‘மேலும் சில கேள்விகள்’ ‘நிழலைத் தேடும் நிழல்கள்’ ‘ஆதலினால் காமம் செய்வீர்!’ ‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - இந்த நான்கு சிறுகதைகளில் காதல் உணர்வுகளும்(emotions) உணர்ச்சிகளும் (feelings) கொப்பளித்துத் ததும்புகின்றன.
‘மேலும் சில கேள்விகள்’ - ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழுகிற உள்மன நெளிவுசுளிவுகளும்; அதை அந்தத் தாயைவிட மகள் எவ்வளவு தெளிவாகக் கையாளுகிறாள் என்ற துல்லியம் ~ மீநுட்பத்துடனும் நிகழ்சமூக மனவியல் அடிப்படையுடனும் நவிலப் பெறுகின்றது. “ஸ்ருதி, இனி நீ இவரை அப்பா என்று கூப்பிடலாம்” என்று முடியும் ‘லாவண்யம்’ - பெண்மனத்துக்கே புரியக் கூடியதுங்கூட. திரைப்பட உத்திகள் இக்கதையில் அமைந்து ஒரு ‘சினிமா’வைப் பார்ப்பதுபோல வாசகரை ஆக்கிவிடுகிறது.
‘நிழலைத் தேடும் நிழல்கள்’ - கதையில் வரும் நித்யா ~ தேவனுக்காகவே என்று இருப்பவள் ~ அவள் பெற்றோர் வலுக்கட்டாயமாக சுமத்தும் மாப்பிள்ளையை மணம்செய்துகொள்ள நேர்கிறது. இடையில், தேவன் கரு நித்யாவிடம் உருவாவது, அவனுக்கும் தெரியாது. கதையின் கடைசியில்தான் தெரியவரும்...அவனுக்கே. இருபது வருடம் வரை தேவன் தனியாளாகவே இருந்து எப்படியும் தன் காதலியைப் பார்ப்போம் என்று கொள்ளும் அதீதமான தன்னம்பிக்கை, தன் குழந்தைக்கே அவன் தந்தை என்றறிவதாக நிறைவடைகிறது. இப்படி ஒரு உணர்ச்சிமிக்க மர்மத்தைக் கட்டமைக்க ராஜாஜிக்கே முடியும்.
‘ஆதலினால் காமம் செய்வீர்!’ - கதை, “காதலின் இன்னொரு பரிமாணம்தான் காமம் ............ஆதலினால் காதலும் காமம் போன்றே உன்னதமானது”[116] என்ற மேலெழுத்துகளுடன்[epigraph] தொடங்குகிறது. ஆண்மையற்றவன் தன் காதலன் என்று அறிந்த பின்பும் வெறுக்காமல், அவன் தற்கொலைக்கு முயலும் பொழுதும் அவன் நண்பனுடன் சேர்ந்து காப்பாற்றுவாள் மெனூஷா. காதல் என்று வந்துவிட்டால் அதிலும் ஒரு தர்மம் உண்டு என்று காட்டும் ஆசிரியர், தொடக்கத்தில் வரும் பத்தியையும் கதைத் தலைப்பையும் ஏன் இவ்வாறு அமைத்தார் என்பது புதிராக உள்ளது. காமம் எது காதல் எது என்று, எரிமலைக் குளிரை எள்ளி நகையாடவா? நிருஷனை விட மெனூஷா ஒருபடி உயர்ந்தவள் என்று காட்டத்தான். காமத்தை எதிர்பார்ப்பாள் தன் காதலி என்ற தன்னம்பிக்கையின்மையை விடவும் தன் காதலனின் ‘ஜீவன்’தான் உயர்ந்தது என்று நம்பும் பெண்ணம்பிக்கையின் வடிவமாகத் திகழ்கிறாள் மெனூஷா.
‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - என்ற கதை மூவரைப் பற்றியது. முகுந்தன், பராசக்தி, சுபத்திரா. இம்மூவரையும் சுற்றி வருகிறது கதை. பராசக்தி அழகிதான். ஆனால் அவள் தங்கை சுபத்திராவின் அழகுக்கு முன்னால் அவள் வரமுடியாது. ஆனாலும், ஆண்கள் தன் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்ற அளவுக்குப் போகும் சுபத்திராவின் நினைப்பே அவள் பிழைப்பைக் கெடுக்கிறது. எப்படி? தன் அக்காள் முகுந்தனைக் காதலித்துக் கைப்பிடிக்கும் மணமேடையில் கூட, சுபத்திராவின் கருவண்டுக் கண்கள் அத்தான் முகுந்தனின் முகமலரை வட்டமிடலாமா? தன் தங்கையைக் குறித்துப் பராசக்திக்குத் தீர்மானமும் தெளிவுமுள்ளதால், தன் தங்கையின் அகந்தைஆணவங்களுக்கு கணவனை விட்டுக் கொடுப்பதில்லை என்ற திடசித்தத்துடன் திகழ்கிறாள். முகுந்தனும் சபலமற்றவனாய் விளங்குவது அவளுக்கு மேலும் வலிமைதானே? முடிவில் தன் ஆடைகளாகத் தானே வரித்துக்கொண்ட அகந்தை ஆணவச் செருக்குகளற்று, இயற்கை மேனியுடன் குளியல் தொட்டியில் மயங்கிக் கிடப்பவள், தன் உள்மனப்போர் இலக்குகளான அக்கா அத்தானாலேயே காப்பாற்றப்பெற்று மருத்துவ மனையில் மனந்தெளிகிறாள். மருத்துவர் தெளிவுறுத்துகிறார். எப்படி? இப்படி - “உங்கள் நன்றியை முதலில் உங்கள் பிரதர்-இன் -லாவுக்குச் சொல்லுங்கள்; அவர்தான் உங்களை இங்கே நேரத்தோடு கொண்டுவந்து சேர்த்தவர்.” புரிந்து கொண்டு தன் மணிகுலுங்கும் குரலில், “தேங்க்யூ, பிரதர்!” என்று கூறுவதாகக் கதை முடிகிறது. இங்கே, இந்தக் கதைக் களத்தில், எதிரும் புதிருமான பெண்மனங்களிரண்டு இராம இராவண யுத்தம் நிகழ்த்துவது ‘அட்டகாசம்.’ எல்லாவற்றிலும் உடன்பாடு எதிர்மறை இருப்பதுபோலப் பெண்மனத்திலும் இருப்பதை ராஜாஜி இதிலே சித்திரித்துள்ளார். ஆனால் முகுந்தன் இன்னொரு கதைக்கு இவர் தலைப்பிட்டிருக்கும் ‘பெளருஷம்’ கொண்டு தான் கரையேறி, தன்னைக் காதலித்துக் கைத்தலம் பற்றியவளையும் கரையேற்றி, தங்கள் நிம்மதியையே குறிவைக்கும் பெண்ணையும் கரையேற்றுகிறான். ஆண்கள் பலருடைய உள்மனம், முகுந்தனுடைய கற்பு நிலையைக் கண்டு உள்ளுக்குள் நகைத்துக் கொள்ளும் என்றாலும் பெண்கள் பலருடைய உள்மனம் முகுந்தனின் கற்புநிலையைப் பாரதிவழி ஆதரிக்கத்தான் செய்யும். ஆக, ஒரு கற்புக்கரசனை இந்தக்கதையில் நமக்கு அறிமுகம் செய்துவத்துவிட்டார் ராஜாஜி.
‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ - இதைப்பற்றி என் துணைமனத்தில், அறிந்தும் அறியாமலும், முகநூல் நண்பர்கள் + சன்றோர்களின் கருத்துகளை முதலிலேயே படியேற விட்டுவிட்டதால், அவை ‘மசானத்துப் பேய்கள்’ போல, திரும்ப என் கருத்துகளாக வேடம்போட்டு வர வாய்ப்புண்டு. ஆகவே, விதிவிலக்கான, ராஜாஜிக்குப் பிடித்துப்போன என் நோக்கில் ஒன்றைச் சொல்லுகிறேன். இதில் - ஓர் இரவுநேர எக்ஸ்பிரஸ் இருவரின் இல்லற வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. அஃறிணை என்று எதையும் தள்ளிவிட முடியாதுதானே? தொடர்வண்டிப் பயணங்களை நேசிப்பவர்கள் இல்லையா? இன்றுமென் இரவில், கனவைக் கனவென்று மட்டுமே கருத முடியாத/விரும்பாத உயிர்ப்புடன் திகழும் கனவுகளில் நான் பன்முறை பயணம் செய்த நீலகிரி எக்ஸ்பிரஸ் “தடக் தடக்” என்று பாலங் கடக்கிறது. அந்த எக்ஸ்பிரஸ் போலவே, இக்கதையில் வருவதும் இரவுநேர எக்ஸ்பிரஸ்தான். “காலத்தைக் குறைசொல்வதால் அது கோபித்துக்கொண்டு நமக்கு எதிராக எதுவும் செய்து விடாது. இதனால்தான் காலத்தையும் சிலவேளை கடவுளையும் குறை சொல்கிறோம்.”(143) விஜயா, ஆண்களின் புத்தியின் போக்குகள்(140-141) குறித்து அவதானிப்பவை ஆண்களில் பெரும்பாலோருக்குப் பொருந்தும்.
‘அந்த ஒருவனைத் தேடி’ - இந்தக் கதை, வேலைக்குப் போகும் அழகான இளம்பெண்ணுக்கு அவளுடன் பணிபுரியும் ஆண்களால் உருவாகும் உடல்ரீதியானவும் மனோரீதியானவுமான அவஸ்தைகளும்; அந்த ‘ஆண்’களிடமிருந்து ஒரு ‘பெண்’ணாக, தப்பித்துக்கொண்டே போகவேண்டிய அவலங்களும் உணர்த்தப் படுகின்றன. “ஆண்கள் என்றால் வேலைக்குப் போக வேண்டும்[‘உத்யோகம் புருஷலட்சணம்’]” என்றும் பெண்கள் அடுக்களையே கதி என்று கிடக்க வேண்டும் என்ற காலத்தைச் சேர்ந்தவளா தாரிணி? ஆனால் அவளுடைய உடல், பெண்ணுடலாயிற்றே! பெண்களுக்கு, தாம் ஸ்கூட்டரை இயக்கிச் செல்லும்பொழுதுங்கூட, ‘தன் தேகம் பெண்தேகம்’ என்ற விழிப்புணர்வு ‘டிராஃபிக் சிக்ன’லிலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் இன்னும் மாறவில்லையே! “ஒருவர் நகமும் தன் உடம்பில் படாமல்” தப்பித்தலை, தாரிணியாக (203) உங்களைத் தற்பாவனை செய்துகொண்டு படித்துப் பாருங்கள்.
‘செம்பருத்தி’ கதை முற்றிலும் வித்தியாசமானது. தாலிக்கு எவரும், எந்தப் பெண்ணும் கொடுக்க மாட்டாத தெய்விகத்தை மஞ்சு கொடுப்பதை வாசித்துணரும் வாசகர்கள், ‘தாலி என்பது கயறு மட்டுந்தான்’ என்ற வாதத்தையும்; ‘மங்கலவணி என்னும் மரபெல்லாம் சுத்தப் பேத்தல்’ என்று அடித்துச்சொல்லுதலையும் அறவே விட்டு விடுவார்கள். சுசியக்கா தாலியை வழமயான ஒரு ‘சாடிஸ்ட்’ பெரியம்மா “கழற்றி வையடி” என்று ‘கோரக் கோரிக்கை’ வைக்கும்பொழுது -- மஞ்சு புருஷனின் உருவத்தோடு நாம் ‘ஆஜர்’ஆகி, வெறுமனே வேடிக்கை பார்த்து, வேதனைப் படுகிறோம்.
‘பெளருஷம்’ கதையில், ‘இலக்கணம் மீறிய கவிதை’யான ஒருத்தி, தன் தாயுடைய சம்மதத்தின்/தூண்டுதலின் பேரில் ஆடவர்களுடைய சகவாசத்துக்குத் தன் ‘சுய’த்தை வர்த்தகப் பண்டமாக்கினாலும் ~ ஒரே ஒருவனின் ‘பெளருஷ’த்துக்குமுன், தன் அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி, ‘தான்’ தொலைந்து போவது சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
[தொடரும்]
No comments:
Post a Comment