17.11.11

17.11.11என் முகநூல் இல்லத்துக்கு வந்த மறைமலை இலக்குவனார்தம் கருத்தாடல்


ஊர்கூடித் தேரிழுப்போம்!
சொல்லைச் சிந்தனையின் தந்தை என்றார் ஒரு மொழியியல் அறிஞர்.பஞ்சு நூலாகி, நூல் துணியாகுவதைப் போலவே, சொல் தொடராகவும் வாக்கியங்களாகவும் பின்னப்பட்டு, தொடர்களும் வாக்கியங்களும் கருத்துருக்களாகிச் சிந்தனையை நெய்ய
உதவுகின்றன.எனவே சொல் இல்லாமல் சிந்தனை இல்லை.
இதனால்தான் சிந்தனை தடுமாறும்போது சொல் தடைப்படுவதும் சிந்தனையில் பெருங்குழப்பம் ஏற்படும்போது சொல் குழறுவதும் நிகழ்கின்றன.
திறமான கருத்துத்தொடர்புக்குத் தெளிவான சிந்தனையும் வளமான
சொல்லாட்சியும் தேவை.தாய்மொழியில் போதிய பயிற்சியின்றிப் பிறமொழிகளில் எத்துணைப்புலமை பெற்றிருந்தாலும் தங்குதடையின்றிச் சிந்திக்க இயலாது.பன்மொழிப்புலமை பெற்றிருந்த பெரும்பாவலர் பாரதியார் “தமிழிலேயே பேசுவேன்;தமிழிலேயே எழுதுவேன்;தமிழிலேயே சிந்திப்பேன்”எனச் சூளுரைத்தது இவ்வுண்மையை நமக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் எனலாம்.
பிறமொழிச் சொல்லைக் கலக்காமல் பேசவோ எழுதவோ சிந்திக்கவோ முடியாது என்னும் நிலைக்குத் தமிழர்கள் தடம் மாறிவிட்ட இன்றைய சூழலில் பாரதியாரின் உறுதிமொழி நமக்கு ஒரு புதிய படிப்பினையை நல்குகிறது.
புதுமைவேட்கையும் சோம்பலும் அடிமைமனப்பான்மையுமே பிறமொழிச்சொற்கலப்புக்குக் காரணங்கள் எனலாம்.
புத்தம்புதிய கண்டுபிடிப்புகள்,கோட்பாடுகள்,கருவிகள் முதலியவற்றை நமது தாய்மொழியில் பெயரிட்டு வழங்கவேண்டும் என்னும் ஆவல் நம் ஒவ்வொருவருவர் உள்ளத்திலும் ஏற்படுதல் வேண்டும்.அதுவே புதிய சொல்லாக்கங்கள் தோன்றுதற்குத் தக்க அடிப்படையாக விளங்கும்.அங்ஙனம் உருவாக்கப்படும் சொற்களை அன்றாடம் நமது உரையாடலிலும் கடிதம் கட்டுரை முதலான எழுத்து வடிவங்களிலும் வழங்கவேண்டும்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று பாரதியாரும் “தனிமைச்சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினிற் போல் எங்கும் யாம் கண்டதில்லை” என்று பாரதிதாசனும் :சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?” என்று கண்ணதாசனும் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துதற்கு நம்மைத் தூண்டிவிட்டது எதற்காக?
கலையியலிலும் அறிவியலிலும் புத்தம்புதிய சொல்லாக்கங்களைக் கண்டு அவற்றை நாளும் பயன்படுத்த நாம் தவறிவிட்டால்”சொல்லவும் கூடுவதில்லை-அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை”என்னும் வீண்பழி நமது தாய்மொழிக்கு ஏற்படும் அல்லவா?
இரண்டாம் உலகப்போருக்குமுன்னர் ஆங்கிலமொழியில் இருநூறாயிரம் சொற்களுக்குக் குறைவாகவே அதன் சொற்கோவை அமைந்திருந்தது என்றும் போர்முடிந்து சில ஆண்டுகளில் அதன் சொற்கோவை பத்துநூறாயிரம் சொற்களைக்கொண்டதாக விரிவடைந்தது என்றும் இன்றையநிலையில் இன்னும் இரண்டுமடங்கு
சொற்கள் அதனை அணிசெய்வதாகவும் மொழியியல் வல்லுநர்கள் கூறும் செய்தி நமது சொல்லாக்கமுயற்சிகளுக்கு மேலும் வலிவும் விரைவும் சேர்க்கவேண்டும். ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”என்றும் “கடி சொல்லில்லை காலத்துப் படினே”என்றும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புதிய சொல்லாக்கங்களுக்கு அடித்தளம் நிறுவிய தொல்காப்பியர் வழிநின்று புதிய சொற்களை உருவாக்குவோம்;அன்றாட வழக்கில் அறிமுகம்செய்வோம்; மொழிவளர்ச்சிக்கு ஊர்கூடித் தேரிழுப்போம்!
(1983ஆம் ஆண்டிலிருந்து என்னைத் தன் நூல்களில் குறிப்பிட்டுவருவதுடன், இன்றும் என்னுடன் கைப்பேசிவழி இனிய தொடர்பு கொண்டுள்ள நண்பர் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் மேற்கொள்ளும் இந்த அயல்நாட்டுப் பயணமும் அவருக்கு மேலுமொரு தமிழ்வெற்றி சேர்க்குமாக!)

4 comments:

Neela. Panikkundran said...

payanulla karutthaadal.

க.தமிழமல்லன் said...

வணக்கம்.புதிய வடிவத்தையும் நீல.பணிக்குன்றன் அவர்களின் பின்னுாட்டத்தையும் ஆங்கிலப்பாடல்களையும் பார்த்து மகிழ்ந்தேன்.முனைவர் மறைமலை அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகும்மா? சொல்லெல்லாம் துாயதமிழ்ச் சொல்லாகுமா? என்னும் அடிகள் உண்மையில் தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார் சொன்னவை.அவற்றைக் கணணதாசன் வழக்கம்போலத் தன்னுடையதாக்கிக்கொண்டார் என்பதேஉண்மை.
-க.தமிழமல்லன்

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

வணக்கம்.நண்பர்கள் நீல.பணிக்குன்றன் அவர்களுக்கும்;முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

Narayanachar, G.L. said...

blessings to you for such of your efforts to honor seniors.