தமிழர் கருத்துக் கருவூலம் - அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
-தேவமைந்தன்
பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது.
அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார். அதே பொழுது 'விடுகவி' என்பது கவிதை வடிவிலான விடுகதை அன்று; விடுகவி என்பது தனிப்பாட்டு என்பதை மட்டுமே குறிக்கும் என்பதையும் தெளிவு படுத்தினார்.
பிசி என்பது விடுகதை வடிவத்துக்கு மூத்தது. உவமிக்கப்படும் பொருளை உவமைப் பொருளால் குறிப்பித்துக் கூறுவதையே பழந்தமிழர் பிசி என்றனர். இப்பொழுது வழங்குகிற விடுகதை, பிசி என்றதன் செறிவும் அழுத்தமும் கொண்டதன்று.
விடுகதையைத் தமிழ் நாட்டுப்புற மக்களே சிறப்பாக வழங்குகின்றனர். பட்டணத்து நாக்குகளை விடுகதைகள் அணிசெய்வதில்லை.
எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர்.
குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.('கொங்கு விடுகதைகள்' நூலில்)
நாட்டுப்புற இலக்கியமான விடுகதை, காலங்காலமாய் ஒருவரின் இயல்பான மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்துகொண்டே உள்ளது. மொழியின் - மக்கள் சார்ந்த ஆற்றல்களுள் ஒன்றாகவும் முதன்மையானதாகவும் புதிர் அல்லது விடுகதையை அறிஞர் நோம் சோம்ஸ்கி அடையாளப் படுத்தினார்.
சான்றாக, தண்டியம் என்றொரு அழகான சொல் கொங்கு நாட்டில் புழங்குகிறது. தூயதமிழ்ச் சொல். வீட்டின் புறக்கூரையைத் தாங்கும் கட்டையை, வாயிற்படியின் மேற்குறுக்குக் கட்டையைத் தண்டியம் என்று சொல்வார்கள்.
'இரண்டு வீட்டுக்கு ஒரு தண்டியம்' என்றொரு விடுகதை. எங்காவது இரண்டு வெவ்வேறு வீட்டுக்காரர்கள் இவ்வமைப்பை ஏற்றுக்கொள்வார்களா? அப்படியானால் இதற்கு வேறுபொருள் அல்லது புதிர் விடுவிப்பு இருக்க வேண்டும். அது என்ன?
முகத்திற்கு இரு பகுதிகள். வலம் இடம் என்று இரண்டு. இரு பகுதிகளிலும் காலதர்(வெண்டிலேட்டர்) போல இரு புருவக்கூடுகளின்கீழ் கண்கள் இரண்டு. இரண்டு பகுதிகளையும் சிறப்பாகக் குறுக்குக் கட்டை/தண்டியமாகிய மூக்கு பிரிக்கிறது; அதேபொழுது சேர்த்தும் வைக்கிறது. எனவே அந்த விடுகதைப் புதிருக்கு விடுவிப்பு - 'மூக்கு' என்பதே.
இப்படிப் பல. அவற்றுள் சில:
இரவிலே சுமப்பான். பகலிலோ சுருண்டு போவான்.(பாய்)
இறந்த மாட்டை அலற அலற அடிக்கிறான் பார்.(மத்தளம்)
இருட்டு வீட்டிலே குருட்டுக் குள்ள எருமை மேயுது பார்.
(பெருச்சாளி)
பார்க்க அழகு. பாம்புக்கோ பகை. அவன் யார்?(மயில்)
அடிபட்டவன் உரக்க உரக்க அழுகிறான். அதைப்போய் மங்கலம் என்கிறது ஊர். அது என்ன?(கொட்டுமேளம்)
சடசட மாங்காய். சங்கிலி ரோடு. விழுந்தா கறுப்பு. தின்னா தித்திப்பு. அது என்ன?(நாவல் பழம்)
உழைக்கத் தெரிந்தவனுக்கு உதைக்கவும் தெரியும். அவன் யார்?(கழுதை)
ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுக்கும் ஒரே விளக்கு. ஊருக்கெல்லாம் பொது விளக்கு. அது என்ன?(நிலவு)
கிச்சா பிச்சா ஊதா ரவிக்கை.(கேழ்வரகு)
குண்டப்பன் குழியில் விழுந்தான். எழுந்தான் பார். எல்லார் வாயிலும் விழுந்தான். அவன் யார்?(குழிப் பணியாரம்)
ஆனை போவுது. தாரை தெரியவில்லை.(கரிசல்)
சிவப்பு ஜிப்பாப் பைக்குள்ளே சில்லறை கொட்டிக் கெடக்குது. (காய்ந்த மிளகாய்)
சுட்ட பொணத்தை சுட, செத்த பொணம் வந்திருக்கு. அது என்ன?(கரித் துருத்தி)
சூடுபட்டுச் செவந்தவன்தான் வீடுகட்ட ஒதவுவான். அவன் யார்?(செங்கல்)
சொறி புடிச்சவனெக் கறி சமைச்சு, சோறெல்லாம் கசப்பு. அவன் யார்?(பாகற்காய்)
தங்கச்சி போட்ட சித்திரம் தரையெல்லாம் தவழுது பார்! அது என்ன?(கோலம்)
சற்றுப் பெரிய விடுகதைகள்:
வலதுபுறம் விளையாடி வலையில் பூரும். வாடாது வதங்காது
மண்மேல் போட்டால். (எழுத்தாணி) [நன்றி: அல்லியங்கோதை அம்மாள்]
ஆனை செத்து ஆறு மாசம். ஆனாலும் அதன் தடம் அழியவில்லை. அது என்ன?(நெல்)
அழகான குழந்தைக்கு பலமா மூணாங்கை. அது என்ன?(அழுகை)
கடுகுபோல் வாயிருக்கும். கணக்கற்ற பல்வரிசை. அடுக்கடுக்காய் எலும்பின்றி ஆயிரத்துப் பல்வரிசை. அது என்ன? (நத்தை)
பறக்காத பூப்பந்து. பகட்டான சிறுபந்து. வாயிலே இட்டால் தேன்பந்து. ஏழுமலையிலோ பெரிய பந்து. அது என்ன?(லட்டு)
அரைப்படி அரிசி பொங்கி, ஆயிரம் பேர் வாயில போட்டும் அரைச்சட்டி மிச்சம். அது என்ன?(சுண்ணாம்பு)
மண்ணுக்குள்ள கயிறு. மக்காத(மட்காத) கயிறு.(மண்ணுள்ளிப் பாம்பு)
மாரி இல்லாம ஆமை கெட்டது. ஆமை இல்லாம சீமை கெட்டது. அது என்ன?(வெள்ளாமை/வேளாண்மை)
தம்பிக்கு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?(உதடு)
வெள்ளை வெள்ளைத் தண்ணீலே வேசை ஆடுறா பாருக்கா!(மத்து)
வெள்ளசீல சுத்தியிருப்பாள் சின்ன குண்டக்கா. அது என்ன?(மோதகம்)
பஞ்சே இல்லாம நூல் விப்பான். பலே கைகாரன். அவன் யார்?(சிலந்தி)
கொம்பு ரொம்ப கம்பு. தொட்டுப் பாத்தா வம்பு. அது என்ன?(தேளின் கொடுக்கு)
ஒரு எழுத்து உமிழும். ஒரு எழுத்து கேக்கும். அது என்ன?(தூ. தா)
உத்தியோகம் இல்லே. ஊர் சுத்தி திரிவான். அலைச்சலுக்குப் பஞ்சமில்லே. தெருவுல சோறு. அவன் யார்?(தெரு நாய்)
ஊளை மூக்கன். சந்தைக்குப் போறான். அவன் யார்?(பனைநுங்கு)
கண்ணுண்டு. பார்வையில்லை. ஆனா, கோத்து வாங்குவான். அவன் யார்?(தையல் ஊசி)
மூடி திறந்ததும் மூக்கை வாசனை தொளைக்குது. அது என்ன?(பலாப்பழம்)
ஒரே மரத்துல அஞ்சு விதமான பழம். அது என்ன?பால், தயிர், வெண்ணெய், மோர், நெய்)
ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து வந்தாலும் புளுக்கூண்டு தூசி கெளம்பாது.(எறும்பு வரிசை)
பல பேருக்கு ஒரே குடுமி. அது என்ன?(பூண்டு)
பூப்போல மவராசி. காயமானாலும் துணைவருவாள். அவள் யார்?(பஞ்சு)
அழகான வீட்டுக்கு அரக்கன் தலை அலங்காரம். அது என்ன? (திருஷ்டி பொம்மை)
கணக்குப்பிள்ளை பொண்டாட்டி தினுக்குப்போட்டு ஆடினாள். அவள் யார்?(ஆவாரங்காய்)
தற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள விடுகதைகளுள் சில:
பூத்தா மஞ்சள். காய்ச்சா சிவப்பு. பழுத்தா கறுப்பு. சாப்[பிட்]டா இரும்பு. அது என்ன?(பேரீச்சம்பழம்)
குதிகுதி என்று குதிக்கிறாள். கொட்டைப் பல்லால் சிரிக்கிறாள். அவள் யார்?('பாப் கார்ன்' எனப்படும் சோளப்பொரி)
பல்லைப் பிடிச்சு அழுத்தினா பதறிப் பதறி அழறா. அவள் யார்?(ஆர்மோனியம்)
கல்லுமேலே பூர்ண சந்திரன். வாங்க. புட்டுப்புட்டுத் தின்னலாம். (தோசை)
தலையைச் சீவினால் தாளில் சீராக நடப்பான். அவன் யார்?(பென்சில்)
இதுவரை இல்லாதது. ஆனால் எப்போதும் இருப்பது. எவருமே அறியாதது.(அடுத்த/வரும் நாள்)
ஒருநாடு போ என்கிறது. ஒரு நாடு வா என்கிறது. அவை என்ன?
(போலந்து, வார்சா)
வேட்டை ஆட முடியாது. வேடர் உள்ள தீவு.(அந்தமான்)
கண்ணுக்குக் கரையே தெரியாது. தண்ணியே இல்லாத தடாகம். அதுல தாவிப்பாயுது பார் சீவனுள்ள கப்பல்.(ஒட்டகம்)
வெளி'ல இருப்பவனைத் அழுத்தினா உள்ளே இருக்கிறவன் அலறி வூட்டையே நடுக்கடிக்கிறான். அவன் யார்?(அழைப்பு மணி)
கையைப் புடிச்சார். காசு கேட்டார். தட்டிக் கேட்கவோ ஆரும் வரலை. அவர் யார்?(மருத்துவர்)
முச்சந்திலே மூணு விளக்கு. பாத்து நடந்தீர்'னா பாதகமில்லே. அது என்ன?('சிக்னல்')
வாயில்லாப் பிள்ளை ஊர் ஊராய்ப் பறக்குது. அது என்ன?(விமானம்)
காத்தடிச்சா பறக்கும் காயிதம். பாத்தா எவனும் பொறுக்கி எடுக்குறான். அது என்ன?(ரூபாத் தாள்)
பூமியிலே பிறக்கும். புகையாகப் போகும். அது என்ன?('பெட்ரோல்')
சண்டையில்லே. யுத்தமில்லே. ஆனா உயிரை காத்துக்க இன்னைய வீரனுவோ போடறது. அது எது? ('ஹெல்மட்')
ஓலம் இட்டாலும் சோறாக்குவான். அவன் யார்?('குக்கர்')
நாளுக்கு நாள் இளைக்கிறவனுக்கோ நாள் காட்ற வேலை. அவன் யார்?(தினசரி காலண்டர்)
ரெண்டு பேருக்குமேல ரெண்டு பேர் தொணை. அவங்க யார்?(மூக்குக் கண்ணாடி)
மண்ணுக்குள்ள மயிர்கோதி.(பனங்கிழங்கு)
நாராசமா ஓசை பண்ணி ஒன்ன கூப்புடும். ஒன் காதுல மட்டும் ஊர்க்கதையெல்லாம் சொல்லும். அது என்ன?(தொலைபேசி)
வீடில்லா நகரங்கள். நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?(தேசப்படம்)
சிறகில்லாப் பறவை. நாடெல்லாம் சுத்தும். அது என்ன?(தபால்)
கறுப்பனுவ கொஞ்சம் அசந்துட்டா வெள்ளைக்காரனுவ ஆட்டம். அது என்ன?(நரை)
புடிக்கவே முடியாது. அத்தனெக் கள்ளப்பய.(புகை)
குண்டுமுழி ராசாவுக்கு குடலெல்லாம் பல்லு. அது என்ன?(மாதுளை)
போறப்போ கெழவி. வர்ரப்போ கொமரி.(சால்)
[சால்= ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்/container made of leather]
குள்ளமான கோழிக்கு கொடலுக்குள் சதங்கை.(நிலக்கடலை)
கைக்குள்ள அடங்கிக்கிடுவான். கண்ணத் தொறந்து மின்னுவான். அது என்ன?('டார்ச் லைட்')
போட்டா பொரியும் இங்கிலீசு முட்டை.(கடுகு)
மண்ணுக்குள்ள மயிரு... பயிராகுது.(வெட்டிவேர்)
வளைக்க முடியும். ஒடிக்க முடியாது. அது என்ன?(தலைமயிர்)
வெள்ளிப் பணம் துள்ளி விழும். அது என்ன?(மீன்)
குளிர் இல்லே. கூதல் இல்லே. குளிர் காயறாங்க. யார்?(கொல்லர்)
சண்டை போடலை. சச்சரவில்லை. குடுமியைப் பிடிக்கிறார். அவர் யார்?(முடிதிருத்தம் செய்பவர்)
சிலுசிலுத்த தண்ணியில செம்மறி ஆடுக மேயுது. அது என்ன?(எண்ணெய்ப் பலகாரம்)
‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல், சொல்லியும் கேட் டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்டித் தொகுக்க ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் வேதமுத்து ஐயா [1971,1975], பி.சி.எஸ். மணியன்[1974] எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி ('சிந்தனையூட்டும் விடுகதைகள்.' ஆண்டு குறிக்கப்படவில்லை) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் 1975ஆம் ஆண்டில் தொகுத்துப் பதித்து வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்தார்.
புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.
முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளுள் பாலியல் சார்பு வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னன்னானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அதை வெளியிட்டது.
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார்.
முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்துப் பல்வேறு வகைகளில் ஆராய்ந்தனர்.
குழந்தையைக் குறித்து சொல்லப்படும் மிகச் சிறந்த விடுகதைகளாகக் கருதப்பெறுபவை:
தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?"**** என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.
கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?"*** என்று கேட்டால் அதே விடை கிடைக்கும்.
புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.(**)
இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்''*** என்ற கொச்சை வழக்கு, பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.
புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
"ஓகோ லேலோ
உயர்ந்த லேலோ
கண்டந் துண்ட
சப்லட்டு லேலோ - அது என்ன?"**
என்று புதுவைக் கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சொல்லப்படுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,
"உச்சாணிக் கிளையிலே
ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"***
என்ற வழக்குக்கு உரியதாகிறது.
தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,
"சின்னச் சிறுக்கியும்
சின்னப் பையனும்
சிரித்துக் கட்டின தாலி
சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச்
சென்னப் பட்டணம் பாதி - அது என்ன?"**
என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக் கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது.
சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.**
********
பார்வை:
தமிழ் விடுகதைகள்
தேவமைந்தன் திண்ணை.காம் 06-7-6.
எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி(தொகுப்பாசிரியர்), சிந்தனையூட்டும் விடுகதைகள். சிவகாசி.
**முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல். புதுச்சேரி.
*** முனைவர் தி. பெரியசாமி, கொங்கு நாட்டுப்புற விடுகதைகள். சென்னை.
**** முனைவர் ச.வே. சுப்பிரமணியன், தமிழில் விடுகதைகள். சென்னை.
****
நன்றி: திண்ணை.காம்
No comments:
Post a Comment