5.1.11



கனவு மெய்ப்பட வேண்டும்!
- முனைவர் பாவலர் க.தமிழமல்லன்

சாப்பாட்டுக் கனவன்று பாரதியார் பாட்டு!
சாதிசொல்லும் கனவன்று மீசைமுறுக்குப் பாட்டு!
நாப்பிறழ்ந்து துண்டுமாற்றி அடிவருடிச் செல்வர்,
நச்சுபுகழ் பாடுகின்ற தீப்பாட்டும் அன்றே!
தீப்பட்ட விடுதலையைக் கனவுகண்ட பாட்டு!
தீராத மடத்தனங்கள் தீர்த்துவிடும் பாட்டு!
காப்பாகத் தமிழுக்குக் கண்டகனாப் பாட்டு!
கற்றதமிழ் வெற்றிபெறக் கதறுகின்ற பாட்டு!

ஆங்கி லத்தில் தருங்கல்வி,
அடிமைக் கல்வி! அதுஇங்கு,
நீங்கக் கனவை அவன்கண்டான்!
நீண்ட சரக்காய் விற்குதடா!
தீங்காம் பேடிக் கல்வியைநாம்
தீர்க்கக் கனவு மெய்ப்படுக!
ஓங்கும் பிறநாட் டறிவியல்கள்
ஒளிர்க! தமிழாய் மெய்ப்படுக!

தெருவெல்லாம் தமிழ்முழக்கம் மிகச்செழிக்கச் செய்யும் -
தேன்கனவு கிழடாகிப் போனபின்னும் இங்கே,
இருந்ததமிழ் ஒழிந்ததுதான் கிடைத்தமிச்சம்! ஐயோ!
இந்தியிலே விளம்பரங்கள், இங்கிலீசில் பேர்கள்,
உருப்பெருத்துக் காணுதடா தமிழ்க்கடையில் இன்றே!
உயிர்த்தமிழே ஆட்சிசெய்ய எத்தனைப்போர் வேண்டும்?
பெரும்பெயர்தான் புதுச்சேரி, அதைவாழ வைக்கும்
பெருங்கனவு மெய்ப்படுநாள் இனிவருமா சொல்வீர்!

(வெல்லும் தூயதமிழ், 2041, சிலை, 2011, சனவரி. ப.2.)