26.2.07

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் வித்தியாசமான நூல்!

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் முத்துக்குளித்தல்
- தேவமைந்தன்

உலகச் சிந்தனையாளர்களின் அறிவுக் கோட்பாட்டை(epistemology)த் தமிழில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதனால் தமிழக அரசின் முதற்பரிசை 1987ஆம் ஆண்டில் பெற்றவர் டாக்டர் க.நாராயணன். அதற்குப் பின் ஆய்வியல், சித்தர் மெய்ப்பொருள், மேலைநாட்டு மெய்ப்பொருள், அரசியல் சிற்பிகள், சிவவாக்கியர், பட்டினத்தார் ஆகியவற்றைக் குறித்து நூல்களைப் படைத்தபின் சிக்மண்ட் பிராய்டு குறித்த தன் பத்தாண்டுத் தேடலை முன்வைத்து, ஓராண்டு எடுத்துக்கொண்டு நாராயணன் எழுதி வெளியிட்டுள்ள புத்தகமே ‘உள்ளம் ஓர் ஆழ்கடல்.’

பதிப்புரிமைப் பக்கத்துக்கு அடுத்தே ‘தற்சோதனை’ என்றதோர் உரைவீச்சைத் தோரண வாயிலாக நாட்டியிருக்கிறார் நாராயணன். நாள்தோறும் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் சரிவர அமைந்திருக்கின்றனவா, அவற்றால் சமூகம் பயன்பெறுமா என்று தன்மதிப்பீடு செய்துகொண்டு முன்னேற இவ்விதமான தற்சோதனை உதவும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ப. அருளி தொகுத்துள்ள அருங்கலைச்சொல் அகரமுதலியில்(பக்கம் 822) psychology என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாகத் தரப்பெற்றுள்ள உளத்தியல் என்ற சொல்லையே சற்று அழுத்தமாக உள்ளத்தியல் என்றவாறு இப்புத்தகத்தின் 224 பக்கங்களிலும் பயன்படுத்தியுள்ளார் டாக்டர் நாராயணன். உளவியல் என்று இதுவரை புழங்கிவந்துள்ள கலைச்சொல் உளவு+இயல் (spying technology) என்ற முறையில் பொருட்குழப்பத்துக்கு இடம் தந்து வந்ததால் உளத்தியல் என்ற சொல்லைக் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தார் ப. அருளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சிக்மண்ட் பிராய்ட்(6-5-1856) பெற்ற மருத்துவக் கல்வியும் ஆய்வுகளும் ஐரோப்பாவை அறிவியல் சிந்தனை ஆட்சி செய்த காலத்தில் அமைந்தன என்பதை நாராயணன் சுட்டத் தவறவில்லை. தவிரவும் ‘இறைவனின் படைப்பே மனிதன்’ என்று மதவாதிகள் உண்டாக்கியிருந்த ‘தெய்விகக் கொள்கை’யை டார்வின் வழங்கிய ‘பரிணாமக் கொள்கை’ தகர்த்திருந்த காலச் சூழல் பிராய்டின் புரட்சிச் சிந்தனைகளுக்கு இடம் தந்தது.

பிராய்டின் பெற்றோர்கள் அருமையானவர்கள். குறிப்பாக அவர்தம் தாயார் அமலியாவிடமிருந்து அபரிமிதமான பாசத்தைப் பெற்றார். தந்தையாரிடமிருந்து நகைச்சுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றைப் பிராய்ட் பெற்றார். ஒருவரின் வளர்ச்சியும் வெற்றியும் அவர் தம் தாயிடமிருந்து பெறும் அன்பின் அளவால் உறுதி செய்யப் பெறுகின்றன என்பதை அவர், “தாயால் விரும்பப்படும், நேசிக்கப்படும் குழந்தைகள் தம் வாழ்நாள் முழுக்க எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி காண்பார்கள்; எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்”(ப.60) என்று மொழிந்தார்.

பிராய்டின் ஆய்வுகள் ஆழமான அடிப்படைச் சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டவை. மேலோட்டமான சிந்தனையோ ஆய்வோ அவருக்குப் பிடிக்காது. உயிரியல்(biology) தொடர்பான அடிப்படை வினாக்கள் பலவற்றிற்கு இயற்பியல் மற்றும் வேதியல் துறைகளில் விளக்கம் கிடைக்கிறதென எடுத்துக் காட்டியவர் அவர்.(ப.61)

மருத்துவத் தொழிலில் பொருளீட்டுவதை விடவும் மன்பதைக்கு என்றும் பயன்படும் ஆய்வுகள் செய்யவே பிராய்ட் விரும்பியதால் 1881 ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவத் தொழிலை வியன்னா நகரில் தொடங்கினார். நரம்பியல் துறையில் உலகப்புகழ் பெற்று விளங்கிய ழோ(ன்) மர்த்தீன் ஷர்கோ அவர்களை 1885இல் பாரீசில் சந்தித்துப் பயிற்சி பெற்றார். இந்த இடத்தில் ஷர்கோ’வைப் பற்றி நாம் சிறிது அறிவது நலம்.

வலிப்பு நோய் அக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அப்பொழுது அதிகம். கருப்பை என்று பொருள்படும் ‘யுஸ்டீரான்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ‘ஹிஸ்டீரியா’ என்ற சொல் வந்ததை வைத்து, பெண்ணின் கருப்பை ஒரு படகைப் போல் உடலில் சுற்றி வருவதாகவும், அதன் விளைவாக ஒவ்வாத செயல்கள் நடப்பதாகவும், உறுப்புகள் செயலிழப்பதாகவும் அக்கால மக்கள் கருதினர். வலிப்பு நோய் பேய் பிசாசுகளின் தூண்டலால் விளைவது என்றும் பில்லி சூனியம் ஏவல் முதலான செயல்களின் விளைவு என்றும் நிலவி வந்த மூடநம்பிக்கையைக் களைந்து அது ஓர் உயிரியல் சார்ந்த நோய் என்றும், மூளை மண்டலத்தில் ஏற்படும் சிதைவின் வெளிப்பாடு என்றும் ஷர்கோ விளக்கினார். இக்கருத்து பிராய்டின் மனத்தில், “உயிரியல் சார்ந்த நோய் உள்ளத்தியல் கூறுகளின் ஆதிக்கத்தால் உருவாகின்றன” என்ற கருதுகோளை வகுத்தளித்தது. இதன் விளைவாக ஆழ்துயில் மருத்துவ முறையைப் பின்பற்றி வியன்னாவில் வெற்றியுடன் விளங்கிய வலிப்புநோய் மருத்துவர் ஜோசெஃப் புரூயெருடன் இணந்து பணிபுரிந்தார். நோயாளிகள் வெளிப்படுத்திய உணர்வுகளின் விளைவாக, பாலியல் சிக்கலும் வலிப்பு நோய்க்கு ஒரு காரணியாக இருக்கக் கூடும் என்று கண்டு கூறினார்.

பிரான்சில் நோயாளிகளை அறிதுயிலில் ஆழ்த்த வல்லவராக பெர்னே ஹெம்(Berne Heme) விளங்கினார். அவரிடம் பயிற்சி பெறச் சென்ற பிராய்ட் அவர் கடைப்பிடித்த முறைகளைக் கண்டு, “அறிதுயில் முறை நோயாளியின் ஆழ்மனத்தில் மறைந்துள்ள உணர்வுகளை எட்டுவதில்லை” என்று கண்டறிந்து முன்பு தான் ஏற்றிருந்த கருதுகோளை மாற்றிக் கொண்டார்.

அறிதுயில் முறையால், மருத்துவர் ஏற்றும் கருத்துக்களோடு தொடர்புடைய எண்ணங்கள் மட்டுமே நோயாளியின் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் நோயாளியைத் தங்குதடையில்லாமல் பேச விடவேண்டும். கட்டுப்பாடு ஏதும் இன்றி எதை எதோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசும் இப்பேச்சுமுறை நோய்க்கான காரணத்தைப் புலப்படுத்தும் என்று பிராய்ட் கருதினார். இப்பொழுது ‘TV5 MONDE ASIE’ தொலைக்காட்சியில் தொடராக வந்து கொண்டிருக்கும் ‘பிரின்சே மரி’யில் (Princess Marie) இப்பேச்சுமுறையை பிராய்ட், இளவரசி மரி’யிடம் பின்பற்றுதலை விரிவாகக் காணலாம். பெனுவா ஜாக்வீ’யின் அருமையான இயக்கத்தில் உருவானது அது. கடந்தகால நினைவுகளால் மனநோயாளிகள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதைப் பிராய்ட் உணர்ந்து பார்ப்பதை இயக்குநர் அதில் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்.

1895 முதல் நான்காண்டுகள் தன் ஆழ்மனத்தை அறிதலையே சோதனையாகப் பின்பற்றினார் பிராய்ட். ‘ஒருவரின் ஆழ்மனம் குப்பைத் தொட்டி அன்று; ஒருவரை உருவாக்குவதே அதுதான்” என்று கண்டு கூறி மனநோய் மருத்துவத்திலும் உளத்தியல் சிந்தனப் போக்கிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

பிராய்டுக்கும் பிராய்டியத்திற்கும் அப்பொழுதே எதிர்ப்பு வலுத்திருந்தது. அவரோடிருந்து ஆய்வுப்பணி ஆற்றிய கார்ல் யுங்கும் ஆல்பிரட் அட்லரும் ஒதுங்கிக் கொண்டார்கள். இன்னும் பலரும் ஒதுங்கவே, ஆண்டுக்கணக்கில் பிராய்ட் தனிமைப்பட்டு இருந்தார். குழந்தைப் பருவத்திற்குப் பிராய்ட் தந்த முதன்மையை ஏற்றுக் கொண்டவர்களும் அவர் வலியுறுத்திய எதிர்பால் ஈர்ப்பையும் பாலியல் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராய்ட் எதிர்ப்புக்கெல்லாம் வருந்தாமல் தம் பணியைத் தொடர்ந்தார். நரம்புப் பிணி போன்ற கொடிய பிணிகள் ஒருவரை வருத்துவதற்கு முதன்மைக் காரணம், குழந்தைப் பருவத்தில் பாலியல் அறிவு கொடுக்கப் படாமையே என்று அவர் உறுதியாக நம்பினார். பிராய்டின் ஆய்வு முடிபுகள் பிற்காலத்தில் மாற்றங்களை ஏற்றாலும் அவர் உருவாக்கிய உளத்தியல் பகுப்பாய்வு முறையும் ஆழ்மனத் தாக்கம் என்ற கருத்தும் இன்றும் நிலைத்து, சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவுகின்றன.

தன்னைத் தனிப்பட்ட முறையில் அல்லாமல் தன்னுடைய ஆய்வுகளின் மூலமே வருங்கால மக்கள் அறிய வேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிறப்பாக நிறைவேறியுள்ளது. உளத்தியல் சிந்தனை வரலாற்றில் புதிய விதைகளைத் தூவிப் புரட்சி செய்த பிராய்ட், தொடர்ந்த தாடை உறுப்புறுத்த(jaw prosthesis) அறுவைகளுக்குப் பின் 23-9-1939 அன்று மறைந்தார்.

இதுவரை நாம் பார்த்த நான்காம் இயலுக்குப் பின்னர் ஆக்கலும் அழித்தலும், மனவுருப்பதிவும் செயல்பாடுகளும், உள்ளம் ஓர் ஆழ்கடல், பருவங்களும் உணர்வுகளும், கனவும் உறக்கமும், நடத்தை : இயல்பும் பிறழ்வும், மனநலமும் மருத்துவமும், நூற்பயன் ஆகிய எட்டு இயல்களில் விரிவாக உளத்தியல் செய்திகள் அலசப்படுகின்றன. ஏழாவது இயலின் கடைசியிலும் பிராய்டின் கொடை, முத்திரை பதிக்கப் படுகிறது. காட்டு:
“உள்ளம் என்பது உடலின் பிற உறுப்புக்களைப் போன்றதொன்று என எளிமையாக எண்ணிய காலத்தில், அது அளப்பரிய ஆழ்கடல் என்றும் அதன் அமைப்பும் அங்கு இருக்கும் எழும் போராடும் உணர்வுகளும் எண்ணற்றவை என்றும், உள்ளத்துள் ஆழ்ந்து கிடக்கும் அத்தனை உணர்வுகளையும் அறிந்திட இயலாது என்ற உண்மையையும், சமயவாணர்களின் சாடலுக்கும் மாற்றாரின் இழிவுரைகட்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உள்ளத்தியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்டு.” (ப.120)

பதினொன்றாம் இயலான ‘மனநலமும் மருத்துவமும்,’ இன்றைய நிலையில் பலருக்கும் பயன்படத்தக்க மனநலம் தொடர்பான அறிவுரைகளைக் கொண்டிருக்கின்றன. தவிர, தன் வாணாள் முழுவதும் கடைகளுக்குச் செல்வதையே தீவிரமாக அஞ்சி வெறுத்துத் தவிர்த்த எம்மா என்ற அம்மையார் பற்றிய நோயாளி வயணம்(case description) மிகவும் குறிப்பிடத் தகுந்தது.(பக்கம் 201-203) இதன் ஊடாக டாக்டர் நாராயணன் உணர்த்தும் ஒரு செய்தி, இன்றைய மனநல மருத்துவர்களின் வறட்டுத்தனமான ‘வேதியல் மருந்தே மனநோய் எதையும் தீர்க்கும்’ என்ற கடைப்பிடி’(practice) தவறானது என்பதை எண்பிக்கும். அது:
“ஒரு செயலுக்குச் சமமாகவும் எதிராகவும் எதிர்ச்செயலொன்று ஏற்படும் என்ற நியூட்டனின் விதி பருப்பொருள் நிலையில் மட்டுமன்றி மன உணர்வு நிலையிலும் உண்மையென உணர வேண்டும்…இவ்விதியை அட்ப்படையாகக் கொண்டே இளங்குழந்தைப் பருவத்தை பிராய்டு விளக்குகிறார்.
மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் முதற்பணியே, அதற்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதும் குறைப்பதும் ஆகும். மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலம் இயன்ற அளவு குறைந்த சுமையைக் கொண்டு அதன் குறிக்கோளை அடைய முற்படுகிறது. இது, மூளையின் பொருளாதாரத் தத்துவம். பல நரம்பிழைகளால் விரிவாகவும் நுட்பமாகவும் நரம்பு மண்டலம் பின்னப்பட்டுள்ளது. குறைந்த அளவு தூண்டல், இயன்ற அளவில் சீராகவும் குறைந்த அழுத்தமுடனும் பாய்வதற்கேற்ற வகையில்தான் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. துன்பச் சூழலைத் தவிர்ப்பதும் குறைப்பதும் மனித மனத்தின் இயல்பு. மனத்தின் இவ்வடிப்படை விதியை ‘இன்ப நுகர்வு விதி’ என்கிறார் பிராய்டு.

பசி உண்பதாலும், சோர்வு தூக்கத்தாலும், பாலியல் ஆசை இன்ப நுகர்வாலும் சமநிலை அடைகின்றன. எம்மா அந்தக் குறிப்பிட்ட கடையைத் தவிர்ப்பதும் வெறுப்பதும் இவ்விதியின்படி சரியான செயலேயாகும். ஆனால், அவள், கடைகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கிறாள். இந்நிலையில்தான் அவள் வெறுப்பு மனநோய் என்றாகிறது. எட்டு வயதில் எம்மாவிற்கு ஏற்பட்ட அனுபவச் சுமையைக் குறைக்காமல் தற்போது அவளுக்கு மருத்துவம் செய்வதில் பயனில்லை.”(பக்கம் 202-203)

இன்று மனநல மருத்துவர்கள் பிராய்டுக்கு மாறாக, வெறும் மருந்துகளாகத் தருபவை பலருக்குத் தீவிரமான ஒவ்வாமையைத் தருவதுடன் பலரை ‘மரப்பாவை இயக்க’மும் கொள்ளச் செய்திருக்கிறது. வேதியலின் ஆதிக்கம், இயல்பான மனநல மருத்துவத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. பிரெஞ்சுப் படமொன்றில் வயதான பெண் ஒருத்தி, காதலைப் போற்றித் தன் காமத்தை முற்றாகத் தவிர்க்கும் இளம் வழக்கறிஞர் ஒருவரிடம் எரிச்சலுடன் சொல்வாள்: “பார்க்கப் போனால் காதல் ஒரு வேதியல்தான்!” என்று. புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ், சில மாதங்களுக்கு முன் ‘காதலின் வேதியல்’(chemistry of love) என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது.

உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் தங்கள் மனைவியருக்கு ‘செடேடிவ்ஸ்’ எனப்படும் தணிப்பிகளைத் தந்து தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார். நல்ல வேளையாக மனநோய்களுக்கு இன்று தரப்படும் வேதியல் மருந்துகளை மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர் குறிப்பு இல்லாமல் தருவதில்லை. வேதியல் மருந்துகளைப் புகழ்பவர்கள், இன்று கல்லூரி பள்ளி மாணவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருள்களின் தோற்றுவாய் குறித்துச் சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும்.

சரி. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அனுபவ முதிர்ச்சி உள்ளவர். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:
“வாழ்க்கையில் முன்னேற்றம் காண போட்டி மனப்பான்மை நல்ல ஊக்கியாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே போட்டி மனப்பான்மை ஒருவரது திறமை மற்றும் வாய்ப்புகளுக்கு மீறியதாக அமைந்து விடாமல் இருந்திட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.” (ப.203)
“ஒருவரின் தகுதிகட்கும் அவர் அடைய வேண்டிய குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளி முயன்றும் கடக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிதாக இருப்பின் அது மனமுறிவு என்னும் மனக்கோளாறு உருவாக வாய்ப்பளிக்கும். ஆசையோடு அறிவும் சேர்ந்து குறிக்கோளைத் தீர்மானித்தால் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் தோன்ற வாய்ப்பு குறைவு.” (ப.204)
“சமுதாயக் கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசைப்படுகிறவன் அதனை நிறைவு செய்து அமைதி கொள்வான். மனமுறிவு என்னும் கோளாறு அவனுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.” (ப.204)
“நாகரிகச் சமுதாயத்தின் நடுவே உள்ள மனிதன்... ஆத்திரப்படும்போதும் எரிச்சலடையும்போதும் தன் உணர்வுகளை உடனே வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறான். அதன் விளைவாக அவனுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அது பெரும்பாலும் இரத்த அழுத்தத்தையும் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது.
உணர்வொடுக்கமும் அதனால் ஏற்படும் உடல்கேடுகளும் அடிக்கடி நிகழுமானால் அவை நிரந்தர நோய்கட்கு வழிவகுப்பனவாகின்றன... சிறுசிறு நிகழ்வுகட்கெல்லாம் ஆத்திரப்படாமல் இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். இது எதார்த்த விதியின் ஓர் அங்கமாகும்.”(ப.209)
“உன்னையே நீ அறிவாய்’ என்பது கிரேக்க ஞானி சாக்ரடீசின் மந்திரத் தொடர். ... உன் பார்வையை உள்முகமாகத் திருப்பி உன் உள்ளத்தில் படிந்திருக்கும் எண்ணங்களின் இயல்பை அறிந்து கொள் என்பதே இதன் பொருளாகும்.” (ப.211)
“உங்கள் உள்ளத்தை நீங்களே ஊடுருவிப் பாருங்கள்; வேண்டாத எண்ணங்களை வெளியேற்றுங்கள்; மனம் மென்மையாகிவிடும்; வாழ்க்கை அமைதிப் பூங்காவாக விளங்கும்.” (ப.212)

***************
ஆசிரியர்: டாக்டர் க. நாராயணன், எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,பிஹெச்.டி.
தலைப்பு: உள்ளம் ஓர் ஆழ்கடல் (Freudian Psychology - An Introduction)
பதிப்பு: முதற் பதிப்பு, திசம்பர் 2006.
பக்கம்: 224
புத்தக அளவு: தெம்மி 1/8
விலை: உரூ. 100-00
வெளியீடு: மாரி பதிப்பகம், ‘சிவகலை’ இல்லம், 29, நாகாத்தம்மன் கோயில் தெரு,
கொட்டுப்பாளையம், புதுச்சேரி - 605 008.
தொ.பே.: 0413 2251764 / 9442152764

******
நன்றி: கீற்று.காம்

1 comment:

Kasi Arumugam said...

அன்புள்ள திரு. பசுபதி அய்யா அவர்களுக்கு வணக்கம். தமிழ்மணம் தளத்தில் என் பணிகளை முடித்து வெளியேறும்போது எழுதப்பட்ட 'ஏன், ஏன், ஏன்?' என்ற என் இடுகையில் நீங்கள் இட்ட மறுமொழியை இன்றுதான் (மே 27, 2007) பார்த்தேன். உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.