27.11.11

என்னரும் நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள்

தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி
1984ஆம் ஆண்டே நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் படைத்த இடுநூல்(thesis), அவர்தம் அருமைத் துணைவியார் பெயரிலான பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது. (தமயந்தி பதிப்பகம், 10, காமராசு காலனி, சிட்லபாக்கம், சென்னை-600064.) திருஅருட்பிரகாச வள்ளலார்பால் பெரும் ஈர்ப்புப் பெற்றவர் நாச்சியப்பன். 'அலங்கல் அணிந்தருளே' என்று தன் "திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம்" ஆய்வேட்டுப் பெருநூலை வடலூர் இராமலிங்க அடிகள் திருவடிகளில் படைத்தவர். நம் தமிழண்ணல் அய்யா அவர்களின் மேற்பார்வையில் ஆய்வை நிகழ்த்தியவர். களஆய்வு அது. களஆய்வில் இணைந்து உதவி, வரைபடங்கள் எடுத்து உதவியவர் அவர்தம் அன்பருமைத் துணைவியார் திருவாட்டி நா.தமயந்தி அவர்கள். அவர்களின் மகளார் சாலா என்கிற விசாலாட்சி; மூத்த புதல்வர் அண்ணாமலை - என் இளம் நண்பர். இளைய புதல்வர் சுப்பிரமணியன். பொறிஞர். அண்ணாமலை, ஊடகத்துறையினர். என் வலைப்பதிவுப் பணிக்குப் பேராதரவு தருபவர்.

'மனித விலங்குகளின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'வீரப்பதக்கம்' என்னும் சிறார் நாடகமும் 'வடலூர் வள்ளலார்' என்ற வரலாறும் 'திருக்கோயில் ஆய்வு'(Temple Research Methodology) என்னும் ஆய்வு முறையியலும் பிற பலநூல்களும் கட்டுரைகளும் நண்பர் நா.நா. அவர்களின் வழங்குகைகள்.

இனிய நண்பர்; உயர்ந்த மாந்தர். எவரும் செய்ய மாட்டாத உதவியை எனக்கவர் செய்தார். (புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் அரசவோகி பெரியதம்பி கருப்பண்ணன்(இராஜயோகி பி.கே. அண்ணன், எஃப்.சி.ஐ.[இலண்டன்]) அவர்களது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் இருபத்து மூன்று அகவை நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, சுயமரியாதை சுப்புராயன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மாந்தர் வாழ்க்கையில், மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழுத்தமாக நினைவுபடுத்திவிட்டன அந்த மரமல்லியின் மலர்கள்!)
அன்னார், நண்பர் நாகப்பா நாச்சியப்பன் இன்றெம்முள்ளங்களில் வாழ்கிறார். நண்பரின் ஒளிப்படம் உடையவர்கள் அருள்கனிந்து karuppannan.pasupathy@gmail.com என்னும் முகவரிக்கு விடுத்து வையுங்கள். இங்கே, நன்றிசுட்டிப் பதிவேன்.

1 comment:

Calavady said...

marakka mudiyaathavar.