21.9.12

தமிழ் மானம் காப்பீர்! -தங்கப்பா


தமிழ் மானம் காப்பீர்!

-தங்கப்பா


குள்ள மனத் தில்லியர் நம் குடி கெடுத்தார்.

கொலை வெறியர் சிங்களர் நம் இனம் அழித்தார்.

கள்ளமிலா மீனவரைச் சாகடித்தார்.

கண்மூடிக் கிடக்குதடா தில்லிக்கும்பல்.

முள்வேலிக் குள்கொடுமை நிகழ்த்துகின்றார்;

மூத்தகுடி வாழ்நிலத்தைப் பறித்துக் கொள்வார்.

உள்ளுக்குள் குமைகின்றோம்; குமுறுகின்றோம்

உலகறிய நம் எதிர்ப்பை விடுத்தோமில்லை.நம் குரல்கள் நமக்குள்ளே அடங்கல் நன்றோ?

நம் எதிர்ப்பிங்கு ஒன்றுமிலை என்றே அன்றோ

சிங்களனுக் கிந்நாட்டில் படைப்பயிற்சி

சிரித்துக் கொண் டளிக்கின்றான் தில்லிக்காரன்.

பொங்கி எழுந் திதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும்.

புரிந்திடுமா தமிழரசு? நடித்தல் செய்யும்.

இங்கிருக்கும் பலகட்சித் தலைவரே நீர்

எழுந்திடுவீர்; வெகுண்டு தமிழ் மானம் காப்பீர்.


(பேரா. ம.இலெ.தங்கப்பா,

ஆசிரியர், ‘தெளிதமிழ்’ திங்கள் இதழ்,

7, 11ஆம் குறுக்குத் தெரு, அவ்வை நகர்,

புதுச்சேரி - 605008. இந்தியா.

தொ.பே.எண்: 0413 - 2252843)


ஒளிப்படத்துக்கு நன்றி: காலச்சுவடு.காம்

4 comments:

அருணா செல்வம் said...

வணக்கம் ஐயா.

நான் முதன்முதலாக உங்கள் வலைக்குள் வருகிறேன்.
திரு. லெனின் தங்கப்பா அவர்களின் பாடல்களைச் சில படித்திருந்தாலும் தீரும்பவும் படிக்க சுவையாகவே இருந்தது.
நன்றி ஐயா.

அ. பசுபதி said...

இவ்விடுகைக்குப் பின்னூட்டமிட என் பெருமதிப்பிற்குரிய தமிழநம்பி ஐயா மும்முறை முயன்றிருக்கிறார். அமைப்புகள்(Settings) மாற்றத்தால் வலைப்பூ ஏற்க முரண்டு பிடித்திருக்கிறது. தொலைபேசியில் அவர் இச்செய்தியைத் தெரிவித்ததால்தான் எனக்குத் தெரிய வந்தது. ஐயா அவர்களுக்கும் இத்தொல்லைக்கு ஆட்பட்ட நண்பர்கள் பிறருக்கும் நன்றி. இனி இத்தொல்லை நேராது என நம்புகிறேன்.

thamizha nambi said...

ஐயாவின் அருமையான பாடலை வெளியிட்டிருக்கின்றீர்கள். //இங்கிருக்கும் பலகட்சித் தலைவரே நீர்

எழுந்திடுவீர்; வெகுண்டு தமிழ் மானம் காப்பீர்.// இற்றைத் தமிழகத் தலைவர்கள் இதைக் கவனிப்பார்களா? படமும் நன்றாக இருக்கிறது. நன்றி ஐயா.

அ. பசுபதி said...

நன்றி ஐயா..முகநூலிலும் டுவிட்டரிலும் 'மக்கள்'/"பப்ளிக்" பார்வைக்கு இட்டிருப்பதால் பார்ப்பார்கள். தமிழறிஞர்களுள் தங்களைப் போன்ற அரியவர்கள்தவிர ஏனையோர்தாம் "கண்டுகொள்ள" மாட்டார்கள்.