21.12.08

தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்- தேவமைந்தன்(பேராசிரியர் அ. பசுபதி)

சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில், தந்திச் செய்திகள் அனுப்ப மோர்ஸ் முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். தமிழில் தந்தி கொடுக்கும் வழக்கம் அப்பொழுதில்லை. தமிழில் தந்தி கொடுக்க ஒரு புதிய முறையை ஏன் உருவாக்கக் கூடாது என்று இந்திய அரசின் தந்தித் துறையில் பணியாற்றியவரும் அன்றைய வித்துவான் பட்டம் பெற்றவருமான அ. சிவலிங்கம் 1945இல் சிந்தித்தார். விளைவாக, தமிழ் எழுத்துகளுக்கு உரிய மோர்ஸ் ஒலிக்குறியீடுகளை உருவாக்கினார்.1956ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் நிகழ்ந்த இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் மாநில மாநாட்டில் செய்தியாளர்கள், தந்திமுறை பற்றி அறிந்தவர்கள், பயனாளர்கள், இது குறித்து அதுவரை எதுவும் அறிந்திராத பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், அவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு தமிழில் தந்தி அனுப்ப - தான் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளுக்கான மோர்ஸ் சங்கேதக் குறிகளைக் கொண்டு புலவர் அ. சிவலிங்கம் செயல்முறை விளக்கம் அளித்தார். அப்பொழுது புதுக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த பரசுராமன் என்பவருடைய துணையுடன் தமிழிலேயே தந்தி விடுத்தும் பெற்றும் காட்டினார். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை அவர் செயலாக்கினார் என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் அருமை புரியும். தொலைத் தொடர்புத்துறை பொது மேலாளர் த. நாராயணமூர்த்தி தமிழ்த்தந்தி நடைமுறைக்கு வர ஆற்றிய அரும்பணியையும் தினமணி சுடர் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டது. அ. சிவலிங்கனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் த. நாராயணமூர்த்தி.அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடந்த தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினார்.இப்பொழுதும்கூட உலகமுழுதும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு முறையில் ஆங்கில எழுத்துகளின் வழியாகத் தமிழில் தட்டெழுதும் முறை உள்ளது. இதேபோல சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதுதான் தமிழ்த் தந்தி என்று பலரும் நினைத்தார்கள். "அது தவறு; தமிழிலேயே சங்கேதக் குறிகளைப் பயன்படுத்தி தமிழில் தந்தி அனுப்பலாம்!" என்று புலவர் அ. சிவலிங்கம் எண்பித்தார்.முப்பத்து மூன்று ஒலிக்குறியீடுகள் மூலமாக தமிழில் தந்தி அனுப்பவோ, பெறவோ இயலும் என்ற புதிய முறை, புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்தது. எண்களுக்கு மட்டும் ஆங்கிலக் குறியீடுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். வாழ்த்துத் தந்திகளும் எண்களுக்கேற்பத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றன. மோர்ஸ் உருவாக்கிய தந்திமுறையைக் கற்றவர்கள், இவர் அமைத்த முறையைப் பதினைந்து நாள்களுக்குள் கற்றுக்கொள்ள இயன்றது.புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்த தமிழ்த் தந்தி ஒலிக்குறியீடுகள் தற்பொழுது பயன்படுத்தப் பெறுவதில்லை. "என்றாலும் தமிழில் தந்தி அனுப்புவதற்கான முதல் தொழில் நுணுக்க உத்தியை உருவாக்கியவர் அவர்தான். அவரது கனவு இப்பொழுது நனவாகிறது" என்று தினமணி சுடர் 15/01/1994 இதழ்(பக்கம் 22-இல்) தெளிவாகக் குறிப்பிட்டது.தமிழ்த் தந்தி முறை குறித்து அப்பொழுது இந்திய நடுவண் அரசில் தபால் தந்தித் துறை அமைச்சராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் என்ன சொன்னார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.ஆனந்த விகடன் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழில் ஏன் கூடாது?தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் தந்தி அனுப்ப வாய்ப்பும் வசதியும் இருப்பதுபோல் தமிழிலும் தந்தி அனுப்பும் முறை கொண்டு வரப்பட வேண்டுமென்ற யோசனையைத் தபால் மந்திரி டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் 'தேவையற்றது' என்று சொல்லி நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது."இத்தகைய கோரிக்கையினால் நாட்டில் பிளவும் பிரிவினை உணர்ச்சியும்தான் ஏற்படும். இம்மாதிரியான மொழிவெறி சுதந்திரத்துக்கே ஆபத்தாக முடியும்" என்று அவர் கூறுகிறார்.திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த போது, திரு அப்துல் சலாம், மந்திரி அவர்களைச் சந்தித்து தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மந்திரி முன் அ. சிவலிங்கனாரும் அவருடைய பதினான்கு அகவை மகன் தமிழ்ச்செல்வனும் தமிழ்த்தந்தியைச் செயற்படுத்திக் காட்டினார்கள். ஒரு சிறுவன் அதில் கலந்து கொண்டதைப் பார்த்து எல்லோரும் வியந்தனர்.அப்போதுதான் மந்திரி சுப்பராயன் அவர்கள் மொழிவெறியின் அபாயத்தைச் சுட்டிக்காட்டி, தமிழில் தந்தி அனுப்பும் முறை தேவையில்லை என்று கூறியுள்ளார்.தமிழில் தந்தி அனுப்பும் வசதி வேண்டுமென்று கோருவது எவ்வாறு மொழிவெறியாகும் என்பதுதான் விளங்கவில்லை.தந்தி தபால் போன்ற வசதிகள் படித்துப் பட்டம் பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தான வசதிகள் அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்படவேண்டிய வசதிகள். ஆகவே பெரும்பாலான மக்களுக்கு நன்கு பழக்கமுள்ள மொழியில்தான் தந்தி அனுப்புவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.ஒரு கிராமவாசி ஒரு தந்தி அனுப்புவதற்கோ, வந்த தந்தியைப் படித்துப் புரிந்து கொள்வதற்கோ ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்த பட்டதாரியைத் தேடிக் கொண்டு ஒவ்வொரு தடவையும் ஓட வேண்டுமென்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமில்லை............................................ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி ஆட்சி மொழியாகி விட்டது. நிர்வாகம், கல்வி, வர்த்தகம் எல்லாமே தாய்மொழியில் நடக்கும்போது, செய்தியை அனுப்புவதற்கு அந்த மொழி தேவையில்லை என்று சொல்வதுதான் குறுகிய மனப்பான்மையாகும். தந்தி அனுப்ப ஆங்கிலமே போதுமென்றால் இந்தியில் மட்டும் அதற்கான வசதி அளிக்க வேண்டிய அவசியமென்ன? உண்மையில் தபால் தந்தி இலாகாவின் பொறுப்பு, மக்கள் ஒருவருக்கொருவர் செய்தி தெரிவித்துக் கொள்வதை எளிதாக்குவதுதான். தேச ஒற்றுமையை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.தாய்மொழி மீது அளவுகடந்த வெறி கொண்டு யாரோ சிலர் அர்த்தமற்ற கோரிக்கைகளை விடுக்கிறார்கள் என்பதற்காக தாய்மொழி சம்பந்தமான எந்தக் கோரிக்கையையுமே மொழி வெறி என்று சொல்லி நிராகரிப்பது முற்றிலும் நியாயமல்ல."ஐம்பதுகளின் ஆனந்த விகடன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கையில், 15/01/1994 தினமணி சுடர் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழ்த் தந்தி முறை தமிழகத்திற்குப் பயனளிக்கும் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பரிசீலனை செய்யுமாறு அப்போதைய தபால் தந்தி இலாகா அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் அதுபற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாததால் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுவிட்டது."எவ்வளவு காலந் தாழ்த்தப் பட்டிருக்கிறது? முப்பத்தெட்டு ஆண்டுகள்.கடைசியில் தினமணி சுடர் (சனவரி 15, 1994. பக்கம் 22) குறிப்பிட்டது:".......தமிழில் தந்தி தமிழர்களுக்குப் பொங்கல் நாளில் கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலாக இருக்கப் போகிறது.""தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்த் தொலைவரிமுறை கண்டுபிடிப்பு, பாராட்டுரை" என்ற முடங்கலில் 1998ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பின்வருமாறு மொழிந்திருக்கிறார்:"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ்நாடு அரசின் தலையாய கொள்கை. தமிழால் முடியாததில்லை என்பதைத் துறைதோறும் அறிஞர் பலர் எண்பித்துக் காட்டியுள்ளனனர். காட்டியும் வருகின்றனர். இவ்வகையில் புலவர் அ. சிவலிங்கனாரின் பணி போற்றத்தக்கதாகும். 1945ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் பணியாற்றிய புலவர் அ. சிவலிங்கனாருக்கு நம் அன்னைத் தமிழில் தொலைவரி அனுப்பும் முறையைக் கண்டுபிடிக்க முடியாதா? எனும் ஏக்கம் பிறந்தது. எப்போதும் இதே சிந்தனை. இரவு பகல் பாராது உழைத்தார். 1955ஆம் ஆண்டு அவர் கனவு நனவாகியது. 13.08.1956 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அஞ்சல் துறைப் பணியாளர் மாநில மாநாட்டிலும், 07.10.1956 அன்று குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் தமிழில் தொலைவரிச்செய்தி அனுப்பும் முறையைச் செயற்படுத்திக் காட்டினார். கொடுத்த தமிழ்ச் செய்திகளை அப்படியே வாங்கி அனுப்பியும் காட்டினார். அனைவரும் வியந்து பாராட்டினர். அயல்நாடுகளின் செய்தித் தாள்களும் அளவின்றிப் புகழ்ந்தன. இச்செயற்பாட்டை நேரிற்கண்டு மகிழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழ்த் தந்திக் கண்டுபிடிப்புக்கு உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே. தமிழ்த் தந்திமுறை செயற்படுத்தப்படுமானால் அதனால் வரும் புகழுக்கு அ.சிவலிங்கம் தனியொருவரே உரியவர்.மொழி ஞாயிறு திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கும் அரசியலார் இம்முறையை உடனே கையாள்வதுடன், திருவாளர் அ. சிவலிங்கனார்க்குத் தக்கதொரு பெரும் பரிசும் அளித்தல் வேண்டும். அது அவர் கடன்.இவ்வகையில் தமிழில் தொலைவரிச் செய்தி தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்துத் தமிழுக்கு வளம் சேர்த்த புலவர் திரு. அ. சிவலிங்கனாரின் அரும்பணியைப் போற்றும் வகையில் அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையையும் இப்பாராட்டுரையையும் தமிழக அரசு வழங்கி மகிழ்கிறது.(ஒப்பம்:........முதலமைச்சர். சென்னை 600 009. நாள் 24.12.1998.)திருவள்ளுவர் ஆண்டு 2029, வெகுதான்ய, ஐப்பசி 28: ஆங்கிலம் 13-11-98 ஆம் நாளிட்ட அரசாணை எண் 114இல், "முதன்முதலில் தமிழில் தந்தி முறைக்கு வித்தூன்றிய புலவர் திரு அ. சிவலிங்கம் அவர்களை அரசு பாராட்டி சிறப்பிக்க வேண்டுமென்றும், பாராட்டி பணமுடிப்பு வழங்க ரு.50,000/-மும், தகுதியுரை, பொன்னாடை போன்றவை மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.2500/-ம் ஆக மொத்தம் ரூ.52,500/- ஒப்பளிப்புச் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்" என்று கண்டுள்ளது.ஏன் இதுகுறித்து இவ்வளவு விளக்கம் என்றால், தமிழ்நாட்டுக்கே உரியதொரு வழக்கத்துக்கேற்ப, 1956-ஆம் ஆண்டு தமிழில் தந்தி முறையை முப்பத்து மூன்று ஒலிக்குறிகளில் இயக்கக் கூடியதாக முதலாவதாக இவர் கண்டுபிடித்து உலகறிய வெளிப்படுத்திய ஒலிக்குறியீடுகளைச் சிறிது திருத்தியும் மாற்றியும் மற்றவர் தமிழில் தந்தி அனுப்பும் முறையை உருவாக்கி நடுவணரசிடம் பெயர் பெற்றதுடன், அதன் அடிப்படையில் தந்தி அனுப்பும் முறை தொடங்கியமையாலேயே இத்தனை வயணங்கள் வேண்டப்பட்டன. இதனால், கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டு மன உளைச்சல் பட்டும் உழைத்து, விடாது முயன்று, சான்றோர் துணையுடனும் எத்துறையிலும் இடம்பெறக்கூடிய நல்லவர்கள் உதவியுடனும் தமிழ்நாட்டரசின் ஆதரவும் பெற்று தாம்தாம் முதன்முதலில் தமிழ்த்தந்தியின் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்தமையை நிறுவ வேண்டிய கடப்பாடும் புலவர் அ. சிவலிங்கனாரைச் சேர்ந்து கொண்டது. இதைக் கேள்விப்பட்டதாலேயே என்னைப் போன்ற பலருக்கு இவர்பால் மதிப்பும் ஈடுபாடும் ஏற்பட்டன.அறிஞர் அண்ணா, சி.ராஜகோபாலாச்சாரியார், காயிதே மில்லத் இஸ்மாயில், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க. அன்பழகன், கலைஞர் கருணாநிதி, இந்திய அஞ்சல் தொலைவரித் துறை டைரக்டர் ஜெனரல் நஞ்சப்பா, குல்கர்னி முதலானோர் அறிய தமிழ்த் தந்தி முறையை வெற்றியாகச் செயற்படுத்தி பாராட்டுப் பெற்றார்.தமிழ்த் தந்தி முறையை உருவாக்கியது இவர்தம் சாதனை என்றால் தொழிற்சங்கத் தலைவராக விளங்கியது, பல ஊர்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தியது, திருக்குறளை இசையோடு பயின்று மேடைகளில் பாடியது, 'தமிழில் தந்தி' 'உலகக் கவிதைகள்'(இந்த நூலைக் குறித்த தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையை உலகத் தமிழர்கள் ஈடுபாட்டுடன் வாசித்து வரும் திண்ணை.காம் வலையேடு வெளியிட்டது) 'திருக்குறளும் உலகமும்' போன்ற சிறந்த நூல்களை எழுதியது, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான்கு நூல்களை என்.சி.பி.எச். சார்பாக மொழியாக்கம் செய்தது, சோவியத் யூனியன் பரிசுகளை வென்றது முதலான பன்முகச் செயற்பாடுகள் இவருடையவை என்று பாராட்டலாம்.புலவர் பட்டத்துடன் ஆங்கில முதுகலைப் பட்டமும் பெற்ற திரு அ. சிவலிங்கனார் திருச்சிக்காரர். 26.05.1924 அன்று கள்ளக்குறிச்சியில் அப்பாஜி - சம்பூர்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1944இல் காரைக்குடியில் அஞ்சல் எழுத்தராகச் சேர்ந்தார். தந்திப் பயிற்சி அரசுப் பள்ளியில் 1945இல் பெற்றார். கரம்பக்குடியில் அஞ்சலகத் தலைவராகப் பணியாற்றியபோது, 1955இல் தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்தார்.தற்பொழுது எண்பத்து நான்கு அகவையானாலும் புதிய புத்தகங்களையும் இணையப் படைப்புகளையும் வாசிப்பதில் தளராத ஈடுபாடு கொண்டுள்ள தமிழ்த்தந்தி சிவலிங்கனார் முகவரி:புலவர் அ. சிவலிங்கம், எம்.ஏ.(ஆங்கிலம்)தமிழ்த் தந்தி கண்டுபிடிப்பாளர்,சி-28, தமிழ்த் தந்தி இல்லம்,சேஷசாயி நகர்,க.க.நகர், திருச்சி -21.அ.கு.எண்: 620 0௨௧

********

karuppannan.pasupathy@gmail.com

No comments: