31.5.12

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)

‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு (பெரியார் இயக்கப் போராளிகள்)’ என்னும் புதிய புத்தகத்தை நண்பர் முனைவர் பெ.நல்லசாமி, எம்.எசி., எம்.ஃபில்., பிஎச்.டி (இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் - இயற்பியல் துறை, தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி - 605 008) அவர்கள் அன்பளிப்பாகத் தந்தார். வழக்கமான புத்தகங்களுக்கு வேறுபாடானதாக, தலைப்பாலும் உள்ளடக்கத்தாலும் தென்பட்ட அந்நூலை விருப்பமுடன் பெற்றுக் கொண்டேன்.

புத்தகத்தின் ஆசிரியர் - தமிழ்நாட்டின் திராவிட இயக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த திருச்சி செல்வேந்திரன் அய்யா. “திருச்சி நகரத்தில் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த - வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் இளைஞரான தோழர் செல்வேந்திரன் அவர்கள், கண்ணீர்த் துளிக்கட்சியை (தி.மு.க.) விட்டுப் பிரிந்து, நம்முடன் வந்து சேர்ந்துள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் - அவரை நான் அன்புடன் வரவேற்கிறேன்” என்று பெரியார் அவர்களால் 1949ஆம் ஆண்டில் இயக்கத்துக்கு வரவேற்கப்பட்டவர்.


திருச்சி செல்வேந்திரன் அய்யா படைத்துள்ள இந்நூல் எப்படிப்பட்டது என்பதை அவருடைய சொற்களிலேயே சொல்வதுதான் பொருத்தம்:

“இது வரலாற்று நூல் அல்ல. அதற்குரிய செய்திகளைச் சேகரிக்கும் வசதி நம்மிடத்தில் இல்லை.

இது வாழ்வியல் நூலுமல்ல. அதை எழுதுவதற்குரிய ‘நெடிய - கொடிய’ அனுபவங்கள் நமக்கில்லை.

இது வழிகாட்டும் நூல். இப்படியும் சில நூல்கள் வரவேண்டுமென்று வழிகாட்டும் நூல்.

இந்த நூல் நெடுகிலேயும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் திராவிடப் பேரியக்கத்தின் அடிக்கற்களாய் இருந்தவர்கள். அதற்காக தங்கள் வாழ்வை ஈகம் செய்தவர்கள். பதவி மோகம் இல்லாதவர்கள். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காதவர்கள்.


இவர்கள் பலரோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர்கள் குடும்ப உறுப்பினர்களோடு பழகியிருக்கிறேன். அவர்களில் ஓரிருவர் மாத்திரம் தான் இப்போது இருக்கிறார்கள். அவர்களில் சிலரோடு நான் இன்றுவரை நட்போடு இருக்கிறேன். சிலர் நண்பர்களாய் இருந்து பின்னர் முரண்பட்டிருக்கிறார்கள். சிலர் என்னோடு ஆழ்ந்த கருத்து மாறுபாடு உடையவர்களாய் இருந்து இப்போது என்னை அன்போடு போற்றுகிறார்கள். இது அவர்களுடைய தவறல்ல. என்னுடைய தவறு. என்னுடைய “சேர்வார் தோஷம்” அவர்களில் பலரை என்னிடமிருந்து அன்னியப்படுத்தியது. அன்றும் இன்றும்.”

திராவிட இயக்கம்போல் இந்திய மக்கள் வாழ்வியலின் எல்லாத் தளங்களிலும் மான அவமானங்களை/கல்லடி சொல்லடிகளை ஏற்று இறங்கிப் போராடிய இயக்கம் வேறுண்டா?

அதில் பெரியாருடன் சேர்ந்து உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உள்வெளிச் செயற்பாடுகளில் ஈடுபட்டுப் போராடியவர்களான மாமனிதர் வக்கீலய்யா தி.பொ. வேதாசலம், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, வாழும் வரலாறு திருவாரூர் தங்கராசு, பல்கலைவாணர் பாவலர் பாலசுந்தரம், குமுறிய எரிமலை எம்.கே. குப்தா, மக்கள் தொண்டர் எஸ். பிரான்சிஸ், எனது(திருச்சி செல்வேந்திரனின்) ஆசான் ஈரோடு சுப்பையா, இளம் துருக்கியன் நாகை எஸ்.எஸ். பாட்சா, தஞ்சை மாவட்டத்து மாசேதுங் பாவா, நடமாடிய நூலகம் எஸ்.டி. விவேகி, குழந்தை உள்ளம் படைத்த குடந்தை ஏ.எம். ஜோசப், என்றும் மறக்க இயலாத எளிய தோழன் பட்டுக்கோட்டை இளவரி, திருச்சி வீ.அ. பழனி, நெஞ்சில் நிற்கும் ஈரோடு லூர்து, மக்கள் கலைஞன் என்.ஜி. ராஜன், ஏழைக்கலைஞர் மதுரை பொன்னம்மாள் சேதுராமன், இசையால் இதயங்களை அசையச் செய்த இராவணன், பெரியாரின் செல்லப்பிள்ளை திண்டுக்கல் பி.கே.பி. பூமண்டலம், குமரி மாவட்டக் கொள்கைவேள் சந்திரஹாசன், கற்பூரத்தொண்டன் மு.பொ. வீரன், ஆதியிலிருந்து பெரியாரிலிருந்து விலகாத ஆதி, என்னுடைய (திருச்சி செல்வேந்திரனுடைய) துரைசக்கரவர்த்தி போன்ற அருமையான மாந்தரை, கொள்கைக் குன்றுகளைக் குறித்து உயிரோட்டமுள்ள அறிமுகங்களைத் தந்துள்ளார் திருச்சி செல்வேந்திரன் அய்யா. மேலே ஒவ்வொருவருக்கும் அவர் தந்துள்ள அடைமொழிகளே போதும், அவரவர் இயக்கவாழ்வை நாம் இனங்கண்டுகொள்ள.

அவர்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னவர், மனம் நிறைவுறாமல், “தொண்ணூறைத் தொட்டுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி காளிமுத்து, வைத்தி. பெரியவர் ஒரத்தநாடு ஆர்.பி. சாமி சித்தார்த்தன், தம்பி அரசிளங்கோ, ராயபுரம் கோபால், காரைக்குடி தலைவர் என்.ஆர்.எஸ்’ஸின் பிள்ளைகள், ‘சந்துரு’ என்று தான் அன்போடு அழைக்கும் குறிஞ்சிப்பாடி சந்திரசேகரன், ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தாராசுரம் ஸ்டாலின், சிவகெங்கை இன்பலாதன், அவருடைய துணைவியார் டாக்டரம்மா, பெரியவர் சண்முகநாதனின் குமாஸ்தா, வில்லிவாக்கம் குணசீலன், திருமதி தங்கமணி, போடி தேவாரம் தங்கமுத்து, கோவை ராமச்சந்திரன், நாகை கணேசன், என்றும் தன்னிடம் அன்புகாட்டும் திருச்சித் தோழர்கள், தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் மகாலிங்கம்.. இன்னும் எத்தனையோ பேர் (பக்கம்126) குறித்துச் சொல்ல விரும்புகிறார். எழுத விரும்புகிறார்.

அவர்களைக் குறித்து மற்றொரு நூல் எழுதுவாராக என்று திருச்சி செல்வேந்திரன் அய்யாவை வாழ்த்துவோம்.

நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் பெரியார் தொண்டர்கள் பெருமையை மட்டும் சொல்லவில்லை; எப்படிப்பட்ட தலைவராக, வழிகாட்டியாகப் பெரியார் திகழ்ந்திருக்கிறார்.. தொண்டரும் தலைவரும் உண்மைக்காக எப்படியெல்லாம் ஒருவர் மற்றவரை விஞ்சிப் போராடியிருக்கிறார்கள் என்பதை இந்நூல் மிகமிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. அஞ்சாநெஞ்சன் அழகிரி கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி(பக்.18-19) முதலாக நூல் நெடுகிலும் உணர்ச்சிப் பிழம்புகள்.. நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்ச்சிகள்... வக்கீலய்யா தி.பொ. வேதாசலனார் வீட்டு உயரமான மாடியின் படிகளில் ஏறி, இறந்துபோன வேதாசலனாரின் உடலின் அருகில் வந்த பெரியார் ‘பலவற்றை’ சொல்லி மார்பில் அறைந்து கொண்டு அழுத காட்சி முதலாகப் பற்பல காட்சிகள், பெரியார் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பதை அன்னார்தம் தொண்டர் பெருமைகளைப் பற்றிக் கூறிவரும்பொழுதே தெளிவாக்கிவிடும்.

பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கை வழங்கிய அடையாளங்களுடன் கருஞ்சட்டைக் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் செல்வேந்திரன் ஐயா. ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். நெகிழ்ந்துபோன அவர்கள் “அய்யா..எங்கள் பெயரைக்கூட மறக்கவில்லையா?” என்கிறார்கள்.

“எதற்கும் கலங்கமாட்டோம் - எதற்கும் வளையமாட்டோம்” என்ற அய்யாவின் நம்பிக்கை அன்று ஆடிப்போகிறது.

“ கண்ணின் மணிபோல மணியின் நிழல்போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல்வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப் பிரிக்க முடியாதடா”


என்ற இந்தக் கவிஞர் கண்ணதாசனின் கவிதையுடன் தன்னுடைய புகழ் வணக்கத்தை நிறைவு செய்கிறார் திருச்சி செல்வேந்திரன் அய்யா.(ப.127)

நூலின் பெயர்: மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு!

ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன்

முதற்பதிப்பு: திசம்பர் 2011

பக்கம்: 128

விலை: ரூ. 80/-

வெளியீடு: சுயமரியாதை பதிப்பகம், அம்மன் காம்ப்ளக்ஸ் முதல் தளம், யாழ் தையலகம் எதிரில், வ.உ.சி. வீதி, உடுமலைப்பேட்டை - 642 126. திருப்பூர் மாவட்டம்.

பேச: 97883 24474

2 comments:

அ. பசுபதி said...

வணக்கம்
நல்ல செய்தி மகிழ்ச்சி
கதன்
(மின்மறுமொழி)

Calavady said...

niRaiya seydhigaLai therindhu koLLa mudikiRadhu.
Calavady