2.6.07

மொழிபெயர்ப்பின் நிகழ்நிலையும் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்

மொழிபெயர்ப்பின் நிகழ்நிலையும் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்
- தேவமைந்தன்

மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததிலிருந்து மொழிபெயர்ப்புத் தொடர்பான கேள்விகள் பற்பல, உள்ளத்தில் எழலாயின. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தோராயமாக 750 பேர், வீட்டிலிருந்தவாறே மொழிபெயர்த்து அனுப்புகிறார்களாம். ஆங்கிலப் புலமை, தமிழில் புலமை, தமிழில் எழுதும் ஆற்றல் ஆகியவை இந்த வேலைக்கு அடிப்படைகள் என்றும் இதனால் மாதந்தோறும் எட்டாயிரம் ரூபாய் வரையில் வருவாய் பெற முடியும் என்றும் மேலதிகமான செய்தி சொல்லுகிறது. தொடர்ந்து, " தமிழரின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புப் பணி உடனடித் தேவை. ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்ல, உலக மொழிகள் பலவற்றிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றவர்கள் தமிழருள் பெருகினால், தமிழரின் வாழ்வு சிறக்கும். தாய்மொழியிலேயே யாவையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெருகும். தமிழ்ப் பதிப்பாளர் பலர் மொழிபெயர்ப்பாளரைத் தேடுகின்றனர்" என்றும் அச்செய்தி சொன்னது.

"மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர் தேவைப்படுகிறார். தெரிந்தால் சொல்லுங்கள். வருமானம் உண்டு" என்று மேற்செய்தியை நான் வாசித்த சில நாள்களில் என்னிடம் இளம்பாரதி தெரிவித்தார். எழுபத்திரண்டு வயதுக்கு மேலாகும் நண்பர் இளம்பாரதி இப்பொழுது புதுச்சேரியில் இருக்கிறார். சாகித்திய அகாதெமிக்காக ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு மடலங்களை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அந்த நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ள பல பிரஞ்சுச் சொற்களையும் அவற்றுக்குரிய பொருளையும் நண்பர்களிடம் கவனமாகக் கேட்டுக் கொள்கிறார். பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியையும் புதுவை மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையையும் இது தொடர்பாகப் பெற்றுக் கொள்கிறார். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால் வேற்று மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து வேற்று மொழிக்கும் மொழிபெயர்க்கும் போது 'நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல்' மட்டுமே போதாது; அணிசேர்ந்து பணியாற்றவும் (team work) வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தத்தான்.

எந்திரத்தனமாக மொழிபெயர்ப்பவர்களையே பெரிய நிறுவனங்களும் (foundations)விரும்புகின்றன. சொன்ன நாள்களுக்குள் மொழிபெயர்த்துத் தந்துவிட வேண்டும். அவர்கள் 'அங்கீகரிக்கப் படுவார்கள்.'

உயிரோட்டம் உள்ள ஒரு மொழிபெயர்ப்பை ஒருமுறை பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Freedom from the Known' என்ற அருமையான சிந்தனை நூலை ராஜம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். 'ஓரியண்ட் லாங்மேன்ஸ்' வெளியிட்ட ஒரே தமிழ் வெளியீடு என்றும் சொன்னார்கள். ஆங்கிலப் புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டு தமிழாக்கத்தை வாசித்தேன். திகைத்துப் போனேன். மொழிபெயர்ப்பாளரான ராஜம் அவர்களை எனக்குத் தெரியாது. அப்பொழுது கேள்விப்பட்டதே இல்லை. எனக்குத் தெரிந்த ராஜம் அவர்கள், மிகவும் மலிவாக ஒரு ரூபாய், ஒன்றேகால் ரூபாய் விலைக்கு மிகவும் நேர்த்தியான அச்சில் நல்ல தாளில் சங்க இலக்கியம் முதற்கொண்டுள்ள தமிழிலக்கியங்களைத் 'தமிழ்கூறு நல்லுல'குக்கு வழங்கியவர். மொழிபெயர்ப்பாளர் ராஜம் அவர்தானா?

அதைப் போன்ற உயிரோட்டமுள்ள மொழியாக்கங்களைத் தங்கப்பா (திண்ணையில் இவர் மொழியாக்கங்கள் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்) இளம்பாரதி, பாவண்ணன் முதலான மிகச் சிலரிடமே பார்க்க முடிகிறது. காரணம், இவர்கள் மொழிபெயர்ப்பைப் பணியாகவும் தவமாகவும் செய்கிறார்கள். 'மய்யழிக் கரையோரம்', 'இந்துலேகா,' 'உம்மாச்சு,' கயிறு' முதலான எட்டு மலையாள மொழியாக்கங்களும் 'கௌசல்யா,' படிப்பு,' அனல் காற்று,' முதலான ஆறு தெலுங்கு மொழியாக்கங்களும்' 'சிமெண்ட் மனிதர்கள்' முதலான கன்னட மொழியாக்கங்களும் 'உலகை மாற்றிய புதுப்புனைவுகள்' முதலான நான்கு ஆங்கில மொழியாக்கங்களும் இளம்பாரதியின் பணிகள். 'வலசை போகிறேன்' என்ற அண்மை மொழியாக்கத் தொகுப்பில் முதல் பகுதியில் சல்லாராதாகிருஷ்ண சர்மாவின் முப்பது தெலுங்குக் கவிதைகளும் அடுத்த பகுதியில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள ஆருத்ர, புலிகண்ட்டி கிருஷ்ணா ரெட்டி, அனிசெட்டி சுப்பாராவ், வரவர ராவ்(தெலுங்கு), அம்ருதா ப்ரீதம், அமரேந்த்ர நாராயண், ராமாவதார் தியாகி(இந்தி), பிரகாச ஹலகேரி, சி.பி.கே.(கன்னடம்), சுகதகுமாரி(மலையாளம்), சர் டி. வியாட்(ஆங்கிலம்) ஆகியோர் கவிதைகளும் நேரடியாக அந்த அந்த மொழிகளிலிருந்து இளம்பாரதியால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

கிரீஷ் கார்னாடின் 'நாகமண்டலம்' நாட்டார் கதையின் நாடக வடிவம். இதை நேரடியாகக் கன்னடத்திலிருந்து பாவண்ணன் தமிழாக்கம் செய்துள்ளார். அருமையான மொழியாக்கம். இதைப் புரிந்து கொள்ள கன்னட மொழிவாணரான நண்பர் உதவினார். இதே போன்ற நாடகங்களான 'பலிபீடம்' என்ற வரலாற்று நாடக மொழியாக்கத்தையும் 'அக்னியும் மழையும்' என்ற தொன்மக் கதை நாடக மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு வாசிக்க இன்னும் வாய்க்கவில்லை. இப்படி ஒப்பிட்டு மொழியாக்கங்களை வாசிப்பது பெரும் மனநிறைவு தரும். எனக்கு இளம் வயது முதலே இது தொடர்பாக உதவும் நண்பர்கள் உள்ளார்கள்; அதனால் நானே முயன்று பல மொழிகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது தடைப்பட்டது. தகழியின் 'கயறு' புதினத்தின் சுருக்க வடிவத்தையே இளம்பாரதி தமிழாக்கினார். இருந்தாலும் அதையும் முகுந்தனின் 'மய்யழிக் கரையோரம்' நாவலையும் (முழுமையான மொழியாக்கம்) ஒப்பிட்டு வாசித்த பொழுது சொல்ல முடியாத புரிதல் உணர்வு ஏற்பட்டது. 'வேண்டாத வேலை' என்று இதை எனக்கு வேண்டியவர்கள் சொன்ன பொழுது, "நீங்கள் தொ.கா. தொடர்களாகப் பார்த்துத் தீரவில்லையா?" என்று கேட்டிருக்கலாம்தான்.

வலை ஏடுகளில், குறிப்பாகத் திண்ணை.காம் இணைய இதழில் புதுப்புனைவில் மட்டுமல்லாமல் ஆழமான சிந்தனைகளைச் சமூகத்துக்குப் புலப்படுத்தும் ரிச்சர்ட் டாகின்ஸ்(Richard Dawkins) போன்ற அறிவியல் அறிஞர்களையும் அவர்களின் ஆக்கங்கள் குறித்த திறனாய்வுகளையும் முதன்மையாக இடம்பெறச் செய்தவரும், தானும் அத்தகைய மொழியாக்கங்களில் முன்னோடியாகப் பங்கேற்றவரும் கோபால் ராஜாராம் அவர்கள்தாம் என்பதில் இன்னொரு கருத்து இருக்க இயலாது. திண்ணை.காம் வலையேட்டைத் தொடக்க முதல் வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும்.

மானுடவியல் அறிஞரும் குறிப்பாகக் 'கலாசாரப் பொருள்முதல்வாதம்' என்ற தனித்தன்மை வாய்ந்த தனது ஆய்வுமுறையை மானுடவியல் துறையில் நிறுவியவருமான மார்வின் ஹாரிஸ்(1927-2001) அவர்களின் - நுட்பம் நிரம்பிய பண்பாட்டுப் புதிர்களுக்கான விளக்கங்களை - 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' என்கிற பதினொரு கட்டுரைகளை, வாசிப்பவர்கள் மருளா வண்ணம் மொழியாக்கம் செய்தவர் துகாராம் கோபால்ராவ் ஆவார். எப்படி இவர்கள் இருவரும் பாரி பூபாலனும் ஆசிரியர்களாக இருக்கும் பொழுது பின்னணியில் இந்து, சாந்தாராம் ஆகியோர் பக்க பலமாக நின்று திண்ணை.காம் தொடர்ந்து வெளிவர உதவினார்களோ அது போல மார்வின் ஹாரிஸின் புத்தகத்தையும் தந்து படித்துப் பார்க்கவும் செய்து நியூ ஜெர்சி'யில் உள்ள எடிசனிலிருந்து துகாராம் கோபால்ராவ் அவர்கள் கட்டுரைகளை விடாமல் அனுப்புமாறு செயலூக்கம் புரிந்தவர் கோபால் ராஜாராம் அவர்களே ஆவார். என்னைப் போன்று அகவை முதிர்ந்த கட்டுரையாளர்களும்;படைப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் (குறிப்பாக, நாகரத்தினம் கிருஷ்ணா) திண்ணை.காம் கருத்துக் களத்தில், விடுதலையான சிந்தனைக் குடும்பத்தில் இணையக் காரணமானவரும் அவரே. இது புகழ்ச்சியில்லை. உண்மை.

மனநோய் மருத்துவத்துக்கு எதிர்ப்பான இயக்கத்தில்(anti psychiatry movement) முதன்மையானவரும் அந்தக் கலைச்சொல்லையே அறிமுகப்படுத்தியவருமான டேவிட் கூப்பரின் கருத்தாடலைத் தமிழுலகுக்குத் தன் மொழிபெயர்ப்பின் வழி கொண்டு வந்தவர் லதா ராமகிருஷ்ணன். சி. மோகனை ஆசிரியராகக் கொண்ட 'புனைகளம்' (எண்:2) என்ற காலாண்டிதழில் அம்மொழியாக்கத்தை வாசித்தபொழுது வியப்படைந்தேன். அவர், திண்ணை.காம் இணைய இதழுடன் தொடர்பு கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த 'நாகரிகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்' என்ற உம்பர்த்தொ ஈகோவின் கட்டுரை (காலச்சுவடு 28: ஜனவரி - மார்ச் 2000) இன்னும் என் நினைவில் தடம் பதித்திருக்கிறது.

அரவிந்தன் தன் 'மொழி - மொழிபெயர்ப்பு -இலக்கிய மொழிபெயர்ப்பு' என்ற கட்டுரையில் (காலச்சுவடு 86: பிப்ரவரி 2007) பகிர்ந்து கொண்ட செய்திகள், எனக்கும் பிரஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளரான முனைவர் சு.ஆ.வே. நாயகருக்கும் (நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொழுதும்) உரத்துச் சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஆயின.

ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் படைப்பான 'அமைதி'(1946)யை 'Tranquillity: a mute play' என்ற தலைப்பில் 1987ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, த. கோவேந்தனால் வெளியிடப்பட்ட பொழுதே வசிக்கும் வாய்ப்பு ம.இலெ. தங்கப்பாவால்(தமிழ் -ஆங்கிலம்: ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் - இவருடைய மொழியாக்கச் சிறப்பைக் குறித்துத் திண்ணை.காம் இதழில் விரிவாக எழுதியுள்ளேன்) கிடைத்தது. சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சலபதியின் உழைப்புக்குத் தக்க பரிசே ஆகும். அப்படியிருக்க அரவிந்தனிடம் "சு.ரா.வின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமென்று நேர்காணலில் மொழிந்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.

மொழிபெயர்ப்புப் பணிக்கு என்றே கங்கணம் கட்டிக் கொண்டு உழைக்கும் 'மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ்'கள் 'திசை எட்டும்' 'புதிய எழுத்து' ஆகியவை. 'திசை எட்டும்' இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் திறன் மிக்கவர். 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்ற அவருடைய புத்தகத்தை வாசித்த பின்பே மலையாள எழுத்தாளர்களின்
தேடலைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். தான் வெளியிடும் மொழிபெயர்ப்பிதழின் ஆக்கங்களைச் சரிபார்க்க மொழிவழி ஆசிரியர் குழு ஒன்றை அமர்த்தியுள்ளதும் பாராட்டுக்குரியதே.

புதுச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியை ஆசிரியராக்க் கொண்டு வெளிவரும் 'அணங்கு' என்ற சாரம் மிக்க பெண்ணியத்தைப் புலப்படுத்தும் இதழில்(செப்டம்பர்-நவம்பர் 2006) 'பெனுவாத் க்ரூல்த்'(Benoite GROULTE)தையும் அவர்தம் 'அவளது விதிப்படி ஆகட்டும்'(Ainsi soit-elle) என்ற கட்டுரைத் தொகுப்பையும் நாகரத்தினம் கிருஷ்ணா அறிமுகப்படுத்தியுள்ளமை வாசகர் பலர் சிந்தையைக் கவர்ந்துள்ளது. பின்னதில் உள்ள சிமோ(ன்) தெ பொ(வ்)வார் குறித்த நோக்கும் கருத்தீடும் குறிப்பிடத் தக்கது. 'அணங்கு' தொடக்க இதழில்(ஜூன்-ஆகஸ்ட் 2006) மர்கெரித் த்யூரா'(Marguerite Duras)வின் குறுங்கதையான 'உயிர்க்கொல்லி'(La Maladie de la Mort)யும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறப்பான மொழிபெயர்ப்பே.

தலித்தியத் தமிழ்ப் படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை டி. கிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்துள்ள இமையத்தின் 'ஆறுமுகம்'(ARUMUGAM) உணர்த்துகிறது(Katha Publications) என்று நண்பர் சொல்ல அறிந்தேன். அந்தப் புத்தகத்தின் விலை(ரூ.250:பக்கம் 235) என்னை மருட்டியதால் வாங்கி வாசிக்க முடியவில்லை.எந்திரத்தனமான மொழிபெயர்ப்பை விட்டு விடலாம். மெய்யாகவே 'தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு' (Machine Translation of Tamil) பற்றி அறிய பெர்க்கலேயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பிரடெரிக் சி.கெய்(FredricC.Gey) உருவாக்கியுள்ள(Prospects for Machine Translation of the Tamil Language) கட்டுரை மிகவும் உதவும். பொதுவான எந்திர மொழிபெயர்ப்பு முறைகளை அறிய அவர் 'மொழிபெயர்ப்பு எந்திரங்கள்' என்ற ஒரு மிகச் சிறந்த நூலைப் (Translation Engines, by Arthur Trujillo, published by Springer. 1999) பரிந்துரைத்துள்ளார். அதன் மூலம் ஒன்று நன்றாகத் தெரிய வருகிறது. தமிழ் மொழிக் கட்டுமானத்தினால், தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு மிகுந்த செலவு பிடிப்பதாக உள்ளது என்பதே அது.

நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்கள்:

1. பண்பாட்டு அடிப்படையிலான புரிந்துணர்வுத்தடைகள்(cultural barriers). நண்பர் முனைவர் சு.ஆ.வே. நாயகர், அண்மையில் மிசோரம் நாட்டுப்புறக் கதைகளைப் பேச்சுத் தமிழில் மொழிபெயர்த்தார். சுர்ரா என்று ஆங்கில மொழியில் வரும் பெயரை எப்படித் தமிழில் இடுவது? அசல் பெயர் சுர்ராவா, சுராவா? சுரா என்றே மொழிபெயர்த்தார். அடுத்து, அக்கதைகளில், இறந்தவர்களைக் குகையில்(cave)இல் இடுவதாக(புதைப்பது போன்றும் பொருள் வரும்) மிசோமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் எழுதியிருந்தார். இவர் கல்லறையில் புதைப்பதாக எழுதி அச்சிடக் கொடுத்து விட்டபின் சந்தேகம் எழுகிறது. "அடடா, கல்லறையில் என்றால் அந்தப் பண்பாடு கிறித்தவர்களது ஆகிவிடுமே - கதையில் வருபவன் மிக எளிய நாட்டுப்புறத்தான் மட்டுமல்ல, ஒன்றுமறியாத திருவாழத்தான் ஆயிற்றே!" என்று குழம்பினார். எனக்கு இப்பொழுது ஒன்று தோன்றுகிறது. பேசாமல் இரண்டுக்கும் நடுவுள்ளதாக 'கல்லடுக்கில்' என்று அவர் போட்டிருக்கலாம். மிசோ ஆதிவாசி மொழி அறிந்தவர்களொடு தொடர்பு கொண்டு இன்னும் அவற்றில் உள்ள சில பண்பாட்டு விளக்கங்களை அறிய நண்பர் விரும்பினார். ஆனால் அவருக்கு அவற்றை மொழிபெயர்த்துத் தர, மூன்று நாள்கள் மட்டுமே தரப்பட்டிருந்தன. என்ன செய்வது? மறுத்துவிட்டால் தமிழில் அவை வராமல் போய்விடவும் வாய்ப்புண்டு.

2. மொழிகளினிடையே உள்ள ஆள்-நாடு-ஊர்ப் பெயர் ஒலிமாற்றம்:
புதுச்சேரியில் நிகழ்ந்த, இந்தியாவிலுள்ள பிரஞ்சு மொழியாசிரியர்கள் சங்கமும் கெபேக்('கியூபெக்' என்று எழுதுவது ஒலிப்படிப் பிழையாம்)பன்னாட்டு உறவுகள் அமைச்சகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் வெளியிட்ட 'கெபேக் இலக்கியம் : ஓர் அறிமுகம்' ('La litterature quebecoise: une introduction en tamoul") என்ற தொகுப்பில்(பதிப்பாளர்: Samhita Publications,Chennai,2007) இலக்கிய மதிப்பீட்டுப் பகுதியில் முதலாவதாக இடம்பெற்ற 'Ringuet, Trente Arpents, 1938 (Thirty Acres) - "முப்பது ஏக்கர்கள் - ரேங்கே" என்ற கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதில் வரும் பெயர்களைப் பிரஞ்சுக் கனடிய ஒலிப்பின்படித்தான் எழுத வேண்டும் என்று பணித்திட்டக் குழுவின் தலைவர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி சொல்லி விட்டார். அதனால் 'கியூபெக்' 'ரிங்குவே' 'யுஷாரீஸ்த்' முதலாக நான் ஒலிபெயர்த்து வைத்திருந்த பல பெயர்களை, 'கெபேக்' 'ரேங்கே' 'யுகாரீஸ்த்'(இது இன்னும் சரியாக 'எகாரிஸ்') என்று மாற்ற வேண்டி வந்தது.

இதில் இன்னொரு கூத்து. பேராசிரியர் ஒருவர் தன் நூலில் 'ஜீன் பால் சார்த்தர்' என்று எழுதியிருந்ததைப் புதுவையில் நிகழ்ந்த திறந்தவெளிப் பல்கலைக் கழக வகுப்பொன்றில் நான் பாடம் நடத்திய பொழுது இயல்பாக 'ழோ(ன்)போல் சா(ர்)த்ர்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். யூனியன் பகுதியிலிருந்து வந்த மாணவர் ஒருவர் எழுந்து, "ஐயா! புத்தகத்தில் சரியாகப் போட்டிருப்பதை ஏன் மாற்றி மாற்றி உச்சரிக்கிறீர்கள்?" என்று கேட்டார். விளக்கினேன். ழான் ழாக் ரூசோ(Jean Jacques Rousseau) என்பதை 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ' என்று செய்தியில் வாசித்ததையும் கேட்க முடிந்தது. தூயதமிழில் இதை ஒலிபெயர்த்தால் எழுதும்பொழுது ''இழான் இழாக் உருசோ' என்றுதான் எழுத வேண்டும். சேர்த்து ஒலிக்கும்பொழுது சரியான ஒலிப்பு வந்துவிடும். ஆனால் 'ஜீன் பால் சார்த்த'ரும் 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ'வும் வழிக்கு வரமாட்டா.

3. அறிவு வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பணிப்பெயர் மாற்றங்கள்:
ஆங்கில நாவலொன்று. பெண்ணியம் என்ற கருத்து அரும்பிக் கொண்டிருந்தபொழுது எழுதப்பட்டது. அதில் இடம் பெறும் 'husband,' 'wife' என்பவற்றை 'spouse' என்று அவர்கள் இன்று பயன்படுத்துவதுபோல் 'துணைவர்,' 'துணைவியார்'('துணைவர்' என்று போட்டுவிட்டு 'துணைவி' என்றால் மரியாதை இல்லை) என்று மொழிபெயர்ப்பதுதானே சரி? 'house wife' என்பதை இன்று 'home engineer' என்கிறார்கள். 'இல்லத்தரசி' என்ற பழைய சொல் ஆதிக்கத்தைக் குறிக்கும். 'இல்லப் பொறியாளர்' என்று சொல்ல வேண்டுமாம். பிரஞ்சில் 'பலேயர்' என்ற பழைய சொல் 'பெருக்குபவ'ரைக் குறிக்கும். அச்சொல் இழிவென்பதால் இப்பொழுது ஆங்கிலத்தில் அதை 'surface technician' என்று மொழிபெயர்க்கிறார்கள்.('பாலியல் தொழிலாளர்' போன்றும் பணிப்பெயர் மாற்றங்கள் பல இருக்கின்றன)

4. வட்டார மொழிகளில் அமைந்துள்ள படைப்புகளை மொழிபெயர்ப்பவருக்கு ஆகக் கூடுதலான சுமை உண்டு. வட்டார வழக்கு அகராதிகளுக்கு எட்டாத சொற்களும் அத்தகைய படைப்புகளில் வருவன. நாட்டுப்புறப் பாடல் ஒன்று. 'ஒத்த ரூபா தாரேன்' - மொழிபெயர்த்து விடலாம். 'ஒனப்பத் தட்டெ தாரே'னை என்னவென்று மொழிபெயர்ப்பது?

5. கி.ரா., கழனியூரனின் மேற்படிப் படைப்புகள் அல்லாமல் பாலியல் கதைகளை மொழிபெயர்ப்பவர் மேலதிகமான விழிப்புணர்வைக் கைக்கொள்ள வேண்டும். இவற்றை மலையாளம், தெலுங்கு முதலான மொழிகளில் மொழிபெயர்ப்பவரை விடவும் ஆங்கிலத்திலும் குறிப்பாகப் பிரஞ்சிலும் மொழிபெயர்ப்பவர் படாத பாடுகள் பட வேண்டும். பொறுப்பில்லாமல் மொழிபெயர்த்தால் நம்மைக் குறித்து வாசிப்பு அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முயலும் அம்மொழியினர் ஆகவும் கொச்சையாகப் புரிந்து கொள்ள நேரும்.

இன்னும் சிந்திக்கச் சிந்திக்க புதிய புதிய பூதங்கள் மொழிபெயர்ப்பாளர் முன் எழும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்குமுன் எழும் தடைச்சுவர்போல் இன்னொருவர் முன் எழவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு வகையாக எழலாம். தூங்கும் பொழுது கூட இந்தச் சொல்லுக்கு இந்த மொழியில் என்ன சொல்லைப் போடுவது என்பது குறித்துத தாறுமாறான கனவுகள் வரலாம்.[சந்தை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது விதிவிலக்கு.] சில நேரங்களில் சில கனவுகளில் சில சொற்கள் விசுவரூபமெடுத்து மொழிபெயர்ப்பாளரை விரட்டிக்கொண்டும் வரக் கூடும். விழித்தபிறகுதான் அவருக்கு நிம்மதி!

****
Thanks to Thinnai.com

No comments: