8.5.09

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்
- தேவமைந்தன்

புதுச்சேரி நகரத்தின் கடற்கரைப் பக்கம் புன்னை மரங்களும்; கடற்கரைக்கு மேற்கிலுள்ள நகரத் தெருக்களில் வேப்ப மரங்களும் இன்றும் இயற்கை நலம் ஈந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்த ஈரோடை நகர் நண்பர் ஒருவர், என்னிடம் தொல்லையான வினாவொன்றையும் முன்வைத்தார்.

வேப்ப மரத்தின் நெய், பட்டை(மேற்பட்டை, வேர்ப்பட்டை), பிண்ணாக்கு, பூ(பச்சை அல்லது நாட்சென்ற பூ), வித்து, இலை ஆகியவற்றை மருத்துவப் பலன் கொண்டு புகழும் 'மூல வருக்க பொருட்குண' விளக்கத்தார் - வேப்பம்பழங்களை மட்டும் பயன் சுட்டாது விட்டமை ஏன்? - என்பதே அந்த வினா.

நொய்யல் ஆற்றின் அருகில் மதகுப் பக்கத்து வேப்ப மரத்திலிருந்து தாமே உதிரும் அல்லது காக்கைகள் கொத்தும் பொழுது உதிரும் வேப்பம் பழங்களைத் தின்னும் இளமைப் பருவத்தைக் கழித்த நான், அவருக்கு என்ன மறுமொழி சொல்வது என்று திகைத்தேன். நான் மருத்துவரல்லவே!

வீட்டுக்கு அவர் வந்த பொழுது, "வேப்பம் பழங்கள் குறித்துக் கேட்டீர்களே! இந்தாருங்கள்.. தமிழர் அகநலங் காக்க நம் தங்கப்பா தந்த 'வேப்பங்கனிகள்'' என்று நூலொன்றைத் தந்தேன். ஆண்டு குறிப்பிடாமல், தோழர் த. கோவேந்தன் வெளியிட்ட தங்கப்பாவின் நூலது. தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் வெளியிட்டிருக்கக் கூடும். அதனுள்ளிருந்து வேப்பம்பழங்கள் சில:

"வாய்பெருத்த
வயிற்றுக் கடவுளின்
கோயில் தோறும்
கொழுமடைப் பள்ளியில்
எரிகழல் உமிழ்வன
எத்தனை அடுப்புகள்!
நாகரிக மகள்
நாட்டிய மேடையில்
உடைகள் விலகலை
ஒளியிட்டுக் காட்ட
எத்தனை ஆயிரம்
மின்விளக்குகள்!
வேட்கை நெஞ்சின்
வெறித்தழல் ஏறிய
பதவிக் கொள்ளைப்
பந்தயக் குதிரையை
இராவழி விரட்ட
என்ன தீவட்டிகள்!
அம்பல நடுவில்தன்
அழகொளி மாளிகை
மறைப்பன என்றே
மற்றவர் குடிசையைக்
கொளுத்திட எத்தனைக்
கொள்ளிக் கட்டைகள்!"

என்ற வினாக்கள் அடுக்கடுக்காய் ஒரு பாவில். 'இராவழி ' என்ற சொல்தரும் ஆழமான பொருள் உன்னத் தக்கது.

பட்டி மண்டபங்கள், அரட்டை அரங்கங்கள் முதலானவற்றை, வயற்காட்டு வாழ்வை உணர்ந்து வாழ்ந்த பாவலன் மதிக்க மாட்டான். தன்னை ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்ற விரும்பும் சொல்வணிகர்களே விழைவார்கள்.

"உங்கள் பட்டி மண்டபங்களையும்
காட்டுக் கத்தல் கருத்தரங்குகளையும்
நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள், போங்கள்!
வெறுஞ் சொல் மினுக்கும் வேடிக்கைவிட்டு
வாழ்க்கையை நேராய் வந்து பாருங்கள்"

இதிலே வரும் வாழ்க்கை என்பது ஒரு தலைமுறைக்குப் பின்[தலைமுறை = 33 1/3 ஆண்டுகள்] ஈழத் தமிழர் வாழ்க்கையைக் குறிப்பதாக மாறிப்போனதை நொந்த நெஞ்சங்கள் உணரும். ஆம். வெறுஞ்சொல் மினுக்கும் வேடிக்கைப் பயல்கள் தமிழகமெங்கும் நிறைந்திருப்பதால்தானே ஈழத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாய்க் கொல்லப்படுவது கண்டும்; குழந்தைகள் கூட, போர்மாட்சி - படைமாட்சி தெரியாத காடையர்களால் போர் என்னும் பேரில் கொல்லப்படுவது கண்டும் - கட்சி அரசியலுக்கும், பணம் கொல்லும் தேர்தலுக்கும் மனமுவந்து பாடுபட முடிகிறது. தமிழர் நலங்காப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நாளேடுகள் - உட்பக்கமொன்றில் ஈழத்தமிழர் இன்னல் குறித்தும் தலைப்புப் பக்கத்தில் தொகுதி உடன்பாடு குறித்தும் செய்தி வெளியிடுவதைப் பார்க்கவில்லையா?

இன்றைய இலக்கியம் என்று தமிழில் அறிவிக்கப்படுபவை எப்படி இருக்கின்றன? இன்றைய எழுத்தாளர்/படைப்பாளர் என்று தம்மைப் 'பிரகடன'ப் படுத்திக் கொள்பவர்கள், நூல்கள் பலவற்றை நெய்து குவிக்கும் தமிழாசிரியர்கள், ஓயாமல் பாமாலை கட்டி அரங்கம் தேடி வந்து பாடும் பாவலர்கள், இன்றைய ஆய்வாளர்கள்... இவர்களெல்லாரும் எப்படிப் பட்டவர்கள்?

பழைய இலக்கியக் கடைகளில் பொறுக்கிய
தாள்களைச் சேர்த்துத் தைத்த நூல்களில்
தம் பெயர் எழுதும் தமிழாசிரியர்கள்.
பட்டி மண்டபப் பரத்தையின் மடிமேல்
வெட்டிப் புலவர்கள் இளித்திடும் கொஞ்சல்கள்.
காயடித்த 'கவிஞர்கள்' கூடி
வாயடி அடிக்கும் பாட்டரங்குகள்.
.......... ............ ................
அலைகடல் தாண்டி அயல்நாட்டுச் சந்தையில்
ஏட்டுச் சுரைக்காய் கறிசமைத் துண்டு
வீட்டுக்கு வந்தவர் விட்டிடும் ஏப்பங்கள்.
சாய்க்கடை மண்ணைச் சலித்துச் சலித்துப்
பார்க்கையில் வெளிப்படும் பாசியைப் பகுத்தும்,
போக்கில் நெளியும் புழுக்களை எண்ணியும்
அடிக் குறிப்பெழுதி ஆய்வுகள் இயற்றும்
வடித்தெடுத்த உலக்கைக் கொழுந்துகள்.
அரைத்த மாவையே அரைத்துக் கலக்கிய
புளித்த மாத் தோசை போதும் என்பதால்
மதுக்கடை வண்டலைப் பச்சையாய்க் கலக்கிப்
புதுப் பலகாரம் படைக்கும் 'புதிது'கள்!
எத்தனை அழுகல்! என்ன தீ நாற்றம்!
இதுதான், இதுதான் ஐயா,
இற்றைத் தமிழரின் இலக்கிய உலகமே"

வெளிப்படையாக அவரவர் இங்கே தங்கப்பா சுட்டியவற்றை மறுக்கலாம்; அவர்களின் மனச்சான்று, அப்படி ஒன்று இருந்தால், அமைதியாக ஆம் ஆம் என்று ஏற்றுக் கொள்ளும்.

கொடுமையிலும் கொடுமை எது என்னவென்றால் மாந்தர் பலருக்கு அகமும் புறமும் ஒவ்வாதிருக்கும் இரட்டை நிலைதான். 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் பாடினார். அவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று நடக்கும் பேர்வழிகளைத் தங்கப்பா பட்டியலிட்டே காட்டி விடுகிறார்.

புதையல் பேய்களின்
பூசாரிமார்கள்
புத்தரைப் போலவும்,

கறிக்கடை நடத்தும்
கறுப்ப சாமிகள்
வள்ளுவர் போலவும்
திகழ்கின்றார்கள்.

மல்லிகைப் பூக்களின்
மனத்தைத் திருடிக்
காகிதப் பூக்கள்
கடை நிறைக்கின்றன.

உலகியல் சூளையின்
உலர்ந்த செங்கல்கள்
வெண்ணெயில் மறைந்தே
உணவுத் தட்டில் வந்து
உட்காருகின்றன.

விழா அரங்குகளில்
வெள்ளைச் சட்டையும்
கருப்பு நெஞ்சுமாய்க்
குள்ள நரிகள்
குறுநகை பூத்துத்
தலையை ஆட்டியும்
தழுவியும், வணங்கியும்
தூய்மையே உருவாய்
வாழ்த்துரை வழங்கையில்
அவற்றின் மனங்களோ
மாலை எப்போது
மயங்கும் என்று
'நீலச் சுருள்'களை
நினைந்திருக்கின்றன.

ஆன்மிகம் முழங்கும்
ஆச்சிரமங்களின்
விருந்து மாளிகைகளில்
அரபிய இரவின்
அம்பு மலர்கள்
பதவி நாயகர்களைப்
பாகாய் உருக்கி
நிலுவைக் கணக்கை
நேர் செய்கின்றன.

படிப்புச் சுரைக்காய்ப்
பந்தல்கள் அடியில்
உலக ஒருமையும்
உடன்பிறப்பு அன்பும்
சந்தன மாக
நாக்கில் மணக்கையில்
கழற்றி வைத்த
செருப்பி லிருந்து
சாதிச் சகதியும்
சமயக் கொலைகளும்
நடுத் தெரு வரைக்கும்
நாறு கின்றன..."

'கிண்டற் பித்தன்' என்ற புனைபெயர் தங்கப்பாவுக்கு உண்டு. 'மன்னூர் மாநாடு' என்ற அவருடைய நெடும்பாப்போல அங்கதச் சுவையும் நெருப்புத் திறனாய்வும் கொண்ட மற்றொரு பாவைப் பார்த்தல் அரிது.

சற்று வேறுபாடாக, மிகவும் மென்மையான 'தொனி'யில் மிகவும் முதன்மையானதொரு நிகழ்வை அங்கதப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'வேப்பங் கனிக'ளில் வரும் 'எங்கும் தமிழ்!' என்ற பாவைக் குறிப்பிடலாம்.

"எங்கள் தமிழைப்
பாடமொழியாய் வைத்திட மாட்டோம்.
அறிவியல், தொழிலியல்
மருத்துவம் சட்டம் என்று
எதற்கும் தமிழை எடுக்கவே மாட்டோம்
அலுவல் மொழியாய் ஆக்கவும் மாட்டோம்.
தமிழறிந்தோருக்கு அலுவலில் முதன்மை
அளிக்கவும் மாட்டோம்.
ஆனால்,
உலக அரங்குகளில் எம்
உயர்தமிழ்த் தாயை உலவச் செய்வோம்!
மாண்புமிகு தமிழ் மாநாடுகளின்
உயர்ந்த கோபுரங்களில் அவளை ஏற்றுவோம்.
வேட்டுகள் முழக்கி விழாப் பல எடுப்போம்.
ஆனைமேல் ஏற்றி ஊர்வலம் வருவோம்.
மன்றங்கள் தோறும் படமாய் மாட்டி
வீதிகள் தோறும் சிலையாய் நிறுத்திப்
பூவும் புகையும் தூவிப்
பூசைகள் பலப்பல செய்வோம்!
நாடு முன்னேறும்; நாமும் முன்னேறலாம்."

'Gentle sarcasm' என்று மேலைத்திறனாய்வாளர் போற்றும் மென்மையான நையாண்டியை மேலுள்ள பாவில் காணலாம்.

'மேலிருக்கும் மாடுகள்' என்றொரு பா. நண்பகலொன்றில் தங்கப்பா ஒரு காட்சியைக் கண்டார். நிழல்தரும் சாலை. வேப்ப மரம். அதன் தழையை வளைத்து, தான் ஓட்டி வந்த மாட்டின் வாயில் ஊட்டுகிறான் கிழவன் ஒருவன். பசுமைக்குக்கேடு விளைவிக்கிறானே அவன்! - என்று திட்டுகிறார் அவனை. தலை கவிழ்ந்தவாறே தன் வழியில் மாட்டை ஓட்டிக் கொண்டு போகிறான் அவன். இப்பொழுது பாவலரின் மனதுக்குள் ஒரு குரல்:

" பசித்த மாட்டுக்குப் பச்சை காட்டிய
ஏழைக் கிழவனை ஏசி விரட்டினாய்.
ஊரின் பசுமை ஒருதுளிர் விடாமல்
வலைத்து முரித்து வாயில் போட்டுக்
கோடி கோடியாய்க் கொழுக்கின்றனவே
மேலிருக்கும் பெரிய மாடுகள்.
அவற்றைத் தடுக்க உன்னால் முடிந்ததா?
எல்லார் கடுமையும் ஏழைக ளிடமா?
பொல்லாத ஒழுங்கு! போடா மடயனே!"

பொதுவான மாந்தருக்கும் - நிரம்பிய பாவலன் ஒருவனுக்கும் இதுதான் வேறுபாடு.

நம் நாடு விடுதலைக்குப் பின்பு எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைச் சுட்டும் வேப்பங் கனிகள் இரண்டு. அவற்றைப் பார்த்து இக்கட்டுரையை நிறைவு செய்வோம்:

நம்மை நாமே

எப்படிப் பொறுப்போம்?
எப்படிப் பொறுப்போம்?
நமக்கே உரிமையாம்
நம் தாய்நாட்டைப்
பொன்னாய்க் கொழிக்கும் இப்
புனித மண்ணினை
வேற்று நாட்டு
வெள்ளைப் பறங்கிகள்
சுரண்ட விட்டு நாம்
சும்மா இருப்பதா?
எழுங்கள்!
வீறுகொண்டெழுங்கள்!
வெள்ளைப் பறங்கியை
விரட்டி அடிப்போம்!
சொந்த மண்ணை, நம்
தாய்த் திரு நாட்டைப்
பிறர் சுரண்டாமல்
நாமே சுரண்டுவோம்.

இந்தப் பா, தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கலாம். "வெள்ளைக்காரன் போய், கொள்ளைக்காரன் ஆளவந்தான்" என்ற புதுக்கவிதை வரியொன்று பின்புதான் வந்தது என்பதை நாம் மனத்துட் கொள்ளவேண்டும்.

வெண்கலத் திருவோடு

முன்பு நான்
ஓட்டைச் சட்டியில் பிச்சை எடுத்தேன்.
இப் பொழுது, இவர்கள்
எனக்குப்
புதிதாய்ப், பளபளப்பாக
வெண்கலத் திருவோடு
அன்பளிப்புச் செய்து விட்டார்கள்!
என்ன குறைச்சல்
இனிமேல் எனக்கே?

இந்தப் பாவில் வரும் வெண்கலத் திருவோடு, இலவய வண்ணத் தொலைக்காட்சியை நினைவு படுத்தவில்லையா?

********
நன்றி: தமிழ்க்காவல்.நெட். க, மீனம் 2040 / 14-03-2009.

No comments: