புதுச்சேரியில், மாசிமகத் திருவிழாவின்பொழுது, சாலையோரம் விற்பதற்காகப் பரப்பியிருந்த மண்பொம்மைகளில் 'மூன்று குரங்குகள்' பொம்மை, எங்கள் பெயர்த்தியின் கவனத்தைக் கவர்ந்தது. வாங்கியபின், வீட்டுக்குப் போனதும் இயல்பாக(குழந்தைகளின் இயல்பாக)மூன்று குரங்குகள் எதற்கு ஏன் என்று காரணம் கேட்டாள்.
காந்தியடிகளுக்குப் பிடித்த உருவம் என்று இந்த பொம்மையைச் சொல்வார்கள். "தீயதைப் பார்க்காதே! தீயதைக் கேட்காதே! தீயதைப் பேசாதே!" என்பவற்றை உணர்த்தவே குரங்கொன்று தன் கண்களையும்; மற்றது செவிகளையும்; மூன்றாவது வாயையும் பொத்திக் கொண்டிருப்பதாக விளக்குவார்கள்.
மெய்யாக எப்படி இந்தப் படிமம் தோன்றியது?
ஜப்பான் நாட்டின் நிக்கோ[ர்] நகரத்தில் உள்ளது கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதொரு புத்த விகாரை.'டோஷோ' என்பது அவ்விகாரையின் பெயர். அதில் இந்த உருவம் பழமையானதோர் ஓவியமாக உள்ளது. இதாரி ஜிஸ்கோ என்ற ஓவியர் தன் இடது கையால் தீட்டிய சித்திரம் அது. ஜப்பான் மொழியில் இதாரி என்றால் இடதுகைப் பழக்கமுள்ள ஆள் என்று பொருள். ஜிஸ்கோ என்ற அந்த ஓவியரின் இடக்கைப் பழக்கமே அவர் பெயருக்கு அடைமொழி ஆனது. இங்குள்ள பொருளற்ற - பொருத்தமற்ற விருதுப் பெயர்களைப் போன்றதன்று 'இதாரி.'
சரி.. அந்த மூன்று குரங்குகள்?
மூன்று குரங்குகள் படிமத்தை நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சொல்வார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குரிய சீன நன்னெறியின் விளக்கம் அது என்றும் சொல்வார்கள். தமிழ் நன்னெறி நூலான 'வாக்குண்டாம்' சொல்லாததா இது?
ஒன்றன் பெயர் மீசா[ஜா]ரு. மற்றதன் பெயர் இவாசா[ஜா]ரு. மூன்றாவதன் பெயர் சிக்சா[ஜா]ரு.(மிஜாரு, இஜாரு, கிஜாரு என்று மக்கள் மொழியில் சொல்வார்களாம்)
மீசா[ஜா]ரு என்பதற்கே குரங்குகள் மூன்று என்ற பொருள் ஜப்பான் மொழியில் உண்டாம்.
இந்தச் சேதியை, நான் பணிக்கு வந்து இரண்டாண்டுகள் கழிந்தபின், பணிபுரிந்த தாகூர் கல்லூரியில் இடண்டாமாண்டு கணிதவியல் படித்த திரு த. மணிகண்டன் வழி தெரிந்து கொண்டேன். 31.1.1971 நாளிட்ட 'கல்கி' இதழில் வயணம் வந்திருந்தது.
அப்பொழுதெல்லாம் குமுதம் இதழ் கூட ஒழுக்கத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது.
28.6.11
Subscribe to:
Posts (Atom)