ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்கால வள்ளலார் வாழ்வில், கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. அவர் பாடிய ஆறாம் திருமுறைப் பாடல்களுள் பல, அவரது முன்னைய கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக அமைந்தன. சைவ சமயம் வெளிப்படுத்திய உயர்கொள்கை வழி வாழாது, அவற்றுக்கு முரணாக வாழ்ந்த சைவமக்கள் மீது அவர் சினம் கொண்டார். சைவத்தில் சில உயர்சாதிக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதையும், சைவக் குருக்கள்மார்களும், ஆதீனத் தலைவர்களும், உண்மைச் சைவர்களையும் சாதிவழி மதிப்பிட்டு, மரியாதை வழங்கியதும் அவரைச் சினமடைய வைத்திருக்க வேண்டும். அன்புச் சமயமாகிய சைவத்தில், கடவுள் பெயரால், சிறு தெய்வங்களுக்கு நிகழ்த்தப்பட்டு வந்த உயிர்ப்பலிகளை அவர் வெறுத்தார். புலால் உண்பார் சிவநெறி நிற்பது எங்ஙனம் சாலும் என வினா எழுப்பினார். வாழ்வின் கடைசிப் பகுதியில் சைவத்தைச் சீர்திருத்தும் எண்ணம் செழிக்க மூன்று புதிய அமைப்புகளை உருவாக்கினார்.
1865-இல் சமரச சன்மார்க்க சங்கம்
1867-இல் சத்திய தருமச் சாலை
1872-இல் சத்திய ஞான சபை
என்பன அவரால் உருவாக்கி வைக்கப்பெற்று, நெறிமுறைகளும் அறிவிக்கப் பெற்றன.
[நன்றி: வள்ளலார் கண்ட சாகாக்கலை. கலை 6. வள்ளலார் ஆண்டு – 189/ஆடி/ஜூலை-15-2012 / ஒழுக்கம்-07 பக்கங்கள் 21-22. நன்றி: கடவுள்மங்கல விழாமலர், வடக்குப் பொய்கை நல்லூர்.]
No comments:
Post a Comment