தான் பெரியவனாகக் காட்சியளிக்க வேண்டும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். தன் வாகுதோதுகள் முன்னிற்க வேண்டும். குமுகாய நிலயில் தாழ்ந்தவராகத தான் கருதுபவர்கள் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும்; அவர்கட்கென்று தனிக் கருத்துத் தனிச் செயல்முறை இருத்தல் கூடாது. தான் சொன்னபடி அவர்கள் ஆடவேண்டும். இந்த உணர்வுதான் மறைமுகமாகப் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வின் முற்றிய நிலைதானே வலியவன் மெலியவனை ஒடுக்கக் காரணமாக இருக்கின்றது? சிங்களனைப் போன்ற பேரின வெறியன் வலிமை பெற்ற காரணத்தால் வலிமையற்ற தமிழர்களை அழித்தொழிக்கக் காரணமாக நிற்கின்றது.
குமுகாயம் இப்படியே போய்க் கொண்டிருக்குமானால் எத்தனைப் பெருங்கொடுமைகளை, எத்தனைப் பேரழிவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும்! இணக்கமின்மையின் வித்து, கொடுமையின் வித்து, இனப்படுகொலையின் வித்து, தனிமாந்தன் ஒவ்வொருவனுக்குள்ளும் 'தான்' என்ற வடிவில் புதைந்து கிடக்கின்றது. அது வலிதாக வளர்ந்து முள் மரமாகி விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
- பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
ஆசிரியவுரை,
'தெளிதமிழ்,' 17.09.2009(தி.ஆ.2040, கன்னி, க)
No comments:
Post a Comment