20.2.09

அறிஞர் அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றல்
- தேவமைந்தன்

தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றில் முதன்மையான இடம் வகித்த அறிஞர் அண்ணா அவர்களை முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளர்கள் - படைப்பாளர்களில் பெரும்பாலோர் குறைத்து எழுதியும் மதிப்பிட்டும் பேசியும் வருகிறார்கள்.

இது நம் நாட்டு இலக்கியவாதிகளிடம் உள்ள நுண்ணரசியலின் தாக்கம். திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்பதை அகத்தியமானதொரு காலவரலாற்றுக் கட்டாயம் என்று இணக்கமான முறையில் சரியாகப் புரிந்துகொள்ள 'அறிவுஜீவிகள்' தவறிவிட்டனர்.

அன்னியமான அரசியல் பொருளாதார இலக்கியக் கண்ணோட்டத்தை அவர்கள் வரப்படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம்.

அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலுக்குச் சான்று ஒன்று -'கலிங்கராணி' என்னும் புனைகதை, குலோத்துங்க சோழன் கலிங்கநாட்டின்மேல் பெற்ற வெற்றியைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மன்னர்களே தமிழ்ப் பண்பாட்டை அழிக்கக் காரணமாய், 'கூட இருந்தே குழி பறித்த' இனப் பகைவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார்.

குலோத்துங்கன் அரண்மனைக்குளேயே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள் என்பதைக் கதை சொல்லும் போக்கிலேயே புலப்படுத்தி விடுகிறார் அண்ணா. மலர்புரி அரசி மருதவல்லியை எப்படியெல்லாம் ஓர் ஆரியன் ஏமாற்றுகிறான் அதற்குத் தமிழன் ஒருவனையே எப்படி அவன் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறான், மருதவல்லிக்கும் நடனாவிற்கும் உள்ள நட்பை ஆரியப் பெண்மணியான கங்கபாலா எவ்வாறு சதிசெய்து முறிக்கிறாள் என்பதையெல்லாம் வாசகர்கள் சலிப்படையாதபடி திறமையாகச் சொல்லிக் கொண்டு போகிறார் அண்ணா.

மன்னன் குலோத்துங்கன் கூறுகின்றான்: "பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய் போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம். இது உறுதி; ஆரியர் தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்த முயன்றால் கனக விசயர் கண்ட கதியே காண்பர்."

இவ்வாறு அறிஞர் அண்ணா தமிழினத்தை விழிப்பூட்டுவதற்கான இயக்கக் கருத்தொன்றைத் தன் கதை சொல்லும் ஆற்றலால் எண்ணற்ற இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தார்.

இதை இனவெறி என்று, நாசிசக் கொள்கை என்பதையே அறியாதவர்கள்தாம் கூறமுடியும். புகழ்மிக்க ஜெர்மன் திரைப்படமான 'Hitlerjunge Salomon'(இயக்கம்: Agnieszka Holland) ஆரியர்களின் இனவெறியை உலகறியச் சொன்னதெனில், அதை இனங்காட்டுவதும் அடையாளப்படுத்துவதும் எப்படி இனவெறி ஆகும்? இந்தப் புலப்பாட்டுக்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் கனல்பறக்கும் இயல்நடையில் அமைந்த கதைசொல்லலே ஆகும்.

இதைத்தான் கலையம்சம் குறைந்தது என்றும் வடவர் எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு ஆகிய பிற இனவெறுப்பின் அடிப்படையில் அமைந்தது என்று அறிஞர் அண்ணா அவர்களின் கதை சொல்லும் ஆற்றலைக் குறித்து எஸ்.தோதாத்ரி போன்றோர் எழுதினர்.(1)

பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, அண்ணாவின் ஏழ்மை நிலையை அறிந்து பாடப்புத்தகங்கள் வாங்கித் தருவது முதலான உதவிகள் செய்து, பி.ஏ.ஆனர்ஸ் படிக்க வைத்தார். அரசியல், வரலாறு, பொருளியல் மூன்றையும் சிறப்பாகப் பயின்ற காலத்திலேயே மேடைப்பேச்சுகள் நிகழ்த்தி - தீண்டாமை எதிர்ப்பு, சாதியொழிப்பு முதலான சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற்குத் தோதாக, கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் அறிஞர் அண்ணா.

அவர் கதை சொல்லப் பயன்படுத்திய உரைநடை, அந்தக் காலத்துக்கு மிகவும் புதியது. சிந்தனையைக் கிளர்வது. சமூகத்தின் இருண்ட பகுதிகளை - மேல்மட்டத்தில் சகல வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் ஊழல்களை, மற்றவர்களுடன் அவர்களும் வாசிக்கையில் பரிகசிக்கும்படி நாடக உரையாடல் பாணி நடையும் கலந்து எழுதப்பட்டது.

'திருமலை கண்ட திவ்யஜோதி,' 'புலிநகம்,' 'பிடிசாம்பல்,' 'தஞ்சை வீழ்ச்சி' முதலான அண்ணாவின் சிறுகதைகள், கற்பனை இழையோடும் நடையைக் கொண்ட வரலாற்றுச் சிறுகதைகளாக விளங்கின. 'அடைமொழிக்கும் அடுக்குமொழிக்கும் கூறவந்த கருத்தைவிட வலியுற்று நிற்கும் பயனிலையை முன்னிறுத்தி எழுவாயை அதன்பின் அமைந்த மொழிநடைப் பாங்கினை இவர்தம் நடையின் தனிக்கூறு எனலாம்' என்று முனைவர் இ. சுந்தரமூர்த்தி கூறுவார்.(2)

'பார்வதி பி.ஏ.' என்ற புதினத்தில் வரும் கதைப்பாத்திரம் டாக்டர் லலிதகுமாரி. தன் படைப்பான அவரைப் போலவே தானும் 'சமுதாய நோய்முதல் நாடிய நுழைபுல மருத்துவ'ராக அறிஞர் அண்ணா விளங்கினார்.(3)

'குமரிக் கோட்டம்,' 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்,' அன்னதானம்,' 'பேய் ஓடிப்போச்சு,' தேடியது வக்கீலை,' 'இரு பரம்பரை,' 'ராஜாடி ராஜா,' 'சூதாடி,' கருப்பண்ணசாமி யோசிக்கிறார்,' 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்,' 'செவ்வாழை' ஆகிய சிறுகதைகள், அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலால் எத்தகைய திடமான சமூக நோக்கை வாசகர் நெஞ்சில் விதைத்தன என்பதற்குச் சான்றுகள்.

சனாதன மிகைப்பற்றும் சாதிவெறியும், எளிமையானதும் உறுதியானதுமான பகுத்தறிவுக் கடைப்பிடியின் முன் வெல்ல முடியா என்பதைச் சொல்லும் கதைதான் 'குமரிக் கோட்டம்.' குமார கோட்டம் குமரிக் கோட்டம் ஆவதை, [கதையைச்]சொல்லிச் செல்லும் முறையில் உறுதிப்படுத்தி விடுகிறார் அண்ணா. குமரிக் கோட்டம், எளியோரின் புகலிடம்.

'கண்ணீர்த் துளிகள்' என்று பெரியாரால் அழைக்கப்பட்ட காலகட்டத்தில், தாம் பெரியாரைப் பிரிந்ததால் எந்த அளவு பாதிப்பிற்குள்ளானார் என்பதை அறிஞர் அண்ணாவை விட எவராலும் இந்த அளவு கதையாகச் சொல்ல முடியாது. அதுதான் 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்.'

இந்த சுரண்டல் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு வாழ இயலாமல் போகும்பொழுது வேறு வழிகளில்லாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை எந்த அளவு வன்மத்துடன் இதே சமூகம் தண்டிக்கிறது என்பதை 'ராஜாடி ராஜா' வில் சொன்னார் அண்ணா.

சீட்டாட்டம் சூதாட்டம். பணம் வைத்துச் சூதாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரகடனப்படுத்தும் போலிச் சமூகம், பங்குச் சந்தையில் பணவேட்டையாடுபவர்களை என்ன செய்கிறது? - என்று அன்றே கேட்டார் அண்ணா. இன்று பங்குச் சந்தைச் சூதாட்டத்தை எல்லோருக்கும் கற்றுத்தர ஊடகத்துறை முனைந்துள்ளதை நாமறிவோம். அதுபற்றி எவருக்கும் கவலையில்லை. மரத்துப் போய்விட்டது. 'சூதாடி' கதையில் அறிஞர் அண்ணாவின் சொல்லாடலை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தோமானால் மனம் மீண்டும் உணர்வுபெறும்.

மனிதரின் மூடத்தனத்தை கடவுளர் எள்ளி நகையாடுவதாக அண்ணா சித்திரித்த கதைதான் 'கருப்பண்ணசாமி யோசிக்கிறார்.' 1951இல் லால்குடியருகே புஞ்சைச்சாங்குடி என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியே இந்தக் கதையின் அடித்தளம். இதை அண்ணா தவிர யார் சொன்னாலும் வெறும் செய்தி ஆகிப்போகும்.

வர்க்க சமூக பேதம், வீட்டு விலங்குகளைக்கூட விட்டு வைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணா சொன்ன கதை, 'இரு பரம்பரை.'

'தனம்' என்ற தமிழ்த் திரைப்படம் - 'சோதிடந்தனை இகழ்' என்பதை, பொருத்தமான கதை - நடிகர் - இயக்கம் ஆகிய கட்டமைப்போடு சொன்னது. தமிழினம், வழக்கம்போல அதற்குத் தரவேண்டிய ஆதரவு தரவில்லை. தினத்தந்தியே சோதிடம் பரப்பும் காலமல்லவா இது? இதே சேதியை அண்ணா ஐம்பதாண்டுகளுக்குமுன் சிறுகதைகளாகச் சொன்னார். கதைப்பாத்திரங்கள் மட்டும் ஆண்கள்தாம். 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்' என்பவையே அவை.

அண்ணாவின் புதினம் ஒன்றனுக்கு வருவோம்.

'ரங்கோன் ராதா'வில், சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் பெரிய புள்ளிகளின் அசலான இயல்பை, அண்ணா, தன் பாணியில் கதையாகச் சொன்னார். 'இத்தகைய பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை ரசமான கதைப்போக்கில் காண்பிக்கிறார்.(4:1)

தர்மலிங்க முதலியார் என்பவர் பேராசை மிக்கதொரு பெரும்புள்ளி. தன் மனைவி ரங்கத்தின் தங்கையும் 'பகல்வேஷப் பகட்டுக்காரி'யுமான தங்கத்தை இரண்டாம் மனைவியாக தர்மலிங்கம் மணந்து கொள்கிறார். அந்த இருவரும் அடித்த கொட்டத்தில் விரக்தி அடைந்த ரங்கம், தனக்கு சமூகம் இட்டிருந்த வேலியைத் தாண்டுகிறாள். தன் ஆசைநாயகனுக்குப் பிறந்த ராதா என்ற மகளுடன் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து தமிழகம் திரும்புகிறாள். நாகசுந்தரம் என்கிற தர்மலிங்கம் முதலியாரின் மகன் அவர்களைச் சந்திக்க நேர்கிறது. ராதா தன்னுடைய தங்கை முறை என்றறிந்த அவன், அவளுக்கு நல்வாழ்வு கொடுக்கப் பெருமுயற்சி எடுக்கிறான். நண்பன் பரந்தாமனுக்கு அவளை
மணம் செய்து வைக்கிறான். அடுக்குச்சொற்கள் நிரம்பிய அணிநடையும் புராண இதிகாச அறிவும் அண்ணாவின் கதை சொல்லலை வலிமைப்படுத்துகின்றன. அதிலுள்ள ''பிரசார தொனி'க்கு அழுத்தம் தருவன அவர் கதை சொல்லும் முறையில் இடம்பெறும் அந்த இரண்டும்தான்.''(4:2)

அண்ணாவின் வரலாற்றுக் கதை சொல்லும் பாணியில் வரலாற்றுண்மைகள் பல வெளியாயின. மிகச் சில சான்றுகள்:

புத்த மார்க்கம் பரவாமல் தடுப்பதற்கு வைதிக சமயவாதிகள் நாலந்தா பல்கலைக் கழகம் தொடர்பாகச் செய்த கொடுஞ்செயலே 'ஒளியூரில்' என்ற கதையில் வெளிப்பட்டது.

இஸ்லாமும் வைதிக சமயமும் முரண்பட்ட நிலையை மாவீரன் சிவாஜியின் வாழ்வு நிகழ்ச்சி ஒன்றைப் பின்னணியாக வைத்து அறிஞர் அண்ணா சொன்ன கதையே 'புலிநகம்' ஆகும்.

கிறிஸ்தவ மதமும் வைதிக மதமும் மோதிக் கொண்டன. திருமலை மன்னன் மறைவுக்கு அவனுடன் கிறித்தவப் பாதிரிமார் கொண்ட நட்பை வெறுத்த வைதிகர்களே காரணம் என்பதை திருமலை மன்னனின் அரசவைப் பணியாளர் லிங்கண்ணாவை வைத்து அண்ணா சொன்ன கதையே 'திருமலை கண்ட திவ்யஜோதி' ஆகும்.

சைவ வைணவப் பகையால் கருணாகரத் தொண்டைமான்(கலிங்கப்போரில் வெற்றிகண்டவன்) அடைந்த பாதிப்பை 'பிடிசாம்பல்' என்ற தலைப்பில் கதையாகச் சொன்னார் அண்ணா. வைணவர்களின் சூழ்ச்சி தாங்காமல்தான் படைத் தலைவனான அவன், சைவத் திருத் தொண்டராக மாறினான் என்பது கதையின் வாதம்.

கிறிஸ்தவம் பரவுவதைக் கண்டு இந்து சமயவாதிகள் கலங்கியதை 'சமயபுரத்து அம்மன் தொடுக்கும் மான நஷ்ட வழக்கு' என்ற கதையில் அண்ணா சொல்லுகிறார். 'எல்லாச்சமயமும் ஒரே நெறியையே காட்டுகின்றன என்று இந்து சமய நெறியாளர்கள் கூறிய போதிலும், தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதிலே நாட்டம் கொண்டிருப்பதும், பிற சமயக் கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெறுவதைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் இக்கதை வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.(5)

'எண்ணாத்துறை நாடி எண்ணிப் பிறர்நலம்
ஏற்பச் செய்தான் அண்ணாத்துரை'

என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாவரிகளுக்கேற்ப, நாட்டார் இடையேயும் நகரத்தார் - உலகத்தார் இடையேயும் செல்வாக்கை மிகவும் பெற்ற கதைசொல்லல்(narrative/narration) ஆற்றலிலும் தலைசிறந்து விளங்கினார் அறிஞர் அண்ணா.

********
பார்வை நூல்கள்:

1. எஸ்.தோதாத்ரி, தமிழ் நாவல் - சில அடிப்படைகள். அகரம் வெளியீடு,
சிவகங்கை 1980.

2. 'மொழிநடை,' கட்டுரை. இடம் பெற்ற தொகுப்பு - முற்போக்கு இலக்கியத் திறன் அரைநூற்றாண்டு(1940-1990). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை 1995.

3. முனைவர் மா.இராமலிங்கம், புனைகதை வளம். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். சென்னை 1973.

4. பெ.கோ.சுந்தரராஜன்(சிட்டி) சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை 1977.

5. முனைவர் இரா.சேது, அண்ணாவின் கதை இலக்கியம். பூம்புகார் பிரசுரம். சென்னை, 1983.

********
தெளிவு
-தேவமைந்தன்

ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்;
மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம்.
பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’
புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவை, எவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...”
“நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள். “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார்.
என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். சித்தர் என்றும் சொல்வார்கள். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று.
‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’னே கேட்டே..?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார்.
அது ‘திருமந்திரம்.’
“பிரி, அந்த நூத்திமுப்பத்தொன்பதாம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்கார'மிட்டுக் கொண்டிருக்கிறது. இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்த முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் கூ..டாதே.. திருத்தமா, ஒப்புராவா, ஓசை நிரவி, படி!”
“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே”
படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும்.
ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வயசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார்.
“தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன்.
“ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார்.
“பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு.. தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அத்'தெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அவருதாம்’ப்பா..முனிவரு..ஆங்ங்..தத்தாத்திரேயரு... தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து வேசி, குப்பக்கோழி வரெ இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...”
அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் 'உறைத்தது' என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக, வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி?

******************************
நன்றி: திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரையை வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு.
தமிழர் கருத்துக் கருவூலம் - அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
-தேவமைந்தன்

பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது.

அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார். அதே பொழுது 'விடுகவி' என்பது கவிதை வடிவிலான விடுகதை அன்று; விடுகவி என்பது தனிப்பாட்டு என்பதை மட்டுமே குறிக்கும் என்பதையும் தெளிவு படுத்தினார்.

பிசி என்பது விடுகதை வடிவத்துக்கு மூத்தது. உவமிக்கப்படும் பொருளை உவமைப் பொருளால் குறிப்பித்துக் கூறுவதையே பழந்தமிழர் பிசி என்றனர். இப்பொழுது வழங்குகிற விடுகதை, பிசி என்றதன் செறிவும் அழுத்தமும் கொண்டதன்று.

விடுகதையைத் தமிழ் நாட்டுப்புற மக்களே சிறப்பாக வழங்குகின்றனர். பட்டணத்து நாக்குகளை விடுகதைகள் அணிசெய்வதில்லை.

எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர்.

குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.('கொங்கு விடுகதைகள்' நூலில்)

நாட்டுப்புற இலக்கியமான விடுகதை, காலங்காலமாய் ஒருவரின் இயல்பான மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்துகொண்டே உள்ளது. மொழியின் - மக்கள் சார்ந்த ஆற்றல்களுள் ஒன்றாகவும் முதன்மையானதாகவும் புதிர் அல்லது விடுகதையை அறிஞர் நோம் சோம்ஸ்கி அடையாளப் படுத்தினார்.

சான்றாக, தண்டியம் என்றொரு அழகான சொல் கொங்கு நாட்டில் புழங்குகிறது. தூயதமிழ்ச் சொல். வீட்டின் புறக்கூரையைத் தாங்கும் கட்டையை, வாயிற்படியின் மேற்குறுக்குக் கட்டையைத் தண்டியம் என்று சொல்வார்கள்.

'இரண்டு வீட்டுக்கு ஒரு தண்டியம்' என்றொரு விடுகதை. எங்காவது இரண்டு வெவ்வேறு வீட்டுக்காரர்கள் இவ்வமைப்பை ஏற்றுக்கொள்வார்களா? அப்படியானால் இதற்கு வேறுபொருள் அல்லது புதிர் விடுவிப்பு இருக்க வேண்டும். அது என்ன?

முகத்திற்கு இரு பகுதிகள். வலம் இடம் என்று இரண்டு. இரு பகுதிகளிலும் காலதர்(வெண்டிலேட்டர்) போல இரு புருவக்கூடுகளின்கீழ் கண்கள் இரண்டு. இரண்டு பகுதிகளையும் சிறப்பாகக் குறுக்குக் கட்டை/தண்டியமாகிய மூக்கு பிரிக்கிறது; அதேபொழுது சேர்த்தும் வைக்கிறது. எனவே அந்த விடுகதைப் புதிருக்கு விடுவிப்பு - 'மூக்கு' என்பதே.

இப்படிப் பல. அவற்றுள் சில:

இரவிலே சுமப்பான். பகலிலோ சுருண்டு போவான்.(பாய்)

இறந்த மாட்டை அலற அலற அடிக்கிறான் பார்.(மத்தளம்)

இருட்டு வீட்டிலே குருட்டுக் குள்ள எருமை மேயுது பார்.
(பெருச்சாளி)

பார்க்க அழகு. பாம்புக்கோ பகை. அவன் யார்?(மயில்)

அடிபட்டவன் உரக்க உரக்க அழுகிறான். அதைப்போய் மங்கலம் என்கிறது ஊர். அது என்ன?(கொட்டுமேளம்)

சடசட மாங்காய். சங்கிலி ரோடு. விழுந்தா கறுப்பு. தின்னா தித்திப்பு. அது என்ன?(நாவல் பழம்)

உழைக்கத் தெரிந்தவனுக்கு உதைக்கவும் தெரியும். அவன் யார்?(கழுதை)

ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுக்கும் ஒரே விளக்கு. ஊருக்கெல்லாம் பொது விளக்கு. அது என்ன?(நிலவு)

கிச்சா பிச்சா ஊதா ரவிக்கை.(கேழ்வரகு)

குண்டப்பன் குழியில் விழுந்தான். எழுந்தான் பார். எல்லார் வாயிலும் விழுந்தான். அவன் யார்?(குழிப் பணியாரம்)

ஆனை போவுது. தாரை தெரியவில்லை.(கரிசல்)

சிவப்பு ஜிப்பாப் பைக்குள்ளே சில்லறை கொட்டிக் கெடக்குது. (காய்ந்த மிளகாய்)

சுட்ட பொணத்தை சுட, செத்த பொணம் வந்திருக்கு. அது என்ன?(கரித் துருத்தி)

சூடுபட்டுச் செவந்தவன்தான் வீடுகட்ட ஒதவுவான். அவன் யார்?(செங்கல்)

சொறி புடிச்சவனெக் கறி சமைச்சு, சோறெல்லாம் கசப்பு. அவன் யார்?(பாகற்காய்)

தங்கச்சி போட்ட சித்திரம் தரையெல்லாம் தவழுது பார்! அது என்ன?(கோலம்)

சற்றுப் பெரிய விடுகதைகள்:

வலதுபுறம் விளையாடி வலையில் பூரும். வாடாது வதங்காது
மண்மேல் போட்டால். (எழுத்தாணி) [நன்றி: அல்லியங்கோதை அம்மாள்]

ஆனை செத்து ஆறு மாசம். ஆனாலும் அதன் தடம் அழியவில்லை. அது என்ன?(நெல்)

அழகான குழந்தைக்கு பலமா மூணாங்கை. அது என்ன?(அழுகை)

கடுகுபோல் வாயிருக்கும். கணக்கற்ற பல்வரிசை. அடுக்கடுக்காய் எலும்பின்றி ஆயிரத்துப் பல்வரிசை. அது என்ன? (நத்தை)

பறக்காத பூப்பந்து. பகட்டான சிறுபந்து. வாயிலே இட்டால் தேன்பந்து. ஏழுமலையிலோ பெரிய பந்து. அது என்ன?(லட்டு)

அரைப்படி அரிசி பொங்கி, ஆயிரம் பேர் வாயில போட்டும் அரைச்சட்டி மிச்சம். அது என்ன?(சுண்ணாம்பு)

மண்ணுக்குள்ள கயிறு. மக்காத(மட்காத) கயிறு.(மண்ணுள்ளிப் பாம்பு)

மாரி இல்லாம ஆமை கெட்டது. ஆமை இல்லாம சீமை கெட்டது. அது என்ன?(வெள்ளாமை/வேளாண்மை)

தம்பிக்கு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?(உதடு)

வெள்ளை வெள்ளைத் தண்ணீலே வேசை ஆடுறா பாருக்கா!(மத்து)

வெள்ளசீல சுத்தியிருப்பாள் சின்ன குண்டக்கா. அது என்ன?(மோதகம்)

பஞ்சே இல்லாம நூல் விப்பான். பலே கைகாரன். அவன் யார்?(சிலந்தி)

கொம்பு ரொம்ப கம்பு. தொட்டுப் பாத்தா வம்பு. அது என்ன?(தேளின் கொடுக்கு)

ஒரு எழுத்து உமிழும். ஒரு எழுத்து கேக்கும். அது என்ன?(தூ. தா)

உத்தியோகம் இல்லே. ஊர் சுத்தி திரிவான். அலைச்சலுக்குப் பஞ்சமில்லே. தெருவுல சோறு. அவன் யார்?(தெரு நாய்)

ஊளை மூக்கன். சந்தைக்குப் போறான். அவன் யார்?(பனைநுங்கு)

கண்ணுண்டு. பார்வையில்லை. ஆனா, கோத்து வாங்குவான். அவன் யார்?(தையல் ஊசி)

மூடி திறந்ததும் மூக்கை வாசனை தொளைக்குது. அது என்ன?(பலாப்பழம்)

ஒரே மரத்துல அஞ்சு விதமான பழம். அது என்ன?பால், தயிர், வெண்ணெய், மோர், நெய்)

ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து வந்தாலும் புளுக்கூண்டு தூசி கெளம்பாது.(எறும்பு வரிசை)

பல பேருக்கு ஒரே குடுமி. அது என்ன?(பூண்டு)

பூப்போல மவராசி. காயமானாலும் துணைவருவாள். அவள் யார்?(பஞ்சு)

அழகான வீட்டுக்கு அரக்கன் தலை அலங்காரம். அது என்ன? (திருஷ்டி பொம்மை)

கணக்குப்பிள்ளை பொண்டாட்டி தினுக்குப்போட்டு ஆடினாள். அவள் யார்?(ஆவாரங்காய்)


தற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள விடுகதைகளுள் சில:

பூத்தா மஞ்சள். காய்ச்சா சிவப்பு. பழுத்தா கறுப்பு. சாப்[பிட்]டா இரும்பு. அது என்ன?(பேரீச்சம்பழம்)

குதிகுதி என்று குதிக்கிறாள். கொட்டைப் பல்லால் சிரிக்கிறாள். அவள் யார்?('பாப் கார்ன்' எனப்படும் சோளப்பொரி)

பல்லைப் பிடிச்சு அழுத்தினா பதறிப் பதறி அழறா. அவள் யார்?(ஆர்மோனியம்)

கல்லுமேலே பூர்ண சந்திரன். வாங்க. புட்டுப்புட்டுத் தின்னலாம். (தோசை)

தலையைச் சீவினால் தாளில் சீராக நடப்பான். அவன் யார்?(பென்சில்)

இதுவரை இல்லாதது. ஆனால் எப்போதும் இருப்பது. எவருமே அறியாதது.(அடுத்த/வரும் நாள்)

ஒருநாடு போ என்கிறது. ஒரு நாடு வா என்கிறது. அவை என்ன?
(போலந்து, வார்சா)

வேட்டை ஆட முடியாது. வேடர் உள்ள தீவு.(அந்தமான்)

கண்ணுக்குக் கரையே தெரியாது. தண்ணியே இல்லாத தடாகம். அதுல தாவிப்பாயுது பார் சீவனுள்ள கப்பல்.(ஒட்டகம்)

வெளி'ல இருப்பவனைத் அழுத்தினா உள்ளே இருக்கிறவன் அலறி வூட்டையே நடுக்கடிக்கிறான். அவன் யார்?(அழைப்பு மணி)

கையைப் புடிச்சார். காசு கேட்டார். தட்டிக் கேட்கவோ ஆரும் வரலை. அவர் யார்?(மருத்துவர்)

முச்சந்திலே மூணு விளக்கு. பாத்து நடந்தீர்'னா பாதகமில்லே. அது என்ன?('சிக்னல்')

வாயில்லாப் பிள்ளை ஊர் ஊராய்ப் பறக்குது. அது என்ன?(விமானம்)

காத்தடிச்சா பறக்கும் காயிதம். பாத்தா எவனும் பொறுக்கி எடுக்குறான். அது என்ன?(ரூபாத் தாள்)

பூமியிலே பிறக்கும். புகையாகப் போகும். அது என்ன?('பெட்ரோல்')

சண்டையில்லே. யுத்தமில்லே. ஆனா உயிரை காத்துக்க இன்னைய வீரனுவோ போடறது. அது எது? ('ஹெல்மட்')

ஓலம் இட்டாலும் சோறாக்குவான். அவன் யார்?('குக்கர்')

நாளுக்கு நாள் இளைக்கிறவனுக்கோ நாள் காட்ற வேலை. அவன் யார்?(தினசரி காலண்டர்)

ரெண்டு பேருக்குமேல ரெண்டு பேர் தொணை. அவங்க யார்?(மூக்குக் கண்ணாடி)

மண்ணுக்குள்ள மயிர்கோதி.(பனங்கிழங்கு)

நாராசமா ஓசை பண்ணி ஒன்ன கூப்புடும். ஒன் காதுல மட்டும் ஊர்க்கதையெல்லாம் சொல்லும். அது என்ன?(தொலைபேசி)

வீடில்லா நகரங்கள். நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?(தேசப்படம்)

சிறகில்லாப் பறவை. நாடெல்லாம் சுத்தும். அது என்ன?(தபால்)

கறுப்பனுவ கொஞ்சம் அசந்துட்டா வெள்ளைக்காரனுவ ஆட்டம். அது என்ன?(நரை)

புடிக்கவே முடியாது. அத்தனெக் கள்ளப்பய.(புகை)

குண்டுமுழி ராசாவுக்கு குடலெல்லாம் பல்லு. அது என்ன?(மாதுளை)

போறப்போ கெழவி. வர்ரப்போ கொமரி.(சால்)
[சால்= ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்/container made of leather]

குள்ளமான கோழிக்கு கொடலுக்குள் சதங்கை.(நிலக்கடலை)

கைக்குள்ள அடங்கிக்கிடுவான். கண்ணத் தொறந்து மின்னுவான். அது என்ன?('டார்ச் லைட்')

போட்டா பொரியும் இங்கிலீசு முட்டை.(கடுகு)

மண்ணுக்குள்ள மயிரு... பயிராகுது.(வெட்டிவேர்)

வளைக்க முடியும். ஒடிக்க முடியாது. அது என்ன?(தலைமயிர்)

வெள்ளிப் பணம் துள்ளி விழும். அது என்ன?(மீன்)

குளிர் இல்லே. கூதல் இல்லே. குளிர் காயறாங்க. யார்?(கொல்லர்)

சண்டை போடலை. சச்சரவில்லை. குடுமியைப் பிடிக்கிறார். அவர் யார்?(முடிதிருத்தம் செய்பவர்)

சிலுசிலுத்த தண்ணியில செம்மறி ஆடுக மேயுது. அது என்ன?(எண்ணெய்ப் பலகாரம்)

‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட் டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்டித் தொகுக்க ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் வேதமுத்து ஐயா [1971,1975], பி.சி.எஸ். மணியன்[1974] எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி ('சிந்தனையூட்டும் விடுகதைகள்.' ஆண்டு குறிக்கப்படவில்லை) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் 1975ஆம் ஆண்டில் தொகுத்துப் பதித்து வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்தார்.

புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.

முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளுள் பாலியல் சார்பு வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னன்னானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அதை வெளியிட்டது.

பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார்.

முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்துப் பல்வேறு வகைகளில் ஆராய்ந்தனர்.

குழந்தையைக் குறித்து சொல்லப்படும் மிகச் சிறந்த விடுகதைகளாகக் கருதப்பெறுபவை:

தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?"**** என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.

கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?"*** என்று கேட்டால் அதே விடை கிடைக்கும்.

புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.(**)

இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்''*** என்ற கொச்சை வழக்கு, பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.

புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
"ஓகோ லேலோ
உயர்ந்த லேலோ
கண்டந் துண்ட
சப்லட்டு லேலோ - அது என்ன?"**
என்று புதுவைக் கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சொல்லப்படுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,
"உச்சாணிக் கிளையிலே
ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"***
என்ற வழக்குக்கு உரியதாகிறது.

தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,
"சின்னச் சிறுக்கியும்
சின்னப் பையனும்
சிரித்துக் கட்டின தாலி
சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச்
சென்னப் பட்டணம் பாதி - அது என்ன?"**
என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக் கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது.

சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.**
********
பார்வை:

தமிழ் விடுகதைகள்
தேவமைந்தன் திண்ணை.காம் 06-7-6.

எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி(தொகுப்பாசிரியர்), சிந்தனையூட்டும் விடுகதைகள். சிவகாசி.

**முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல். புதுச்சேரி.

*** முனைவர் தி. பெரியசாமி, கொங்கு நாட்டுப்புற விடுகதைகள். சென்னை.

**** முனைவர் ச.வே. சுப்பிரமணியன், தமிழில் விடுகதைகள். சென்னை.

****
நன்றி: திண்ணை.காம்
ஐயை

கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் நாளைப்போலவே இரவில் பயணம் செய்தனர். அடுத்த விடியலின்பொழுது, மதுரை மாநகரின் முரசொலிகளைக் கேட்டதால் மிகுந்த மகிழ்வு எய்தினர். நடக்க, நடக்க - களிறுகளின் பிளிறல் ஒலியையும்; போர்க்குதிரைகளின் கனைத்தல் ஒலியையும்; ஓதுவார்களின் தமிழ்ப்பண்ணோசையயும் பாணர்களின் வள்ளைப்பாட்டையும் செவி மடுத்து மனம் நிறைந்தனர்.

மூவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. திருவோங்கிய வையை ஆற்றை அடைந்ததும் - பாவலர்தம் பாடல்களைக் கேட்டு, தூயதமிழ் மாமதுரை வந்து அடைந்தோம் என்று மனமகிழ்ந்தனர்.

குதிரை முகம், சிங்கமுகம், யானைமுகமுடைய படகுகளில், பொதுப்படகுத்துறையில் - மக்கள் இடைவிடாது, சாரிசாரியாக வையை ஆற்றைக் கடந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்டு மருட்கையுற்று ஒதுங்கி, மக்கள் நெரிசல் குறைந்த ஒரு சிறு துறையை அணுகி, புணையொன்றில் ஏறி, வையையின் தென்கரை அடைந்தனர்.

மதுரையின் கீழைக்கோபுர வாயிலின் அருகே மதிற்புறத்திலுள்ள சிற்றூரொன்றில் தங்கினர். மறுநாள் காலையில், மதுரை மாநகரின் பல்வேறு வகைப்பட்ட முரசொலிகளைக் கேட்டதும், கோவலன் கவுந்தியடிகளை அணுகி, மதிப்பார்வத்துடன் வணக்கம் செய்து, கடந்த தன் வாழ்க்கையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டான்.

தான் மதுரை மாநகருக்குச் சென்று திரும்பும் வரை கண்ணகியைக் கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான்.

கோவலனும் கண்ணகியும் கால்நடையாகவே வந்து சேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்டு, மாடலன் , இடையில் வந்திருந்தான். கவுந்தியடிகளும் மாடலனும் கலந்துபேசி, வெட்டவெளியில் துறவியரோடு கண்ணகி கோவலரைத் தங்கவைத்தல் முறையன்று என்று முடிவு செய்தனர். அன்று பகல் பொழுது அடைவதற்கு முன்னால், அவ்விருவரையும் மதுரைக்குச் சென்று தங்குமாறு செய்தல் வேண்டும் என்று தீர்மானித்தனர்.

திரும்பி வந்த கோவலனும் மாடலனும் கவுந்தியடிகளும் உரையாடிக்கொண்டிருக்கையில், புறஞ்சேரியிலிருந்த இயக்கி என்னும் பெண்தேவதைக்குப் பாற்சோறு படைத்துவிட்டு மாதரி அங்கே தற்செயலாக வந்தாள். கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுது நின்றாள்.

அவளைக் கண்ட மாதவத்தாட்டிக்கு, குற்றமற்ற ஆயர்குல வாழ்க்கையை உடைய அவளிடம் - ஏன் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலமாகக் கொடுக்கக் கூடது என்ற சிந்தனை பிறந்தது.

சிந்தனையைச் செயலாக்கினாள்.

மாதரி என்ற அந்த இடைக்குல மடந்தையின் மகளே ஐயை. தன் தாய் அடைக்கலமாகப்பெற்று அழைத்துவந்த கண்ணகிக்கு அவள் துணையாய் இருந்தாள்.

அங்கே, கண்ணகி தன் கணவனுக்குச் சமையல் செய்தல் பொருட்டு, அடுப்பை மூட்டிக் கொடுத்தவளே ஐயைதான்.

கண்ணகிக்கு வேண்டிய பணிவிடைகளை விருப்பமுடன் செய்தாள். அவ்வாறு செய்துவந்த இடைக்குலச் சிறுமியாகிய ஐயை, கோவலன் கொலையுண்ட செய்தியையும் பாண்டிய வேந்தனிடம் கண்ணகி வழக்குரைக்கச் செல்ல நேர்ந்த செய்தியையும் கேட்டு எந்த அளவு வருந்தி அரற்றியிருப்பாள் என்று நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.

தான் அடைக்கலமாகப் பெற்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் இவ்வாறாகியதே என்ற குற்ற உணர்வு தாங்காமல் - தனது தாயாகிய மாதரியும் தீயில் புகுந்து இறக்கவே, செய்வதறியாமல் திகைத்தாள் ஐயை.

பின்னர், தேவந்தி என்பவள் கண்ணகியைத் தேடி மதுரைக்கு வந்தபொழுது, அவளுடன் ஐயையும் சேரநாட்டுக்குச் சென்று சேர்ந்தாள்.

பத்தினிக் கோட்டமாகிய கண்ணகியின் கோவிலில் புகுந்து பத்தினிக்கடவுளைப் பரவினாள்.

பத்தினிக் கடவுளாய் மாறிய சோழநாட்டு வணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகியை அடைக்கலமாகப்பெற்ற இடைக்குல மடந்தை மாதரியின் கள்ளமில்லா உள்ளத்துச் சிறுமி ஐயையின் அன்புப் பெருக்கை, உலகில் எவராவது வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா?