15.11.11

பின்னூட்டங்கள் - பழமொழிகள்


“எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?” என்பது பழமொழி. “பின்னூட்டம் போடுங்கள், பின்னூட்டம் போடுங்கள்” என்று என்னைப் போன்ற வலைப்பதிவர்களும் கேட்க வேண்டிய நிலைக்கு ‘பிச்சை’ என்ற பெயர் இல்லாமல் வேறு என்னவாம்? இணையவுலகில் இவ்வாறு.......

பழமொழியின் முதற் பகுதியைப் பார்த்தோம். அடுத்த பகுதி - “எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்.” இது ஒருமை. ஓர்மையுடன் பார்த்தால் இணையவுலகில் இது ஒருமையில் வராது. பன்மையில் மட்டுமே வரும்.

அப்படியானால் பின்னூட்டங்களே பிச்சையெடுத்தால்தான் வருவனவா? - என்று கேட்கின்றீர்களா? அல்ல அல்ல. போட்டி போட்டுக்கொண்டு பின்னூட்டங்கள் போடுவார்கள் வலைகள் சிலவற்றுக்கு. “அப்பேர்ப்பட்ட” வலைகள் எவையெவை என்பது இணையவுலகில் “பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும்” பல ஆண்டுகள் இணையவுலகில் “பெருக்கிப் பெருக்கி, குப்பை போட்டவர்களுக்கும்” நன்றாகவும் “அச்சு அசலாக”வும் தெரியும்.

ஊழ்விலக்குகள் எவற்றிலும் உள்ளன என்பதற்கேற்ப, சொல்லச்சீடு(Word Press) தளம் கொண்ட வலைகள் சிலவற்றுக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கமே சான்று. புகழ்மிக்க வலையேட்டில் தொடர்ந்து(அதில் நான் எழுதிய கட்டுரைகள் பலவற்றை, என் வலைப்பதிவுகளில் பதிந்திருக்கிறேன்) எழுதிவந்த பெரியவர் ஒருவர், கனடாவிலிருந்து சொந்தமாக நடத்திவரும் சொல்லச்சீட்டின் தளத்துக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கத்தைக் குறித்து, “எப்படித் தங்களின் இத்தளத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்களின் போக்குவரவுள்ளது?”(How come so much traffic to your weblog?) என்று அவருக்கே மீண்டும் வந்ததொரு பின்னூட்டத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். “மச்சம்டா சாமி!” என்று விட்டுவிட்டுப் போயிருக்கலாம்தான். “இட்டளி தின்னும் தமிழ்மூளைக்கு இருக்கும் கொழுப்பு” என்று புதுதில்லியில் வண்ணிக்கப்படும் மூளை இருப்பதால், இந்தச் சொல்லாடல் பிறந்தது. “எடுத்தாளாத பொருள் உதவாது” என்ற பழமொழியும் “எழுதப்பா இதை!” என்று ஊக்குவித்தது.

“உழுகிற மாடு பரதேசம் போனால், அங்கே ஒருவன் கட்டி உழுவான்; இங்கே ஒருவன் கட்டி உழுவான்” என்றொரு புதிர்ப் பழமொழி உண்டு. அதேபோன்ற நிலையை வலைப்பதிவுகளிலும் கண்டு வருகிறேன். அம்மணமாக எல்லோர் முன்னிலும் ஓடத் தயங்காத எழுத்தாளர் நடத்தும் வலைப்பதிவைக் காசுகொடுத்துப் படித்துவிட்டு, முகநூலிலும்(Facebook) பதிவிடும் நல்லவர்கள் உள்ளனர். அவர்களுக்காகத்தான் சென்னையை வெள்ளக்காடாக்கிய மழை ‘பேய்’ந்தது.

இவையெல்லாம் புரியாமல் ‘வெள்ளந்தி’யாக, “ உங்கள் பிளாக்கை ஆயிரம் பேருக்குக் கொண்டு சேர்க்கிறேன். பிளாக்கை வைத்து வியாபாரம் பண்ணுங்கள்!” என்று வரும் மின்னஞ்சல்களைப் பிரித்துப் பார்த்த பாவம்... “உடையவன் செய்த பாவம் கண்ணே உனக்கும் ஒட்டிக் கொண்டதா?” என்பதற்கேற்ப ஒழுங்காயிருந்த கணினியும் நோய்த்தொற்றால் ஒக்கார்ந்து கொண்டதுவே சிலருக்கு எஞ்சும்.

கொள்கை கோட்பாடுள்ளவர்கள் நடத்தும் வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள், பொதுவாக, அதிகம் வாரா. காரணம் என்னவென்றால் அதேபோன்ற கொள்கை கோட்பாடுள்ளவர்கள் பிறர் இருப்பு நிலைகள்தாம்:

1. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
2. கணினி பற்றியே தெரியாதவர்கள்.
3. இணையம் குறித்துத் தெரிந்துகொள்ள அக்கறைப் படாதவர்கள்.
4. கையில் கைப்பேசி வைத்துக் கொள்வதைக் கூட ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு’ மாறு என்று கருதுபவர்கள்.
5. ‘முழித்து முழித்து’ப் படித்து விட்டு, “இவனுக்குப் பின்னூட்டமொரு கேடா?” என்றூ கைகளைக் கழுவிக் கொள்பவர்கள். (கவனியுங்கள்: “இவளுக்கு” அல்ல.)
6. “எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று (வேறெதற்கு இருக்கிறது?)சொல்லிக்கொள்வதிலாவது - ‘குமைந்து குமைந்து குதூகலப் படுபவர்கள்’ அல்லது ‘’அன்றாடம் எதையாவது செய்துமுடிக்க முடியாதவர்கள்.”

ஆறாமவர்களைக் குறித்து, “ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை இடு, காடுகெட ஆடு விடு” என்ற பழமொழியை, “மூன்றுங்கெட இவரை விடு!” என்று சொல்லி நிறைவு செய்ய முடியும்.

அண்மையில் மும்பைத் தமிழ் நண்பர் ஒருவர், “ பின்னூட்டமிட விரும்புகிறவர்களை ஏன் இப்படிக் கொடுமைப் படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். ‘பின்னூட்டங்கள் மட்டுறுத்தம்’(Comments moderation) என்றோர் ஏந்தை(வசதியை) கூகுள்(Google) கொடுத்திருக்கிறது. அதேபோல், பின்னூட்டம் செய்பவர்களின் படங்களைப் பதியாமல் இருப்பதற்கும் கூகுள் குறிப்புக் கொடுக்கிறது. இவற்றை எல்லாம் பாடமாகவே தருகிறது கூகுள்.(Learn more about spam control - lessons by GOOGLE) இவையெல்லாம் எரிதங்களைக் கொணர்ந்து உங்கள் கணினியைப் பாழாக்கி விடும். தவிர, பின்னூட்டங்கள் பல அருவருப்பான சொற்களைக் கொண்டு வருவன. அவற்றை மட்டுறுத்தினால்தான் நாகரிகம் நிலைபெறும்.

சிலர், ஒவ்வொருவரைக்கொண்டு ஒவ்வொரு பதிவு தொடங்கி, அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டு விடுவார்கள். கண்டுகொள்ளப்படாத இடங்களை ‘சமூக விரோதிகள்’ கையாள்வதுபோல், இந்த வலைப்பதிவுகளைப் பரத்தைமை அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளவென்றே இருக்கிறார்கள் சிலர்.

‘Intellectual snobbery’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதையும் விஞ்சும் வண்ணம், நம்மவர்களின் ‘இணையம் குறித்தறிவதில் காழ்ப்புணர்வு’ம் ‘நரித்தன’மும் உள்ளன. இவற்றின் மேலதிக விளைவுகள் என்ன தெரியுமா?

இவர்கள் எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், படி+ஒட்டு(copy+paste) முறையில் உலகின் வேறிடங்களில், வேறு பெயர்களின்கீழ் வெளியிடப்பட்டு வருகின்றன. இவர்கள் எழுதும் நூல்களின் பகுதிகள் வெட்டப்பட்டு அவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய இணையக் கட்டுரைகளாகவும் மின்னூல்(PDF)களாகவும் வெவ்வேறு தலைப்புகள் -ஆசிரியர் பெயர்களின்கீழ் வெளியாகி வருகின்றன. ஒரே ஆய்வேட்டை ‘உல்ட்டா பண்ணி’ இருவர் முனைவர்ப் பட்டம் வாங்குவதைவிட ஏதமானது இது. இப்பொழுது தெரியா, இதனால் வரவுள்ள ஏதங்கள்.

“ஐயா.. ஐயா.. உங்கள் நூல்கள் செல்லரித்துப் போன பின்னாலும், ‘சைபர்வெளி’ எனப்படும் மின்வெளியில் உள்ள நூல்கள் செல்லரித்துப்போகமாட்டா. நீங்கள் ஒன்றும் தொல்லைப்பட்டு உங்கள் நூல்களை மின்வெளியில் பதிந்து கொண்டிருக்க வேண்டா. கொஞ்சம் சுறுசுறுப்பாக, நீங்கள் எழுதியுள்ள நூல்களின் கருத்தடக்கங்களை (contents) கூகுள் தேடலின் நிரப்பித் தேடிப் பாருங்கள். அதே கருத்தடக்கங்களில் வரும் நூல்களில் உங்கள் கருத்துகள் இடம்பெறுகின்றனவா என்றாவது கண்காணியுங்கள்!” என்று நான் வெளியூரில் வேண்டிக்கொண்டதற்கு, என் ஆசான் நிலையில் இன்றும் உள்ளவர், என்னை ‘ஒருமாதிரி’ நோக்கி ஏளனமாகச் சிரித்தார்.

சில கிழமைகளுக்குப் பிறகு, அவரிடமிருந்து ஒரு விடியலில் எனக்குப் பேசிஅழைப்பு வந்தது. பதறிப் பதறிப் பேசினார். எதைப் பற்றி? மேலே உள்ள பத்தியில் வரும் செய்தி தனக்கானதன்று என்று எண்ணியவர், இப்பொழுது பதறுகிறார். “பசுவதி...வள்ளலார் குறித்து நான் பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து எழுதியவற்றையெல்லாம் ஒருவன் தன் கருத்துகள் என்று பேசி வருகிறான். இணையத்தில் அவனுரைகள் ஒலிவடிவிலும் வருகின்றன. நானே கேட்டுப் பார்த்தேன்” என்றார். “ஐயா! தலைப்புகளைத் திருடினால் வழக்குப் போட முடியாது. கருத்துகளைத் திருடினால் வழக்காடலாம். அது மின்வெளி (Cyber Space) என்று தயங்காதீர்கள். மின்வெளிக்கான சட்டங்களும் ஆகத் தெளிவாக வரையறுக்கப்பெற்றுள்ளன. அடிப்படை/ஆதாரங்களோடு வழக்கிட்டால் வெற்றி உறுதி!” என்றேன். அவருக்கு உறவினரான உயர் அறமன்ற வழக்குரைஞரை இப்பொழுது அவர் அணுகியிருக்கிறார்.

“பிச்சைக்காரன் பின்னால, இருமுறவன் முன்னால, பணக்காரன் பாக்கெட்டுல” என்ற சென்ற நூற்றாண்டுப் பழமொழியொன்றைப் பழமொழிகள்புகழ் நூலாசிரியர் திரு ச. இலக்குமி நாராயணன் அவர்கள், தாம் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூலொன்றில் குறித்திருந்தார். இது, புதிர் வகையைச் சார்ந்த பழமொழி. உலகியல் நடைமுறை ஒன்றைக் குறிப்பது.

நீங்களே கண்டுபிடியுங்கள் - இது எதைக் குறிக்கிறது என்று.

சரியான விடை உங்களுக்குத் தெரியுமானால், அந்த ஒற்றைப் பழமொழி போதும், நான் இத்தனைச் சொற்களால் எழுதியதை ஒரே நொடியில் விளக்க...

5 comments:

நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ said...

அன்புள்ள நண்பர் பசுபதிக்கு
வணக்கம்
பின்னூட்டம் பற்றிய தங்கள் கருத்துகள் யாவும் வரவேற்புக்கு உரியவையே.
இணைய தளத்தால் ஆயிரம் நன்மைகள் .இருந்தாலும்
தாங்கள் குறிப்பிட்டது போல்
பிறர் கட்டுரைகளை வெட்டியும் ஒட்டியும் தம் பெயரில் வெளியிடும்
'தேவர்கள்' (கயவர்கள்) நிறையவே உலவுகின்றனர்.

இன்னொரு செய்தியும் இங்கே பதிய வேண்டும் :
- இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தில் வெளிவந்தது என் சிறு கதை
'வீட்டுக்கு வந்த வால் நட்சத்திரம்' . இதே கதை ஒரழுத்தும் மாறாமல்
இன்னொரு இணையதளத்தில் தன பெயரில் வெளியிட்டு இருந்தார் ஒருவர்.

- சில ஆண்டுகளுக்கு முன் 'அதிகாலை' என்ற இணையதள இதழில் என் தொடர் கட்டுரை
'கண்ணதாசன் ரசித்த கம்பன்' வெளிவந்துகொண்டிருந்தது.
அத்தனைக் கட்டுரைகளையும் வேற்றொரு வலைப்பூவில்
என் பெயரையோ 'அதிகாலை' பெயரையோ குறிப்பிடாமலே வெளியிட்டிருந்தார் ஒருவர்.
வேறொருவர் வழியாக அவ்வலைப்பூ உரிமையாளருக்கு மின்மடல் அனுப்பினேன்.
இன்று வரை பதில் இல்லை.

இது போல இன்னும் பல காட்ட முடியும்.
'திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது'
அன்புடன் பெஞ்சமின் லெபோ

க.தமிழமல்லன் said...

படித்தேன்.பட்டறிவு எழுத வைத்துள்ளது.
நன்றி.

சுக. ஜனார்த்தனம், காரைக்கால். said...

பாசமிக்க அய்யா, இவ்வளவு தன்னலமா வ.ப>களுக்கு! நண்பர்களுக்கும் வருத்தம்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

uNmai sonnaal udamberichchal - pazhamozhi

Calavady said...

"uLLadhaich chonnaal udamberichchal" enbadhu sari.