இலக்கியத் துறையிலும் உலகமயமாதல் நிலைபெற்றுள்ள கால கட்டத்திலும்கூட, யாரெல்லாம் கவிதை படைக்கலாம் யாரெல்லாம் கவிதை படைக்கக் கூடாது என்று வரையறுக்கவும் ஏன் மிரட்டவும் கூடத் தொடங்கியிருக்கிறார்கள் சிலர். அதை ஆதரிப்பவர்களும் இல்லாமலா போவார்கள்? பாலைவனங்கள் நிலத்தில் நிலைபெற்றுள்ளதைப் போன்றே இலக்கியத்திலும் வறண்டுபோனவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதையெல்லாம் கண்டும் காணாமல் போக வேண்டியதுதான் விதி. வேறென்ன செய்வது!
பேராசிரியர்கள் கவிதை படைக்கக் கூடாது என்பதை முறியடித்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர் சல்லா ராதாகிருஷ்ண சர்மா. இவர்தம் சுருக்கப் பெயர் - சி.ஆர்.சர்மா. ஆந்திரப் பிரதேசத்துக் கிருஷ்ணா மாவட்டத்தில் 6.1.1929 அன்று பிறந்தவர். சாகித்திய அகாதெமியில் பல ஆண்டுகள் பணியாற்றியும் படைப்பாற்றல் வறளாதவர். தவறானவர்களுடன் சமரசம் செய்து கொண்டு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் 'கபளீகரம்' செய்யத் தெரியாதவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தெலுங்கு மொழி இலக்கியத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தாய்மொழியான தெலுங்குடன் தமிழிலும் நன்றாக எழுத வல்லவர். ஆங்கிலமொழி அறிவையும் பெற்றவர். "குறிப்பாகத் திருக்குறளை அதன் உள்ளார்ந்த உணர்வு மாறாமல் மொழிபெயர்த்துப் பெரும்புகழ் பெற்றவர்" என்று முனைவர் தமிழண்ணலால் விதந்தோதப் பெற்றவர். முதலில் திருக்குறளை எளிய முறையில் 'தமிழ வேதமு' என்ற பெயரில் தெலுங்கு வடிவில் கொடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறளை அதன் யாப்பு வடிவம் மாறாமல் தெலுங்கில் மொழியாக்கம் செய்தவர். 1991ஆம் ஆண்டு அதற்காக சாகித்திய அகாதெமி பரிசு வழங்கியது. தமிழ் விருந்து என்று பொருள்படும் 'தமிழ விந்து' என்ற இவர்தம் நூலை பாராட்டித் தமிழ்ப் பல்கலைக் கழகமும் தெலுங்குப் பல்கலைக் கழகமும் பரிசுகள் நல்கிப் பெருமைப் படுத்தின.
தமிழிலிருந்து தெலுங்குக்கு நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தவர். தெலுங்குமொழி இலக்கியத்தைத் தமிழர்க்கு உரிய முறையில் அறிமுகம் செய்து வைத்தவர்.
இன்னும் பெருமைகள் பலவற்றைப் பெற்ற பேராசிரியரின் தெலுங்குக் கவிதைகளைப் பொருள் மாறாமல் மொழியாக்கம் செய்துள்ளவர் நண்பர் இளம்பாரதி. எழுபத்தைந்து வயது இளைஞர். சாகித்திய அகாதெமியுடன் தொடர்பு கொண்டவர். அந்த நிறுவனத்துக்காக புதுச்சேரி வரலாற்று நாயகர் ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை இந்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவர். சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இளம்பாரதியின் மொழியாக்கங்களுள் தகழியின் 'கயிறு', முகுந்தனின் 'மய்யழிக் கரையோரம்'(இதற்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றார்), தெலுங்கு நாவல்களான 'கெளசல்யா,' 'படிப்பு,' இந்திய அரசின் பரிசு பெற்ற மொழிபெயர்ப்புகளான 'அனல் காற்று'(தெலுங்குக் கவிதைகள்) 'அடுத்த வீடு'(தெலுங்குச் சிறுகதைகள்), கன்னட நாவல்களான 'சிமெண்ட் மனிதர்கள்,' 'களத்து மேட்டிலிருந்து' முதலானவை குறிப்பிடத்தக்கவை. 'வலசை போகிறேன்' என்ற இவரது பிறமொழிக் கவிதைகள் மொழியாக்க நூலின் முதற் பகுதி சல்லா ராதாகிருஷ்ண சர்மாவின் முப்பது கவிதைகளைக் கொண்டுள்ளது.
'என் வட்டம் பெரிய வட்டம்' என்ற இவரது கவிதை குறித்து முனைவர் தமிழண்ணல் கூறுகிறார்: "இந்தியர் ஒவ்வொருவரும் சிறுசிறு வட்டங்களைத் தம்மைச் சுற்றிப் போட்டுக்கொண்டு, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் இன்று "என் வட்டம் பெரிய வட்டம்" எனத் தொடங்குகிறது இக்கவிதைநூல். நூலின் பாவிகமும் இஃதென்றே கூறிவிடலாம்."[பாவிகம்=தொடக்கம் முதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு]
என் வட்டம் பெரிய வட்டம்
பல மொழிகளின் உறைவிடமாம்
என் பாரதநாட்டில், பரிதாபம்;
தலைவிரித்தாடி மொழிவெறி
அட்டகாசம் புரிகிறது
கம்பன் மாகவி என்பதாய்ப்
பெயரை அறிந்தேன் சின்ன வயதிலேயே;
கம்பன் கவிதையை முனைந்து பின்னாளில்
முறையாய்க் கற்றேனில்லை
நன்னய பட்டன் தெலுங்கில்
மாபெரும் கவிஞனாம்
என்ன பயன்? எனக்கந்த
மொழி தெரியாது துப்புரவாக
மனப்பாடம் செய்தேன்
ஆங்கில இலக்கியம் பலவாக; ஆனாலும்
நெஞ்சைத் தொடவில்லை
அவற்றிடைப் பொதிந்த முருகுணர்வு
படைப்பாளிகள், பேரறிஞர்கள்
எழுத்தச்சன், சூர்தாஸ் போன்றோர்
எழுதிய படைப்புக்கள் எவையோ
தெரியாதெனக்கு முற்றிலும்
ஆனாலும் வாதிடுகிறேன்
என்மொழியே உயர்ந்ததென,
என்மொழிக்கு நிகராக
மற்றொருமொழி இல்லையென
....... ....... .......
....... ....... .......
மனிதன் செய்யும் பணிகளை
இயந்திரங்கள் செய்துமுடிக்கும் இந்த நாட்களில்
நாகரிகம் கணத்துக்குக் கணம்
இளந்தளிர்களைப் பிறப்பிக்கும் இந்த நாட்களில்
தூரதூர மேற்கத்திய நாடுகள்கூடக்
கைக்கு எட்டும் இந்த நாட்களில்
....... ....... .......
இயந்திரங்கள் வெளிப்படுத்தும்
விதவித ஒலிகளைக்கூடத்
தயக்கமின்றி
எழுத்தாக்கும் வல்லமை
பெறவேண்டும் என்மொழி
மூன்று பூக்களிலிருந்து ஆறு கனிகளைக்கூட
உருவாக்க முனையும் அறிவியலைத்
தெளிந்த நடையில் கூறவேண்டும் என்மொழி
....... ....... .......
மனிதர்களிடையே, இனங்களிடையே
தோழமை உணர்வின் இளம் மொட்டுகளை
மலரச் செய்ய வேண்டும் என்மொழி
எல்லாம் வல்லவனே! எனக்குத் தந்தருள்க
மொழிசார் சகிப்புணர்வை;
வேறுமொழி வெறுக்காத
தாய்மொழிப் பற்றை!
சல்லா ராதாகிருஷ்ண சர்மா அவர்களுக்கு நூலகம் என்றால் கொள்ளைப் பிரியம். இது குறித்து முனைவர் தமிழண்ணல் சொல்கிறார்: "கவிஞர் சல்லா இராதாகிருஷ்ண சர்மா அவர்கட்கு, நூலகம் என்றால் கொள்ளைப் பிரியம் என்று தெரிகிறது. அதனை ஒரு கலைமகள் கோயிலாய், கவிச் சக்கரவர்த்திகளின் அரண்மனையாய் அவர் காணுகின்றார். மகிழ்ச்சிக்குக் கொள்ளிடமாய், மனக்கவலைக்கு மருந்தாய் அவர் நூல் நிலையத்தைப் பார்க்கின்றார். 'கூவல்' என்ற தலைப்பிட்ட கவிதையும் நூலகப் பெருமையையே குறிப்பாய் உணர்த்துகிறது. பேருந்து நடத்துநர் "காலேஜ் ரோடு" என்று கூவும்போது மூன்று பேர் இறங்கினார்கள்; "தியேட்டர்" என்று கூவவே ஐந்தாறுபேர் இறங்கினார்கள்; பெருமாள் கோயிலில் ஒருவர் இறங்கினார்; "லைப்ரரி! லைப்ரரி!" - கண்டக்டர் கூவினார். ஒருவர்கூட இறங்கவில்லை. இறுதியில் நாம் நம் 'அந்தராத்மாவின் கூவலையும்' கேட்க முடியவில்லை என்று முடித்திருப்பது கவிதை நயத்தின் உச்சமாகும். "
என் நண்பரின் அத்தையார் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். அவர் அடிக்கடி பழமொழி ஒன்று சொல்வார்களாம். அது - "ஆரால கெட்டேன் நான் நோரால கெட்டேன்' என்பது. 'என் பகை' என்ற கவிதையில் அதை நன்றாக எடுத்துரைத்திருக்கிறார் கவிஞர்.
என் பகை
இந்த விசாலப் பிரபஞ்சம்
என் நெருங்கிய தோழன்
என் மேன்மைக்கு
ஏணியானார்கள் எத்தனையோ பேர் --
எல்லோரும் எனக்கு நண்பர்களே!
அப்படியானால் என் பகைவன்?
நானேதான்!
நேரடி வாழ்க்கைப் பலனாய்த்
தெரிய நேர்ந்தது
நானே என் பகைவனென்று!
எப்படி நான் பகைவனானேன்?
ஆமாம் -- அதேதான்
பகைக்காரணி என் நாக்குதான்!
சல்லா ராதாகிருஷ்ண சர்மாவின் 'மரம் என்ற கவிதையை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு யாரையும் 'மரமே!' என்று ஏச மனம் வரவே வராது.
''தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப் படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி
நூலைப்படி - சங்கத் தமிழ் நூலைப்படி!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைச் சாரம் இவர்தம் 'பழங்கவிதை'யில் பொதிந்துள்ளது.
'மகா கவிஞனே!' என்ற கவிதை மிக அருமை. காலத்தொடு கரைந்த மகாகவியின் பெயரைச் சொல்லியே சொத்துச் சேர்த்தவர்கள் நம்மவர்கள். பாரதி அன்பன் தான் என்று அறிவித்துக் கொண்டு, பாரதிவழியில் நேர்மை மொழிந்தவனைப் பழிவாங்கி. "அவருக்கு எந்த இடம் வேண்டும் என்பது எனக்குத் தெரியும்!' என்று மாற்றல் பிறப்பித்து அவரை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தையும் அலைய வைத்தவர்கள் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்.
"காலம் சென்ற மகாகவியே, உன்
நெடும்புகழை எவ்வளவென்று எடுத்துரைக்க!
....... ....... .......
மிடறு விழுங்காமல்கூடப்
பேச்சுமழை பொழிவார்கள்;
நெஞ்சில் ஈரம் இல்லாமலே
கண்கள் பனிக்கச் செய்வார்கள்;
....... ....... .......
....... ....... .......
செலவினங்களாகக் கழித்துக் காட்டிய பின்னர்
மிஞ்சுவது -- உன் பெயரில் மிஞ்சுவது
பூஜ்ஜியங்களின் வரிசையே, வெறுமையின் சுவடுகளே!
அறிவுரைகள் எதனையோ சொன்னாய்
கதைகள் எத்தனையோ குவித்தாய்
கவிதைகள் எத்தனையோ புனைந்தாய்
கற்பனைகள் எத்தனையோ வனைந்தாய்
ஆனால் ---
உலக நடப்பு மட்டும்
புரிந்துகொள்ளாது போனாய் -
வெளிச்சம் இருக்கும்போதே
வீட்டைச்சுத்தம் செய்துகொள்ள வேண்டும்!
எழுதிக்கொண்டே போகலாம். நீங்களே வாசித்துப் பார்க்க வேண்டியவை சல்ல ராதாகிருஷ்ண சர்மா அவர்களின் நேர்பட மொழியும் கவிதைகள்.
****
நூல் கிடைக்குமிடம்:
பாரதி பண்பகம்
9, மங்கான் தெரு
இரெட்டியார்பாளையம்
புதுச்சேரி - 605 010.
தொலைபேசி: 0413 2206400
பக்: 96 (டெமி அக்டேவோ அளவு)
விலை: ரூ.50/-
****
நன்றி: திண்ணை.காம்
No comments:
Post a Comment