'தன்னுணர்வு': பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- தேவமைந்தன்
மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர் சங்கக் கலந்துரையாடல்களையும் அவற்றில் பகிர்ந்துகொள்ளப்பெற்ற கருத்தாடல்களையும் நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன்.
மொழியாக்கங்களில் இதுவரையிலும் நாம் அறிந்த வகைகளுக்கப்பால் மொழியாக்கவகை ஒன்றுண்டு. தன் உள்ளத்தில் ஊறிய கருத்துகளின் ஒத்தவகைக் கருத்தாடல் பிறமொழி சார்ந்த அறிஞரொருவரின் நூலிலும் வெளிப்படக் கண்டு கிளர்ந்து, அதைத் தழுவித் தனக்கே உரிய மொழிநடையுடனும் தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டுகளுடனும் தன்மொழியில் புதிய நூல் எழுதுவதுவே அது.
அவ்வகைப்படிப் பெருஞ்சித்திரனார் படைத்த நூல் 'தன்னுணர்வு.' ஆங்கிலத்தில் எமர்சன் உருவாக்கிய 'Self Reliance' என்பதன் தமிழாக்கம். 17-01-1977 அன்று சென்னையில் 'தென்மொழி'யால் வெளியிடப்பெற்றது.
வழக்கமான மொழியாக்கத்துக்குத் 'தன்னுணர்வு' வேறுபடுதலை நூலின் தொடக்கத்தில் உள்ள பாடலே காட்டி விடுகிறது.
"இடுக நும் பிள்ளையை மாமலை மேல்;விளை யாடுதற்கே
விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்!
கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற
நடுக நீ நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!"
என்பதுவே அப்பாடல்.
மொழிதல் எவ்வாறு இருந்தால் அது மனிதத்திலிருந்து அறிஞத்துக்கு உயர்வதாய் விளங்கும் என்பதற்கு இப்பகுதி:
"நமக்குள் தோன்றும் பொருளை நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமன்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக இருக்கும்......உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச்செய்."
வாழ்க்கையின் நோக்கம் எது? ஈகையா.. இலவசத் திட்டங்களா?
"ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறம் என்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்பதன்று."
மெய்யான துறவியைப் பற்றியோ, அறிஞனைக் குறித்தோ அவர் வாழும் வட்டத்துக்கு முப்பது கல்(மைல்) தொலைவுக்கு அப்பாற்பட்டவர்களே அறிவார்கள் என்று இராமகிருஷ்ணர் கூறினாராம். ஏனென்றால் உருப்படியாக வேலைபார்க்கும் எவரையும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் அவ்வாறு செய்ய எளிதில் விட்டுவிடாது. இலவச மேற்பார்வை பார்த்து, வேண்டாமலேயே திறனாயும். அதைப் பெருஞ்சித்திரனாரின் 'தன்னுணர்வு' இவ்வாறு கூறுகிறது:
"உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார்...உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதேபோல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் உள் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன்பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்."
சில ஆண்டுகளுக்கு முன்னால் 'political complex' என்ற கலைச்சொல் சமூக உளவியலாரால் அடிக்கடி சொல்லப்பட்டது. தனக்கெனப் பாதை வகுக்காமல், தன் அரசியல் கட்சித் தலைவன் வகுத்த பாதையை மட்டுமே பின்பற்றுவதும், அவன் வகுத்த கொள்கையையே தன் கொள்கையாகப் பின்பற்றுவதும் சொல்லுவதும், எந்தக் கேள்விக்கும் தன் கட்சித் தலைவன் சொல்லும் பதிலையே சொல்லுவதும் அந்த மனச்சிக்கல் ஆகும்.
பெருஞ்சித்திரனார் எழுதினார்:
"உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும் எனக்கு முன்பே தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர, உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக் கூடாது."
'வாக்குத் தவறுதல்' என்று ஒன்றைச் சொல்வார்கள். 'சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவர்' என்று ஒருவரை, "சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பேர்வழிகள்" பழிப்பதை உலகியல்பாக நாம் பார்க்கிறோம். சென்னைத் தமிழிலும் சொல்மாறி என்பது 'சோமாரி' என்று வழங்கியது. ஆனால் அதன் உண்மை என்ன?
"பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக, நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகி விடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள்."
ஒருவகையான ஆதிக்க மனப்பான்மையைச் சிலர் தம்மைச் சூழ்ந்தாரிடையிலும் தமக்குச் சமமானவர் இடையிலும் மிக நுணுக்கமாகக் கடைப் பிடிப்பார்கள். பாதிப்புக்கு உள்ளாகுபவருக்கே அது தெரியாது. பல காலங் கழித்து அது தெரிய வரும்பொழுது உறைக்குமே.. அதற்குக் கொளுத்தும் கோடைவெயிலும் ஈடாகாது. இன்றுள்ள 'மொபைல்' எனப்படும் செல்பேசி நாகரிகத்திலும் அது உள் நுழைந்துள்ளது. அவர்கள், தங்கள் செல்பேசிக் காசைச் செலவழித்து, உங்களிடம் பேசமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களிடம் பேசவேண்டும். அதற்குமேல் ஒருபடி செல்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் உங்களுக்குத் 'துண்டிக்கப்பட்ட அழைப்பு'(missed call) அனுப்புவார்கள். நீங்கள் உங்கள் காசைச் செலவுசெய்து அவர்களுடன் பேசவேண்டும். கொஞ்சமாகப் பேசுவார்களா? அவர்கள் காசுக்குச் செலவில்லையே! தாராளமாகப் பேசுவார்கள். உங்கள் பொன்னான பொழுதும், உங்கள் குடும்பத்துக்குப் போய்ச் சேரவேண்டிய காசும், 'மொபைல்' நிறுவனங்களுக்குத்தான் போகும். இதே ஆதிக்க மனப்பான்மையைக் கருத்தாளுமையிலும் பார்க்கலாம்; பணியாளுமையிலும் பார்க்கலாம். உண்மையான ஆற்றலும் மெய்ம்மையும் உள்ளவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளக் கூசுவார்கள். தாங்கள் மிகவும் வளர்ந்துவிட்டவர்களாகவும் பெயர் புகழ் பெற்றுவிட்டவர்களாகவும் நினைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், மெய்யாகத் தாழ்வு மனப்பான்மையின் சின்னங்கள்......
பெருஞ்சித்திரனாரின் தன்னுணர்வு இவ்வாறு சொல்லுகிறது:
"போலி நட்பையும், பொய் வணக்கங்களையும் இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாந்துகொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்ற வரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே......"
"மாந்தர் ஒருவர்க்கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த ஒரு சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம்
சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை."
கடவுள் வழிபாடு குறித்துத் திட்டவட்டமான கருத்துகளைத் 'தன்னுணர்வு' முன்வைக்கிறது:
"இப்புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்த்து சுடர்வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவேதான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.......நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்து விடுகின்றது. அந்தப் பேராற்றலைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே." [புடவி=பிரபஞ்சம்]
"தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை......நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையுமே காட்டுகின்றன."
"உள்ளம் பேராற்றலின் இருக்கை; அது இறைவனின் படுக்கை. அதை விட்டு விட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால், தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றி விடுகிறது என்று ஒருவன் அறிந்துகொண்டு அவன் தன் அறிவையும் உள்ளத்தையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுகளெல்லாம் நேராக்கப் பெறுகின்றன. தன்னையறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்."
இறுதியாக, உண்மையான செல்வம் எது என்பதற்குப் பெருஞ்சித்திரனார், எமர்சன் எழுதிய 'Self Reliance' நூலைத் தழுவிக் கருத்துரைத்திருப்பதை அறிவோம்:
"செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவதுபோல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும்.("கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந் தற்று" என்ற திருக்குறளை ஓர்க.) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்."
****
நன்றி: திண்ணை.காம்
No comments:
Post a Comment