18.4.16

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

ஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர். (இக்கதை இடம் பெற்ற தொகுப்பு நூல்: “கடவுள் கற்ற பாடம்’ நற்றிணை பதிப்பகம், சென்னை - 5. ஆகஸ்ட் 2015)
உலகின் அழகான சாலைகள் சந்திக்கும் ஷான்லிசே சதுக்கம் அமைந்திருந்த- கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலையத்தில், இருபத்து மூன்று வயதில், கைகளைப் பராமரித்து அழகு சேர்க்கும் பணியில் ழினேத் சேர்ந்தது, இப்பணி மீது அவளுக்கிருந்த நாட்டத்தினால் அல்ல. ஆண்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக வரும் இந்த இடத்தில்,அவளுக்கான கணவரைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம். பத்தொன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இவளிடம் கைகளைக் காட்டிய எந்த ஆண்மகனும், இவளது கைகளைக் கேட்டபாடில்லை` ~ என்று நண்பர் நாயகர் நடையில் சுவாரசியமாகத் தொடங்கும், ஆன்றி த்ரோயா’வின் ‘கைகள்’ கதையின் போக்கு அட்டகாசமானது. பிரான்சில் சொந்தக்காலில் நிற்கும் ஓர் இளம்பெண் முதிர்கன்னியாகும் வரை, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கைகளை நீட்டும் ஆண்தகைமை[பெளருஷம்], அவளிடம் பதினேழாண்டுகளாக ‘விரல்பராமரிப்பு’க்காகக் கையை நீட்டும் எவனுக்கும் வாய்க்கவில்லை என்பதை நுண்ணுணர்வை இரசிக்கும் வாசகர் எவரானாலும் - ஆணானாலும், பெண்ணானாலும், உணர்ந்து வருந்தவே செய்வர். பிரெஞ்சிளைஞர் பார்வையில்தான் ஏதோ குறை என்று நாம் நினைக்கும்போது, ஆன்றி த்ரோயா சொல்கிறார்: “... இவளது உடற்கட்டில் ஆண்களின் உணர்வைப் பற்றவைத்துக் குடும்பம் நடத்தத் தூண்டும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மட்டும் உண்மை.” (கடவுள் கற்ற பாடம், பக்கம் 25)
உயரமானவள். வெள்ளை. ஆட்டுக்குட்டியை நினைவூட்டும், அவள் கண்களின் இடைவெளி. மென்மையான பார்வை. அசைவுகளில் சஞ்சலம் கொண்டவள். மற்ற பெண்களுக்கு வெட்கம் வராத சூழலுக்குக்கூட நாணமடையும் இயல்பு உடையவள். வேலை இடைவேளையில், உடன்பணியாற்றும் இளந்தோழிகளின் அரட்டையில் கலந்துகொள்ள மாட்டாள். ஒப்பனை: வானத்துக்கு மேகம்போலக் கொஞ்சம் ‘மேக்கப் பவுடர்’ ஒப்பனை; செவிமடல்களின் பின்பக்கம் இரண்டு சொட்டு ‘பெர்ஃபியூம்.’ அவ்வளவுதான்.
நாற்பது வயது வரை தனது கன்னிமையைத் துன்பமெனக் கருதியவள், இப்பொழுது அதைத் ‘தனிமை’ என்று அடையாளப்படுத்த விழைகிறாள். நகங்களைச் சீர்படுத்துவதில் ழினேத்தை விஞ்ச எவருமில்லை. ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலைய’த்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அவள் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ கிடைப்பதற்கு ஒருநாள் தள்ளிப் போனாலும் கவலைப்பட மாட்டார்கள்.
தன்னுடன் வேலைசெய்பவர்கள் பலர் இந்தத் தொழிலை ‘போரடிக்கும் எந்திரமயமானது’ என்று நினைத்திருந்தனர். ழினேத்துக்கோ, அதில் ஒருவிதமான கவித்துவமும் சுவாரசியமும் அடங்கியிருக்கின்றன என்பது கருத்து. கீழ்த்தளத்தில் வாய்மூடித் தன் பணியே கவனமாக இவள் இருக்கையில் மேல்தளத்தில், இவளும் அணியும், கம்பெனியின் முதலெழுத்துகள் பொறித்த வெள்ளைநிறச் சீருடை அணிந்த ‘முடிவெட்டுபவள்’ வாடிக்கையாளருடன் அடிக்கும் அரட்டையும் அதன் விளைவாக விளையும் வெடிச்சிரிப்புகளும், தெளிவாகப் புரிகிறதோ இல்லையோ, இவள் கன்னங்களில் சிவப்பை அப்பும். ழினேத்துடன் பணிபுரியும் பெண்கள் தம் உடம்பை ஓரளவேனும் வெளிக்காட்ட முயலும் நிலையில், இவள் ‘கவரிங் புரூச்சுகளை’ப் போட்டு அந்த இடங்களை மறைத்துக் கொள்வாள். கொஞ்சம் தாரளமாக இந்த விஷயத்தில் அவள் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்குக் கணவன் அமைந்திருக்கலாம், “இயல்பை வலிந்து சென்று மாற்றுவதால் எவ்விதப் பலனும் இல்லை ~~ என்று எண்ணி, அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம் அமைதி அடைந்து கொள்வாள் ழினேத்.
ஆண்கள் அருகிலிருந்து பணிசெய்வதில் கிடைக்கும் ‘இத்தகைய பிரச்சினை எதுவுமற்ற பரவசம்’ மூலம் ழினேத் எதையும் குறிப்பாக எதிர்நோக்குவதில்லை. ஆனாலும் நாள்தோறும் இயல்பாக அவளுக்கு அமையும் இச்சூழல், போதைப்பொருளைப் போல அவசியமாகிவிட்டது. [இந்தச் சூழல் விவரம் கதையில்] வேலை முடிந்து இரவில், குவியோன்சேன்சீரிலுள்ள தன் அறைக்குத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருப்பாள். ஆண்களின் பலவிதமான கைகள் ~ மென்மையாகவும் ஈரமாகவும், வறண்டும் எலும்பாகவும், மேற்புறம் முடியடர்ந்திருப்பவை என்று ~ அவள் மனத்திரையில் வந்துபோகும். மணிக்கட்டிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்கும் கைகளில் சில, கனவுகளிலும் பின்தொடரும். ஆனாலும் அடுத்தநாள் காலை கண்விழித்து எழும்போது, எப்பொழுதும்போலவே, தெளிவான மனத்துடன் இருப்பாள்.
ஒரு மே மாத சனிக்கிழமை. ஒரு நக அலங்கார வேலையை முடித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை கிடைக்கும் தற்காலிக இடைவெளியின்பொழுது, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ழினேத். அப்பொழுது, கடைக்கு உள்ளே ஒரு குள்ளமான நபர் வந்தார். சாம்பல்நிற முடியும் வெளிறிய வட்டமான முகமும் கொண்டவராக இருந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் மேடாக இருந்தது. அவர் அணிந்திருந்த கறுப்புநிறக் கோட், விறைப்பான காலர், அவரது சிவப்பு ‘டை’யில் காணப்பட்ட முத்து எல்லாம் சேர்ந்து...... உறுதியாக இவர் ஒரு பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தாள் ழினேத். ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்காரக் கடை’க்கு அவர் வருவது இதுதான் முதல் முறை என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.
[விதி நல்லபடி ஆகும். அதைத்தானே திருவள்ளுவர் ‘ஆகூழ்’ என்று கூறுகிறார். தன் 23 வயது முதல் 40 வயது வரை, மற்ற தன்னொத்த வேலை செய்யும் பெண்கள் போலல்லாமல் கன்னிமையை பேச்சிலும் கூடக் காத்துவந்த ழினேத்தின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறவர் அந்த நபர் என்பது ழினேத்துக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? நமக்கும் கதையை முழுதாகப் படிக்கும்வரை தெரிய வேண்டாம்;-) ]

No comments: