16.2.07

ஆசிரம வாழ்க்கை - -தேவமைந்தன்

ஆசிரம வாழ்க்கை
-தேவமைந்தன்

பல நாள்களாக எனக்குள் ஓர் ஆசை. ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. ஒரு நாளாவது சுதந்திரமாக அதை வாழ்ந்து பார்க்கவும் விருப்பம். நாங்கள் வாழும் ஊரில் உள்ள பெரிய ஆசிரமத்தில் மனிதர்கள் எந்திரங்கள் போலவும் திருவள்ளுவர் மொழிந்த ‘மரப்பாவை’கள் போலவும் வாழ்ந்து இயங்குவது பார்க்க, அன்றாடமும் பார்க்கப் பார்க்க வேறொரு கிளை ஆசையும் என்னுள் துளிர் விடலாயிற்று. அது என்ன என்றால், நான் வாழ்ந்து பார்க்கப்போகும் ஆசிரமம்:-
1. நகர்ப் பக்கமே இருக்கக் கூடாது.
2. தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.
3. அதிகம் பேர் வந்து போவதாக இருக்கக் கூடாது.
4. என்னை ஆசிரமத்தில் உள்ளவர்கள் தங்களைப் போல எண்ண வேண்டும். நான் வாழ்க்கையில் ஆற்றிய அரசுக் கல்வி நிறுவனப் பணி அவர்களுக்குத் தெரியக் கூடாது. வயதும் கூடத்தான்.
5. முக்கியமாக மலைப்பக்கம்தான் அந்த ஆசிரமம் இருக்க வேண்டும்.

சொல்வார்கள்... ஆசைகளை[ambitions] விடவும் உயர்ந்த/உன்னத விருப்பங்களுக்கு [aspirations] நிறைவேறும் திறம் அதிகம் என்று.. நிறைவேற்றி வைத்தார்கள், குடும்பத்தார். விந்தையாக அந்த ஒரு நாள் வாழ்க்கை அரங்கேறியது. அதுவும் சிகுன்குனியா வந்து வாட்டி என்னை வளைவெடுத்துவிட்டதை உடனடுத்தே நிகழ்ந்தது. ‘வாய்ப்புத் தராத விழிப்பு நிலை’[choiceless awareness] என்று ஜே.கே. சொன்னாரே அப்படி.

**
23-12-2006: ‘ஹிந்து’வில் திசம்பர் 11, 2004 அன்று “ROAD LESS TRAVELLED: Hill of hills” பகுதியில் பிரின்ஸ் ஃப்ரெடெரிக் எழுதிய பருவதமலை அடிவாரத்தில் உள்ள மெளனயோகி விட்டோபானந்தாவின் ஆசிரமத்தில் இந்த நாள் மாலைமுதல் அடுத்த நாள் மாலை வரை தங்குகிறேன். பொய்யில்லாமல், சுருக்கமாக, நடந்தவைகளை இங்கே ‘திண்ணை’ குழாம் முன் வைக்கிறேன்.

‘மயிலம் தாத்தா’ என்றழைக்கப்படும் தாத்தா, அங்கேயே நெடுங்காலமாக, ஆறாயிரம் அடி உயரமுள்ள பருவதமலையின் சிகரத்தில் மெளனயோகி விட்டோபானந்தா இரண்டடுக்கு ஆசிரமத்தைக் கட்டும்போதெல்லாம் உடனிருந்த காஞ்சி ஊரார்களிடையில் இருந்து உதவியவர். இன்று வளைந்து விட்டார். ‘கேம்ப்’ கட்டிலில் வளைந்து உட்கார்ந்தவாறே, விட்டோபானந்தா ஆசியுடன் வழங்கும் விபூதிப் பிரசாதத்தின் கொள்கலமான தாளுறையை மடித்தவாறே இருந்தார். பேசினால் 5 உறையை மடிக்கும் நேரத்தில் 2 தான் மடிக்க முடியுமாம். இருந்தாலும் பல செய்திகள். மெளனயோகியின் விளம்பரப் படுத்திக் கொள்ளாத 14 ஆண்டு கர்மயோக வாழ்க்கையைக் குறித்து. இரவு 12:30 மணிவரை தொடர்ந்து, வளைந்த முதுகுடன், பணியாற்றி, பிறகு படுத்து உறங்கத் தொடங்கினார். இரண்டரை மணி நேரம்கூடத் தாண்டியிருக்காது..

‘சில்’லென்று குளிர்காற்று கூடத்துள்ளே புகுந்தது. கதவு திறந்து, புதுச்சேரியிலிருந்து பருவதமலையறிந்த குழுவொன்று ‘தடபுட’வென்று உள்ளே நுழைந்தது. மயிலம் தாத்தா சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தது. கவலைப் படவில்லை. கதவைச் சாத்தவுமில்லை. பெண்கள் ‘சளசள’ என்று பேசத் தொடங்கி விட்டனர். வைகறையில் பருவத மலையேற வேண்டுமென்று ஒருவர் ஒருவராகப் போய் குளிக்க ஆரம்பித்து விட்டார்கள். குளித்து வந்தவர்கள் கூந்தலை ‘அட்டை’ தட்டுவது போலத் தட்ட ஆரம்பித்தார்கள். நெளிந்தார் அவர்.

அந்த ஓரத்தில் படுத்திருந்த காஞ்சிபுரத்து சாமியான சி.பி.ஆர். சத்தம் கேட்டு ஓடிவந்து, ‘என்னம்மா.. நீங்கள்’லாம்.. இந்த மலைப் பக்கம் உங்களுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்திருக்கிறாரே மெளனசாமி.. எவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்கார்.. நீங்க இப்படிப் பண்ணுறீங்களே.. இது புனிதமான இடம் மட்டுமல்ல..இங்கதான் நாள்தோறும் மலைப்பக்கத்து ஊராருக்கு அன்னதானம் பண்ண மாவரைக்கிற மிஷின்கள்’லாம் இருக்கு ..அதோ பாருங்க.. இப்படி நீங்க தாட்டுற முடியெல்லாம் போய் கிரைண்டர்’ல விழாது? அதெல்லாம் போகட்டும்.. இங்க படுத்திருக்கிறாரே இந்தப் பெரியவர்.. என்ன வயசு தெரியுமா? கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் படுத்தார். ஏன் நீங்கள்’லாம் இப்படி ‘இர்ரெஸ்பான்ஸிபிளா’ இருக்கீங்க!” என்று திட்டியதுடன், அங்கேயே தன் தூக்கத்தை தியாகம் செய்து அவர்கள் ‘எல்லாம்’ முடித்துக் கிளம்பும் வரை உட்கார்ந்தும் கொண்டார். அவ்வப்பொழுது அவர்கள் திறந்துபோடும் கதவையும் மூடி மூடி வருவார். சங்கடத்தோடு அவரைக் கேட்டேன்: “ஏங்க இப்படி..இவங்களையெல்லாம் அனுமதிக்கணுமா?” சொன்னார்: “இவங்களெ சாமியார் அநுமதிக்கிலே’ன்னா வெளில கிடந்தும் ‘வேன்’ல கிடந்தும் வெறைச்சுப் போய்டுவாங்க.. மலைப்பக்கம் போய்க் குளிக்கவும் மறைப்புறம் போய் வரவும் இவங்களுக்கெல்லாம் முடியவும் முடியாது. ஏன், நமக்கே இந்த ஜாமத்துல அது முடியுமா? அதுக்குத்தான் சாமியார் இரண்டு வசதியான ‘டாய்லெட்’கள் கட்டி வச்சிருக்கிறார். கூடவே ‘பாத் ரூம்களையும்தான். எல்லாம் இலவசம். சுத்தமாவும் இருக்குதல்ல. இதோ மயிலம் தாத்தா தூங்குறாரே.. விடியக் காத்தால எழுந்து வளஞ்சுட்டே இவங்க போட்டதெல்லாம் பெருக்குவார். ‘உலகம் பாட்டி’ யும் சில சமயம் பெருக்கும்..” என்றார்.

நாங்கள் தங்கியிருந்த இடம் முன்பு மாட்டுக் கொட்டகையாக இருந்ததாம். ஒரச் சுவர் பக்கம் தண்ணீர்த் தொட்டி, பரவலாகக் கசிந்தது. கூடத்துக்குள்ளாகவே தவளைகள் சுதந்திரமாகச் சஞ்சரித்தன. குறும்புக்காரப் பூனைக் குட்டிகள் இரண்டு. அவை வெளியே போனால் அங்கிருந்த வாட்டசாட்டமான கறுப்புநாயிடம் மாட்டிக் கொண்டுவிடுமே என்று கவலைப்பட்டு அவ்வப்பொழுது அக்கறையுடன் ‘மியாவ்’ இட்டு எச்சரிக்கும் அவற்றின் தாய். இவற்றுக்கு ‘டாவு’காட்டும் சுறுசுறுப்பான எலிகள்.[என் பையில் தமக்கு வேண்டுமளவு மட்டும் துளையிட்டு தின்பண்டங்கள் களவாடியிருந்ததைப் புறப்படும்பொழுதுதான் கவனித்தேன்.]

“ஜெகதோ தாரண..” கீதம் மென்மையாக ஆசிரமத் தியானக்கூடத்திலிருந்து இசைக்கத் தொடங்கியபொழுது மணி 3:15[24-12-2006]. காஞ்சிபுர சாமி என்னும் சி.பி.ஆர்.தான் அந்தத் தியானக் கூடத்துக்கான சிமெண்டை வழங்கியவர். இப்பொழுதும் அன்னதானமாகிற அரிசியை காஞ்சியிலுள்ள தன் மகனிடமிருந்து பெற்றுவந்து தருகிறார்.

நேற்று மாலை வேலூர் யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தன் நண்பரான விரிவுரையாளரோடும் இன்னொருவருடனும் வந்து கணபதியை வழிபட்டுவிட்டு பின்மாலைப்பொழுதில் ‘டார்ச்’ விளக்குகளின் உதவியுடன் மலையேறிப் போனார். இன்று காலை திரும்பியவுடன் என்னிடம் சொன்னார்; “ உங்கள் குடும்பத்தார், என்னுடன் மலையேறியவர்கள், நள்ளிரவு பன்னிரண்டே முக்காலுக்குத்தான் மேல் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். என்ன இருந்தாலும்.. 6000 அடியல்லவா?”

மயிலம் தாத்தா சொன்னார். “வழியெல்லாம் பாறைகள்தாம். மண்படிவங்கள் வேறு சறுக்கும். கடப்பாறை மலை, இடையில். தாண்டி மறுபடியும் பாறைகள்தாம்..”

எந்த வேளையும் சாப்பாடு இல்லையென்று எவருக்கும் சொல்வதில்லை. நேற்றிரவு காய்ச்சல் ஓய்ந்த உடம்புடன், ஒரு பெரிய கையளவு இட்டலிகள், சூடாக, சாம்பாருடன் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடக் கட்டாயப்படுத்தினார் காஞ்சிபுரம் சாமி.. மூர்த்தி என்ற இளைஞர், முற்றிலும் துறவுக்கோலத்துடன் அரைத் துண்டுடன் கடினமான சமையல் வேலைகளை அங்கே செய்வார்; அடுத்த பொழுது பார்த்தால் இங்கே தியானக் கூடத்துக்கு முன்னே இருக்கும் மூர்த்தங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவதில் உதவிக் கொண்டிருப்பார். ஊர் மக்கள் எந்தவித வித்தியாசமுமில்லாமல் வந்து உதவிக் கொண்டே இருப்பார்கள். துறவிகள் பலர் ஒவ்வொரு நடையிலும் நிறுத்தாத பந்திகளில் வந்து கவுரவமாய் ஊராருடனும் எங்களைப்போன்ற புதியவர்களுடனும் அமர்ந்து தங்கள் திருவோடுகளில் உணவுண்டு, நாங்கள் எவர்சில்வர் தட்டுகளைக் கழுவிக் குவிக்கும் இடத்தில் அவற்றைக் கழுவி வைத்துச் செல்வார்கள். அவர்களுள் ‘இரண்யன்’ என்றொருவர். பூர்வாசிரமப் பெயர் வேறாம். அவர் ‘விடுவிடு’வென்று வருவார். திருவோடு எடுத்துக் கழுவுவார். ஒருவரிடமும் பேசமாட்டார். தேவையான அளவு சாப்பிடுவார். பார்ப்பார். எந்திரம் போல எழுவார். யார்மேலும் பட மாட்டார். வாழைத் தோட்டம் போவார். திருவோடு கழுவி வந்து வைத்துவிட்டு வெளியேறுவார். வெளியே மலையேறும் பாதையில் உள்ள கல்லறையொன்றின் மேல் அமர்ந்து தியானம் செய்வார்; அங்கேயே ஓய்வெடுப்பார். ஆசிரமத்துள் தங்க மாட்டார். இப்படிப் பலர்.

சித்தார்த் என்ற சாமியார் இளைஞர். மெளனசாமிக்கு அவ்வப்பொழுது வந்து உதவுகிறார். மலையாளம் கலந்த தூயதமிழ் பேசுகிறார். பல செய்திகள். “மெகஸ்தனிஸ் வந்து பயணக் குறிப்பு எழுதினார் என்றல் ஏற்றுக் கொள்கிறார்கள். அகஸ்தியர் வந்து ஆசிரமம் நிறுவினார் என்றால் சிரிக்கிறார்களே!” என்று வருந்தினார். மிகவும் பரந்த மனப்பான்மை உள்ளவர். அரவிந்தாசிரமம் முதலான பலவேறு ஆசிரமங்களைப் பார்த்துச் சலித்துப்போய், கடைசியாக எங்கோ மூலையில் ‘வனாந்திரமாய்’ உள்ள மெளனயோகி விட்டோபானந்தா ஆசிரமத்தில் நிலைத்துவிட்டதாக ‘நிம்மதி’ப்பட்டார். திடமான சிவப்பான உடலை நன்றாக வைத்துக் கொண்டு எப்பொழுது பார்த்தாலும் ஆசிரமத்தில் எந்தப் பகுதிக்கும் போய் எல்லோருடனும் அன்பாகப் பேசி உதவுகிறார். மையிலம் தாத்தாவின் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கண்களில் அன்பொழுக அவர் பேசியதைப் பார்த்தபொழுது நினைத்தேன்: “இதோ இந்த வயசாளி..கர்மயோகி..இப்பொழுது தன் வீட்டில் இருந்தால் இவருக்கு இந்த மரியாதை, விசாரிப்புகள், கூடத்துக்கு ஒவ்வொரு வேளையும் சென்று திருவோட்டில் காஞ்சித் தாத்தா உணவு வாங்கி வந்து தரும் அக்கறை, ஒவ்வொரும் கையில் ஏந்தித் தாங்கும் அன்பு, சமையல் பணி செய்யும் அம்மாவின் கவனிப்பு, வெளியே ஊருக்குள் இருந்து நாள்தோறும் வந்து பணிசெய்யும் அந்தம்மாவின் மகள்[திருமணமானவர்] காட்டும் கரிசனம் எல்லாம் கிடைக்குமா?..இல்லை, இவர் ஒரு நகரத்தில் முதியோர் இல்லத்தில் இருந்திருந்தால் இந்த நிம்மதி இவருக்கு வந்திருக்குமா?..”

ஆம். நினைத்தபடி எல்லோருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. அமைவதைப் போற்றிக் கொள்ளவும் பலருக்கு ஆவதில்லை.

ஒருநாள் ஆசிரம வாழ்க்கையை நிறைவேற்றிக் கொண்டு கிளம்பினேன். அனைவரிடமும் விடைபெற்றேன். கேட்டார்கள். சொன்னேன், எங்கு, என்ன பணி புரிந்தேன் என்று.. முன்போலவே இருந்தார்கள்.. காஞ்சிபுரம் சாமி சொன்னார்: “உங்கள் மாநில முதல்வர் இங்கு வரும் மூன்றாம் தேதி வருவதாக உள்ளார்.”
ஆம். எங்கள் முதல்வர் ரங்கசாமியும் எளிமையானவர்; எளிமை விரும்புபவர்தாம். தெரிந்ததுதானே!

******
நன்றி: திண்ணை.காம்

No comments: