிலனின் 'இதயச் சிறையில்'
விந்தனின் 'முல்லைக்கொடியாள்'
லட்சுமியின் 'வில் வண்டி'
ஜீவாவின் 'வேதாந்த கேசரி'
டி.கே.சீனிவாசனின் 'துன்பக் கதை'
புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் 'ஜீவ சிலை'
கணையாழியின் 'நொண்டிக் குருவி'

தன் காலத்தில் இதழ்களில் அடிக்கடி சிறுகதை எழுதுவோராக டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிடும் பிறர்:-

கே.என்.சுப்பிரமணியன்
ஜி.கெளசல்யா,
இராதாமணாளன்
தில்லை வில்லாளன்
புஷ்பா மகாதேவன்
வேங்கடலட்சுமி
புரசு பாலகிருஷ்ணன்
ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்

'தமிழில் சிறுகதைகள்' என்ற இந்தக் கட்டுரை, டாக்டர் அ.சிதம்பரநாதன் மறைந்து பத்தாண்டுகள் கழித்து 1977 ஏப்ரல் பதிப்பில் வெளியானபோதும், எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட காலம் - மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் த.ஜெயகாந்தன் குறித்த குறிப்பு ஏதும் இக்கட்டுரையில் இல்லை. முடிவுரையில், "சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது" என்று டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிட்டிருப்பதும் இதற்கு மற்றுமோர் ஆதாரம்.

***
1967 ஜூலையில், 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற இதே தலைப்பிலானதும் - இதற்கு முற்றிலும் மாறானதோர் உணர்வெழுச்சி ஊட்டியதும் - - யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணைத்தமிழ்ப் பேராசிரியராக அப்பொழுது பணியாற்றிய டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியதுமான கட்டுரைத் தொகுதியைத் தமிழ்ப் புத்தகாலயம் திரு கண.முத்தையா அவர்கள் பதிப்பித்தார். இலங்கை 'தினகரன்' வாரப்பதிப்புக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. தினகரன் ஆசிரியர் திரு இ.சிவகுருநாதன், திரு செ.கணேசலிங்கன், திருமதி ரூபவதி ஆகிய மூவரால்தான் இந்நூல் வெளிவந்தது என்று கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், வல்வெட்டித்துறை நடராஜ கோட்டத்திலிலிருந்து 22-7-1967 அன்று எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிரதிவாசித்துதவிய பாங்கையும் குறிப்பிடுகிறார். 1980இல் வெளியான என் 'புல்வெளி' என்ற கவிதைத் தொகுதியை வாசித்துக் கலாநிதி க.கைலாசபதி எழுதிய விளக்கமான கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். தஞ்சையில் ஒருமுறை பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்குப்பின்(அப்பொழுது சிவத்தம்பி அவர்களுக்கு ஐம்பது வயதுதானிருக்கும் என்று நினைவு) 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற கா.சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு, சிதம்பரநாதனின் புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்த ஆய்வு மாணவர்களுக்கும் தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டியது என்று குறிப்பிட்டேன். சிரித்துக் கொண்டார். சிவத்தம்பியின் புத்தகத்தின் சிறப்புக்கு அதன் 160 பக்கங்களிலிருந்து ஒரு மிகச் சிறிய பகுதியை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்:

"ஜெயகாந்தனது இலக்கிய எதிர்காலம் எப்படியிருப்பினும், அவர் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன.
இலக்கியத் தரமான சிறுகதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்துத் தவறானது என்பதனைச் சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.
சிறுகதையின் உருவ அமைதியில் ஜெயகாந்தன் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளமைதியில் முக்கியமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தின. அதுவே அவர் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.
கற்பித மனோரம்மிய இலக்கிய நோக்கு ஆட்சி புரிந்தவிடங்களில் யதார்த்த இலக்கிய நோக்கினைப் புகுத்தி அந்நோக்கின் சிறப்பை நன்கு உணர்த்தியமையே அப்பண்பாகும்."(6)

**
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளைக் குறித்து டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய புத்தகம் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்துச் சிந்தித்தும் ஆராய்ந்தும் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், சிட்டி சிவபாதசுந்தரம் டொமினிக் ஜீவா,டாக்டர்கள் மா.இராமலிங்கம், இரா.மோகன், எம்.வேதசகாய குமார் முதலியவர்கள் ஆவர்.

***
அடிக்குறிப்புகள்:

* ஜீவா என்று டாக்டர் அ. சிதம்பரநாதன் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர் 'உயிரோவியம்' என்ற நாவலால் புகழ் பெற்ற நாரண துரைக்கண்ணன் ஆவார்.

(1) டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.243-244.
(2) மேலது, ப.252.
(3) கா.திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,1974, பக்.200-201.
(4) மேலது, ப.203.
(5) டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பதிப்பாசிரியர்: பேராசிரியர் பிளோரம்மாள், ம.செ.இரபிசிங். பிலோமினா பதிப்பகம், 5/25, புதுத்தெரு, சென்னை-600004. 1977. ப.v. இந்தப் புத்தகத்தின் கருத்துகளே தொடர்ந்து வருவதால் அடிக்குறிப்புகளிடவில்லை. மொத்தப் பக்கங்களே 22தான்.
(6)டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மூன்றாம் பதிப்பு அக்டோபர், 1980. ப.139.

****
நன்றி: திண்ணை.காம்
இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட 'சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்'
-தேவமைந்தன்


இந்துமதம் குறித்து அடிப்படையிலிருந்து கற்பிக்கும் இந்துமத பாலபாடம் 1937ஆம் ஆண்டு மே மாதம் அச்சுக்கு வந்தது. திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரவாதீனம் 24-ஆவது மகா சந்நிதானத்தின் ஆதரவில் அவ்வாதீன மகாவித்துவானாகவும் 'தொண்டன்' இதழ் ஆசிரியராகவும் பண்டிதபூஷணம் கே. ஆறுமுக நாவலர் என்று அழைக்கப் பட்டவருமாக விளங்கிய நாகர்கோயில் கே.ஆறுமுகம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது. சென்னையில் அக்காலத்தில் புத்தகங்களைத் திருத்தமாக அச்சிடுவதில் புகழ் பெற்றிருந்த புரோகிரஸிவ் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

இத்தகைய பாலபாடங்கள் வருவதற்கே முன்னோடியாக இருந்தவர் இலங்கை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர்(1822-1889) அவர்கள். அதே சமயம், பைபிள் தமிழில் முதன்முதல் மொழியாக்கம் ஆவதற்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவரும் அவரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமயமும் தமிழும் பலர் கற்கப் பாடசாலைகள் அமைத்ததுடன், அவற்றை நடத்துவதற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காக வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்தும் தொண்டு செய்தவர் அவரே. அவர் வரலாறு, செய்யுள் வடிவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.ரா. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டது.

1901ஆம் ஆண்டு படைக்கப்பட்ட 'இந்தியா இலங்கை பர்மா தேசங்களிலுள்ள பெரிய ஆலயங்கள்' என்ற அரிய ஆலயவயண நூல், டாக்டர் போப் பெர்னட் என்பவரால் தொகுக்கப்பட்டு 1909இல் அச்சுக்கு வந்ததாக அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை 1952இல் செய்த பதிவு தெரிவிக்கிறது.

ஆகமங்களைப் பற்றி சமஸ்கிருதத்தில்தான் நூல்கள் இருப்பதாகப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் ஆகமப் பிரமாண்யம் என்றொரு நூலை பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆளவந்தார் இயற்றியுள்ளார். தவிர, ஆசிரியப்பா என்னும் செய்யுள் வடிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் குமாரதேவர், சாத்திரம் ஒன்றைச் செய்திருக்கிறார். அதன் பெயர் ஆகம நெறியகவல். இதுதவிர மேலும் பதினைந்து சாத்திர நூல்கள் செய்தவர் குமாரதேவர்.

நமக்கு இன்றும் எளிதாகக் கிடைக்கும், சமயதத்துவ நோக்கில் ஆலயங்களின் உட்பொருளைத் தெளிவாகவும் செறிவாகவும் அதே பொழுது மிக விரிவாகவும் உணர்த்துவதாகவுள்ள பழைய நூல், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் அவர்கள் உருவாக்கிய 'சமய கிண்டர்கார்டன் அல்லது ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்' என்பதே. இரண்டு பெரும் பகுதிகளை உடைய இந்த நூல் 1952இல் வெளிவந்தது. என்றால், பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இலஞ்சியார் தம் உழைப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். முதல் பகுதியில் இந்து சமயமும் அதன் உட்பிரிவுகளும் கொண்ட ஆலயங்களின் உட்பொருள் விளக்கங்களும்; இரண்டாவது பகுதியில் கிறித்துவ தேவாலயங்களின் உட்பொருள் விளக்கங்களும் என ஆழமும் நுட்பமும் கொண்ட செய்திகள் பற்பல இடம் பெற்றுள்ளன. திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சீரிய உருவாக்கமான இந்நூல் இந்து மறையியல் கல்விக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட சமய/ஆலயத் 'தேடல்' கொண்டவர் களுக்கும் கைக்கருவி போன்றது. மனிதனின் உடம்புதான் திருக்கோயில் என்பதைத் தெற்றென விளக்கும்பொருட்டு, பெரிய அளவில் வரையப்பட்ட அரிய விளக்கச் சித்திரம் ஒன்று இதனோடு இணைக்கப்பெற்றிருந்தது. பல பதிப்புகளை இந்நூல் அடைந்து விட்டதாக அறிகிறேன். பிருதுவி கணங்கள் முதலான மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஐந்து கணங்கள் எப்படி உலக மாந்தரோடு தாமும் இணை உலகங்களில்(parallel worlds) இயங்கிக் கடமையாற்றி வருகின்றன என்பது போலும் அரிய செய்திகள் பலவும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. விரிவு அஞ்சி, இதிலுள்ள பொதுவானவும் எளியவுமான கருத்துகள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையான பகுத்தறிவு என்பது எது என்று முதலாவதாக இலஞ்சியார் வினாத் தொடுத்துக்கொண்டு, திருவள்ளுவர் மொழிந்த இரு வேறு திருக்குறள்களையும் (மெய்யுணர்தல், 5: அறிவுடைமை, 3) இணைத்து --
"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
என்றவாறு ஒரே விதியாகச் செய்தார். இதை- உண்மையான பகுத்தறிவு என்பது எது என்பதை ஆய்வுக்கூட முறையில் சோதனை செய்து அறிவதற்கேற்ற ஓர் அறிவியல் விதியைப் போலவே பயன்படுத்தச் சொன்னார்.

"இந்து மதத்தின் சந்நியாசிகளுக்கு ஆலய வழிபாடு விதிக்கப்படாதது ஏன்?" என்பதற்கு, "அவர்கள் ஞானநெறியில் நிற்பவர்கள் என்பதால்" - என்று மறுமொழி தந்ததுடன், அதற்கு ஆதாரமாக -
"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை"[துறவு:5]
என்னும் திருக்குறளை முன்வைத்தார்.

சமயங்கள் தேவையா என்று கேட்கப்படுவதற்கு விடையாக, "சமயங்கள் யாவுமே, மனிதனுக்குச் சீவத்தன்மையைப் போக்கிச் சிவத்தன்மையைத் தர அமைந்த வெவ்வேறு முறைகளாம்" என்று கூறினார்.

எல்லா மக்களுக்கும் ஒரே நெறியை வகுக்கும் மேலாண்மை, சமயங்களுக்குச் சரிவராது என்பதற்கு, "இரயில் தண்டவாளம் போல் எல்லா மக்களுக்கும் ஒரே நெறியை வகுப்பவர் உத்தம அநுபூதிமான் ஆகார்" என்றார்.

திருக்குறளை ஆதாரம் காட்டியவர், பரம்பொருளைத் தேடுபவர் மிகச் சிலரே என்பதற்கு "அறுப்பு மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம்" என்ற இயேசு மொழியை அடிப்படையாக்கினார்.

'இறைவன் என் கண்களுக்கு முன் தோன்ற வேண்டும்; ஏனைய புலன்கள் மூலம் அவனை நான் உணர வேண்டும்! என்பவர்களுக்கு இறைவனின் உண்மை என்ன என்பதை அப்பர் என்னும் திருநாவுக்கரசரின் சொற்களால்-
"விறகில் தீயினன், பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே"
என்னும் தேவாரத்தால் நன்கு விளக்கியுள்ளார். "பாலினுள் நெய்யிருப்பது, பாலைப் பார்த்தபோது காண முடிகிறதா? இல்லையே! அதனால் பாலில் நெய் இல்லை என்று கூறுவோர் யாரேனும் உளரோ? ஒருவரும் இலர். நமது கண்ணுக்குக் காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண, பாலைக் காய்ச்சித் தயிராக்கித் தயிரில் மத்தினை ஊன்றி முறுகக் கடைதல் வேண்டும்; கடைந்தால் அதிலிருந்து வெண்ணெயும் பின் நெய்யும்
பெறலாம். அதுபோல, கடவுள் இவ்வுலகத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக் காணமுடியும் என்பது அதன் விளக்கம்.

திருவருட் பிரகாச வள்ளலார் மொழிந்த 'அருட்பெருஞ்ஜோதி ' மெய்ப்பொருளுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பாவைச் சார்ந்த 'பின் இறப்பியல்' ஆய்வாளர்களான குப்ளர்றாஸ் முதலானோர் சொன்ன 'ஒளிக்கடவுள்' செய்திக்கும் ஏலவே நெடுங்காலத்துக்கு முன் கிரேக்கத்தில் நிலவிய எல்லிஸ்/எல்லீசர் என்ற ஒளிக்கடவுள் வழிபாட்டுக்கும் 'மாமணிச் சோதியான்' என்பது மிகவும் ஒத்துப் போகிறது.

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று பிற்கால ஒளவையாரால் 'கொன்றை வேந்த'னிலும்(1) ''கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று உலகநாதனாரின் 'உலகநீதி'யிலும் கூறப்பட்டவற்றை உள்ளத்தில் பொதிந்து வைத்திருந்த மக்களிடையே, ஆலயத்துக்குச் செல்வதைக் கொச்சைப்படுத்தியவர்கள் யார்? - என்பதற்கு இலஞ்சியார் மறுமொழி: "இன்று ஆலயஞ் செல்வோரிற் பெரும்பாலர், வியாபார முறையில் இறைவனோடு பேரஞ் செய்யச் செல்கின்றாரே ஒழிய அன்போடோ பகுத்தறிவோடோ இறைவனை வழிபடச் செல்கின்றார் என்று சொல்லல் இயலாது." அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்த நிலை, இன்றைய 'மீடியா'க்களின் 'ஆன்மிகக்கொச்சைப்படுத்த'லுக்குமுன் எவ்வளவோ தேவலாம். இதே நிலையை அக்காலத்தில் இயேசு தேவாலயங்களில் கண்டு ஆத்திரப்பட்டதை 'மத்தேயு சுவிசேஷ'த்தில் காணலாம்.

இடச்சுருக்கம் கருதி, இலஞ்சியார் மொழிந்தவற்றை அப்படியே தருகிறேன்:

ஆலயத்தின் உயிர் மூலஸ்தான மூர்த்தி
யந்திரப் பிரதிஷ்டை இலாத விக்கிரகம் சக்தியுடைய மூர்த்தியாகாது.
**
மனிதன் உடம்பல்ல ஆன்மா
ஆலயத்தின் முன்கோபுரமும் உள்ளிருக்கும் மூலஸ்தான மூர்த்தியும் 'மனிதன் உடம்பல்ல; ஆன்மா' என்ற உண்மையை இடைவிடாமல் நமக்கு ஞாபகமூட்டி நிற்பதே.
அடியார் ஒவ்வொருவரும் ஆலய மதிலையும் கோபுரத்தையும் புறத்தே கண்டவுடனே ''நான் இந்த உடம்பல்ல; உள்ளிருக்கும் ஆன்மா" என்ற உண்மையை அறிவுறுத்திக் கொள்ளுதல் வேண்டும். இவ்வுண்மையைப் பற்றிய இடைவிடாத(நமது நெடுங்கால வாசனைக்கெதிரான) சிந்தனையே பிற உயிர்களிடம் அன்பைப் பெருக்கித் தனக்கும் உயர்ந்த மனநிம்மதி தரும்.
**
ஆவரண மயக்கம்
உடம்பை நான் என்று கொள்ளும் மயக்கம் இயற்கையிலுள்ள ஆவரண சக்தியின் மறைப்பால் ஆகின்றது. இந்த மறைப்பு இறைவனின் ஐந்தொழிலில் திரோபவம் அல்லது மறைத்தல் என்றழைக்கப்படும். இந்த ஆவரண மயக்கம், 'நான் யார்?' என்று பகுத்தறிவதனாலும், "நான் அழிவில்லாத ஆன்மா, இந்த உடம்பு நானல்ல" என்று இடைவிடாது சிந்திப்பதாலும் நீக்கப்பட வேண்டும். ஆலய கோபுரத்தை தூரத்தே கண்டவுடன் இவ்வுண்மையை நினைப்பூட்டிக் கொள்ளவேண்டும்.(2)
**
சிவாலயங்களும் ஆன்மாவின் ஆறுநிலைகளும்
1. முன்கோபுரம் - ஸ்தூலலிங்கம் - பூதான்மா
2. மகாபலிபீடம் - பத்திரலிங்கம் - அந்தரான்மா
3. கொடிமரம் - துவஜலிங்கம் - தத்துவான்மா
4. மூலவர் - சதாசிவலிங்கம் - சீவான்மா
5. ஆசாரியர் - ஆன்மலிங்கம் - மந்திரான்மா
6. பரவெளி - அகண்டலிங்கம் - பரமான்மா
**
பூதான்மாக்கள், தேகான்மாக்கள்
(சிற்றின்ப அனுபவங்கள் காரணமாக) ஸ்தூல உடம்பைத் 'தான்'-ஆக எண்ணும் ஆன்மாக்கள் தேகான்மாக்கள், பூதான்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
**
மூலஸ்தான மூர்த்தி
"நான் இன்ப துன்பங்களின் இருப்பிடமாகிய உடம்பல்ல; இச்சையல்ல; மனமல்ல" "எனக்கு இத்தத்துவங்களை அடக்கவும் ஆளவும் கூடும். ஆகையால் நான் பிரம்மம்" - இந்நிலையே ஜீவான்மா நிலை. அதன் அறிகுறியே மூலஸ்தான மூர்த்தி.
**
ஆகமவிதி ஒன்று
அடியார்கள் ஆலயம் செல்லும்பொழுது வெறுங்கையுடன் போவது முறையல்ல. தேங்காய், பழம், கற்பூரம் இவற்றைக் கொண்டு செல்லுதலே ஆகமவிதி.
தேங்காய் - ஆன்மா
வாழைப்பழம் - நல்வினைப் பலன்கள்
கற்பூரம் - இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவம் வாய்ந்த ஆன்ம நிலை
**
ஆலயத் தானம் ஒவ்வொன்றிலும் அருட்சக்திகளின் தீவிர நிலைகள்
ஆலயங்களில் ஆகமமுறை வழுவாது பூசை நடைபெறுமானால், அப்போது அங்கு உற்பத்தியாகும் அருட்சக்திகள், கர்ப்பக்கிரகத்தில் மிகக் கொடுந் தீவிரத்துடனும்; அர்த்த மண்டபத்தில் மிகத் தீவிரத்துட னும்; மகாமண்டபத்தில் தீவிரத்துடனும், கொடிமரத்தை அடுத்து மந்தமாகவும்; வெளிவீதியில் மந்ததரமாகவும் வேலைசெய்யும்.
**
ஆலயங்களில் எண்ணெய், நெய் விளக்குகளின் மகத்துவம்
எண்ணெய், நெய் விளக்குகளுடைய உட்பொருளும், சூடும் ஒளியும் ஒருசேரப் பரப்பவல்ல அந்த அக்கினிக்கும் தேவகணங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் அதனாலேற்படும் உத்தம பலனும் இன்றைய ஆலயங்களில் மிகவும் குன்றிப் போயுள்ளன. மின்விளக்குகள், ஆலயங்களில் தியானத்தைக் கெடுக்கின்றன. முன்பு ஆலயங்களில் அடியார்களுக்குக் கிடைத்த ஆழ்மனநிலை(trance) - இப்பொழுதுள்ள மின்விளக்குகளாலும் பக்தர்களின் சளசளப்பாலும் இடம்ப ஆரவாரங்களாலும் சிலருக்கு மட்டும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தாலும் பொதுவாகக் கோயிலொழுங்கு அத்துமீறப்படுவதாலும் - இப்போதுள்ள பக்தர்களுக்குக் கிடைப்பதில்லை.
**
எல்லாவற்றுக்கும் மேலாக...
"பரம்பொருள் ஒன்றே எச்சிற்படாதது." பரம்பொருளைப் பற்றி இராமகிருஷ்ணர் மொழிந்தவாறு 'அது இருக்கின்றது'(that IS - Sri Ramakrishna: there IS - Jiddu Krishnamurti) என்பதையன்றி வேறு சொல்ல வல்லவர் யார்? "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்ற முதுமொழி அதனாலேயே உண்டாயிற்று.
**
இவ்வாறு நான் இங்கே தந்துள்ள இலஞ்சியாரின் கருத்துத் தொகுப்பு, அவருடைய நூலின் 'ஆகிருதி'யை நோக்க, பானைசோற்றுக்கு ஒரு பதம்'தான்.

இந்த நூல், சென்ற நூற்றாண்டில் ஐம்பதுகளின் ஆகத் தொடக்கத்தில் வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலுக்குப் பின்பு எத்தனையோ நூல்கள் இதை அடியொற்றி வந்துவிட்டன, ஏன்! சென்ற எண்பதுகளில் 'அமோக'மாகக் காசுபார்த்த இது சம்பந்தமான புத்தகங்களில் இந்த நூலின் கருத்துகள் ஏராளமாக இடம்பெற்றன. என்ன.. இலஞ்சியாரின் பெயரோ நூலின் பெயரோ அவற்றில் ஓரிடத்தும் வரவில்லை. என்ன செய்வது? அவர்தான் போய்ச் சேர்ந்து விட்டாரே! அப்படிக் குறிப்பிடுவதால் இவர்களுக்கு ஆதாயம் ஏதேனும் உண்டா!

****
அடிக்குறிப்புகள்:

(1) திருநெல்வேலியிலிருந்து கிடைத்த ஓலைச்சுவடியொன்றில் கொன்றை வேந்தனுக்கு 'அன்னையும் பிதா' என்று பெயர் காணப்பட்டதாகத் 'தமிழ்க் கடல்' பேராசிரியர் கா.நச்சிவாய முதலியார் தெரிவித்துள்ளார். [மைக்ரோசோஃட் வொர்ட் தானாகச் சேமிப்புத் தலைப்பு கொடுக்கும் பாணி இது என்பது கணினியறிவு உள்ளவர்களுக்குத் தெரியும்.]

(2) மூலத்தானத்தைப் புறத்திலிருந்து காணவொட்டாமல் மறைக்கும் கோயில் திருமதிலுக்கு 'ஆவரணச் சுவர்' என்று பெயர்.
****
நன்றி: திண்ணை.காம்
பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
-தேவமைந்தன்

இரண்டு முறைகளில் இது குறித்துச் சிந்திப்போம். முதலாவது, எளியவரின்(layperson) அணுகுமுறை. இரண்டாவது, பெண்ணியம் என்பது, தாய்த்தலைமை இனக்குழுவிலிருந்து தோன்றிய உலகளாவிய பெரும் சமூக அமைப்பின் உறுப்பினளாகத் தான் விளங்கியதை ஆய்வுகளின்வழி ஓர்மையுடன் சிந்தித்துப் புரிந்து கொண்டு, அதனை மீண்டும் உருவாக்கப் பெண்ணொருத்தி தொண்டாற்ற உதவும் ஆய்வியல் அணுகுமுறை.

முதல் வகை -எளியவர் அணுகுமுறை:

சமூகம்தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. முன்பெல்லாம் சமூகம் சிறுத்த அலகாக(unit) இருந்ததை நூறு ஆண்டுகளுக்கு முந்திய கடிதங்கள் காட்டும். கூட்டுக் குடும்பம்தான் அப்பொழுதைய சமூகம். 'தாங்களும் தங்கள் சமூகமும்' என்று சொல்லி விசாரித்தார்களென்றால், 'தாங்களும் தங்களைப் பெற்றோரும் உற்றார் உறவினரும்' என்ற குடும்பக் கட்டுமானத்தை(family pack)க் குறிப்பதோடு சரி. ஏங்கெல்ஸ் அதனால்தான் தன் சமூக ஆய்வைக் குடும்பத்திலிருந்து தொடங்கி, தனிச்சொத்து அரசு என்று விரிவாக்கி அவற்றின் தோற்றத்தை ஆராய்ந்தார்.(1) இப்பொழுது குடும்பம் அணுக்கருக் குடும்பம் (nuclear family - a family unit consisting of a mother, a father, and their children) என்று ஆகிவிட்டது. நகர்ப்புறச் சமூகத்துக்கும் நாட்டுப்புறச் சமூகத்துக்கும் இருந்த புற இடைவெளி குறைந்து கொண்டே போகிறது. ஆனால் நகர்ப்புறச் சமூக மக்கள் - குறிப்பாக இளைய தலைமுறைக்கும்; கிராமப்புற மக்களுள் முக்கியமான இளைய தலைமுறைக்கும் அக இடைவெளியாகிய மனவிரிசல் மேலதிகமாகக் கூடிக்கொண்டே போகிறது. கிராமப் புறங்களில் வேர்பிடித்திருந்த குடும்ப உறவும் மூலக்குடும்பத்துடன் கொண்ட பிணைப்பும் மிகவும் அசைந்து கொடுத்திருக்கிறது. தொழிற்புரட்சிக் காலத்தை ஒட்டியும் அதற்குப் பின்னும் நாடெங்கும் இரயில் வண்டியானது ஊர்களை இணைத்து அறிவு பரவ வழிவகுத்தது. இப்பொழுதோ பேருந்துகள் கிராமப்புறங்களையும் நகரங்களையும் நன்றாக இணைத்தபின், கிராமப்புறத்து இளைஞர்கள் 'பட்டணத்து மாயை'களில் வசமாகச் சிக்கிக் கொள்ளவும் நகர்ப்புறப் பண்பாட்டின் பேரளவு தீமைகளாகிய சூது-மது-விபச்சாரம் ஆகியவற்றில் எளிதாக மாட்டிக் கொள்ளவும் வழி திறந்துவிட்டது. கல்வி வளர்ச்சி இதனால் ஏற்படவில்லையா? ஆம். ஏற்பட்டிருக்கிறது. எப்படி? நகர்ப்புறக் கல்வி நிலையங்களில் உயர்சாதி மாணவ மாணவியருடன் போட்டி போட முடியாமலும், இப்பொழுது தழைத்தோங்கியுள்ள 'மேலைமயமாத'லில் நகர்ப்புற இளைஞர்-இளைஞியரின் பண்பாட்டு விழுமிய வீழ்ச்சிகளைக் கண்டு, தம்மை அவர்களோடு ஒப்புநோக்கிக் கொண்டு தாழ்வு மனப்பான்மையால் உள்ளம் புழுங்கி கிராமப்புறத்து இளைஞர்-இளைஞியர் ஆற்றல் குறையவுமே ஆகியுள்ளது. நாட்டுப்புறங்களிலிருந்து முன்பெல்லாம் 'பஞ்சம் பிழைப்பதற்காக' மட்டுமே மக்கள் செல்வார்கள். இப்பொழுதோ வேளாண்தொழில் நன்கறிந்த குறுநில விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும்கூட கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கப் பட்டணம் சென்று, சாலை போடும் வேலைகள் பாதாளச் சாக்கடைத் திட்டம் முதலியவற்றில் வேலை செய்து பிழைக்கிறார்கள், நிலையான பெரிய அரசியல் கட்சிகளின் 'தய'வைப் பெற்ற பெருநிலக்கிழார்கள் மட்டும் இன்றும் கிராமங்களில் கோலோச்சுகிறார்கள். அவர்களின் 'தய'வை முழுமையாகப் பெற்ற குறுநில விவசாயிகள், அங்கே ஓரளவு உத்தரவாதத்துடன் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். வாழ்வென்பதே கேள்விக்குறி ஆகிவிட்ட இந்தச் சூழ்நிலையில் பெண்ணியக் கோட்பாடு அத்தகைய குடும்பங்களின் பெண்களைச் சென்றடையும் வழி இன்னும் ஏற்படவில்லை. நகர்ப்புற - பெருநகரம் சார்ந்த - நன்கு கல்வி கற்று, சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த - பல்வேறு வேலைகளுக்குச் சென்று உழைக்கும் பெண்களிடம் பெண்ணியக் கோட்பாடு இயல்பாகவே எடுபடுகின்றது.

ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பெண்ணியம் தோற்றம் பெறக் காரணம், பொருளியல் சுதந்திரத்தை நோக்கி அங்குள்ள பெண்கள் உறுதியாக நகரத் தொடங்கியதுதான். பெண்கள் அரசியலில் பங்கேற்பதற்கு முன்னரே ஐரோப்பாவில் பெண்கல்வி முதன்மைப்படுத்தப்பட்டது. இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றிப் பக்கம் பக்கமாகக் கண்ணீர் சிந்தி நூல் எழுதுபவர்களும், மேடைகளில் முழங்குபவர்களும், கவியரங்கங்களில் கவிதை வாசித்துக் கைதட்டல் பெறுபவர்களும் மிக முக்கியமான ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். அதுதான் தற்சார்பு மட்டுமே கொண்ட பொருளியல் விடுதலை. தன் கணவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்து எழுதும் - பேசும் எந்தப் பெண்ணும், கணவருடன் இணைந்த ஒளிப்படம் எடுக்கச்சொல்லி, அதைத் தன் நேர்காணலில், முற்றிலும் வணிகப்போட்டி நிரம்பிய இதழில் போடச் சொல்லும் எந்தப் பெண்ணும் பெண்ணியம் அறிந்தவரல்லர். முற்றிலும் தற்சார்பாக இருக்கவல்ல பெண்ணே பெண்ணியம் உணர்ந்தவர். அவர் குடும்பத்தில், குடும்பத்தோடு இணைந்து வாழ்வார்; சார்ந்துவாழ மட்டார். பணியாற்றும் நிறுவனத்தில் கூடத் தனக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வேலைகளை மட்டுமே தெளிவாகவும் திறம்படவும் செய்வார். மேலாண்மையின் தனிப்பட்ட கோரிக்கைகள்(விழாவுக்கு ஏற்பாடு செய்வது போல) எதையும் அவர் ஏற்க மாட்டார். தன்மேல் சுமத்தப்படும் எவ்வகையான நிர்ப்பந்தத்துக்கும் உடனடியாக வழக்குப்போடுவார். நீதிமன்றம் செல்லத் தயங்க மாட்டார். தனக்கு உரிமையுள்ள சொத்து முதல் எதற்கும் அவர் அவ்வாறே செய்வார். சடங்குகள் சம்பிரதாயங்கள் முதலான தன்னைக் கட்டிப்போடும் எதையும் பின்பற்ற மாட்டார். தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட முற்றிலும் தவிர்க்கும் பெண்கள் டென்மார்க்கிலும் பிரான்சிலும் பெருகி வருகிறார்கள். 'முற்றிலும் தற்சுதந்திரம்' ஒன்றே அவர்கள் நிலை. இது இந்தியாவில் சாத்தியமா என்பவர்களுக்குப் பாரதி சான்று தருகிறேன்.
ரகுநாதன்(திருச்சிற்றம்பலக் கவிராயர்) எழுதினார்: "ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியை பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்கிறார்களே! ஏன் தமிழ்க் கவிஞன் பாரதியை 'ரஷ்யப் புரட்சியின் குழந்தை' என்று முழங்க மறுக்கிறீர்கள்?" 1905-1907ஆம் ஆண்டு நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிகளின் பெருந்தாக்கத்தை 'இந்தியா' ஏடு - 1906இன் பிற்பாதி இதழ்களில் பாரதி ஐந்து தலைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். 1907இல் பாரதி பாடி வெளியிட்ட 'சுதந்திரப் பள்ளு,' 1917 பிப்ரவரிப் புரட்சியின் பின் 'பொழுதுபோக்கு'(உரையாடல்), 'The Coming Age' என்ற ஆங்கிலக் கட்டுரை, 1917 அக்டோபர்ப் புரட்சி வெற்றிபெற்றவுடன் 'புதிய ருஷ்யா' என்ற கவிதை முதலானவற்றைப் பாரதி உடனடியாக இங்கு பதிவு செய்தார்.(2)[மேலும் தரவுகள் வேண்டுவோர் - பெ.தூரன் தொகுத்த 'பாரதி தமிழ்,'இளசை மணியன் தொகுத்த 'பாரதி தரிசனம்,' ஆகிய புத்தகங்களில் பெறலாம்]

அப்படியானால் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சியின் தாக்கம் உடனே இங்கு விளைகிறதென்றால் - ஐரோப்பாவில் உருவான பெண்ணியத் தாக்கம், கிட்டத்தட்ட ஒன்றேகால் நூற்றாண்டு கழித்து இங்கு உருவாகத் தொடங்குகிறது என்பதற்கு என்ன பொருள்? மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் முதல் தற்சார்பு கொண்டிருந்த படித்த, சுயசிந்தனையுள்ள (பெண்)அறிஞர்கள் ஏன் தங்களைப் பெரியார் இயக்கத்தில் மட்டுமே கரைத்துக் கொண்டார்கள்? ஐரோப்பியப் பெண்ணியத்தை ஏன் இந்தியாவில் முன்னெடுத்துச் செல்லவில்லை? கேரளப் பழங்குடியினப் போராளியான ஜானு ஏன் தன்னைப் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொடுக்கவில்லை? இந்த 'ஏன்'களுக்குத் திட்டவட்டமான விடைகள் உள்ளன. அவற்றை இந்தியப் பெண்ணியவாதிகள் எடுத்துக்கொண்டு தங்கள் பரப்புரையில் முன்வைக்க வேண்டும். அப்பொழுது இந்தியாவில் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களைக் கட்டிப்போட்ட மதவாதத்தின் பிடியிலிருந்து இந்திய மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புக்கு அவர்கள் உட்பட நேரிடும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் எழுத்திலிருந்து பெண்ணியவாதிகள் நீங்கி இயக்க அடிப்படையில் பேருருவம் கொண்டு, இந்தியாவில் பெரும்பான்மையாகவுள்ள கிராமங்களிலிருந்து பெண்ணியப் பரப்புரையைத் தொடங்க வேண்டும். ஒற்றைவரியில் சொல்ல வேண்டுமானால் "இங்கே பெண்ணியம் எழுத்துடன் இயக்கமாகவும் மாறவேண்டும்." ஐரோப்பியச் சாயலை விடுத்து இந்தியச் சாயலில் இந்தியப் பெண்களைப் அவர்களின் பொருளியல் சார்புகள் அனைத்திலுமிருந்து மீட்க வேண்டும்.


இரண்டாம் வகை - ஆய்வியல் அணுகுமுறை:

1817ஆம் ஆண்டு டார்வின்(Charles Darwin), அழுத்தமான முடிபு ஒன்றை உலகின் முன் வைத்தார். கூர்தலறத்தின்(Evolution Theory)படித்தான் உலகம் இயங்குகிறது; 'hominoid' என்ற பெருங்குரங்கினத்திலிருந்தே மனிதர்கள் தோன்றினார்கள் என்பதே அது. குரங்கிலிருந்து மனிதர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்ற வினாவுக்கு 1876ஆம் ஆண்டு, தன் ஆய்வான 'மனிதக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்' என்ற கட்டுரையில் விடைதந்தார். அவருக்குச் சற்றேறக்குறைய சமகாலத்தவரான மார்கன்(Morgan) தன் மானிடவியல் ஆய்வுகள் மூலம் ஏங்கெல்ஸ் மொழிந்தவை நூலக ஆய்வு(library research) மட்டுமல்ல, கள ஆய்வுக்கே பொருந்தி வருபவை என்று எண்பித்தார். சமூக உறவு என்பது உண்மையில் ஒன்றுக்கொன்று உற்பத்தியில் கொள்ளும் உறவே(3) என்பதால், குறிப்பிட்ட ஓர் இனத்தின் சமூக அமைப்பை - உற்பத்தியின் தன்மையும், உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொன்றும் தமக்குள் கொண்டிருக்கும் இருபால் உறவுமே தோற்றுவிக்கின்றன - என்ற சமூகவியல் கோட்பாட்டை மானிடவியல் அடிப்படையிலும் உறுதி செய்தவர் மார்கன்.

எந்திரமயமாதலின் குழந்தையென்று சொல்லத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றம் போலும் காரணங்களால் உற்பத்தியின் தன்மை மாறும்பொழுது, குறிப்பிட்ட இனத்தவரின் சமூக அமைப்பே மரபியல் அடிப்படையோடு மாறிவிடுகிறது என்பது 19ஆம் நூற்றாண்டிறுதி அறிஞர்கள்(மார்கன்,டைலர் முதலானோர்) பலரின் வலியுறுத்தலானது. காட்டுமிராண்டி நிலை>அநாகரிக நிலை>நாகரிக நிலை என்ற காலகட்டங்களாகப் பகுத்துக்கொண்டு சமூக-பொருளியல் அடிப்படையில் தம் அரிய ஆய்வை நிகழ்த்திய மார்கன், எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முடிபை இவ்வாறு மொழிந்தார்: காட்டுமிராண்டிகளும் அநாகரிகர்களும் சாதித்த சாதனைகளால்தான் நாகரிகத்தின் முற்றத்தில் மாந்தரினம் காலெடுத்துவைக்க முடிந்தது.

பிறகு வரிசையாக ஆய்வுகள்.. உலகத்தின் முதல் சமூக அமைப்பு தாய்வழி வந்ததா தந்தைவழி வந்ததா? தொடங்கிவிட்டது - பெண்மொழி, ஆண்மொழி, பெண்ணிய வெளிப்பாடு - ஆகிவற்றின் மூலங்களுக்கான தேடல்.

மாந்தரினத்தின் தொடக்கக் காலகட்டத்திலேயே ஆண்தலைமை/தந்தைவழிக் குடும்பங்கள் தோன்றிவிட்டன என்றார் வெஸ்டர்மார்க்(1903). ஆண்தலைமை விரும்பிகள் மிகப்பலராக அப்பொழுது இருந்ததால் அவருடைய ஆய்வு மிகவும் வரவேற்கப்பட்டது. இன்று மட்டும் என்ன? பிரதீபா பாட்டீல் இந்தியக் குடியரசுத் தலைவராக வருவதற்கு எத்தனை வகையான எதிர்ப்புகள்!

ஏனைய விலங்கினங்களை விடவும் சிம்பன்சிகள், ஒர்ராங் உட்டாங் முதலான குரங்கினங்களில் தாய்மைப் பண்பு நீடித்தலை அடிப்படையாக வைத்து, 1927ஆம் ஆண்டில் 'அன்னையர்' (The Mothers) என்ற ஆராய்ச்சியை ராபர்ட் ஃப்ரிவோல்ட் முன்வைத்தார்.

இவை அனைத்துக்கும் மேலாக 1974ஆம் ஆண்டில் 'தாய்வழி இனக்குழுவிலிருந்து தந்தைவழிக் குடும்பத்துக்குப் பெண்கள் அடைந்த பரிணாமம்' (Women's Evolution From Matriarchal Clan To Patriarchal Family) என்றதோர் அரிய ஆய்வை எவெலின் ரீட் வெளியிட்டார். இனக்குழுக்களின் வாழ்வியலில் தாய்வழிச் சமூகம் பெற்றிருந்த முதன்மையை அதுவரை எவெலின் ரீட் போல எவரும் ஆராயவில்லை.


இனக்குழு வரலாற்றில் தாய்வழிச் சமூகம் பெற்ற முதன்மையை இந்தியாவில் முதன்முதல் தன் இருபது கதைகளின் தொகுப்பின் தொடக்கக் கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன் ஆகியவற்றில் வைத்துச் ராகுல சாங்கிருத்தியாயன். இந்தோ ஐரோப்பிய, இந்தோ ஈரானிய மொழிகளையும் அவற்றின் வரலாற்று வாழ்வியல் மூலங்களையும் ஆராய்ந்து ராகுல்ஜி கற்றதன் பின்பே அந்த முதல் நான்கு கதைகளை எழுதினார். அத்தகைய 'வால்காவிலிருந்து கங்கைவரை(தமிழில்: கண.முத்தையா. முதற் பதிப்பு ஆகஸ்ட் 1949)(4)
என்ற அவரது இணையற்ற நூலை இந்திய அறிவுலகம் என்றும் மறக்காது. இந்தக் கதைநூலின் சித்தாந்த வடிவத்தை வாசிக்க விரும்புவோர் அவரது 'மனித சமுதாயம்' என்ற பெரிய நூலை வாசிக்கலாம்.

பெண்களைச் சமமாக ஆண்கள் நடத்த வேண்டும் என்பதைத் தன் இயக்கம் மூலமாகவும், 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூல் மூலமும் கருத்தியல் அடிப்படையில் சொன்னவர் பெரியார்.

தமிழகத்தின் முதல் பொதுவுடைமைக் கொள்கையர் மா.சிங்காரவேலர், 'பொதுவுடைமையும் பெண்களும்' என்ற 'குடியரசு'(08-11-1931) நாளேட்டுக் கட்டுரையில் ''பெண்களைத் தாழ்த்தி வருவதனால்தான் மக்களில் எழுபது விழுக்காட்டினருக்குத் தீராநோய் வருகிறது" என்று தொலைநோக்குடன் சொல்லியிருப்பதை இன்றைய 'எய்ட்ஸ் தடுப்பு'த் தன்னார்வலர்கள் மக்களிடையே பரப்ப வேண்டும்.(3)

தந்தைவழிச் சமூகம்தான் முதலில் தோன்றியது என்று வற்புறுத்துபவர்களின் மொழியைத் தொடர்ந்து நாம் உற்றுக் கவனித்தோமானால் அதில் அடக்குமுறையும் ஆதிக்கமும் சுவடு பரத்துதலைக் காணலாம்.

தந்தைவழிச் சமூக முறையைவிட தாய்வழிச் சமூக முறை போரை எதிர்த்த, போர் புரிபவர்களை ஒதுக்கி வைத்த, முற்ற முடிய ஆக்கப்போக்கிலான உலகளாவிய அமைப்பாக விளங்கிய வரலாற்றை, எவெலின் ரீட்'டின் ஆழமான ஆய்வைத் தம் உள்ளத்தில் பதியன் போட விரும்புபவர்கள், சாந்தி சச்சிதானந்தத்தின் "பெண்களின் சுவடுகள்" நூலை(5) வாசிக்க வேண்டும். அது புத்தகம் மட்டுமே அல்ல; மனிதர்களின் முதல் சமூக அமைப்பின் வாழ்க்கைச் சித்திரம். அது தொடர்பாக அறிய விரும்பிய என்னை அப்புத்தகத்துக்கு அறிமுகப்படுத்திய முனைவர் க. பரிமளம் அவர்களுக்கு நன்றி.

இதேபோல, தந்தைவழிச் சமூகத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகிறாள் என்ற வரலாற்றுத் துயரத்தை "நம் தந்தையரைக் கொல்வது எப்படி?" என்ற தலைப்பிலான நிகழ் தலித் பெண்ணிய இலக்கியப் பார்வையில் முன்வைத்திருக்கும் 'அணங்கு' இதழ்(6) ஆசிரியர் மாலதி மைத்ரி குறிப்பிடத் தக்கவர். சிமோன் தெ பொவா(Simone de Beauvoir)ரின் 'இரண்டாம் பாலினம்'(The Second Sex) என்ற உலகப் புகழ்பெற்ற பெண்ணியத் தத்துவநூல், நாகரத்தினம் கிருஷ்ணாவின்(பிரஞ்சிலிருந்து தமிழ்) மொழிபெயர்ப்பில் 'அணங்'கில் தொடராக வரத் தொடங்கியுள்ளது.(7) வெகு இயல்பாகவும் தெளிவாகவும் பெண்ணியக் கொள்கையை உலகின் முன் வைத்தவர் 'மதாம் சிமோன் தெ பொவார்.' பெண்ணியம் உருவாகக் காரணமாயிருந்த வரலாற்றின் அத்தனை கூறுபாடுகளையும் அலசிய அவர், சமூகத்தில் பெண்ணியத்துக்கு எதிராக எழுப்பப்படும் தடைவினாக்களுக்கு உரிய விடைகளைத் தந்ததுடன், ஆண்களுக்கே உரிய 'கொச்சைப்படுத்துத'லாக எழும் சவால்களுக்கு ஏற்ற பதிலடிகளையும் கொடுத்தார். 'இருத்தலியல்' கோட்பாட்டின்(Existentialism) பிதாமகனான ழோன் போல் சார்த்தர், சிமோன் தெ பொவாரின் கருத்துகளை மிகவும் மதித்தார்.

எப்படி, எந்த அணுகுமுறையில் பார்த்தாலும் - அறிவும் அறிவியலும் மிகவும் வளர்ந்துவரும் இந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் கோட்பாட்டளவிலிருந்து செயல்முறைக்கு உயர்வதில் எந்த வியப்புக்கும் இடமில்லை.

***
மிகவும் உதவிய நூல்:

சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில்..., தமிழியல்(வெளியீடு),யாழ்ப்பாணம். மார்ச் 1989. (வி.உ.)க்ரியா, சென்னை-600 014. வயல்,சென்னை - 600 004.

**
அடிக்குறிப்புகள்:

1. எங்கெல்ஸ், குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம், 1884.[இக்கட்டுரையில் பயன்படுவது 1978ஆம் ஆண்டுப் பதிப்பு]
2. ரகுநாதன், அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600098. 1977.
3. மேலது, மார்ச் - ஆகஸ்டு 2007 இதழ். பக்கம் 65.
4. ராகுல சாங்கிருத்தியாயன், வால்காவிலிருந்து கங்கை வரை. தமிழில்:கண. முத்தையா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-600005. 11ஆம் பதிப்பு 1980.
5. சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில்..., தமிழியல்(வெளியீடு),யாழ்ப்பாணம். மார்ச் 1989. (வி.உ.)க்ரியா, சென்னை-600014. வயல்,சென்னை - 600004. பக்கம் x.
6.அணங்கு - பெண்ணிய வெளி - ஆசிரியர்: மாலதி மைத்ரி. #1, மாதா கோயில் வீதி, ரெயின்போ நகர், புதுச்சேரி - 605011.
7. நாகரத்தினம் கிருஷ்ணா(மொழிபெ) - 'பெண்ணெனும் இரண்டாமினம்' சிமோன் தெ பொவார் முன்னுரை, அணங்கு மார்ச்-ஆகஸ்டு 2007, பக். 32- 45.

****
நன்றி: திண்ணை.காம்
சூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்
-தேவமைந்தன்

"இதை வாசித்தபின்
நீங்கள் என்னை
நிமிர்ந்து பார்க்க வேண்டியதில்லை
எழுதா விதிகள்
காலச்சரிவிலும் புதைவதில்லை நண்பர்களே"
- இந்தக் கவிதை வரிகளே, 'தனது வாழ்வின் அடையாளம் எழுத்து மட்டுமே' என்னும் தமிழ்நதியை அவர் எதிர்பார்ப்பிற்கேற்ப அடையாளப்படுத்தி விடுகின்றன.

முதல் முயற்சி என்று எண்ண இயலாத அளவு புலப்பாட்டு முதிர்ச்சி நிரம்பிய உயிர்ப்புடைய கவிதைகள். "குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி/இதை வாசிக்கின்ற கனவான்களே/மன்னித்துக்கொள்ளுங்கள்/மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்/உங்கள் மெல்லுணர்வுகளின் மீது அமிலம் எறிவதற்கு"('அதிகாரமும் தேவதைக்கதைகளும்') என்று அறிவித்துக்கொள்ளும் அமிலக் கவிதைகள். போரும் புலப்பெயர்வும் அதனால் இருப்பற்று அலையும் துயரும் தனக்குள் உண்டாக்கிய வெறுமையை எழுதுதல் - இவர் கவிதையைத் தன் மொழியாகத் தேர்ந்துகொண்ட நோக்கம். ஐரோப்பியத் தனிமை அல்ல இவரது சுதந்திர வெளி.

மரணம் சாவதானமாக உலவுகிற, தொடக்கமும் முடிவும் அழிந்துபோன தெருக்கள் கொண்ட, ஒவ்வோர் இரவையும் குண்டு தின்கிற, தினம்தினம் போர்தின்னும் தன் தேசத்தில் - மரத்தில் நிலத்துள் வீட்டினுள் எங்கெங்கும் சாவு ஒளிந்துளது என்று உணரும் கவிஞர் சிட்டுக்குருவியொன்றைப் பார்த்து அறிவுறுத்துகிறார்:
"சின்ன மணிக்கண் உருட்டி விழிக்கும் குருவீ
தனித்தலையாமல்
சிறகுவலித்தெங்கேனும் ஏகு
முன்னொருபொழுதில் நீ வந்து கொத்திய
முகம் பார்க்கும் கண்ணாடிபோல்
சிதறிப்போனதெம் வாழ்வு"

'சத்தத்தில், மௌனத்தில், கூட்டத்தில், தனிமையில், உறக்கத்தில், விழிப்பில், களிப்பில், கண்ணீரில்' குற்றம் சாட்டிக்கொண்டேஇருப்பது இவரது - எழுதப்படாத கவிதையின் குரல் மட்டுமல்ல. எழுதப்பட்ட கவிதையின் குரலும்தான்.. அது -
"பாவாடை அலையாடும் குழந்தையொன்று
இறந்த நகரங்களை உயிர்ப்பித்த
அதிமானிடரின் கதைகளைச் சொல்லும்போது
குற்றவுணர்வின் கிளையொன்றில் சுருக்கிட்டுத்
தொங்குதல் கூடுமென் மனச்சாட்சி ('இறந்த நகரத்தில் இருந்த நாள்')

கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, அங்கே உலவும் இயந்திர மனிதம் பிடிக்காமல் ஈழத்திற்குச் சென்று வாழமுற்பட்டவரை மீண்டும் தொடங்கிய போர் விரட்ட, எங்கே வந்து வாழ்கிறார்? "காய்கறி விற்பவன்/கண்கள் சுருக்கி/நான்காவது தடவையாகக் கேட்கிறான்/கேரளாவா?"('திரும்பிச் செல்ல விரும்புகிறேன்') விடுதலையே இயல்பான மற்றவர்களின் மனவெளிக்குள் அத்துமீறி நுழைவதையே இயல்பாகக் கொண்டுவிட்ட மனிதர்கள் வாழும் சென்னைக்கு.

கனடாவின் டொரண்டோவில் இவ்வாறெழுதினார் தமிழ்நதி :
"ரொறன்ரோவின் நிலக்கீழ்
அறையொன்றின் குளிரில்
காத்திருக்கின்றன இன்னமும்
வாசிக்கப்படாத புத்தகங்கள்
நாடோடியொருத்தியால் வாங்கப்படும்
அவை
கைவிடப்படலை அன்றேல்
அலைவுறலை அஞ்சுகின்றன"

'நாடோடியின் பாடல்,' மறைக்காமல் உண்மைகள் சிலவற்றை முன்வைக்கிறது.
"வஞ்சினத்தை வாழ்விழந்த சோகத்தைப்/பயத்தின் பசி விழுங்கும்," "அடையாள அட்டையெனும் நூலிழையில்/ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்," "உயிராசையின் முன்/தோற்றுத்தான்போயிற்று ஊராசை" என்பவை, பட்டறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த புலம்பெயர்தலின் சோகங்கள் அல்லவா?

பெண்ணிய வெளியில் ஆகவும் அதிகம் பதிவாவன ஆண் அடாவடித்தனமும் வலாற்காரமும். 'சிறகுதிர்க்கும் தேவதைகள்,' 'எழுது இதற்கொரு பிரதி,' 'துரோகத்தின் கொலைவாள்,' 'கடந்துபோன மேகம்,' 'விசாரணைச் சாவடி,' 'ஒரு பிதாமகனின் வருகை,' 'ஆண்மை' போன்ற கவிதைகள் இப்படிப் பதிவானவை.

'அதிகாரமும் தேவதைக்கதைகளும்' என்பதில், மனிதமூளை பிறப்பிக்கும் மனிதஇன அழிவுக்கான கட்டளைகள், எப்படி தாய் - மகவுறவு முதலான மானுடத்தின் அடிநாதமான கூருணர்வுகளைச் சிதறடித்து அழிக்கின்றன என்னும் அழிவின் இயங்கியல் அதிநுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது.

'குற்றமேதும் புரியாத உடலின்மேல் முள்பதித்த சாட்டையெறிகிறேன்'('துரோகத்தின் கொலைவாள்'), 'மரணத்தின் மின்னஞ்சலை/ஒளித்துவைத்து வாசிக்கும்/இவ்வுடலின் வாதை'('ஒரு கவிதையை எழுதுவது'), 'காதலும் காமமும் போர்தொடுக்கும் பெருவெளியில் நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்டவள்'('சிறகுதிர்க்கும் தேவதைகள்'), 'மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன'('உடலின் விழிப்பு') போன்ற உடல்குறித்த விழிப்புணர்வுகளும் இத்தொகுப்பில் நிறையவே இருக்கின்றன.

'யசோதரா' என்ற கவிதை, மிகவும் இறந்த காலத்துக்கே சென்று "பூக்கள் இறைந்த கனவின் வழியில்/இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி/இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்/ அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி/மறந்துபோகிறான் துணையை//அவன் தேர் நகர்ந்த வீதியும்/நெகிழ்ந்ததோ நனைந்ததோ//சாளரத்தின் ஊடே அனுப்பிய/யசோதரையின் விழிகள் திரும்பவே இல்லை/பௌர்ணமி நாளொன்றில்/அவன் புத்தனாயினான்/அவள் பிச்சியாகினாள்//"அன்பே என்னோடிரு என்னோடிரு"//கண்ணீரில் நெய்த குரலை/அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச/வரலாற்றிலிருந்தும் போனாள்/அவளும் போனாள்// சுழலும் ஒளிவட்டங்களின்/பின்னால்தானிருக்கிறது/கவனிக்கப்படாத இருட்டும்" சித்தார்த்தனுக்குள் இருந்த ஆண்மனத்தை வெளிக்கொண்டு வருகிறது. 'யன்னல்' கவிதை - சாளரத்தின் மூலம் உள்வரும் உலகை அறிமுகப்படுத்துகிறது. பெண்-ஆண் நேசக்கதை முடியுமிடம் எவ்விதமென்று 'சாத்தானின் கேள்வி'' சாடைகாட்டுகிறது. மனிதநேயத்தின் கடநிலைப்பதிவு 'ஏழாம் அறிவு.' காதலில் தொடங்கி ஆளுமையில் முடியும் ஆணாலான இழப்பை 'ஈரமற்ற மழை' புலப்படுத்தும். நதியின் சுமைதாங்கும் பொறையுடைமை, மனிதர் ஓயாது கலந்துவிடும் கழிவுகளினூடும் தன்னைத்தானே அலசிக் கொண்டு தளராது சலசலத்தோடும் திறனுடைமை ஆகியவை 'நதியின் ஆழத்தில்' கவிதையில் நன்றியுடன் போற்றப்படுகின்றன. மேலாக, ''ஆழத்தின் குளிர்மையைப்/பேசித் தேய்ந்து அடிமடியில்/ மௌனம் பழகிவிட்ட கூழாங்கற்களை/கடலின் நெடுந்தொலைவை/எவரும் அறிவதில்லை// கடந்த வழியொன்றில்/கரையோரம் நிழல்விழுத்திக்/காற்றடிக்கக் கண்ணிமைத்து/நெடுநாளாய் நிற்கும் மருதமரத்தின்மேல்/நதி கொண்ட காதலை/ அந்த நாணலும் அறியாது " என்ற தீர்க்கமான காதலைப் பொதிந்தும் வைக்கிறது. 'நீ நான் இவ்வுலகம்' கவிதையும் உலகியல் நிர்ப்பந்தங்களினூடு நிகழும் இதே ஆழமான மனிதர்க் காதலை வரிவடிவில் முன்வைக்கிறது.

புலம் பெயர்தலின் அதிதீவிரமான அன்னியமாக்கப்படுதலால் இருப்பற்று அலையும் துயரை இவ்வாறு புலப்படுத்துகிறார் தமிழ்நதி:
"நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில்விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது
பச்சைக் கவசவாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்
பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி
பசியோடு அலைந்துகொண்டிருக்கின்றன
வளர்ப்புப்பிராணிகள்
சோறுவைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்
நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது
திரும்பமாட்டாத எசமானர்கள் மற்றும்
நெடியதும் கொடியதுமான போர்குறித்து
............... ............. ..................
இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் என்
பட்டுப்பூனைக்குட்டிகளை

********************
சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி. வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம், 137 (54), இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. ஆகஸ்ட் 2007. பக்: 64. விலை: ரூ.40.
நன்றி: அணங்கு [பெண்ணிய வெளி]
'நந்தகுமாரா நந்தகுமாரா:' கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்
- தேவமைந்தன்

செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் 'துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய 'நெடுங்கதை' என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக 'novella' இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா 'வணக்கம் நண்பர்களே!' என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் 'nouvelle' 'ஒருவகை சுருக்கமான இலக்கிய'க் கட்டுரைதான். இருப்பினும், 'éditions de la connaissance' இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் - நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் 'தகவல்' அல்லது 'செய்தி' 'nouvelle'க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'nouvelle'க்கு - அடுத்த பொருள் 'சிறுகதை' என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள 'மொரீஷியஸ் கண்ணகி'யைச் சிறுகதை என்றும்; 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான 'மொரீஷியஸ் கண்ணகி' கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

"ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்" என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.'யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் 'குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்' என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது - இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) 'நந்தகுமாரா நந்தகுமாரா' தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்''-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.

பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. 'எமன் - அக்காள் - கழுதை' சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் 'அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு 'அக்கா'ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், "பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து "பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்" என்று சொல்லாமலிருந்திருக்கலாம்.." என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.
மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, 'அம்மா எனக்கொரு சிநேகிதி ' கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு 'ஓர் அசாதரணமான மௌன'மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் - மகன், குந்திதேவி - அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா - தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். "குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு"(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், "கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று" என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. 'அம்மா எனக்கொரு சிநேகிதி,' 'அக்கினிகாரியம்,' 'அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,' 'எமன் - அக்காள் - கழுதை,' 'குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) 'நந்தகுமாரா நந்தகுமாரா'(7), 'சாமி - பெரிய சாமி,' 'தாண்டவராயன்'(8), 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' ஆகிய கதைகள் - நா.கி. "வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள"(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

"சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள 'வேறொருவன்' பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்"(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, '38,39,40 - புல்வார் விக்தோர் யுகோ.' சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.

அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. 'அமலா..விமலா..கமலா,' 'ஆப்பரேஷன் மகா சங்காரம்' என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் 'பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்' சுந்தரம். 1997இல் - முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் "அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்" என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் - அமலா மட்டுமல்ல, விமலா - கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, 'ரீஜெனெரேஷன்' என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான 'ஆப்பரேஷன் மகா சங்காரம்,'
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு 'புரொக்ராம்'கள்தாம்... உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை 'மகா சங்கார'த்துக்கான 'புராஜக்ட்'டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.

பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை 'misogyny' என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான 'நந்தகுமாரா நந்தகுமாரா'வும் 'அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா'ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக - தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) 'அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்' கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் 'அறைய'ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் 'அவர்,' தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், "திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)

'மொரீஷியஸ் கண்ணகி' கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. "கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்" என்பவனுக்கு, "இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்" என்று உறுதிப்படுத்த "கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்" என்று கதை முடிகிறது. நா.கி.'யின் 'நீலக்கடல்' தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.

'பிறகு' என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.

பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, 'மொரீஷியஸ் கண்ணகி.' அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற 'ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்' என்கிற கடைசிக்கதை. 'டிஜிட்டல் காமரா' போல - நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை - காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது - இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி - திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.

'நந்தகுமாரா நந்தகுமாரா' தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் - உற்றார் உறவினர் - எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. - பக்.67, 69.
8. "எதற்காக 'என்னுடைய' அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? - நினைக்க நினைக்க ஆத்திரம்." ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. "தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?" ப.108. "...இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்." ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10."இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க"
"சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்."-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. "இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்." - '38,39,40 'புல்வார் விக்தோர் யுகோ,' ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். - '38,39,40 'புல்வார் விக்தோர் யுகோ,' ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. - கதை: 'பிறகு..' ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! - "காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்." ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்...... ப.67.
19. "திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. 'பௌருஷம்' என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. "எங்க.. அவங்கிட்டயா...வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே." ப.37.
22. 'ஆவளி' என்றால் வரிசை; 'வம்சாவளி' என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, 'கனவு'(dream state)க்கு மாற்று 'நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. 'நினைவுகூர்தல்' என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி 'நினைவுகூறுதல்' என்று ஆக்கிவிட்டார்கள்.

********

புத்தகம்:

நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)

ஆசிரியர்:

நாகரத்தினம் கிருஷ்ணா

பதிப்பகம்:

சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 - 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை - 600 083.
புத்தக அளவு: தெமி 1x8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
நன்றி: திண்ணை.காம்