22.5.15
"அற்புதங்கள் கற்பிதங்கள் அல்ல!" - புதுச்சேரி தேவமைந்தன் குறிப்பு, முகநூலில்.
அன்றாட வாழ்வில் நமக்குள் - நம்முடன் - நம்தொடர்பாக நடக்கும் சிறுசிறு அற்புதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிய பெரிய பெரிய அற்புதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பி, அற்பச் சிறுமதி கொண்டவர்களை நாடி நாம் ஓடுகிறோம் - என்று எமர்சன் சொன்னார். சற்றுமுன் என்னைத் தொடர்புகொண்டு அலைபேசிவழி பேசியவரின் பேச்சு யாதுகாரணத்தாலோ தடைபெற்று "அப்புறம் தொடர்பு கொள்கிறேன் ஐயா!" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக்கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், "என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே???" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், "தேவமைந்தன்! இது உங்கள் முகநூல் கணக்குத்தானே?" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். "அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா!" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது? நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, " ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி! அப்போதுதான் அரசியல் விளங்கும்!" என்று அறிவுறுத்தியிருக்கிறார். 1965இல் கலைக்கல்லூரி மாணவர்களாக இருந்த எங்களை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடவைத்தவர் ஆ. துரைக்கண்ணுதான். அறிஞர் அண்ணாவால்தான் அரசியல் வகுப்பில் சேர்ந்தேன். சென்ற அறுபதுகளில்(1960s) பெரும் அரசியர் தலைவர்களாக விளங்கிய காமராசர், ராஜாஜி, ஜீவா முதலானவர்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடம் வெகு உற்சாகமாகப் பேசுவார்கள். அறிவுரைப்பார்கள். இந்தக் குறிப்பை நானெழுதக் காரணம், நமக்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் 'வரமா சாபமா" கவிதைபோல் கிடைத்த முகநூலின் விளைவுகள். நாம் யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் லைக் போடுகிறோம் என்பதை விலாவாரியாக வெளிப்படுத்துவது - முகநூலுக்கு நாரதம். நமக்கு? பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், " சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment