பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
-தேவமைந்தன்
இரண்டு முறைகளில் இது குறித்துச் சிந்திப்போம். முதலாவது, எளியவரின்(layperson) அணுகுமுறை. இரண்டாவது, பெண்ணியம் என்பது, தாய்த்தலைமை இனக்குழுவிலிருந்து தோன்றிய உலகளாவிய பெரும் சமூக அமைப்பின் உறுப்பினளாகத் தான் விளங்கியதை ஆய்வுகளின்வழி ஓர்மையுடன் சிந்தித்துப் புரிந்து கொண்டு, அதனை மீண்டும் உருவாக்கப் பெண்ணொருத்தி தொண்டாற்ற உதவும் ஆய்வியல் அணுகுமுறை.
முதல் வகை -எளியவர் அணுகுமுறை:
சமூகம்தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. முன்பெல்லாம் சமூகம் சிறுத்த அலகாக(unit) இருந்ததை நூறு ஆண்டுகளுக்கு முந்திய கடிதங்கள் காட்டும். கூட்டுக் குடும்பம்தான் அப்பொழுதைய சமூகம். 'தாங்களும் தங்கள் சமூகமும்' என்று சொல்லி விசாரித்தார்களென்றால், 'தாங்களும் தங்களைப் பெற்றோரும் உற்றார் உறவினரும்' என்ற குடும்பக் கட்டுமானத்தை(family pack)க் குறிப்பதோடு சரி. ஏங்கெல்ஸ் அதனால்தான் தன் சமூக ஆய்வைக் குடும்பத்திலிருந்து தொடங்கி, தனிச்சொத்து அரசு என்று விரிவாக்கி அவற்றின் தோற்றத்தை ஆராய்ந்தார்.(1) இப்பொழுது குடும்பம் அணுக்கருக் குடும்பம் (nuclear family - a family unit consisting of a mother, a father, and their children) என்று ஆகிவிட்டது. நகர்ப்புறச் சமூகத்துக்கும் நாட்டுப்புறச் சமூகத்துக்கும் இருந்த புற இடைவெளி குறைந்து கொண்டே போகிறது. ஆனால் நகர்ப்புறச் சமூக மக்கள் - குறிப்பாக இளைய தலைமுறைக்கும்; கிராமப்புற மக்களுள் முக்கியமான இளைய தலைமுறைக்கும் அக இடைவெளியாகிய மனவிரிசல் மேலதிகமாகக் கூடிக்கொண்டே போகிறது. கிராமப் புறங்களில் வேர்பிடித்திருந்த குடும்ப உறவும் மூலக்குடும்பத்துடன் கொண்ட பிணைப்பும் மிகவும் அசைந்து கொடுத்திருக்கிறது. தொழிற்புரட்சிக் காலத்தை ஒட்டியும் அதற்குப் பின்னும் நாடெங்கும் இரயில் வண்டியானது ஊர்களை இணைத்து அறிவு பரவ வழிவகுத்தது. இப்பொழுதோ பேருந்துகள் கிராமப்புறங்களையும் நகரங்களையும் நன்றாக இணைத்தபின், கிராமப்புறத்து இளைஞர்கள் 'பட்டணத்து மாயை'களில் வசமாகச் சிக்கிக் கொள்ளவும் நகர்ப்புறப் பண்பாட்டின் பேரளவு தீமைகளாகிய சூது-மது-விபச்சாரம் ஆகியவற்றில் எளிதாக மாட்டிக் கொள்ளவும் வழி திறந்துவிட்டது. கல்வி வளர்ச்சி இதனால் ஏற்படவில்லையா? ஆம். ஏற்பட்டிருக்கிறது. எப்படி? நகர்ப்புறக் கல்வி நிலையங்களில் உயர்சாதி மாணவ மாணவியருடன் போட்டி போட முடியாமலும், இப்பொழுது தழைத்தோங்கியுள்ள 'மேலைமயமாத'லில் நகர்ப்புற இளைஞர்-இளைஞியரின் பண்பாட்டு விழுமிய வீழ்ச்சிகளைக் கண்டு, தம்மை அவர்களோடு ஒப்புநோக்கிக் கொண்டு தாழ்வு மனப்பான்மையால் உள்ளம் புழுங்கி கிராமப்புறத்து இளைஞர்-இளைஞியர் ஆற்றல் குறையவுமே ஆகியுள்ளது. நாட்டுப்புறங்களிலிருந்து முன்பெல்லாம் 'பஞ்சம் பிழைப்பதற்காக' மட்டுமே மக்கள் செல்வார்கள். இப்பொழுதோ வேளாண்தொழில் நன்கறிந்த குறுநில விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும்கூட கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தப்பிப் பிழைக்கப் பட்டணம் சென்று, சாலை போடும் வேலைகள் பாதாளச் சாக்கடைத் திட்டம் முதலியவற்றில் வேலை செய்து பிழைக்கிறார்கள், நிலையான பெரிய அரசியல் கட்சிகளின் 'தய'வைப் பெற்ற பெருநிலக்கிழார்கள் மட்டும் இன்றும் கிராமங்களில் கோலோச்சுகிறார்கள். அவர்களின் 'தய'வை முழுமையாகப் பெற்ற குறுநில விவசாயிகள், அங்கே ஓரளவு உத்தரவாதத்துடன் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். வாழ்வென்பதே கேள்விக்குறி ஆகிவிட்ட இந்தச் சூழ்நிலையில் பெண்ணியக் கோட்பாடு அத்தகைய குடும்பங்களின் பெண்களைச் சென்றடையும் வழி இன்னும் ஏற்படவில்லை. நகர்ப்புற - பெருநகரம் சார்ந்த - நன்கு கல்வி கற்று, சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த - பல்வேறு வேலைகளுக்குச் சென்று உழைக்கும் பெண்களிடம் பெண்ணியக் கோட்பாடு இயல்பாகவே எடுபடுகின்றது.
ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பெண்ணியம் தோற்றம் பெறக் காரணம், பொருளியல் சுதந்திரத்தை நோக்கி அங்குள்ள பெண்கள் உறுதியாக நகரத் தொடங்கியதுதான். பெண்கள் அரசியலில் பங்கேற்பதற்கு முன்னரே ஐரோப்பாவில் பெண்கல்வி முதன்மைப்படுத்தப்பட்டது. இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றிப் பக்கம் பக்கமாகக் கண்ணீர் சிந்தி நூல் எழுதுபவர்களும், மேடைகளில் முழங்குபவர்களும், கவியரங்கங்களில் கவிதை வாசித்துக் கைதட்டல் பெறுபவர்களும் மிக முக்கியமான ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். அதுதான் தற்சார்பு மட்டுமே கொண்ட பொருளியல் விடுதலை. தன் கணவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்து எழுதும் - பேசும் எந்தப் பெண்ணும், கணவருடன் இணைந்த ஒளிப்படம் எடுக்கச்சொல்லி, அதைத் தன் நேர்காணலில், முற்றிலும் வணிகப்போட்டி நிரம்பிய இதழில் போடச் சொல்லும் எந்தப் பெண்ணும் பெண்ணியம் அறிந்தவரல்லர். முற்றிலும் தற்சார்பாக இருக்கவல்ல பெண்ணே பெண்ணியம் உணர்ந்தவர். அவர் குடும்பத்தில், குடும்பத்தோடு இணைந்து வாழ்வார்; சார்ந்துவாழ மட்டார். பணியாற்றும் நிறுவனத்தில் கூடத் தனக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வேலைகளை மட்டுமே தெளிவாகவும் திறம்படவும் செய்வார். மேலாண்மையின் தனிப்பட்ட கோரிக்கைகள்(விழாவுக்கு ஏற்பாடு செய்வது போல) எதையும் அவர் ஏற்க மாட்டார். தன்மேல் சுமத்தப்படும் எவ்வகையான நிர்ப்பந்தத்துக்கும் உடனடியாக வழக்குப்போடுவார். நீதிமன்றம் செல்லத் தயங்க மாட்டார். தனக்கு உரிமையுள்ள சொத்து முதல் எதற்கும் அவர் அவ்வாறே செய்வார். சடங்குகள் சம்பிரதாயங்கள் முதலான தன்னைக் கட்டிப்போடும் எதையும் பின்பற்ற மாட்டார். தொலைக்காட்சி பார்ப்பதைக்கூட முற்றிலும் தவிர்க்கும் பெண்கள் டென்மார்க்கிலும் பிரான்சிலும் பெருகி வருகிறார்கள். 'முற்றிலும் தற்சுதந்திரம்' ஒன்றே அவர்கள் நிலை. இது இந்தியாவில் சாத்தியமா என்பவர்களுக்குப் பாரதி சான்று தருகிறேன்.
ரகுநாதன்(திருச்சிற்றம்பலக் கவிராயர்) எழுதினார்: "ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியை பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்கிறார்களே! ஏன் தமிழ்க் கவிஞன் பாரதியை 'ரஷ்யப் புரட்சியின் குழந்தை' என்று முழங்க மறுக்கிறீர்கள்?" 1905-1907ஆம் ஆண்டு நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிகளின் பெருந்தாக்கத்தை 'இந்தியா' ஏடு - 1906இன் பிற்பாதி இதழ்களில் பாரதி ஐந்து தலைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். 1907இல் பாரதி பாடி வெளியிட்ட 'சுதந்திரப் பள்ளு,' 1917 பிப்ரவரிப் புரட்சியின் பின் 'பொழுதுபோக்கு'(உரையாடல்), 'The Coming Age' என்ற ஆங்கிலக் கட்டுரை, 1917 அக்டோபர்ப் புரட்சி வெற்றிபெற்றவுடன் 'புதிய ருஷ்யா' என்ற கவிதை முதலானவற்றைப் பாரதி உடனடியாக இங்கு பதிவு செய்தார்.(2)[மேலும் தரவுகள் வேண்டுவோர் - பெ.தூரன் தொகுத்த 'பாரதி தமிழ்,'இளசை மணியன் தொகுத்த 'பாரதி தரிசனம்,' ஆகிய புத்தகங்களில் பெறலாம்]
அப்படியானால் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சியின் தாக்கம் உடனே இங்கு விளைகிறதென்றால் - ஐரோப்பாவில் உருவான பெண்ணியத் தாக்கம், கிட்டத்தட்ட ஒன்றேகால் நூற்றாண்டு கழித்து இங்கு உருவாகத் தொடங்குகிறது என்பதற்கு என்ன பொருள்? மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் முதல் தற்சார்பு கொண்டிருந்த படித்த, சுயசிந்தனையுள்ள (பெண்)அறிஞர்கள் ஏன் தங்களைப் பெரியார் இயக்கத்தில் மட்டுமே கரைத்துக் கொண்டார்கள்? ஐரோப்பியப் பெண்ணியத்தை ஏன் இந்தியாவில் முன்னெடுத்துச் செல்லவில்லை? கேரளப் பழங்குடியினப் போராளியான ஜானு ஏன் தன்னைப் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொடுக்கவில்லை? இந்த 'ஏன்'களுக்குத் திட்டவட்டமான விடைகள் உள்ளன. அவற்றை இந்தியப் பெண்ணியவாதிகள் எடுத்துக்கொண்டு தங்கள் பரப்புரையில் முன்வைக்க வேண்டும். அப்பொழுது இந்தியாவில் ஆண்களை விட்டுவிட்டுப் பெண்களைக் கட்டிப்போட்ட மதவாதத்தின் பிடியிலிருந்து இந்திய மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புக்கு அவர்கள் உட்பட நேரிடும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் எழுத்திலிருந்து பெண்ணியவாதிகள் நீங்கி இயக்க அடிப்படையில் பேருருவம் கொண்டு, இந்தியாவில் பெரும்பான்மையாகவுள்ள கிராமங்களிலிருந்து பெண்ணியப் பரப்புரையைத் தொடங்க வேண்டும். ஒற்றைவரியில் சொல்ல வேண்டுமானால் "இங்கே பெண்ணியம் எழுத்துடன் இயக்கமாகவும் மாறவேண்டும்." ஐரோப்பியச் சாயலை விடுத்து இந்தியச் சாயலில் இந்தியப் பெண்களைப் அவர்களின் பொருளியல் சார்புகள் அனைத்திலுமிருந்து மீட்க வேண்டும்.
இரண்டாம் வகை - ஆய்வியல் அணுகுமுறை:
1817ஆம் ஆண்டு டார்வின்(Charles Darwin), அழுத்தமான முடிபு ஒன்றை உலகின் முன் வைத்தார். கூர்தலறத்தின்(Evolution Theory)படித்தான் உலகம் இயங்குகிறது; 'hominoid' என்ற பெருங்குரங்கினத்திலிருந்தே மனிதர்கள் தோன்றினார்கள் என்பதே அது. குரங்கிலிருந்து மனிதர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்ற வினாவுக்கு 1876ஆம் ஆண்டு, தன் ஆய்வான 'மனிதக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்' என்ற கட்டுரையில் விடைதந்தார். அவருக்குச் சற்றேறக்குறைய சமகாலத்தவரான மார்கன்(Morgan) தன் மானிடவியல் ஆய்வுகள் மூலம் ஏங்கெல்ஸ் மொழிந்தவை நூலக ஆய்வு(library research) மட்டுமல்ல, கள ஆய்வுக்கே பொருந்தி வருபவை என்று எண்பித்தார். சமூக உறவு என்பது உண்மையில் ஒன்றுக்கொன்று உற்பத்தியில் கொள்ளும் உறவே(3) என்பதால், குறிப்பிட்ட ஓர் இனத்தின் சமூக அமைப்பை - உற்பத்தியின் தன்மையும், உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொன்றும் தமக்குள் கொண்டிருக்கும் இருபால் உறவுமே தோற்றுவிக்கின்றன - என்ற சமூகவியல் கோட்பாட்டை மானிடவியல் அடிப்படையிலும் உறுதி செய்தவர் மார்கன்.
எந்திரமயமாதலின் குழந்தையென்று சொல்லத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றம் போலும் காரணங்களால் உற்பத்தியின் தன்மை மாறும்பொழுது, குறிப்பிட்ட இனத்தவரின் சமூக அமைப்பே மரபியல் அடிப்படையோடு மாறிவிடுகிறது என்பது 19ஆம் நூற்றாண்டிறுதி அறிஞர்கள்(மார்கன்,டைலர் முதலானோர்) பலரின் வலியுறுத்தலானது. காட்டுமிராண்டி நிலை>அநாகரிக நிலை>நாகரிக நிலை என்ற காலகட்டங்களாகப் பகுத்துக்கொண்டு சமூக-பொருளியல் அடிப்படையில் தம் அரிய ஆய்வை நிகழ்த்திய மார்கன், எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முடிபை இவ்வாறு மொழிந்தார்: காட்டுமிராண்டிகளும் அநாகரிகர்களும் சாதித்த சாதனைகளால்தான் நாகரிகத்தின் முற்றத்தில் மாந்தரினம் காலெடுத்துவைக்க முடிந்தது.
பிறகு வரிசையாக ஆய்வுகள்.. உலகத்தின் முதல் சமூக அமைப்பு தாய்வழி வந்ததா தந்தைவழி வந்ததா? தொடங்கிவிட்டது - பெண்மொழி, ஆண்மொழி, பெண்ணிய வெளிப்பாடு - ஆகிவற்றின் மூலங்களுக்கான தேடல்.
மாந்தரினத்தின் தொடக்கக் காலகட்டத்திலேயே ஆண்தலைமை/தந்தைவழிக் குடும்பங்கள் தோன்றிவிட்டன என்றார் வெஸ்டர்மார்க்(1903). ஆண்தலைமை விரும்பிகள் மிகப்பலராக அப்பொழுது இருந்ததால் அவருடைய ஆய்வு மிகவும் வரவேற்கப்பட்டது. இன்று மட்டும் என்ன? பிரதீபா பாட்டீல் இந்தியக் குடியரசுத் தலைவராக வருவதற்கு எத்தனை வகையான எதிர்ப்புகள்!
ஏனைய விலங்கினங்களை விடவும் சிம்பன்சிகள், ஒர்ராங் உட்டாங் முதலான குரங்கினங்களில் தாய்மைப் பண்பு நீடித்தலை அடிப்படையாக வைத்து, 1927ஆம் ஆண்டில் 'அன்னையர்' (The Mothers) என்ற ஆராய்ச்சியை ராபர்ட் ஃப்ரிவோல்ட் முன்வைத்தார்.
இவை அனைத்துக்கும் மேலாக 1974ஆம் ஆண்டில் 'தாய்வழி இனக்குழுவிலிருந்து தந்தைவழிக் குடும்பத்துக்குப் பெண்கள் அடைந்த பரிணாமம்' (Women's Evolution From Matriarchal Clan To Patriarchal Family) என்றதோர் அரிய ஆய்வை எவெலின் ரீட் வெளியிட்டார். இனக்குழுக்களின் வாழ்வியலில் தாய்வழிச் சமூகம் பெற்றிருந்த முதன்மையை அதுவரை எவெலின் ரீட் போல எவரும் ஆராயவில்லை.
இனக்குழு வரலாற்றில் தாய்வழிச் சமூகம் பெற்ற முதன்மையை இந்தியாவில் முதன்முதல் தன் இருபது கதைகளின் தொகுப்பின் தொடக்கக் கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன் ஆகியவற்றில் வைத்துச் ராகுல சாங்கிருத்தியாயன். இந்தோ ஐரோப்பிய, இந்தோ ஈரானிய மொழிகளையும் அவற்றின் வரலாற்று வாழ்வியல் மூலங்களையும் ஆராய்ந்து ராகுல்ஜி கற்றதன் பின்பே அந்த முதல் நான்கு கதைகளை எழுதினார். அத்தகைய 'வால்காவிலிருந்து கங்கைவரை(தமிழில்: கண.முத்தையா. முதற் பதிப்பு ஆகஸ்ட் 1949)(4)
என்ற அவரது இணையற்ற நூலை இந்திய அறிவுலகம் என்றும் மறக்காது. இந்தக் கதைநூலின் சித்தாந்த வடிவத்தை வாசிக்க விரும்புவோர் அவரது 'மனித சமுதாயம்' என்ற பெரிய நூலை வாசிக்கலாம்.
பெண்களைச் சமமாக ஆண்கள் நடத்த வேண்டும் என்பதைத் தன் இயக்கம் மூலமாகவும், 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூல் மூலமும் கருத்தியல் அடிப்படையில் சொன்னவர் பெரியார்.
தமிழகத்தின் முதல் பொதுவுடைமைக் கொள்கையர் மா.சிங்காரவேலர், 'பொதுவுடைமையும் பெண்களும்' என்ற 'குடியரசு'(08-11-1931) நாளேட்டுக் கட்டுரையில் ''பெண்களைத் தாழ்த்தி வருவதனால்தான் மக்களில் எழுபது விழுக்காட்டினருக்குத் தீராநோய் வருகிறது" என்று தொலைநோக்குடன் சொல்லியிருப்பதை இன்றைய 'எய்ட்ஸ் தடுப்பு'த் தன்னார்வலர்கள் மக்களிடையே பரப்ப வேண்டும்.(3)
தந்தைவழிச் சமூகம்தான் முதலில் தோன்றியது என்று வற்புறுத்துபவர்களின் மொழியைத் தொடர்ந்து நாம் உற்றுக் கவனித்தோமானால் அதில் அடக்குமுறையும் ஆதிக்கமும் சுவடு பரத்துதலைக் காணலாம்.
தந்தைவழிச் சமூக முறையைவிட தாய்வழிச் சமூக முறை போரை எதிர்த்த, போர் புரிபவர்களை ஒதுக்கி வைத்த, முற்ற முடிய ஆக்கப்போக்கிலான உலகளாவிய அமைப்பாக விளங்கிய வரலாற்றை, எவெலின் ரீட்'டின் ஆழமான ஆய்வைத் தம் உள்ளத்தில் பதியன் போட விரும்புபவர்கள், சாந்தி சச்சிதானந்தத்தின் "பெண்களின் சுவடுகள்" நூலை(5) வாசிக்க வேண்டும். அது புத்தகம் மட்டுமே அல்ல; மனிதர்களின் முதல் சமூக அமைப்பின் வாழ்க்கைச் சித்திரம். அது தொடர்பாக அறிய விரும்பிய என்னை அப்புத்தகத்துக்கு அறிமுகப்படுத்திய முனைவர் க. பரிமளம் அவர்களுக்கு நன்றி.
இதேபோல, தந்தைவழிச் சமூகத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்படுகிறாள் என்ற வரலாற்றுத் துயரத்தை "நம் தந்தையரைக் கொல்வது எப்படி?" என்ற தலைப்பிலான நிகழ் தலித் பெண்ணிய இலக்கியப் பார்வையில் முன்வைத்திருக்கும் 'அணங்கு' இதழ்(6) ஆசிரியர் மாலதி மைத்ரி குறிப்பிடத் தக்கவர். சிமோன் தெ பொவா(Simone de Beauvoir)ரின் 'இரண்டாம் பாலினம்'(The Second Sex) என்ற உலகப் புகழ்பெற்ற பெண்ணியத் தத்துவநூல், நாகரத்தினம் கிருஷ்ணாவின்(பிரஞ்சிலிருந்து தமிழ்) மொழிபெயர்ப்பில் 'அணங்'கில் தொடராக வரத் தொடங்கியுள்ளது.(7) வெகு இயல்பாகவும் தெளிவாகவும் பெண்ணியக் கொள்கையை உலகின் முன் வைத்தவர் 'மதாம் சிமோன் தெ பொவார்.' பெண்ணியம் உருவாகக் காரணமாயிருந்த வரலாற்றின் அத்தனை கூறுபாடுகளையும் அலசிய அவர், சமூகத்தில் பெண்ணியத்துக்கு எதிராக எழுப்பப்படும் தடைவினாக்களுக்கு உரிய விடைகளைத் தந்ததுடன், ஆண்களுக்கே உரிய 'கொச்சைப்படுத்துத'லாக எழும் சவால்களுக்கு ஏற்ற பதிலடிகளையும் கொடுத்தார். 'இருத்தலியல்' கோட்பாட்டின்(Existentialism) பிதாமகனான ழோன் போல் சார்த்தர், சிமோன் தெ பொவாரின் கருத்துகளை மிகவும் மதித்தார்.
எப்படி, எந்த அணுகுமுறையில் பார்த்தாலும் - அறிவும் அறிவியலும் மிகவும் வளர்ந்துவரும் இந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் கோட்பாட்டளவிலிருந்து செயல்முறைக்கு உயர்வதில் எந்த வியப்புக்கும் இடமில்லை.
***
மிகவும் உதவிய நூல்:
சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில்..., தமிழியல்(வெளியீடு),யாழ்ப்பாணம். மார்ச் 1989. (வி.உ.)க்ரியா, சென்னை-600 014. வயல்,சென்னை - 600 004.
**
அடிக்குறிப்புகள்:
1. எங்கெல்ஸ், குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம், 1884.[இக்கட்டுரையில் பயன்படுவது 1978ஆம் ஆண்டுப் பதிப்பு]
2. ரகுநாதன், அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 600098. 1977.
3. மேலது, மார்ச் - ஆகஸ்டு 2007 இதழ். பக்கம் 65.
4. ராகுல சாங்கிருத்தியாயன், வால்காவிலிருந்து கங்கை வரை. தமிழில்:கண. முத்தையா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை-600005. 11ஆம் பதிப்பு 1980.
5. சாந்தி சச்சிதானந்தம், பெண்களின் சுவடுகளில்..., தமிழியல்(வெளியீடு),யாழ்ப்பாணம். மார்ச் 1989. (வி.உ.)க்ரியா, சென்னை-600014. வயல்,சென்னை - 600004. பக்கம் x.
6.அணங்கு - பெண்ணிய வெளி - ஆசிரியர்: மாலதி மைத்ரி. #1, மாதா கோயில் வீதி, ரெயின்போ நகர், புதுச்சேரி - 605011.
7. நாகரத்தினம் கிருஷ்ணா(மொழிபெ) - 'பெண்ணெனும் இரண்டாமினம்' சிமோன் தெ பொவார் முன்னுரை, அணங்கு மார்ச்-ஆகஸ்டு 2007, பக். 32- 45.
****
நன்றி: திண்ணை.காம்
No comments:
Post a Comment