8.3.16

ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]

ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]
- மதிப்பீடு: புதுச்சேரி கலாவதி பசுபதி (தேவமைந்தன்)
கனடாவில் சட்டத்தரணியாகப் பணியாற்றும் ராஜாஜி ராஜகோபாலன், ஓர் ஈழத் தமிழர். முரட்டுத்தனமான ஆணாகத் தோற்றம் கொண்டுள்ள போதும், மிகுந்த மென்மையான பெண்மனத்தைச் சித்திரித்து எழுதுவதில் வல்லுநர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பதினைந்து சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயவியல் நோக்குக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தா.வே. வீராசாமி ஐயா மேற்பார்வையில் 1980-1986 காலக்கட்டத்தில் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் ஆசியருளுடனும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் அன்புடனும் ஆய்வு மேற்கொண்டு 24-4-1986 அன்று ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த எனக்கு; முனைவர் குழு எனச்சொல்லப்படும் doctoral committee -யில் வாய்த்தவர்கள் ஆணிமுத்துகள். ஒருவர், முனைவர் இரா. இளவரசு. இரண்டாமவர், முனைவர் அ.நா. பெருமாள். முதல் ஆய்வுக்குழுக் கூட்டத்திலேயே ~ தனித்தமிழ் இயக்கத்தில் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய பொழுதும், டாக்டர் ச.செந்தில்நாதன்+ கலாநிதி சிவத்தம்பி தொடங்கி, தமிழ் ஆங்கிலச் சிறுகதை இலக்கண நூல்கள் நாற்பத்தாறனைக் கரைத்துக் குடித்துவிடவேண்டும் என்று நீளமானதொரு பட்டியல் தந்து ‘அன்’பாகக் கட்டளையிட்டார் முனைவர் இரா. இளவரசு. அப்படிப் “பெற்ற” சிறுகதை இலக்கண அறிவை - என் சித்தத்துள் ‘அடக்க்க்க்க்க்க்க்க்கி’ வைத்துக் கொண்டு, இதை எழுதுகிறேன்.
இத்தொகுப்பில் யாழ்சூழ்தமிழான ஈழத்தமிழ் என் நொய்யல் போல் நண்பர் பேனா மனோகரனின் வையைபோல் வெகு இயல்பாகக் கரைபுரண்டோடுகிறது. உடனமர்ந்து திறனாய்வு செய்த ‘சித்தாந்த ரத்னா’ திகைத்துப் போனார். அத்தகைய சொற்களை, நானே புதுச்சேரித் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. என் பூர்விகமான கடாரத்துடன் தொடர்புகொண்டதுதானே ஈழமும்?
இந்த சட்டத்தரணி எதில் பெரிதாக வெற்றி பெறுகிறார் தெரியுமா? ‘வட்டாரத் தமிழ்’தானே என்று “சுருக்கமாக இருவரிகளில்” குழப்படி செய்யும் வறண்டமன வயிற்றெரிவுமிகு அறிவுசீவிகளை வெட்கமுறச் செய்யும் வண்ணம் தன் ஈழத்தமிழை உலகத் தமிழாக்குகிறாரே.. அதில்தான்.
உயிர்த்துடிப்புள்ள வாசகர் எவராயினும், இப்பூவுலகின் எந்த மூலையில் வாழும் ‘தமிழ் வாசிப்பு’க் கொண்டவர் எவராயினும், குறிப்பாகப் பெண்வாசகர்களும் பெண்மனம் புரிதலைக் கொண்ட ஆண் வாசகர்களும் ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் கதைகளை ஒருமுறைக்கிருமுறை வாசித்துப் பாராட்டவே செய்வார்கள். [தொடரும்]

No comments: