சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- தேவமைந்தன்
புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை.
சிலர் எழுதும் கதைகள் கட்டுரைகளைப் போல ஒருபக்கமும் கதைகளைப் போல மறுபக்கமும் அமைந்து, உருப்படியான கதைகளாகவோ கட்டுரைகளாகவோ இல்லாமல் போவதைக் காண முடிகிறது.
எரிஃச் ஃப்ராம்’மின் “To Have Or To Be?” என்ற புத்தகம், மனிதர்களுக்கே இந்த நிலை உண்டாவதைக் காட்டுகிறது. அதைப்போக்கவும் உதவுகிறது.
கட்டுரை படைப்பிலக்கியமாவது பற்றி மட்டுமல்ல, எழுதுகிறவனை மெய்யாக அறிமுகப்படுத்துவதே அவனெழுதும் கட்டுரைகள்தாம்.
“எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனுடைய படைப்புகள் உதவுகின்றன; சரிதான். இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது கட்டுரைகளே” என்கிறார் கி.ரா.
‘கரிசல் காட்டுக் கடுதாசி’க் கட்டுரைகளில் ஒன்றாக முதலில் வெளிவந்த ‘அண்ணாச்சி’க்குப் பின்னால் ஒரு தனிக்கதையே இருக்கிறது.
மாத இதழொன்றின் ஆசிரியர் ஒருவரை குற்றாலத்தில் ‘தீட்சிதர் கடை’யில் கி.ரா. சந்திக்க நேர்ந்தது. தீட்சிதர்தான் கி.ரா.வை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். “ஆஹா அப்படியா; ஒங்களைப் பார்த்ததே பாக்யம்!” என்று சொல்லிவிட்டுத் தனது மாத இதழுக்கு அருமையானதொரு கட்டுரை ஒன்றை எழுதியனுப்புமாறு கேட்டிருக்கிறார்.
கி.ரா.வோ ‘வெள்ளந்தி’யாக, இந்த அருமையான ‘அண்ணாச்சி’ கட்டுரையை எழுதி கையில் நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ளாமல் அவருக்கு அனுப்பி இருக்கிறார்.
அவ்வளவுதான். அந்தக் கட்டுரையை மாத இதழாசிரியர் வெளியிடவுமில்லை; திருப்பி அனுப்பவுமில்லை. ‘எரித்திருப்பாரோ?’ என்று நொந்து போன கி.ரா. எழுதுகிறார்: “என்னை எரிக்க முடியலை; முடிந்தால் செய்திருப்பார்.”
தொலைந்து போனதில் அதிர்ச்சி; திரும்பவும் எழுதினால் முன்போலவே அசலாக அமையுமோ என்கிற மன உளைச்சல்; ‘ரொம்பவும் தவிதாயப்பட்டு’ப் போயிருக்கிறார் கி.ரா..
‘அண்ணாச்சி’ இறந்து முப்பத்தைந்தாண்டுகள் கழித்து அவரை நினைத்து மீண்டும் எழுத “பரவாயில்லை; வந்துவிட்டார்.”
“இப்பவும் அண்ணாச்சி என்னோடே இருக்கிறார்....”
தஞ்சை அகரம் வெளியீடான ‘கி.ராஜநாராயணன் கட்டுரைகள்’(2002) என்னும் பெரிய அளவுப் பதிப்பின் முன்னுரையில் இந்தச் சேதி இடம் பெற்றுள்ளது.
‘கந்தசாமி செட்டியார் அண்ணாச்சி’ ‘கவி. க. வ. கந்தசாமி செட்டியார்’ ‘கரடிகுளம் கந்தசாமி’ போன்ற பெயர்களால் அறியப்பெற்றவர் அண்ணாச்சி.
கோவில்பட்டியில், முதலில் பருத்திக்கொட்டை புண்ணாக்குக் கடையும் பின்னர் பேருந்து நிலையத்துக்கு எதிரில் வெற்றிலை பாக்குக் கடையும்; பிறகு இட்லி தோசை விற்கும் காபி பலகாரக் கடையும் என்று அண்ணாச்சியின் கடை பரிணாமப்பட்டது போலவே அவரது வாழ்க்கையும் - ‘குடும்பத்துக்கு முன்’ ‘குடும்பத்துக்குப் பின்’ என்று இரு வேறானது.
‘ரசனை’ மிகுந்தவராகவும்; திருமணத்துக்கான பொருட்களை வாங்குவதற்காக கோவில்பட்டிக்கு வருபவர்கள், அவ்வாறு வாங்கச் செல்லுமுன் தன்னிடம் மணமக்களின் பெயர்களைத் தந்து சென்றால் அவர்கள் ஊர் திரும்புகையில் திருமண வாழ்த்துக் கவிதையை இலவசமாக எழுதிக் கொடுப்பவராகவும்; ‘ஜ’ ‘ஷ’ போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பு பிடிபடாத ‘நாக்குச் சொல்லமைப்பு’ உடையவராகவும் [காந்திசி, நேருசி, ராசாசி, ராசநாராயணன்]; எப்பொழுதுமே நாலுமுழக் கதர் வேட்டி - வெளியூர்ப் பயணத்தின் பொழுது அதனுடன் அரைக்கைச் சட்டை, துண்டு - கடுமையான குளிர் என்றால் நாலுமுழக் கதர் வேட்டியுடன் அரைக்கை பனியன் என்று எளிமையாக உடுத்துபவராகவும்; கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்ப மதித்ததனால் ‘காங்கிரஸ் சகா’க்களால் ‘படுகம்யூனிஸ்டுதான்’ என்று முத்திரை குத்தப்பட்டவராகவும்; எட்டடிக்குப் பத்தடி நீளம் கொண்ட அறையில் வாழ்பவராகவும் விளங்கிய அண்ணாச்சியின் வாழ்க்கை அவருக்கு கோட்டைக் கழுகுமலை கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயமானபின் முழுவதுமாகத் திசை திரும்பியது.
முதலில் ‘வெத்திலை பாக்குக் கடை’ வைத்திருந்த அண்ணாச்சி, “நல்ல கருப்பு நிறம். சற்று முன் துருத்திய நெருக்கமில்லாத வெள்ளைப் பற்கள். கதிமையான முன் வளைந்த சிறிய மூக்கு. குறுகிய நெற்றியின்மேல் கமான்வளைவில் மழிக்கப்பட்ட விட்டல்க் கிராப். அதிக உயரமில்லாத, கர்லாக் கட்டைபோல நல்ல கட்டான உடம்பு. ஒவ்வொரு விரலும் ஒண்ணரை விரல்த்தண்டி இருக்கும்.” (கி.ராஜநாராயணன் கட்டுரைகள், அகரம் வெளியீடு, ப.131) ‘எதேச்சையாக ராஜா போல இருந்த அண்ணாச்சி’க்கு ‘குடும்பம் என்று ஆனதும் பொருளாதாரக் கஷ்டங்கள் தொடங்கிய பின்னர், நடத்திய ஓட்டல் கடையிலும் வேலையாள் வைத்துக் கொள்ளாமல் செய்த அதிக உழைப்பும் இரவெல்லாம் தலைக்குழந்தை பெண்பிள்ளை நச்சு நச்சு என்று அழுதுகொண்டே இருப்பதால் தூக்கமின்மையும் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்துபோய் சளி இருமலில் விட்டு அவையும் அதிகமாகி மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்த்ததில் ‘டி.பி.’ என்று முடிவானது. ‘டி.பி.’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அண்ணாச்சி நடுங்கிப் போனார். பிறகு இவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விடுவோமோ என்று தன் குழந்தையையும் குடும்பத்தையும் எண்ணிக் கண்ணீர் விட்டார்.
அண்ணாச்சிக்கு கி.ரா. ‘ரொம்ப ஆறுதல் சொல்லித் தேற்ற’ வேண்டியிருந்தது.
அண்ணாச்சிக்கும் அவர் மனைவிக்கும் உருவத்தில் பொருத்தமில்லாது போனதைப் போலவே (‘அண்ணாச்சியின் தாட்டியமான அந்த உடம்புக்கும் இந்த சீத்தக்குஞ்சி போலுள்ள பெண் உடம்புக்கும்’ ப.138), உள்ளத்திலும் பொருத்தமில்லாமல் போனது. அண்ணாச்சிக்கும் அவரது மனைவிக்கும் சதா பூசல். வெளிக்குப் போகும் இடத்தில் வைத்துச் சொல்லுவார் வருத்தத்தோடு: “ராசநாராயணன் இண்ணைக்கு அவளை அடிச்சிட்டேன்”(ப.146)
அண்ணாச்சிக்குப் புத்தகங்கள் என்றால் உயிர். பின்னர் படிப்போம் என்று அவர் வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் அவர் மின்விபத்துக்குள்ளான ஓராண்டுச் சிரமகாலத்தில் அவர் குடும்பத்துக்கு உதவின. தவிர, அது புத்தகங்களின் மதிப்பைத் தெரிந்தவர்களின் காலமுங்கூட.
எதிலும் தரும நியாயங்களைப் பார்த்து மனச்சாட்சிப்படி நடக்கும் இயல்புள்ள அண்ணாச்சிக்குப் புத்தகங்களைப் பொருத்தவரை விதிவிலக்கு. “நல்ல காலத்திலேயே அவரிடம் போகும் புத்தகங்கள் திரும்பாது. அவரை ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி ஒரு நாட்டின்மேல் படையெடுக்கச் சொன்னால் தலைநகரைப் பிடித்ததும் அவருடைய படைச் சிப்பாய்கள் பொக்கிஷத்துக்குள் நுழைந்து பொன்னும் மணியையும் அள்ளிக்கொண்டிருந்தால் இவர் நேராக நூலகத்துக்குள் நுழைந்து புத்தகங்களைத்தான் அள்ளுவார்!
எவ்வளவோ அருமையான எங்களுக்குப் பிரியமான எங்களுடைய புத்தகங்களெல்லாம் அவரிடம்போய் சிக்கிக்கொண்டது. என்ன ஜெகஜாலம் போட்டாலும் அவரிடம் நடக்காது. அவ்வளவும் தூரிக்குள்ப்போன மீன்களின் கதிதான்.”(பக்.138-139)
அண்ணாச்சிக்கு அவர் சேர்த்த புத்தகங்களை வாசிக்க எங்கே நேரம்? முதல் நாள் இரவு வெளியூர்களிலிருந்து கடைசிப் பேருந்து வந்தபின் கடையை அடைத்து, அடுத்தநாள் காலையிலேயே திறக்கும் அண்ணாச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை கிடையாது. காரணம், பேருந்துகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லை அல்லவா?
“பத்திரிக்கைகளை மட்டும் பருவட்டாக ஒரு மேய்ச்சல் மேய முடியும், கேட்கிறவர்களுக்கு சரக்கு கொடுத்துக்கொண்டே. பின்னாளில் கிடைக்கப்போகும் ஓய்வு நாளை நினைத்தோ என்னமோ அண்ணாச்சி இப்படி ஈவு இரக்கமில்லாமல் புத்தகங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டே வந்தார். கடேசியில் சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர்காய நேரம் இல்லை என்கிற பழமொழி அண்ணாச்சி விஷயத்திலும் உண்மையாயிற்று..................... காந்தியின் பரமசீடரான, மருந்துக்கும் பொய் சொல்லாத அண்ணாச்சி இந்தப் பொஸ்தக விஷயத்தில் மாத்திரம் பொய் சொல்லுவார்.”(ப.139)
இறந்த பின்பும்கூட அண்ணாச்சி பிறருக்கு உதவியாகத்தான் இருந்தார். கனத்த கோடைமழையில் மின்கம்பி அறுந்து தெருவில் வீழ்ந்தது தெரியாமல் ‘கண்டக்டர் அம்பி’ அதன்மேலேயே இடது மணிக்கை பட குப்புற வீழ்ந்து மெல்ல மெல்ல உயிரிழப்பதைக் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்திருந்த மனிதர்கள் போலல்லாமல், எப்படியும் அம்பியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற திடமான முடிவுடன் ஓடிப்போய், மணி அண்ணாச்சியின் மருந்துக் கடைக்கு வந்த பார்சல் பெட்டியிலிருந்து நீளமானதொரு பலகைச் சில்லை எடுத்துக்கொண்டு ஓடிவந்து கண்டக்டர் அம்பியின் கையை மின்கம்பியிலிருந்து தள்ளிவிட முயன்று குனிந்தார். அவர் கால் பதிக்கப்போகும் அந்த ஈரத்தரையிலும் மின்சாரம் பாய்ந்திருக்கும் என்று அறிந்து எச்சரிக்கும் தகுதியுள்ளவர் எவரும் அந்த அறிவில்லாத கூட்டத்தில் இல்லை. அதனால் அண்ணாச்சி அந்த மின்கம்பிமேல் மல்லாந்து விழ நேர்ந்து விட்டது. கண்டக்டர் அம்பியுடன் அண்ணாச்சியும் உலகை நீத்து விடுகிறார்.
பிறகு நடந்தவை வழக்கம் போல. மின்சாரத்துறை, அம்பியின் குடும்பத்தார்க்கு மட்டும் ஈட்டுத்தொகை தந்தது. (அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட) கந்தசாமி செட்டியார், தெரிந்தே அதில் போய் விழுந்தார் என்று காரணம் காட்டி அவர் குடும்பத்துக்கு உதவ மறுத்து விட்டது. விடுவார்களா? உணர்ச்சி பூர்வமாக நினைவேந்தியவர்கள் சிலர், நிதி வசூலில் உடனே இறங்கினர். அண்ணாச்சியின் குடும்பத்துக்குப் பதில் தங்கள் குடும்பங்களுக்கு அந்த நிதியைச் செலவிட்டனர்.
அண்ணாச்சியின் தம்பி முருகய்யாவுடன் கி.ரா. பேசிக் கொண்டிருந்தபொழுது, அண்ணாச்சி இறந்தபின் ஊரார் ஐதீகப்படி ஓராண்டு அவர் குடும்பம் அங்கேயே இருந்து தொலைக்க வேண்டியிருந்தபொழுது செலவுக்கு எப்படி சமாளித்தது என்று கேட்டார். “ஏதோ நாங்க கொஞ்சம் கொடுத்து உதவினோம். அதோட அவரு சேத்து வச்சிருந்த புஸ்தகங்க பத்திரிகை அது இதுண்ணு வித்துத்தான் ஜீவனங் கழிஞ்சுது” என்று முருகய்யா சொன்னார்.
“ஒரு காலத்துக்கு உதவும் என்றுதான் அண்ணாச்சியும் புஸ்தகங்களைச் சேகரிச்சு வைத்துவிட்டுப் போயிருக்கார். அந்தக் குடும்பம் யார்கிட்டேயும் கைநீட்டி வாங்கவில்லை.”(ப.162)
அண்ணாச்சியின் ஞாபகமாக இருப்பதெல்லாம் தங்களின் நெஞ்சுக்குள் அவரைப் பற்றிய அணையாத நினைப்புகளும் இந்தக் கட்டுரையுமே என்று தெரிவிப்பதுடன் கி.ரா. மேலும் எழுதுவதாவது:
“அவர் எழுதி எழுதி வைத்துவிட்டுப்போன கவிதை நோட்டுகள் இசைப்பாடல்கள் எல்லாம் எங்கோ ஒரு மிட்டாய்க்கடையில் பலகாரம் சுற்றப்பட்டு எப்படி எப்படியோ போயிருக்கலாம். இப்போது இருப்பவை என்று சொல்லிக்கொள்ள யார் யாருக்கோ அவர் எழுதித்தந்த திருமண வாழ்த்துக் கவிதைகள்தான். ஏதோ ஒரு மண்சுவரில் கண்ணாடிச்சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் திருமண வாழ்த்து மடலுக்குப் பின்புறம் ஒரு ராமபாணப் பூச்சியாக இன்றும் இருக்கிறார் அண்ணாச்சி என்று நம்புகிறேன்; அவருடைய கவிதைகள் பேரில் அவ்வளவுக்குப் பற்று உண்டு அவருக்கு” என்று முப்பத்திரண்டு பக்கமுள்ள இந்த அருமையான கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் கி.ரா.
ஒரு கட்டுரை மட்டுமே என்று இதைச் சொல்லிவிட முடியாத அளவு வயணங்கள், உண்மையாக உடன்வாழ்ந்தவர்கள் குறித்த படப்பிடிப்புகள், இரண்டாம் உலகப்போர்க்காலத் தமிழ்நாட்டு/சென்னைச் சூழ்நிலைகள் என்று இதன் உள்ளீடுகள் பற்பல.
தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு அண்ணாச்சி ‘மெட்ராஸ்’ வரை நடைப்பயணம் மேற்கொண்டது; வழியில் மதுரை வைத்தியநாத ஐயர் வீட்டில் தங்கியது; நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐயர் ஒவ்வொரு செம்பு அன்பளிப்பாகத் தந்தது; ஏன் அவர் செம்பு தருகிறார் என்பது புரியாதிருந்து, பின்னர் அனுபவத்தில் வழிநடைப் பயணிகளுக்குச் செம்பு எத்தகைய உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டது முதலான வயணங்களுக்கு இக்கட்டுரையில் பஞ்சமில்லை.
இரண்டாம் உலகப்போர்க் காலச் சென்னையில் நிலவிய உயிர்ப்பயம், பித்தலாட்டங்கள், கேடுகள், வழிமாற்றி அலைக்கழிக்கும் குணங்கள், ஏமாற்றி இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவிடும் செயல்கள் ஆகியவை சொல்லப்படுவதுடன் கதர் கட்டியவர்கள் மட்டும் நம்பத்தக்கவர்களாக அந்தக்காலச் சென்னையிலும் விளங்கினார்கள் என்பதும் சொல்லப்படுகிறது.
பலகட்சி முன்னணியாக அப்பொழுதிருந்த காங்கிரஸ் கட்சி திகழ்ந்ததும்; ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்ததும் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.(பக்.133-134)
செல்லையாவை கு. அழகிரிசாமியாக உருவாக்கியவர்களில் அண்ணாச்சியின் பெரும்பங்கு [அழகிரிசாமி மகாகவி பாரதியைப்போல ஒரு பெரிய்ய கவிஞனாகத் திகழவேண்டும் என்பது அண்ணாச்சியின் கனவு. ப.134]; குருவிகுளம் குருபரக் கவிராயர் தான் எழுதிய அண்ணாச்சி திருமண வாழ்த்துப்பா, கு. அழகிரிசாமி பெயரில் அச்சாவதற்கு உடந்தையாக இருந்தது [‘எங்களில் கவிதை எழுதுகிறவன் அழகிரிசாமி ஒருத்தன்தான். ஆனால் அவனுக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதுகிற சமாச்சாரமே பிடிக்காது; எரிந்து விழுவான்.’ ப.135] முதலான சேதிகள் அன்றைய கவிஞர்களின் உலகத்தைக் காட்டுகின்றன.
உலகப்போர்க் காலத்தில் பேருந்து நடத்துநர்கள் எப்பேர்ப்பட்ட கௌரவம் பெற்றிருந்தார்கள் என்றால், ‘கண்டக்டர் பெருமான்க’ளாகவே பயணிகளுக்குக் காட்சி தந்திருக்கிறார்கள்.
கு.அழகிரிசாமியும் அண்ணாச்சியும் லாயல்மில் நடராஜனும் கி.ரா.வும் மதுரைக்குப் போனபொழுது ஓட்டலில் சாப்பிடவேண்டி வந்த ‘கனமான பெரிய்ய கோதுமைத் தோசை’யால் பெற்ற அதிர்ச்சியும்; லாயல்மில் நடராஜனின் ‘தாய்மாமனார்’ வீட்டில் அன்றிரவு அவர்களுக்கு அன்புடன் பரிமாறப்பெற்ற ‘நெய்மணத்த அரிசிச் சோறு’ [‘வயிறு கொண்டா கொண்டா என்று ஏற்றுக்கொண்டது.’ ப.141] தந்த சுகமும் கி.ரா.வால் சொல்லப்படும்பொழுது நாமே அவற்றைப் பட்டறிவதுபோல் உள்ளது.
சோறு தந்த சுகம் மட்டுமா? நீர் பிரிவதிலுள்ள சுகமும்[ப.142]; புகைபிடித்துக்கொண்டு வெளிக்குப் போகப் பழகியவர்களுக்கு அது படும் அவசியமும் [ப.144] இன்னும் சில மறைவான சேதிகளும் கூட இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றன.
தன் குணத்துக்கு மாறாக அண்ணாச்சியின் மனைவியார் சமைத்துப்போடும் ‘திவ்யமான ருசியும் மணமும் கொண்ட’ கீரைக்குழம்பு பற்றியும் ‘சாதம் வடிப்பதில் அவர்கள் பின்பற்றிய சமையல்’ ரகசியம் [“கட்டியாக இலையில் வைக்கப்படும் சாதம் அதன்மேல் கைவைத்தவுடன் பொலுபொலுவென்று அதே சமயம் மெத்தென்று ஆகிறது எப்படி?] குறித்தும் சொல்லப்பெறுபவை கி.ரா.வின் உணர்த்தாற்றலைக் காட்டுகின்றன.
‘கப்பலை விற்று டொரியான் பழம் தின்றான்’ என்ற மலேசியப் பழமொழியின் காரணத்தை, ‘நாடு கண்ட செட்டியா’ரிடமிருந்து கு.அழகிரிசாமி அறிந்து கொண்டது; முட்டை வெறுப்பாளியாக விளங்கிய அண்ணாச்சியை (பாம்புபோல்) முட்டைமுழுங்கியாக மாற்றியது; ‘குத்துத்தரம்’ என்ற பாம்பு குத்தும் கருவி குறித்த சேதி; அண்ணாச்சி கடையிலிருந்ததும் அவர் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்ததுமான குடையை இரவல் வாங்கிக்கொண்டுபோய்க் கி.ரா. படுத்திய பாடு; இடைசெவல் ரோட்டுக்கடை கருப்பையா செட்டியார் கடையின் முதல்தரமான காபி [‘அந்தக் காபியெல்லாம் இப்பொ எங்கெபோயி ஒளிந்து கொண்டதோ தெரியலை’] குறித்த நினைவு முதலிய பல இந்தக் கட்டுரையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கின்றன.
உடனிருந்தவர்களைக் குறித்து கி.ரா. இதில் தரும் விவரங்கள் பலவற்றில் ஓரிரண்டை மட்டும் தருகிறேன்.
கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரகிரி ஆசாரியார் என்பவர். எப்பொழுதுமே எதற்கும் வேடிக்கைப்பேச்சுப் பேசுவது அவர் வழக்கம். “எந்தப் பேச்சானாலும் செக்ஸில்க் கொண்டுபோய் ஒட்டவைத்து ‘அளகு’ பார்க்கவில்லையென்றால்த் தூக்கம் வராது.” [பக்.150-151] அப்படிப்பட்ட அவர் பேச்சுகள் அவ்வப்பொழுது இக்கட்டுரையில் உரிய இடங்களில் வருகின்றன.
லாயல்மில் நடராஜனுக்கு உரக்க வாய்விட்டுச் சிரிக்க வராது. “சில வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளை அறட்டி சத்தம்போட்டு அவர்களை உரக்க சிரிக்க விடாமலே பழக்கி வளர்ப்பார்கள். இவர் அப்படி வளர்க்கபட்டவரோ என்னமோ; சத்தமில்லாமல் குலுங்கினார். கண்களிலிருந்து நீர் மளமளவென்று கொட்டியது, அவர் சிரித்த சிரிப்பில். கொஞ்ச நேரம் கழித்து “நல்ல தமாஷ்தான் போங்கள்” என்று சொல்லி கண்களைத் துடைத்துக்கொண்டார் கைக்குட்டையினால்.”(ப.145) அந்தச் சிரிப்பு வேதனைக்கான காரணமாக லாயல்மில் நடராஜனின் தாய்மாமனார் வீட்டு மொட்டை மாடியில் ‘ராத்திரி நடந்த கூத்து’(பக்.141-143) வாசித்துச் சிரிக்க வேண்டியது. இங்கே எடுத்துத்தர இயலாது.
ஒரு - முப்பத்திரண்டு பக்கக் கட்டுரைதான் இது; தனிப் புத்தகம் அல்ல; ஆனால் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.. வகைமாதிரிகளாக மிகச் சிலவற்றையே என் இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறேன். இந்த ‘அண்ணாச்சி’ என்ற அருமையான கட்டுரையுடன் மேலும் அறுபத்து நான்கு கட்டுரைகளையும் கொண்ட பெரிய அளவு தொகுப்பு -
கி.ராஜநாராயணன் கட்டுரைகள்
அகரம்
மனை எண்:1, நிர்மலா நகர்
தஞ்சாவூர் - 613 007.
பக்கங்கள்: 488 விலை: ரூ.275
(வாசிப்புக்கு உதவிய நண்பர் முனைவர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகருக்கு நன்றி.)
********
நன்றி: திண்ணை.காம்
23.9.09
10.9.09
‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி - தேவமைந்தன்
புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது.
முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையிலுள்ள தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் ஆராய்ச்சி உதவியாளர். அம்பா பாடல் அமைப்பியல் ஆய்வு, பாரதிதாசன் குயில் அடைவு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல் முதலான இவர்தம் ஆய்வுநூல்கள் வெளியாகியுள்ளன.
திண்ணை.காம் வலையேட்டில், இவருடைய ‘புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல்’ தொடர்பாக நான் எழுதிய கருத்துரை, ‘தமிழர் கருத்துக் கருவூலம்’ என்ற தலைப்பில் வெளியானது.
‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க செய்திகள் பின்வருமாறு:
ஆட்சித்தமிழ் தொடர்பாக நடுவணரசும் தமிழ்நாட்டு அரசும் புதுச்சேரி அரசும் 1965 முதல் அவ்வப்பொழுது வெளிப்படுத்திய முதன்மையான அரசாணைகளும் அறிவிக்கைகளும் சுற்றறிக்கைகளும் இந்தப் புத்தகத்தில் தரப்பெற்றுள்ளதால், ஆட்சிமொழியாகத் தமிழ் வீற்றிருக்க என்னதான் அரசியலார் முயன்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது. இத்தகைய நெறியில் தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள் எண்பத்தெட்டை நாம் இதில் வாசித்து அறியலாம்.
மாநிலத்தின் ஆட்சிமொழியாக எல்லாவகைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்ற ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் (த.நா. சட்ட எண்: XXXIX/1956),’ “தீர்ப்புகள் - தீர்ப்பாணைகள் - ஆணைகள் ஆகியவற்றை எழுதுவதற்காகத் தமிழை நீதிமன்றமொழி என்று சொல்லியிருக்கிறது. இது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாகியும் செயற்பாட்டுக்கு வர இயலாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்து ஆராய்ந்து இன்னொரு தனிப் புத்தகத்தையே முனைவர் அ. கனகராசு எழுதலாம்.
அரசு ஊழியர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் (ஆணை (நிலை) எண்:1134 / நாள்: 21.6.1978). தங்கள் பெயருக்கு முன்னுள்ள தலைப்பெழுத்துக்களை (initials) தமிழிலேயே எழுத வேண்டும் (ஆணை (நிலை) எண்: 431 / நாள் 16.9.1998 [திருவள்ளுவராண்டு 2029, வெகுதான்ய, ஆவணி 31) முதலான பலவற்றை இந்த நூலால் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ் வளர்ச்சித் துறை என்பது என்ன? அதன் முதன்மையான பணிகள் எவை என்பனவற்றை விளக்கிய பின், இருபத்தொன்பது செயல் திட்டங்கள் தரப்பெற்றுள்ளன. “திராவிடப் பல்கலைக் கழகத்திற்குப் புதுச்சேரி அரசின் பங்களிப்பைச் செலுத்தித் தமிழாய்விற்கு வழிவகுத்தல்” என்பதும் அவற்றுள் ஒன்று. தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமுறை அட்டவணை(Administration Chart) ஒன்றும் தெளிவாகத் தரப் பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டப் பேரவையில் இது தொடர்பாக 1965இல் நடந்த அனல் பறக்கும் உரையாடல்களை (பக்.25 முதல் 46 வரை) தவறாமல் கொடுத்துள்ளார் நூலாசிரியர். ஜே.எம்.பெனுவா என்ற சட்டப் பேரவைச் செயலருடைய ஒப்பத்துடன் உள்ள பதிவு அது.
இரு பகுதிகள்:
“SRI. S. THILLAI KANAKARASU: இதிலே சுதந்திரா பார்ட்டி, டி.எம்.கே பார்ட்டி என்று சொன்னதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. டி. எம்.கே. காரர்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறார்கள், ஆனால் டி.எம்.கே. என்று சொல்லும்போது இங்கு வேறு மாதிரி ஓசை கேட்கிறது. இப்போது கேரளா ரெபெல் காங்கிரசைப்பற்றிச் சொன்னார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. காரணம், பாண்டிச்சேரியில் சுதந்திரா பார்ட்டி இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டு வந்தது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இதைக் காலம் கடத்தி அடுத்த செஷனுக்குக் கொண்டு வருவதால் நமக்கு நஷ்டம் ஏற்படுமே தவிர நலன் இருக்காது. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதுதான் என்று சொல்லிக்கொண்டு, ஆட்சிமொழிச்சட்டமாகிய மசோதா எண் 10-ஐ ஆதரித்து என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.”
“SRI V. KAILASA SUBBIAH: ..... ஆங்கில மொழி நீடித்திருக்க வேண்டும் என்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது. ஆனால் இங்கு ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு மொழி போய்விடும் என்று பிரெஞ்சு மொழிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். அங்கே ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறர்கள். ஆனால் இங்கே ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு அழிந்து விடும், அழிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆகவே அவர்கள் இரண்டு நாக்குகளுடன் பேசுகிறார்கள் என்று கருத வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலை வருவதற்குக் காரணம், நம் பிரதேச மொழியான தமிழை வளர்க்கும் வகையில் இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டு, சரியான முறையில் ஆட்சியிலுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்காததுதான் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இன்றும் ஆங்கில மொழி மீதும், பிரெஞ்சு மொழியின் மீதும் சிலருக்கு ஒரு மோகம் இருக்கிறது.”
“1965 - ஆட்சிமொழிச் சட்டம்
1977 - பெயர்ப்பலகை ஆணை
1997 - தமிழில் ஒப்பமிடும் ஆணை
அரசிதழைத் தமிழில் வெளியிடும் ஆணை
2006 - நடுவணரசு பிறப்பித்த புதுச்சேரிப் பெயர்ச் சட்டம்
ஆகிய அனைத்தையுமே ‘கண்டு கொள்ளாமல்’ அரசு பணியாற்றி வருவோர் இன்னும் உள்ளமைக்குக் காரணம், அவற்றை மீறுவோர்க்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதே” என்று இரா. திருமுருகன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதுவும் முன்பகுதியில் உள்ளது.
புலவர்கள் கீ. இராமலிங்கனார் முதலானோரும்; முனைவர்கள் திருமுருகன், அறிவுநம்பி, சுதர்சன், இராமமூர்த்தி, இறையரசன் முதலானோரும்; பாவலர்கள் காசி ஆனந்தன், தமிழமல்லன் முதலானோரும்; நீதித்துறைத் தலைவர்கள் தாவித் அன்னுசாமி முதலானோரும் இது தொடர்பாக எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு இந்த - பயனுள்ள ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார் நூலாசிரியர்.
********
(ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும். பக்கங்கள் 228. விலை ரூ. 200.)
தொடர்புக்கு:
முனைவர் அ.கனகராசு,
3, அரவிந்தர் வீதி,
பெசண்ட் நகர்,
குறிஞ்சி நகர் விரிவு,
இலாசுப்பேட்டை அ.நி.,
புதுச்சேரி - 605008.
தொ.பே. 0413 2256647
***

Subscribe to:
Posts (Atom)