‘திருக்குறளும் உலகமும்’ - தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்
-தேவமைந்தன்
‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை திசம்பர் 8, 2008) இடுகை பெற்று மலேசிய நண்பர் சுப.நற்குணன் முதலானவர்களால் பாராட்டப்பெற்ற கட்டுரைக்கும் நாயகரே அ.சிவலிங்கம்.
தன் முதுமை - நோய் எதையும் பொருட்படுத்தாது இவர் எழுதியுள்ள நூல்களே ‘திருக்குறளும் உலகமும்’ இரண்டு பகுதிகள். முதலாவது 262 பக்கங்கள். இரண்டாவது 425 பக்கங்கள்.
உழைப்பிற்காகவும் புதிய அணுகுமுறைக்காகவும் மனமுவந்து பாராட்டத்தக்க புத்தகங்கள் இவை. திருக்குறளுக்கு உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் நோக்குகளைத் தாண்டி உலகச் சிந்தனையாளர்கள் பலர் கருத்துகளையும் ஒப்புநோக்கித் தன் கருத்தாடலை அ.சிவலிங்கம் நிகழ்த்தியுள்ளார். ஆங்கிலத்தில் பெற்ற அறிவும், தன் எழுபத்திரண்டாம் வயதில் அம்மொழியிலக்கியத்தில் பெற்ற முதுநிலைப்பட்டமும், தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் வெளியான நூல்களைத் தேடிப்பிடித்து அவாவிப் படித்த அனுபவமும் இந்தப் புத்தகங்களின் அடித்தளங்கள். ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’(மாயூரம் வேதநாயகம் பிள்ளை), ‘அருட்குறள்’ (வீ.ப.கா. சுந்தரம்), ‘திருக்குறள் சர்வக்ஞ’(‘குறள் வழி’ திங்களேடு), ‘மாணிக்கக்குறள்’ (வ.சுப. மாணிக்கம்), Albert Schwitzer’s Biography, ‘An Anthology of Sanskrit Literature,’ ‘Dhammapada,’ ‘Tales from Italy,’ ‘Upanishad’(by Rajaji) ‘Sweet Vietnam’(American Publishing House), ‘Freedom from Necessity’(Bernal, London) போன்ற பன்முகங்கொண்ட இருநூற்று நாற்பத்து நான்கு நூல்கள் முதல் பகுதியிலும்; ரோசலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்,’ ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’(திரு.வி.க.), ‘துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்’(லெவ். ஷெய் னின்), ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’(கார்த்திகேசு சிவத்தம்பி), ‘பிளேட்டோவின் அரசியல்’ (வெ.சாமி நாத சர்மா), ‘ஜோதிராவ் பூலே’(ஜி.பிதேஷ்பாண்டே), ‘Flowers - Fairy Tales’(Anna Sakse), ‘Not Safe To Be Free’(Newyork Press), ‘The Essential Nehru’(Narasimhaiah), ‘Jawaharlal Nehru(Maretyshin, Moscow), ‘Recovery of Faith’(S.Radhakrishnan), ‘Greek Historical Thought’ (Toynbee, New york), ‘The East and the West’(Swami Vivekananda) போன்று பன்முகங்கொண்ட ஐந்நூற்று இரண்டு நூல்கள் இரண்டாவது பகுதியிலும் எடுத்தாளப் பட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களின் திருக்குறள் ஒப்பீட்டு அணுகுமுறைக்குச் சான்று ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன்:
“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”
என்ற 430-ஆம் திருக்குறளுக்குப் பின்வரும் ஒப்பீடுகள்:
“ஆப்ரகாம் லிங்கன், தன்னுடைய நாற்பதாவது வயதில் Euclid வடிவியல் சார்ந்த கணிதம் படிக்க ஆரம்பித்தார். அதைப் படித்தது கணிதத்திற்காக அல்ல; பகுத்தறிவில் பயிற்சி பெறுவதற்காக அதைப் படித்தார்.” (‘Giants of Science’ by Philip Cane)
“தன்னைத் தெரியும் தனக்குத் தெரியும் எனத் தெரியும் அவன் புத்திசாலி. அவனைப் பின்பற்று.”(‘பொன்மொழிகளும் பழமொழிகளும்’ - ரெங்கராஜன் பி.ஈ.)
“மனத்தின் இருளே அறியாமை.”
(ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் - ஜெயந்தி மதன், கவிதா பாலு)
“அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால்
ஆண்டவன்கூட அஞ்சிடுவான்
அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண்பெறுவான்.”
(‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்,’
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) [‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் ‘உண்மை ஒருநாள் வெளியாகும்’ என்று தொடங்கும் பாட்டில் வரும் வரிகள்]
“ஒரு முக்கியமான ஆவணம். அவசரமாகக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக ஒரு ஆளையும், குதிரையையும் அதிகாரி அமர்த்தினான். பிறகு அந்த மனிதன் குதிரையை தனக்கு முன்னே ஓடும்படி விரட்டினான். இதைப் பார்த்து ஒருவன் அடக்கமாகச் சொன்னான். அவசரமான காரியத்திற்கு நீ ஏன் குதிரையை சவாரி செய்யக் கூடாது என்று கேட்டான். அதிகாரி சொன்னான்: “நான்கு கால்களை விட ஆறு கால்கள் வேகமாகச் செல்லுமல்லவா?”(Wit and Humour from Old Cathay. Chinese Literature. N.C.B.H. Chennai)
“லியனார்டோ-டா-வின்ஸி தாவரவியல் அறிஞருங்கூட. சில தாவரங்கள் கதிரவனை நோக்கியும் சில கதிரவனின்று விலகியும் வளர்கின்றன. சில தங்கள் வேர்களை நிலத்துக்குள் செலுத்தியும், மற்றவை வெளிப்புறத்தில் வளர்ந்தும் காணப்படுகின்றன. அவர் மரங்களில் கண்ட கணுக்கள் மரத்தினுடைய வயதோடு தொடர்புள்ளவை. மலர்களின் ஓவியங்கள் மூலம் தாவர வாழ்க்கையில் நிலவுகின்ற ஆண், பெண் இனங்களை அறிந்தார்.
சரியான காலத்தைக் காட்டும் கடிகாரத்தை அவர் உருவாக்கினார். இன்னும் தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டு பிடித்தார்.”( ‘Giants of Science’ by Philip Cane) [டான் பிரவுனின் ‘Angels and Demons’ நாவலின் பக்கம் 44-இல், டாவின்சி கத்தோலிக்கப் பாதிரியாராகவும் இயற்பியலறிஞராகவும் குறிப்பாக ‘Theo-physicist’ ஆகவும் விளங்கினார் என்ற குறிப்பை நண்பர்கள் படித்திருப்பீர்கள். - தேவமைந்தன்]
“நம்முடைய அறியாமைதான் கடவுள். நாம் அறிந்து கொள்வது அறிவியலே.
மனிதன் பெரிய மிருகங்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். மெல்ல மெல்ல பயத்தினின்றும் எழுந்தான். ஆற்றலில் எல்லா மிருகங்களைக் காட்டிலும் மேன்மை அடைந்தான். இந்த நிலைமையை மனிதன் உடல் வலிமையினால் அடையவில்லை. யானை அவனை விட பன்மடங்கு வலிமை உள்ளது. தன் அறிவினாலும், பகுத்தறிவினாலுமே மனிதன் இந்த உயர்ந்த நிலைமையைப் பெற்றான்.”(ஜவஹர்லால் நேரு)
“புலன்களின் உணர்ச்சியே அறிவின் தோற்றுவாயாகும். இந்த உணர்ச்சி மூளை அல்லது அதைப்போன்ற உட்பொருளின் இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் அல்ல. மூளையில் அல்லது அதைப் போன்று தலைக்குள் இருக்கும் வேறு ஒரு பொருளின் இயக்கத்தையே நாம் மனம் என்கிறோம். எண்ணங்களும், பிரதிபிம்பங்களும், மூளை, இதயம் ஆகியவற்றின் இயக்கங்களேயாகும். அதாவது, பெளதீகப் பொருள்களின் இயக்கங்களே ஆகும். பெளதீகப் பொருள்களும், இயக்கமும் அடிப்படைச் சக்திகளாகும். அவை உலகத்தின் ஒவ்வொரு பொருளையும் - உயிரற்றவைகளையும், உயிர் உள்ளவைகளையும் - விளக்கிக் கூறப் போதுமானவையாகும்.” (ராகுல சாங்கிருத்தியாயன், [ஐரோப்பிய தத்துவயியல்])
“பலர் தாமே தம்மைச் சிறையிலிட்டுப் பூட்டி அந்தச் சிறையின் திறவுகோலை கையில் வைத்துக் கொண்டு தமக்கு அப்பாற்பட்ட கடவுளை கதவைத் திறந்து விடும்படி கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் திறவுகோல் இருப்பதை உணராது மயங்கிப் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.”(‘புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை.’ நா.திருவள்ளுவர். திருச்சி-5)
“அறிவு வேண்டுகிறேன். எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்து கொள்ளும் நல்லறிவு வேண்டுகிறேன்.”
(‘பாரதியின் இலக்கியப் பார்வை.’ இளஞ்சேரன், கலைக்குடில், நாகை.)
“கடுங்குற்றங்கள் புரிவோர் மந்தபுத்தி உள்ளவர்கள்.”(D.N.Pritt)
“இப்போது இருப்பதைக் காட்டிலும் சிறிது அறிவாளியாக நான் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அறிவு என்பது நழுவும் தன்மையது. அதைக் கொள்வது எளிதில் முடியாது. எனினும் சில சமயங்களில் திடீரென்று நமக்குத் தெரியாமலேயே வரும். நான் அதனுடைய உண்மையான பின்பற்றுபவன். அதனுடைய நல்லெண்ணத்தைப் பெற முயல்பவன் என்று நேரு கூறினார். (கிருஷ்ணா ஹதீசிங். ‘Indian Autobiographies’)
“எங்கெல்ஸ் அவருடைய காலத்திலிருந்த புகழ்பெற்ற இயற்பியலாளரை விட மிகவும் சரியாக ஒரு பொருளினின்றும் ஆற்றலைப் பிரிக்க முடியாதெனக் கண்டார். இந்தக் கொள்கை நீண்ட காலத்திற்குப் பிறகு ஐன்ஸ்டீனுடைய சார்பு நிலைக் கொள்கைக்குக் கொண்டு சென்றது. எங்கெல்ஸின் இச்செயல் அறிவியலுலகத்திற்கு முன்னரே தெரிந்திருந்தால் பல சிக்கல்களைக் களைந்திருக்க லாம்.”(‘Freedom from Necessity’)
“செய்யுள் இயலில் உள்ள ‘மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று’ [எண் 1337] என்ற சூத்திரத்திற்கு பேராசிரியர் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார். அவர் கூறுவதாவது: ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலும் உடையதாகலின் அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்து உளவாகி இக்காலத்து இலவாகின! செய்யுள் மரபென்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகையான சொற்களைக் கொண்டு செய்யுளை அமைப்பது.”(‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ A.V. சுப்பிரமணிய ஐயர், சென்னை - 14)
“குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாய் உணர்வுகள் கீழ்நோக்கிச் செல்வதும் கீழே இறங்கிக் கீழேயே தங்கி விடுவதும்தான். தொப்புளுக்குக் கீழே உள்ள இடம் பிங்கலை நாடியால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. இதனால் மன அமைதியும் மனத் தெளிவும் குறைகிறது. இதுவே குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாயாக அமைகிறது.”(‘புதிய மனிதன், புதிய உலகம்.’ ஆசாரிய மகாபிரகய, சென்னை - 79)
இதுவரையிலும் நாம் பார்த்தவை அனைத்தும் ஒரே ஒரு திருக்குறளுக்கு(குறள் எண்: 430) அ.சிவலிங்கம் தந்துள்ள ஒப்பீடுகளும் விளக்கங்களும் ஆகும்.(திருக்குறளும் உலகமும்-2. பக்கங்கள்: 151-153)
எண்பத்தைந்து வயதில், உடல்நலங்குன்றிய நிலையில், உளநலங் குறையாமல் தொடர்ந்து பல துறைகளைச் சார்ந்த பன்முகங்கொண்ட புத்தக வாசிப்பை விடாமல் செய்பவர் அ.சிவலிங்கம். படித்தவற்றுள் முகமையானவற்றை ஏட்டில் குறித்து வைத்துக் கொள்பவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அவற்றை ஏற்ற வகையில், வாசிப்பவர் பயன் பெறுமாறு நூல்கள் ஆக்குபவர். எளிய பணியாளராக அஞ்சல் துறையில் பணியேற்று, தமிழில் தந்தி அனுப்பும் முறையை 1955இல் கண்டு பிடித்து இராஜாஜி முதலிய தலைவர் பலரின் பாராட்டைப் பெற்றவர். முதலில் புலவர் பட்டமும் எழுபத்திரண்டாம் வயதில் ஆங்கில முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.
‘திருக்குறளும் உலகமும்’ என்ற இந்தப் புத்தகத்தின் இரண்டு பகுதிகளும் கிடைக்குமிடம்:
திருமதி சு. மனோன்மணி,
தமிழ்த்தந்தி இல்லம்,
3, அன்னை தெரசா தெரு,
சேஷசாயி நகர்,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சிராப்பள்ளி - 21.
விலை:
முதற் பகுதி: ரூ.75.
இரண்டாம் பகுதி: ரூ.175.
********
நன்றி:திண்ணை.காம்
No comments:
Post a Comment