உருப்பட மாட்டாயடா, தமிழா!
உருப்பட மாட்டாயடா!குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடத்திடும்
கொள்கையும் உணர்வும் உனக்கு வருமட்டும்
( உருப்பட......)ஐந்து மணிஎன அழைப்பில் முழங்குவாய்;
ஆறரைக் கேஅந்தக் கூட்டம் தொடங்குவாய்!
நந்தம் தமிழர் பழக்கம் இது என்பாய்;
நாணமில் இந்நிலை ஒழிந்திடு மட்டும் நீ
(உருப்பட......)ஆள்சேர வில்லை என்று அரைமணி நீட்டுவாய்;
அரிய தலைவர்தாம் வராமையைக் காட்டுவாய்;
நீள்உரை ஆற்றுவோர் மேல் குற்றம் சாட்டுவாய்;
நித்தமும் இப்படிப் பொழுதெல்லாம் ஓட்டுவாய்; (உருப்பட......)இரண்டே நொடியில் முடிப்பதாய்ச் சொல்லுவாய்;
இருபது மணித்துளி வெறும்வாயை மெல்லுவாய்;
திரண்டுள மக்களின் உணர்வையும் கொல்லுவாய்;
செயல்திறம் இன்றி நீ எப்படி வெல்லுவாய்?
(உருப்பட......)முன்னிலை யாளர்கள் பன்னி உரைப்பதும்,
மூத்தவர் வாழ்த்துரை சொல்லிக் கழிப்பதும்,
பின் உரையாளர் சொல் வானைக் கிழிப்பதும்,
பேச்சுப் பேச்சே, வெறும் பேச்சுன்னை அழிப்பதும். (உருப்பட......)உரிய பொழுது ஒன்றைத் தொடங்கி முடிக்கிலாய்;
ஒவ்வொரு பேச்சுக்கும் நேரம் வகுக்கிலாய்;
இருபது பேர்களைப்** பேச அழைக்கிறாய்;
ஏழில் தொடங்கி நள்ளிரவில் முடிக்கிறாய்.
- தங்கப்பா 01.08.1999.
**1999 என்பதால் 20 பேர் என்றார் தங்கப்பா. இப்பொழுதெல்லாம் 2 அல்லது 3 மடங்கு 20 பேர் அழைப்பில் 'போடப்' படுகிறார்கள். இந்தப் பாட்டைவிட அழுத்தமானது - (மதனபாண்டியன் இலெனின்) தங்கப்பா படைத்த 'மன்னூர் மாநாடு.' 'வேப்பங்கனிகள்' தொகுதியும் அத்தகையதே. ~ அ. பசுபதி.
No comments:
Post a Comment